கவிதைகள்

ஒரு நாள் முடிகிறது

 ச. அனுக்ரஹா

city_sunset

பகல் கரைந்து வழிகிறது,
கட்டிடங்களின் இடுக்குகள் வழியே,
சாலையோர மரங்களின்
இலைகளுக்கிடையே,
கண்ணாடி ஜன்னல்களின் மீது
நீலம்
மஞ்சள் சிவப்பாகி,
மேஜைகளுக்கு கீழே
பூச்செட்டிகளுக்கடியில்
பாதி திறந்த கதவிடுக்குகளுக்கு உள்ளே
ஒளிந்து மறைகிறது.
மாலையின் நிழல்களை
மிதித்து செல்கின்றன
வாகனங்கள்.
வீடுகளுக்கிடையே
சிக்கியிருக்கும் மரங்களுக்குமேல்
பறவைகள் சிறு கூட்டமாக
செல்கின்றன.
வானம் விளக்கணைத்து
காத்திருக்கிறது,
இமையாது ஒளிரும்
ஜன்னல்களுக்கு வெளியே.
ஒரு நாள் முடிகிறது,
உங்களுடைய சிறு கவனிப்புமின்றி.

oOo

கு. அழகர்சாமி

அக்கரை

அழைத்துக் கொண்டே இருக்கும்
ஆறு.
சேர்ந்து விடலாம் தான்
அக்கரை.
படகில்
இக்கரையை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட வேண்டும்.

தொலைவு

முதுமையின் தள்ளாமையில் கோலூன்றி
முயன்று வைக்கும் கிழவனின் ஓரெட்டும் வெகு தொலைவோ?
குனிந்து கொடுக்க உலகு குழந்தை வைக்கும் முதல் எட்டும்
குழந்தைக்கு எவ்வளவு தொலைவோ?
மரம் சதா எடுத்து வைக்கக் காத்திருக்கும் எட்டு
மனமொடுங்கக் கற்றிருந்தால்
முடிவில்லாத் தொலைவு தன்னுள் முடிந்திருக்கும் தொலைவோ?

தர்க்கம்

இரட்டைத் தென்னைகள்
எதிரெதிர் சலசலக்கும் நின்று.
நான் சொல்வது சரி.
இல்லை
நான் சொல்வது சரி.
நீ சொல்வது சரியல்ல.
இல்லை
நீ சொல்வது சரியல்ல.
நான் சொல்வது சரி.
நீ சொல்வது சரியல்ல.
இல்லை
நான் சொல்வது சரி.
நீ சொல்வது சரியல்ல.
நான் சொல்வது சரியில்லையென்றல்ல.
நீ சொல்வது சரியென்றல்ல.
இல்லை.
நான் சொல்வது சரியில்லையென்றல்ல.
நீ சொல்வது சரியென்றல்ல.
எந்தத் தென்னையிலும்
தர்க்கித்தா காய்த்து விடக் கூடும் தனிப் பேருண்மையாய்
தன்னிலொளிரும் உச்சத்தில் முழுநிலா.
 

oOo

மாதவன் இளங்கோ

feather

பேரமைதி

கூடு நோக்கிப்
பறந்து சென்ற
பறவையொன்றின்
சிறகு ஒன்று
முறிந்து விட,
தடம்மாறி
ஒற்றைச் சிறகோடு
வெகுநேரம் போராடி
வலுக்குன்றி
பறவையது கீழே விழ,
காற்றில் அதன்
கால்தடங்களைத் தேடித்
திரிந்தலையும்
பறவைக்கூட்டங்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை –
அது வீழ்ந்த இடம் ஒரு
முதலையின் வாய் என்றும்;
அவைகளுக்கு முறிந்த சிறகு
மட்டுமே கிடைக்கக்கூடும் என்றும்;
வீழ்ந்த மறுகணமே
விழுங்கிவிட்டு
சலனமின்றி
உறங்கிக் கிடக்கும்
முதலையின் அமைதி –
அந்த மகாசமுத்திரத்தின்
பேரமைதி!