என்னை இன்று கொலை செய்யப் போகிறார்கள். சரியாகச் சொல்லப் போனால் தூக்கிலிடப் போகிறார்கள். தூக்கில் தொங்கும்போது எனது மனநிலை எப்படியிருக்கும் என்பது தெரியாது. ஆனால் என்னைத் தூக்கிலிடுகிறவனின் மனநிலை எப்படியிருக்குமென்பது தெரியும். நானும் இதற்கு முன்னால் அந்த பொறுப்புமிக்க பணியைச் செய்தவன் தான்.
தூக்கிலிடும் அறையின் கம்பிகளுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறேன். கடைசியாகக் கொல்லப்பட்ட ஒரு முன்னாள் மந்திரியின் பிணம் அறையின் ஓரத்தில் தூக்கிப் போடப்படுகிறது. அடுத்து நான்தான்.
oOo
இந்தப் பழக்கம் புதிதல்ல. வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே இந்த முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முந்தைய கொலையாளியை நான்தான் தூக்கிலிட்டேன். என்னைத் தூக்கிலிடுபவனும் அவனுக்கடுத்த கொலையாளியால் தூக்கிலிடப்படுவான் என்கிற நம்பிக்கையே ஆறுதல் அளிக்கிறது.
oOo
நான் செய்து கொண்டிருந்தது நாட்டிலேயே மிகப் பரபரப்பான வேலை. ஆட்சி மாற்றம் வரும் வரை மிகப்பாதுகாப்பான வேலையும்கூட. மேல்மட்டத்தில் தொடர்புடையவர்களுக்குத்தான் அந்த வேலை கிடைக்கும்.
என் அண்ணன்தான் கடந்த ஆட்சியில் என் தொடர்பு. நாட்டின் கால்பங்குப் பகுதியில் ஆறு மாதங்கள் நீடித்த ஆட்சியில் மந்திரியாக இருந்தார் அவர். கொலையாளிக்கு இருக்கும் அதிர்ஷ்டம் மந்திரிகளுக்குக் கூட இருப்பதில்லை. ஆறு வாரங்களுக்கு மந்திரியாய் இருந்த அவர் அதிபராக ஆசைப்பட்டார். சதிக்குற்றம் சாட்டப்பட்டார். எனது விசுவாசத்தை நிரூபிக்க அவனை என் கையாலேயே தூக்கிலிட்டேன்.
தொடர்புகள் ஆபத்தானவையும்கூட. தவறான தொடர்புகளால் உயிரை இழந்தவர்கள் உண்டு. பழைய ஆட்சியுடன் தொடர்புடையவர்கள் புதிய ஆட்சியில் கொல்லப்படுவார்கள். கூட்டங்கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம். என்னைப்போல் மரியாதைக்குரியவர்கள் மட்டும் தான் தூக்கிலிடப்படுவார்கள்.
oOo
எப்போதுமே இப்படி இருக்கவில்லை என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். துப்பாக்கிகளுக்கும், தூக்குக் கயிறுகளுக்கும் அறுபது வருடங்களுக்கு மேல் தப்பியவள் அவள். விமானத்திலிருந்து வீசப்பட்ட எறிகுண்டுகளுக்குத் தப்பியிருந்தால் இன்னும் பத்து வருஷம் வாழ்ந்திருப்பாள்.
யுத்தத்தின் ஆரம்பத்தைப் பற்றியும், யுத்தமில்லாமல் இருந்த நாட்டைப் பற்றியும் நான் அறிந்து கொண்டதெல்லாம் அவளுடைய புலம்பல்களிலிருந்துதான். ஆனால் அவளுக்கே கூட இந்த யுத்தம் எதனால் ஆரம்பித்தது என்று தெரியாது.
அவளுக்கு சின்ன வயசாயிருக்கும் போது டாங்கிகள் ஊருக்குள் உருளத் தொடங்கின. முதலில் சாலைகளில், அப்புறம் வீடுகள் மேல், அப்புறம் மனிதர்கள் மேல்… சீக்கிரத்தில் விமானங்களும் பறக்கத் தொடங்கின. அவர்களது ராணுவத்தின் சொந்த விமானங்கள்….
யுத்தத்தின் ஆரம்ப காலங்களில் யுத்தம் ஏன் நடக்கிறது? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பது போன்ற தீவிரமான விவாதங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி யாரும் விவாதம் செய்வதில்லை. அவர்கள் ஆரம்ப காலத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம். இல்லையென்றால் விவாதங்களை நிறுத்தியிருக்கலாம். யுத்தம் யாரையும் விட்டு வைக்கவில்லை.
நாட்டின் தற்காலிகத் தலைவரொருவர் ஒருமுறை தொலைக்காட்சியில் சொன்னார், “எங்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு முறை மிகச் சிறந்தது. தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் பரிணாம வளர்ச்சியின் வாழ்க்கை முறை எங்களுடையது.” அவரைத்தான் எனக்கடுத்து தூக்கிலிடப் போகிறார்கள். என் பின்னால் நின்ற அவர் முகத்தைப் பார்த்தேன். இரத்தம் வற்றிப் போய் பரிதாபமாய் வெளிறியிருந்தது.
oOo
எவ்வளவு தான் அவசரம் இருந்தாலும் நீதிமன்ற விசாரணையின்றி யாரும் தூக்கிலிடப்படுவதில்லை. நீதி மிக முக்கியம் அல்லவா?
நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டேன். என்னைச் சூழ்ந்து ஐவர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்கள். வழக்கறிஞர்கள் யாரும் கிடையாது. அவர்கள் நீதியின் வேகத்தைத் தடை செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
நீதிபதி கேட்டார்,”நீ ஜேவை கொலை செய்தாயா?”.
ஜே யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். முன்னாள் மந்திரியாக, தளபதியாக, இதைப்போன்றதோர் நீதிபதியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு நினைவில்லை.
நான் தலையை அசைத்து ஆமோதித்தேன். எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
oOo
கடந்த ஆட்சி இயந்திரத்தில் நான் ஒரு சிறு பாகம்தான். ஆனால் அந்த ஆட்சியை அடையாளப்படுத்தியவர்களில் நானும் ஒருவன். இப்போது எனது காலம் முடிந்து விட்டது.
நான் தூக்கு மேடையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். இரு பக்கத்திலும் மூன்று காவலர்கள் நடந்து வருகிறார்கள். நான் தப்பிக்க முயன்றால் என் உயிரை எடுக்கும் அதிர்ஷ்டம் அவர்களுக்குக் கிடைக்கும்.
நான் தூக்கு மேடையில் நிற்கிறேன். எனது முகம் கறுப்பு முகமூடியால் மூடப்படுகிறது; எனது கழுத்தில் தூக்குக் கயிற்றின் முடிச்சு விழுகிறது; இறுக்கப்படுகிறது; எனது காலுக்குக் கீழே பூமி நழுவக் காத்திருக்கிறேன். ஆனால் முடிச்சின் இறுக்கம் தளர்கிறது. எனக்கு இன்னும் விடுதலை இல்லை. எனது முகம் மூடப்பட்டிருக்கிறது; கயிறு இன்னும் கழுத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது.
oOo