இங்கிலீஷ்

நான் ஐந்தாவது படிக்கும்போது, எங்கள் பள்ளியில் அந்த சுற்றுலாவிற்காக தலைக்கு ஒரு ரூபாய் வசூலித்தார்கள். சுற்றுலாச் செல்வதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே சுற்றுலாச் செல்லும் அந்த பொன்னான நாளுக்காக ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தேன். அந்த நாளும் வந்தது.

ஒரு வெயில் ததும்பிய மதியவேளை. மாணவர்கள் மூன்று, மூன்று பேராக கைகளைக் கோர்த்துக்கொண்டு பள்ளியிலிருந்து நடக்க ஆரம்பித்தோம். எனது இடது கையைப் பிடித்துக்கொண்டு வந்த பையன் யார் என்று நினைவில் இல்லை. ஆனால் வியர்வை ஈரத்துடன் என் வலது கையைப் பிடித்துக்கொண்டு வந்த மாலதி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறாள். இது ஏன் என்று என் கள்ளங்கபடமற்ற(?) மனதிற்கு இன்றும் புரியவில்லை. நடந்து சென்ற நாங்கள் மருதையாற்றுப் பாலத்தை அடைந்தோம். பாலத்துக்குக் கீழிருந்த மணலில் எங்களை குழு குழுவாக உட்கார வைத்து புளிப்புமிட்டாய் கொடுத்தார்கள். நாங்கள் சளசளவென்று பேசியபடி காத்திருந்தோம். கை வாட்ச்சில் மணியைப் பார்த்த ஹெட்மிஸ்ட்ரஸ் ~~இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம சுற்றுலா ஆரம்பிக்கப் போவுது. எல்லாரும் எந்திரிச்சு வரிசையா கைகோத்துகிட்டு நில்லுங்க” என்றார். நான் எழுந்து என் பக்கத்திலிருந்த… வேறு யார்? மாலதியின் கையைப் பிடித்துக்கொண்டேன்.

நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் பாலத்தையே பார்த்துக்கொண்டு நின்றோம். ஒரு பொன் வினாடியில் பச்சை நிறத்திலிருந்த அந்த நீண்ட ரயில் பாலத்தில் பெரும்சத்தத்துடன் அதிவேகமாக நுழைந்தது. நாங்கள் உடம்பெல்லாம் புல்லரிக்க… ~~ஹோ’வென்று கத்தியபடி ரயிலில் செல்பவர்களைப் பார்த்து கையசைத்தோம். கால் நிமிடத்திற்குள் அந்த ரயில் வேகமாக பாலத்தைக் கடந்து தொலைவில் சென்று மறைய… எங்கள் சுற்றுலா இனிதே நிறைவடைந்தது. சரோஜா டீச்சர், ~~இந்த மறக்கமுடியாத சுற்றுலாவிற்கான(?) ஏற்பாடுகளை(?) சிறப்பாக(?) செய்த தலைமை ஆசிரியை அவர்களுக்கு நாம் கைத்தட்டி நமது நன்றியைத் தெரிவிப்போம்” என்று கூற…. நாங்கள் எல்லோரும் ஜோராக கைத்தட்டினோம்(கைத்தட்டியபோது மாலதியின் கையை விடவேண்டியிருந்தது குறித்து எனக்கு சற்று வருத்தம்தான்). ஒரு ரூபாய் கோவிந்தா… கோவிந்தா.

கட்டுரையின் தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், சிறுவயதில் நான் வளர்ந்த அரியலூர், அப்போது அவ்வளவு பின்தங்கிய பகுதி(இப்போது மாவட்டத் தலைநகரம்). வைகை ரயிலில் பயணிக்க அல்ல. வைகை ரயிலைப் பார்ப்பதற்கே சுற்றுலாவாகச் சென்றவர்கள் நாங்கள். அம்மாதிரியான ஊரில் ஆங்கிலத்தில் பேசும் நபர்களை எல்லாம் கண்ணால் பார்க்கவே முடியாது. நான் பிஎஸ்ஸி வரைக்கும் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கில வாத்தியார்கள் கூட ஆங்கிலத்தையே தூயத் தமிழில்தான் (டைரக்ட், இன்டைரக்ட் ஸ்பீச்சை நேர்மறைக் கூற்று, எதிர்மறைக் கூற்று என்றுதான் சொல்லித் தருவார்கள்) நடத்துவார்கள். அதனால் சிறுவயதில் நான் வெள்ளைக்காரர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுவார்கள். நம்மாட்களுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் படிக்க மட்டுமே தெரியும். பேசத் தெரியாது என்றுதான் வெகுநாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

மேலும் வளர்ந்து தொடர்ச்சியாக தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகுதான், நம்மைப் போன்ற சக இந்தியர்களும் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். தமிழ்ப்படங்களி;ல் ஆங்கிலம் பேசுவதில் பின்வரும் 3 பேட்டர்ன்கள் இருப்பதை எனது செல்ஃப் இன்டலிஜென்ஸைப் பயன்படுத்தி கண்டுபிடித்தேன்:

1. அப்போதைய தமிழ் சினிமாக்களின் கதாநாயகிகள், பெரும்பாலும் திமிர் பிடித்த பணக்கார வீட்டுப் பெண்களாகத்தான் இருப்பார்கள். அவர்களிடம் ஹீரோக்கள் கலாட்டா செய்யும்போது கதாநாயகிகள் மிகவும கோபத்துடன், ~~யு ஸ்டுப்பிட்… இடியட்… ப்ளடி நான்ஸென்ஸ்…” என்று ஆங்கிலத்தில்தான் கோபப்படுவார்கள். இன்னும் சற்று புத்திசாலியான(?) கதாநாயகிகள், ‘I will call the police” என்று எச்சரிக்கை விடுப்பார்கள்.

2. ‘விதி’ திரைப்படத்தின் வெற்றிக்குப்; பிறகு தமிழில் நீதிமன்றம் செட்டைப் போட்டுவிட்டுத்தான் டைரக்டர்கள் கதைத் தேடத் துவங்கினார்கள். இந்த நீதிமன்றக் காட்சிகளில் மிகவும் அடிக்கடி பயன்படுத்தும் மூன்று ஆங்கில வசனங்கள்: ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்… அடுத்து, அப்ஜெக்ஷன் ஓவர்ரூல்டு. அடுத்து அப்ஜெக்ஷன் சஸ்டெய்ன்டு. இவ்வாறு வெறும் 3 டயலாக்குகளையே கேட்டு கேட்டுப் புளித்துப் போயிருந்த சமயத்தில்தான் வெண்திரையில் அந்த மாபெரும் ஆங்கிலப் புரட்சி நடந்தது.

டி. ராஜேந்தரின் ;ஒரு தாயின் சபதம்’ திரைப்படம் வந்தது. அதில் வழக்கறிஞராக நடித்திருந்த டி. ராஜேந்தர் ஸ்டைலாக நீதிமன்றத்தில் பேசியதற்கு இணையான ஆங்கில வசனத்தை நான் எந்த ஒரு உலகத் திரைப்படத்திலும்… ஏன்? படம் முழுவதும் நீதிமன்றக் காட்சிகள் நிரம்பிய ‘ஜட்ஜ்மென்ட் நூரம்பெர்க்’ படத்திலும் கூட பார்த்ததில்லை. ஆங்கிலத்திற்கே அடுக்குமொழி கற்றுத்தந்த அந்த டயலாக் இதோ: ராஜேந்தர், ‘According to the prosecution… mr. johnson… you says its a poison. According to me it is a exagression…I say this bottle contains a ordinary solution’.

இந்த இடத்தில் எதிர்தரப்பு வக்கீல் ஆட்சேபம் தெரிவிக்க… பதிலுக்கு டி. ராஜேந்தர் பேசிய இங்கிலீஷ் வசனத்திற்கு நாங்கள் எல்லோரும் அசந்துபோய் எழுந்து நின்று கைத்தட்டினோம். அந்த டயலாக்: first of all you should hear my explanation… I think you are a person,,, always getting emotion… because of the only reason… you never get promotion… இந்த இடத்தில் மற்ற வக்கீல்கள் எல்லாம் ஹா… ஹா… என்று சத்தமாக சிரிக்க… அப்போது டி. ராஜேந்தர் see this reception…its not only my conception… any way i come to a conclusion. this bottle contains a ordinary solution.. .(உலக மொழியியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காட்சிக்கான இணைப்பு: )

3. அடுத்த பேட்டர்ன்… பல கமல், ரஜனி படங்களில், ஆரம்பக் காட்சியிலிருந்து அவர்களை இங்கிலீஷ் பேசத் தெரியாத தற்குறிகள் போலத்தான் காட்டுவர்ர்கள். ஆனால் நாம் கொஞ்சமும் எதிர்பாராத சமயத்தில் படத்தில் வரும் பணக்கார கதாநாயகி இங்கிலீஷில் பேசும்போதோ, அல்லது யாரேனும் கலெக்டர் அல்லது போலீஸ் அதிகாரி இங்கிலீஷில் பேசும்போதோ பதிலுக்கு கமலோ ரஜினியோ நீளமாக இங்கிலீஷில் பேசுவார்கள் பாருங்கள்(உதாரணம்: ‘மன்னன்’ திரைப்படத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் ரஜினிகாந்த் ஒரு பார்ட்டியில் விஜயசாந்தி முன் பேசும் வசனம்)… நாங்கள் எல்லாம் ‘அவ்வை சண்முகி’ படத்தில் கமல் மடிசார் மாமி வேடத்தில் பைக் ஓட்டியதற்கே ~~ஏய்… பொம்பள பைக் ஓட்டுறாடா…” என்று பக்கத்தில் அமர்ந்திருப்பவர் மடியில் விழுந்து விழுந்து சிரிக்கும் கிராமப்புற வெள்ளந்தி ரசிகர்கள். எங்கள் ஹீரோ இப்படி இங்கிலீஷ் பேசினால் விடுவாமோ? கைத்தட்டல் அடி பின்னி எடுத்துவிடுவோம். இந்த கைத்தட்டின் விசேஷம் என்னவென்றால், கைத்தட்டியவர்களுக்கு அந்த டயலாக்கில் ஒரு வாக்கியம் கூட புரியாது என்பதுதான்.

இவ்வாறு என்னைப் போன்ற சக இந்தியர்களாலும் ஆங்கிலம் பேசமுடியும் என்று தமிழ் சினிமாக்கள் மூலம் எனக்குத் தெரியவந்தாலும், நெடுநாட்கள் வரையிலும் ஆங்கிலம் பேசும் நபர்களை நான் நேரில் சந்திக்கவே இல்லை.

ஏழாவது படிக்கும்போது கோடை விடுமுறைக்குச் சென்னை மாமா வீட்டுக்கு வந்தபோதுதான், நம்மைப் போன்ற சாதாரண பொது மக்களும் இங்கிலீஷில் பேசுவார்கள் என்ற உண்மை தெரியவந்தது. என்னுடன் முதன்முதலில் இங்கிலீஷில் பேசியது, எங்கள் மாமா வீட்டிற்குப் பின்னால் குடியிருந்த, ஏறத்தாழ என் வயதிருக்கும் பணக்கார வீட்டுப் பெண் சுஜாதா. அப்போதே லிப்ஸ்டிக், ரோஸ் பவுடர், குதிரை வால் சடை எல்லாம் போட்டுக்கொண்டு பயங்கரமாக ஸ்டைல் காட்டும். ஒரு நாள் ஏதோ ஒரு விஷயத்திற்காக நான் சுஜாதாவின் தம்பி சுரேஷிடம் சண்டைப் போட… சுஜாதா என்னிடம் மிகவும் கனிவாக, ~~கூல் டவுன் சுரேந்தர்…” என்று கூற எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. ~~இப்ப எதுக்கு நீ என்னை இங்கிலீஷ்ல திட்டுற?” என்றேன். ~~டேய்… நான் இங்கிலீஷ்ல திட்டலடா. இங்கிலீஷ்ல பேசினேன்.” என்றாள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் இங்கிலீஷில் திட்டுவதைப் பார்த்து, பார்த்து இங்கிலீஷில் ஒரு பெண் பேசினாலே அது திட்டுதான் என்பதால் “இல்ல. நீ என்னைத் திட்டுற…” என்று கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன்..

பிறகு நெடுநாட்கள் வரையிலும் யாரும் ஆங்கிலத்தில் பேசி நான் பார்க்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு என் திருச்சி மாமா வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது திடீரென்று என் மாமாவுக்கு கையில் மிகவும் குடைச்சல் ஏற்பட்டு, மிகக் கடுமையாக வலித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு இளம் டாக்டர் என் மாமாவின் கையில் ஒரு ஜெல்லைத் தடவி அதன் மேல் ஒரு மெஷினை வைத்துப் பார்த்தார். உடனே அந்த இளம் டாக்டரின் முகம் மாறியது. வெளியே சென்றவர் சில நிமிடங்களில் இரண்டு பெரிய டாக்டர்களுடன் வந்தார். மூவரும் என் மாமாவைச் சுற்றி நின்றுகொண்டு அம்மெஷினைப் பார்த்தபடி இங்கிலீஷில் பேச ஆரம்பிக்க…. எனக்கு பகீரென்றது. பொதுவாக அப்போது (இப்போதும்) யாராவது இங்கிலீஷ் பேசினாலே எனக்கு பீதியாகும். அதுவும் டாக்டர்கள் ஒரு நோயாளிக்கு பக்கத்தில் இங்கிலீஷ் பேசினால் ஆள் அவுட்தான் என்று தோன்றும். ஏதோ விபரீதம் என்று உள்ளுணர்வு சொன்னது. எனக்கு இரண்டு பயங்கள். முதலாவது பயம், மாமாவுக்கு என்ன ஆனது? இரண்டாவது… அன்று நான் பேண்ட், சட்டைப் போட்டுக்கொண்டிருந்ததால் டாக்டர்கள் திடீரென்று என்னிடம் இங்கிலீஷில் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் உரையாடலில் இடையிடையே ஹேண்ட், ஹார்ட், ப்ளட் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தது. சரி… கையில் இருக்கும் ரத்தத்தை எடுத்து ஹார்ட்டில் விடப்போகிறார்கள் போலிருக்கிறது என்று நான் அமைதியானேன்.

டாக்டர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தவுடன் எனது தஞ்சை மாவட்டத்து அத்தையை நெருங்கி, ~~அம்மா… உங்க கணவருக்கு திடீர்னு ரத்தக்குழாயில ஒரு பபிள். பபிள்னா…. குமிழி மாதிரி ஃபார்மாயிருக்கு. அது நகர்ந்து இதயத்த நோக்கி போய்கிட்டிருக்கு. அது இதயத்துகிட்ட போயிருச்சுன்னா ரத்த ஓட்டம் நின்னு உயிருக்கே ஆபத்து. சில சமயம் அந்த பபிள் தானாவும் உடைஞ்சிடும். நாளைக்கு காலைல வரைக்கும் பாக்கலாம். அதுக்குள்ள பபிள் உடையலன்னா…” என்றவர் சற்று நிறுத்தி, ~~அந்தக் கைய ஆபரேஷன் பண்ணி வெட்டி எடுக்கவேண்டியிருக்கும்…” என்று கூற எனக்கு பயங்கர அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீள்வதற்குள்ளாவே நான் கொஞ்சம் எதிர்பாராமல் அத்தை எனக்கு அடுத்த அதிர்ச்சியைத் தந்தார். அழுக்கு சேலையுடன் பாமர கோலத்தில் இருந்த என் அத்தை டாக்டரிடம், ~~டாக்டர்… ஐ வான்ட் டு நோ… வெதர் தேர் இஸ் எனி…” என்று டைம்ஸ்நவ் அர்னாப் கோஸ்வாமி ரேஞ்சுக்கு பரிசுத்தமான கான்வென்ட் ஆங்கில உச்சரிப்பில் பேச ஆரம்பிக்க… எனக்கு கை காலெ;லாம் ஆடிவிட்டது.

என் மாமாவின் கையை வெட்டப்போகிறார்கள் என்பதை விட, என் அத்தை ஆங்கிலத்தில் பேசியதுதான் எனக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. என் அத்தை காலேஜ் லெக்சரர்தான் என்றாலும் அவர் இப்படி ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் ஏதோ ஆங்கிலத்தில் கூற… பதிலுக்கு அத்தை ஹாலிவுட் பட கதாநாயகி போல் படு ஃபாஸ்ட்டாக ஆங்கிலத்தில் பேச… அந்த பெரிய டாக்டரே தாக்கு பிடிக்கமுடியாமல் மரியாதையாக தமிழுக்குத் தாவிவிட்டார். நான் பிரமிப்புடன் என் அத்தையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

எங்களுடன் கோஹினூர் தியேட்டரில் ‘கொம்பேறி மூக்கன்’ பார்த்த, கோழி எலும்பை மடேர் மடேரென்று கடைவாய்ப்பல்லில் வைத்துக் கடிக்கும், தஞ்சை, பூமால் ராவுத்தன் கோயில் தெரு, காளியம்மன் கோயில் பூஜையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும்… எங்கள் மஞ்சு அத்தை எப்படி இப்படி இங்கிலீஷ் பேசலாம் என்று அவரை நான் விரோதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். டாக்டர்கள் சென்றபிறகு அத்தை என்னை நெருங்க… எங்கே அத்தை பழக்கதோஷத்தில் இங்கிலீஷில் பேசிவிடுவாரோ என்ற பயத்தில் நான் முந்திக்கொண்டு, ~~டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று தமிழில் ஆரம்பித்துவிட்டேன்.

பிறகு நான் சென்னையில் வேலைக்கு சேரும் வரையிலும் ஆங்கிலம் பேசுபவர்களை சந்திக்கவில்லை. எனது சென்னை அலுவலகச் சூழலில் ஆங்கிலம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. சில உயரதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றாலும் அவர்களோடு எனக்குத் நேரடித் தொடர்பில்லை என்பதால் வண்டி பிரச்னையில்லாமல் ஓடியது. இவ்வாறு அமைதியாக ஆங்கிலக் குறுக்கீடு இன்றி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் என் திருமண நாளன்று ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

தாலியெல்லாம் கட்டி முடித்து, நானும் என் மனைவியும் தனியாக மேடையில் நின்றிருந்தோம். எங்கள் திருமண நாளன்று மட்டும் மிகவும் பயந்த சுபாவமாக இருந்த என் மனைவியிடம், ~~ஸ்கூல், காலேஜ்ல்லாம் எங்க படிச்ச?” என்றேன். அவள் மிகவும் அடக்கமாக, ~~பிவிபி… ஸிபிஎஸ்இ ஸ்கூல்….” என்றவுடன் எனக்கு வெலவெலத்துப்போய்விட்டது. என் இடுப்பில் கட்டியிருந்த வேட்டி லேசாக அவிழ்வது போல் தோன்ற… இறுக்கிக் கட்டிக்கொண்டு திகிலுடன் என் மனைவியைப் பார்த்தேன்.

எனது பயம் என்னவென்றால், திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் ஏதாவது சண்டை வந்தால் அவள் என்னை ஆஃப் செய்ய, தடாலடியாக கான்வென்ட் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் நான் என்ன செய்வேன்? என் மனைவி ஆங்கிலத்தில் என்னுடன் சண்டை போடும் காட்சி மனக்கண்ணில் ஓடியது.

என் மனைவி என்னிடம், ~~I dont like this type of attitudes. I didn’t expect such a low class behaviour from you…” என்று எகிற… பதிலுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாமல் தவிக்கும் நான் வேறு வழியின்றி, ~~இப்ப நான் என்ன சொல்லிட்டன்னு இப்படிக் கோச்சுக்குற… சரி விடு…” என்று சரண்டராகும் காட்சி மனதில் ஓட… என் மனைவியை பீதியுடன் பார்த்தேன். நல்ல வேலையாக என் மனைவி ஆங்கிலத்தில் எல்லாம் சண்டை போடவில்லை. என்னதான் இங்கிலீஷ் மீடியத்தில் படித்திருந்தாலும், குடும்பச்சண்டையை எல்லாம் இங்கிலீஷில் போடுவது கஷ்டம்தானே என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் ஏறத்தாழ அதே சமயத்தில் திருமணமான என் நண்பன்; ஒருவன் ஒருநாள் என்னிடம், ~~எங்கம்மாப்பாவுக்கு எதிர சண்டை வந்துச்சுன்னா, நானும், என் ஒய்ஃபும் இங்கிலீஷ்லதான் சண்டப் போட்டுக்குவோம்…” என்றான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஆங்கிலத்தில் சண்டைப் போடவேண்டுமென்றால் எவ்வளவு ஆங்கில அறிவு இருக்கவேண்டும்.

~~எப்படிரா இங்கிலீஷ்ல சண்டைப் போட்டுக்குவீங்க?” என்றேன்.

~~எப்படின்னா? இங்கிலீஷ்லதான்”

~~அது தெரியுது நாயே… எப்படிரா இங்கிலீஷ்ல கோபமா பேசிக்குவீங்க?” என்றேன்.

~~ம்… டோன்ட் டாக் டு மச்….”

~~இதை நான் கூட பேசுவேன். வேற ஏதாச்சும்?”

~~ஷட் யுவர் மவுத்…”

~~டேய்… இதெல்லாம் ஒரு இங்கிலீஷாடா?” ரொம்பக் கோபம் வந்துச்சுன்னா என்ன பேசுவ?”

~~கெட் அவுட் ஃப்ரம் ஹியர்ன்னு சொல்லிட்டு, நான் வீட்ட விட்டு வெளிய வந்துடுவேன்” என்றவுடன் வெறியான நான் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தேன். ~~அவங்கள கெட் அவுட்னு சொன்னா, அவங்கதானடா வெளியப் போகணும். நீ ஏன்டா வெளியப் போற?” என்றேன்.

~~அது அப்படித்தான்”

~~இந்த கெட் அவுட் எல்லாம் எங்க ஊரு தயிர்க்காரம்மாவே சொல்லும். நம்ப தமிழ்ல சண்டைப் போடறப்ப மூச்சைக் கட்டிகிட்டு கோபமா பேசுவோம்ல? உதாரணத்துக்கு… அப்படியே செவுள்ல ஒரு எத்து, எத்தினன்னா மூஞ்சு, முகரையெல்லாம் பேந்துடும். என் உயிர வாங்கன்னே வந்து வாச்சிருக்கு. மூதேவி… இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்வ?” என்றவுடன் அவன் திருதிருவென்று விழித்தான்.

இவ்வாறு என் நண்பர்கள் சிலருக்கு இப்படி மனைவியுடன் இங்கிலீஷில் பேச வாய்ப்பு கிடைத்தாலும், நான் மட்டும் இங்கிலீஷ் பேசாமலேதான் நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தேன். இந்த செல்ஃபோன் கர்மம் வந்துத் தொலைத்தது. கடைசியாக நானும் இங்கிலீஷில் பேசிவிட்டேன். ஒரு நாள் மொபைலில் என்னைத் தொடர்புகொண்ட ஒரு குரல் அழகிய பெண்மணி செமத்தியான கான்வென்ட் இங்கிலீஷில் பேச ஆரம்பிக்க… நான் குறுக்கே புகுந்து தமிழில் பேசினேன். தமிழ் அவளுக்குப் புரியவில்லை. எனவே வேறு வழியின்றி என் வாழ்வில் முதன்முதலாக இங்கிலீஷில் பேசினேன். அது: I don’t know English.