அர்சுலா லெ குவின் – புனைவின் கலை

’புனைவின் கலை’ என்கிற வரிசையான பேட்டித் தொடர்களில் இந்த பேட்டியின் எண்- 221

பேட்டியாளர்: ஜான் வ்ரே

1960களின் துவக்க வருடங்களில், அர்சுலா லெ குவினின் எழுத்து பிரசுரமாகத் துவங்குகையில், அறிவியல் புனைவு கடின அறிவியல் புனைவு என்ற வகைப் புனைவால் நிரப்பப்பட்டிருந்தது. கடின அறிவியல் புனைவு என்பது இயற்பியல், வேதியல், மேலும் ஒரு மட்டம் குறைந்த அளவில் உயிரியல் ஆகிய துறையறிவில் வேர் கொண்ட ஊகப் புனைவு. தொழில் நுட்ப முன்னேற்றம் என்பது கலப்பற்ற நன்மை என்பது சிறிதும் ஐயமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகவிருந்தது. உலக விவகாரங்களில் அமெரிக்கா அதுவரை இல்லாத முதன்மையை அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்தது, பொற்காலம் என்று பிற்பாடு அறியப்பட்டு வருகிற இந்த வருடங்களின் அறிவியல் நவீனம், அந்த முதன்மையை, அசாதாரண நிலையையே அண்ட பேரண்டத்திற்குள்ளும் பிரயோகித்து நோக்கியது. ‘அதிசயக் கதைகள்’ (Amazing Stories) மேலும், அதிபுனைவும், அறிவியல் புனைவுமுள்ள பத்திரிகை (The Magazine of Fantasy & Science Fiction) எனும் பத்திரிகைகளின் பக்கங்களை எல்லாம் ஆக்கிரமித்த கதைகள் பெருமளவும் விண்வெளியில் சாகசங்களைப் பற்றிய கதைகளாகவே இருந்தன. இக்கதைகள் எல்லாவற்றையும் எழுதியவர்கள் பெரும்பாலும் வெள்ளை இனத்து ஆண்கள், அவை எல்லாமே வெள்ளை இன ஆண்களைப் பற்றியுமானதாக இருந்தன. எப்போதோ ஒரு முறை ஜீவராசிகளின் பன்மையை அங்கீகரிப்பது போல மாற்று இனங்கள், அல்லது பெண்கள் பற்றிச் சிறிது இவற்றில் காணப்படும். லெ குவினின் முதல் நாவல், ரொகொன்னனின் உலகம் (1966) அந்த வகைப் புனைவுகளில் நீண்ட நாள் வழக்கமாக இருந்தபடி, ஒரு ஆண் அறிவியலாளரை நாயகப் பாத்திரத்தில் கொண்டிருந்தது, ஏற்கனவே இருந்த ஒழுங்கைச் சிறிதும் குலைக்கவில்லை. ஆனால் அக்கடலில் பெரும் எழுச்சி ஏற்படவிருந்தது.

இருளின் இடது கை  (The Left Hand of Darkness, 1969) என்கிற லெ குவினின் நாவல் அந்த வகைப் புதினங்களின் மரபுகளைக் கலைத்துப் போட்ட மாதிரி வேறெந்த தனிப் புதினமும் செய்ததில்லை. லெ குவினின் நான்காவது புத்தகமான இந்த நாவலில் , அவர் எந்த நிலைத்தப் பாலடையாளமும் இல்லாத மனிதர்களைக் குடிகளாகக் கொண்ட ஒரு உலகைக் கற்பனை செய்கிறார்: அம்மக்களின் பாலியக்கம் அவரவரின் பின்புலத்தைச் சார்ந்து அமையும், அதுவும் மாதமொரு முறைதான் செயலுக்கு வரும். அப்புத்தகத்தின் அமைப்பு, பல முதல் மூல நூல்களின் கலந்த கோர்வையாக, நட்சத்திர மண்டலத்தூடே பயணித்த ஒரு சமூகக் குழு ஆய்வாளரின் ஆய்வுக் குறிப்புகளடங்கியதாக இருந்தது. அதில் நேரடியான கருத்துக் குறிப்புகளிலிருந்து துவங்கி, அன்னிய ஜீவராசிகளின் தொன்மக் கதைகளின் உதிரித் துண்டுகள் வரை நிறைய வெவ்வேறு வகை விஷயங்களாகக் கொடுக்கப்பட்டிருந்தன. ஜேடி ஸ்மித்திலிருந்து ஆல்ஜிஸ் புட்ரிஸ் வரை , பரந்த விரிவலையில் உள்ள எழுத்தாளர்கள் த லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ் புத்தகத்தைத் தமக்கு உத்வேகம் அளித்த புத்தகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். [பிரபல இலக்கிய விமர்சகரான] ஹாரல்ட் ப்ளூம் தன் ‘மேற்கின் ஆதர்ச இலக்கியம்’ (The Western Canon) என்கிற புத்தகத்தில் இப்புத்தகத்தைச் சேர்த்திருந்தார். அடுத்த சில பத்தாண்டுகளில், அதிபுனைவுத் தொடர் நாவலும், அவருக்கு மிக்க புகழ் தேடிக் கொடுத்ததுமான ‘புவிக்கடல்’ என்ற புனைவை எழுதியதன் மூலமும், லெ குவின் தன் வீச்சையும், வாசக வட்டத்தையும் பெருக்கிக் கொண்டார். திரிந்த உடோபியா ஒன்றைப் பற்றிய நாவலான ‘பறிக்கப்பட்டவர்கள்’ என்ற நாவலையும் இந்தக் காலகட்டத்தில் எழுதி இருந்தார். மேலும் பல பத்து புத்தகங்களையும் எழுதினார். அவருடைய உற்பத்தித் திறன் அபாரமானது. லவீனியா (Lavinia, 2008) என்ற அவருடைய சமீபத்து நாவல் அவருடைய இருபத்தி இரண்டாவது முழு நீளப் புனைவு.

அர்சுலா க்ரோபர் பெர்க்லி நகரில் காலிஃபோர்னியா மாநிலத்தில் பிரந்தார். அவருடைய தந்தை ஆல்ஃப்ரட் க்ரோபர், ஒரு முக்கியமான மானுடவியலாளர். அவருடைய தாய் தியோடொரா க்ரோபர், நன்கு விற்பனையான ஒரு புத்தகத்தை எழுதியவர். அப்புத்தகம் இஷி என்ற ஒரு அமெரிக்கப் பழங்குடியின நபரின் வாழ்வுச் சரிதை. அவர் ‘வட அமெரிக்காவின் ’நாகரீகப்படுத்தப்படாத’ கடைசிப் பழங்குடி அமெரிக்கர்’ என்று அறியப்பட்டவர், தன் வாழ்நாளின் இறுதி வருடங்களை கலிஃபோர்னியா பல்கலையின் அருங்காட்சியகத்தில் ஒரு காட்சிப் பொருளாக இருந்து கழித்தவர். அர்சுலாவின் இளம்பிராயம் அவருடைய விரிகுடும்பத்தின் சூழலில், வீட்டிற்கு வருகை தந்த பல பல்கலையாளர்களுடனும், பழங்குடி அமெரிக்கச் சமூகத்தினருடனும் கழிந்தது. பிற்பாடு கொலம்பியா பல்கலையிலும், ராட்க்ளிஃப் கல்லூரியிலும் படித்தார். அவற்றிலிருந்து 1952 இல் தனது இருபத்தி இரண்டாவது வயதில் ஃப்ரெஞ்சிலும், இதாலிய மறுமலர்ச்சி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். 1953 இல் ஃப்ரான்ஸுக்குப் போகிற ஒரு நிராவிக் கப்பலில், சார்லஸ் லெ குவின் என்ற வரலாற்றாளரைச் சந்தித்தார், சில மாதங்களுக்கு அப்புறம் அவரை மணந்து கொண்டார். கடந்த ஐம்பதாண்டுகளில், லெகுவினும், போர்ட்லண்ட் மாநிலப் பல்கலையில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய சார்லஸும் ஒரு அழகான விக்டோரிய பாணி வீட்டில் வாழ்ந்திருக்கின்றனர். அது போர்ட்லண்ட் மாநில வனப்புறப் பூங்கா ஒன்றின் அடிவாரத்தில், வலிய சரிவான, இருபுறமும் மரங்கள் கவிந்து மூடிய தெரு ஒன்றில் இருந்தது. ஒரு அறிவியல் புதின எழுத்தாளருக்கு ஏற்ற விதத்தில், அவ்வீடு வெளிப்புறத்தில் தெரிவதை விட, உள்புறம் பெரிதாகத் தெரிகிறதோடு, ஒரு வியப்பையும் உள்ளே அடக்கியிருக்கிறது. ஒரு வராந்தாவிலிருந்து புனித ஹெலன்ஸ் குன்றின் சிதைந்த எரிமலைக் கூம்பு தெரிகிறது. லெ குவின் என்னைத் தன் வரவேற்பறையில் சந்தித்தார், பின்னர் நாங்கள் அந்த வராந்தாவுக்கு நகர்ந்தோம், ஒரு காரணமென்னவோ அவருடைய வளர்ப்புப் பூனையின் சீற்றம் நிறைந்த கவனிப்பிலிருந்து விடுபடத்தான்.

ஜான் (வ்)ரே

pic    Dan Tuffs (001 310 774 1780)                                                                         அர்சுலா லெ குவின்

oOo

பேட்டியாளர்: ‘அறிவியல் புனைவு’ என்ற சொல் உங்கள் படைப்புடன் தொடர்புள்ளதாக க் கருதப்படுவது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

லெ குவின்: சரிதான், அது மிகவும் சிக்கலானது, (வ்)ரே.

பே: மன்னியுங்கள். அதோடு உங்களுக்கு இப்போது சமாதானமாகி விட்டதா? [அல்லது] அது குறுக்குவதாக நினைக்கிறீர்களா?

லெ குவின்: அதற்கு ‘அறிவியல் நவீனம்’ என்ற பெயர் நல்ல பெயரில்லை, ஆனால் அதுதான் நம்மிடம் இப்போது இருக்கிறது. மற்ற எழுத்து வகைகளிலிருந்து அது வேறுபட்டிருக்கிறது. அதனால் நான் நினைத்தேன், அதற்கென ஒரு பெயர் பெறும் தகுதி அதற்கு உண்டு. ஆனால், நான் அறிவியல் நவீன எழுத்தாளர் என்று அழைக்கப்படும்போதுதான் எரிச்சலுற்று, சண்டைக்கு வருகிறேன். நான் [அது] இல்லை. நான் ஒரு நாவலாசிரியை, ஒரு கவிஞர். என்னை உங்களுடைய நாசமாகப் போன அடைப்பு ஒன்றில் திணிக்காதீர்கள், எனக்கு அது பொருந்தாது, ஏனெனில் நான் எல்லா இடங்களிலும் செல்கிறேன். அந்தப் புறாப்பொந்திலிருந்து என் நெளிந்து வளையும் பல கரங்கள்  எல்லாத் திக்குகளிலும் வெளி வருகின்றன.

பே: புறாப் பொந்திலிருந்து பல கரங்கள்  (tentacles) வெளிவருவதை வைத்துதான் – ஒரு அறிவியல் புனைவாளரை நாம் இனம் காண முடியும் , என்பது என் ஊகம்.

லெ குவின்: அது சரிதான்.

பே: எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், உங்களை விட வேறு சில எழுத்தாளர்களை அறிவியல் புனைவாளர்கள் என்று அழைப்பது சரியாக இருக்கும்- உதாரணமாக, ஆர்தர் ஸி. க்ளார்க் போல ஒருவரை எடுப்போம், அவருடைய ஆக்கம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கருதுகோளோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கும். உங்களுடைய புனைவிலோ, எதிர்மாறாக, தத்துவமும், மதமும், சமூக ஆய்வியல்களும் முக்கியமாகுமளவு. உறுதியான அறிவியல் என்பது ஒரு வேளை அதிகம் முக்கியமில்லையோ என்னவோ.

லெ குவின்: ’உறுதி’ யான அறிவியல் புனைவு எழுதுவோர், இயற்பியல், வானியல், மேலும் ஒருவேளை வேதியலைத் தவிர மற்ற அறிதுறைகளை எல்லாம் ஒதுக்குகிறார்கள். உயிரியல், சமூகவியல், மானுடவியல்- இதெல்லாம் அறிவியல் இல்லை அவர்கள் நோக்கில், அவை மெல்லிய விஷயங்கள். உண்மையாகச் சொன்னால், மானுடர் செய்வனவற்றில் அவர்களுக்கு அத்தனை ஈடுபாடு இல்லை. ஆனால் எனக்கு இருக்கிறது. நான் சமூக ஆய்வியலிலிருந்து நிறைய எடுக்கிறேன். அவற்றிலிருந்து, அதுவும் குறிப்பாக மானுடவியலிலிருந்து, நான் நிறைய யோசனைகளைப் பெறுகிறேன். இன்னொரு கிரகத்தையும், இன்னொரு உலகையும், அதிலொரு சமூகத்தையும் நான் படைக்கும்போது, ஒரு சாம்ராஜ்யத்தைப் பற்றிச் சொல்வதற்குப் பதிலாக, அச் சமூகத்தின் ஆழ்ந்த நுண்மைகளைப் பற்றி கோடி காட்ட நான் முனைகிறேன்.

பே: உங்கள் புனைவு மனிதத்தின் செடுக்குகளோடும், உளவியலோடும் நிறைய பிணைந்திருப்பதால்தான், இலக்கிய வட்டங்கள் உங்கள் புனைவுகளை உயர்வாகக் கருதுகிறார்களோ?

லெ குவின்: சாதாரணமாக அறிவியல் புனைவுகளைப் படிக்காதவர்களையும் படிக்க வைக்குமளவு என் புனைவை அவை அணுகக் கூடியதாக ஆக்குகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் வகைப் பிரிவு இலக்கியத்திற்கு எதிராக உள்ள இளக்காரம் சமீப காலம் வரை மிக வலுவாக இருந்தது. அதெல்லாம் இப்போது மாறி வருகிறது, அது அற்புதமானது. என் எழுத்து வாழ்வில் பெரும்பாலான நேரமும், அந்த முத்திரையைப் பெறுவது என்பது- அறிவியல் புனைவு என்பது- என் மீது சுமத்தப்படுவது என்பது, விமர்சன ரீதியாக, சாவுக்கு ஒப்பானது. அதைப் பெற்றால் என்ன நடக்குமென்றால், ஒரு சிறு கட்டம் கட்டி, அதற்கு, செவ்வாய் கிரகத்தினர் பற்றியோ, நெளியும் கரங்கள் பற்றியோ குயுக்தியான தலைப்பு ஒன்றோடு ஒரு சிறு மதிப்புரை பிரசுரமாகும் என்பதுதான்.

பே: இந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசுகிறோமில்லையா? அதனால் [கேட்கிறேன்] ஒரு முக்கியமான மானுடவியலாளரின் குழந்தையாக வளர்வது என்பது உங்களுக்கு எப்படி இருந்தது? ஒரு எழுத்தாளராக நீங்கள் துவங்க அது ஏதும் காரணமாக இருந்ததா?

லெ குவின்: இந்தக் கேள்வியை என்னிடம் ஒரு பிலியன் முறைகள் கேட்டு விட்டார்கள், அதுவோ பதில் சொல்லக் கடினமானது. தெளிவாகவே, என் அப்பாவின் ஈடுபாடுகளும், அவருடைய குண விசேஷங்களும் …. சொல்லப் போனால், என்னிடம் ஒரு அறத் தொனியை உருவாக்கின என்று சொல்ல விரும்பினேன். அப்படி ஒரு புத்தி உள்ளவரோடு வாழ்வது என்பது, ஒரு விதமான கல்விதான். அவருடைய அறிவியல் துறை என்பது மானுடம் சார்ந்தது, அது ஒரு நாவலாசிரியருக்கு மிக நல்லதொரு வாய்ப்பு தருவது. நாங்கள் ஒவ்வொரு கோடையையும், எல்லாக் கோடைக் காலத்தையும், நாபா பள்ளத்தாக்கில் அவர் வாங்கி இருந்த ஒரு பண்ணை வீட்டில் கழித்தோம். அது மிக க்ஷீணிப்பாயிருந்த, அதிகம் பராமரிக்கப்படாத இடம். என் பெற்றோர்களுக்கு நிறைய நிறைய விருந்தினர்கள் வந்தார்கள். தன் சக பல்கலையாளர்களையும், பல வெளிநாட்டினர்களையும்- என் அப்பா விருந்துபசரித்தார். இது 30களின் இறுதி வருடங்களில் நடந்தது. அப்போது அகதிகள் வந்து கொண்டிருந்தனர். உலகம் பூராவிலுமிருந்தும் மனிதர் வந்தனர். வந்த விருந்தினர்களிடையே சில இந்தியர்கள் [ 3 ] இருந்தனர், அவர்கள் ‘தகவல் கொடுப்பவர்கள்’ (informants) என்று அழைக்கப்பட்டனர் அப்போது- அந்தச் சொல்லை இப்போது யாரும் பயன்படுத்துவதில்லை.

அப் பழங்குடியினரை என் அப்பா தன் நண்பர்களாக அறிந்திருந்தார், அது அவர்களிடமிருந்து அவர்களின் மொழி, மரபு வழக்கங்கள் ஆகியவற்றைக் கற்பதற்காக நெடுநாள் அவர்களோடு சேர்ந்து வேலை செய்ததால் நேர்ந்தது. அவர்களில் ஒருவர், யுவான் டோலொரெஸ் என்பவர், ஒரு பாபகோ அல்லது ஊதாம் குடியைச் சேர்ந்தவர்- அவர் நிஜமாகவே ஒரு குடும்ப நண்பர். அவர் சில வாரங்களோ அல்லது மாதங்களோ தங்குவார். அதனால் எங்களுக்கு ஒரு வகையில் அவர் ஒரு இந்திய மாமனாக இருந்தார். நிஜமாகவே வேறான பண்பாடுகளிலிருந்து இத்தகையோரைப் பெற்றது- அது ஒரு ஒப்பில்லாத பரிசு.

பே: அந்தப் பரிசின் இயல்பு என்ன?

லெ குவின்: ஒருக்கால், எளிமையாகச் சொன்னால், ‘மாற்றார்’ என்பதாக ஒருவரை அறிந்த அனுபவம்தான் அது எனலாமோ? நிறைய மனிதர்களுக்கு அப்படி ஒரு அனுபவம் கிட்டுவதில்லை, அல்லது அதற்கான வாய்ப்பு கிட்டினாலும் அவர்கள் அதை எடுத்துக் கொள்வதில்லை. தொழில்மயமான நாடுகளில் நாம் ‘மாற்றாரை’ தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்கிறோம் என்பதெல்லாம் இருக்கிறதே, .. அவர்களோடு வாழ்வதற்கு அவையெல்லாம் ஈடாகாதவை. ஆனால் அப்படி வாழக் கிட்டியவர்கள் ஒருவர் அல்லது இருவர்தான் என்றே வைத்தாலும் அது மேலானதே. .

பே: நீங்கள் ஒரு ’தாவும் முயலைப் போல மத நம்பிக்கையற்றவராக வளர்க்கப்பட்டேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் மதத்தின் மீது ஒரு ஈடுபாடு உங்கள் எழுத்தில் நிறையவே உள்ளதே.

லெ குவின்: நான் யோசிப்பது என்னவென்றால், அதை ஒரு மத வழிப் பார்வை என்று சொல்ல முடியாது, ஏனெனில் மதம் என்ற சொல்லே பிரச்சினையானது- நான் டாவோயியத்திலும், பௌத்தத்திலும் மிக ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன், அவையும் எனக்கு நிறைய அளித்திருக்கின்றன. இப்போது, டாவோயியம் என்பது என் புத்தியின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. அப்புறம் பௌத்தம் என்பது குறித்து என் ஈடுபாடு தீவிரமாக உள்ளது. அதை மத வழி புத்தி என்று நாம் அழைக்கவில்லை என்றால், ஆன்மீகம் என்று அழைக்க வேண்டி வரும். அதுவோ மிகவும் இரண்டுங்கெட்டதாக, பட்டும் படாமலும் இருப்பது போலத் தெரியும். மதம் என்பது சில பெரும் பிரச்சினைகளைக் கையாளப் பார்க்கிறது, அதில் எனக்கு மிகவே ஈடுபாடு இருக்கிறது.

பே: டாவோயியமும், பௌத்தமும் உங்களுக்கு என்ன அளித்தன என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சொல்ல முடியுமா?

லெ குவின்: என் முதிரா இளம்பருவத்தில், இந்தக் கடவுள் கிடவுள் விஷயத்தில் எல்லாம் போய் இறங்கி விடாமல் எப்படி வாழ்வைப் புரிந்து கொள்வது என்று தேடிக் கொண்டிருக்கையில் , டாவோயியம் வாழ்வை எப்படிப் பார்ப்பது என்பதற்கும், அதை எப்படி நடத்துவது என்பதற்கும் எனக்கு ஒரு பிடிமானம் கொடுத்தது, லாஒ-ட்ஸுவிடம் பல வருடங்களூடாக நான் திரும்பிச் செல்கையில், எப்போதுமே கண்டிருக்கிறேன் – இப்போதும் காண்கிறேன் – எனக்கு என்ன கற்கத் தேவையோ அதை அவர் அளிக்கிறார். டாஒ டெ சிங் கிற்கான என் மொழி பெயர்ப்பு, வடிவு, அது விளைந்தது. பௌத்தம் குறித்த என் அறிவு ஒப்பீட்டில் மிகக் குறைவானதும், மிகச் சமீபத்ததாகவும் ஆனது. ஆனால் தியானத்தை எப்படி பயனுள்ள வழியில் உபயோகப்படுத்துவது என்பதைக் காட்டியும்,, அறச்சீலத் தைத் தேடும் என் திசைகாட்டி நோக்கிற்கான மாறாத வடதுருவமாக இருந்தும் அது எனக்கு இன்றியமையாததாகி விட்டது.

பே: கர்ட் வானெகட் தன் புனைவின் கலை பேட்டியில், 1977 இல், மானுடவியலைத் தனது ஒரே மதமாக வருணித்திருந்தார்.

லெ குவின்: அது எனக்கு அத்தனை போதாதது, ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்பது எனக்குத் துல்லியமாகப் புரிகிறது. நானும் முன்னாளில் அதே போலத்தான் உணர்ந்தேன். ஒரு நாயகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்குச் சொன்னால், சார்லஸ் டார்வினைத்தான் தேர்ந்தெடுப்பேன் – அத்தனை அறிவியல் குறுகுறுப்பையும், அறிவுத் தேட்டையையும் உள்ளடக்கியதோடு, அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும் திறமையும் கொண்ட அவருடைய புத்தியின் அளவுக்காக. டார்வினின் சிந்தனையில் ஒரு உண்மையான ஆன்மீகம் இருக்கிறது. அவரும் அதை உணரவே செய்தார்.

பே: இப்போது- நான் இதில் சிறிதளவு அதிகப்படியாக யோசிக்கிறேன் என்று சொல்லலாம்- இந்த மாதிரி ஒரு நிறைவு தரும் அல்லது போதுமானதாக இருக்கும் மதத்தைத் தேடுவது என்பது எழுத்தாளராக உங்கள் திசையைப் பாதித்திருக்கும் என்று சொல்லலாமா? இருக்கிற நமது மதங்கள் எதுவும் திருப்தி தரவில்லை என்றால், வேறு விதமாகச் சொல்வதானால், நீங்களே ஒரு மதத்தை ஏன் உருவாக்கக் கூடாது?

லெ குவின்: நான் ஒன்றும் நித்தியத்தையோ, அல்லது சத்தியத்தையோ நாடித் தேடி அடைய விரும்புபவள் அல்ல. ஒரே விடை என்று ஏதோ விடை இருப்பதாகவும் நான் கருதவில்லை, அதனால் நான் அதைத் தேடிக்கொண்டு இருக்கவில்லை. என் முனைப்பு ஒரு கடும் தவமில்லை, மாறாக விளையாட்டுத்தனம் கொண்டது. நான் வகை வகையான கருத்துகளையும், பல வித வாழ்வு முறைகளையும், மத வழி அணுகல்களையும் முயன்று பார்ப்பதை விரும்புகிறேன். பிறரை மதம் மாற்றும் முயற்சிக்கு நான் பொருத்தமான நபர் இல்லை.

பே: வேறு வித வாழ்வுகளை ‘முயன்று பார்க்க” எது உங்களை இழுக்கிறது?

லெ குவின்: ஓ, சிந்திப்பதில் கிட்டும் வேகமும், அறிவுக்கான ஆர்வமும்தான் என்று வைத்துக் கொள்ளலாம். பலவகை வழிகளில் செயல்களைச் செய்து பார்ப்பதிலும், அவற்றைப் பற்றி யோசிப்பதிலும் உள்ளுறை ஆர்வமாக இருக்கலாம். நிஜமான உலகை விட, சாத்தியமான உலகுகளைப் பற்றி எழுதுவதற்கு என்னை இட்டுச் சென்றது அதாகவே இருக்கலாம். ஒரு ஆழமான நோக்கில், அதுதான் என்னைப் புனைவு எழுத இட்டுச் சென்றதோ என்னவோ. ஒரு நாவலாசிரியர் எப்போதுமே பிற மனிதர்களை ‘அணிந்து’ பார்க்கிறவர்தான்.

பே: துவங்கும்போது உங்களுக்கு ஊகப் புனைவுகள் எழுதுவது பிடிக்குமென்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா?

லெ குவின்: இல்லை, இல்லவே இல்லை. எனக்கு மிக முன்னாடியே- இது கொஞ்சம் நம்பமுடியாததாக இருக்கும், நான் ஐந்து அல்லது ஆறு வயதில் இருக்கும்போதே- எழுதுவது என்பதே நான் செய்யப் போவது என்று எனக்குத் தெரிந்திருந்தது. அது கவிதையாகத் துவங்கியது. ஒரு கதையை உண்மையிலேயே நான் எழுதியபோது எனக்கு ஒன்பது, அல்லது பத்து வயது. அதுவோ ஒரு அதிபுனைவுக் கதை, ஏனெனில் அப்போது அவற்றைத்தான் நான் படித்துக் கொண்டிருந்தேன். என் சகோதரனும் நானும் எங்களுடைய கால் டாலர்களைக் கூட்டிச் சேர்த்துக் கொண்டிருந்தோம், அவ்வப்போது ஒரு பத்து ஸெண்ட் பத்திரிகையை வாங்குவதற்காக-ஏதோ ‘அதிசயக் கதைகள்’ என்பது போன்ற- பரபரப்புப் பத்திரிகைகள் அவை. . உங்களுக்குத் தெரிந்திருக்குமே.

பே: ‘வியப்பூட்டும் கதைகளா’? (Amazing Stories)

லெ குவின்: அதேதான்! நான் சுருக்கவே துவங்கியவள் என்பதால், நான் படித்த புனைவுகள் ஓரளவு அதிசயக் கதைகளாகவே இருந்தன. எதார்த்தம் என்பது மிக முன்னேறிய இலக்கிய வடிவம், மிக வளர்ந்ததொரு வடிவம். ஒருவேளை அதுதான் அதன் மெலிவுமோ என்னவோ. அதிபுனைவு என்பது நிரந்தரமானது போலவும், எங்கும் உள்ளது போலவும், எப்போதுமே சிறு குழந்தைகளுக்குக் கவர்ச்சிகரமானதாகவும் தெரிகிறது. என்னிடம் யாராவது, ‘நீ எப்போதுமே எழுத்தாளராக வேண்டுமென்று விரும்பினாயா?” என்று கேட்கிறபோது, நான் என்ன சொல்ல வேண்டி இருக்கிறதென்றால், இல்லை! நான் எப்போதுமே எழுத்தாளியாகத்தான் இருந்திருக்கிறேன். நான் எழுத்தாளராகி, கவர்ச்சிகரமாக ஆகி, நியுயார்க் நகருக்குப் போக விரும்பவில்லை. நான் எழுதுவதென்ற என் வேலையைச் செய்யவும், அதை மிக நன்றாகச் செய்யவும் மட்டுமே விரும்பினேன்.

பே: மற்ற எழுத்தாளர்களோடு ஒப்பீடுகையிலா?

லெ குவின்: வேறெப்படி நாம் முடிவு செய்வது? ஒரு வகையில், ஏதோ போட்டியாகவோ, அல்லது ஒப்பிடுதலாகவோதான் அது இருக்கும்

பே: வேறு யாரோடு நீங்கள் உங்கள் எழுத்தை ஒப்பிட்டுப் பார்த்திருந்தீர்கள்?

லெ குவின்: எந்த எழுத்தாளர்கள் அளவு சிறப்பாக நான் இருக்க விரும்பினேன், அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட என்று கேட்கிறீர்களா?

பே: ஆமாம்.

லெ குவின்: சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டன். அப்புறம், நான் ஒரு வழியாக இறுதியில் அவரைப் படிக்கக் கற்றுக் கொண்ட பின், வர்ஜீனியா ஊல்ஃப். எப்போதுமே உச்சியை நோக்கித்தான் பறக்க வேண்டும். நாம் அதை அடைய மாட்டோமென்று நமக்குத் தெரியும், ஆனால் உச்சியை நோக்கிச் சீறிப் பாய முடியவில்லை என்றால் அப்புறம் அதிலென்ன மகிழ்ச்சி கிட்டும்?

பே: வெளி உலகுக்குள் உங்கள் எழுத்தை அனுப்பத் தொடங்கிய போது, என்ன மாதிரி எழுத்தாளராக ஆக வேண்டுமென்று உங்களுக்கு ஓரளவாவது தெரிந்திருந்ததா?

லெ குவின்: அந்த கட்டத்தில் என் முக்கியக் களம் புனைவு என்று தெரிந்து விட்டிருந்தது, ஆனால் நான் எப்போதுமே கவிதை எழுதுவேன் என்பது தெரிந்திருந்தது. என் முதல் பிரசுரங்கள் எல்லாமே கவிதைகள்தாம், அதுவும் பகுதி என் அப்பாவால்தான். கவிதைகளை வெளியில் அனுப்புவது பெரும் வேலை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதற்கு ஒரு செயல்திட்டம் தேவைப்படுகிறது, ஒரு அளவு கவனிப்புள்ள உழைப்பு, மேலும் நிறைய நேரமும் தேவைப்படுகிறது. அவர் நான் உனக்கு உதவ முடியும், அது மகிழ்வு தருவதாகவும் இருக்கும் என்று சொன்னார். சிறுபத்திரிகைகளின் கிளைப் பண்பாட்டில் அவருக்கு ஈடுபாடு எழுந்தது, அது ஒரு சிறு உலகு, அதற்கென விதிகள் இருக்கின்றன என்பதை அப்போது அவர் அறிந்து கொண்டார்.

பே: ஆக, அவர் அதை மானுடவியல் பார்வையில் ஆய்ந்தாரா?

லெ குவின்: அவர் எல்லாவற்றையும் பற்றி அறியும் ஆர்வம் கொண்டிருந்தார்! சிலவற்றை அனுப்புவதற்கு அவரே வேலை செய்தார்.

பே: அப்போது உங்களுக்கு என்ன வயதாயிருந்தது?

லெ குவின்: என்னுடைய இருபதுகளில் இருந்திருப்பேன். நான் கதைகளையும் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன், அப்போதும் என் அப்பா உதவிக்கு வந்தார். நான் எழுதிய முதல் நாவல் மிகவுமே விசித்திரமாக இருந்தது,மிகப் பேராசை கொண்டதாக இருந்தது. நான் கற்பனை யில் உருவாக்கிய ஆர்ஸினியா என்னும் ஒரு மத்திய யூரோப்பிய நாட்டின் பல தலைமுறைகளைச் சுற்றிய கதை அது. என் அப்பாவுக்கு ஆல்ஃப்ரெட் க்நாப் தெரிந்தவர்தான். எனக்குப் பதினேழு வயதாக இருந்த போது, ப்ளாஞ்ச் க்நாப்பிடம் நான் ரிகார்டர் வாத்தியத்தில் பாடங்கள் கற்றுக் கொண்டிருந்தேன். ப்ளாஞ்ச் – உண்மையிலேயே ஒரு பெருமாட்டி, அவளைப் பார்த்தாலே பயமாக இருக்கும். நானோ என் குட்டி ஊதுகுழலுடன் போவேன்.

(தொடரும்)

1. இந்தியர் என்று இக்கட்டுரையில் குறிக்கப்படுவோர் எல்லாம் பழங்குடி அமெரிக்கர்களே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.