வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்ற ஸாக்ஸிஃப்ரேஜ் மலர்

ஜேம்ஸ் லாப்லினிற்காக
சீவாதனேஹோ, 20 ஜனவரி, 1973.
மொழியாக்கம் : நம்பி கிருஷ்ணன்

இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆங்கில மொழியின் இலக்கியங்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் கவிதையையும், உரை நடையையும், சொற்றொடர் இலக்கணத்தையும், நுட்பமாக அறிதலையும் (sensibility), கவிதையியலையும் கற்பனையையும் ஒருங்கே பாதித்தது. ஐரோப்பா மற்றும் லதீன் அமெரிக்கா பகுதிகளில் அதே சமயம் நிகழ்ந்த மாற்றங்களை ஒத்த இம்மாற்றம் முதன்முதலில் ஒரு சில, அனேகமாக அமெரிக்க, கவிஞர்களாலேயே உருவாக்கப் பட்டது. இந்த ஆரம்ப கர்த்தாக்களிலான குழுவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு தனித்துவமிக்க மைய இடத்தை வகிக்கிறார் : பவுண்டையும் எலியட்டையும் போல வேரோடு லண்டனிற்கோ, பாரிஸிற்கோ புலம் பெயராமல், நியூயார்க்கிற்குப் புறத்தேயுள்ள சிறு நகரமொன்றில் தன்னை ஆழ்த்திக் கொள்வதையே அவர் விரும்பினார். அமெரிக்காவிலேயே தங்க முடிவு செய்தாலும், வாலஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் இ.இ.கம்மிங்ஸைப் போல அகல்குடி ஆன்மாவாக முனையாமல், வில்லியம்ஸ் முதலிலிருந்தே கவித்துவமானதொரு அமெரிக்கனிஸத்தையே நாடினார். இதையே அவர் தனது  இன் தி அமெரிக்கன் க்ரெய்ன் [In the American Grain, 1925] என்ற அழகான கட்டுரைத் தொகுதியில் இப்படி விளக்குகிறார்:

அமெரிக்கா என்பது முன்னதாகவே அளிக்கப்பட்ட ஒரு யதார்த்தம் அல்ல. அதை நாம் அனைவரும் ஒன்றாக நம் கைகளாலும். நம் கண்களாலும், நம் மூளைகளாலும் மற்றும் நம் உதடுகளாலும் உருவாக்குகிறோம். இந்த அமெரிக்க யதார்த்தமென்பது பொருள், மனம், காட்சி இவையனைத்திற்கும் மேலாக பேச்சுமொழி சார்ந்தது: ஸ்பானிஷ், போர்ட்சுகீஸ், ஆங்கிலம் அல்லது பிரென்ச் மொழிகளை அவன் பேசினாலும் அமெரிக்க மனிதன் ஐரோப்பாவின் மூலத்திலிருந்து வேறுபட்ட ஒரு மொழியையே பேசுகிறான். நாம் கண்டுபிடித்த அல்லது உருவாக்கிய யதார்த்தம் என்பதைக் காட்டிலும் அமெரிக்கா என்பது நம்மால் பேசப்பட்டு உருவான ஒரு யதார்த்தம்.

William_Carlos_Williams

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், 1883ஆம் ஆண்டு ரதர்போர்ட், நியூஜெர்ஸியில் பிறந்தார். அவரது தந்தை ஆங்கிலேயர், தாய் ப்வெர்டோ ரீக்கோ நாட்டைச் சேர்ந்தவர். வில்லியம்ஸ் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். அங்குதான் அவர் பவுண்டையும் (அவரது வாழ்நாள் முழுதும் இந்த நட்பு நீடித்தது), அவ்விரு இளங்கவிஞர்களையும் வசீகரித்த H.D (ஹில்டா டூலிட்டில்) என்ற பெண் கவியையும் சந்தித்தார். வல்லுனர் பட்டம் பெற்று லைப்சிக்கில் சிறிது காலம் குழந்தைகளுக்கான மருத்துவம் பயின்ற பின், 1910ஆம் ஆண்டு ரதர்போர்டில் நிரந்தரமாகக் குடியேறினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஃப்லோரென்ஸ் ஹெர்மனை மணம் புரிந்தார்: இத்திருமணமும் அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. மேலும் அவர்.தனது வாழ்வில் இரண்டு தொழில்களை விடாமல் செய்து வந்தார் : மருத்துவம் மற்றும் கவிதை. எப்போதும் சிற்றூர்களில் வசித்திருந்தாலும் அவர் ஒரு போதும் கிணற்றுத் தவளையாகவில்லை : நம் நூற்றாண்டின் முக்கியமான கலை மற்றும் அறிவியக்கங்களில் தோய்ந்து, பலமுறை ஐரோப்பாவிற்குப் பயணித்து ஆங்கில, ஃபிரெஞ்ச் மற்றும் லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களுடன் நட்புறவு மேற்கொண்டார்.

அவரது பெரும் இலக்கிய நட்புகளும், பகைமைகளும் பலதரப்பட்டவை: பௌண்ட், மேரியன் மூர், வாலஸ் ஸ்டீவன்ஸ், எலியட் (அவர் மெச்சியும் கண்டனமும் செய்த), இ.இ.கம்மிங்ஸ், மேலும் ஜேம்ஸ் லாப்லின், லூயி ஸுகாவ்ஸ்கி போன்ற இளைய தலைமுறை எழுத்தாளர்கள். ஆலென் கின்ஸ்பர்க் மீதும். ராபர்ட் க்ரீலி, ராபர்ட் டங்கன், மற்றும் ஆங்கிலக் கவிஞர் சார்ல்ஸ் டாம்லின்ஸன் ஆகியோரின் கவிதை மீதும் அவரது நட்பின் பாதிப்பு மிக முக்கியமானது. (கவித்துவ நீதி : கவிதையில் ஆங்கிலேயத்தனத்தை எப்போதுமே தவிர்த்து, அமெரிக்கர்களின் மொழியும் ஆங்கிலமும் உண்மையில் ஒன்றே அல்ல என்று சலிக்காமல் வாதித்தவர், இளம் ஆங்கில, மிகவுமே ஆங்கிலக் கவியான டாம்லின்ஸனைப் புகழ்ந்தது )  1951 –ல் முதன் முறையாகப் பக்கவாதத்தால் தாக்கப்பட்டும் அவரது இலக்கியப் பணி மேலும் பன்னிரெண்டு ஆண்டுகள் அரிய செழிப்புடன் தொடர்ந்தது : கவிதைத் தொகுப்புகள், கெவேடோ (Quevedo) மொழிபெயர்ப்பு, நினைவுக்குறிப்புகள், நாடு முழுவதிலும் சொற்பொழிவுகள் மற்றும் கவிதை வாசிப்புகள். மார்ச் 4, 1963 அன்று அவர் பிறந்து, வாழ்ந்த ரதர்போர்டிலேயே காலமானார்.

அவரது படைப்பு விரிவானது, பலதரப்பட்டது :கவிதை, புனைவு, கட்டுரை, நாடகம், மற்றும் சுயசரிதை. அவரது கவிதைகள் நான்கு தொகுப்புகளாக திரட்டப் பட்டிருக்கின்றன : தொகுக்கப்பட்ட முந்தைய கவிதைகள் (1906 -1939), தொகுக்கப்பட்ட பிந்தைய கவிதைகள் (1940 -1946), ப்ரோஹெல்லிருந்து (Bruegel) சில காட்சிகள் (1950-1962), மற்றும் ஐந்து புத்தகங்களில் பாட்டர்ஸன் (1946 -1958) என்ற நீள்கவிதை. மேலும், பிரெய்தொனும் (Breton) ஸூப்போவும் (Soupoult) கிட்டத்தட்ட அதே சமயத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த தன்னியக்க எழுத்தை (Automatic Writing) நினைவுபடுத்தும் உரைநடைக் கவிதைகள் : நரகத்தில் கோரா (1920). ஆனால் பிரெஞ்சுக் கவிதையியக்கம் கண்டுபிடித்த கவிதை அமைப்பை எடுத்தாள்கையில், வில்லியம்ஸ் அதைத் திரித்து மொழியையும், மனிதகுலத்தின் நனவிலி நிலையின் பலதரப்பட்ட அடுக்குகளையும் ஆராயும் முறையாக மாற்றி அமைக்கிறார். அமெரிக்கக் கவியால் மட்டுமே எழுதியிருக்கக் கூடிய நரகத்தில் கோரா என்ற புத்தகம் அதற்கு பின்னே வந்த, வில்லியம்ஸின் அமெரிக்கனிஸத்தின் மைய அச்சாகவும் அவரது கவிதைக் கலையின் கோட்பாடாக விளங்கிய “அமெரிக்கத்தனத்தின் அமைப்பு நயத்தில்” (In the American Grain) என்ற புத்தகத்தின் கண்ணோட்டத்தைக் கொண்டே படிக்கப்பட வேண்டும். நான் அவரது நாவல்கள், கதைகள் மற்றும் நாடகப் படைப்புகளைப் பற்றி பேசப்போவதில்லை. அவையனைத்தும் அவரது கவிதையின் கதிரியக்கத்தில் தோய்ந்து, அதன் நீட்சிகளாகவே உள்ளதெனக் கூறுவதே போதுமானது. உரைநடைக்கும் கவிதைக்குமிடையே எல்லைகளை வரையறுப்பது எப்போதுமே கடினமாகத்தான் இருக்கிறது என்றாலும் இந்தக் கவியைப் பொறுத்த வரையில் அவ்வெல்லைகள் மேலும் அழிந்து மங்கி இருக்கின்றன : அவரது புதுக் கவிதை வசனநடையை ஒத்திருக்கிறது, எழுதப்படும் நடையைப் போலன்றி சராசரிப் பேச்சை ஒத்திருக்கிறது. அவரது உரைநடையோ எப்போதும் ஓசையொழுங்கின் லயத்துடன் , கவிதையின் நுரை அலம்பும் கரையைப் போல் ஒலிக்கிறது – கவிதை அல்ல, கவிதையை உருவாக்கும் வாய்மொழியின் பாய்ம எதிர்ப்பாய்மத்துடன் (Flux and reflux).

எழுதத் தொடங்கியது முதல், வில்லியம்ஸ் கருத்துகள் மீதிருக்கும் தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார். இது அப்போது குறியீட்டு அழகியலுக்கு (Symbolist Aesthetics) எதிராக ஒலித்த பெரும்பான்மைக் கவிஞர்களின் எதிர்வினையைப் போல்தான்  (லோபெஸ் வேலார்டேயை நினைவிருக்கிறதா?) இருந்தது என்றாலும் அவரைப் பொருத்தமட்டில், அமெரிக்கப் பயனீட்டுவாதத்துடன் (American Pragmatism) அவரது மருத்துவத் தொழிலும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரபலமான கவிதையொன்றில் அவரது தேடலை இவ்வாறு வரையறுத்தார் : “புனை : கருத்துகளில் அல்ல, பொருட்களில்.” ஆனால் பொருட்களோ எப்போதுமே நமக்கப்பால், மறுபுறத்திலோ : “பொருண்மை அதுவாக” (Thing itself) தொடவே முடியாதபடி. ஆகவே வில்லியம்ஸின் புறப்பாட்டுப் புள்ளி பொருட்களில் தொடங்காமல் புலனுணர்வில் தொடங்குகிறது. ஆயினும் புலனுணர்வோ உருவின்றி ஒரு கணத்தில் நிகழ்கிறது; வெறும் புலனுணர்வை மட்டுமே கொண்டு எதையுமே உருவாக்கவோ, செய்யவோ முடிவதில்லை, அப்படியே செய்ய முனைந்தாலும் அது ஒழுங்கின்மையில்தான் முடியும். புலனுணர்வு ஈரூடகமானது : ஒரே சமயத்தில் நம்மை பொருட்களுடன் சேர்த்தும் பிரித்தும் வைக்கிறது. பொருட்களுக்குள் நாம் நுழையும் கதவென்றாலும் அதன் வழியே பொருட்களை விட்டுத் திரும்பி வரும் போது நாம் பொருட்களல்ல என்பதையும் உணர்கிறோம். புலனுணர்வு புறப்பொருளின் சார்பற்ற நிலையுடன் இணங்குவதற்கு புலனுணர்வே ஒரு பொருளாக மாற்றப்பட வேண்டும். இம்மாற்றத்தை ஏற்படுத்தும் கருவி மொழி: புலனுணர்வுகள் சொற்களைச் சார்ந்த பொருட்களாக (Verbal Objects) மாற்றப் படுகின்றன. கவிதை என்பது இரண்டு முரண் இயல்புகளைத் தன்னுள் இணைக்கும் சொற்களாலான ஒரு பொருள் : புலனுணர்வின் உயிர்த்துடிப்பு பொருட்களின் சார்பற்ற புறவயத்தன்மையுடன் இணையும் புள்ளி.

ஒரு விதமான பாடல்

saxiபாம்பு காத்திருக்கட்டும்
அதன் புதருக்கடியே.
எழுதுவது
வார்த்தைகளாக இருக்கட்டும்.
நிதானித்தும் விரைந்தும்,
தாக்கும் கூர்மையுடன்,
காத்திருப்பிற்கான அமைதியுடன்,
தூக்கமற்று.
-மனிதர்களையும் கற்களையும்
உருவகத்தால் ஒன்றிணைக்க
இயற்று.(கருத்துகளில்அல்ல, பொருட்களில்)
புதிதாய்ப் புனை.
சாக்ஸிபிராஜே எனது மலர்: அது பிளக்கும்
பாறைகளை

புலனுணர்வுகளை சொற்பொருட்களாக மாற்றும் கற்பனை என்ற விசையின் இயக்கம் வில்லியம்ஸைப் பொருத்தவரையில் மின்சாரம், நீராவி ஆல்லது வாயுவின் இயக்கத்திலிருந்து மாறுபட்டதல்ல. 1923-ல் அவரெழுதிய சில குறிப்புகளில் (இவை வசந்தமும் பிறவும்– Spring and All) என்ற கவிதைத் தொகுப்பின் பிந்தைய பதிப்பில் “இடம்பெயர்ந்த உரைநடை” என்ற தலைப்பில் சேர்க்கப் பட்டுள்ளன), வில்லியம்ஸ் கற்பனை என்பது “பொருட்களை உருவாக்கும் ஒரு ஆக்க சக்தி” என்று கூறுகிறார். கவிதை புலனுணர்வு அல்லது பொருளின் நகல் அல்ல. கற்பனை பிரதிநிதிப்படுத்துவதில்லை : அது உருவாக்குகிறது. இதற்கு முன்னே மெய்மையில் இல்லாதிருந்த கவிதை போன்ற பொருட்களே அது உற்பத்தி செய்யும் பொருட்கள். இயற்கை பைன் மரங்கள், மேகங்கள் மற்றும் முதலைகளைப் படைப்பதைப் போல் கவித்துவக் கற்பனையும் கவிதைகள், சித்திரங்கள் மற்றும் தேவாலயங்களைப் படைக்கிறது. வில்லியம்ஸ் மரபான அழகியலின் கழுத்தைத் திருகிச் சிதைக்கிறார்: கலை இயற்கையை ஒப்புமை செய்யவில்லை, அதன் ஆக்க வழிமுறைகளையே ஒப்புமை செய்கிறது. அதன் பொருட்களை நகல் படுத்தவில்லை அதன் உற்பத்திமுறையையே நகல் படுத்துகிறது. “கலை இயற்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல. கற்பனை இயற்கையின் படைப்புகளுடன் போட்டியிடுகிறது. கவிஞனே ஒரு வகையில் இயற்கையாகி அதைப் போலவே செயல்படுகிறான்.” இக்கருத்துகளுக்கும் விசென்டே விடோப்ரோ (Vicente Huidobro) தனது அறிவிப்புகளிலும் அறிக்கைகளிலும் வலியுறுத்தியதற்கும் உள்ள ஒற்றுமையை ஸ்பானிஷ் விமர்சகர்கள் கண்டுகொள்ளாதது வியப்பாக இருக்கிறது. இதே கருத்துக்கள் அந்தக் காலகட்டத்து கவிஞர் பலரின் படைப்புகளில் தோன்றியதென்பது உண்மை தான், (உதாரணமாக விடோப்ரோவிற்கு நவீனக் கவிதையை அறிமுகப்படுத்திய, ரெவெர்டி, (Reverdy) எனினும் மேற்கு அமெரிக்கருக்கும், லத்தின் அமெரிக்கருக்குமுள்ள ஒற்றுமை ஆழமானது தான். இருவரும் அரிஸ்டோடெலிய அழகியலைப் புரட்டிப் போட்டு அதை நவீன காலத்திற்காக மாற்றி அமைக்கிறார்கள் : கற்பனை மின்சாரத்தை போன்ற ஒரு வகை சக்தி. கவிஞனோ ஒரு அலைபரப்பி.

வில்லியம்ஸின் கவிதைக் கோட்பாடுகளும், விடோப்ரோவின் “படைப்புத் தத்துவமும்” இரட்டைப் பிறவிகளானாலும் பிணங்கும் இரட்டைப் பிறவிகள். விடோப்ரோ கவிதையை மந்திரவித்தைக்கு உடனொத்ததாகக் காண்கிறார். பழங்குடி மந்திரவாதி-பூசாரி (Shaman) மழையைப் படைப்பதைப் போல் கவிதையைப் படைக்க விரும்புகிறார். வில்லியம்ஸோ கவித்துவக் கற்பனையை அறிவியலுக்கு நிகரான மற்றும் அதைப் பூர்த்தி செய்யும் ஒரு இயக்கமாக கருத்தில் கொள்கிறார். மந்திரவித்தையிலிருந்து தொலை தூரத்திற்கு வில்லியம்ஸை விட எதுவுமே சென்றிருக்க முடியாது. குழந்தைத்தனமான தற்பெருமைக் கணமொன்றில், விடோப்ரோ “கவிஞ்ன் ஒரு சிறு கடவுள்” என்று கூறினார். இந்த வாசகத்தை வில்லியம்ஸ் முற்றிலும் நிராகரித்திருப்பார். மற்றொரு வித்தியாசம்: மெய்ம்மையிலிருக்கும் பொருட்களை நகலாக்காத, அவற்றை சில சமயங்களில் எதிர்மறைப்படுத்தும் சொற்பொருட்களையே விடோப்ரோ படைக்க முயன்றார். கலை, யதார்த்தத்திலிருந்து தப்பிக்க ஒரு வழியாக அவரது புத்தகங்களின் தலைப்பொன்று இந்த நோக்கத்தை வரையறுக்கிறது : சதுர அடிவானம் (Horizonte cuadrado, Square Horizon). நடக்கமுடியாததை முயற்சிப்பது: இயற்கையிலிருந்து நாம் விலகிச் செல்லமுடியாதென்பதை ஒருவர் உணர அருவ ஓவியர்களின் (Abstract Painters) படங்களை, நுண்பெருக்கிகளும் தொலைநோக்கிகளும் நமக்களிக்கும் பிம்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். வில்லியம்ஸ் என்ற கலைஞன் – அவர் ஹுவான் கிரிஸின் (Juan Gris) உதாரணத்தால் உந்தப்பட்டு வலுப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது – கற்பனையின் பொருட்களை மெய்ம்மையின் பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கிறார். சதுர்திண்மவியல் (கியூபிசம்) யதார்த்தம் என்பது மேஜை, குவளை , குழல் மற்றும் செய்தித்தாள் ஆகிய பொருட்களின் இருத்தல் அல்ல, அது அவற்றிலிருந்து வேறுபட்ட பிறிதொரு யதார்த்தம். எனினும் அவை மெய்ம்மையில் சற்றும் குறைந்தவைல்ல. இந்த வேற்று யதார்த்தமென்பது நிஜப் பொருட்களின் நிஜத்தை நிராகரிப்பதில்லை: அது வேறொரு பொருளாகவும் அதே சமயத்தில் அதே பொருளாகவும் இருக்கும் தன்மையுடையது. வில்லியம்ஸ் கூறுகிறார் :“ஹுவான் கிரிஸின் படத்திலுள்ள மலையும் கடலும் மலையும் கடலுமல்ல. அவை மலையும் கடலும் வரையப்பட்ட ஓவியமே ஆகும்.” .கவிதைப் பொருள் என்பது அது பேசும் பொருளாகவே ஆகிவிடுவதில்லை. மாறாக பொருளுடன் நுண்ணறிவுக் குறிகளை பரிமாறிக் கொள்ளும் மற்றொன்றாகவே அது இருக்கிறது.

வில்லியம்ஸின் நகலிக்க முயலாத யதார்த்தம் அவரை வேறிரு கவிஞர்களுக்கு அருகே இட்டுச் செல்கிறது: ஹொர்ஹே கீயென் (Jorge Guillen) மற்றும் பிரான்சிஸ் போஞ்ச் (Francis Ponge) ( நான் இங்கு தற்செயல் ஒற்றுமைகளையே சுட்டிக் காட்டுகிறேன் பாதிப்புகளை அல்ல). கீயெனின் வரியொன்று குறியீடுகளை வெறுக்கும் அவர்களது பொது மனப்பான்மையை வரையறுக்கிறது : “திட்டமோ கிருபையோயின்றி குஞ்சுப் பறவைகள் கீச்சுகின்றன “. திட்டமும் , கிருபையும் மறைந்து விடுகிறதா என்ன ? இல்லை : கவியின் கவனித்திற்கே வராமல் கள்ளத்தனமாக கவிதைக்குள் நுழைந்து விடுகின்றன. “கிருபையின் திட்டம்” இனியும் நிஜப்பறவைகளில் வெளிப்படாமல், கவிதையில் வெளிப்படுகிறது.  குறியீட்டுக் கவிதையின் கவிதை-கருத்தைப் போலவே கவிதை-பொருளும் அடையமுடியாதபடியே இருக்கிறது. வார்த்தைகள் பொருட்களே ஆனாலும் அவை அர்த்தம் தொனிக்கும் பொருட்கள். குறியீடுகளை ஒழிக்காமல், நம்மால் அர்த்தங்களை அழிக்க முடிவதில்லை. அதற்கு நாம் மொழியையே ஒழிக்க வேண்டும். அதற்கும் மேலே பிரபஞ்சத்தையே ஒழித்தாக வேண்டும். மனிதன் தொடும் எல்லா பொருட்களுமே அர்த்தத்தால் செறிவூட்டப் படுகின்றன. மனிதனால் உணரப்பட்டு, பொருட்கள் இருப்பை இழந்து அதற்கு பதிலாக அர்த்தத்தைப் பெற்றுக் கொள்கின்றன : பொருண்மை இழந்து பொருள்படுகின்றன. “அர்த்தமே இல்லாமல் இருப்பதும்” கூட ஒரு வித அர்த்தப்படுத்தலே ஆகும். அர்த்தம் தன் மனச்சாட்சியை விசாரணைக்குட்படுத்தி, அர்த்தத்தின் அர்த்தமென்ன? என்று வினவும் போது அபத்தம் என்ற உச்ச எல்லையை அடைகிறது. அர்த்தத்தின் இருமுகப்போக்கு : பொருட்களுக்குள் நாம் உள்ளே செல்லும், இருப்பு பொருட்களிலிருந்து தப்பிச் செல்லும் பிளவு.

அர்த்தம் இடைவிடாது கவிதையை அடியறுக்கிறது : புலப்படும் பிரத்யேகப் பொருள் என்ற அதன் யதார்த்தத்தை குறைக்க முயன்று அதை ஒரு கருத்தாகவோ, வரையறையாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ நிறுவ முயல்கிறது. கவிதையை அர்த்தத்தின் சூறையாட்டத்திலிருந்து பாதுகாக்க கவிஞர்கள் மொழியின் பொருண்மக் கூறுகளை வலியுறுத்துவார்கள். கவிதையில், கேட்கும் படியாகவும், பார்க்கும்படியாகவும் இருக்கும் அதன் குறியீடுகளின் புறநிலை இயல்புகள் அதன் சொற்பொருள் இயல்புகளை விட முக்கியமானவை. வேறுவிதமாக சொன்னால், அர்த்தம் ஓசையிடம் திரும்பி அதற்கு அடிமையாகிறது. குறியிடப்படுவது குறிக்காக (Sign) உணரும் ஏக்கத்தையே கவிஞன் பயன்படுத்திக் கொள்கிறான். கவிதைக்கும் உரை நடைக்குமிடையே நிரந்தரமானதொரு விளையாட்டின் மூலமாகவும், அபார நகைச்சுவையுணர்வு மற்றும் இயல்பறிவு மூலமாகவும் போஞ்ச் இதை நிகழ்த்துகிறார். இதன் விளைவு தான் Objeu (மனதின் சார்பு நிலையற்ற விளையாட்டு என்று இதை அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்) என்ற புதிய இருப்பு. இதெல்லாம் சரி, அர்த்தத்தை நாம் கேலி செய்யலாம், அதைக் கலைத்துத் துகளாக்கலாம், ஆனால் அதை அடியோடு அழித்துவிட முடியாது : முழுதாகவோ, துண்டிக்கப்பட்ட பாம்பைப் போல் நெளியும் துண்டமாகவோ, அர்த்தம் மீண்டும் தோன்றுகிறது. ஒரு புறம் உலகைப் பற்றிய ஆக்க பூர்வமான விவரிப்பு என்பது அதைப் பற்றிய விமர்சனமாகத் திரும்பி விடுகிறது (போஞ்ச் அறவோனாக); மற்றொரு புறம் அது proeme (உரை நடைக் கவிதை) ஆக மாறிவிடுகிறது [அரிய/செயற்கைத்தனமான போஞ்ச் (precieux Ponge), ஒரு வித பொருள்களின் கிராசியானாக (Gracian).] கீயெனிலோ உலகையும் பொருட்களையும் பற்றிய கொண்டாட்டம் வரலாறு, அங்கதம் மற்றும் இரங்கற்பாவில் முடிகிறது: மீண்டும், அர்த்தத்தில் . மொழியின் இரு ஊடகப் பண்பிற்கு (சொற்கள் பொருட்களாகவும், பொருள்படுபவையாகவும் இருப்பதால்) வில்லியம்ஸ் அளிக்கும் விடை வித்தியாசமானது: அவர், வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டிருக்கும் யூரோப்பியர் அல்ல, மாறாக வரலாறு அவர் முன்னே இன்னும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அவர் கவிதையை உரைநடையின் அறத்தைக் கொண்டு திருத்தவோ அல்லது பாடலில் ,நகைச்சுவையைத் துறவு கற்பிக்கும் ஆசானாக்கவோ முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக : உரைநடை கவிதையின் விளைநிலம், நகைச்சுவை கற்பனையின் உந்துகோல். வில்லியம்ஸ் கவிதை வித்துக்களை விதைப்பவர். அமெரிக்க மொழி என்பது புதைந்து கிடக்கும் ஒரு வித்து, கவித்துவக் கற்பனையின் நீர்ப்பாய்ச்சல் மற்றும் ஒளிவீச்சால் மட்டுமே காய்கனி என்ற விளைவைப் பெறமுடியும்.

எப்போதுமே அரைகுறையாக, தற்காலிகமான நிறைவுறாத ஓரிணக்கம், அர்த்தத்துக்கும் பொருளுக்குமிடையே. கீயெனிடம் உலகைப் பற்றிய விமர்சனமாகவும், போஞ்சிடம் மொழியின் விமர்சனமாகவும் விளங்கும் அர்த்தம் வில்லியம்ஸிடம் பொருட்களுக்கு பணிபுரியும் உயிர்ப்புள்ள சக்தியாக மாறுகிறது. பொருட்களின் பேற்றுத் துணைவியான அர்த்தம், உருவாக்குகிறது. அவரது கலை “மனிதர்களையும் கற்களையும் உருவகத்தால் ஒன்றிணைக்க” முயல்கிறது. கவிதை என்ற உருவகத்தில் பொருட்கள் பேசுகின்றன, சொற்களோ கருத்துகளாக இருப்பதைத் தவிர்த்து புலனாகும் பொருட்களாக மாறிவிடுகின்றன. கண்ணும் காதும் : பொருள் கேட்கப்பட்டு, வார்த்தை வரையப்பட்டு. இதில் முதலாவதில், வில்லியம்ஸ் ஒரு ஆசான், மேலும் புறவயவாதிகள் (Objectivists) என்று அழைக்கப்பட்டவர்களின் நண்பர் (ஸூகாவ்ஸ்கி, ஒப்பென்). இரண்டாவதைப் பொருத்தமட்டில் “கருப்புமலைக் குழுவுடன்” (Black Mountain School) தொடர்பு கொண்டவர் : ஓல்சன், டங்கன், க்ரீலி. கற்பனை பார்க்க மட்டும் செய்யவில்லை, அது கேட்கவும் செய்கிறது; கேட்க மட்டும் செய்யவில்லை, பேசவும் செய்கிறது. அமெரிக்க மொழிக்கான தேடலில், மாறுபடும் அடியை (Variable foot) உடைய ஆனால் மும்மையான அசைவழுத்த அஸ்திவாரத்தையும் கொண்ட (triadic accentual base) சீரையே வில்லியம்ஸ் அடிப்படைத் தாளமாக கண்டெடுக்கிறார் (கேட்கிறார்). “ நமக்கொன்றும் தெரியாது, ஆட்டத்தைத் தவிர : நாமறிந்ததெல்லாம் தாளம் மட்டுமே” என்று கூறுகிறார். கவிதை-பொருள் என்பது ஓசை ஒழுங்குடன் பேசப்படும் பொருளாகும். மக்களின் மொழியின் தனிம மாற்றமே அதன் தாளம். மொழியின் மூலமாக வில்லியம்ஸ் பொருள் மற்றும் உணர்விலிருந்து தாவி வரலாற்றின் உலகிற்குள் சென்றுவிடுகிறார்.

இச்சிந்தனைச் சங்கிலியின் விளைவே பாட்டர்சன். இதில் வில்லியம்ஸ் கவிதை-பொருள் என்பதிலிருந்து பொருட்களாலான -அமைப்பு என்ற நிலைக்கு கவிதையைக் கொண்டு செல்கிறார். ஒன்றாகவும் பலதாகவும் இயங்கும் ஓர் அமைப்பு – ஒரே ஆளைக் கொண்ட நகரத்தைப் போல் ஒன்றாய், பல பூக்களாக இருக்கும் பெண்ணைப் போல் பலதாய். பாட்டர்சன் அமெரிக்காவின் தொழில் மயமாக்கப்பட்ட கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு நகரத்தின் சரிதை. மேலும் அது ஒரு தனிமனிதனின் வரலாறும் கூட. நகரமும் மனிதனும் மலையின் கல் வாயிலிருந்து பேரிரைச்சலுடன் உருண்டு விழும் அருவி என்ற படிமத்தில் இழைக்கப்பட்டிருக்கின்றன. பாட்டர்சன் மலை அடிவாரத்தில் நிறுவப்பட்ட நகரம். மொழியும், தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை ஒருபோதும் அறியாது, அதன் அர்த்ததை நாடி எப்பொதுமே அலைந்து கொண்டிருக்கும் மக்களும் தான் இந்த அருவி. அருவியும் மலையும், ஆணும் பெண்ணும், கவிஞனும் மக்களும், தொழிற்புரட்சிக்கு முந்தைய பிந்தைய யுகங்கள், தொடர்பிசைவற்ற அருவியின் இரைச்சலும் தாளத்துக்கான, அர்த்தத்துக்கான தேடலும் . பாட்டர்சன் ,அமெரிக்க கவிதையால் கண்டுபிடிக்கப்பட்டு, எனீயெடிற்கும் (Aeneid) அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைக்கும் இடையே, டிவைன் காமெடிக்கும் (Divine Comedy) பத்திரிகையியலிற்கும் இடையே, ஊசலாடும், ஒரு கவிதை வகையைச் சாரும் : துண்டங்களாலான பெரிய தொகுப்புகள். பௌண்டின் காண்டோஸ் (Cantos) இவ்வகையின் பிரம்மாண்டமான உதாரணம்.

அமெரிக்க யதார்த்தத்தைப் பேசவும், படைக்கவும் துடித்த இக்கவிதைகள் அனைத்தும் விட்மன் (Whitman) வழி வந்த அவரது சமகாலத்துச் சந்ததிகள். அவை அனைத்தும், புல்லின் இலைகள் என்ற படைப்பின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற முனைந்தன, ஆனால் எதிர்மறையாக. அமெரிக்காவின் எதிர்காலத்தை உள்ளடக்குவதே விட்மனின் கருப்பொருள். பருமை பொதுமை, நிகழ்காலம் எதிர்காலம், இவற்றின் திருமணம் : தேசியத்தால் கட்டுண்ட யூரோப்பிய மனிதனை சர்வமயப்படுத்தி (Universalize) அவனை மீண்டும் பிரத்தியேகமானதொரு இடத்திலும் சமூகத்திலும் வேரூன்றச் செய்வதே அமெரிக்க ஜனநாயகம். பிரத்தியேகம் என்று குறிப்பிடுவது அந்தச் சமூகமும் இடமும் மரபாகாமல், எதிர்காலத்தை நோக்கித் தூண்டப்படும் ஒரு நிகழ்வாகவே இன்னமும் இருப்பதால். பௌண்ட், வில்லியம்ஸ் மற்றும் ஹார்ட் கிரேனும் கூட இந்த வாக்குறுதியின் மறுபக்கத்திலிருக்கிறார்கள்: அத்திட்டத்தின் சிதைவையே அவர்களது கவிதைகள் காட்டுகின்றன. சிதைவுகளின் அழகும் கம்பீரமும் மற்றதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. தேவாலயங்கள் கிருத்தவ சாசுவதத்தின் சிதைவுகள், ஸ்தூபிகள் பௌத்த சூனியத்தின் சிதைவுகள், கிரேக்க டெம்பிள்களோ நகரம் (Polis) மற்றும் வடிவயியலின் சிதைவுகள். ஆனால் அமெரிக்காவின் பெரும் நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் எதிர்காலத்தின் சிதைவுகள். அவற்றின் பிரம்மாண்டமான தொழிலகக் குப்பைத்தொட்டிகளில் தத்துவமும், முன்னேற்றத்தின் அறமும் ஸ்தம்பித்து நிற்கின்றன. நவீன உலகத்தோடு எதிர்காலத்தைப் பற்றிய பூதாகாரக் கனவுகள் முடிவடைகின்றன. அவற்றோடு ஒப்பிடுகையில் இன்காக்கள், ரோமர், சீனர் ,எகிப்தியர்கள் போன்றோரின் பூதாகாரங்களெல்லாம் சிறுபிள்ளைத்தனமான மணற்கோட்டைகளைப் போலிருக்கின்றன.

வில்லியம்ஸின் சிக்கலான கவிதை சமமற்றிருக்கிறது. பெரும் செறிவுடன் ஒலிக்கும் மாந்த்ரீக அல்லது யதார்த்தப் பகுதிகளுடன் இணைப்பு ஒழுங்கற்ற நீண்ட துண்டங்களும் இருக்கிறன. பாழ்நிலம் (Wasteland) காண்டோஸ்(Cantos) ஆகிய கவிதைகளை நோக்கியும் சில சமயம் அவற்றுக்கெதிராகவும் எழுதப்பட்டதால், இவ்விரு படைப்புகளுடன் அது நடத்தும் விவாதம் அவ்வப்போது கையை விட்டு நழுவி விடுகிறது. அதன் வாசித்தல் பிற வாசித்தல்களைச் சார்ந்திருப்பதால் வாசகனின் மதிப்பீடு ஒப்பீட்டை நோக்கித் திரும்பி விடுகிறது. இதுவே இக்கவிதையின் பிரதானக் குறை. நவீன உலகைப் பற்றிய பௌண்ட் மற்றும் எலியட்டின் தரிசனம் மிக இருளார்ந்தது. அவர்களது மருள் நோக்கு நிலமான்ய ஏக்கங்களாலும் முதலியத்தின் முந்தைய காலத்து கொள்கைகளாலும் உந்தப்பட்டது. இதனால் பணம் மற்றும் நவீனம் பற்றிய அவர்களது கண்டனம் உடனடியாகப் பழமைவாத மற்றும் பாசிஸ (பௌண்டைப் பொறுத்தவரையில்) நிலைப்பாடுகளாக மாறியது. வில்லியம்ஸின் தரிசனமும் நன்னம்பிக்கையற்றது என்றாலும் (அது எவ்வாறு நம்பிக்கை உடையதாக இருந்திருக்க முடியும்) , அத்தரிசனத்தில் வேறு காலத்து முன் நினைவுகளில்லை. இது நிறையாகவே இருந்திருக்கலாம், ஆனால் ஆகவில்லை: வில்லியம்ஸிற்கு தத்துவம் மற்றும் மதம் சார்ந்த முறைமைகளில்லை, ஒத்திசைவான கருத்து மற்றும் நம்பிக்கைத் தொகுப்புகளுமில்லை. அவருக்களிக்கப்பட்ட உடனடியான மரபும் (விட்மன்) பயன்படுத்தும்படியாக இல்லை. வில்லியம்ஸின் கருத்துருவத்தின் மத்தியில் ஒரு வகையான சூன்யமிருக்கிறது (அவரது சுருக்கமான கவிதைகள் இதற்கு விதிவிலக்கு) . இச்சூன்யம் சமகால அமெரிக்க பண்பாட்டின் சூன்யமே. பாழ் நிலம் என்ற கவிதையின் கிருத்தவமென்பது எரித்து, பஸ்மிக்கப்பட்ட, என்னைப் பொருத்தவரையில் இனி இலைகள் தளிர்க்கவே முடியாத, ஓர் உண்மை என்றாலும், அது மையமான ஒரு உண்மையாக இருந்ததென்பதால், இறந்த நட்சத்திரத்தின் ஒளியைப் போல், நம்மை இன்னமும் தொடுகிறது. இது போல் எதையுமே என்னால் பாட்டர்சனில் பார்க்க முடியவில்லை. காண்டோசுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் வில்லியம்சிற்கு சாதகமாக அமைவதில்லை. அமெரிக்கா ஓர் ஏகாதிபத்திய வல்லரசு, பௌண்ட் அதன் வெர்ஜில்லாக (Virgil) ஆகமுடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் அதன் மில்டனாகவாவது ( Milton) இருந்தார் : பெரும் வல்லரசின் வீழ்ச்சியே அவரது கருப்பொருள். அமெரிக்கா ஒரு உலகத்தை ஈட்டினாலும் அதன் ஆன்மாவையும் , அதன் எதிர்காலத்தையும் இழந்தது (விட்மன் நம்பிய அந்த உலகளாவிய எதிர்காலம்). அவரது சீர்மை மற்றும் அறத்தின் காரணத்தால் அவரது நாட்டின் ஏகாதிபத்திய அம்சத்தையோ அதன் அசுரத்தனமான பரிமாணத்தையோ வில்லியம்ஸ் கண்டுணராமல் இருந்திருக்கலாம்.

பாழ் நிலத்திலுள்ள சமய உணர்வின் நம்பகத்தன்மையையோ, அதன் ஒருமையையோ (எலியட்டின் சமயயுணர்வு எதிர்மறையாக இருந்தாலும் கூட) பாட்டர்சன் அடைவதில்லை. காண்டோஸ் வில்லியம்ஸின் கவிதையை விடப் பல மடங்கு விசாலமாகவும் செறிவாகவும் விரியும் கவிதை. நம் கொடூரமான காலத்திற்கு எதிராக நிற்கும் வலிமையைக் கொண்ட ஒரு சில படைப்புகளில் அதுவும் ஒன்று. அதனால் என்ன? ஓரு கவிஞனின் மகத்துவம் அவனது பரப்பால் அளக்கப்படுவதில்லை, அவனது படைப்பின் தீவிரமும் ,பூரணத்துவமும் அதை நிர்ணயிக்கின்றன. அவற்றின் உயிர்த்துடிப்புள்ள உவகையாலும் கூட. அமெரிக்கக் கவிதைகளிலேயே மிக உவகையளிக்கும் கவிதைகள் வில்லியம்ஸ் எழுதியவை. ஐவோர் விண்டெர்ஸ் (Yvor Winters) சரியாகச் சொன்னார் : “ ஷேக்ஸ்பியரைக் காட்டிலும் ஹெரிக்கின் (Herrick) சிறப்பு குறைவென்றாலும் அவரது நேர்த்தி எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஷேக்ஸ்பியர் நிலைக்கும் வரை அவரும் நிலைப்பார்….. ஹெரிக்கின் அளவிற்கு வில்லியம்ஸும் அழிவின்மை யை பெற்று நிலைத்திருப்பார். நூற்றாண்டின் இறுதியில் வாலஸ் ஸ்டீவன்சுடன் அவர் தனது தலைமுறையின் தலைசிறந்த இரு கவிஞர்களில் ஒருவர் என்ற புகழையும் அடைவார். “ அந்த ஊகம் விண்டர்ஸ் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே நிறைவேறியது. புது உலகின் கவிதையைப் பற்றிய அவரது கருத்துக்களைப் பொருத்தமட்டில் – உண்மையிலேயே அவரது காலத்தின் மிக அமெரிக்கத்தனமான கவிஞர் வில்லியம்ஸ் தானா ? எனக்குத் தெரியாது, மேலும் அதில் எனக்கு அக்கறையும் இல்லை. ஆனால் புதுமை குறையாமலிருக்கும் மிகத் துலக்கமான கவிஞர் அவர்தான் என்பதை நான் அறிவேன். குடிநீரின் ஓட்டத்தைப் போல் புதுமையின் தெளிவுடன், நான்டக்கட்டில் (Nantucket) வெள்ளையடிக்கப்பட்ட அறையில் மரமேஜையின் மீதிருக்கும் கண்ணாடிக் கூஜாவிலிருக்கும் அதே நீரின் துல்லியத்துடன்.. வாலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு முறை அவரை “ சமகாலத்து கவிதையின் ஒரு விதமான டியொயென்ஸ் (Diogenes) என்றழைத்தார். முழுமையான பகலொளியில் எரியும் அவரது லாந்தர் அதனளவில் ஒரு குட்டி சூரியன் தான். சூரியனின் நகலும் அதன் நிராகரிப்பும்: இயற்கையான ஒளி தடை செய்யப்பட்ட இடங்களை எல்லாம் அந்த லாந்தர் பிரகாசமாக்கும்.

நியதி
கசங்கிய
காவி நிறத்த
கிட்டத்தட்ட ஒரு ஆளின்
நீளமும் பருமனையும்
உடைய காகிதமொன்று
சாலையில்
காற்றுடன் மெதுவாக திரும்பத்
திரும்ப
புரள்கையில்
காரொன்றுஅதன் மீது
ஓடிச் சென்று
நசுக்கியது
தரையோடு. ஆளைப்
போல் அல்லாது எழுந்து
மீண்டும் புரண்டது
காற்றுடன் திரும்பத்
திரும்ப முன்பு
இருந்ததைப் போல் இருப்பதற்காக.

1970 –ஆம் ஆண்டு கோடையில் கேம்பிரிட்ஜின் சர்ச்சில் கல்லூரியில் நான் வில்லியம்ஸின் ஆறு கவிதைகளை மொழிபெயர்த்தேன். அதன்பின் வெராகிரூசிற்கும் (Veracruz), சீவாதனேஹோவிற்கும் (Zihuatanejo) மேற்கொண்ட துடுக்குப் பயணங்களில் பிற கவிதைகளை மொழிபெயர்த்தேன். என்னுடையவை நேர்பொருள் மொழிபெயர்ப்புக்கள் அல்ல: நேர்பொருள் என்பது இயலாத ஒன்று, அருவருக்கத்தக்கதும் கூட. அவை மறுஆக்கங்களும் அல்ல (அவை அப்படி இருந்திருக்கக்கூடாதா என்று நான் ஆசைப்பட்டதுமுண்டு ).அவை ஒத்திருத்தல்கள், சில சமயம் மொழிவழி வந்த உருமாற்றங்கள். வில்லியம்ஸின் தாளலயத்தை ஸ்பானிஷில் கொண்டுவர முடியாததே எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. கவிதை மொழிபெயர்ப்பின் முடிவிலா சிக்கல்களில் மாட்டிக் கொள்வதை விட வில்லியம்ஸை நான் எவ்வாறு சந்தித்தேனென்பதைப் பற்றியே கூற விரும்புகிறேன். டொனால்டு ஆலன் எனது கவிதையொன்றின் ஆங்கில வடிவத்தை அனுப்பினார் ( “சிதைவுகளினூடே ஒரு பாசுரம்” ) . மொழிபெயர்ப்பு என்னைக் கவர்ந்ததற்கு இரு காரணங்கள்: அது பிரமாதமாக இருந்தது, மேலும் அதை எழுதியவர் வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸ். அவரை சந்திப்பேன் என்று உறுதி பூண்டேன். எனது நியூ யார்க் பிரயாணமொன்றில் ஆலெனை முன்பு கம்மிங்ஸைப் பார்க்க அழைத்துச் சென்றதைப் போல் தன்னுடன் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். ஒரு மதியம் ரதர்போர்டிலுளுள்ள அவரது இல்லத்தில் அவரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவரது பாதி உடல் ஏற்கனவே வாதத்தால் பாதிக்கப் பட்டிருந்தது. அமெரிக்காவின் பொதுவான வழக்கப்படி அவரது இல்லம் மரத்தால் கட்டப்பட்டிருந்தது. எழுத்தாளரின் வீட்டைக் காட்டிலும் மருத்துவரின் வீடாகவே அது இருந்தது. அவரை விட செயற்கைத்தனமற்ற மனிதனை நான் சந்தித்ததே இல்லை – சாமியாடிக்கு (Oracle) நேரெதிர். அவர் கவிதையால் ஆட்கொள்ளப்பட்டவர், தனது கவிஞன் என்ற பட்டத்தால் அல்ல. நகைத்திறம், அமைதி, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கில்லாத சுயமுக்கியத்துவமற்ற அடக்கம். ஒவ்வொரு ஃப்ரென்ச், ஸ்பானிஷ், இத்தாலிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளருக்குள் – குறிப்பாக அவன் ஒரு நாத்திகனாகவோ புரட்சியாளனாக்வோ இருந்தால் – ஒரு சமயகுரு ஒளிந்து கொண்டிருக்கிறான். அமெரிக்கர்களிடமோ எளிமை, கருணை, மற்றும் ஜனநாயக மனிதநேயம் (அதன் உண்மையான அர்த்தத்தில்) ஆகிய பண்புகள் துறைமைக் கூட்டை உடைத்து வெளிவருகின்றன. உலகத்தோடு கடினமான உறவுகளை மேற்கொள்ளும் அமெரிக்காவில் தடைசெய்ய முடியாத நீரூற்றிலிருந்து வரும் நீரைப் போல் இணக்கம் பொங்கி வருவது எப்போதுமே ஆச்சரியத்தை அளிக்கிறது. அமெரிக்க ஜன நாயகத் தொடக்கத்திலிருந்த சமயக் கூறுகள் இதற்கொரு காரணமாக இருக்கலாம். இது சமயத்தால் இணைக்கப்பட்ட குழுவை அரசியல் கோளத்திற்கு நிலைமாற்றி, தேவாலயத்தின் மூடிய தளத்தை பொது மக்களுக்கான சதுக்கத்தின் திறந்த வெளிக்கு கொண்டு வந்தது. பிராடஸ்டண்டு சமய ஜனநாயகம் அரசியல் ஜனநாயகத்திற்கு முன்னதாகவே இருந்தது. நமது நாடுகளில் மக்களாட்சி மத எதிர்ப்பில் தொடங்கி, முதலிலிருந்தே அரசிற்கெதிராக சமூகத்தை வலுப்படுத்தாமல், தேவாலயத்திற்கெதிராக அரசை வலுப்படுத்தியது.

கம்மிங்ஸை விட வில்லியம்ஸ் குறைவாகவே பேசினார். வியப்ப்பை விட அன்பைத் தூண்டும்படியாகவே அவரது பேச்சு அமைந்திருந்தது. மெஹிகோ மற்றும் அமெரிக்காவைப் பற்றி பேசினோம். “அபரிமிதமான வேர்களும் இறந்தகாலங்களும் எங்களை மூச்சுத்திணற வைக்கிறது. ஆனால நீங்களோ நொறுங்கித் துகளாகிக் கொண்டிருக்கும் எதிர்காலத்தின் இமாலய பாரத்தால் நெருக்கப்படுகிறீர்கள் “ என்று நான் அவரிடம் கூறினேன். அவர் அதை ஆமோதித்து, அண்மையில் அவரது முன்னுரையுடன் வெளிவந்த இளங்கவிஞர் ஒருவரின் துண்டுப் பிரசுரத்தை எனக்குக் கொடுத்தார் : அது ஆலென் கின்ஸ்பெர்க்கின் (Allen Ginsberg) ஊளை (Howl). பல ஆண்டுகளுக்குப் பிறகே அவரை மீண்டும் சந்தித்தேன், அவரது மரணத்திற்கு சற்று முன்னே. மோசமான உடல்நிலை அவரை பலவீனமாக்கி இருந்தாலும் அவரது மன நிலையும் அறிவும் அப்படியே இருந்தது. நாங்கள் மீண்டும் மூன்று, நான்கு அல்லது ஏழு அமெரிக்காக்களைப் பற்றி பேசினோம்.: சிகப்பு, வெள்ளை, கருப்பு, பச்சை, ஊதா..அவரது மனைலி பிளாசியும் எங்களுடன் இருந்தார். பேசிக் கொண்டிருக்கையுல் வயோதிகத்தில் அவர் எழுதிய ஆஸ்போடல் (Asphodel) என்ற பெரும் காதல் கவிதையை நினைத்துக் கொண்டேன். இப்போது பேசியதை நினைவுகூர்ந்து இதை எழுதுகையில் என் மனதில் அந்த நிறமற்ற பூவை எடுத்து அதன் மணத்தை முகர்கிறேன். “விசித்திரமான மணம்” கவிஞர் கூறுகிறார் , “அறத்தின் மணம்”. உண்மையில் அது மணமே அல்ல, “ கற்பனையில் தவிர” . இது கவிதையைப் பற்றிய மிகச் சிறந்த வரையறுப்பாகவும் இருக்கிறதல்லவா? : எதையுமே கூறாது கற்பனையுடன் மட்டுமே பேசும் ஒரு மொழி; மற்றொரு கவிதையிலும் அவர் கூறுகிறார் : “பாறைகளைப் பிளக்கும் ஸாக்ஸிஃப்ரேஜ் எனது மலர் “. யதார்த்தத்தை பாதிக்கும் கற்பனை மலர்கள், மனிதர்களுக்கும், பொருட்களுக்குமிடையே எழும் உடனடிப் பாலங்கள். இவ்வாறே கவிஞன் உலகத்தை வசிக்கத்தக்கதாக ஆக்குகிறான்.

***  *****  ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.