புத்தகங்களும் புனிதங்களும் – ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451

ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451, 1950ஆம் ஆண்டு வெளிவந்த நாவல், ஒற்றை வரியில் சொன்னால், கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான நாவல், புத்தகங்களைத் தடை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாவல். இன்றும் கொண்டாடப்படுகிறது.

புத்தகங்களைத் தடை செய்வது போன்ற சமகாலப் பிரச்சினைகளைப் பேசும்போது ‘இன்று’ என்றச் சொல்லைப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல், ஒரே வாரத்தில் நாம் எழுதியதைச் செய்திகள் கடந்து சென்று விடுகின்றன. இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கிய இரண்டு வாரங்கள் முன்னர் ‘பதிப்பகங்கள் புத்தகங்களைத் திரும்பப் பெற்று கூழாக்குவதை நாம் இன்று பார்க்கும்போது, இந்த நாவல் பேசும் விஷயங்கள் இன்னும் விவாதித்து முடிக்கப்படவில்லை என்பது விளங்குகிறது’, என்று எழுதியது இப்போது வேறேதோ காலத்தில் எழுதியது போலிருக்கிறது – இன்று அச்சுக்குத் தயாராகும் கட்டத்திலேயே புத்தகங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. திரை விழுந்து திரை எழுந்ததுபோல் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குபவர்களும் அதன் பாதுகாவலர்களும் இடம் மாறி அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க நேர்கிறது. இன்னொரு இன்று, எழுதப்படும் கட்டத்திலேயே புத்தகங்கள் கைவிடப்படும்போது இது போன்ற குழப்பங்கள் எதுவும் இருக்காது. இணங்கியும் பிணங்கியும் நாம் அத்தகைய ஒரு செம்புலத்தை நோக்கியே முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

ஃபாரன்ஹீட் 451 நாவல் புத்தகங்களை வாசிப்பதிலும் தடை செய்வதிலும் உள்ள பிரச்சினைகளைத் துல்லியமாக விவரிப்பதிலோ, தீர்வுகளை ஆணித்தரமாக நிறுவுவதிலோ பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. நைந்த ஒரு எதிர்காலத்தை கணிப்பதாகக் கொண்டால், அதிலும் வெற்றி பெறுவதில்லை. புத்தகங்கள் கொளுத்தப்படுவதைப் பார்க்கும்போது நம் மனம் இயல்பாகவே பதைக்கிறது – வேலியே பயிரை மேய்வதுபோல், பதிப்பாளரே எழுத்தாளரைத் துறப்பதுபோல், தீயணைப்புப் படை வீரர்களே புத்தகங்களைக் கொளுத்தி, அவை இருந்த வீட்டுக்கு எரியூட்டி சுத்திகரிப்புச் செய்வதா? அந்த பதைப்பே இந்த நாவலின் வெற்றி.

தம் நுண்ணுணர்வுகளின் விரிவாக்கத்தைக் கோரும் கருத்துகளைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களே புத்தகங்களைத் தடை செய்ய ஆசைப்படுகிறார்கள் என்கிறார் இவர். இந்த நாவலில் விவரிக்கப்படும் சமூக அமைப்பு இத்தகைய தொட்டாற்சிணுங்கிகளால் நெறிமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.  இங்கு புத்தக வாசிப்பு குறைந்து போய் ஒரு கட்டத்தில், தொல்லை செய்யும் புத்தகங்களுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது. புத்தகங்கள் வாசிக்கப்படுவ்தில்லை என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை, அவை தீ வைத்துக் கொளுத்தப்படுவது குறித்தும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. இது புத்தகங்களைப் பொருட்படுத்தாத சமூகம். புத்தகங்களுக்கு பதில் தொலைகாட்சித் தொடர்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் விருப்பப்பட்டு தொலைந்து போகிறார்கள் இங்கு (1950!). அரசு தடை செய்யாமலே புத்தகங்களின் வசீகரம் குறைத்து போகிறது – அதன்பின் யார் எதைத் தடை செய்தாலென்ன என்ற ஒரு அசிரத்தை மக்கள் மத்தியில் உருவாகிறது. தீயணைப்புப் படை வீரர்கள் புத்தகங்களுக்கு எரியூட்டும் வீரர்களாகச் செயல்படுகிறார்கள்.

பிராட்பரியின் எழுத்தில் புத்தகங்களின் மீதான நேசம் வெளிப்படுகிறது என்பது முக்கியமான விஷயம். புத்தகங்களின் மீதான நேசம் என்பதை, புத்தகங்களில் வெளிப்படும் பல குரல்கள் மற்றும் பல பார்வைகள் மீதான நேசம் என்று திருத்தி வாசிக்க வேண்டும். கூடவே, புத்தகங்களில் உள்ள விஷயங்கள் நம் நிம்மதியைக் குலைக்கின்றன என்பதாலும் சின்னச் சின்ன விஷயங்களை (இலைகள், நட்சத்திரங்கள், ஒளி, மழைநீரின் சுவை) கவனிக்கச் செய்கின்றன என்பதாலும் எழும் தன்னனுபவ விசுவாசம்.

படுகொலைகள், பண்பாட்டு ஒழிப்பு, அதிகார பறிப்பு போன்ற பெரிய பெரிய விஷயங்களை நிர்ணயிக்கும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளைத் தீர்மானிக்க பன்முக வாசிப்பு நேசமும் தன்னனுபவ விசுவாசமும் மட்டுமே போதுமா என்றால் அது உங்கள் அரசியலைப் பொறுத்தது. ஓரளவுக்கு உங்கள் முன் அனுமானங்களையும் பொறுத்தது. யாரும் எதுவும் எழுதலாம் என்ற சுதந்திரம் அளிப்பது கோட்பாட்டு அளவில் வசதியாக இருக்கிறது. ஆனால் யாரும் எதுவும் செய்யலாம் என்ற நடைமுறை லைசன்ஸ் கொடுக்க ஆயிரம் முறை யோசிப்போம் – காரணம், கருத்தையும் செயலையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கிறோம்.

செயலுக்கு உள்ள தாக்கம் கருத்துக்கு இருந்தாலும், ஒரு வசதிக்கு கருத்தை ஏட்டுச் சுரைக்காய் அளவிலேயே நிறுத்தி வைத்திருக்கிறோம். எக்கணமும் உயிர்பெற்று எழுந்து நம்மை அடிக்கக்கூடிய காகிதப் புலி கருத்துச் சுதந்திரம், அது எப்போதும் சமநிலை குலைப்பையே தன் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்திருந்தும் நாம் கருத்துச் சுதந்திரத்தை ஏதோ ஒரு அளவில் ஆதரிக்கக் காரணம் இருக்கிறது. கடந்த காலம் விட்டுச் சென்ற சுவடுகளும் நினைவின் தொடுவானில் விழும் எதிர்காலத்தின் நிழலும் நம் சிந்தனையின் வரைகளாக உள்ளன. இந்தக் காட்சிப்பிழையை முழுமையாய் நம்பினால், அது தன் திசையில் நம்மைக் கொண்டு சென்று மோசம் செய்துவிடும் என்ற அபாயத்தை உணர்ந்திருப்பதால் கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கிறோம்.

ஆனால், கட்டற்ற கருத்துச் சுதந்திரம் லட்சிய உலகில்தான் சாத்தியம். யதார்த்தத்தில் கருத்துச் சுதந்திரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தடைகளால் நெறிமுறைப்படுத்தப்பட்டுதான் எங்கும் இயங்குகிறது. சுய இழிவுக்கு முழுமையாக பலியானவர்களைத் தவிர ஏனையோரை பாதிக்காத கருத்து எதுவுமே இல்லை என்னும் நிலை இந்த பூமியில் கிடையாது.

மேற்கத்திய லிபரல் ஜனநாயக அரசுகள் சில விஷயங்களில் கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரித்தாலும், வேறு பல விஷயங்களை  வெளியிடுவதைத் தண்டிக்கின்றன. நடைமுறைத் தாக்கம் வலுவானதாக இருக்கும் இடத்தில் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் தீர்மானமாக முடிவு செய்யப்படுகின்றன. ஒரு சமுதாயத்தில் எது சாதாரண கருத்தாக இருக்கிறதோ, அதுவே வேறொரு சமுதாயத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கலாம். அங்கே அனுமதிக்கிறார்களே என்ற கேள்வி அபத்தமான ஒன்று. எங்கேயும் எல்லாவற்றையும் அனுமதிப்பதில்லை.

 

Fahrenheit_451

“புத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கண்டு நாம் கொதிப்படைகிறோம் என்பது, அதில் உள்ள விஷயங்களின் நம்பகத்தன்மைக்கும் அப்பால், புத்தக வடிவில் வரும் காரணத்தால் மட்டுமே அதன் உள்ளடக்கத்துக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்துவிடுகிறது என்று நாம் அறிந்திருப்பதை உணர்த்துகிறது,” என்று இந்தக் கட்டுரையின் வரைவு வடிவில் எழுதினேன். பெற்றுக் கொள்ளும்போது தெரியாத உண்மை வளர்ந்தபின் தெரியவந்து, “இவன் என் பிள்ளை அல்ல” என்று ஒரு தகப்பன் அறிவிப்பதுபோல் பதிப்பாளரே தன் புத்தகம் ஒருத்தரை லெஜிடிமைஸ் செய்துவிடக்கூடாது என்ற பதைப்பது மேற்கண்ட வாக்கியத்தின் சந்தேகத்துக்கிடமில்லாத உண்மையை உணர்த்துகிறது. “பொய்களை எவரும் புறக்கணித்துவிட முடியும். ஆனால், அவை உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் இருக்கும்போதுதான் அந்தப் பொய்கள் ஏற்றுக்கொள்ளக் கடினமாகவும், உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருக்கின்றன,” என்றெல்லாம் எழுதி இது ஏன் என்று விளக்க வேண்டிய தேவையே இல்லாமல் போய் விட்டது, இன்று.

அந்தப் பதிப்பாளரின் அச்சத்திலும் நியாயம் இருக்கிறது, புத்தகங்களைக் கூழாக்கிப் பார்க்க ஆசைப்பட்டவர்களின் அச்சத்தில் இருக்கும் அதே நியாயம்தான் இது. ஒரு புத்தகத்தில் உள்ள விஷயங்களை எவ்வளவுதான் ஆணித்தரமாக மறுத்தாலும், ஒன்று வடிகட்டிய பொய் என்றும் மற்றது முழுமையான உண்மை என்றும் யாரும் இறுதிப் பிரகடனம் செய்வதில்லை. முரண்பட்டாலும் கருத்துகள் அனைத்தும் எப்போதும் சம மதிப்பு கொண்டவையாகவே இருக்கின்றன. இவை எப்போது வேண்டுமானாலும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்பதால், மறுக்கப்பட்ட கருத்து அதன் உயிர்ப்பை இழந்துவிடுவதில்லை.

கருத்துச் சுதந்திரம் இவ்வளவு சிக்கலாக இருக்கும்போது, இதையெல்லாம் தொட்டே பார்க்காத பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451 ஒரு ஐகானிக் நாவலாக இருப்பது ஏன் என்று யோசித்தால் புத்தகங்கள் புனிதமானவை என்று நம்மை நினைக்கச் செய்வதில் ரே பிராட்பரி வெற்றி பெறுகிறார் என்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது. புத்தகங்கள் சரியான புரிதலுக்கும் பிழை புரிதலுக்குமாக பலமுனைப் புரிதலுக்கு இடமளிப்பவையாக இருக்கின்றன என்று சொல்லி புத்தகங்களின் அவசியத்தைப் பேசும்போது, புத்தகங்கள் தம்மளவில் ஊடக நம்பகத்தன்மை கொண்டிருப்பதை பிராட்பரி விவாதிப்பதில்லை. பல்முனைப்பட்ட வாசிப்பு நம் நுண்ணுணர்வுகளைக் கூர்மையாக்குகிறது என்பதற்கப்பால் அவர் புத்தகங்களின் இருப்பை நியாயப்படுத்த வேறு எதுவும் சொல்வதில்லை.

அரசென்றாலும் சரி, பெரும்பான்மை அல்லது சிறுபான்மை மக்களென்றாலும் சரி, ஒரு புத்தகம் பொய்களைக் கட்டமைக்கிறது என்று அஞ்சுவதன் பொருளென்ன? புத்தகங்கள் தம்மளவிலேயே உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை என்ற உணர்வு நமக்கு இருப்பதன் வெளிப்பாடுதான் இந்த அச்சம். இது படைப்பூக்கம் இல்லாதவர்களின் அச்சம், தங்கள் உணர்வுகளின் உறைநிலை தற்காப்பு குலைந்துவிடும் என்ற அர்த்தமற்ற அச்சம்.

ஏன் அர்த்தமற்ற அச்சம் எனில், கவிதை மொழிபெயர்ப்பு அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள், எந்த ஒரு கவிதையும் பிற கவிதைகளுக்கும், அவை எழுதப்பட்ட பண்பாடுகளுக்கும் வெளியே தனியாக இல்லை என்பதை. ஒற்றைக் கவிதை என்பது பொருளற்றது. பிறமொழி கவிதைகளை அவ்வாறு வாசிப்பது நம் இலக்கிய வறுமையைதான் உணர்த்துகிறது, அந்தப் பிறமொழிக் கவிதையின் செழுமையை அல்ல. தமிழாக்க வாசிப்புகளை நாம் நம் தமிழ் வாசிப்பு அனுபவங்களைக் கொண்டு இட்டு நிரப்பிக் கொள்ளாவிட்டால் அவற்றின் வெற்றிடம் விளங்கிக் கொள்ள முடியாத வேற்றிடமாகவே இருக்கும். இந்த இழப்பின் பாதகத்தைத் தாண்டி கவிதையைக் கடத்த முடியும் என்ற நம்பிக்கைக்கிடமில்லாதச் சூழலில்தான் மனசாட்சியுள்ள மொழிபெயர்ப்பாளன் இயங்குகிறான்- தன் தோல்வியை ஏற்றுக் கொண்டு, அதனுடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்கிறான் என்று சொல்லலாம். தோல்வியில் முடியும் முனைப்புகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டியவை என்றால் நாம் கூடுதலாய் இன்னும் ஒரு கணம் வாழவும் எந்த முகாந்திரமும் இல்லை.

நாவலில் பிராட்பரியின் அடிப்படை பிழையொன்றும் இந்த அர்த்தமற்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறது. பிராட்பரி, பிளாட்டோ எழுதியது பிளாட்டோவின் கருத்துகள் என்றும் பெர்ட்ரண்ட் ரஸல் எழுதியவை ரஸலின் கருத்துகள் என்றும் நினைப்பதால் அவற்றுக்கு ஒரு புனிதத்தன்மையை அளிக்கிறார். எனவேதான், இந்த நாவலில் உள்ள சமூகத்தின் விளிம்பில், நகரங்களுக்கு வெளியே உள்ள காடுகளில் புத்தக வாசிப்பாளர்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் பல புத்தகங்களை அச்சுப் பிழை மாறாமல் நினைவில் வைத்திருக்கின்றனர் என்று எழுதுகிறார் பிராட்பரி. எதிர்காலத்தில் புத்தக வாசிப்பு சட்ட அங்கீகாரம் பெறும்போது, இவர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் அச்சாகும் என்ற நம்பிக்கைக்கு இடம் தரவே இந்த ஏற்பாடு.

புத்தகங்கள் அழியக்கூடாது, சரி. ஆனால், இருப்பதால் மட்டும் இந்தப் புத்தகங்கள் காப்பாற்றப்பட்டு விடுமா? பிளாட்டோவின் ரிபப்ளிக்கை அவரது சமகாலத்தவர்கள் வாசித்தது போலா நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்? ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் புரிந்து கொள்ள நானூறு ஆண்டுகளிலேயே அவரது சமகாலத்து பிற பதிவுகள் தேவைப்படுகின்றன. அவர் எழுதிய அரசவை நாடகங்களின் அந்தரங்க ரகசியங்களை நாம் முழுமையாக இழந்து விட்டோம்.

பிராட்பரியின் கற்பனை ஒற்றை மூலப்பிரதியின் மெய்ம்மையைக் கேள்வி கேட்காத ஒன்றாக இருக்கிறது. இதனால்தான் இந்தக் கதையுலகில் எந்த ஒரு புத்தகமும் படிக்கப்பட்டதும் மனதில் பதிந்துவிடும் என்றும் ஒரு மந்திர மருந்தை உட்கொண்டால், மறந்தவை எல்லாம் துல்லியமாக நினைவுக்கு வந்து விடும் என்றும் இருக்கிறது. புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்துவதற்கு எதிரான பிராட்பரியின் நம்பிக்கையாக இது இருக்கிறது என்று பார்க்கும்போது எரிப்பவர்களைப் போலவே, அவரும் புத்தகங்களுக்கு எத்தனை குறுகிய வெளியும் இருப்பும் கொடுக்கிறார் என்பதை நாம் உணர முடியும். உண்மையில் அட்டை குலையாமல் அச்சடித்த நாள் முதல் பிரிக்கப்படாமல் பத்திரமாக நம் கைக்கு வந்து சேர்ந்தாலும்கூட, கொளுத்தப்படாமலே புத்தகங்களின் உண்மைகள் நெலிந்தும் திரிந்தும் மறைந்தும் போவதுதான் யதார்த்தம்.

பிரதிகளுக்கு மூலப்பிரதிக்குரிய பிரத்யேக முக்கியத்துவம் கொடுப்பதுதான் அவற்றில் உள்ள உண்மைகளின் பெயரில் கொலைகள் செய்யப்படவும், அவை உண்மை என்று நம்பப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவை கொளுத்தப்படவும் கூழாக்கப்படவும் முழுக்கு போடப்படவும் காரணமாகின்றன என்பதை பிராட்பரி அறிவதில்லை, அவரும் அதே அடிப்படை கருத்துப்பிழையை தன் நாவலின் மையத்திலும் நிலைநாட்டுகிறார். உண்மையைச் சொன்னால், நம்மிடம் உள்ள ஒவ்வொரு புத்தகமும் பல்லாயிரம் புத்தகங்களை எதிரொலிக்கின்றன. எந்த ஒரு புத்தகம் அழிந்தாலும், புத்தகங்கள் வாசிக்கப்படும்வரை கருத்துகள் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

நம்மால் ஒவ்வொரு தனி மனிதனின் மரபணுத் தொகுப்பு வரிசையையும் கோப்புகளாகச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையின் தர்க்க விளைவு, ஒவ்வொரு மனிதனின் மரபணுத் தொகுப்பையும் தனித்துவம் கொண்ட முக்கியத்துவம் கொண்டதாக மாற்றுகிறது. அவை நிரந்தரமாகச் சேமித்து வைக்கப்பட வேண்டியவை என்று எண்ணவும் இடமிருக்கிறது. ஆனால், இல்லாதபோதும் அழிந்துபோன நம் முன்னோர்கள் அனைவரின் மரபணுக்களையும் நாம் சுமக்கிறோம். புத்தகங்களுக்கும் இதுவே பொருந்தும். எந்தப் புத்தகமும் எரியூட்டப்படுவதாலோ கூழாக்கப்படுவதாலோ அழிக்கப்படுவதில்லை. அது வேறு புத்தகங்களில் தன் வாழ்வைத் தொடர்கிறது.

இதை அறிந்த சமூகத்தில் எழுத்துக்கு அளிக்கப்படும் மரியாதை மிகக் குறைவாகவே இருக்கும். அவை ஆண்டுதோறும் ஒரு திருநாளன்று விளக்கேற்றப்பட்டு ஆற்றோடு போக்கிடப்படுவதில் நம் மனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உண்மை சிறிதளவேனும் இருக்கிறது. புத்தகங்களின் உண்மைகள் சீர்குலைக்கப்படக் கூடாது என்ற நம்பிக்கை உள்ள சமூகங்களில் அவை கொலைக் கருவிகள் ஆகின்றன. அவற்றை எரியூட்டி கூழாக்கும் சமூகங்கள் நாளைய கொலைக் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை இந்தியாவில் எந்த ஒரு மக்களுக்கு எதிராகவும் போலியான ஆவணம் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இனவொழிப்பு நடைபெற்றதில்லை. எந்த ஒரு ஆவணத்துக்கும் இங்கு அத்தகைய மெய்ம்மை மதிப்பு அளிக்கப்பட்டதில்லை என்பதற்கு இங்குள்ள நூற்றுக்கணக்கான ராமாயணங்களே சாட்சி. ஆவணங்களுக்கு மெய்ம்மை அளித்து, அவற்றின் உண்மையையும் பொய்யையும் நிறுவப் புறப்படுபவர்கள் நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது மட்டமான சிலேடையாக இருந்தாலும், ஒரு உண்மைக்காக இந்த அவலட்சணத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.