மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஆட்ரியன் ரிச், மேன்கா ஷிவ்தஸானி

மொழிபெயர்ப்பு: நம்பி கிருஷ்ணன்
இப்படிச் சேர்ந்திருந்தோம்:
1.
காற்றில் கார் அதிர்கிறது.
நதியோரம் நிறுத்தி அதில் அமர்ந்திருக்கிறோம்
பற்களிலிடுக்கிய மௌனத்துடன்..
உடைந்த பனித்தீவுகளைக் கடந்து
சிதறுகின்றன பறவைகள். வேறொரு காலம்
நான் சொல்லியிருப்பேன், கனடா வாத்தென்று
உனக்கவைகள் பிரியமென்பதால்.
ஓராண்டு, பத்தாண்டுகள் கழித்தும்
நான் இதை நினைத்துப் பார்ப்பேன்–
கண்ணாடிக் கூண்டில்  போதையேறிய பறவைகளாய்
இப்படி உட்கார்ந்திருந்ததை –
ஏன் என்பதையல்ல, இப்படி, இங்கே,
இணைந்திருந்தோம் என்பதை மட்டும்.
 
2.
மேலும் கீழும் இடித்துத் தகர்க்கிறார்கள்
இந்த நகரத் தொகுதியை, கட்டம் கட்டமாக.
தோலுரிக்கப்பட்ட பிணங்களைப் போல
அறைகள் பாதியாக வெட்டப் பட்டு
அவற்றின் பழைய ரோஜாக்கள், கந்தலாக.
பெயர்பெற்ற சாலைகள் மறந்துவிட்டன
தங்களின் இலக்கை. மெய்ம்மை மட்டுமே
இவ்வளவு கனவை ஒத்திருக்க முடியும்.
நாம் சந்தித்து, வாழ்ந்த  வீடுகளை
அவர்கள் இடித்துத் தள்ளுகிறார்கள்.
விரைவில் ,மறைந்த சகாப்தத்தின் நினைவாக ,
நம்மிருவுடல்கள் மட்டுமே எஞ்சும்.
 
3.
பொதுவாகச் சொன்னால், நம்மிருவருக்கும்
பொதுவான சில விஷயங்களுண்டு.
நான் சொல்லவந்தது:
குளியலறை ஜன்னலிருந்து
கல்லேட்டுக் கூரைகளுக்கப்பால்,
ஒவ்வொரு காலையும் குழுமியிருக்கும்
விறைத்த புறாக்களை  எட்டும்
இந்த நோக்கை; குழாய் நீர்
கிளாசில் நிரம்பித் தெறிக்க
அதன் சுவையை வியந்திருப்பாய்.
தவறவிட்டிருக்கக்கூடிய இச்சுவைப்பின் சுகிப்பை
நான் கூட   கவனிக்கிறேன்
உன் தயவால்..
 
4.
நம் வார்த்தைகள் நம்மை பிறழ் பொருள் கொள்கின்றன.
இரவில் சில சமயம்
நீ என் தாயாகிறாய்:
விரியும் பழந்துயரங்கள்
என் கனவுகளை பற்றிழுக்க, நான்
புகலுக்குப்போராடி, உன்னையே
குகையாக்கிக் கொள்கிறேன்.
சில சமயம்
என்  முதல் கொடுங்கனவில்
பிறத்தலின் அலையாகி
மூழ்கடிப்பாய் என்னை . மூச்சிறைக்கிறேன் நான்.
கருச்சிதைவுற்ற அறிவு நம்மை முறுக்குகிறது
கசங்கிய வெம்படுக்கை விரிப்புகளைப் போல்.
 
5.
இறந்தாலும் குளிர்காலம் இறப்பதில்லை,
தேய்ந்தழிகிறது, அழுகும் பிணத்துண்டாய்,
சுத்தமாக கோதித்  தின்னப்பட்டு,
மழையில் கரைந்தோ, எரிந்துலர்ந்தோ
நமது வேட்கைகளே இதைச்  செய்கின்றன,
முற்றிலும் உண்மை, உள்ளதைத் தான்
சொல்கிறேன் : வெறும் விட்டேற்றித்தனத்தின் மூலம்
இதைத்  தவிர்க்கலாம்.
நமது மூர்க்க கவனமே
கெட்டித்த பெருமூளை மொத்தைகளிலிருந்து
ஆகாயத் தாமரைகளை அவிழ்க்கிறது:
ஈரம் சொட்டும் மொட்டுக்களாய்
தண்டின் நீட்டம் நெடுக.
ஆட்ரியன் ரிச்

Original : Like this Together, by Adrienne Rich

கல்லறை வாசகம் :
வரிகளுக்கெல்லாம் முன்னே
Wedding_bride_India_Marriages_Red_Sarees_Look_Mirror_Sari_Decorationவெண்மையாய்த் துளங்கும்
பக்கத்தின் தறுசைத்
தடவி
உரிக்கப்பட்ட பட்டையைப் போலன்றி
நயத்துடன் விளங்கும்
சருமத்தின் மென்மையை
தொடு.
பிரச்சினை இதுவே :
மணநாள் வெள்ளையணிவது
எங்கள் வழக்கமல்ல.
உடலை  இறுக்கமாகச் சுற்றி
கண்களின் குறுக்கே திரையாக விழும்
குருதியின் சிகப்பையே
என் மதம் கோருகிறது.
எனினும் வரிகள் எழும்:
தோள்களாக உருண்டு
கரத்தில் ரோமமாகப் படியும்
அட்சரத்துடன்.
முகத்தில் ஒரு சுருக்கமாகத் தொடங்கும் கதை
முடிவுறாமல் தொடர்கிறது
சுருக்கங்களனைத்தும் உறைந்த பின்னும்.
ஆனால் அத்தருணத்தில் மேற்பரப்பு
வெளிறி எனது வலியை அதன்
நெகிழிக் குழலில் நான் பற்ற
திரவம் சொட்டாக வீழ்கிறது.
அதே தருணத்தில் கவிதையும் தன்னை எழுதிக்கொள்கிறது
கல்லறை வாசகமாக.
மேன்கா ஷிவ்தஸானி
(Original : Epitaph by Menka Shivdasani)