பாசாவின் உறுபங்கம் – ஒரு பார்வை

வட மொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. மாளவிகாக்னிமித்திரத்தில் “பாசா, கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா?“ என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

சிறந்த ஓவியங்களையும், சிற்பங்களையும் பார்க்கும் போது படைத்த கலைஞனை விட அவன் படைப்புகளே சாஸ்வதமாகி நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை படைப்பாளியின் சுய வரலாறு முக்கிய இடம் பெறாததால் கடந்த கால மனிதர்களின் வரலாறு எவ்விதத் தேடல்களுக்கும் சிக்காமல் போய் விடுகிறது. பாசாவும் இதற்கு விதி விலக்கல்ல. மகாபாரத, இராமாயணக் கதைகளே இவருடைய படைப்புகளின் கரு. இதில் 6 நாடகங்கள் மகாபாரதப் பின்புலம் கொண்டவை. நாட்டிய சாஸ்திரம் என்ற இலக்கண நூலின் விதிகளுக்கு புறம்பான வகையில் முதலில் அவல முடிவுகளை படைப்புகளில் வெளிப்படுத்தியவர். உறுபங்கம், கர்ணபாரம் என்ற இரண்டு நாடகங்களும் அளவில் சிறியவை. அவலச் சுவை கொண்டவை. நவீன நாடக உலகினராலும் பேசப்பட்டும், இயக்கப் பட்டும் வருபவை.

பிறப்பு மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. வளர்ப்பும், வாழும் சுற்றுப்புறச் சூழலும்,  பழக்கமும் தான் எல்லாச் சிந்தனைகளுக்கும் தூண்டுகோல் என்பது இன்றைய உளவியலாளர் வாதம். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்தியப் படைப்பாளிகளுக்கும் இவ்வெண்ணத்தில் இரண்டாவது கருத்து கிடையாது. இந்த அடிப்படையில் மகாபாரத துரியோதனனை மூலமாகக் கொண்டே பாசா ’உறுபங்கம்’ என்ற நாடகத்தைப் படைத்திருக்கிறார். ’உறுபங்கம்’ என்பதற்கு ’தொடைகளைப் பிளப்பது’ என்று பொருள் அமைகிறது. பீமன் தன் சபதத்தை நிறைவேற்றும் தன்மை யிலே நாடகம் இப்பெயர் பெறுகிறது. நாடகம் பீமனுக்கும், துரியோதனனுக் கும் இடையே நடக்கும் போரைக் கொண்டே தொடங்குகிறது.

Bhasa_Urubanga_Bheema_Shattered_Thigh_Plays_Kalidas

இரு பக்கத்து வீரர்களும் அவரவர் தலைவனின் போராற்றலையும், போர்க்களம் குருதி ஆறாக ஓடிக் கொண்டிருப்பதையும் பற்றி விவாதித்தவாறு இருக்கின்றனர். துரியோதனன் வலிமை ஓங்கி இருக்கும் நேரத்தில் கண்ணன் அறிவுரையால் [ சைகை ] பீமன் போர் முறைக்குப் புறம்பாக துரியோதனன் சிறிதும் எதிர்பாராத விதத்தில் அவன் தொடையைப் பிளக்கிறான். அத்தருணத்தில் துரியோதனனுக்குள் பெரும் மாற்றம் நிகழ்கிறது. துரியோதனின் நிலை குலைவும், பீமனின் செயலும் பலராமனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்த பீமனைத் தண்டிக்கப் போவதாகக் கூறுகிறான். வன்மையோடு இத்தனை காலம் போரை எதிர் நோக்கி இருந்த துரியோதனனுக்கு அந்த நேரத்தில் போர் அர்த்தமற்றதாகத் தெரிகிறது. உடன் பிறந்தவர்கள் அனைவரும் போர் செய்து தனக்காக உயிரை இழக்க , அந்த இறப்பில், இழப்பில் வாழ நினைக்கும் வாழ்க்கையில், ஆட்சியில் திருப்தி இருக்க முடியுமா என அவனுக்குள் முதன் முறையாகக் கேள்வி எழுகிறது.

துரியோதனன் முழுவதுமாக மனிதனாவது இத்தருணத்தில்தான்.தொடையைப் பிளந்த பீமன் மேல் எந்தக் கோபமும், எதிரான சிந்தனையும் அவனுக்குள் எழவில்லை. பலராமனால் இச்சூழ்நிலையில் பீமனை அழித்து விட முடியும் என அறிந்தாலும் அது அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை.” பீமன் தன் சபதத்தை நிறைவேற்றியிருக்கிறான். என் சகோதர்கள் அனைவரும் சொர்க்கத்தில் இருக்கின்றனர் . ஒரு போர் இனி என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும்?” என யோசிக்கிறான். சிந்தனையின் அடுத்த நிலையில் “பீமனின் சபதம் ரகசியமல்ல : அவன் செய்ததும் தவறல்ல” என பீமனின் செயலை துரியோதனனே நியாயப்படுத்துகிறான். தவிர மைத்ரேய முனிவரின் சாபத்திலிருந்து தான் மீள முடியாது என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிகிறது. கண்ணன் அறிவுரையால்தான் போர் முறைக்கு எதிரான தாக்குதல் நடந்ததாக பலதேவனிடம் சொல்லித் தனக்கு கிடைக்க வேண்டியதே கிடைத்ததாகச் சொல்கிறான்.

துரியோதனைன் நிலை கேட்டு அவன் மனைவியும், மகனும், திருதராட்டினனும், காந்தாரியும் போர்க்களத்திற்கு வருகின்றனர் ; புலம்புகின்றனர்.மகன் துர்ஜய தன் தந்தையின் தொடையில் உட்காரும் வழக்கமான ஆசையைத் தெரிவிக்க ” உனக்கு பரிச்சயமான இடத்தை விட்டு விடவும், இங்குமங்கும் உட்காரவும் நீ பழக வேண்டும்,” என்று சோகம் வெளிப்பட மகனோடு பேசுகிறான். தன் தந்தையிடம் பேசும் போது பிறந்த பெருமையோடு வானகம் போவதாகச் சமாதானம் சொல்கிறான். “எல்லாப் பிறவிகளிலும் நீயே தாயாக வேண்டும் ” எனத் தாயிடம் வேண்டுகிறான்.

குந்தி, திரௌபதியிடம் மதிப்போடு நடந்து கொள்ள வேண்டுமென மகனுக்கு அறிவுரை சொல்கிறான். அப்போது அங்கு வரும் அசுவத்தாமன் நடந்தவைகளைக் கண்டு கொதித்து எழுந்து “பிளக்கப்பட்டது தொடை மட்டுமல்ல. கௌரவமும்தான்” என வெகுண்டு எழுகிறான்.அவனோடு பேசும் துரியோதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியிழுத்தது, அபிமன்யுவைக் கொன்றது, வனவாசம் அனுப்பியது எனத் தான் செய்தது எதுவும் கௌரவமானவர்களுக்கு சாதாரண நிந்தனைகளாக இருக்க முடியுமா? என் அழிவு சரியானதே. என் வாழ்க்கையிலிருந்து விடை பெறுகிறேன்” என்று நிதானமாகப் பேசுகிறான்.

வியாசர் படைத்திருக்கும் துரியோதனனுக்கும், பாசாவின் பாத்திரப் படைப்புக்கும் உள்ள வேறுபாடுகள் நாடக ஆசிரியனின் சுதந்திரத்திற்குச் சான்றாகிறது. பாசாவின் பாத்திரம் எதிர் நிலை இயல்பு கொண்டதல்ல. துரியோதனன் தன் நல்லியல்புகளை இழப்பது முறையற்ற வழி காட்டுதலில்தான். தானே எதிலும் முதன்மையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட அவனுக்கு சகுனியின் வழி காட்டுதல் தவறான பாதையை முன்னிறுத்துகிறது. தோல்வியைச் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளாமல் வன்மமும், துவேஷமும் கொண்டு பார்க்கிற போது மனித மனம் கொடூரங்களின் பிறப்பிடமாகிறது. என்றாலும் ஏதாவது ஒரு சூழலில் மனிதன் தன் தவறை உணர்ந்தவனாகிறான்.

இது சிலருக்கு வாழ்வின் தொடக்கத்திலும், சிலருக்கு இடையிலும், சிலருக்கு முடிவிலும் என்று பல கட்டங்களை உள்ளடக்கி அமைகிறது. வாழ்வின் இறுதியில் இந்த ’உணர்வைப்’ பெறுபவன் வாழ்க்கையைத் தான் தொலைத்து விட்டதை அறியும் போது அதுவே அவனுக்கு பெரிய தண்டனையாகி விடுகிறது. பாசாவின் பார்வை இவ்வகையில்தான் அமைகிறது. அதனால் தான் மகனிடம் மற்றவர் அறிவுரைப்படி நடக்கும்படி வேண்டுகிறான். தைரியமும், இரக்கமும் உடையவனாக அவனிருந்தாலும் பொறாமையும், பேராசையும் அவன் நல்லியல்புகளை மாற்றி அழிவுச் சிந்தனையை அவனுக்கு உரியதாக்கி விடுகிறது.

நாடகப் பாத்திரங்களின் போக்கை உளவியல் ரீதியான பார்வையில் காண்பது பாசாவுக்கு பொருத்தமாகிறது. அதனால்தான் எதிர்நிலைப் பாத்திரங்களை படைப்பாளியால் இரக்கத்தோடு பார்க்க முடிகிறது. அந்தப் பார்வை நாடகத்திற்கும், பாத்திரங்களுக்கும் வெற்றி தருவதை வாசகனால் உணர முடிகிறது. இன்றும் இந்த நாடகங்கள் கேரளாவில் குறிப்பிட்ட குழுவினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தவிர ஓரங்க நாடகம் என்னும் அமைப்பைத் தன் படைப்புகளால் சிறக்கச் செய்த பாசாவின் நாடகப் பிரிவுகள், அமைப்பு, கூறுகள் ஆகிய இலக்குகளை இன்று நவீன நாடக உலகமும் பின்பற்றுகிறது. பாசாவை இந்திய நாடக உலகின் தந்தை என்று சொல்வதில் கருத்து வேறுபாடு எதுவும் இருக்க முடியாது.

0 Replies to “பாசாவின் உறுபங்கம் – ஒரு பார்வை”

  1. நல்ல கட்டுரை. துரியோதனனின் கடைசிக் கணங்களை பரிவுடன் விவரித்தாலும், அவனது அதர்மச் செயல்களை நியாயப் படுத்தும் விதமாக இந்த நாடகம் அமையவில்லை என்பது நாடகாசிரியரின் மேதைமைக்குச் சான்று. மற்ற மகாபாரத நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை “மத்யம வ்யாயோகம்” “தூத வாக்யம்” “பாஞ்ச ராத்ரம்” ஆகியவை. இவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உண்டு. செய்கிறேன். தமிழில் பாஸ நாடகங்களின் மொழியாக்கம் வந்துள்ளதா தெரியவில்லை. கட்டாயம் வரவேண்டும்.
    Bhasa என்ற பெயரை தமிழில் பாஸன் என்று எழுதுவது தான் சரியானது. அப்போது தான் அது சம்ஸ்கிருத நாடகாசிரியர் பெயர் போல ஒலிக்கிறது. “பாசா” அன்னியத் தன்மையை அளிக்கிறது. Rama, Arujna போன்ற பெயர்களை ராமா, அர்சுனா என்றா நாம் எழுதுகிறோம்?
    நாடகத்தின் சரியான பெயர் “ஊருபங்கம்”. ஆங்கிலத்தில் உ/ஊ வித்தியாசம் தெரியாது. எனவே இத்தகைய சம்ஸ்கிருத பெயர்களை தமிழில் எழுதும்போது ஒலிக்குறிகளுடன் (diacritical marks) கூடிய ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு எழுதுவது நல்லது. ஆங்கிலத்தில் வந்துள்ள பெரும்பாலான சம்க்ஸ்கிருத காவிய நூல்களில் அக்குறிகள் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.