பசுக்காவலரின் காணி நிலத் திட்டம்

 
மனிதக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவோர் உண்டு. பெண் கொடுமைக்கு எதிராகப் போராடுவோர் உண்டு. பசுக்களுக்கு எதிராக நிகழும் சித்ரவதைகள், கொலைகள், கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு தமிழர் யாரெனில், அவர்தான் கோவிந்தன் வி நடேசன்.
 
ரிசர்வ் வங்கி வேலையை உதறிவிட்டு பசுக்களைக் காப்பாற்ற ஒரு நாள் செங்கல்பட்டில், ஒரு நாள் ஸ்ரீரங்கத்தில், ஒரு நாள் திருச்செந்தூர், ஒரு நாள் திருநெல்வேலி என்று அலைந்து திரிந்து பசுக்களைக் காப்பாற்றுவதும் கோசாலை நிர்மாணிப்பதும் இவரது முக்கிய பணிகள். தலைமையிடம் சென்னைதான். சேலையூர் சென்று ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகரில் வடக்கு சன்னதித் தெருவில் நான்காம் எண் இல்லத்தில் இவரைச் சந்திக்க முடியாவிட்டால், 94440 66571 எண் அலைபேசியில் தொடர்பு கொண்டால் கோசாலை நிர்மாணிக்க உதவுவார். வளர்ப்புக்கு பசுக்களையும் குறைந்த விலைக்கு வாங்கலாம். 2001ல் துவங்கித் தொடர்ந்து இன்றுவரை இவர் காப்பாற்றிவரும் சுமார் 2000 ஆநிரைகளுக்குத் தீவனம் வழங்க அந்தத் தொகை உதவும்.
 
சென்னைக்கு அருகில் காமதேனு அறக்கட்டளை நிர்வாகத்தில் சுமார் 170 பசுக்கள். கோவர்த்தன் அறக்கட்டளை நடேசனின் நேரடி கண்காணிப்பில் கூடுவாஞ்சேரியில் ஒரு அறக்கட்டளை – இவை இவரால் உருவான அறக்கட்டளைகள். 
 

govardhan two

எனினும் நடேசன் அதிக நேரம் செலவழிக்கும் இடம், வேலூர் மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள கணிக்கிலுப்பை கிராமத்தில் புதிய கோசாலையுடன் இயங்கும் ஒரு இயற்கை விவசாயப் பண்ணைதான். பசுங்காவலரின் காணி நிலத்திட்டம் இங்கும் செயல்படுகிறது.
 
வேலூரில் இயற்கை விவசாயிகள் சங்கம் அமைத்து, விவசாயிகளுக்கு உதவிவரும் புருஷோத்தமனுடன் இணைந்து காஞ்சிபுரம் – செய்யாறு வழித்தடத்தில் உள்ள பொன்னம்பலத்தில் பத்து பசுக்களுடன் புதிய கோசாலை சென்ற ஆண்டு துவக்கப்பட்டுள்ளது.
 
சென்னை – திருவள்ளூர் – அரக்கோணம் வழித்தடத்தில் அமைந்துள்ள திருவாலங்காடு நடராசப் பெருமானின் திருச்சபைகளில் ஒன்று. காளியை வெல்ல, இடது காலைத் தன் தலை உயரம் தூக்கி ஊர்த்துவ நடனம் ஆடிய அற்புதமான ஒரு திருத்தலம் அல்லவா? திருவாலங்காட்டுக்கு அருகில் நார்த்தவாடா கிராமத்தில் நடேசன் எஸ்.எல்.வி. கோசாலைக்கு 260 பசுக்களை வழங்கியுள்ளார். இவற்றையும் அவர் கண்காணித்து வருகிறார்.
 
எனினும் 2001ல் முதலாவதாக பெரிய கோசாலை தொடங்கிய இடம் சுரண்டை. ஜீவகாருண்ய பேச்சாளரும் தமிழ்மறைநூல் ஓதுவாரும் விண்டர் சோடா – பழரச வியாபாரியும் இயற்கை விவசாயியாகவும் செயல்படும் முத்துகிருஷ்ணருக்கு திருச்செந்தூர் கோவிலில் ஏலம் விட்ட 800 மாடுகள் மீட்டு வழங்கப்பட்டன. இந்த கோசாலைக்கு நடேசன் நிதியுதவி வழங்கி வருகிறார். இறைச்சிக்காக கேரளா செல்லும் மாடுகளை மடக்கிப் பிடித்த செங்கோட்டை, புளியரை, கடையநல்லூர் காவல் நிலையத்தின் மூலம் பெற்றவையும் முத்துகிருஷ்ணரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 
2002ஆம் ஆண்டு கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட 110 மாடுகள் பொள்ளாச்சி, மதுக்கரை, மேட்டுப்பாளையம் காவல் நிலையங்கள் மூலம் காப்பாற்றப்பட்டு நடேசனிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை இப்போது கோவை மாவட்டம் மயிலேறிப்பாளையத்தில் உள்ள மகாவீர் கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன.
 
2003ஆம் ஆண்டு நடேசனின் கண்காணிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரு கோசாலைகளுக்கு தக்கலை, ஆரல்வாழ்மொழியில் மீட்ட 71 மாடுகள் வழங்கப்பட்டன.
 

govardhan one

2006ல் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை வழித்தடத்தில் பரக்கலக்கோடை என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் சோமவார வழிபாட்டுக்குரியது. ஆலமரப் பொந்திலிருந்து ஈஸ்வரனை தரிசிக்க வேண்டும். தஞ்சை மாவட்ட மக்கள், பசுக்களுக்கு நோய் வந்தால் பரக்கலக்கோட்டை சிவனுக்கு வேண்டிக்கொள்ளும் வழக்கம் உண்டு. மாடுகளை கோவிலுக்குக் காணிக்கையாக வழங்குவது மரபு. அந்தக் கோவிலுக்கு வழங்கப்பட்ட மாடுகளை ஏலத்துக்கு விடுவதற்கு முன் காப்பாற்றிய நடேசன், அவற்றில் 25 மாடுகள் பட்டுக்கோட்டை நாடியம் கோசாலையிலும் 44 மாடுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கோசக்தி அறக்கட்டளையிலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 
ஒரு லாரியில் இவ்வளவு மாடுகள்தான் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதை மீறி கூட்டம் கூட்டமாக பல்லாயிரக்கணக்கான மாடுகள் தமிழகத்திலிருந்து கேரளா கொண்டு செல்லப்படுகின்றன. தாகத்துக்கும் நீர் கொடுக்காமல் இவை சித்ரவதை செய்யப்படுகின்றன. SPCA என்று சொல்லப்படும் பிராணிவதைப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி இவற்றை மீட்க வழியுண்டு. அப்படி மீட்கப்படும் மாடுகளைக் காப்பாற்ற கோசாலை வசதிகள் காவல் நிலையங்களில் இல்லாததால் அபராதம் போட்டு விட்டுவிடுவார்கள். நடேசன் போன்றோருடன் காவல்துறையினர் ஒத்துழைத்தால் மட்டுமே மீட்கப்பட்ட மாடுகளை கோசாலைகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.
 
முதியோர்களுக்கு இல்லம் உள்ளதுபோல் இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் ஆங்காங்கே கோசாலைகள் நிர்மாணிக்கும் யோசனையுடன் சுய ஓய்வுத் திட்ட அடிப்படையில் ரிசர்வு வங்கி வேலையை உதறித்தள்ளிவிட்டு தான் மொத்தமாகப் பெற்ற தொகையைக் கொண்டு கோவர்த்தன் அறக்கட்டளை நிறுவி, கால்நடை நலவாழ்வு குழுமத்தின் அங்கீகாரம் பெற்று கோவில்களில் ஏலம் விடப்பட்ட மாடுகளையும் காவலர்களால் மீட்கப்பட்ட மாடுகளையும் பராமரிக்கத் தொடங்கினார் நடேசன்.
 
பசுவதைத்தடுப்புச் சட்டம், பிராணிவதை பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீட்கப்பட்ட மாடுகளையும் திருக்கோவில்களிலிருந்து பெற்ற மாடுகளையும் காப்பாற்றுவதற்கு நிறைய பணம் வேண்டும். மைய அரசு வழங்கும் உதவித்தொகை அற்பமே.ஆர்வலர்களிடம் உதவி பெறுகிறார், சங்கர மடம் சிறிது உதவுகிறது.
 
கோசாலை மலைப்பகுதியில் அமைந்துவிட்டால் ஓரளவுக்கு மேய்ச்சல் கிட்டும். இல்லாவிடில் அதிகம் நஷ்டம் ஏற்படும். தீவன விலைகள் விஷம் போல் ஏறுகின்றன.  ஆகவே தீவனம் போட்டு தங்கள் செலவில் பசுக்களைக் காப்பாற்றும் அமைப்புகளுக்கு மாடுகள் அளிக்கப்படுகின்றன. மாடுகள் தரும் ஐம்போருட்கள் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிப்பு, கம்போஸ்ட் – மண்புழு தயாரிப்பு, இயற்கை விவசாயம், பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றிலும் நடேசன் தொடங்கி வைத்துள்ள கோசாலைகள் ஆர்வம் காட்டிச் செயல்பட்டு வருவதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.
 
அப்படியும் நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதால் கோசாலை நடத்துவோர் கோவர்த்தன் அறக்கட்டளையிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் இருப்பதும் இயல்பே.  ஒரு பசுமாட்டைக் காப்பாற்ற ஓராண்டு செலவு குறைந்தபட்சம் 15000 ரூபாய் என்று கணக்கு தரும் நடேசனின் பலதரப்பட்ட பணிகளில் தனிப்பட்ட நல்லெண்ணம் கொண்ட மனிதர்களிடமிருந்து நன்கொடை தேடுவது மிகவும் முக்கிய பணியாய் மாறிவருகிறது.
 
பால் வற்றிப்போன, வயதான பசுக்கள் தரும் சாணத்தைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது லாபகரமாய் இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டாலும் அப்பணியில் போதுமான பணியாட்கள் கிடைக்காதது ஒரு குறை. ஒரு கிலோ மண்புழுக்கழிவு ஆறு ரூபாய் வரை விற்கப்படுகிறது. தினம் ஒரு மாடு எட்டு கிலோ சாணம் தந்தால் அதிலிருந்து ஐம்பது ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்க முடியும். அதைக் கொண்டு தீவனச் செலவுகளை சமாளிக்கலாம். மண்புழு உரத்த்துக்கு அற்ப விலை நிர்ணயித்து அரசு கொள்முதல்  செய்கிறது. அதுவும் அற்ப அளவில். ஆனால் மானியம் இல்லை. அதே சமயம் மாபெரும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்குகிறது அரசு.
 
இந்த முரண்பாடு நீக்கப்பட வேண்டும். எம். எஸ். சுவாமிநாதன் போன்றோர் பேசும் வளம் குன்றா வேளாண்மையை வளர்க்க முடியும். இன்று வரை எம். எஸ். சுவாமிநாதன், இயற்கை இடுபொருட்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. வந்தனா சிவா மட்டுமே இதைப் பேசுகிறார், ஆனால் அவர் குரலில் வலிமையில்லை.
 

காணி நிலத் திட்டம்


நடேசனின் காணி நிலத் திட்டம் விவசாயிகளின் நலனை உள்ளடக்கியது. இரண்டு இடங்களில் மாதிரி பண்ணைகளும் உண்டு. ஒன்று அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள 2.6 ஏக்கர் அளவில் உள்ள பண்ணை. செங்கல்பட்டு சமீபத்தில் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 7.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில், நடேசனின் உதவியுடனும் ஆலோசனையுடனும் லட்சுமணன் என்ற விவசாயி பாரதியின் காணி நிலத் திட்டத்தை வடிவமைப்பு செய்துள்ளதை பல ஆண்டுகளுக்கு முன்னர் நேரில் பார்த்து பல பத்திரிக்கைகளில் எழுதியதை மீண்டுமிங்கு பதிவு செய்கிறேன்.
 
ஒரு பக்கம் மகாகவி பாரதியின் கனவு. மறுபக்கம் ஒரு விவசாயி பணப் பொருளாதாரத்துக்குள் வாழும் வழி நடைமுறைப்படுத்தபபட்டுள்ளது. முக்கால் ஏக்கரில் பொன்னி பிசினி போன்ற நெல் சாகுபடி (மனித உணவு), அறை ஏக்கரில் கோ-3 தீவனப் புல் (பால் மாடுகளுக்கான உணவு), அரை ஏக்கரில் வேர்க்கடலை, வேர்க்கடலையின் காப்புப் பயிராக மக்காச் சோளம்.  மீதி நிலத்தில் உகந்தவாறு எள், தட்டாம்பயிறு, பல்வகை காய்கறிகள் – அவரை, பீன்ஸ், கத்தரி, வெண்டை. ஆங்காங்கு உயிர்வேலியாக பத்து பதினைந்து தென்னி மரங்களையும் பார்த்தபோது, பாரதியார் பளிச்சென்று நினைவுக்கு வந்தார். தென்னையுடன் வீட்டருகில் சில வாழை மரங்களும் உள்ளன.
 
பயிர்களுக்கு நோய் வரும்போது காக்க, லட்சுமணன் தயாரித்துள்ள பூச்சி விரட்டி சிறப்பு மிக்கது.
 
ஒரு கொள்கலனில் 20 லிட்டர் கோமியம் பிடித்து ஊற்றி, 5 கிலோ வேப்பிலை இட்டு அரை கிலோ ஆமணக்கு விதை கால் கிலோ புங்கன் விதை ஆகியவற்றைத் தூள் செய்து ஒரு வாரம் கொதித்தபின் வடிகட்டி ஒரு லிட்டருக்கு பத்து லிட்டர் நீர் சேர்த்து பயிர்களின் மீது தெளித்தால் இலைப்பேன், அசுவினி, தத்துப்பூச்சி எதுவும் தங்காமல் பயிர்களைவிட்டு வெளியேரிவ் விடும். மீண்டும் வந்து முட்டை இடாது.
 
கோசாலை நடத்துவோருக்கு இயற்கை விவசாயம் செய்வது கடினமில்லை. மாட்டின் சாணத்தை உகந்தவாறு கம்போஸ்ட் செய்யலாம். அல்லது மண்புழு வளர்ப்பு மேற்கொண்டால் லாபமும் உண்டு. தன்னிறைவுள்ள வாழ்வியல் பண்ணைகளை உருவாக்குவதில் நடேசனின் பணி போற்றத்தக்கது. 
 
வளங்குன்றா வேளாண்மைக்குத் தேவை, Economics, Ecology, Energy என்ற மூன்று ஈக்கள். முதல் ஈ பொருளாதாரம். அரசின் மானியம் இல்லாமல் குறைந்த செலவில் லாபம். ரசாயன விவசாயத்தில் கடனும் செலவும் நஷ்டம் ஏற்படுத்தும். இரண்டாவது ஈ, உயிர்ச்சூழல் – பல்லுயிர்ப் பெருக்கம். இயற்கை வழி விவசாயத்தில் மண்வளம், மண்ணுக்குள் உயிரிகளின் பெருக்கம். பராம்பரிய விதைப்பயன்பாட்டால் பல்லுயிர்ப் பெருக்கம். மூன்றாவது ஈ எரிசக்தி. பலவகைகளில் எரிசக்தி மிச்ச்சமாகிறது. ரசாயன உரம் தவிர்ப்பதால் போக்குவரத்து செலவின்றி பண்ணையே இடுபொருள் தொழிற்சாலையாக செயல்படுவதால் சாணத்தையும் சாண எரிவாயுவையும் கொண்டு சமையல் செய்வதால் புதுப்பிக்க முடியாத எரிசக்தி மிச்சமாகிறது.  நடேசனின் காணி நிலதிடடம் இந்த மூன்று ஈக்களையும் இணைத்து, வளங்குன்றா வேளாண்மையை செயல்படுத்துவதைப் பார்க்கலாம். பேச்சளவில் இல்லாமல் செயலளவிலும் வளங்குன்றா வேளாண்மையை நடைமுறைப்படுத்தும் கர்மவீரர் இவர்.
 
எப்படியும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பெரிய மாநாடு கூட்டி பசு ஊர்வலம் நடத்துகிறார் இவர். அண்மையில் திருநெல்வேலியில் நடந்த மாநாட்டில் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய இயற்கை விவசாயிகளை கௌரவப்படுத்தி, உரையாற்றச் செய்தார். தமிழ்நாட்டில் சிறப்புடன் நாட்டுப்பசுக்களை வளர்ப்பவர்களையும் கௌரவிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், பசுமாடுகள் பற்றியும் அவற்றின் வழங்கல் பற்றியும் இவரிடம் உள்ள தகவல்கள் ஏராளம். இந்திய அளவில் சிறப்பாக இயங்கிவரும் கோசாலைகள் பற்றிய தகவல்கள் இவரிடம் உண்டு. 
 
இந்திய அளவில் இயங்கிவரும் பாரத் பாரம்பரிய நிறுவனம், புதுடெல்லி என்ற அமைப்பின் தமிழ்ப்பிரிவு தலைவர் இவர். பசுக்கள் அதிகமுள்ள தமிழ்நாட்டில் பசுவதை தடுப்புச் சட்டம் இருந்தும் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடம் பெற்று இந்தியா பிரேஸிலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம். சீமைப்பசு இறைச்சியைவிட நாட்டுப்பசு இறைச்சிக்கு நல்ல விலை உண்டு. வாழ்ந்தாலும் செல்வம்தான், வெட்டுப்பட்டாலும் செல்வம்தான்.
 
கோவர்த்தன் வி நடேசன் தொடர்பு எண் : 044-22272618, 94440 66571

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.