நொண்டி யானை

முதலில் இப்படி ஒரு தலைப்பு வைக்க நேர்ந்ததற்கு மன்னித்து விடுங்கள். எனக்கு சற்று நெருடல் தரும் தலைப்பு. உங்களுக்கும் அது போலவே தோன்றக் கூடும்…சில சமயங்களில், பிடித்தமில்லை என்றாலும் சிலவற்றை நாம் செய்ய நேரிடுவதில்லையா? அதைப் போலத்தான், எங்கள் பகுதியில் “நொண்டி யானை” என்று அழைக்கப்பட்ட கோயில் யானையை அந்தப் பெயரில்தான் உங்களுக்கு அறிமுகப்படுத்த நேர்ந்திருக்கிறது. இந்த‌ இரண்டு முரண்பட்ட சொற்களை இணைத்து உச்சரிக்கும் பொழுதே, ஒரு ஆகிருதி, தன் கனத்த கம்பீரத்தின் ஒழுங்கமைவு மெல்ல அசைந்து குலைவது போல ஒரு நெருடல் அதன் பொருளில் தொக்கி நிற்பது போன்ற‌ ஒரு உணர்வு நமக்குள் தோன்றக் கூடும்.

எண்பதுகள் வரை தமிழ்நாட்டின் பல ஊர்களை “திருவள்ளுவர்” இணைத்தார். அப்படி திருவள்ளுவரில் நீங்கள் மதுரை வந்திருந்தால், பேருந்து நிலையத்தில் இறங்கி கண்ணை மூடிக் கொண்டு மனதுக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி நூல் பிடித்தாற் போல் நேராக நடந்து, முதல் ஸ்டான்ஸா முடியும் பொழுது கண்ணைத் திறந்தால் அனேகமாக எங்கள் வீட்டின் முன்னே தான் நின்றிருப்பீர்கள்…நீங்கள் அவ்வாறு நடந்து வந்திருக்கக்கூடிய தெரு, பெருஞ் சரித்திரத்தின் தார் பூசிய தெரு…சித்திரை திருவிழாவில் மீனாட்சி கோயில் தேரோட்டத்தில் எத்தனை நூற்றாண்டுகளாகவோ, வருடந்தோறும் மேல மாசி வீதியில் தேர்கள் திரும்ப எங்கள் தெருவுக்குள் தேரின் வடம் நீண்டு வளையும். எனவே எங்கள் தெரு “வடம் போக்கித் தெரு” ஆனது.

எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் மீனாட்சி கோயில், காமாட்சி கோயில், கிருஷ்ணன் கோயில், பெருமாள் கோயில், மதன கோபால ஸ்வாமி கோயில், நன்மை தருவார் கோயில் என்று எட்டுத் திக்கும் கோயில்கள் தெரியும். அந்த எட்டுத் திக்குக்குள் அடங்கிய எங்கள் பகுதியில் மூன்று யானைகள் வசித்தன. அதில் ஒன்றுதான் நொண்டி யானை. அதற்கு பெருமாள் கோயிலே வீடு. சிலர் அதை கிருஷ்ணன் கோயில் யானை என்பார்கள். யானை யாருக்குச் சொந்தமாக இருந்தால் என்ன? அதைப் பார்த்தால் வரும் சந்தோஷம் அனைவருக்கும் பொது இல்லையா?
தினமும் எங்கள் தெரு வழியே ஒரு யானையேனும் நடை பயின்று போவதை காணும் பேறு என் பால்யத்திற்கு வாய்த்திருந்தது. நாம் யானை என்று ஒரு பெயரில் சுருக்கினாலும் ஒவ்வொரு யானையின் ஒவ்வொரு அசைவும் வெவ்வேறு தினுசில் இருக்கும். அந்த தினுசின் வித்தியாசம் அதன் மணியோசையில் வெளிப்படும். தொலைவிலிருந்து வரும் மணியோசையை வைத்தே அது எந்த யானை என்று கண்டுபிடிப்பது எனக்கு ஒரு விளையாட்டாக இருந்தது. நொண்டி யானையின் வலது புற பின்னங்காலின் கீழ்பகுதி வளைந்திருக்கும். அதனால் ஏற்படும் நடையின் பிறழ்வு, இரட்டை ஒலியில் வெளிப்படும் ஒற்றை மணியோசையின் சுருதி விலகலில் நம்மை அடையும் பொழுது மேற்கூறிய நெருடலின் உணர்வு நமக்கு ஏற்படும்.

எங்கள் தெரு முனை திரும்பினால் பெருமாள் கோயில். தினமும், கோயிலின் நீண்ட‌ பிரகாரத்தை என் அம்மா பன்னிரெண்டு சுற்று சுற்றுவார். நானும் என் அம்மாவின் விரலை பற்றியபடி தொடர்வேன். கோயிலுக்குள் சென்றவுடன் குறுக்கிடும் பிரகாரத்தின் நடுவே அமைந்த கல்மண்டபத்தில் தலையையும் காதையும் ஆட்டியபடி நிற்கும் யானை ஒரு கோணத்தில் நம்மை வரவேற்பது போலவே இருக்கும். பட்டாபட்டி டிராயர் சற்றே வெளியே தெரியும் வண்ணம் மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டியில்,  கையில் அங்குசத்துடன் பெரும்பாலும் கல்மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்தபடி பாகன் அமர்ந்திருப்பார். ஒரு சுற்றின் முடிவுக்கும் மறு சுற்றின் துவக்கத்திற்கும் அந்த கல்மண்டபமே கணக்காக இருந்தது. பிரகாரத்தை சுற்றுவதை விட யானையை  ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், யானையின் அருகே அமர்த்தி விட்டு பாகனிடம் “பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சுற்றுக்கள் முடித்து வருவார்..

விருப்பமாக இருந்தாலும், துவக்கத்தில் யானை அருகில் அமர்ந்திருக்க பயமாக இருக்கும். தினமும் அம்மாவிடம் “யானை நம்மள ஏதாவது பண்ணுமா?” என்று நான் கேட்பதுண்டு. “அதுகளெல்லாம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டது ஒண்ணும் பண்ணாது” என்பதே எப்போதும் அவர் பதிலாக இருந்தது.. சத்தியம் என்றால் என்ன என்று எனக்கு புரியும் வயதில்லை எனினும் அவர் சொல்லிய விதத்தில் அது மனிதர்களுக்கு எளிதில் சாத்தியப்படாத ஒன்று போலவும் மிகவும் உன்னதமானது போலவும் தோன்றியது. சத்தியம் என்பது தர்மத்தின் வரைவு என்பதையும் நாம் (அ)தர்மத்தை துரத்துவதும் (அ)தர்மம் நம்மை துரத்துவதுமாய் சுற்றி வருவதே நம் இருப்பின் சுழற்சி என்பதையும் நம் நாட்காட்டி நமக்குச் சுட்டிக் காட்டுவதற்குள் நடுவயதை பற்றிக் கொண்டு நாம் நின்றிருப்பதே வாழ்க்கையின் வாடிக்கை என்பதையும் அன்று நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை. “சத்தியத்திற்கு கட்டுப்பட்டது” என்பதும் அதை அம்மா சொன்னதும் யானை மீது அன்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது மட்டுமின்றி பயமும் குறைந்து போனது. அடுத்து வந்த நாட்களில் மெதுவாக யானையின் அருகில் செல்லத் துவங்கினேன். பெரும்பாலான வீட்டுப் பாடங்களை யானையின் முதுகை பலகையாக வைத்து எழுதியதால் பின் வந்த வருடங்களில் எனது பள்ளி புத்தகங்களும் நோட்டுகளும் சற்று யானை வாசனை கொண்டவையாக மாறின‌. கோயிலில் இருந்து வீடு திரும்பும் வழியில் அந்த வாசனையை புத்தகத்திலிருந்து முகர்ந்து பார்ப்பது எனக்கு பிடித்தமாக இருந்தது.

Elephants_Swing_Dance_One_Feet_Kids_Child_Boy_Feel_Touch_Move_Life

எனது முதல் யானையேற்றம் நிகழ்ந்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் யானைக்கு எப்படி கால் ஒடிந்தது என்று அடிக்கடி பாகனிடம் கேட்பதுண்டு. காட்டில் யானை பிடிக்க குழி வெட்டி இலை சருகுகளால் மூடியிருப்பார்கள் என்றும் அதனுள் மாட்டிக்கொண்டதில் தப்பிக்க முயன்று கால் முறிந்து விட்டது என்று அவரும் ஒவ்வொரு முறையும் அதே கதையை வெவ்வேறு விதங்களில் சொல்வார். அந்தக் கதை முடியவும் நான் யானை மீது ஏறலாமா என்று கேட்பதும் அவர் ஏற்றி உட்கார்த்துவதும் பல வருடங்கள் பழகிய விஷயமாக மாற வைத்த அந்த முதல் தினம்…

முதலில் மேலேறிய பாகன் அவ்வழியே சென்று கொண்டிருந்தவரிடம் என்னைத் தூக்கிக் கொடுக்குமாறு சொல்ல, அடுத்த‌ நொடி பாகனின் அரவணைப்பில் யானையின் மேலிருந்தேன். அதனை கட்டிக்கொள்ள ஆசையாய் இருந்த எனது குட்டிக் கைகளை அகல விரித்து முன்னோக்கி படுத்தேன்…யானையுடைய தலையின் மேற்பகுதி இரு பாறைகள் இணைந்த குன்று போலவும் அதன் மீது ஆங்காங்கே செங்குத்தாக நின்றிருந்த ரோமங்கள் இலைகள் அற்ற மொட்டை மரங்கள் போலவும் தெரிந்தது. இன்றும், கோடை காலத்தில் மலைப்பிரதேசங்களை கடக்கையில், காய்ந்து கிடக்கும் மலைச்சரிவுகளில் இலைகள் முற்றிலும் உதிர்த்த மரங்களைப் பார்க்கும் பொழுது நொண்டி யானை நினைவில் நின்று தலையை ஆட்டி விட்டுப் போகும்.

முன்னோக்கிப் படுத்திருந்த என் முகத்தினருகே அதன் தும்பிக்கை வந்ததும் எனக்கு உதறலெடுக்கத் துவங்கியது. பாகனோ, “பயப்படாதே. யாரெல்லாம் மேல இருக்காங்கன்னு பாக்குது. அது உன்னை ஞாபகம் வச்சுக்க வாசனை பிடிக்குது” என்றார். யானை என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறது என்பதே எனக்கு மிகுந்த உவகை ஏற்படுத்தும் செய்தியாக இருந்தது. “யானை ஒரு முறை ஒன்றை நினைவில் வைத்தால் ஜென்மத்துக்கும் மறக்காது” என்றார். எனக்கும் யானை போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடனே தோன்றியது.

மனது என்பதே புற்றை உடைத்தபின் குறுக்கும் நெடுக்குமாய் சத்தமின்றி அலைபாயும் எறும்புக் கூட்டங்கள் போல திசைகள் மாற்றிக் கொண்டே திரியும் எண்ணற்ற யோசனைகளின் அருவம் தானே? வாழ்க்கையின் சுற்றில் காலத்தின் புற்றில் கால் வைத்த பின் ஊரத் துவங்கும் எறும்புகள் போலத் தானே மனதில் ஊறும் நினைவுகளும்? உதறினாலும் உதறத் தோன்றினாலும் புற்றில் கால் வைத்தது வைத்ததுதானே? அப்படியென்றால் வாழ்வின் சத்திய தர்மங்களை தழுவிட‌ நாம் காலத்திற்கு உண்மையாக இருப்பது அவசியாகின்றதே…நிகழ்வு மாறிக் கொண்டே இருக்க அதன் சாரமாக‌ மீதமிருக்கும் நினைவு தானே சாசுவதமாக தொடர்கிறது? சாலையோர பிச்சைகாரரோ சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியோ எவராக இருப்பினும் இறுதியில் மீதமிருப்பது நினைவுகள் தானே? அப்படியானால் நிகழ்வுகளின் உண்மை என்பதே நினைவுகள் தானோ? ஆதலால் காலத்திற்கு உண்மையாக இருக்க நினைவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமோ? அதற்கு அடிப்படையாக முதலில் நினைவுகளை மறக்காது இருக்க வேண்டுமே? எண்ணற்ற மனங்கள் தோன்றி வாழ்ந்து மறையும் நிகழ்வுகளை பெருக்கி அவற்றின் நினைவுகளை உருக்கி அகன்று கொண்டே இருக்கும் காலத்தின் ஆரத்தில் சுற்றி வரும் உருளை தானே உலகம்? அந்த உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு துகள் தானே நாம்? இப்படித்தான் ஒரு முறை நினைவில் வைத்தால் ஜென்மத்துக்கும் மறக்காத யானையாக விரும்பிய நான் கால யானையின் முதுகிலேறி நினைவுகளின் வனத்தில் யானையின் குணத்துடன் பயணம் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன் இன்று.

மறுநாள் பள்ளி நேரம் முழுவதும், யானை நம்மை நினைவில் வைத்திருக்கும் என்ற மகிழ்ச்சியில் ஊறியபடி நகர்ந்தது. மாலை உற்சாகமாக அம்மாவுடன் கோயிலில் நுழைந்த நான் யானையின் முன் போய் நின்றேன். அது தும்பிக்கையை வளைத்து என்னருகில் நிறுத்தியது. இரண்டு பிளவுகள் கொண்ட தும்பிக்கை நுனியின் உட்பகுதி வளைவுகள் சவசவத்து சிவந்து இருந்தன. “இந்த வளைவுல தான் அத்தனை வாசனையையும் அது அடக்கி வச்சுருக்கு” என்றார் பாகன். நினைவு என்பதே ஒரு வாசனை என்பது போல வாழும் யானையை நிரம்ப பிடித்துப் போனது எனக்கு. தினமும் மாலை நான் யானையின் முன் நிற்பதும் அது தும்பிக்கையை வளைத்து என் முன் நிறுத்துவதும் அதன் “வாசனை வளைவை” தொட்டுப் பார்ப்பதும் அன்றாட நிகழ்வில் ஒன்றானது. அந்த தொடுகை சில சமயம் நீடித்து, யானையின் தும்பிக்கை என் கைகளில் வருடுவது போல மெதுவாக ஏறி தோளைத் தட்டி கன்னத்தை உரசியபடி ஏறி தலையில் போய் நிற்கும். சிலிர்ப்பும் பயமும் ஒன்று சேர ஒருவித பரவசம் பரவும் நொடிகள் அவை.

ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு இருந்தது. அதில் அவர் யானை மிதித்து இறந்து போனார் என்ற செய்தியை ஆசிரியர் விளக்கிய நொடியில் எனக்கு நொண்டி யானையின் மீது கோபம் வந்தது. அன்று மாலை பாகனிடம் பாரதியார் எவ்வளவு நல்லவர் அவரைப் போய் யானை மிதிச்சிருக்கே என்று கேட்டேன். “யானைக்கு தப்பு செஞ்சா பிடிக்காது. மிதிச்சுரும்” என்றார் அவர். பாரதியாரை தப்பு செய்தவர் என்று சொல்லும் அவரின் மீது எரிச்சலாக வந்தது எனக்கு. ஆனால், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆயிரம் செயல்கள் இருக்கும். அந்த செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரமாயிரம் கோணங்கள் இருக்கும் என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தத் துவங்கியிருந்தார் பாகன். “பாரதியார் ரொம்ப நல்லவருப்பா ஊருக்கும் நாட்டுக்கும் என்னென்னவோ பண்ணினாரு. வீட்டில இருக்கிற அரிசியக்கூட சாப்பாட்டுக்கு வைக்காம குருவிக்கு போடற அளவு நல்லவர். ஆனா அவரு குடும்பத்த கவனிக்கவேயில்ல. சம்சாரம் குழந்தைகளெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டாங்க…அந்தம்மா தினம் கோயிலுக்கு போய் சாமிகிட்ட தன்னோட கஷ்டத்த சொல்லி அழுவாங்க அழுத முகத்தோட அவங்க வீட்டுக்கு போறத யானை பார்த்துக்கிட்டே இருந்துச்சு. பாரதியார் மேல அதுக்கு பயங்கர கோபம். அதான் மிதிச்சுருச்சு” என்றார். திகைப்பூட்டும் கோணமாக இருந்தது எனக்கு. அந்தத் திகைப்பின் தீவிரத்தில் எனக்குள் ஆழமாக நடப்பட்டது “தப்பு செஞ்சா யானைகளுக்கு பிடிக்காது” என்ற நம்பிக்கை. மண்ணுக்குள் போட்ட விதை பல நாள் கழித்து எட்டிப் பார்ப்பது போல, இத்தனை வருடங்கள் ஆகியும், யானையை எங்கு பார்த்தாலும் அதை நெருங்கும் முன் சட்டென்று “நாம் நல்லவனாக இருக்கிறோம் தானே?” என்றொரு கேள்வி எட்டிப் பார்க்கிறது. இதை படித்த பின்பு உங்களுக்கும், யானையை எங்கேனும் பார்த்தால் அதே கேள்வி ஒரு நொடி ஓடி மறையும் தானே?

கிரிகெட் கிறுக்கு தலைக்கு ஏறியிருந்த வருடங்கள் அவை. ஏழாம் வகுப்பில் ஒரு தேர்வு தினம்…எங்கள் பள்ளி மைதானத்தில் விளையாட ஸ்ரீகாந்த் வந்திருந்தார். அவரின் ஆட்டம் பார்க்கும் ஆசையின் விளைவாய் அவசர அவசரமாக அரை மணி நேரத்தில் தேர்வெழுதி முடித்து மைதானம் நோக்கி ஓடியதன் பலன் விடைத்தாளில் இருந்த மதிப்பெண்ணில் சில வாரங்களில் விளங்கியது. வீட்டில் விடைத்தாளை காட்ட பயம். ஒரு நோட்டுக்குள் விடைத்தாளை வைத்த படியே நாட்களை நகர்த்தினேன். பாரதியார் கதையின் விதையில் முளைத்த பயத்தில் கோயிலில் யானை அருகே பல நாட்கள் செல்லவில்லை. இப்படியே நாட்கள் கடக்க, தவறின் எடை தலையைக் குடைய விடைத்தாள் வைத்திருந்த நோட்டுடன் ஒரு நாள் மாலை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு யானை அருகில் போனேன். யானை ஒன்றும் செய்யாமல் இருந்தால் நாம் தவறு செய்யவில்லை என்று எண்ணம்! யானையின் தும்பிக்கை மடிப்பில் நோட்டை வைத்தேன். எங்கே என்னை தூக்கி வீசப் போகிறதோ என்ற பயத்துடன் யானையின் கண்களையே பார்த்தபடி நின்றேன். அது நோட்டுடன் தும்பிக்கையையும் ஆட்டியவாறே ஏதும் செய்யாமல் நின்றது. அன்றிரவு ஒரு பெரும் சந்தோஷம் மனதுக்குள் புகுவது போல இருந்தது.

யானைக்கு கோயில் வாயில் அருகில் இருக்கும் கொட்டத்தில் தான் குளியல். பெரும்பாலும் வார இறுதியில் நடக்கும் மதிய நேர குளியலுக்கு நான் ஆஜராகி விடுவேன். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் குளியலில் எனக்கென ஐந்து நிமிடங்கள் தருவார் பாகன். படுத்திருக்கும் யானையின் மேல் அமர்ந்து தேங்காய் நாரால் தேய்க்கும் அந்த நிமிடங்களை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருப்பது என் வழக்கம். தண்ணீர் தரும் சுகத்தில் மயங்கிக் கிடப்பதை தெரிவிப்பது போல தும்பிக்கையை அவ்வப்பொழுது மேலே உயர்த்தி முகத்தின் மீது போட்டுக் கொள்ளும் யானை.

ஒன்பதாவது வகுப்பு சென்ற பின் யானை சகவாசம் குறையத் துவங்கியது…மேல்நிலை வகுப்பு வந்த பின் யானையை பார்ப்பதே அரிதாகிப் போனது. எப்போதாவது பார்க்கும் பொழுது பாகன் “தம்பி பெருசாயிடுச்சு யானையை மறந்துடுச்சு” என்பார். அதை ஆமோதிப்பது போல தலையாட்டியபடி யானை நிற்கும். கல்லூரியில் நுழைந்த வருடம், யானையின் காலில் கட்டி வந்திருப்பதாக தினம் கோயிலுக்கு போகும் வழக்கத்தை வருடக்கணக்கில் விடாது தொடர்ந்த அம்மா சொன்னார். அதன்பின் எங்கள் தெருவில் அந்த இரட்டை ஒலி தரும் ஒற்றை மணியோசை கேட்கவேயில்லை. யானை கோயிலை விட்டு வெளியே வருவது நின்று போனது. கோயிலுக்குள் இருக்கும் கொட்டடியிலியே முழு நேரமும் இருக்கத் துவங்கியது. ஒரு மாலையில் அதைப் பார்க்கப் போன பொழுது ஒரு மருத்துவரும் அங்கிருந்தார். கட்டி பெரிதாகி உடைந்து திரவம் வழிந்தபடி இருந்தது. ஒரு பெரிய கேனில் ஏதோ மருந்து கலவையை கலக்கி புண் மேல் ஊற்றினார்கள். யானை தும்பிக்கையை தன் கண்கள் மேல் வைத்து தேய்த்தபடி இருந்தது. யானைக்கு வலித்தால் அவ்வாறு செய்யும் என்றார்கள். பாகன் அதன் காதின் பின்புறத்தை தடவியபடி இருந்தார். பின் வந்த வாரங்களில் அக்கம் பக்கத்தினர் உரையாடல்களில் நொண்டி யானையின் உடல் நிலை குறித்த கவலைகள் குடும்பத்து முதியவர்களின் நலம் விசாரிப்பது போல‌ தவறாமல் இடம் பெற்றது.

ஒரு பிற்பகல் வேளையில் பேருந்து நிலையத்தில் இறங்கி வீடிருக்கும் சாலையில் நுழைகையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க ஒரு பெரிய தடுப்பு போடப்பட்டிருந்தது. தெருவில் ஆங்காங்கே மக்கள் கூடியிருந்தனர். என்ன ஆயிற்று என்று ஒருவரிடம் கேட்டதற்கு “நொண்டி யானை செத்துப் போச்சு” என்றார். கோயில் சாத்தப்பட்டிருக்க, தான் குதூகல குளியல் போடும் இடத்தில் அசைவற்று கிடந்தது யானை. எனக்கு “ஒரு முறை நினைவில் வைத்தால் ஜென்மத்துக்கும் மறக்காத” அதன் தும்பிக்கை நுனியை தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. கூட்டத்திற்குள் புகுந்து அதன் மேல் கை வைத்தேன். நினைவின் வாசனையை கற்றுக் கொடுத்த அந்த தும்பிக்கை நுனி வறண்டு போய் விரைத்திருந்தது.

கிரேன் மூலம் யானையைக் கட்டித் தூக்கி லாரியில் வைக்கும் பொழுது பெரும்பாலானோர் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகளை தலைக்கு மேல் கூப்பியவாறு நின்றிருந்தனர். சந்தனம், மஞ்சள் யானையின் மேல் கொட்டப்பட்டன‌. “ஒளவை”க்கு சொல்லியாச்சா என்றார் கோயில் அலுவலர் ஒருவர். ஒளவை என்பது திருப்பரங்குன்றம் யானை [ சுமார் நாற்பது வருடங்கள் திருப்பரங்குன்றத்தின் அங்கமாக வாழ்ந்த ஒளவை சமீபத்தில் 2012ல் இறந்தது] . அதுவும் நொண்டி யானையும் ஒரே காட்டில் அன்னியோன்யமாக திரிந்திருக்குமோ? ஒரு யானையின் இறப்பை மற்றொரு யானையிடம் எப்படிச் சொல்வார்கள்? அது அந்தச் செய்தியை என்னவென்று புரிந்து கொள்ளும்? அதுவும் கண்களில் தும்பிக்கையை வைத்து தேய்த்துக் கொள்ளுமோ? லாரி நகரத் துவங்கியது. நான் ஒரு முறை எம்பி லாரியின் உள்ளே பார்த்தேன். யானையின் அந்த அகலத் திறந்த வெளுத்த‌ கண்கள்… தான் இருந்த பெருங்காட்டின் நினைவுகளை விழிகளில் படர விட்டபடி போய் கொண்டிருந்திருக்குமோ? அந்த பெருங்காட்டின் வழியில் அது வாசம் பிடித்த சிறு செடியாக நான் இருந்திருந்திருப்பேனோ?

0 Replies to “நொண்டி யானை”

  1. “நிகழ்வு மாறிக் கொண்டே இருக்க அதன் சாரமாக‌ மீதமிருக்கும் நினைவு தானே சாசுவதமாக தொடர்கிறது? சாலையோர பிச்சைகாரரோ சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியோ எவராக இருப்பினும் இறுதியில் மீதமிருப்பது நினைவுகள் தானே? அப்படியானால் நிகழ்வுகளின் உண்மை என்பதே நினைவுகள் தானோ? ஆதலால் காலத்திற்கு உண்மையாக இருக்க நினைவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமோ? அதற்கு அடிப்படையாக முதலில் நினைவுகளை மறக்காது இருக்க வேண்டுமே?” – நினைவுகளின் உண்மை நிகழ்வுகளுக்குப் பொருத்தமில்லாமல் போவது வாடிக்கை. ஆனால் நினைவுகளைப் புடம் போட்டு வைத்துள்ள குமரனின் நினைவுகளிலிருந்து நீங்காத அந்த மாற்றுத்திறனாளி யானையை நம் நினைவுகளிலும் ஏற்றி விடும் அற்புதம் நிகழ்ந்துதானே விட்டது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.