தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்
இப்பொழுது அவர்களது வாழ்க்கை மிகவும் கடினமானதாகி விட்டது. அவர்களுடைய கால் விலங்குகள் ஒருபொழுதும் எடுக்கப் படவேயில்லை; அவர்கள் சிறு பொழுது கூட வெளியே காற்றாடச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சுடப்படாத ரொட்டி மாவு நாய்களுக்கு வீசுவதைப் போல அவர்களுக்கு வீசியடிக்கப் பட்டது; ஒரு குவளையில் நீர் அந்தக் குழிக்குள் இறக்கப் பட்டது.
ஈரமாகவும், அடைசலாகவும் இருந்த அந்தக் குழி, துர்நாற்றம் வீசிக் கொண்டு இருந்தது. கஸ்டீலின் மிகவும் நோய்வாய்ப்பட்டான்; அவன் உடல் பூராவும் வீங்கி மிகவும் வலித்தது; அவன் புலம்பியவாறே எல்லாப் பொழுதையும் உறங்கிய வண்ணம் கழித்தான். ஜீலினும் உற்சாகமிழந்து இருந்தான்; நேரமும் இடமும் சரியாக இல்லை எனக் கண்டு கொண்ட அவனால் தப்பிச் செல்ல ஒரு வழியையும் பற்றி எண்ணவும் முடியவில்லை.
அவன் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப் பார்த்தான்; ஆனால் தோண்டிய மண்ணைப் போட இடமே இல்லை. எஜமானன் அதைப் பார்த்து விட்டு, அவனைக் கொன்று விடுவேன் என்று பயமுறுத்தினான்.
ஒருநாள் அவன் அந்தக் குழியின் தரையில் அமர்ந்து கொண்டு, விடுதலை பற்றி யோசித்த வண்ணம் மிகவும் மனந்தளர்ந்து இருந்தான்; அப்போது திடீரென்று அவன் மடியில் ஒரு கேக் விழுந்தது, பின் இன்னுமொன்று, பின் ஏராளமான செர்ரிப் பழங்கள் என விழுந்தன. அவன் மேலே அண்ணாந்து பார்த்த போது அங்கு டீனாவைக் கண்டான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு ஓடி விட்டாள். உடனே ஜீலின் சிந்திக்கலானான், ‘டீனாவால் எனக்கு உதவ முடியாதா?’
அவன் அந்தக் குழியில் ஒரு இடத்தைச் சுத்தம் செய்தான்; கொஞ்சம் களிமண்ணைத் தோண்டி எடுத்து, அதனால் பொம்மைகள் செய்ய முற்பட்டான். மனிதர்கள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றைச் செய்து வைத்து, ‘டீனா வரும்போது இவற்றை அவளிடம் மேல் நோக்கி எறிவேன்,’ என எண்ணிக் கொண்டான்.
ஆனால் அடுத்த நாள் டீனா வரவில்லை. ஜீலின் குதிரைகளின் காலடிச் சப்தத்தைக் கேட்டான்; குதிரைகளில் சவாரி செய்து சென்ற சில மனிதர்களும் தார்த்தாரியர்களும் மசூதியினருகே ஒரு கூட்டமாகக் கூடினர். அவர்கள் கூச்சலிட்டபடி விவாதித்தனர்; ‘ருஷ்யன்’ என்ற வார்த்தை அடிக்கடி அவர்கள் பேச்சில் அடிபட்டது. அந்த முதியவனின் குரலையும் அவனால் கேட்க முடிந்தது. அவனால் அவர்கள் பேச்சை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், ருஷ்யத் துருப்புகள் எங்கோ சமீபத்தில் இருப்பதை ஊகித்து அறிந்து கொண்டான்; தார்த்தாரியர்கள் அத்துருப்புகள் ஆவுலுக்குள் நுழைந்து விட்டால், தங்கள் கைதிகளை என்ன செய்வதென்று யோசித்ததையும் உணர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் பேசி விட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். திடீரென மேற்புறம் ஒரு சலசலப்புச் சப்தம் கேட்கவே, ஜீலின் அண்ணாந்து பார்த்தபோது, டீனா குழியின் ஓரத்தில் முழங்கால்களுக்கிடையே தலையை அவ்வளவு குனிந்து கொண்டு பார்ப்பதைக் கண்டான்; அவளுடைய தலைப்பின்னலில் இருந்த காசுகள் குழியின் மேற்புறமாகத் தொங்கி ஊஞ்சலாடின. அவளுடைய கண்கள் நட்சத்திரங்களைப் போல் மின்னின. இரண்டு பாலாடைக் கட்டிகளைத் தன் சட்டையின் கைமடிப்பிலிருந்து எடுத்து அவள் அவனிடம் வீசியெறிந்தாள். ஜீலின் அவற்றை எடுத்துக் கொண்டபடி அவளிடம், “நீ ஏன் நேற்று வரவில்லை? நான் உனக்காகச் சில பொம்மைகள் செய்து வைத்திருக்கிறேன். இதோ, பிடி!” என்றான். அவற்றை ஒவ்வொன்றாக மேலே வீசியெறிந்தான்.
ஆனால் அவள் தன் தலையை அசைத்தபடி, அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
“எனக்கு அவை ஒன்றும் வேண்டாம்,” என்றாள். சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டுப் பின், “இவான், அவர்கள் உன்னைக் கொல்லப் போகிறார்கள்!” என்றபடி, தனது கழுத்தில் கையை வைத்து அதை அறுப்பதைப் போல ஜாடை காட்டினாள்.
“யார் என்னை கொல்ல விரும்புகிறார்கள்?”
“என் தந்தை தான்; அந்த முதியவர்கள் அவன் அவ்வாறு செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் நான் உனக்காக வருத்தப் படுகிறேன்!”
ஜீலின் கூறினான்: “சரி, நீ எனக்காக வருத்தப் பட்டால், ஒரு நீண்ட கழியைக் கொண்டு வா,” என்றான்.
அவள் தலையை அசைத்தபடி, “என்னால் முடியாது!” என்றாள்.
அவன் தன் இரு கரங்களையும் இறுகக் கூப்பிக் கொண்டு அவளிடம் வேண்டினான்: “டீனா, தயவு செய்து இதைச் செய்யம்மா! அன்பான டீனா, நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்!”
“என்னால் முடியாது,” என்றவள், “நான் கழியைக் கொண்டு வந்தால் அவர்கள் எல்லாரும் அதைப் பார்த்து விடுவார்கள். எல்லாரும் வீட்டில் தான் இருக்கிறார்கள்,” என்று கூறி விட்டுச் சென்று விட்டாள்.
மாலைப் பொழுதானபோது ஜீலின் இன்னும் குழியின் தரையில் அமர்ந்தபடியும் அடிக்கடி அண்ணாந்து மேலே பார்த்தபடியும் என்ன நடக்கப் போகிறதோ என யோசித்தபடி இருந்தான். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் இருந்தன, ஆனால் நிலவு இன்னும் எழும்பவில்லை. முல்லாவின் பிரார்த்தனைக் குரல் கேட்டது; பின் எல்லாம் அமைதியாகி விட்டது. “அந்தச் சிறுமி இதைச் செய்ய பயப்படுவாள்,” என எண்ணியவாறு அவன் கண்ணயர ஆரம்பித்தான்.
திடீரென அவன் தன் தலைமீது மண் விழுவதை உணர்ந்தான். அவன் உயர நோக்கிய போது ஒரு நீண்ட கழி குழியின் எதிர்ச் சுவரில் குத்திய வண்ணம் இருப்பதைக் கண்டான். சிறிது நேரம் அவ்வாறு குத்திய வண்ணம் இருந்து விட்டு அது நழுவிக் குழிக்குள் இறங்கியது. ஜீலின் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதைப் பிடித்த வண்ணம் குழிக்குள் இறக்கினான். அது ஒரு நல்ல உறுதியான கழி; தன் எஜமானனின் குடிசையின் கூரை மீது அதை அவன் முன்பு பார்த்திருக்கிறான்.
அவன் அண்ணாந்து பார்த்தான். உயரே வானில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன: குழியின் மேலே டீனாவின் கண்கள் இருளில் பூனையின் கண்களைப் போல் பிரகாசித்தன. அவள் குழியின் விளிம்பு வரை உடலை வளைத்து ரகசியமான குரலில், “இவான்! இவான்!” என்றபடி தன் முகத்துக்கு முன்பு கையை ஆட்டி, அவன் தாழ்ந்த குரலில் பேச வேண்டும் என்பதைத் தெரிவித்தாள்.
“என்ன?” என்றான் ஜீலின்.
“இருவரைத் தவிர எல்லாரும் எங்கோ சென்று விட்டார்கள்.”
அப்போது ஜீலின், “கஸ்டீலின், வா; நாம் கடைசியாக ஒருமுறை முயல்வோம்; நான் உனக்கு எழுந்திருக்க உதவுகிறேன்,” என்றான்.
ஆனால் கஸ்டீலின் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
“முடியாது,” என்றவன், ” நான் இங்கிருந்து வெளியேற முடியாது என்பது சர்வ நிச்சயம். எனக்குத் திரும்பிப் பார்க்கக் கூட சக்தி இல்லாத போது நான் எப்படி எங்கு செல்ல முடியும்?” என்றான்.
“நல்லது. அப்போது நான் சென்று வருகிறேன். குட் பை! என்னைப் பற்றித் தப்பாக எண்ணாதே!” இருவரும் நட்பின் அடையாளமாகக் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டனர் (இது அந்நாட்டு வழக்கம்). ஜீலின் கழியை இறுகப் பற்றிக் கொண்டான்; டீனாவிடம் அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டு, அதில் தாவி ஏற ஆரம்பித்தான். ஓரிரு முறைகள் வழுக்கினான்; கால்விலங்குகள் அவனைத் தடுத்தன. பின் கஸ்டீலினின் உதவியுடன் ஒருவாறு உச்சியை அடைந்தான். டீனாவும் சிரித்தவாறே தனது சிறிய கைகளால் அவனது சட்டையைப் பற்றி இழுத்து உதவினாள்.
ஜீலின் கழியை வெளியே எடுத்து அவளிடம் கொடுத்து, “முதலில் இதை அதன் இடத்தில் திருப்பி வைத்து விடு; இல்லாவிட்டால் இதைக்கண்டு பிடித்து விட்டு அவர்கள் உன்னைப் போட்டு அடிக்கப் போகிறார்கள்,” என்றான்.
அவள் அந்தக் கழியை இழுத்துக் கொண்டு சென்றாள்; ஜீலின் குன்றிலிருந்து இறங்கிச் செல்ல ஆரம்பித்தான். அவன் செங்குத்தான சரிவிலிருந்து இறங்கியதும் ஒரு கூரான கல்லை எடுத்துக் கால் விலங்கிலிருந்த பூட்டைத் திருகி இழுத்து உடைக்கப் பார்த்தான். ஆனால் அது கெட்டியான பூட்டாக இருந்ததால் அவனால் அதை உடைக்க முடியவில்லை; மேலும் அதைக் குனிந்து பிடித்து உடைப்பதும் கடினமாக இருந்தது. யாரோ குன்றிலிருந்து குதித்து ஓடி சுலபமாக இறங்கி வரும் ஓசை கேட்டது. ‘நிச்சயமாக அது திரும்பவும் டீனா தான்,’ என அவன் எண்ணிக் கொண்டான்.
டீனா ஓடி வந்து ஒரு கல்லை எடுத்து கொண்டு, “நான் முயற்சி செய்கிறேன்,” என்றாள்.
முழந்தாளிட்டு அமர்ந்தபடி, பூட்டைத் திருகி உடைக்க அவள் முயன்றாள்; அவளுடைய சின்னஞ் சிறிய கைகள் சிறு மரக்கிளைகளைப் போல மெல்லியதாக பலமில்லாமல் இருந்தன; அவளுக்கும் போதிய சக்தி இருக்கவில்லை. அவள் கல்லை விட்டெறிந்து விட்டு விம்மி அழ ஆரம்பித்தாள். பிறகு ஜீலின் திரும்பவும் பூட்டை உடைக்க முயற்சி செய்தான்; டீனாவும் அவன் தோளின் மீது கைகளை வைத்தபடி அவன் பக்கம் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.
ஜீலின் சுற்றுமுற்றும் பார்த்தபோது, ஒரு சிவப்பு நிற வெளிச்சம் குன்றின் இடதுபுறம் படருவதைக் கண்டான். நிலா அப்பொழுது தான் உதயமாகிக் கொண்டிருந்தது. ‘ஆ, நிலா எழுவதற்கு முன்பே நான் பள்ளத்தாக்கைக் கடந்து காட்டினுள் சென்றிருக்க வேண்டும்,’ என எண்ணிக் கொண்டான். ஆகவே எழுந்து கல்லைத் தூக்கி எறிந்தான். இனி விலங்குகளுடன் தான் அவன் செல்ல வேண்டும்.
“அன்புள்ள டீனா, குட் பை! உன்னை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்!,” என்றான்.
டீனா அவனைப் பிடித்திழுத்து, தான் கொண்டு வந்திருந்த சில பாலாடைக் கட்டிகளை வைக்க ஓர் இடத்தைத் தன் கைகளால் துழாவினாள். அவன் அவற்றை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான்.
“நன்றி என் சின்னக் குட்டி! நான் போய்விட்ட பின்பு உனக்கு யார் பொம்மைகள் செய்து தருவார்கள்?” எனக் கேட்ட வண்ணம் அவள் தலையைத் தடவி விட்டான் ஜீலின்.
டீனா தன் சிறு கைகளால் முகத்தை மூடியபடி திடீரென விம்மி அழ ஆரம்பித்தாள். பின்பு அவள் பின்னலில் இருந்த நாணயங்கள் பின்புறத்தில் பட்டுக் கலகலவென ஒலி எழுப்பக் குன்றின் மேல் ஒரு சிறு ஆட்டுக்குட்டியைப் போல் ஏறி ஓடினாள்.
ஜீலின் தன் மார்பில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு, கால்விலங்குகளின் பூட்டை, அது ஓசைப் படுத்தாமலிருக்கத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு, விலங்கிடப்பட்ட காலை இழுத்தபடி, நிலா உதயமாகிக் கொண்டிருந்த இடத்தைப் பார்த்த வண்ணம் பாதையில் செல்லலானான். இப்போது அவனுக்கு வழி தெரிந்திருந்தது. அவன் நேராகச் சென்றால், கிட்டத்தட்ட ஆறு மைல்கள் நடக்க வேண்டி வரும். நிலா எழும் முன்பே அவன் காட்டை அடைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவன் ஆற்றைக் கடந்தான்; குன்றின் பின்னால் இருந்த ஒளி பிரகாசமாகிக் கொண்டே வந்தது; அதைப் பார்த்தபடியே அவன் பள்ளத்தாக்கின் வழியாகச் சென்றான். நிலாவை இன்னும் பார்க்க முடியவில்லை. வெளிச்சம் மட்டும் அதிகமாகிக் கொண்டே இருந்தது; பள்ளத்தாக்கின் ஒரு பகுதி வெளிச்சமாகிக் கொண்டே வந்தது; நிழல்கள் குன்றின் அடிவாரத்தை நோக்கி நகர்ந்து அவன் பக்கமாக மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தன.
ஜீலின் நிழலின் மறைவிலேயே இருந்தபடி சென்று கொண்டிருந்தான். அவன் வேகமாகச் செல்லச் செல்ல நிலாவும் அதைவிட விரைவாக நகர்ந்தது; வலது பக்கம் இருந்த குன்றுகளின் உச்சிகள் பளிச்சென்று தெரிந்தன. அவன் காட்டை நெருங்கியதும், குன்றின் பின்னாலிருந்து முழு வெள்ளி நிலா எழுந்து அந்தப் பிரதேசத்தையே பகல் போல வெளிச்சமாக்கியது. மரங்களில் இருந்த இலைகளை எல்லாம் பார்க்க முடிந்தது. குன்றுகள் பிரகாசமாக இருந்தாலும், எங்கும் உயிரே இல்லாதது போல, மிகவும் நிசப்தமாக இருந்தது; கீழ்ப்புறமாகக் ‘கள கள’வென ஓசை எழுப்பியபடி ஓடிய ஆற்றின் ஓசையைத் தவிர வேறு ஒலிகளே இல்லை.
ஒருவரையும் எதிர்ப்படாமல் ஜீலின் காட்டை அடைந்தான்; ஒரு இருட்டான இடத்தைத் தேடிப் பிடித்து இளைப்பாற அமர்ந்தான்.
இளைப்பாறிய வண்ணம் ஒரு பாலாடைக் கட்டியைத் தின்றான். பிறகு ஒரு கல்லைத் தேடி எடுத்துத் திரும்பவும் கால் விலங்குகளை உடைக்க முயன்றான். கைகளைக் காயப் படுத்திக் கொண்டானேயன்றிப் பூட்டை உடைக்கவே முடியவில்லை. எழுந்து திரும்பவும் அந்தச் சாலையில் சென்றான். ஒரு மைல் தூரம் போல நடந்ததும் அவனுக்குக் கால்கள் மிகவும் வலிக்கத் தொடங்கிப் போதும் போதும் என்றாகி விட்டது. பத்து அடிகளுக்கு ஒருமுறை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டி வந்தது. ‘இதைத் தவிர வேறு வழியே இல்லை,’ என எண்ணிக் கொண்டான். ‘என் உடலில் சக்தி எஞ்சி இருக்கும் வரை நான் சென்று கொண்டே இருக்க வேண்டும். நான் உட்கார்ந்து விட்டால் பின்பு என்னால் எழுந்திருக்கவே முடியாமல் போய் விடும். பிறகு நான் கோட்டையை அடைய முடியாது; ஆனால் பொழுது விடிந்ததும் நான் காட்டில் படுத்து உறங்கி, அங்கே பகல் பொழுதைக் கழிப்பேன்; திரும்பவும் இரவில் என் வழியில் செல்வேன்.’
இரவு முழுதும் அவன் இவ்வாறு நடந்தான். இரு தார்த்தாரியர்கள் குதிரைகளின் மீது அவனைக் கடந்து சென்றனர்; அவன் ஒரு மரத்தின் பின் ஒளிந்தவாறு அவர்கள் செல்லும் ஒலியை வெகு தூரம் வரை கேட்டான்.
நிலா ஒளி மங்க ஆரம்பித்துப் பனித்துளிகள் விழத் தொடங்கின. விடியும் வேளை நெருங்கியது; ஆனால் ஜீலின் இன்னும் காட்டின் எல்லையை அடைந்திருக்கவில்லை. ‘சரி, நான் இன்னும் முப்பது அடிகள் நடந்து மரங்களுக்கிடையே சென்று உட்காருவேன்,’ என நினைத்துக் கொண்டான்.
இன்னும் முப்பது அடிகள் நடந்ததும் தான் காட்டின் எல்லையில் இருக்கக் கண்டான். அதன் விளிம்பிற்குச் சென்றான்; இப்போது விடிந்து வெளிச்சமாக இருந்தது; அவனுக்கு எதிரில் நேராகச் சமவெளியும் கோட்டையும் தென்பட்டன. இடது பக்கமாக, அடிவாரச் சரிவின் அருகில், அணைந்து கொண்டிருந்த நெருப்பின் புகை பரவிக் கொண்டிருந்தது. அதைச் சுற்றிச் சில மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவன் கூர்ந்து நோக்கிய போது துப்பாக்கிகள் பளபளப்பதைக் கண்டான். அவர்கள் ராணுவ வீரர்கள்- ‘கஸ்ஸாக்கு’கள் (Cossacks) எனப்படும் ருஷ்யக் குதிரைப் படை வீரர்கள்!
ஜீலின் மனதில் மகிழ்ச்சி நிறைந்தது. தனது உடலில் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு குன்றிலிருந்து கீழிறங்கிய வண்ணம், ‘குதிரை மேலுள்ள ஒரு தார்த்தாரியனும் இப்போது இந்தத் திறந்த வெளியில் என்னைக் காணாதபடிக்குக் கடவுளே காக்க வேண்டும். ஏனெனில், நான் பக்கத்தில் இருந்தாலும் கூட, சரியான சமயத்தில் அங்கு போய்ச் சேர முடியாது,’ எனத் தனக்குள் கூறிக் கொண்டான்.
இவ்வாறு சொல்லி வாய்மூடவில்லை; இருநூறு கஜ தூரத்தில் , இடதுபுறமிருந்த ஒரு சிறுகுன்றின் மேல் மூன்று தார்த்தாரியர்களைக் கண்டான்.
அவர்களும் அவனைக் கண்டதால், விரைந்து வந்தனர். ஜீலினின் மனம் தளர்ந்தது. அவன் கைகளை வீசிக் கொண்டு சக்தியை எல்லாம் திரட்டிக் கூவினான், “சகோதரர்களே, சகோதரர்களே! உதவுங்கள்!”
படை வீரர்களுக்கு அவன் கூவியது கேட்டதால், அவர்களில் கொஞ்சம் பேர் குதிரைகளின் மீதேறிப் பாய்ந்து தார்த்தாரியர்களின் பாதையின் குறுக்கே சென்றனர். படைவீரர்கள் தூரத்திலும், தார்த்தாரியர்கள் அருகிலும் இருந்தனர்; ஆனால் ஜீலினும் கடைசியாக ஒரு பெரு முயற்சி செய்தான். கால்விலங்குகளைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு, தான் என்ன செய்கிறேன் என்றே உணராமல், மார்பில் சிலுவைக்குறியை இட்டுக் கொண்டு, “சகோதரர்களே! சகோதரர்களே! சகோதரர்களே!” என்று கூவியவாறு அவன் படைவீரர்களை நோக்கி ஓடலானான்.
அங்கு பதினைந்து படைவீரர்கள் இருந்தனர். அதனால் தார்த்தாரியர்கள் அச்சம் கொண்டு, அவனை நெருங்குவதற்கு முன்பே நின்று விட்டனர். ஜீலின் தடுமாறிய வண்ணம் படைவீரர்களை நோக்கிச் சென்றான்.
அவர்கள் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர், “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?”
ஆனால் ஜீலின் ஒன்றுமே செய்ய இயலாதவனாகி அழுத வண்ணம், “சகோதரர்களே! சகோதரர்களே!” என மட்டும் பிதற்றிக் கொண்டிருந்தான்.
அந்தப் படைவீரர்கள் ஓடிவந்து அவனைச்சூழ்ந்து கொண்டு, ஒருவன் ரொட்டியைக் கொடுக்கவும், இன்னொருவன் கொஞ்சம் தானியத்தைக் கொடுக்கவும், மூன்றாமவன் வோட்காவை (ருஷ்யச் சாராயம்)க் கொடுக்கவும், ஒருவன் அவன் மீது ஒரு அங்கியைப் போர்த்தினான்; இன்னொருவன் அவன் கால் தளைகளை உடைத்தான்.
அவர்களில் இருந்த அதிகாரிகள் அவனை அடையாளம் கண்டு கொண்டனர்; அவனைத் தங்களுடன் கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். மற்ற படைவீரர்கள் அவனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்; அவனது எல்லா நண்பர்களும் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர்.
ஜீலின் தனக்கு நேர்ந்ததையெல்லாம் அவர்களுக்குக் கூறினான்.
“நான் வீடு சென்று திருமணம் செய்து கொண்ட கதை இது தான்! விதியே அதற்கு எதிராக இருந்தது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது!” என்றான்.
ஆகவே அவன் காகசஸ் மலைப் பகுதியில் ராணுவத்தில் தொடர்ந்து பணி புரிந்தான். கஸ்டீலின், மேலும் ஒரு மாதம் கழித்து ஐயாயிரம் ரூபிள்கள் மீட்புத் தொகை கொடுத்தபின் விடுதலை செய்யப்பட்டான். அவர்கள் அவனைத் திரும்பக் கொண்டு வந்த போது அவன் உயிர் ஏறக்குறையப் போய் விட்டிருந்தது.
(முடிந்தது)