ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது: நூல் அறிமுகம்

இந்தநூற்றாண்டின் முற்பகுதியில் நகர நாகரிகத்தின் நிழல்படாத- நதியை ஒட்டிய – சிதம்பரம் அருகே சிறிய கிராமம் ஒன்றில்பள்ளி ஆசிரியராக சாமிநாதசர்மா ‘ஐயா’ என்ற பாத்திரத்தில் ஜீவிக்கும் நாவல் ‘ஒருநதி ஓடிக்கொண்டிருக்கிறது’. ஒரு period film பார்ப்பதுபோல்இருக்கிறது இந்த 264 பக்கநாவல். இதை எழுதிய திரு.வே.சபாநாயகம் தான் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல – தன் ஆசிரியர் சாமிநாத அய்யரை மையப்படுத்தி இதை எழுதி இதை அவருக்கே சமர்ப்பணம் செய்திருப்பது இதன் விசேஷம்.

அந்தகால பள்ளிப்பருவங்கள், வாழ்க்கை, ஆசிரியர்கள், விளையாட்டும். கல்வியும், கண்டிப்பும் நிறைந்த மாணவப்பருவம். தனிஆசிரியர் பள்ளி. ஆலமர நிழலடியில் மரத்தடி வகுப்புகள். மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு செய்யுள்களை மன்னமா சொல்லும் விதம் என்று விரிகிறது நாவல். ஒருகாலகட்டத்தை கண்முன் நிறுத்தி எவ்வித கொடிபிடித்தலும் விமர்சனமும் இன்றி ஒருகாமிராவுக்கான உத்தியுடன் நகர்ந்துகொண்டே இருக்கும் இந்த நாவலில். காட்சிகளையும் உரையாடல்களையும் மிகஇயல்பாக, பிரத்யேகவருணனைகளோ கனமானவார்த்தைகளோ இன்றி அமைத்திருக்க – கதை ஒழுகும் நதியைப்போல் செல்கிறது. ஒருபறவை வந்து நம்மைக் கொத்திக்கொண்டுபோய் 80 வருடத்துக்கு பின்னால் போட்டுவிட்டதுபோல் இருக்கிறது. தமிழின் சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் கோவை ஞாநி இந்த நாவலை குறிப்பிட்டிருக்கிறார்.

oru_Nadhi_Odi_Kondu_Irukkirathu_Ve_Sabanayagam_Novel_Fiction_Tamil_Lit_Books

“ஐயா“வின் அணுகுமுறையும் பிடிவாதமும் மாணவர்களை தண்டிக்கும் விதமும் ஆச்சரியத்தையும் – ஏன்.. ஆத்திரத்தைகூட உண்டாக்கலாம். ஆனால் இது அன்றைய காலகட்டத்தை காட்சிப்படுத்தும் நிதரிசனங்கள் – அப்படித்தானேஇருக்கும்!

இந்தநூற்றாண்டின் ஆரம்பம்தான் நாவலின்காலம். கிராமம் பள்ளி ஐயா மாணவர்கள் சிலபெற்றோர்கள் நதி பாட்டு ஆட்டம் ஐயாவின் கோபம் கண்டிப்பு தண்டிப்பு இதை தாண்டி வெளியுலகின் வேறெந்தவிஷயமும் இல்லை என்பதே இந்த கிராம்ம் எவ்வளவு சிறியவட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தது என்பதை உணரவைக்கிறது. நாமும் அங்கேயேதான் சுற்றிசுற்றி வருகிறோம்,

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள கிராமத்துக்கு அரசு உதவியில் நடக்கும் ஒருபள்ளிக்கூடத்தின் ஆசிரியராக வருகிறார் சாமிநாதசர்மா. அவர்தான் அந்தகிராமத்தின் கல்விக்கண் திறக்கும் ஒரே ஆசான். அவர் இல்லாவிடின் கற்பிக்க ஆளில்லை. ஊரே அவரை கொண்டாடி தங்கள் பிள்ளைகளின் சரஸ்வதி கடாட்சத்துக்கு அவரிடம் பிள்ளைகளை ஒப்படைத்துவிடுகிறது. அவருடைய கோபம் அடி வசவு மூர்க்கம் சுயகெளரவம் பிடிவாதம் பாட்டு சுலோகம் கற்பிப்பு எல்லாமே ‘ஐயா’ என்ற ஒற்றை அடைமொழியில் அடங்கிவிடுகிறது. அவர் எதுசெய்தாலும் அது நல்லதுக்காகவே என்று அவரை மதித்து தங்களின் ஒருபகுதியாகவே கருதும் மொத்த கிராமம். அவரிடம் சாந்தம் என்பது எள் அளவுகூட பார்க்கமுடியாது. ஆசிரியர் என்றாலே துர்வாசத்தனம், கண்டிப்பு எனும் அக்கால சமூகநிலையை பிரதிபலிக்கும் பாத்திரம். ஒரு கூரை கட்டிடத்தில் பள்ளியை நிறுவி அதன் ஒருபகுதியில் தான் வசித்துக்கொண்டு தனது வாழ்க்கை முழுதுமே மாணவர்களுக்கானதுதான் என்று அர்ப்பணிக்கும் ஆளுமை. அவர் ஆசிரியர் மட்டுமல்ல பள்ளியின் மேனேஜரும் கூட.

அங்கே இருக்கும் பிள்ளைகளுக்கு பகல் பொழுதின்பெரும் பகுதி பள்ளிதான். வெளியே ஆலமர நிழலில் மணலில் உட்கார்ந்துபடிப்பார்கள். இந்தஆலமரத்தைகூட ஐயா தான் பராமரித்து வருகிறார், பிள்ளைகள் சிகை குடுமியும் இடுப்பில்துண்டுமாக மணலில் அமர்ந்து படிப்பார்கள். பகல் பொழுதின் பெரும் பகுதி பள்ளிதான். பிள்ளைகளின் குறும்புகளைசமாளிக்க முடியாமல் விடுமுறையில்கூடபள்ளிக்கூடம் இருந்தால் பரவாயில்லை என்றுநினையும் பெற்றோர்கள். இளங்காலையில் மாணவர்கள் அனைவரும் காலைபிரார்த்தனைவந்து பின்பு வீட்டுக்குசென்று குளித்து சாப்பிட்டு 9 மணிக்கு பள்ளிவந்துவிடவேண்டும். ஐயா உருவம்தெரிந்தாலே மாணவர்களிடம் அச்சம்கலந்தஅமைதிநிலவும். மாணவர்கள் அரட்டை அடிக்காமல்பார்த்துக் கொள்ள ஆறுமுகம் எனும் சட்டாம்பிள்ளை. இடையிடையே தன் சுயசமையல் வேலையை – சாதம்மட்டும் – கவனித்துகொள்வார். குழம்பும் மோரும் கறியும் எதாவது ஒரு மாணவர்வீட்டில் இருந்து வரவேண்டும். அடி உதை வசவு கோபம் என்று கல்வி கற்பித்தல் நடக்கும். சிறுவிளையாட்டும் உண்டு. யாராவது விடுப்பு எடுத்தால் மறுநாள் மாணவருக்கு மணிப்பிரம்பில் கிடைக்கும் விளாசல் தண்டனையில் மறுபடி விடுப்பே எடுக்கமாட்டான்.
தண்டனை என்றால் சாதாரண அடி இல்லை. இதைநாவலின் ஒரு பகுதியில் உள்ள பத்தியில் பார்ப்போம் –

“காப்பிநோட்எழுதிவரவேண்டும். ஐயா மேற்பர்வையில் இருக்க அய்யாவின் கவனம் ஒருவன் மீதுவிழுகிறது. ‘ஏலேஇஞ்சவா ” என்றுஅவனைஅழைக்கிறார்.

அவன் குருவிக்குஞ்சு மாதிரி பயத்தில் ஒடுங்கியபடி அருகில் வந்தான்.

ஐயா “கபீலெ“ னப் பாய்ந்து அவன் முன் சிகையை கொத்தாகப் பிடித்து அருகில் இழுத்தார். இது என்ன வைக்கப்போரு மாதிரி ? முடிவெட்டிக்கப்படாதோ ? ஒரு ‘சேரு ‘ மழையைத்தாங்கும்போலஇருக்கே. என்று உலுக்கினார். சுரீர் என்று மயிர்கால்களில் வலிபிடுங்க கண்களில் நீர்முட்ட ‘நாளைக்கு வெட்டிக்கிறேங்க … நாளைக்குவெட்டிக்கிறேங்க ‘ என்று அவன் அலறினான் .
‘நாளைக்கு நானும் கேக்கலீங்க ..நாளைக்கு நானும் கேக்கலீங்க ‘ என்று பழிப்புகாட்டி ஆட்டுக்கல் குழவியை ஆட்டுகிற மாதிரி ஓரிருவட்டம் சிகையைபிடித்தபடி சுழற்றினார். வாய்விட்டு கதறப்பயந்து கதவிடுக்கில்பட்ட எலிமாதிரி கீய்ய்ங் .. கீய்ய்ங்.. என்று வீறிட்டபடி அவன் அப்படியும் இப்படியும் சுழன்றான். முடிதான் வெட்டுலே.. எண்ணை தடவி சீவுனா என்னகேடு? காட்டேரி மாதிரி பரத்திகிட்டு வர்றியே ? சீவுரியான்னேன்? என்று ஐயாமேலும் உலுக்க – சீவுறேன்…சீவுறேன் என்று தீனமாக அலறினான், பிறகு ஒழிஞ்சுபோ என்று நெம்பித்தள்ளி கையைவிட்டார் . அவன் தொபுக்கடீர் என்று மணலில் விழுந்து புரண்டு அவசரமாய் அவிழ்ந்த இடுப்புதுண்டை முடிந்தபடி தன இடத்துக்கு போனான்.

அடுத்து ..’ஆரு ?சவாதிப்பிள்ளைங்களா? வாங்க,,எங்கநேத்திக்குகாணலை? என்று நையாண்டியுடன் அழைக்கிறார்.

சவாதிப்பையன் பயந்து பயந்து முன்னேறி அருகில் போனதும் கைகட்டியபடி “காசங்க…” என்றான்.

“என்னது?”

“காசங்க…”

“காசங்க? பேஷ்.. காசங்க.. என்னகாசங்க? என்று எகத்தாளம் பேசியபடி அவனதுதலையை இருகைகளாலும் பற்றி அருகே இழுத்தார் .

‘இல்லீங்க..இல்லீங்க இனிமேவாரங்க..இனிமே வாரங்க என்று அவன் அலறியதை பொருட்படுத்தாமல் இடது கையை அவனது பிடரிக்கு அடியிலும் வலதுகையை அவனது தாவாய்க்கு அடியிலும் கொடுத்து அலாக்காகமேலேதூக்கி தொபுக்கென்று விட்டெறிந்தார் .’வீல் ‘ என்று அலறியபடி அவன் விழுந்து உருண்டான். பள்ளிக்கூடம் வழக்கமான களைகட்டிவிட்டது! எல்லோரும் திகில்வயப்பட்டவராய் தத்தம் வேலைகளில் ஈடுபட்டார்கள் .”

இடுப்புதுண்டும் குடுமி சிகையும் மணல் பரப்பிய தரையில் உட்கார்ந்து சிலேட்டில் எழுதியபாடங்கள் –அதில் கிடைத்த சாக்கட்டி எழுத்து மதிப்பெண் அழிந்துபோகாமல் இருக்க தலைக்கு மேல்சிலேட்டைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடும் சிறார்கள் – சரஸ்வதி பூஜைக்கான ஒருவார ஆர்ப்பாட்டம் -ஆட்டம் – பாட்டம் – பிள்ளையார் சதுர்த்திவிழா – சுண்டல் விநியோகம் – நதியில் விளையாடல் – சிவன் காமனை எரித்தபின் காத்தகனம் நடத்துதல் – நாடகம் போடுதல் – கோலாட்டம் – ஆசிரியர் சாப்பாட்டுக்கு மாணவர்கள் வீட்டிலிருந்து சாம்பார் ரசம் மோர்கொண்டு போதல் – கோவணம் கட்டி அதன் மேல் இடுப்புத் துண்டு கட்டிப்போகும் மாணவர்கள் – கோவணம் கட்டாமல் போனால் தண்டனை –ஆகவே கண்டுபிடிக்கப்படாமல் இருக்க பின்புறத்தில காகத்த்தை சுருட்டி வைத்து ஏமாற்றும் பிள்ளைகள் – அதையும் கண்டுபிடித்துவிடும் ஆசிரியர் என்று இன்றைய தலைமுறை மாணவர்களால் நம்பமுடியாத பழங்கால விஷயங்கள்.

கதை சிதம்பரம் என்ற அவரது மாணவனின் பார்வையிலும் விரிகிறது. சிறுவயது சிதம்பரம் சூட்டியகயான வசதியானவீட்டுபையன். மேற்படிப்புக்கு டெல்லி போகிறான். ஐயாவை மதித்து நேசிப்பவன். அவனைக்கூட இவர் ஒருமுறை அநியாயமாக அடித்துதுவைக்க பள்ளிக்கே சிறிது நாள்வராமல் போக பிறகு அவரே சென்று அவன்படிப்பு வீணாகிறது என்று அவன் அப்பாவிடம் சொல்லி வரவைக்கிறார். தன் கௌரவம் குறையாமலும் மன்னிப்புகேட்பதாக இல்லாமலும் அதேசமயம் மனக்குறுகுறுப்போடும் சென்று பேசுவது ஐயாவின்ஆளுமை பற்றிசொல்லும் ஒருதுளி . தன்னால்தான் சிதம்பரம் அடிவாங்கினான் என்பதால் பாலா தன் தவறுக்கு வருந்தி பிறகு சிதம்பரத்திடம் மீண்டும நட்பு தொடர்கிறாள் . இருவருக்கும் இடையே ஒரு இனம் புரியா அன்பு இருக்கிறது.

இதில் சுவையும் மணமுமாக கோவிலில் தளிகை நிவேதனம் செய்து சாப்பிட்டு வரும் ஐயங்கார் ஒருசக ஆசிரியர். தன்னிடமே மாணவனாக இருந்து பிறகு தன்னிடமே உதவி ஆசிரியாராக சேரும் கோபால் வாத்தியார். மற்றொரு சக ஆசிரியர். இடுப்பில் வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு எந்த வேலையும் இல்லாமல் சாப்பிடுவது ஊர் சுற்றி வருவது என்று இருக்கும் “தொந்தி மாமா“ ஒரு சுவாரசியமான ஜீவனுள்ள பாத்திரம். ஊரின் கோவில் மாடு என்றால் அனைவருக்கும் பயம். ஆனால் அவர் அதனிடம் பேசுவார். அவர் சொன்னபடி நடக்கும் அது, ஐயா மாணவர்களை அடிக்கும் ஆவேசம்கண்டு பள்ளிக்குள் நுழைந்து ஐயாவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரேநபர் அவர். கோவில் பிரசாதம் வாங்க நிற்பதும் – கதைகள் சொல்வதும் – ஐயா தங்கம் எனும் வேசி வீட்டுக்கு போவதை மாணவர்களிடம் சில்மிஷமாக பேசுவதும் – பெண் பிள்ளைகளை மரியாதையாக பாவிப்பதும் – முரடனுக்கு முரடனாக இருப்பதும் – பிள்ளைகளின் விளையாட்டுத் தோழனாக இருப்பதுமாக ஒருசுவையான பாத்திரம் “தொந்தி மாமா“.

சிவகுரு என்பவன் சிதம்பரத்தின் ஆத்ம நண்பன். உள்ளூர் படிப்போடு நின்று பிறகு ஊர்பஞ்சாயத்துதலைவர் ஆகிறான். ஆறுமுகம் பள்ளிக்கூட சிறுவனாக சட்டம்பிள்ளையாக கொஞ்சம்நரித்தனத்துடன் இருக்கிறான். பிற்காலத்தில் வளர்ந்து இவன்தான் ஐயாவை துச்சமாக தூக்கி எறிகிறான். அதற்கான காரணம் சுவாரசியமானது.

ஐயாவுக்கு ஊரின் தாசி தங்கத்துடன் தொடர்பு உண்டு என்பது மாணவர்கள் உட்பட அனைவரும் அறிந்த ரகசியம். அவ்வப்போதோ அல்லது மனம் சரியில்லாதபோதோ அவர் அவளை நாடிப்போவார் . அவளது பெண் கனகம் பள்ளிச்சிறுமி. அதனால் அவளுக்கு ஐயாவிடம் சிறப்புசலுகை உண்டு .அடிவாங்காத ஒரே மாணவி அவள்தான். தன்னுடைய சொத்துக்களை அவளுக்கே தந்துவிடும் எண்ணத்தில்தான் அவர் இருக்கிறார்.

பள்ளிசிறுவர்கள் எறும்பு வரிசைபோல ஆற்றுக்கு சென்று மணலை அள்ளி வந்து பரப்புவது ஒருவிளையாட்டு அனுபவம். அப்படி போகையில் ஆறுமுகம் –கனகம் என்று கள்ளிச் செடியில் முள்ளால் எழுதியதை சிவகுரு பார்த்து சிதம்பரத்திடம் சொல்கிறான். பாலா என்ற சகதோழியிடம் சிதம்பரம் சொல்ல அவள் இதைகசியவிட சிதம்பரம் மேல் சந்தேகப்பட்டு ஐயா அவனை அடித்து வெளுக்கிறார்.

கோபக்காரர். ஆனால் ஐயா நேர்மையானவர். அவரிடம் வம்புக்கு வந்து இன்ஸ்பெக்ஷன் செய்யும் இன்ஸ்பெக்டர் பள்ளியின் மேல் குறைகளை எழுதி வைக்க – நெசந்தான். இந்தப் பள்ளிக் கொடத்துல சுகாதார வசதியில்லே. கட்ட்டம் இல்லே. மரத்தடியில்தான் நடக்குது. அது இதுன்னு கிராண்ட் வெட்றதுக்கு தோதா எழுதிப்பிட்டீரு. சரி! ஆனா அம்மாம் சத்தியவந்தரான உம்மை ஒண்ணு கேக்கறேன். ஒம்மப் புணூலு மெல சத்தியமா சொல்லும்! இண்ணிக்குத் தேதி என்ன? முந்தாநாள தேதியப் போட்டிருக்கிஙே. அண்ணிக்குத்தான் இந்த ஸ்கூலை விசிட் பண்ணியா நீ? உனக்குப் படி கிடைக்கறதுக்காக அப்பிடி எழுதிணேன்னு சத்தியம் பண்ணு! என்று ஆங்காரமாய் கத்துகிறார். இன்ஸ்பெக்கடர் கதிகலங்கி ஓடுகிறார்.

சிதம்பரம் டெல்லி போகும் முன்- டெல்லியில் இருந்து திரும்பிய பின் என்று இருபாகமாக உள்ளநாவல் இந்தகால மாற்றத்தில் ஐயாவின் கம்பீரப் பிடிவாதங்கள் மேகமாக கலையும் அவலத்தைச் சொல்லிப்போவதுதான் நாவலின் உயிர்.

டெல்லியில் இருந்து திரும்பும் சிதம்பரத்தை நண்பன் சிவகுரு வண்டி கட்டிக்கொண்டு சென்று வரவேற்கிறான் . அனைவரும் வளர்ந்து பெரியவர் ஆகி விட்டிருக்கிறார்கள். பெரியவர்கள் முதியவர்கள் ஆகிறார்கள். திரும்பும் வழியில் பால்ய வயது நினைவுகளோடு இருவரும் பேசிக்கொண்டே பள்ளிக்கூடத்தை தாண்டிப் போகிறார்கள். செல்கிறார்கள்,. அப்போது ஊர் மாறிவிட்ட செய்திகள் அடுக்கு அடுக்காக விரிகிறது. ஐயா உடல் குன்றி தனக்குள் முடங்கிப்போய் அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் தன் குடிசைக்குள் ஒடுங்கிக்கிடக்கிறார். ஆலமரம் காணவில்லை. வேலிப்படல்கள் மறைந்துபோய் களை இழந்து நிற்கிறது பள்ளிவளாகம். இந்தப் பகுதியைப் படிக்கும்போது நமக்கும் அந்த பழைய பள்ளிக் காட்சியை இழந்துவிட்ட உணர்வு உண்டாகிறது.

பாலா ஆறுமுகத்துடன் ஓடிப்போய்விட்டாள் என்கிறான் சிவகுரு. நம்பமறுக்கிறது சிதம்பரத்தின் மனம், இம்சைப்படுகிறது. தன் அம்மாவிடம் பாலாவா அப்படி செய்தாள் என்று கேட்டு அங்கலாய்க்கிறான். ஆனால் ஏமாற்றமாக ஏதும் இல்லை. கனகம் யாரோ ஒரு முரடனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுகிறாள். ஐயாவின் சொத்து சேமிப்பு எல்லாம் அவளுக்குதான் என்ற எண்ணத்தில் முரடன் ஐயாவிடம் நைச்சியமாக நடந்துகொள்கிறான். சொத்துக்களை தன்பேரில் எழுதித்தரக் கேடகிறான். இதற்கிடையே பிரசவத்தில் கனகம் இறந்து போகிறாள். ஐயா மனம் உடைகிறார். ஆனால் அவர் ஒரு கிழட்டு சிங்கம் போல கோபமும் வீம்பும் பிடிவாதமும் குறையாதவராகவே இருக்கிறார். பாலாவுடன் ஓடிப்போய்விட்டதால் ஆறுமுகம் மீது அவருக்கு பெருங்கோபம். அவன் அவரை பள்ளிவளாகத்தைவிட்டே கிளப்புவதற்கு சதிசெய்கிறான் .சும்மாவா வேலை செஞ்சாரு? சம்பளம் வாங்கிட்டு இல்லே? என்று ஒரே கேள்வியில் அவரை ஊரார் முன் சிறுமைப்படுத்தி நோகடிக்கிறான்.

ஐயாவின் வீட்டில் அவர் முடங்கிக் கிடக்கையில் சிவகுரு சிதம்பரத்தை அழைத்துப்போய் மறு அறிமுகப்படுத்துகிறான். அவன் வரவை மனதுக்குள் சந்தோஷமாக ஏற்று தான் அலட்சியப்படுத்தப்பட்டு கிடப்பதை சொல்கிறார். அவர் முன் உட்காராமல் நின்றுகொண்டேதான் இவர்கள் பேசுகிறார்கள். அவ்வளவு கௌரவம் தருகிறார்கள். ஐயா இல்லாவிட்டால் இன்று யாருக்குமே அறிவுச்செல்வம் கிடையாது என்பதை உணர்ந்து அவருடைய குறைகளை தாண்டி ஒரு பெரிய மரியாதை கெளரவம் அவருக்கு தரப்படவேண்டும் என்று விரும்பி அவரை கௌரவனாக நடத்துகிறார்கள் .

கடைசீயில் ஐயாவிடம் இருந்து அந்த இடத்தை காப்பாற்றி இனி அவருக்கு சம்மந்தம் ஏதுமில்லை என்று செய்துவிட ஆறுமுகம் வேறுசிலரும் சேர்ந்துகொண்டு நெருக்குகிறார்கள். மனம் வெதும்பிப் போய் சாவியை கோபமாக தன் உதவிஆசிரியர் கோபாலிடம் விட்டெரிந்து விட்டு கட்டிய வேட்டியுடன் ஊரைவிட்டு கிளம்பிப்போகிறார். பலமுறை இப்படி சென்று அடுத்த சிலமணிநேரத்தில் திரும்பியவர் இம்முறை திரும்பவே இல்லை . எங்கெங்கோ தேடுகிறார்கள். ஏதோ ஒருஇடத்தில் அனாதையாக தெருவில் இறந்து கிடக்கிறார்.

ஐயாவிடம் இருந்து கைப்பற்றிய அந்த இடத்தில் புதியகட்டிடம் எழுப்புகிறார்கள். அவர் நினைவாக சாமிநாத சர்மாமன்றம் என்று அவர் பேரை வைக்கவேண்டும் என்று பலரும் சொல்ல ஆறுமுகம் எதிர்க்கிறான். சாமிநாத சர்மா பெயரைவைக்கவேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்த நண்பனும் ஊர்தலைவருமான சிவகுருவும் ஆதரிக்கிறான். அவனது குருபக்தியை மெச்சிய சிதம்பரம் பிறகு நேரில் சென்று பார்க்கையில் சிவகுரு நற்பணி மன்றம் என்று பெயர் சூட்டப்பட்டுஇருக்கிறது,. சிதம்பரம் அதிர்ந்து போகிறான். யாரை நம்புவது என்று திகைக்கிறான். டெல்லிக்குதிரும்புகிறான் .
நாவலில் வரும் ஒரு பத்தியில் –

எத்தனை பெரிய நஷ்டம் இது? எத்தனை தலைகுனிவு மக்களுக்கு? எவ்வளவு பெரிய பழி வந்து சேரும் மக்களுக்கு? மூன்று தலைமுறையாய் அற்ப காணிக்கையை பெற்றுக்கொண்டு இந்த ஊர் மக்கட்தொகை முழுவதற்கும் எழுத்தறிவித்து அறியாமை இருளைப் போக்கிய இறைவன் – இப்பழக் கட்டிய வேட்ழயோடு மனம் நொந்து வெளியேறும்படி செய்த்துதான் இந்த ஊர் அவருக்கு செய்த பிரதி உபகாரமா? இது யாருடைய பிழை? அனுசரணையாயப் பேசுகிறவர்களையும் தூக்கி எறிந்து விசிறி விட்டுப் போகும் “ஐயா“வுடையதா? நமக்கென்ன என்று அவரது சுகதுக்கங்களைப் பற்றி அக்கரை காட்டாது ஒதுங்கும் அதிகப்படியான பொது மக்களுடையதா? அற்பத்தனமாய் வனமம் காட்டி அவரது நெஞ்சை ரணமாக்கிய ஆறுமுகம் போன்றவர்களுடையதா? யாரைக் குறை சொல்வது?

ஆமாம். மகத்தான சாதனை புரிந்தவர்களைத்தான் உலகம் என்ன ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கிறது?

அன்று ஐயாவின் தகனத்தின் போது ஆற்றங்கரையில் நின்று ஆற்றுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்து அவன் நினைவுக்கு வந்த்து. ஆற்றைப் போலவே யாரையும் லட்சியம செய்யாது தன் போக்கில் போனவர் அவர் என்று நினைத்த்த்தை எண்ணிப்பார்த்தான். சமுதாயம் என்ற நதியும் அப்படித்தானே! அதற்கு யாரைப்பற்றிக் கவலை? எவருக்காக அது நிற்கப்போகிறது? யார் வருகிறார்கள் யார் நின்றுவிட்டார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் அது தன் போக்கிற்கு போய்க்கொண்டே இருக்கிறது. அது ஏன் எவரையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்? காலத்தின் ஓட்டத்தில் எல்லோரும் மறக்கப்பட வேண்டியவர்களே! என்று சொல்லிக் கொண்டே போய் முடிகிறது இந்த நாவல்.

மணியம் பதிப்பகம்.
முதற்பதிப்பு டிசம்பர் 1993.