அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்

சில நாட்களுக்கு முன்பு ஒரு சிவில் வழக்கில் சான்றாயராகப் (Juror) பணியாற்ற மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. கொலை போன்ற கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு தங்களைப்போன்ற குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சான்றாயர் குழு (Jury) முன்பு தாங்கள் நிரபராதி என்று வாதிடும் உரிமை பல நாடுகளில் இன்றும் வழங்கப்பட்டாலும், அந்த உரிமை எந்த மாதிரி குற்றங்களுக்குப் பொருந்தும், ஜூரி வழங்கும் தீர்ப்பின் முடிவு எவ்வளவு இறுதியானது என்பது போன்ற விஷயங்களில் நாட்டுக்கு நாடு எக்கச்சக்க வேறுபாடுகள் உண்டு.

Jury_American_Justice_Judges_Law_Order_Civil_Infractions_Criminal_Process_Courts

அமெரிக்க அரசியல் சாசனத்தின் மூன்றாவது ஷரத்தின்படி ஆறு மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கக்கூடிய எந்த விதமான கிரிமினல் குற்றம் ஒருவர்மேல் சுமத்தப்பட்டாலும், ஜூரியை வைத்து வழக்கு நடத்தித்தான் தீர்ப்பு வழங்கியாக வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்ற கேள்வியை ஜூரி முடிவு செய்ய, குற்றவாளிதான் என்று முடிவாகும் பட்சத்தில், குற்றவாளிக்கு சட்டப்படி என்ன தண்டனை என்பதை நீதிபதி நிர்ணயிப்பார். அதே அரசியல் சாசன அமைப்பின் ஏழாவது திருத்தத்தின்படி(7th Amendment to the US Constitution) கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமின்றி சிவில் வழக்குகளுக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டிருப்பதால் உலகிலேயே ஜூரிகளை வைத்து தீர்ப்பு வழங்கும் வழக்குகள் அமெரிக்காவில்தான் இன்று மிக அதிகம்.

untitled

அமெரிக்க சட்ட அமைப்புப்படி, கிரிமினல் வழக்குகள் அனைத்தும் அரசாங்கத்தால் மட்டுமே தொடுக்கப்படும். காரணம் கிரிமினல் குற்றங்கள் எங்கே எப்படி நடந்தாலும் சமூகத்தையே ஓட்டு மொத்தமாய் பாதிக்கின்றன, எனவே அவற்றைத் தடுப்பதில் அரசாங்கத்திற்குப் பெரிய பொறுப்பு உண்டு என்ற அடிப்படைக் கொள்கை. கிரிமினல் குற்றவாளிகளுக்குச் சிறை தண்டனையோ வேறுவிதமான தண்டனைகளோ கிடைக்க வாய்ப்புண்டு. அதற்கு மாறாக சிவில் வழக்குகளை யார் வேண்டுமானாலும் தொடுக்கலாம். சிவில் குற்றங்களுக்குச் சிறை தண்டனை கிடையாது. கிரிமினல் குற்றங்கள் சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி (Beyond Reasonable Doubt) நிரூபிக்கப்படவேண்டும். சிவில் வழக்குகளுக்கு அத்தனை கடுமையான நிரூபணம் தேவை இல்லை. மிதமிஞ்சிய ஆதாரங்கள் (Preponderance of Evidence) இருந்தால் போதும். அமெரிக்க சட்ட அமைப்புப்படி ஒருவர் ஒரு குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுவிட்டால் அதே குற்றத்திற்காக அவரை மறுபடி கூண்டில் ஏற்றுவதென்பது (Double Jeopardy) முடியாது. ஆனால் சில சமயங்களில் ஒரே சம்பவத்துக்காக கிரிமினல், சிவில் என்று தனித்தனியாக இரண்டு வழக்குகள் தொடுக்கப்படுவது உண்டு. 1990களில் உலகப்புகழ் பெற்ற ஓ.ஜெ.சிம்சன் கேஸில் அரசு தொடுத்த கிரிமினல் கொலைவழக்கில் ஆதாரங்கள் சரியாக இல்லை என்று ஒரு ஜூரி அவரை விடுவித்தது. ஆனால் கொலையுண்ட அவர் மனைவி குடும்பத்தினர் தொடுத்த சிவில் வழக்கில் இன்னொரு ஜூரி அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. அது சிவில் வழக்கு என்பதால் குற்றத்திற்கு தண்டனையாக காசு பணத்தை இழந்தாரே தவிர சிறைக்குச் செல்லவில்லை. (பின்னால் வேறு குற்றங்கள் செய்து மாட்டிக்கொண்டு அவர் சிறைக்குச் சென்றது வேறு கதை.)

இந்தியாவிலும் சான்றாயரை வைத்து வழக்கு நடத்தும் முறை சுதந்திரதிற்குப் பின் கொஞ்சநாள் இருந்தது என்றாலும், 1960 வாக்கில் ஜூரியாக பணிபுரியும் பொதுமக்கள் ஊடகங்களினால் ஏற்படும் தாக்கங்களால் பாதிக்கப்பட்டு தவறான முடிவுகளை வழங்குவார்கள் என்ற கருத்தினால் இம்முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. நானும் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன், சாதாரணக் குடிமக்கள் தங்கள் சொந்த உணர்வுகள் தப்பெண்ணங்கள் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு, முறையாக சட்டம் பயின்று நீதிபதியாக இருக்கும் ஒருவரைவிட எப்படி திறம்பட வழக்கை புரிந்து கொண்டு சிறப்பாக தீர்ப்பு வழங்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறேன். அமெரிக்க நண்பர்கள் ஒரு நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்தோ பயமுறுத்தியோ வழக்கை திசை திருப்புவதோடு ஒப்பிட்டால், ஒரே ஒரு வழக்கை கேட்க தற்காலிகமாக உருவாக்கப்படும் ஒரு டஜன் சான்றாயர்கள் கொண்ட பஞ்சாயத்தை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கியோ பயமுறுத்தியோ வழக்கைத் திசை திருப்புவது ரொம்பவே கடினம் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தவிரவும் வக்கீல்களும் நீதிபதிகளும் ஒரே கட்டிடத்தில் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டு வருடக்கணக்கில் பணிபுரியும் ஊழியர்கள். எனவே ஒரு வழக்கு நடக்கும்போது சின்னச்சின்ன விஷயங்களில் நீதிபதி முதல் முறையாகத் தான் சந்திக்கும் வாதி/பிரதிவாதிகளை விட தனக்கு நன்கு தெரிந்த வக்கீல் நண்பரின் பக்கம் சாய ஒரு சிறிய வாய்ப்பு உண்டு. ஜூரி குழுமம் அமைக்கப்படும்போது வாதி அல்லது பிரதிவாதியை முன்பே தெரிந்திருப்போர் ஜுரராக பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கில் அலசப்படும் விஷயங்களை சரியாக எந்தப்பக்கமும் சாயாமல் ஒருவரால் அணுகமுடியும் என்று இரண்டு பக்க வக்கீல்களும் ஒத்துக்கொண்டால்தான் (Voir Dire) ஜுரர் குழுமத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். உதாரணமாக ஒரு மருத்துவரை எதிர்த்து நடக்கும் வழக்கின் ஜூரியில் மருத்துவர்களை உட்கார வைக்க வக்கீல்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் (Prevention of Judicial Prejudice).

மூன்று நாட்கள் நானே ஒரு வழக்கில் ஜுரராக இருந்து வாதப்பிரதிவாதங்களை கேட்டு மற்ற ஜுரர்களுடன் கலந்தாலோசித்து தீர்ப்பு வழங்கியபின் இந்த அமைப்பு நன்றாகவே செயல் படுகிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். அடிப்படையாக ஒரு சமுதாயத்தில் ஊழல் போன்ற பிரச்சினைகள் விரவி இருந்தாலோ, குடிமக்கள் சமூகத்திற்காக தாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பொருட்படுத்தாதவர்களாக இருந்தாலோ, காலம் காலமாக மதம், மொழி முதலிய பிரிவுகளால் ஒருவரை ஒருவர் வெறுக்கும் பழங்குடிகள் நிரம்பி இருந்தாலோ எந்த ஒரு நீதி அமைப்பும் உருப்படாமல் போக வாய்ப்புண்டு. அத்தகைய பிரச்சினைகளால் தடுமாறாத சமுதாயங்களில் ஓரளவு நியாயமான எந்த ஒரு நீதி முறையும் வெற்றி பெறும் வாய்ப்பும் உண்டு. என் அனுபவத்தைப் பொறுத்தவரை இந்த வழக்கு ஒரு நேர்மறை அனுபவமாகவே இருந்தது.

அமெரிக்கர்களுக்கு ஜுரராக பணியாற்றுவது என்பது வருமானவரி கட்டுவதைப்போன்ற விஷயம் என்று சொல்லலாம். பெரும்பாலோர் இதைச்செய்ய சந்தோஷமாய் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவது இல்லை. ஆனால் நடக்கும் அத்தனை கிரிமினல்/சிவில் வழக்குகளுக்கும் ஜூரி தேவைப்படுவதால், இந்த அழைப்பு எல்லோருக்கும் ஏதாவதொரு சமயம் வருவது சகஜம். அழைப்பு வந்தால் பொதுவாக அதை தங்கள் குடிமைக் கடமையாகக் (Civic Duty) கருதி நீதிமன்றத்திற்குச் சென்று வெகு ஒழுங்காகப் பணியாற்றிவிடுவார்கள். தேர்தல்களில் ஓட்டு போடுவது போல் இல்லாமல், வரி கட்டுவதும் ஜுரராகப் பணி புரிவதும் எனக்கு இஷ்டமில்லை என்று சொல்லித் தப்பி விட முடியாத விஷயங்கள் (i.e. Mandatory, not voluntary). சரியான காரணங்களின்றி இந்த விஷயங்களைச் செய்யாமல் தவிர்க்க முயன்றால், சட்டம் நம்மைத் துரத்த ஆரம்பித்துவிடும்.

juryPanel

நான் பணியாற்றிய வழக்கு ஒரு சாலை விபத்து சம்பந்தப்பட்டது. வழக்கு தொடுத்தது ஏஞ்சலா லசெல்வா என்ற ஒரு 29 வயது இளம்பெண். பிரதிவாதி ரோசான் டேவிட்சன் என்கிற ஒரு 85 வயது பெண்மணி. ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் சாலை குறுக்கு சந்திப்பு ஒன்றில் நின்றிருந்த ஏஞ்சலாவின் கார் பின்புறத்தில் ரோசானின் கார் இடித்து விட்டது. திருமதி டேவிட்சன் தவறு தன்னுடையது என்று உடனே ஒப்புக்கொண்டு தனது இன்சூரன்ஸ் விபரங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். யாருக்கும் அடி ஒன்றும் படவில்லை. சிறிய விபத்துக்களில் கூட வெடித்து வெளிவந்து பயணிகளை பாதுகாக்கும் ஏர்-பேக் (Air-Bag) எதுவும் இயங்கவில்லை. ஆம்புலன்ஸ் எதுவும் அழைக்கப்படவில்லை. அவ்வளவு சிறிய விபத்துதான் என்பதால் இருவரும் தத்தம் காரில் ஏறி ஒட்டிச்சென்று விட்டார்கள். திருமதி டேவிட்சன் இன்சூரன்ஸ் வாங்கி இருந்த நிறுவனம் பாலிசிப்படி ஏஞ்சலாவின் வளைந்துபோன கார் பம்பரை (Bumber) சரி செய்து கொடுத்துவிட்டது. திருமதி டேவிட்சனின் காருக்கு மராமத்து வேலை எதுவுமே வேண்டியிருக்கவில்லை.

ஐந்து வருடங்கள் கழித்து ஏஞ்சலா இப்போது திருமதி டேவிட்சன் மேல் வழக்கு தொடுக்கிறார். காரணம்? அந்த விபத்து நடந்ததில் இருந்து ஏஞ்சலாவுக்கு ஒரு முதுகுவலி வந்து தொல்லை கொடுக்கிறதாம். அதனால் தான் ஒரு பேக்கரி துவக்கி நடத்த வேண்டும் என்கிற அவருடைய வாழ்நாள் கனவு நிறைவேறாமல் போய்விட்டதாம். ஏஞ்சலாவின் வக்கீல் தனது வாதத்திற்கு “Busted Bumper – Broken Dreams என்று ஒரு தலைப்பு வேறு கொடுத்தார்!

இருபுற வக்கீல்களும் ஏஞ்சலாவின் மருத்துவ அறிக்கைகளையும், மருத்துவர்களின் வாக்குமூலங்களையும் எங்கள் பார்வைக்குச் சமர்ப்பித்தனர். இரு புறத்து மருத்துவர்களும் சம்பவம் நடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே, எம்‌ஆர்‌ஐ, எலும்பு ஸ்கேன் எல்லாம் நார்மல் என்று ஒப்புக்கொண்டனர். பிரச்சினைகள் ஏதும் புறநிலை ஆதாரங்களால் நிரூபிக்கப்படாததால், ஏஞ்சலா சொல்லும் முதுகுவலி ஒரு அகநிலை பிரச்சினையாகிப்போனது. பலசுற்று மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின் ஏஞ்சலாவை எவ்வளவு சரி செய்ய முடியுமோ அவ்வளவும் செய்தாகிவிட்டது (Maximum Medical Improvement) என்றும் இதற்கு மேல் செய்ய எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் இரு வருடங்களுக்கு முன் கூறிவிட்டனர். பொதுவாக வேண்டுமானால் ஒரு பத்து கிலோவுக்கு மேல் எடை எதையும் தூக்கவேண்டாம் என்று அவரது மருத்துவர் பரிந்துரைத்திருக்கிறார்.

ஏஞ்சலா கல்லூரி எதற்கும் போகாதவர். பத்து வருடங்களுக்கு முன்பு சமையல் தொழிலில் ஒரு வருட வகுப்பு ஒன்றை முடித்திருந்தாலும், இதுவரை ஒரு பீட்ஸா விடுதியில் பகுதிநேர வெயிட்டராக (waitress) வருடம் ஏழாயிரம் டாலர்கள் மட்டுமே சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார். ஏஞ்சலாவின் அப்பா சாட்சிக் கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்தபோது குறுக்கு விசாரணையில் தன் மகளுக்கு தொழில் தொடங்கப் பணம் தர தயாராக இருப்பதாகச் சொன்னார். இருப்பினும் ஏஞ்சலா பேக்கரி தொடங்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை. இந்த முதுகு வலியினால் தன் பேக்கரி கனவு இனிமேல் நிறைவேறப்போவதில்லை என்பது புரிந்து, ஒரு மருத்துவ எழுத்தர் மற்றும் குறியீட்டாளராக (medical billing/coding clerk) தேவையான ஆறு மாத கோர்ஸ் ஒன்றை படித்து முடித்தாராம். அந்த வேலையில் சேர்ந்து பணிபுரிந்தால் வருடம் முப்பத்துமூவாயிரம் டாலர் சம்பாதிக்கலாம். அதையும் செய்யவில்லை. காரணம்? அதற்கு லைசென்ஸ் வாங்க 300 டாலரும் புத்தகங்கள் வாங்க 70 டாலரும் செலவகுமாம். அப்பா தொழில் தொடங்க ஆயிரக்கணக்கில் பணம் தரத் தயாராக இருக்கையில், இந்த 370 டாலரை கொடுத்து உதவ மாட்டாரா என்ன? ஆனால் தான் தன் தந்தைக்கு ஒரு பாரமாக இருக்கக்கூடாது என்று அவரிடம் எதுவும் கடனாகக்கூட கேட்கவில்லையாம்! எனவே இப்போதும் வருடம் 7000 டாலர் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு பகுதிநேர வெயிட்டராகவே பணி புரிந்து வருகிறார்!

ஏஞ்சலாவின் வக்கீல் ஒரு தொழிற்கல்வி மறுவாழ்வு நிபுணர் (vocational rehabilitation expert) ஒருவரைக் கூண்டிலேற்றி அவரது கருத்துக்களை முன் வைக்கச்சொன்னார். அந்த நிபுணரின் கருத்துப்படி, இந்த முதுகு வலி ஏஞ்சலா அவர் வாழ்நாளில் வேலை செய்யும் நாட்களை 7.8 வருடங்கள் வரை குறைக்குமாம். மருத்துவக் குறியீட்டாளராக அவர் வருடம் 33,000 டாலர் வரை சம்பாதிக்க முடியும் என்பதால், அவர் மொத்தத்தில் சுமார் $257,000 நஷ்டப்படுவார். அதோடு வருங்கால வைப்புநிதி. (P.F.) பென்ஷன் போன்ற நஷ்டங்கள் ஒரு $72,000 தேறும். எனவே மொத்த நஷ்டம் $329,000. அத்தோடு அவர் வெகு நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாமல் போனதற்காகவும், பொறுத்துக்கொள்ள வேண்டிய வலிக்காகவும் மற்றபடி வாழ்க்கைத்தரம் குறைந்து போனதற்காகவும் ஏதோ இன்னும் கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அந்த வக்கீல் வாதிட்டார்.

இந்த வழக்கிற்காக முதலில் 14 ஜூரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதில் 12 பேர் ஜூரியாக அமர்த்தப்பட, மற்ற இருவரும் மாற்று ஜூரர்களாக அறிவிக்கப்பட்டனர். சான்றாயர் குழுவில் உள்ள 12 பேரில் ஒருவரோ இருவரோ வழக்கு முடிவதற்குள் பணியில் இருந்து விலக வேண்டிவந்தால் மாற்று சான்றாயர்கள் அந்த இடத்தில் அமர்த்தப்பட்டு வழக்கு தொடரும். நாங்கள் 12 பேரும் அதே மாவட்டத்தில் வாழ்பவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருந்தோம். அதில் 5 பெண்கள், 7 ஆண்கள். வழக்கை நடத்திய நீதிபதி வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் முடிந்து நாங்கள் தீர்ப்பு வழங்கவேண்டிய கேள்விகள் எங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை எங்களுக்குள்ளே எந்த விதத்திலும் வழக்கை அலசக்கூடாது என்று பலமுறை நினைவுறுத்தினார். நாங்கள்தான் இறுதியில் அலசி முடிவெடுக்க வேண்டும் என்றாலும் அரைகுறையாக வாதங்களை கேட்டுவிட்டு தப்பும் தவறுமாய் எதையாவது விவாதித்து கருத்துக்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை. ஒவ்வொரு நாளும் மாலை நாங்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டோம் என்றாலும் நீதிமன்றத்துக்கு வெளியேயும் பத்திரிக்கையாளர்கள், குடும்பத்தினர் யாருடனும் கேசைப்பற்றி எதுவும் பேசக்கூடாது என்று நினைவுறுத்தப்பட்டோம்.

judge

வழக்கு நடக்கும் வரை எங்களில் யாராவது கழிப்பறைக்கு செல்ல வேண்டி இருந்தால் கோர்ட் பணியாளர் ஒருவர் எங்களுடன் துணைக்கு வந்து போகும்/வரும் வழியில் நாங்கள் வாதி/பிரதிவாதி கட்சிக்காரர்களிடமோ வக்கீல்களிடமோ பேசிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ஊடகங்கள் கூர்ந்து கவனித்து தினமும் தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் விவாதித்துக்கொண்டு இருக்கும் பரபரப்பான வழக்காக இருந்தால் ஊடக தாக்கங்களைத் தவிர்க்க வழக்கு ஆரம்பம் முதல் முடியும் வரை ஜூரியை வீட்டுக்குப் போக அனுமதிக்காமல், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் பார்க்கவும் அனுமதியின்றி ஹோட்டலில் வாரக்கணக்கில் தங்க வைக்கும் வழக்கமும் உண்டு. எங்களுடையது ரொம்ப சாதாரணமான கேஸ் என்பதால் அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தேவை எதுவும் இருக்கவில்லை. தினமும் ஜூரி அறையிலிருந்து ஒரு வரிசையில் நாங்கள் அனைவரும் வழக்கு நடக்கும் நீதிமன்ற அறையை அடைந்து இருக்கையில் சென்று அமரும்போது வாதி, பிரதிவாதி அவர்களுடைய வழக்கறிஞர்கள் யாரும் எங்களுக்கு காலை வணக்கம் சொல்லக்கூட அனுமதி கிடையாது! நீதிபதி மற்றும் கோர்ட் பணியாளர்களுடன் மட்டுமே நாங்கள் காலை வணக்கம் சொல்லிக் கொள்வோம். வக்கீல்கள் வாதங்களை எங்களை நோக்கியே செய்தாலும் எங்களுக்கு எழும் கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி நீதிபதியிடம் கொடுத்துத்தான் விடை பெற வேண்டும். நேராக வாய் திறந்து எதுவும் கேட்கக்கூடாது. அது ஜூரியின் எண்ணம் எந்தப்பக்கம் சாய்கிறது என்று காட்டிக் கொடுத்துவிட முடியுமல்லவா? அதனால்தான் இந்த முன்னெச்சரிக்கை.

நீதிமன்ற அறையிலிருந்து 50 அடி தள்ளி இருந்த சான்றாயர் அறைக்கு போகும் ஒவ்வொரு முறையும் நாங்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ளக் கொடுக்கப்பட்ட சிறிய நோட்டுப் புத்தகத்தை கோர்ட் பணியாளர் ஒருவரிடம் கொடுத்து அவர் அடுத்த அறையில் அதைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டி இருந்தது. மொத்தத்தில் இந்த செயல்பாட்டுமுறை பூராவும் மிகவும் மெதுவாக, தவறுகள் நிகழ வாய்ப்புகள் எதுவும் எளிதாக இருந்துவிடாமல், திட்டமிட்டு செய்யப்படுபவையாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒருவர் விடாமல் எல்லோரும் இந்த முறை மிகவும் சலிப்பூட்டுவதாக இருப்பதை ஒப்புக்கொண்டோம் என்றாலும், எங்கள் குழுவில் இருந்த பன்னிரண்டு பேரும் அத்தனை விதிகளையும் மிக நேர்மையுடனும் வெகு தீவிரமாகவும் இம்மி பிசகாமல் கடைப்பிடித்தோம்.

deliberation

இறுதியில் வாதங்கள் முடிந்து, திருமதி டேவிட்சென் தவறு தன்னுடையது என்று முன்பே ஒப்புக்கொண்டு இருப்பதால் ஏஞ்சலாவுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எங்களிடம் கொடுக்கப்பட்டது. சான்றாயர் அறைக்கு திரும்பியவுடன் ஆரம்பித்த விவாதத்தில் நாங்கள் பன்னிரண்டு பேரும் ஐந்தே நிமிடத்தில் ஒரு ஒருமித்த முடிவுக்கு வந்த வேகம் எங்கள் அனைவருக்கும் சற்று ஆச்சரியமாகவே இருந்தது. ஏஞ்சலா ஒரு பேக்கரி ஆரம்பித்து இருந்தால் கூட அவ்வப்போது ஏதாவது 10 கிலோவுக்கு மேல் மாவையோ சக்கரை மூட்டையையோ தூக்க வேண்டிவரும்போது அதற்கேற்ற இயந்திரங்களையோ உதவியாளர்களையோ உபயோகித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் மருத்துவக் குறியீட்டாளராகப் பணிபுரிந்தால் அந்த பத்து கிலோ தொல்லை கூட இல்லாமல் போய் இருக்கும். ஆதாரத்துடன் நிரூபிக்கும்படி ஏஞ்சலாவுக்கு அடி ஏதும் படாததால் அந்த $329,000 நஷ்டம் என்பதெல்லாம் வெறும் கதை என்று அனைவரும் உடனே முடிவுக்கு வந்தோம்.

நாங்கள் அனைவரும் ஏஞ்சலாவுக்குத் தர விரும்பியதென்னவோ ஒரு பெரிய பூஜ்யம்தான் என்றாலும், தவறு திருமதி டேவிட்சன்னுடையது என்பதால் சட்டப்படி நாங்கள் ஏதாவது ஒரு தொகையை வழங்க வேண்டியிருந்தது. சில நிமிடங்கள் $1 நஷ்டஈடு வழங்கலாமா என்று யோசித்து, அந்த யோசனையை நிராகரித்துவிட்டு வேறொரு தொகையை வழங்க முடிவு செய்தோம். அது எவ்வளவு என்று உங்களால் ஊகிக்க முடிகிறதோ? சரியான விடை: $370. அந்தத் தொகையின் மூலம் நாங்களனைவரும் ஏஞ்சலாவுக்கு அனுப்பிய செய்தி நன்றாக போய்ச் சேர்ந்திருக்கும், உங்களுக்கும் எளிதாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். முடிவை அடைந்தவுடன் நீதிபதிக்கு நாங்கள் ரெடி என்று தகவல் அனுப்பினோம். அவர் திரும்பவும் நீதிமன்றத்தை துவக்கியபின், நாங்கள் அனைவரும் ஜூரி அறையிலிருந்து வரிசையாக திரும்பப்போய் அமர்ந்திருந்து, நீதிபதி நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களா என்று முறையாக கேட்டுத் தெரிந்து கொண்டபின் முடிவை அறிவித்தோம். எங்கள் பணி முடிந்தது, எனவே இந்த ஜூரி கலைக்கப்படுகிறது என்று நீதிபதி அறிவித்தபின், திருமதி டேவிட்சனின் வக்கீல் (பெண்) எங்களிடம் வந்து சிறிதுநேரம் பேசிவிட்டு நன்றி சொல்லிவிட்டு சென்றார். குமாரி ஏஞ்சலாவும் அவரது வக்கீலும் (ஆண்) முடிவு அறிவித்தபின் எங்கள் கண்ணில் தட்டுப்படவே இல்லை.

என்னுடன் பணியாற்றிய ஜூரர்களில் வெகுவானவர்கள் கல்லூரி படிப்பெல்லாம் படிக்காதவர்கள். வழக்கில் மருத்துவர்கள் வழங்கிய வாக்கு மூலங்களில் செயல்பாட்டுத் திறன், சோதனை முடிவுகள் போன்ற பல டெக்னிகல் விஷயங்கள் இருந்தாலும், அவை எல்லாம் ஓரளவு பொது அறிவு உள்ள யாராலும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உடைத்துத் தெளிவாக விளக்கப்பட்டன. வாதிடும் வக்கீல்களுக்கு இந்த அமைப்பு அத்துப்படி என்பதால் எவ்வளவு குழப்பமான விஷயங்களாய் இருந்தாலும் கடைசியில் சட்டப்படி இது சரியா தவறா என்று ஜூரி முடிவெடுக்கத் தேவையான வகையில் வாதங்களைச் சமர்ப்பித்து விடுகிறார்கள். வெவ்வேறு பொருளாதார, கல்வி, வேலை, குடும்பச் சூழல்களில் இருந்து வந்தவர்களாய் இருந்தாலும் அத்தனை ஜூரர்களும் ஒரே நியாயமான பார்வையுடன் வழக்கை அணுகியது ஒரு மகிழ்வளிக்கும் விஷயம். ஒரு சில சான்றாயர்களின் அரசியல் பார்வை, துப்பாக்கி வைத்துக்கொள்வது பற்றிய அவர்கள் எண்ணம் போன்ற சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை எனினும், இந்த வழக்கு, எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்கள், நாங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் முதலியவற்றை நாங்கள் அணுகிய அலசிய விதங்களில் எங்களுக்குள் எந்த வேறுபாடும் வரவில்லை.

இது கிரிமினல் வழக்காக இல்லாமல் சிவில் வழக்காக இருந்ததால் ஒருமித்த முடிவுதான் வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை. பன்னிரண்டு பேர் கொண்ட ஜூரியில் பத்து பேர் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தால் போதும். ஆனால் எங்களால் சுலபமாக ஒருமித்த முடிவுக்கு வர முடிந்தது. இந்த வழக்கிலும் ஒன்றிரண்டு ஏழை சான்றாயர்கள், பணம் கொடுப்பதென்னவோ இன்சூரன்ஸ் கம்பனிதானே, எடுத்து விடுகிறேன் ஏஞ்சலாவுக்கு எண்பதாயிரம் டாலர் என்று கிளம்பி இருக்கலாம் அல்லவா? வேறு வழக்குகள் இந்த வழக்கை விடக் கடினமானதாக இருக்கலாம் என்பதென்னவோ உண்மைதான். என் நண்பர்கள் ஜூரர்களாக இருந்த வேறு வழக்குகளில் ஜூரர்களால் ஒத்துப்போக முடியாத, சேர்ந்து சரியான முடிவு தர இயலாத நிலையை அடைந்து நீதிபதி குறுக்கிட்டு வழிநடத்த வேண்டிய தருணங்கள் தோன்றியதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சுத்தமாக ஜூரியால் ஒரு முடிவுக்கும் வரமுடியாவிட்டால் (Hung Jury) நீதிபதி விசாரணை தோல்வியுற்றது என்று அறிவித்துவிடுவார் (Declaration of Mistrial). அதன்பின் அடியிலிருந்து ஆரம்பித்துத் திரும்ப வழக்கைத் தொடங்கலாம் அல்லது இது ஒன்றும் தேறாது என்று விட்டு விடலாம். அது வழக்கைத் தொடுத்தவர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்களின்படி வருடாவருடம் நடைபெறும் ஆயிரக்கணக்கான ஜூரி வழக்குகளில் தொன்னூற்றி நான்கு சதவிகிதம் வரை முடிவுகள் வழங்கப்படுவதாகவும் அதிகபட்சம் ஆறு சதவிகித வழக்குகள் மட்டுமே விசாரணைத் தோல்வியில் முடிவதாகவும் தெரிகிறது.

மூன்று நாட்கள் இப்படிப் பஞ்சாயத்தில் உட்கார்ந்து விவாதங்களைக் கேட்டு நியாயம் சொன்னதற்கு, மொத்தமாக $62 சம்பளப்படி கிடைத்தது. இது காருக்குப் பெட்ரோல் போடவும், மதிய உணவு வாங்கவும் கூட பற்றாது என்றாலும், அடுத்த வருடம் வருமானவரி கட்டும்போது மறக்காமல் இந்த $62 வருவாயையும் மத்திய/மாநில அரசுகளிடம் காண்பித்து சரியாக இதற்கு வரி செலுத்தியாக வேண்டும்!

பின்குறிப்பு:
1957ல் வெளிவந்த 12 Angry Men படத்தை இதுவரை நீங்கள் பார்த்ததில்லையெனில் யூட்யூபில் நிச்சயம் பார்த்து விடுங்கள். படம் பார்க்க விருப்பமில்லை என்றால் குறைந்த பட்சம் இந்த விக்கிபீடியா கட்டுரையையாவது படித்து வையுங்கள்.

0 Replies to “அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்”

 1. ‘Justice Jagannathan’ a Tamil novel by the famous writer ‘Devan’ of Anandavikatan, brought out the role of Jurors in a Trial case before a Sessions Court in a lively way. The selection of Jurors from the cross-section of society , with their individual characteristics and approach to the proceedings during the trial, were dealt quite interestingly and vividly by Devan. The way the Justice Jagannathan, explains the different aspects of the case to the Jurors enabling them to make sense of the trial proceedings and consequential discussion among the Jurors in the Jury room, have been the highlights of the novel. The experience of the author as a Juror in an American Court, very much reminds me of the novel. Many many thanks to him.

 2. அருமையான பதிவு. வாழ்த்துகள். பாராட்டுகள். எனக்கு ஜூரிமுறையை மிகவும் பிடிக்கும். இந்தியாவிலும் கொண்டு வரலாம். ஆனால் நம் சாதி அமைப்பு அதை பாழாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அமெரிக்காவில் எடுத்துள்ள தற்காப்பு வழிமுறைகளுக்கு நிகராக இங்கேயும் செய்ய சாத்தியமா என்று யோசிக்கலாம். ஜூரி முறை இந்தியாவில் அமலில் இருந்த காலத்தைப் பற்றிய சில பதிவுகளை தேவன் எழுதிய நகைச்சுவைப் படைப்புகளில் பார்க்கலாம். – ஞாநி

 3. முதற்கண் இந்தக்கட்டுரையை படித்து வாழ்த்தி இருக்கும் திரு. நடராஜன், திரு. சங்கரநாராயணன், குறிப்பாக மூத்த எழுத்தாளர் திரு. ஞாநி மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  இந்தக்கட்டுரைக்கு மறுவினையாக திரு. ரெக்ஸ் அருள் அனுப்பிய நீண்ட மறுப்பு கட்டுரை சொல்வனத்தில் வெளியாகி இருக்கிறது. அவருடைய முயற்சிக்கு நன்றி. ஆழமான கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் விவாதங்களின் தரத்தை மரியாதையுடன் உயர்த்துவதும் சொல்வனத்தின் முக்கியமான குறிக்கோள்கள். அவர் மறுப்பு மடலும், அதற்கு நான் வழங்கும் இந்த பதிலும் அவருக்கும் சொல்வனம் வாசகர்களுக்கும் இன்னும் சில விஷயங்களை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.
  ரெக்ஸ் அருள் போலவே நானும் வழக்கறிஞர் தொழில் செய்பவன் இல்லை. எனது குறிக்கோள் அமெரிக்க நீதிமன்றம் சம்பந்தமான என் சொந்த அனுபவத்தையும் எண்ணங்களையும் வாசகர்களுடன் ஒரு தரமான கட்டுரை வாயிலாக பகிர்ந்து கொள்வதுதான். நிஜமாகவே தவறுகள் இருக்கும் பட்சத்தில் என் கட்டுரையை திருத்திக்கொள்வதில் எனக்கு பிரச்சினை ஏதும் இல்லை. தவறுகள் இல்லாத பட்சத்தில் பதில் விளக்கம் கொடுப்பதும் அவசியம். எனவே அவர் எழுப்பிய எட்டு மறுப்புகளுக்கும் என்னுடைய பதில்கள் இங்கே.
  1. சிவில் வழக்கு நடக்கும்போது நீதிமன்றத்திற்கு மரியாதை தர தவறுபவர்களை (Contempt of Court) சிறையிலடைக்கும் உரிமை நீதிபதிக்கு உண்டு. அதேபோல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் புறக்கணிக்கும் எவரையும் சிறையிலடைக்கும் உரிமையும் நீதிபதிகளுக்கு உண்டு. நான் கட்டுரையில் சொன்னது சிவில் வழக்குகளில் தரப்படும் தீர்ப்பை குறித்தது. வலைத்தளத்தில் “difference between criminal and civil cases” என்ற சொற்றொடரை உபயோகித்து ஒரு தேடல் தேடினால் நிறைய இதற்கான சான்றாதாரங்கள் வாசகர்களுக்கு கிடைக்கும். ஒரே ஒரு உதாரணம் இந்த வலைப்பக்கத்தின் இரண்டாம் பக்கம் http://www.lawhelp.org/files/1814550B-B14C-5F28-66B9-295AF39C97B1/attachments/EA876BFD-5BBB-4FC6-A603-952438FE8E69/differences-between-criminal-and-civil-court.pdf. இன்னமும் குழப்பம்தான் என்றால், அந்த ஒரு வரியை “சிவில் வழக்கில் தோற்பவர்களுக்கு தீர்ப்பில் சிறை தண்டனையெல்லாம் கொடுப்பதில்லை” என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு மேல் ஒவ்வொரு சூழ்நிலையையும் பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்ந்தால், கட்டுரை ஒரு சட்டப்புத்தகமாகிவிடும்.
  2. மேலே சொன்ன பதில் இதற்கும் பொருந்தும். வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை குற்றவாளி தன்னிச்சையாக புறக்கணித்தால் அது நீதிமன்றத்தை அவமதித்ததாகும் (Contempt of Court). அதற்கு கொடுக்கப்படும் சிறை தண்டனையை சிவில் வழக்கின் தீர்ப்போடு குழப்பிக்கொள்ள வேண்டாம். இதே போல் தப்பி ஓடிவிடும் அபாயம் உள்ள ஒருவரை வழக்கு துவங்கும் வரை ரிமாண்டில் (Remand) வைப்பது (Pretrial Detention) போன்ற விஷயங்களும் ஒரு சிவில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளியை சிறையிலடைப்பதற்கு ஈடாகாது.
  3. கட்டுரையின் இரண்டாவது பத்தியிலேயே ஜூரி முடிவை மட்டும் வழங்க, நீதிபதி தண்டனையை வழங்கும் முறையை பற்றி தெளிவாக எழுதியிருக்கிறேன். 20 வருடங்களுக்கு முன்பு நான் இன்னும் புத்திசாலியாக இருந்திருந்து என் கேள்வியில் “தீர்ப்பு” என்ற வார்த்தைக்கு பதில் “முடிவு” என்ற வார்த்தையை உபயோகித்திருக்கலாம். 🙂
  4. அந்த வாக்கியத்தில் நான் சொல்ல வந்தது ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான ஜூரர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற விஷயத்தைதான் என்பது வாசகர்களுக்கு எளிதாக புரிந்திருக்கும். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
  5. கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஜூரியை வைத்து வழக்கு நடக்க வேண்டுமா வேண்டாமா என்று தானே தேர்ந்தெடுத்து முடிவு செய்யும் உரிமை சட்டத்தில் உண்டு. இன்னும் விளக்கி சொல்லவேண்டுமானால் குற்றம் சுமத்தப்பட்டவர் அந்த உரிமையை விட்டு கொடுக்கவில்லையெனில் ஜூரியை வைத்து வழக்கு நடத்தித்தான் தீர்ப்பு வழங்கியாக வேண்டும் என்று சொல்லலாம்.
  6. அமெரிக்க அரசியல் சாசனம் என்று நான் சுட்டிக்காட்டுவது “Constitution of the United States”. அதே பத்தியிலேயே அதை ஆங்கிலத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். அது Bill of Rights அல்ல. இந்த விக்கிபீடியா இணைப்பு http://en.wikipedia.org/wiki/Article_Three_of_the_United_States_Constitution குழப்பத்தை முற்றிலும் தீர்க்கும் என்று நம்புகிறேன்.
  7. இது உலகில் பல நாடுகளுக்கு பொருந்தலாம். வட கொரியா போன்ற சில நாடுகளுக்கு பொருந்தாமலும் இருக்கலாம். அமெரிக்கவைப் பொறுத்தவரை இதுதான் சட்டம் என்று கட்டுரையில் சொல்லியிருந்தேன். இதில் தவறேதும் இல்லை.
  8. கட்டுரையின் இரண்டாவது பத்தியிலிருந்து தொடங்கி பல இடங்களில் ஜூரி எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை நீதிபதி சொல்லிக்கொடுப்பதைப்பற்றியும், நீதிபதிதான் வழக்கை நடத்துகிறார் என்பதையும், இறுதியில் அவர்தான் தீர்ப்பு, வழக்கு தோல்வி முதலிய விஷயங்களை நிர்ணயித்து அறிவிக்கிறார் என்பதையும் விளக்கி இருக்கிறேன். எனவே வாசகர்களுக்கு குழப்பம் ஏதும் இருக்காது.
  இங்கு வழக்கு முடிந்து ஜூரி கலைக்கப்பட்டபின், அந்த வழக்கைப்பற்றி ஊடகங்களில் அலச ஜூரர்களுக்கு உரிமை உண்டு. அத்தகைய அலசல்கள் ஒழுங்காக நடக்கும்போது, பொதுமக்கள் நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்க முடியும். எனவே இதில் நிச்சயம் தவறேதும் இல்லை.
  மொத்தத்தில் திரு. ரெக்ஸ் அருள் சொல்வதுபோல் கட்டுரையில் மாபெரும் தவறுகளோ அபத்தமான புரிதல்களோ எதுவும் இல்லை. கட்டுரையின் தரத்தை உயர்த்துவது மட்டும்தான் குறிக்கோள் என்றால், ஓரிரு இடங்களில் ஓரிரு சொற்களை மாற்றுவது கட்டுரையை மேலும் சிறப்பிக்கும் என்று மட்டும் சொல்லலாம். மற்றபடி அவர் வழங்கியிருக்கும் ஓரிரு பாராட்டுகளுக்கு நன்றி.
  அன்புடன்
  -சுந்தர் வேதாந்தம்.

 4. சுந்தர் வேதாந்தம் அவர்களே – என்னுடைய மறுவினைக்குத் தங்களின் மறுமறுவினையைப் படித்தேன். மிக்க நன்றி. இந்த உரையாடலை இன்னும் ஓரே ஒரு முறை சற்றுத் தூரம் கொண்டு செல்வது வாசகர்களுக்கும் சரி, நம் இருவருக்குமே பயன் தரும் என்று நம்புகிறேன்.
  ”எனது குறிக்கோள் அமெரிக்க நீதிமன்றம் சம்பந்தமான என் சொந்த அனுபவத்தையும் எண்ணங்களையும் வாசகர்களுடன் ஒரு தரமான கட்டுரை வாயிலாக பகிர்ந்து கொள்வதுதான்.”
  தங்கள் கட்டுரை அந்தக் குறிக்கோளை நிறைவேற்றி இருப்பதாகத் தான் நானும் நினைக்கிறேன். இருந்தாலும், objectiveஆக இருக்க வேண்டிய பல இடங்களில் subjectiveஆக இருப்பது வாசகன் என்ற முறையில் எனக்கு ஒரு சிறு ஏமாற்றம். அதை தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியம். மேலும் பலரும் அப்படி நினைத்தக் காரணத்தினால் தான் பதிலைச் சுட்டவே செய்தேன். அதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்பினேன்.
  சிவில் வழக்குகள் குறித்து உங்கள் மறுமறுவினை எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. “சிவில் வழக்குகளில் சிறைத் தண்டனை இல்லை” என்ற முக்கியக் கருத்தை நீங்கள் வலியுறுத்தி இருந்ததைத் தான் பல நண்பர்கள் என் கவனத்திற்கு ஒரு ஆச்சரியத்தோடு கொண்டு வந்திருந்தார்கள். உங்கள் மறுமறுவினையிலும் நீங்கள் வலைத்தளத்தில் தேடச் சொல்லி அறியச் சொல்கின்றீர்கள்! 🙁 வலைத்தளத்தில் தேடித் தான் சட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அது ஏமாற்றம் அளிக்கும் ஒரு வாதம். நான் வக்கீல் இல்லை என்றாலும், நான் சுட்டி இருந்த மறுவினையை எந்த ஒரு வக்கீலிடமும் கொண்டு சென்று நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம். இதை எதற்கு சொல்கின்றேன் என்றால், ஒரு வாதத்திற்கு மறு வாதம் வைக்கும் போது, அதைச் சீர் தூக்கிச் சரி பார்த்து மறுமறுவினையாக்கினால் அத்தகைய உரையாடல் மூலம் இன்னும் பல நல்ல விசயங்களை அனைவரும் அலசலாம் 🙂
  நீங்கள் சிவில் சட்டத்தில் உள்ள Contempt of Court ஐ எடுத்துக்காட்டாக மறுமறுவினை இட்டு இருக்கின்றீர்கள். “Coercive Incarceration” கேள்விபட்டது உண்டா? அதுவும் சிவில் சட்டம் தான். அன்றாடம் இதே அமெரிக்க நீதிமன்றங்களில் நடக்கும் சிவில் வழக்குகளில் நடைபெறும் விசயம் தான். இதில் எடுத்துக்காட்டாக, “குழந்தைக்கு நீ தொகையைக் கட்டும் வரை சிறையில் அடைக்கப்படவேண்டும்,” அல்லது, “குழந்தையை இந்தக் கோர்ட்டில் கொண்டு வந்து சேர்க்கும் வரை, உன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்” என்பதெல்லாம் coercive incarceration வகையைச் சேர்ந்தவை. This is NOT contempt of court. In other words, it is NOT ex post facto — after the fact. Rather, it is BEFORE even an order goes into a contempt stage.
  ஏன் coercive incarceration?
  ஏனென்றால், “இந்த உத்தரவை செயல்படுத்தும் வரை, உன்னை சிறையில் அடைத்து, செயல்படுத்திய மறு நிமிடமே உன்னை விடுவிக்க நீதிமன்றம் தயார்” என்று coerciveஆக வழக்காடியைத் தூண்டுவதால் அதற்குப் பெயர் — coercive incarceration.
  இப்படி பல சூட்சுமங்கள் சிவில் சட்டத்தில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, please do not generalize என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டியும், வலைத்தளத்தில் தேடிப்பார்த்து புரிந்து கொள்ளச் சொன்னால், யாருக்குக் குழப்பம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் 🙂
  எனவே, மீண்டும் சொல்லியே ஆக வேண்டும்: ”சிவில் குற்றங்களுக்குச் சிறை தண்டனை கிடையாது” என்னும் வாதம் முற்றிலும் தவறான வாதம். It is wholly unsubstantiated against the annals of Civil Law. தனிப்பட்ட வாதமாக இருப்பதால் திருத்திக் கொள்ளாலாமே. 🙂 Immigration Law முதல் Civil Order of Incarceration மற்றும் Coercive Incarceration என்று பலவற்றைச் சுட்டியும் அதை validate செய்யலாமே. சட்டம் அறிந்த வக்கீல்களிடமும் கேட்டுப் பார்க்கலாமே. வலையில் வந்துவிட்டால் அங்கு கருத்துக்களுக்குத் தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும். மறுவினையில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ள என்றும் தயார் நிலையில் இருக்கிறேன் 🙂
  இதற்கு மேல் ஒவ்வொரு சூழ்நிலையையும் பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்ந்தால், கட்டுரை ஒரு சட்டப்புத்தகமாகிவிடும்.
  இல்லைங்க. 🙂 The law itself may be subjective, but, once an opinion is indited about it, it has to be objective. பல்வேறு கோணங்களில் இருந்து ஆராயப்பட்டிருக்கும் உங்கள் கட்டுரையை நீங்களே disown செய்யலாமா? 🙂
  ” அதற்கு கொடுக்கப்படும் சிறை தண்டனையை சிவில் வழக்கின் தீர்ப்போடு குழப்பிக்கொள்ள வேண்டாம்.”
  சிவில் வழக்குகளின் தன்மையின் தவறான புரிதலை அகற்றும் பொருட்டு நான் சுட்டிக்காட்டிய பல சிவில் சட்ட விவரங்களை புறம் தள்ளிவிட்டு, சிவில் சட்டம் என்றாலே contempt என்று சொல்லிவிடுவது தவறு. அதே contempt ல் சிவில் மற்றும் கிரிமினல் என்று இரு வேறு வகையான அணுகுமுறை உண்டு என்பது நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். Still, this has nothing to do with other substantial things I have pointed out — Family Law, Immigration Law, Probate, Civil Order of Incarceration, Coercive Incarceration, to name a few! இவை எல்லாமும் சிவில் சட்டங்கள் தான். இவற்றில் எல்லாம் சிறைத் தண்டனை உண்டு என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறுவதற்கு காரணமே, சொல்வன வாசகர்கள் யாரும் அவ்விதமான ஒரு தவறானப் புரிதலோடு இந்தத் தளத்தை விட்டு சென்று விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான். இந்தியாவிலும் common-law முறை தான். இவ்வலைத் தளத்தை வட கொரிய வாசகர்கள் மட்டும் தான் வாசிப்பார்கள் என்றால் நான் மறுவினை இட்டிருக்க மாட்டேன். Just kidding 😉
  ”என் கேள்வியில் “தீர்ப்பு” என்ற வார்த்தைக்கு பதில் “முடிவு” என்ற வார்த்தையை உபயோகித்திருக்கலாம். ”
  ஆம். மிகச் சரி 🙂 அதை மட்டும் தான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.
  ”வாசகர்களுக்கு எளிதாக புரிந்திருக்கும். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.”
  ட்விட்டரில் என்னிடம் உரையாற்றிய வாசகர்களுக்குப் புரியவில்லை. எனக்கும் கூட. பாராட்டி வரும் கடிதங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கருத்துச் செறிவுடனும், சட்டக் கட்டுரைக்கு சட்டப் பாயிண்டுகளை அடுக்கிக்கொண்டு வந்த ஒரே பின்னூட்டம் + மறுவினை இது மட்டும் தான். 🙂
  ”அமெரிக்க அரசியல் சாசனம் என்று நான் சுட்டிக்காட்டுவது “Constitution of the United States”. அதே பத்தியிலேயே அதை ஆங்கிலத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். அது Bill of Rights அல்ல. இந்த விக்கிபீடியா இணைப்பு http://en.wikipedia.org/wiki/Article_Three_of_the_United_States_Constitution குழப்பத்தை முற்றிலும் தீர்க்கும் என்று நம்புகிறேன்.”
  மிக்க நன்றி.
  ”இது உலகில் பல நாடுகளுக்கு பொருந்தலாம். வட கொரியா போன்ற சில நாடுகளுக்கு பொருந்தாமலும் இருக்கலாம்.”
  Common-Law பின்பற்றப்படும் நாடுகளில் எல்லாம் கிரிமினல் வழக்கு என்றால் அது தான். ”அமெரிக்க சட்ட அமைப்புப்படி,” என்று நீங்கள் கூறியிருப்பதைக் காட்டிலும், “Common-Law சட்ட அமைப்புப்படி,” என்றோ, “அமெரிக்காவில் பின்பற்றப்படும் Common-Law சட்ட அமைப்புப்படி” என்றிருந்தால், பெருமளவு இந்தியாவில் இருந்து படிக்கும் நண்பர்களுக்கும் உடனே இந்திய இ.பி.கோ சட்ட முறை நினைவிற்கு வந்திருக்கும். இதில் இருந்த சிறு தவறைத் தான் சுட்டிக் காட்டினேன். When an article is about Law, it has to be rigorous and meticulous in its treatment of words, phrases, and clauses. “Is”க்கும் “Was”க்கும் அல்லது “normal residence” என்ற சொற்களில் உள்ள “normal” என்றால் என்ன, “residence” என்றால் என்ன என்று எல்லாம் இந்திய உச்ச நீதிமன்றம் யோசித்து, ஆராய்ந்து ஒரு வழக்கின் தீர்ப்பையே மாற்றி அமைக்காது. Moral of the story being, anything that is legal must have more rigor to the details — words and legalisms especially 🙂
  ”கட்டுரையின் தரத்தை உயர்த்துவது மட்டும்தான் குறிக்கோள் என்றால், ஓரிரு இடங்களில் ஓரிரு சொற்களை மாற்றுவது கட்டுரையை மேலும் சிறப்பிக்கும் என்று மட்டும் சொல்லலாம்.”
  என்னுடைய குறிக்கோள் என்ன என்று என்னுடைய மறுவினையின் முதல் மூன்று பத்திகளில் தெளிவாக்கிவிட்டுத் தான் எழுதவே தொடங்கினேன் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மற்றபடி, கட்டுரைக்கு பின்னூட்டமோ மறுவினையோ கட்டுரை ஆசிரியரின் விருப்பத்திற்கு ஏற்ப “….என்று மட்டும் சொல்லலாம் என்று சொல்லி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. When the counterpoints are “argumentum ad rem” — to the point — it cannot be construed as an act of assailing. இல்லையா? 🙂 பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டவும் செய்து இருக்கிறேன். தவறு என்ற இடத்தில், தவறு என்று மட்டும் பொதுவாகச் சொல்லிவிட்டுச் செல்லாமல், சட்டக் கூறுகளை முன் வைத்துத் தான் சொல்லி இருந்தேன். Even casually handled paragraphs invited pointed rebuttal from my end. There is nothing wrong in accommodating alternative opinions and views, if they carry weight and are well-placed in substantial matters of law, facts, and jurisprudence. ஓரிறு பாரட்டுக்களுக்காக பொதுவில் கட்டுரைகள் எழுதப்படுவது இல்லையே.
  Dissent is the essence of democracy. மாற்றுக் கருத்துக்களை வரவேற்போம். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்வோம். இருவருமே 😉 அனைவருமே 🙂
  நல்ல ஒரு கட்டுரையை எழுதி, அதன் மூலம் இப்படியான ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்கு வித்திட்ட உங்களுக்கு என்றும் என்னுடைய நன்றிகள்.
  வாழ்க வளமுடன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.