கவிதைகள்

அஞ்சலி

எம் ராஜா

 
ரதபதாதி சேனைகள்
Post_Box_Mail_India_Dhak_ghar_Empty_Old_Stale_Communication_Delivery_Write_Letterவிரைந்து கடக்கும்
நாற்சந்தி தெருமுனையில்
மின்சாரக் கம்பிகளைத்
தொட்டுரசும் துளிரிலை
கிளைகளுக் கடியில்
கூரியர் கவரோடு
ஜெல்பேனா வாங்கும்
கடை வாசலில்
ஒய்யாரமாய் நின்றுகொண்டு
அலைபேசியில் அரற்றியபடி
உதடுகளூதும் புகையை
கலைக்கிற காற்று
கொண்டு கூட்டும்
புழுதி படிய
தெருப்பெயர் தாங்கும்
வழிகாட்டிப் பலகையருகே
விரிகுடை நிழலில்
துடைத்து அடுக்கிய
பளப்பளா பழங்கள்
விற்கும் வண்டியொட்டி
ஈக்கள் மொய்க்க
படுத்துக் கிடக்கும்
நாயைக் கண்டு
பிளாஸ்டிக் பெட்டிமீது
குந்தி இருக்கும்
குண்டுப் பெண்மணி
கல் பொறுக்க
முன்னால் குனிகையில்
அவள் முதுகுக்குப்
பின்னால் ஒருவேளை
பார்வை போனால்
சிவப்பு வர்ணம்பூசி
தோள்தொட நிற்கும்
எங்களூர்த் தபால்பெட்டி
எவர் பார்வைக்கும்
எளிதில் தட்டுப்படும்.

oOo

தங்கமீனின் உளவியல்

வேணு தயாநிதி

 

பொன்னிறம் மின்னும்
Globe_Gold_Fish_Round_World_Earth_View_Water_Goldfishesதூரிகையை துவழவிட்டு
எப்போதும் உலவிக்கொண்டிருக்கும்
தன் ஜோடியுடன்
எங்கள் வீட்டு தங்கமீன். ஒருநாள்
தொட்டியைவிட்டு தெறித்து
போரிடுவது போல்
துடித்துக்கொண்டிருந்தது
தரை விரிப்பில்.
தொட்டியை பெரிதாக்கி
அதற்கெனெ
இன்னும் இருஜோடி தங்கமீன்கள்
சிறிய பெரிய வண்ணமீன்கள்
தாவரங்கள் குமிழிகள் உணவுகள்
என்னென்னவோ வாங்கினோம்.
தொட்டியை அளப்பதுபோல்
அளைந்து கொண்டிருந்த தங்கமீன்
தன் வளையைவிட்டு வருவதே இல்லை.
இரையை எறிந்ததும்
பாய்ந்து வரும் புதியமீன்கள்.
தாமதித்து வரும் தங்கமீன்
ஒரு பொருக்கைமட்டும் பொறுக்கிவிட்டு
ஓடி ஒளிந்துவிடும்.
கோடை மறைந்து
குளிர்ந்துவிட்ட காலை ஒன்றில்
குழந்தைகள் ஆர்ப்பரிக்க
அதிசயமாய் அவதரித்த தங்கமீன்
ஏதோ சொல்லவருவது போல்
அசைத்துக்கொண்டிருந்தது
வாயை மட்டும்.
தங்கமீனின் எண்ணங்கள்
நாம் எண்ணிவிட இயலாதவை.
தங்கமீன்
என்ன சொல்லுமென
யாருக்குத் தெரியும்?