வைரமணி நீரலைகள்…

“மஸ்தானா மஸ்தானா ” இந்த வாரமும் சூப்பர் ஹிட் முக்காபலா நம்பர் ஒன் போலிருக்கிறது. வீட்டுக்காரர் டிவி கடும் மழை சத்தத்திலும் கேட்டது. என் பைக்கிற்கான இடம் ஜன்னலுக்கு ஒட்டி இருந்ததும் ஒரு காரணம்.

ஆனால் இப்போது அது காலியாக இல்லை. ஒரு கைனடிக் ஹோண்டா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என் பைக்கை பக்கத்தில் மெள்ள சரித்து இடது காலால் தட்டி ஸ்டாண்டைப் போட்டேன்.
அங்கிருந்து வீட்டை ஒட்டி வெளிப்பக்கமாக படிகள் மேலே ஏறின.
முதல் படியில் நின்றுகொண்டு “கன்னி…டேய் கன்னி” என்று மேலே பார்த்து கூப்பிட்டேன். அவனுக்கு கேட்காது என்று தெரியும். இத்தனை மழைச் சத்தத்தில் கால் நீட்டி டீவி பார்த்துக் கொண்டிருக்கும் கன்னியப்பனுக்கு எங்கே கேட்கப் போகிறது? இருந்தும் இன்னொரு முறை சத்தம் போட்டேன். சட்டென அவன் தலை தெரிந்தது.

“என்னா சார்…அங்கயே நின்னுட்டிங்க” என்றவாறே தலை மறைந்தது. பின் குடையுடன் படிகளில் தடதடக்க கீழே வந்தான்.
“என்னா சார், என்னாச்சு?”
“என் வண்டி இடத்துல ஒரு கைனடிக் நிக்…”
“ஆமா சார், நாந்தான் நிறுத்தினன். நம்ம பாக்டரி வண்டிதான் சார். அடையார் டிப்போ கூரியர் ஆபிஸில ஒரு டெலிவரி கொடுக்கணும் போறியான்னு அட்மின்ல கேட்டாங்க. டக்குன்னு எடுத்துட்டு வந்துட்டேன், காலைல கொடுத்துக்கலாம்னு. வண்டி கலர் தெரில?”
“இருட்டுல என்ன தெரியுது?, இப்ப நான் எங்க என் வண்டியை நிறுத்தறது?”
“கொஞ்சம் ஒட்டி நிறுத்துங்க சார், காலைலதான் ரெண்டு வண்டியும் எடுத்துடுவோமே?”
“அது சரி, வீட்டுகாரம்மாக்கு என்ன பதில் சொல்றது? வண்டி இட விஷயத்துல அவங்க எவ்ளோ ஸ்ரிக்ட்டுன்னு உனக்கு தெரியுமில்ல?”

எரிச்சலாக வந்தாலும் மெதுவாகச் சொன்னேன்.
என்னைத்தாண்டி வீட்டைப் பார்த்தான்.
“குடும்பமே சூப்பர் ஹிட் முக்காப்லா பார்த்துகிட்டு இருக்கு, மழை வேற, அவங்க ஒன்னும் பாக்க மாட்டாங்க, மேல வாங்க சார்”
குடையுடன் திரும்ப மேலே போக ஆரம்பித்தான்.
மனமே இல்லாமல் குறுகலான படிகளில் நானும் மேலே ஏறினேன்.

படிகள் முடியும் இடத்திலிருந்து பாத்ரூமும், டாய்லெட்டும் ஓர் ஐந்தடிகள் தள்ளி இருக்கும். அந்த ஐந்தடிகள் இடம்தான் துணிகள் துவைப்பதற்கும் காயப்போடுவதற்கும்.அங்கு இன்னும் ஜாக்கிரதையாக காலை வைக்கவேண்டும்.அதையொட்டிதான் எங்கள் அறைகள்.

தியாகராஜன் சமையலறையிருந்து வெளி வந்தார். தலையில் முண்டாசு ஏறியிருந்தது.
“என்ன சந்திரா, என்ன விஷயம், கொட்ற மழைல கீழே இருந்து கன்னியை கூப்ட?”
விஷயம் சொன்னதும் எதிர்பார்த்தது மாதிரியே “விடு, விடு, என்ன பெருசா கொறைஞ்சிட போறது ஓனருக்கு” என்றபடியே மறுபடியும் உள்ளே போனார்.

bb

நாங்கள் மூவரும் ஒரே பாக்டரியில்தான் வேலை செய்து கொண்டிருந்தோம்.. அவர் ஆர் என்டி என்ஜினியர், நான் புரடொக்ஷனில் க்யூஸி எஞ்னியர். எங்கள் இருவருக்கும் மெட்டீரியல் மேணேஜ்மெண்ட் அஸிஸ்டெண்ட் கன்னியப்பன் தான் இந்த திருவான்மியூர் பூந்துறை வீட்டை அறிமுகப்படுத்தி வைத்தது.

“ஸார், மருந்தீஸ்வரர் கோவிலை ஒட்டின மாதிரி வீடு, பூந்தோட்டம்னு இடத்து பேரு. மாடி போர்ஷன், ரெண்டு ரூம் நமக்கு. கீழ் போர்ஷன்ல வீட்டுக்காரங்க. தியாகு சார். அவுங்க கவுச்சி எல்லாம் சாப்பிடுவாங்க, ஸ்மெல் அடிக்கும் பரவாயில்லையா?”

தியாகராஜன் தலை நிமிர்த்திப் பார்த்தார். அநேகமாக பெரும்பாலோனரை அவர் தலை நிமிர்த்திதான் பார்த்தாகவேண்டும். மிஞ்சிப் போனால் நாலரை அடிதான் இருப்பார். ஓரிரவு நானும் கன்னியப்பனும் உடுப்பியில் நுழைந்து தியாகராஜனைத் தேடினோம். தளத்தின் கடைசி வரிசையில் தியாகராஜன் எங்களை நோக்கி கையசைத்துக் கொண்டிருந்ததை சற்று நேரம் கழித்துதான் கண்டுபிடித்தோம்.

“என்னையா, எவ்வளோ நாழியா கத்திக்கிட்டு கையாட்டிக்கிட்டு இருக்கேன், ரெண்டும் என்னைத் தவிர மத்த எல்லா இடத்தையும் பாத்துக்கிட்டு இருக்கிங்க” படபடத்தார்.

கன்னியப்பன் ” சார், நீங்க உக்காந்துகிட்டே கையாட்னா யாருக்குத் தெரியும்? கொஞ்சம் எந்திரிச்சு கையாட்டினா என்ன, போங்க சார்” என்றான்.

தியாகராஜன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.அவர் நின்றுகொண்டுதான் கையாட்டினார் என்று எனக்குத் தெரியும்.

“குடியிருக்கத்தானே போறோம், சம்பந்தமா பண்ணப்போறோம், அவங்க என்ன சாப்பிட்டா நமக்கு என்ன?”

“இல்ல சார்” கன்னி இழுத்தான்.

“நீங்க பிராமினாச்சேன்னு கன்னி சொல்றான், இல்ல, கன்னி?” என்றேன்.

“பிராமின்னா?”

“இல்ல, உங்க பேச்சு…நாழியாச்சு அப்படின்னெல்லாம் சொல்றிங்கல்ல” கன்னி மறுபடியும் இழுத்தான்.

“யோ, எங்க ஊர் பக்கம் எல்லாருமே நாழியாச்சுன்னுதான் சொல்வாங்க, நல்லா கண்டுபுடிக்கிறயா நீ”
வீடு பார்க்க போகும்போதே வீட்டுக்காரர் கறாராக சொல்லிவிட்டார்.

“தம்பி, நீங்க எல்லாம் என்ஜினியர்ங்கன்னு கன்னி தம்பி சொன்னதாலதான் வீடு தரேன். அக்கம்பக்கத்ல பொம்பளை புள்ளைங்க இருக்கற இடம். பாட்டு பாடறது, விசிலு எதுவும் கூடாது, என்னா?”

வெளியே வந்து திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய மசாலா பால் கடைக்கு முன் நின்று கொண்டிருக்கும் போது “எந்த ஊர்யா இவங்கல்லாம்? தொண்ணூறுல இருக்கோம், இந்தாளு இன்னும் எழுபதுலேயே இருக்காரு?” என்று சிரித்துக்கொண்டேதான் தியாகு சொன்னார்.

“அவங்க ஏதோ சீர்காழி பக்கம் சார்”

“சரி இருக்கட்டும், நமக்கு வேற வேலையில்லையா என்னா, இவங்க தெரு பொண்ணுங்களைப் பார்த்து விசில் அடிக்கதான் இவர் வீட்டுல குடியிருக்க போறமா என்ன?”

கன்னி சற்று நேரம் பேசாமல் அந்த மசாலா பால் அண்டாவையே பார்த்துக்கொண்டு இருந்தான். அண்டா முழுக்க கொப்பளித்து, ஆடைகள் திட்டு திட்டாக நகர்ந்து கொண்டிருந்தன.

“உலக மேப் மாதிரி இருக்கல்ல சார்…நாடு நாடா திட்டு திட்டா”

கன்னி எப்போது எப்படி என்ன சொல்வான் என்றே தெரியாது. ஆரம்பத்தில் அவன் மேல் எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. பேக்டரியில் நிறைய பேர் செஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர்காரர்கள். அவர்களில் ஒருவன். கீழ் விசாரம் என்று நினைக்கிறேன். வந்துகுனு, போய்குனு என்று பேசுவான். வீட்டில் சட்டையைக் கழட்டும்போது பனியனில் ஏராளமான குண்டு துளைகளின் வழியே எலும்புகள் தெரியும். அவ்வளவுதான்.

ஒரு முறை காலை ஏழு மணிக்கு இருவரும் சைதாப்பேட்டை போலிஸ் நிலையத்தை ஒட்டிய ப்ளாட்பாரத்தில் காத்துக்கொண்டிருந்தோம். ஊரிலிருந்து எங்களூர் காரர், அப்பாவின் நண்பரை ஊரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஆயிரம் ஆம்னி பஸ்களில் ஒன்றில் கண்டு பிடிக்கவேண்டும்.

அப்பா முதல் நாளிரவு ஒன்பது மணி ஆக காத்திருந்து எஸ்டீடி பூத்திலிருந்து சொன்ன விஷயம் இது.
நிறுத்தப்படும் ஒவ்வொரு ஆம்னி பஸ் அருகிலும் போய் பார்த்துவிட்டு வருவோம்.

“யப்பா, எப்படி வருது பார் இந்த பஸ், கன்னி…சும்மா ரகளையா வருதுல்ல, ஜல்லிக்கட்டு காளை மாதிரி?”

“அட, யேன் சார், இந்த ஆம்னி பஸ்ஸெல்லாம் பார்க்கச் சொல்ல எனக்கு பாவமாதான் படுது”

“ஏன் கன்னி, இவ்ளோ பரிதாபபடற?”

“ஆமா சார், ராத்திரியெல்லாம் லொங்கு லொங்குன்னு ஓடி வந்து காலைல மவுண்ட் ரோடுல நாக்குல தண்ணி சொட்ட, சொட்ட…பாவமா இல்ல சார்…அங்க பாருங்க, ஒன்னு வருது.. மூச்சு இரைக்கறது இங்க கேக்குது சார்”

“அடப்பாவி, ஒனக்கு மட்டும் எப்படிடா இப்படி வித்யாசமா படுது?”

“ஒரே விஷயம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருமாதிரி படக்கூடாதா சார்?”

“அது சரி, படலாம்டா, படலாம்”

கன்னியப்பனைப் பற்றி ஒரு மாதிரி அபிப்ராயம் வந்தது அன்றுதான்.

இரண்டு அறைகள் கொண்ட மாடி போர்ஷனில் ஓர் அறை சமையலறை என்று வீட்டுக்காரர் சொல்லவில்லை. மீதமிருந்த ஒற்றை அறையில், ஹால் என்றுதான் கன்னி சொல்வான், நாங்கள் மூவரும் படுத்துக்கொள்வதற்கான இடம் தாராளமாக இருந்தது. ஹாலைத்தாண்டிதான் சமையலறைக்குள் நுழைய வேண்டும்.

இங்கிருந்து பதினைந்து இருபது நிமிடங்களில் பெருங்குடி போய்விடலாம். “கற்கண்டு” பாலவாக்கம் தண்ணீர் போன்ற சவுகரியங்களைத் தாண்டி வாடகையும் ஒரு காரணம். மற்றொரு காரணம் தியாகராஜனின் கலர் டெலிவிஷன்.

காலையும் மதியமும் பேக்டரியிலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். வசந்தா அக்கா சமைக்க வரும் முன் இரவு சாப்பாட்டிற்கு மருந்தீஸ்வரர் கோவிலை ஒட்டி பரோட்டா ஸ்டால், ஆவினங்குடி மெஸ், உடுப்பி; இவைகள் எனக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் தியாகராஜனுக்கு அப்படியில்லை. எந்த இடத்திலும் இரு நாட்களுக்கு மேல் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு ஒத்து வரவில்லை.

இதற்கும் கன்னியப்பன்தான் வழி கண்டுபிடித்தான். வசந்தா அக்கா முதல் நாள் மாலை வந்து சமையலறையைப் பார்த்தபோது அய்ய, இங்க நான் சமைக்க மாட்டேன் என்று திரும்பிவிடுவார் என்றுதான் எதிர்பார்த்தோம். அவர் கண்ணாடியைத் மூக்கின் மேலே தள்ளிவிட்டுக்கொண்டு ‘நல்ல வச்சிருக்கிங்க வீட்டை, சமைக்கிற ரூம்லதான் செருப்பை கொட்டி வைப்பிங்களா” என்று சிரித்துக்கொண்டு அரை மணியில் கூட்டிப் பெருக்கி சமையலறையை சமையலறையாக மாற்றிவிட்டார்.

ரேஷன் கடை, பாத்திரக்கடை, கறிக்கடை, துணிக்கடை வாசல்களில் தென்படும் நூற்றுக்கணக்கான மிகச்சாதாரணணிகளில் ஒருவர். துளி சதைகூட இல்லாமல், கொஞ்சம் எலும்புகளின் மேல் தோலும், தோலிற்கு மேல் பழைய சேலையும்…

அந்த மூக்குக்கண்ணாடியை வேண்டுமானால் வித்தியாசம் என்று சொல்லலாம். குரலையும் கூட சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் வராத அடிபம்ப்பை அடிக்கும் போது வரும் சத்தம்தான் நினைவிற்கு வரும்.

வழக்கமாக மாலை ஏழு மணியளவில் மாடி படிகளேறி வருவார். வந்தவுடனே ஒரு முற்றம் மாதிரி இடம் இருக்கும். அதையொட்டி பாத்ரூமும் டாய்லெட்டும். அந்த முற்றத்தில் அதுவரை நாங்கள் துணிகள்தான் துவைத்துக்கொண்டிருந்தோம். வசந்தா அக்கா சமைக்க வந்தவுடன் அங்குதான் பாத்திரங்களை கழுவுவார்.
வரும்போது கையில் பெரிய பையுடன் வருவார். அதில் வழியிலேயே மருந்தீஸ்வரர் கோவில் மார்கெட்டில் மாலை சமையலுக்கான வாங்கின காய்கறிகள் இருக்கும். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சமையல் ஆயத்தங்கள், சத்தங்கள், தும்மல், கடுகு தாளிப்பு வாசனை, புகை என்று எல்லா அறிகுறிகளும் திருவிழா உற்சாகமாக தெரியும்

பின் சமையல் முடிந்ததற்கான அறிகுறியாக குழம்பு, கூட்டு , ரசம் பாத்திரங்களை ஒவ்வொன்றாக ஆவி பூசிய கண்ணாடிகளுடன் வசந்தாக்கா தனது நீண்ட கறுத்த கரங்களால் ஹால் ஷெல்பின் கீழ் அடுக்கி வைப்பார். கைகளின் மறுபக்கம் வெகுநேரம் தண்ணீரில் ஊறி வெளிறிய உள்ளங்கைகள். கடைசியாக வெண் புகையுடன் கூடிய சோறு வடித்த பாத்திரம் வரும். அதுவரை நாங்கள் முடிந்தவரை டீவி திரையிலிருந்து பார்வையை நகர்த்த மாட்டோம். என்னால் சுமாராக நடிக்க முடிந்தது. தியாகராஜன் உணர்ச்சியே இல்லாமல் பிரமாதமாக நடிப்பார். கன்னியப்பன்தான் மட்டமான நடிகன்.

“சாப்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று மறக்காமல் சொல்லிவிட்டு பையுடன் வசந்தா அக்கா திரும்பி போவார். வேறு ஒன்றும் பேச மாட்டார்.

ஒரு முறை வசந்தாக்கா சமையலறையில் மும்முரமாக இருக்க, கன்னியப்பன் ஏதோ புதுப்பட கேஸட் ஒன்றைப் போட்டான்.

சமையல் முடிந்து பாத்திரங்களை ஹாலிற்குள் எடுத்து வைக்கும் போது வசந்தாக்கா தயங்கி நின்று “யார் இதப் பாடினது?” என்று கேட்டார்.

கன்னியப்பன் ஆச்சரியமா திரும்பி “இருங்கா, பாத்து சொல்றேன்” என்று கேசட் பாகஸை பார்த்துவிட்டு “சொர்ணலதாக்கா…என்னா கொரல்…அப்டியே இழுக்குது இல்லக்கா” என்றான்.

வசந்தாக்கா ஒன்றும் சொல்லவில்லை, அவரது கண்ணாடிகள் ஆவி பூசியிருந்ததால் முகத்தில் என்ன நிகழ்ந்திருந்தாலும் தெரியவில்லை. பின் சமையலறையில் நுழைந்து பையை எடுத்துக்கொண்டு படியிறங்கி போய்விட்டார்.

கன்னி “அக்கா, வரதும் தெரியாது, போறதும் தெரியாது, எல்லாம் சுருக்க” என்றான் கன்னி.

“சாரப்பாம்பு மாதிரி சரசரன்னு இப்பிடின்னு திரும்பி பாக்கறதுக்குள்ள ஆள காணோம்யா” என்றார் தியாகராஜன் பதிலுக்கு.

“அதெப்படி சார் ஊருக்கே ஒரு மாதிரின்னா உங்களுக்கு மட்டும் வேற மாதிரி தோணுது?”

“ஏன்யா இருக்கக்கூடாதா, ஒரே விஷயம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தெரியக்கூடாதா என்ன?”
தியாகராஜன் நின்று, நிதானமாக லுங்கியை உதறி மறுபடியும் கட்டிக் கொண்டார்.

பாச்சுலர் வாழ்க்கையில் இரவு சூடான சாப்பாடு என்பது அதுவும் மற்றவர் சமைத்தது என்பது கிட்டதட்ட சொர்க்கத்திற்கு அருகில் என்று சொல்லலாம்.

அந்த மாதிரி சொர்க்கத்திற்குப் பின் டீவியை அளைவோம். அதாவது தியாகராஜன், டீவி ஓனர் தியாகராஜன் பீச் மணலை கையில் தூக்கி அளைவது போல சேனல்களை அளைவார். நானும் கன்னியும் பார்த்துக்கொண்டிருப்போம்.

காய்ச்சலில் விழுந்த வாரத்தின் அடுத்த வார இரவில் அப்படித்தான் அலைந்துகொண்டிருந்தோம்.
“தியாகு ஸார், இன்னிக்கு நைட் வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் இருக்கு,” என்று இழுத்தேன்.

“ஆ, சூப்பர், பாக்கலாம்யா, ராத்திரி மாட்ச் பாக்கறதே ஒரு சுகம்தான், இல்ல?” என்றார் தியாகராஜன்.
சொன்னது போலவே சரியாக மேட்சின் போது சானலை மாற்றினாலும் ஒவ்வொரு ஓவர் இடைவெளியிலும் மிட் நைட் மசாலா சேனலுக்கு திரும்பிவிடுவார். பாடலைப் பொறுத்தது கிரிக்கெட் சேனலுக்கு திரும்புவதும் திரும்பாததும்.

அந்த மாதிரி ஓர் இரவில்தான் டீவி திரையையே பார்த்துக்கொண்டு “சந்திரா, எனக்கு ஒரு சந்தேகம் கொஞ்ச நாளா” என்றார் தியாகராஜன்.

“என்ன ஸார்?”

“ம்…ரெண்டு நாள் போட்டும், சொல்றன்” வேறு ஒன்றும் சொல்லவில்லை.

எங்கள் பேச்சும் அம்புரோஸ் கையில் கிரிக்கெட் பால் எலுமிச்சம் பழம் அடக்கம் என்று கிரிக்கெட் பக்கம் போய்விட்டது.

அடுத்த நாள் காலையில் குளித்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டே “ராத்திரி, என்னையா ஒரே மணிச்சத்தம், ஒரு மாதிரி கிணு கிணுன்னு…செம கிக்கா இருந்திச்சு?”

நான் “எனக்கும் கேட்டுது, மணிச்சத்தம், தொட்டில் மேல கட்டியிருப்பாங்களே அந்த கிணுகிணுச்சத்தம்”

“அட, ஆமாய்யா, ஓனர் வீட்டுக்கு உறம்பரை வந்திருக்காப்போல. வீட்டுக்குள்ள தொட்டில் பார்த்தேனே?”

கன்னி “எனக்கு எங்க ஊர் ஞாபகம் வந்துடுச்சு சார், ராத்திரி எங்க ஊர்ல வண்டி கட்டிகிட்டு நைட் ஷோ போவோம். போவும்போது அண்ணே, அண்ணே சிப்பாயண்ணேன்னு பாட்டு பாடிக்கிட்டே ஜாலியா போவோம். திரும்ப வரும்போது அறகொற தூக்கத்துல மாடு கழுத்து மணிச்சத்தமும் கேட்டுக்கிட்டே இருக்கும். இதே சத்தம்தான் சார்…”

முதுகு காட்டி பிரஷ்ஷில் பேஸ்ட்டை பிதுக்கிக்கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து “ராத்திரி பூரா ஊர்லதான் இருந்தேன் சார்…”

திரும்பிப் பார்த்தேன். அகலமான முதுகில் பெரும் இறக்கைகள் ஆரம்பிப்பதுபோல தான் தோளெலும்புகள் இருந்தன.

“பாருங்க, நமக்கு ஒன்னு தோணுதுன்னா, கன்னிக்கு மட்டும் வேற மாதிரிதான் தோணுது” என்றார் தியாகராஜன்.

அன்று மாலை வசந்தா அக்கா சமைத்து முடித்துவிட்டு “சுருக்குன்னு இருக்கும்னு நினைக்கிறன், சாப்பிட்டு சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். அந்த தேய்ந்த ப்ளாஸ்டிக் செருப்புகளின் சத்தம், ஒவ்வொரு படியாக இறங்கி மறைந்தவுடன்

தியாகராஜன் “ஒரு விஷயம் பேசணுமே?” என்றார். முகம் கடுகடுவென இருந்தது.

“சொல்லுங்க சார்” என்றேன்.

“கன்னி?” என்று ஒரு சத்தம் போட்டார்.

“என்னா சார்? துணி தொவச்சிக்கிட்டு இருக்கேன்” என்று சத்தம் மட்டும் வந்தது.

“கைய கழுவிட்டு இங்க கொஞ்சம் வாயேன்” என்றார் தியாகு.

சற்று நேரம் கழித்து மருதாணி வைத்தது போல இரு கைகளையும் சற்றே விரித்துக்கொண்டு கன்னி வந்தான்.
“கைய கழுவிட்டு வந்த, தொடச்சிட்டு வரக்கூடாதா, ஹாலெல்லாம் சொட்டச் சொட்ட?” என்றேன்.

தியாகராஜன் அதைக் கவனிக்காமல் “அந்தம்மா டெய்லி ஒரு பை கொண்டு வந்து எடுத்துட்டு போகுதே, அதுல என்ன இருக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

“என்னா, காய்கறி வாங்கிட்டு வரும். திரும்ப போகும்போது காய்கறி குப்பை அல்லது முதல் நாள் மீந்தது மாதிரி எதனா எடுத்துட்டு போகும், ஏன் சார்?” என்று அவரையே பார்த்தான்.

தியாகராஜன், கடுகடுத்த குரலில் ” அந்த பைல ஒரு பெரிய தூக்கு போணி இருக்கு டெய்லி என்ன கறி பண்ணுதோ அதுல கொஞ்சம் அந்த தூக்குல போட்டுக்குது” என்றார்.

“என்னது?” என்று கன்னி ஆரம்பிக்கும்முன் தியாகராஜன் கை காட்டி.

“இன்னிக்கு நான் டெஸ்ட் பண்ணினேன். அந்தக்கா வெளியே பாத்திரம் கழுவிக்கிட்டு இருக்கும் போது நான் பையைத் திறந்து பார்த்தேன்- மூணு கரண்டி சேப்பங்கிழங்கு வறுவல் இருந்தது” என்றார் தியாகராஜன்.

கன்னியும் நானும் தியாகராஜனைப் பார்த்தோம்.

“என்ன சார் சொல்றிங்க?” என்று புருவங்களைச் சற்றே சுருக்கிகொண்டு கன்னி கேட்டான்.

“ஆமாயா, இன்னிக்குச் சமையல் சேப்பங்கிழங்கு வருவல்தானே. சமைச்சதில தனக்கும் ரெண்டு கை அந்தக்கா எடுத்துக்கிச்சு..”

சற்று நேரம் மவுனமாக இருந்தோம். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“இன்னிக்கு சொல்லாம இதை எடுத்து போணில போடுது, நாளைக்கு இன்னும் என்னென்ன எடுக்குமோ, கை நீளம்னா எவ்வளவு வேணாலும் நீளும், இல்லையா”

“சார், ஏன் சார், என்னன்னல்லாமோ சொல்றிங்க” என்றான் கன்னி மெல்லிய அவநம்பிக்கையான குரலில்.

“ஆமாயா, இன்னிக்கு மட்டுமல்ல, நானும் கொஞ்ச நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். அன்னனிக்கு என்ன சமையலோ அது அந்தக்கா போணில இருக்கு. நம்ம கிட்ட சொல்லணுமா வேண்டாமா?”

“நீங்க தெனம் பாக்கிறிங்களா அந்தக்கா போணிய?”

“ஆமா, இப்பென்ன அதுக்கு? சமையலை முடிச்சிட்டு அந்தக்கா பாத்திரம் கழுவப்போகும்போது நைசா போணிய திறந்து பார்ப்பேன். கொஞ்சமல்லாம் இல்ல, நிறையவே எடுத்துக்கும். நாமதான் சம்பளம் கொடுக்கிறமல்ல, அப்பறம் ஏன் இந்த திருட்டு வேலை இந்த அக்காவுக்கு?”

“அதுவும் எவ்வளோ கறாரா பேசிக்கிச்சு, வேலைக்கு வர முன்னாடி?”

“அந்தக்கா புள்ளைக்கா இருக்கும்னு நினைக்கிறேன்?” என்று மறுபடியும் முணுமுணுப்பாக வேறெங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் கன்னி.

“யாருக்கு இருந்தா என்னா? எடுக்க கூடாதில்லையா? அப்புறம் எப்படி நம்பிக்கை வரும் அந்தம்மா மேல?”

“நாளைக்கு ஒரு காரியம் பண்றன் பார்” என்று சொல்லிவிட்டு தியாகராஜன் நகர்ந்துவிட்டார். கன்னியைச் சுற்றி தண்ணீர் வளையம் இருந்தது.

அன்றிரவு சாப்பிடும்போது சேப்பங்கிழங்கு வருவல் மிக ருசியாக இருந்தது. நான் எதுவும் சொல்லவில்லை.
சொன்னால் “இருக்காதா பின்ன? யாரும் தனக்குன்னா ஸ்பெஷலாத்தானே பண்ணுவாங்க?” என்பார் தியாகராஜன்.

நள்ளிரவில் மேட்ச், மழையோ, வெளிச்சமின்மை காரணமாகவோ ஆரம்பிக்கவில்லை. இருந்தும் மூவரும் குப்புற படுத்தவாறே டீவி திரையை வெறித்துக்கொண்டிருந்தோம்.

“நாளைக்கு என்னா சார் பண்ணப்போறிங்க?”

“நாளைக்குப் பாரு”

வழக்கமாக பாக்டரியிலிருந்து நானும் கன்னியும்தான் எனது பைக்கில் வீட்டிற்கு திரும்புவோம். தியாகு ஆரெண்டி என்பதால் வீடு திரும்பும் நேரம் முன்ன பின்ன ஆகும்.

நான் நொண்டி கொண்டிருப்பதால் கன்னிதான் அந்த வாரம் பைக் ஓட்டிக்கொண்டிருந்தான். அடுத்த நாள் பாக்டரி டென்ஷனில் இதை மறந்தேவிட்டேன். மாலை எஸ்ஆர்பி டூல்ஸ் ஸ்டாப்பிங் அருகே வரும்போதுதான் கன்னி
“தியாகு சார், இன்னிக்கு என்ன பண்ணப்போறாரோ, நம்ம ஆளு விவகாரமான ஆளு” என்றான்.

“அட, ஆமா கன்னி, மறந்தே போய்ட்டேன். பாக்கலாம் நம்ம ஆளு என்ன பண்றாருன்னு…போணில அந்தக்கா போடும்போது கரக்டா கைய புடிச்சிடுவாரோ”

“அய்யோ…அந்தக்கா இன்னிக்கு லீவு போடாதான்னு இருக்கு”

வசந்தாக்கா லீவெல்லாம் போடவில்லை. கன்னி பைக்கை பின் இருக்கை கைப்பிடியை சிரமப்பட்டு இழுத்து ஸ்டாண்ட் போடுகையில் நான் மெல்ல மாடி படி ஏற ஆரம்பித்தேன். உச்சியில் வசந்தக்கா தோன்றியதைக் கண்டு திரும்பினேன்.

“வா சந்திரா, வா பாவம், கஷ்டப்பட்டுதானே ஏறணும்?” என்றார் வசந்தாக்கா.

நான் பதில் சொல்லாமல் திரும்பிவிட்டேன்.

வசந்தக்கா கிட்டத்தட்ட மாடி கைப்பிடிகளில் சறுக்கியது போல விருவிருவென இறங்கி வந்தார்
ரோஜா கலரில் பெரிய பெரிய பூக்கள் போட்ட ஸாரியில் முகம் பளிச்சென இருந்தது. மாலைதான் குளித்திருக்கவேண்டும்.

“காய் வாங்கப்போறேன், எதுனா ஸ்பெசலா வேணுமா?” என்று கேட்டவாறே பதிலுக்கு காத்திராமல் வசந்தக்கா நகர்ந்தார். கொஞ்ச தூரம் போனபின் ஏதாவது பாட்டு கூட ஹம் செய்திருக்கலாம்.

நாங்களிருவரும் மேலே வந்தபோது தியாகராஜன், திருட்டு மார்க்ஷீட்டை கண்டுபிடிக்கப்போகிற அப்பா மாதிரியான திருப்தியான முகத்துடன் தயாராக இருந்தார். மதிய உணவு பையை கீழே வைக்காமல்,
கன்னி “என்ன சார் பண்ணப்போறிங்க?” என்று அவரிடம் சென்றான்.

தியாகராஜன் “அந்தக்கா சமையலை முடிச்சிட்டு பாத்திரங்களையெல்லம் கழுவ எடுத்துட்டு போகும்போது கவனி ” என்றார் குறும்பாக.

சற்று நேரத்தில் வசந்தக்கா மேலே ஏறி வரும் ப்ளாஸ்டிக் செருப்புச் சத்தம் கேட்டது.

“மார்கெட்ல இன்னிக்கு ஒன்னும் ப்ரசா இல்ல, பாவக்கா வறுக்கட்டா? அல்லது முருங்க கீர வறுக்கட்டா?” என்று கேட்டார்

தியாகராஜன் “உங்களுக்கு எது இஷ்டமோ அதே” என்றார் , புன்னகைத்துக் கொண்டே.

“முருங்க கீரைய நெய்யில வறுக்கறன். சுடு சாப்பாட்டுல போட்டு சாப்பிட நல்லா இருக்கும். கூட புளி குழம்பு, ரசம், அப்பளம், சரியா?” என்று வசந்தக்கா சட்டென சமையலறையில் மறைந்தார்.

கன்னி அவன் பெட்டியை திறந்து தலையை உள்ளே விட்டு ஏதோ குழப்பிக்கொண்டே இருந்தான்.
நான் கேஸட்களை எடுத்து அட்டையில் பெயர்களைக் கிறுக்கி அடுக்க ஆரம்பித்தேன்.

தியாகராஜன் தோளில் துண்டுடன் வீட்டு பொது கணக்கு நோட்டை எடுத்து விரித்துக் கொண்டு அமர்ந்துகொண்டார்.

இன்று பார்த்து வசந்தாக்கா சமையலை முடிக்க வெகு நேரம் எடுத்துக்கொண்டது போல இருந்தது.
முதலில் பருப்பு வேகும் வாசனை, குக்கர் விசில், பின் வெங்காயம் வறுபடும் வாசனை, முருங்க இலை நெய்யில் வறுபடும் வாசனை, சற்று நேரம் கழித்து சாம்பார் கொதிக்கும் சத்தமுடன் சாதம் வேகும் வாசனை என்று சமையல் மெல்ல, மெல்ல விடிந்து உச்சி வேளையாக வசந்தாக்கா பாத்திரங்களை ஷெல்பின் அடியில் அடுக்க ஆரம்பித்தார்.

நாங்கள் எங்களது நிலைகளிலிருந்து அசையவில்லை.வசந்தாக்கா இரண்டே நடைகளில் எல்லா பாத்திரங்களையும் கழுவ நடைமேடைக்கு எடுத்துப் போனார்.

நான் இப்போது தன்னிச்சையாக தியாகராஜனைப் பார்த்தேன். தோள் துண்டை கொடியில் போட்டுவிட்டு சமையலறையில் நுழைந்து மறைந்தார். பின் உடனே தலையை மட்டும் நீட்டி என்னை அழைப்பதைப் போல் அசைத்தார். நான் சற்றுத் தயக்கமாக சமையலறையில் நுழைந்து என்ன என்று அவரைப் பார்த்தேன்.
அவர் ஒன்றும் பேசாமல் வசந்தாக்காவின் போணியை காட்டினார். அதன் மூடியை அவர் ஏற்கனவே திறந்திருந்தார். உள்ளே சூடான, கருமையாக, நெய் வாசனையில் வறுத்த முருங்கை இலைகள்.
சொன்னேன்ல பாத்தியா என்பது போல் வெற்றி புன்னகையுடன் என்னைப் பார்த்த தியாகராஜன் ஒரு காரியம் செய்தார்.

எங்களுக்காக கீரை வைத்திருந்த பாத்திரத்தைத் தேடினார். இரு பாத்திர மூடிகளைத் திறந்து பார்த்து மூன்றாவதில் கண்டுபிடித்து அந்த போணியில் இருந்த கீரையை அப்படியே அந்த பாத்திரத்தில் கொட்டி விட்டார்.
போணிக்குள் கையை விட்டு ஒட்டியிருந்த கீரைத் துகள்களையும் விடாமல் அந்த பாத்திரத்தில் தட்டிவிட்டார்.
பின் என்னைப் பார்த்து குறும்பான பார்வையுடன் பார்த்து கட்டை விரலைக் காட்டினார்.
பின் போணியை மூடி துணிப்பையில் மூடிவைத்துவிட்டு பின் ஹாலுக்குத் திரும்பிவிட்டார்.
நானும் ஹாலுக்குள் வந்து ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு சுவறில் சாய்ந்துகொண்டேன்.
நடை மேடையில் வசந்தாக்கா முதுகு அசைந்துகொண்டிருந்தது தெரிந்தது. மெல்லிய பாட்டுச் சத்தமும் கேட்டது.

சற்று நேரம் கழித்து வசந்தாக்கா ஹாலுக்குள் வந்தார். “பாத்திரமெல்லாம் கவுத்தி போட்ருக்கேன், தண்ணி வடிஞ்சதும் மறக்காம உள்ளே எடுத்து வச்சிடுங்க” என்று வழக்கமாக சொல்வதை சொல்லிக்கொண்டே சமையலறையின் உள் போனார்.

வழக்கமாக சமையலறைக்கு உள்ளே போனதும் பையை எடுத்துக்கொண்டு உடனே வெளியே கிளம்பிவிடுபவர் இன்று அப்படி வரவில்லை. போணி உருட்டும் சத்தம் மட்டும் மிக மெல்லியதாக கேட்டது.
அதுவும் எனது கவனம் முழுக்க சமையலறையில் இருந்ததால்தான் கேட்டது என்று நினைக்கிறேன்.
சற்று நேரம் கழித்து வசந்தாக்கா சமையலறையை விட்டு வெளியே வந்தார்.

அந்த சற்று நேரமே தாங்க முடியவில்லை. வசந்தாக்காவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே முடியாது, ஓரக்கண்ணால்தான் பார்ப்பேன் என்று நினைத்திருந்தேன்.

இல்லை, என்னையறியாமல் அந்தக்காவின் முகத்தை நன்றாகவே பார்த்தேன்.
தியாகராஜனும் கன்னியும் கூட ஆளுக்கொரு மூலையின் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வசந்தாக்கா பேச்சை ஆரம்பிக்க தியாகராஜன் தயாராக இருந்தார்..

வசந்தாக்காவின் முகத்தில் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. முகம் சற்று கோணியிருந்தது.மூக்கை சற்றே செருமியது. ஒரு கணம் ஹாலில் தயங்கினது போல் இருந்தது.

மறுகணம் கிளம்பிவிட்டார். ப்ளாஸ்டிக் செருப்புச் சத்தம் மெதுவாகவே மறைந்து போனது.
மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். கன்னியின் முகம்தான் பார்க்கச் சகிக்கவில்லை. அழுதுவிடுவான் போலிருந்தான்.

தியாகராஜனின் முகம் சற்று குழப்பமாக இருந்தது. லேசாக மீசையை முறுக்கியபடி “போணியை தெறந்து பாத்துடுச்சி. எனக்கு கண்டிப்பா தெரியும்” என்றார்.

“ஏதாவது கேக்கும், வச்சி வாங்கு வாங்குன்னு வாங்கலாம்னு இருந்தேன், ஓடிடிச்சே” என்று சொல்லிக்கொண்டே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார்.

சற்று நேரம் கழித்து “சரி சாப்பிடலாமா? என்று கேட்டார். இரண்டு மூன்று முறை கன்னியை சாப்பிட அழைக்க வேண்டியிருந்தது.

ஒன்றுமே நடக்காதது போல் மூவரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் சோறு போட மற்றவர் காத்திருந்து பின் சாப்பிட ஆரம்பித்தோம். வழக்கமாக “சார், ஸ்டார் மூவிஸ் வைங்க சார், என்னன்னு பார்ப்போம் “என்பது போல கன்னி ஏதாவது சொல்வான். அன்று ஒன்றுமே சொல்லவில்லை.

நெய்யில் வறுத்த முருங்கை கீரை சுடு சாதத்தில் நெய்யுடன் போட்டுச் சாப்பிட அற்புதமாக இருந்தது. சாப்பிட்டு முடித்து அடுத்த நாளுக்காக ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் சட்டைகளை அயர்ன் செய்ய ஆரம்பித்தோம்.
திடுமென ஏராளமானவர்கள் எங்கள் வீட்டுக்கூரையில் குதித்து படபடவென தட்டுவது போல் சத்தம். அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். முற்றத்தில் யாரோ பக்கெட் பக்கெட்டாக மொட்டை மாடியிலிருந்து தண்ணீர் விசிறி அடித்தது போல் கொட்டியது..

அவசர அவசரமாக சன்னல்களை மூட ஆரம்பித்தேன்.

எப்போதும் போல் தியாகராஜன் கடைசியாக அயர்ன் முடித்துவிட்டு படுக்கைகளை விரித்து ஒருக்களித்து தலைக்கு கையை முட்டுக்கொடுத்து டீவியைப் பார்த்திருக்க, நான் மல்லாந்து கால் மேல் கால் போட்டபடி டீவியை வெறிக்க ஆரம்பித்த போது

“சார், காலை கொஞ்சம் நகத்திக்கங்க சார், சாக்ஸ் ஸ்மெல்” என்றபடி கன்னியும் வந்து அவனது படுக்கையில் அமர்ந்தான்.

டீவி ஓடிக்கொண்டிருந்தது. சற்று நேரம் கழித்து கன்னி “ரொம்ப கஷ்டமா இருக்கு சார்” என்று ஆரம்பித்தான்.
தியாகராஜன் டீவியை ம்யூட் செய்துவிட்டு “என்ன பெரிய கஷ்டமா இருக்கு, என்னமோ நாம தப்பு பண்ணின மாதிரி” என்றார்.

“யாருக்குய்யா இவ்வள தூக்கிட்டு போகுது அந்தக்கா. ஒத்த புள்ளைக்குதானே. இன்னும் எத்தன இந்த மாதிரி தூக்கிட்டு போயிட்டிருக்குதோ என்னவோ”

நான் “அந்தக்கா நாளைக்கு வரும்னு நினைக்கறயா கன்னி?” என்று கேட்டேன்.

“தெரில சார்…”

அடுத்த நாள் மாலையை நினைக்கவே பிடிக்கவில்லை.

சற்று நேரம் மௌனமாகவே போனது. மழை சுத்தமாக விட்டுவிட்டிருந்தது. பக்கத்து மரங்களிலிருந்து சொட்டும் ஒற்றைச் சத்தம் தெளிவாக கேட்டது, கூடவே தொட்டில் மணிச்சத்தமும் கேட்டது.
“அக்கறையா சமைக்கிறாங்க, கொஞ்சம் கூட வீட்டுக்கு எடுத்துட்டு போனா என்ன, குறைஞ்சா போயிடுவோம்” என்று முணுமுணுத்தான்.

இரவு நீண்டு கொண்டே போனது.

நான் எப்போது நன்றாக சாய்ந்து படுத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. என்னுள் ஒவ்வொரு விளக்காக அணைந்துகொண்டேவருவதை உணர்ந்தேன். தியாகராஜன் “திருட்டை கண்டுபிடிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சும் ஒரு சாரி கேட்கல, பம்மலை, என்னா நெஞ்சழுத்தம் பாரு” சொன்னது காதில் விழுந்தது.

கடைசி முகப்பு விளக்கு அணைவது வரை தொட்டில் மணிச்சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.

***

0 Replies to “வைரமணி நீரலைகள்…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.