திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி

புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் மலையக்கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிற்குடைவரையின் கிழக்கு நோக்கிய நுழைவாயிலையொட்டி, தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே செவ்வக வடிவில் கட்டம் கட்டி, பல்லவ கிரந்த எழுத்துகளில் “பரிவாதிநிதா” எனப் பெரிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே, சிறிய வடிவில் பல்லவ கிரந்தத்திலும், தமிழிலும்

” என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற் [க] “

என்றும், அதனையடுத்துத் தமிழில் சற்றே பெரிய வடிவில்

“கற்கப்படுவது காரண
ஞ்சொல்லிய் புகிற்பர்க்கும் திமி
ழக் கந்திருவத்துக்கும் உரித்து”

என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தமைதி கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரியது. மெய்யெழுத்துகள் புள்ளியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகள், Inscriptions of the Pudukkottai State நூலில் 3, 4 எண்கள் இடப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.

“பரிவாதிநிதா”
“குணஸேண ப்ரமாணஞ்
செய்த வித்யா பரிவாதிநிகற்
கற்பிக்கப்படுவது காண்
ஞ் சொல்லிய புகிற்பருக்கும் நிமி
முக்கந் நிருவத்துக்கும் உரித்து”

என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.

South Indian Inscriptions தொகுதி 12 இல் இக்கல்வெட்டு திருமெய்யம் சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோயிலில் பொறிக்கப்பட்டிருப்பதாக 7A என்று எண்ணிடப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

”பரிவாதிநிதா”
“என்னை ப்ரமாணஞ்
செய்த வித்யா பரிவாதிநிகற்”
“கற்கப்படுவது காரண
ஞ்சொல்லிய புகிற்பருக்கும் திமி
முக்கட் திருவத்துக்கும் உரித்து”

என்று பதிக்கப்பட்டுள்ளது. (இதே கல்வெட்டு வாசகங்கள் சில மாற்றங்களுடன் திருமெய்யத்தில் பொறிக்கப்பட்டுச் சில பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளமையால், முழுமையான இக்கல்வெட்டுப் படியும் திருமெய்யத்துக்குரியதே என்ற குழப்பம் விளைந்தது போகும்.)

திருச்சிராப்பள்ளி இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் வெளியிடப்படுகிற “வரலாறு” ஆய்விதழ்-11 ஆம் இதழில் (ஆண்டு – 2001) ”மலையக் கோயில் குடை வரைகளும் கல்வெட்டுகளும்” என்ற கட்டுரை மு.நளினி, இரா. கலைக்கோவன் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரையில்,

பரிவாதிநிதா
என்னே ப்ரமாணஞ்
செய்த வித்யா பரிவாதிநி கற்[க]
கற்கப்படுவது காண்
ஞ் சொல்லிய புகிற்பருக்கும் திமி
முக்கட் நிருவத்துக்கும் உரித்து

என்று இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் நூற்றாண்டு எனக் காலமும் கணித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. 4ஆம் வரியில் இடம் பெற்றுள்ள ‘காண்’ என்பதைக் ‘கரண’ என்றும் படிக்கலாம் என இக்கட்டுரைக்கான அடிக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.

2a copy

இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ள ‘பரிவாதிநிதா’ என்பது ஒரு வீணையின் பெயராகும். ‘என்னே’ அல்லது ‘என்னை’ என்பது தமிழிலக்கிய இலக்கண உரையாசிரியர்கள் தமது உரையினூடே பயன்படுத்துகிற சொல்லாகும். ”என்னை?” என்பது மாணாக்கர்களைப் பார்த்து “விளங்குகிறதா? மேலும் தெளிவுபடுத்த முயல்கிறேன்.” என ஆசிரியர் கூறுவது போன்ற தொனியுடைய வினாவாகும். ‘ப்ரமாணஞ் செய்த வித்யா பரிவாதிநி கற்[க]’ என்பது ‘வித்யா பரிவாதிநி என்ற வீணையிசை கற்பதற்குரிய விதி” எனப் பொருள்படும்.

“கற்கப்படுவது காரணஞ் சொல்லிய் (அல்லது கரணஞ் சொல்லிய்) புகிற்பர்க்கும் திமிழக் கந்திருவத்துக்கும் உரித்து” என்பது நான் படித்துள்ள வாசகம். “கற்கப்படுவது காண்” எனப் படிக்கப்பட்டுள்ளது தவறாகும். “ர” என்ற எழுத்து தனித்துத் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. [2] “சொல்லிய” எனப் படிப்பதை விட, “சொல்லிய்” எனப் படிப்பதே சரியாகும். (யகர் மெய் புள்ளியிட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.) “புகிற்பருக்கும்” எனப் படிக்கப்பட்டிருப்பது பொருள் வேறுபாட்டைத் தோற்றுவிக்கவில்லையெனினும் “புகிற்பர்க்கும்” என்ற வடிவமே கல்வெட்டில் உள்ளது. “திமிழக் கதிருவத்துக்கும்” என்று என்னால் படிக்கப்பட்டுள்ள வாசகத்தில் “ந்’ என்ற வடிவம் வட்டெழுத்துச் சாயலைப் பெற்றுள்ளது. [3]

“கரணஞ் சொல்லிய்புகிற்பர்” என்பது இசைக்கருவிகளை இயக்குதற்குச் சொல்லிக் கொடுப்பவர்கள் என்று பொருள்படக் கூடும். கரணம் என்பது கருவி எனப் பொருள்படுமெனத் திவாகர நிகண்டால் அறிய முடிகிறது.[4] கரணம் என்பதில் உள்ள ந் கர வரி வடிவம், மகேந்திர பல்லவனின் வல்லம் குடைவரைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள “குணபரன்” என்ற சொல்லிலும், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மனின் கிரந்தக் கல்வெட்டிலுள்ள “ஜயதேரணபீமோ” என்ற வாசகத்திலும் இடம் பெறுகிற ”ண”கர வரி வடிவம், மகேந்திர பல்லவனின் வல்லம் குடைவரைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள “குணபரன்” என்ற சொல்லிலும் இடம் பெறுகிற ‘ண’கர வரிவடிவத்த்டைப் பெரிதும் ஒத்துள்ளது. [5] ’சொல்லிய்’’ என யகர ம்ய் சேர்த்து எழுதுவது கல்வெட்டு எழுத்தில் இயல்பானதே.

‘புகிற்பர்’ என்ற சொல் ஆழமாக ஆராயத் தக்கது. ‘புகல்’ என்ற தன்வினைச் சொல்லின் பிறவினை வடிவமாகக் கொள்ளுதற்குரிய புகற்று, புகல்வி என்ற சொற்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய வினையாலணையும் பெயர் இது எனத் தோன்றுகிறது. புகற்றுவார், புகல்விப் பார் என்பது புகிற்பார் என்றும் புகிற்பர் என்றும் மருவியிருக்க வாய்ப்புள்ளது. “புகல்” என்பது இசை தொடர்பான சொல்லாட்சியாகும். “புரிநரம்பு இரங்கின புகன்ற தீங்குழல்” எனச் சீவக சிந்தாமணி (பா.1940) கூறும். பெரிய புராணம் ஆனாய நாயனார் புராணத்தில் (பா. 26) “ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகையெடுத்து” என்ற வரி இடம் பெறுகிறது. நான்கு வகைப் புகல்வுகள் என்பன ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனை ஆகியன என்று இசை வல்லுநர்கள் கருதுகின்றனர். [6] எனவே “புகிற்பர்” என்பது -கரணஞ் சொல்லிப் புகிற்பர் என்பது- இசைக் கருவிகளை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பவர்களை- பாடம் புகட்டுவோரைக் குறிக்கக் கூடும்.

இனி, திமிழக் கந்திருவம் என்ற தொடர் குறித்து ஆராய்வோம். கந்தர்வம் என்ற சொல்லே கந்திருவம் என எழுதப்பட்டுள்ளது. கந்தர்வம் என்பது கந்தர்வ வேதம் என்றே வழங்கும். இது இசையைக் குறிக்கும். மகேந்திர பல்லவனின் மாமண்டூர்க் கல்வெட்டில், “ கந்தர்வம்’ என்ற சொல் இசையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. [7] தமிழிசை எனப் பொருள்படுகிற “தமிழ்க் கந்தருவம்” என்பதே ‘திமிழக் கந்திருவம்” என எழுதப்பட்டிருக்க வேண்டும். இதே கல்வெட்டு வாசகங்கள் திருமெய்யம் சத்யகிரீஸ்வரர் கோயிற் குடைவரையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதி அழிக்கப் பட்டுள்ள அக்கல்வெட்டில் “திமிழ” என்பது ‘தெமிழ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. [8] “திமிழ” என்பது “திமிழ்” என்றும் “தெமிழ்” என்றும் உச்சரிக்கப்பட்டு, அத்தகைய உச்சரிப்பு வழக்குகள் கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளன. மலியாள, கன்னட என்பன போன்றே தமிழ் என்பது தமிழ் மொழிக்குரிய அல்லது தமிழ் மரபுக்குரிய எனப் பொருள்படும். தமிழக் கூத்து என்ர நாட்டிய வகை தொகாப்பிய உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. [9] அது போலத் தமிழிசை என்பது தமிழக் கந்திருவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குடைவரை சிவன் கோயிற்குடைவரையாகும். கே.வி. சௌந்தரராஜன் அவர்கள் இக்குடை வரை மாகேஸ்வர சைவர்களின் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். [10] கர்நாடக மாநிலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த காளாமுக சைவ சமயத்தையே அவர் கருத்தில் கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. இம்மாவட்டத்திலுள்ள கொடும்பாளூரில் காளமுக சைவம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தழைத்திருந்தது. எனவே அக்குடைவரை குறித்துக் கே.வி. சௌந்தரராஜன் ஊகித்தது சரியாகவே இருக்கலாம். இந்த இசைக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள திமிழ என்ற வழக்கு தமிழைக் குறிப்பதற்குக் கன்னடர்கள் பயன்படுத்திய சொல்வழக்காகும். தமிழர் என்ற சொல் திமிளர், திவிளர் என்று திரிந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டளவில் திகிளர், திகுளர் என வழங்கிற்று.[11] தமப்பன் (தம் அப்பன்) என்பது தவப்பன் என்று திரிந்து வழங்கத் தொடங்கித் தற்போது தகப்பன் என வழங்கப்படுவதை இதனோடு ஒப்பிடலாம்.

கர்நாடக மாநிலத் தொடர்பு கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலேயே புதுக்கோட்டைப் பகுதியில் நிலவிற்று என்பதற்குச் சித்தன்னவாசல் ஏழடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டில் இடம் பெறுகிற எருமிநாடு (மகிஷபுரி- மைசூர்ப்பகுதி) பற்றிய குறிப்பும், வாயில் எனப் பொருள்படும் ‘போசில்” என்ற கன்னடச் சொல் இடம் பெறுவதும் சான்றாகின்றன. எனவே கி.பி 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பர், திருஞான சம்பந்தர் ஆகியோரின் முயற்சியால் சமண சமயம் வீழ்ச்சியடைந்து சைவ சமய பக்தி நெறி வளர்ச்சியடைந்த போது கர்நாடக இசை மரபு சார்ந்த காளாமுக சைவநெறி இப்பகுதியில் செல்வாக்குப் பெற்றது எனக் கொள்ளலாம். கர்நாடகக் கூத்து- இசை மரபு சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் (கால்கோட்காதை:106-115) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்நாடகக் கூத்து – இசை மரபினர், தமிழிசை மரபையும் கற்றுத் தேர்ச்சியடைந்து அதனைக் கற்பித்தும் வந்தனர் என்றும், அந்நடைமுறையே இக்கல்வெட்டில் பதிவாகியுள்ளதென்றும் முடிவு செய்யலாம். குறிப்பாக “வித்யா பரிவாதிநி” எனப்பட்ட தமிழிசை மரபை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீணையை இசைக்கின்ற அறிவைக் கற்பித்துள்ளனர் எனக் கொள்ளலாம். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” ஞானசம்பந்தரின் காலத்தையொட்டி இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்பதையும், இக்கல்வெட்டு இடம் பெற்றுள்ள குடைவரை சிவன் கோயிற் குடைவரை என்பதையும் நாம் கவனத்திற் கொண்டால் இக்கல்வெட்டு குறிப்பிடுகிற செய்தி எந்த அளவுக்கு விரிவான, ஆழமான ஆய்வுக்குரியது என்பது புலனாகும்.

அடிக்குறிப்புகள்

[1] ஐகாரம் ஏறிய உயிர்மெய் வடிவத்தைக் குறிப்பதற்காக அந்த எழுத்து வடிவத்திற்கு முன் ஒற்றைக் கொம்பு வடிவத்தைச் சேர்த்தல் என்பது கி.பி 5 ஆம் நூற்றாண்டிலேயே வழக்கிற்கு வந்து விட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் இருளப்பட்டி நடுகல்லில் அரைசரு, கொற்றந்தை ஆகிய பெயர் வடிவங்களில் ரை, தை ஆகியன இவ்வாறு ஒற்றைக் கொம்புடன் எழுதப்பட்டுள்ளன. (Epigraphia Indica, Vol XXXIX, Part VI, No. 32) ’ண’, ‘ல’, ‘ன’ போன்று சுழியுடன் தொடங்குகிற எழுத்து வடிவங்களைப் பொறுத்தவரை இவ்வாறு ஒற்றைக் கொம்புடன் சேர்த்து எழுதுவது என்பது இரண்டு சுழி வடிவங்களைக் கூடுதலாகச் சேர்க்காமல் தவிர்க்கிற முயற்சியாக அமைந்து விடுகிறது.

[2] உயிர்மெய் நெடிலுக்குரிய கால் வடிவமும் ரகரக் குறில் வடிவமும் இக்கல்வெட்டில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. “சொ” என்ற எழுத்து வடிவில் கால் பொறிக்கப்பட்டுள்ள விதம் காண்க.

[3] செங்கம் பகுதி எடுத்தனூரிலுள்ள மகேந்திர பல்லவனின் காலத்தைச் சேர்ந்த நடுகல்லில் “கோவாலனென்னுந் நாய்” என்ற வாசகத்தில் ‘ந்’, ‘நா’ ஆகிய எழுத்து வடிவங்களை இவ்வடிவத்துடன் ஒப்பிடலாம். (நிழற்படம் 1 காண்க)

[4] Tamil Lexicon p-742, Madras University, 1982

[5] நிழற்படம் 2 காண்க.

[6] செந்தமிழ் தொகுதி VI ப. 216 – மேற்கோள்; Tamil Lexicon, p.2741, Madras University, 1982

[7] மகேந்திர பல்லவன், ப. 70, மயிலை சீனி வெங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

[8] Inscription of the Pudukkottai State, no.5: ”தெமி முக்கந் நிருவத்துக்கும்” என வாசித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. South Indian Inscriptions, Vol. XII, no.7: “தெமி முக்கட் திருவத்துக்கும்” என்று வாசித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

[9] தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூற்பா 385-6 , தாழ் என்பது கோல் என்ற சொல்லுடம் புணரும் போது, “அக்’ சாரியை பெறும்; அதாவது தாழக் கோல் என்றாகும் எனக் கூறுகிற தொல்காப்பியர், தமிழ் என்ற சொல்லும் அவ்வாறே ‘அக்’ சாரியை பெறும் என்கிறார். அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழக் கூத்து, தமிழக் கந்திருவம் என்பனவே ‘அக்’ சாரியை பெறுகின்றன. ஆயினும், ‘தமிழச் சேரி’ போன்ற வடிவங்களும் வழக்கில் இருந்துள்ளன என்பது பெருங்கதையால் (3: 4: 11) தெரிய வருகிறது.

[10] Rock cut temple Styles, p.94, K.N. Soundararajan, Somaiya publications, Bombay, 1998.

[11] ‘Tigular’- R. Panneerselvan, in ‘Studies in Indian Epigraphy,” Vol XXXII, 2005, Published by Epigraphical Society of India, Mysore.

0 Replies to “திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.