காகசஸ் மலைக் கைதி – 5

தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

ஜீலின் தான் தோண்டியிருந்த குழிக்குள் சப்தமின்றி நகர்ந்து போய், கஸ்டிலீனும் அதற்குள் நுழையும் வண்ணம் அதை அகலமாக்கினான்; பின்பு ஆவுலில் எல்லாம் அமைதியாக ஆகும் வரை அவர்கள் அமர்ந்து காத்திருந்தனர்.

எல்லாம் முழுவதுமாக அமைதியான உடன், ஜீலின் சுவற்றினடியே குழியினுள் சப்தமின்றித் தவழ்ந்து வெளியே போய், கஸ்டீலினிடம் ரகசியக் குரலில், “வா!” என்றான். கஸ்டீலினும் தவழ்ந்து வெளியே வந்தான்; ஆனால் வரும்பொழுது அவனது காலில் ஒரு கல் இடறவே, சப்தம் ஏற்பட்டது. எஜமானனிடத்தில் துஷ்டத் தனம் மிகுந்த ஓல்யாஷின் என்ற பெயர் கொண்ட, புள்ளிகள் நிறைந்த ஒரு காவல் நாய் இருந்தது. ஓல்யாஷின் இந்த சப்தத்தைக் கேட்டதும் குரைத்தபடி குதிக்க ஆரம்பிக்கவே, மற்ற நாய்களும் அதனுடன் சேர்ந்து கொண்டு அதையே செய்தன. ஜீலின் மெல்லியதாகச் சீட்டியடித்தபடி அதற்கு ஒரு சிறிய துண்டு பாலாடைக் கட்டியை வீசினான். ஓல்யாஷின் ஜீலினை அடையாளம் கண்டு கொண்டு, குரைப்பதை நிறுத்தி வாலை ஆட்டியது.

ஆனால் எஜமானனுக்கு நாய் குரைத்தது கேட்டதால் அவன் தன் குடிசையிலிருந்து, “ஹாய்ட், ஹாய்ட், ஓல்யாஷின்!” என்று கத்தினான். ஜீலினும் அதன் காதுகளின் பின்புறத்தைச் சொறிந்து கொடுத்தான்; அதுவும் அமைதியாகி, அவன் கால்களில் தன் உடலைத் தேய்த்த வண்ணம் வாலை ஆட்டியது.

அவர்கள் ஒரு மூலையில் சிறிது நேரம் ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தனர். திரும்பவும் எல்லாம் அமைதியாகி, தொழுவத்திலிருந்து ஒரு செம்மறியாடு இருமும் சப்தமும், பள்ளத்தினுள் அலைகளை உண்டாக்கிய வண்ணம் நீர் ஓடிய சப்தமும் கேட்டன. அந்த இருட்டுப் பொழுதில், வானில் நட்சத்திரங்கள் வெகு உயரத்தில் இருந்தன; புதிய பிறை நிலவு தனது கொம்புகளை உயர்த்திய வண்ணம் சிவந்த நிறம் காட்டியபடி குன்றின் பின் மறைந்தது. பள்ளத் தாக்குகளில் மூடுபனி பால் போல் வெண்மையாகக் காட்சியளித்தது.

ஜீலின் எழுந்து நின்று தன் கூட்டாளியிடம், ” நல்லது நண்பா, தொடர்ந்து வா!” என்றான்.

அவர்கள் புறப்பட்டனர்; ஆனால் சில அடிகள் எடுத்து வைத்ததுமே கூரை மீதிருந்து முல்லாவின் அறைகூவல், “அல்லாஹ், பிஸ்மில்லாஹ்! இல்ரஹ்மான்!” எனக் கேட்டது. அப்பொழுது மக்கள் எல்லாரும் மசூதிக்குத் தொழுகைக்குச் செல்வார்கள் என்று அர்த்தம். ஆகவே அவர்கள் திரும்பவும் ஒரு சுவரின் பின் மறைந்து அமர்ந்து எல்லாரும் சென்று முடியும் வரையில் வெகு நேரம் காத்திருந்தனர். ஒருவழியாகத் திரும்பவும் எல்லாம் அமைதியாகியது.

“இப்போது போகலாம்! கடவுள் நம்முடன் இருக்கட்டும்!” என்றபடி சிலுவைக் குறியிட்டுக் கொண்டு, அவர்கள் திரும்பவும் புறப்பட்டனர். ஒரு முற்றத்தின் வழியாகச் சென்று, குன்றிலிருந்து ஆற்றை நோக்கி இறங்கி, பின் அந்த ஆற்றையும் கடந்து, பள்ளத்தாக்கின் வழியாகச் சென்றனர்.

தரையின் அருகில் மட்டும் மூடுபனி அடர்த்தியாக இருந்தது; உயரத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. ஜீலின் அவர்களின் பாதையை நட்சத்திரங்களின் மூலம் கண்டறிந்தான். குளிர்ச்சியான மூடுபனியில் நடப்பது சுலபமாக இருந்தது; அவர்களுடைய பூட்ஸுகள் தான் மிகவும் அதிக உபயோகத்தால் தேய்ந்து போய் ரொம்பவும் அசௌகரியமாக இருந்தன. ஜீலின் தன்னுடையவற்றைக் கழற்றித் தூக்கி எறிந்து விட்டு வெறுங்கால்களால் நடந்தான்; கற்களைத் தாண்டிக் குதித்தபடி தன் பாதையை நட்சத்திரங்களின் வழிகாட்டலால் கண்டு கொண்டு சென்றான். கஸ்டீலின் சிறிது பின் தங்க ஆரம்பிக்கலானான்.

“மெல்ல நட. இந்த நாசமாய்ப்போன பூட்ஸுகள் என் காலில் கொப்புளங்களை உண்டாக்கி விட்டன,” என்றான்.

“அவற்றைக் கழற்றி விடு! அவை இல்லாமல் நடப்பது சுலபமாக இருக்கும்,” என்றான் ஜீலின்.

கஸ்டீலின் வெறுங்கால்களால் நடந்தான்; ஆனால் அவன் நிலை இன்னும் மோசமாகியது. கற்கள் அவன் கால்களைக் குத்திக் கிழித்ததால் அவன் திரும்பவும் பின் தங்கலானான். ஜீலின் அவனிடம், “உன் கால்களில் கல் குத்திப் புண்பட்டால், திரும்ப குணமாகி விடும்; ஆனால் தார்த்தாரியர்கள் நம்மைப் பிடித்துக் கொலை செய்தால், அது இன்னுமே மோசம்!” என்றான்.
கஸ்டீலின் பதிலேதும் கூறவில்லை. ஆனால் முக்கி முனகிய வண்ணம் தொடர்ந்து நடந்தான்.

அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கின் வழியாக நீண்ட நேரம் சென்றனர். திடீரென, வலது புறத்தில் நாய்கள் குரைப்பது கேட்டது. ஜீலின் நின்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, கைகளால் துழாவிய வண்ணம் குன்றின் மீது ஏறலானான்.

“ஆ! நாம் தவறுதலாக, ரொம்பவும் வலது புறத்தில் சென்று விட்டோம். இங்கு நான் அன்று குன்றின் மேலிருந்து பார்த்த இன்னொரு ஆவுல் இருக்கிறது. நாம் திரும்பி இடது பக்கம் உள்ள குன்றின் மேல் ஏறிச் செல்ல வேண்டும். அங்கு ஒரு காடு இருக்கும்,” என்றான் ஜீலின்.

ஆனால் கஸ்டீலின், ” சிறிது நேரம் பொறு! நான் கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்கிறேன். கற்கள் என் கால்களைக் கிழித்துப் புண்ணாக்கி ரத்தம் வந்து கொண்டிருக்கிறது,” என்றான்.

“கவலைப் படாதே நண்பா! அவை திரும்ப குணமாகி விடும். நீ இன்னும் கொஞ்சம் லேசாகத் தாவ வேண்டும். இதோ, இது போல!” என்றான் ஜீலின்.

அவன் திரும்பி ஓடி, இடதுபுறம் திரும்பி மலை மேல் ஏறிக் காட்டை நோக்கிச் செல்லலானான்.

கஸ்டீலின் முக்கி முனகியபடி இன்னமுமே பின் தங்கியிருந்தான். ஜீலின், “உஷ்!” என்றபடி சென்று கொண்டேயிருந்தான்.

அவர்கள் குன்றின் மீது ஏறி ஜீலின் கூறியபடி ஒரு காட்டை அடைந்தனர். காட்டினுள் நுழைந்து முட்புதர்களூடே சென்றனர்; அவர்களது உடைகள் அவற்றில் மாட்டிக் கிழிந்தன. கடைசியாக ஒரு பாதையைக் கண்டு பிடித்து அதில் தொடர்ந்து நடந்தனர்.

“நில்!,” என்றான் ஜீலின். அவர்கள் அசையாமல் நின்று, ‘தொப், தொப்’ என்ற குளம்போசையை அந்தப் பாதையில் செவி மடுத்தனர். அது ஒரு குதிரையின் கால் குளம்போசை போல இருந்தது; ஆனால் நின்று விட்டது. அவர்கள் நகர்ந்ததும் திரும்பவும் அந்தக் குளம்போசை கேட்டது; அவர்கள் நின்றதும் அதுவும் நின்றது. ஜீலின் அதன் பக்கமாக ஊர்ந்து சென்றான்; பாதையில் அவ்வளவாக இருட்டாக இல்லாத இடத்தில் ஏதோ ஒன்று நின்றிருக்கக் கண்டான். அது கிட்டத்தட்ட ஒரு குதிரை மாதிரி காணப்பட்டது, ஆனால் குதிரை அல்ல; அதன் மீது ஏதோ ஒன்று வினோதமாக இருந்தது, ஆனால் அது மனிதனல்ல. அது பெரிதாக மூச்செறிந்ததை ஜீலின் செவிமடுத்தான். ‘அது என்னவாக இருக்கும்?’ ஜீலின் தாழ்குரலில் சீட்டியடித்தான்; உடனே அது தான் நின்று கொண்டிருந்த பாதையிலிருந்து தாவிப் புதர்களினூடே ஓடியது; அப்போது அந்தக் காட்டுப் பிரதேசம் முழுமையும் ‘படபட’வென்ற சப்தத்தால் நிரம்பி ஒரு சூறாவளிக் காற்று மரக் கிளைகளை முறித்துப் போட்டபடி காட்டினூடே சென்றது போல் இருந்தது.

கஸ்டீலின் மிகவும் பயந்தவனாகித் தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டான். ஆனால் ஜீலின் சிரித்த வண்ணம், “அது ஒரு கலைமான். அது தன் கொம்புகளினால் கிளைகளை முறித்ததை நீ கேட்கவில்லையா? நாம் அதைக் கண்டு பயந்தோம்; அது நம்மைக் கண்டு பயந்தது,” என்றான்.

அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். வானில் காணப்பட்ட ‘பெரிய கரடி’ எனப்படும் நட்சத்திரக் கூட்டம் (நாம் இந்தியாவில் இதை சப்தரிஷி மண்டலம் என்போம்!) ஏற்கெனவே மறைய ஆரம்பித்திருந்தது. பொழுது புலர ஆரம்பித்து விட்டது; ஆனால் அவர்களுக்குத் தாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோமா எனத் தெரியவில்லை. இந்த வழியாகத் தான் தார்த்தாரியர்கள் தன்னைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தனர், தாங்கள் ருஷ்யக் கோட்டையிலிருந்து இன்னும் ஏழு மைல் தொலைவில் இருக்கிறோம் என்று ஜீலின் எண்ணினான்; ஆனால் அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை; மேலும் இரவின் இருட்டில் வழியை ஒருவன் தவறுதலாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு. கொஞ்ச நேரத்தின் பின்பு அவர்கள் ஒரு வெட்டவெளியை அடைந்தனர். கஸ்டீலின் தரையில் அமர்ந்த வண்ணம் சொன்னான்,” நீ என்ன வேண்டுமோ செய்து கொள்! என்னால் இனி நகர முடியாது! என் பாதங்கள் என்னைச் சுமந்து கொண்டு செல்லாது!”

ஜீலின் அவனை சம்மதிக்க வைக்க முயன்றான்.

“இல்லை, நான் அங்கே போய்ச் சேரப் போவதில்லை; என்னால் முடியாது!” என்றான் கஸ்டீலின்.

ஜீலின் கோபம் கொண்டவனாகிக் கடூரமாக அவனிடம் பேசினான்.

“நல்லது, அப்படியானால் நான் தனியாகச் செல்கிறேன். போய் வருகிறேன்! (குட் பை!)” என்றான்.

கஸ்டீலின் துள்ளியெழுந்து அவனைத் தொடர்ந்தான். அவர்கள் இன்னும் ஒரு மூன்று மைல் தூரம் சென்றனர். காட்டினுள் மூடுபனி இன்னும் அடர்த்தியாகப் படிந்திருந்தது; அவர்களால் தங்கள் முன்பு ஒரு கஜ தூரம் கூடப் பார்க்க இயலவில்லை, நட்சத்திரங்களும் ஒளி மங்கி விட்டன.

Horse_Russian_Tartar_Muslim_Tolstoy_Mikhail_St._Petersburg_Musuem_Paintings_USSR_Soviet_Avilov

திடீரென்று தங்கள் முன்பு அவர்கள் ஒரு குதிரையின் குளம்பொலியைக் கேட்டனர். அதன் லாடங்கள் கல்லின் மேல் படும் ஓசையைக் கேட்டனர். ஜீலின் தரையோடு தரையாகப் படுத்துக் காதால் தரை மூலம் அந்த ஓசையை உற்றுக் கேட்டான்.

“ஆம், அதே தான்! குதிரை மேல் ஒருவன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்!”

அவர்கள் பாதையை விட்டு விலகி ஓடி, புதர்களின் கீழ் குனிந்து ஒளிந்து கொண்டு நிதானித்தனர். ஜீலின் சாலைப் பக்கம் தவழ்ந்து சென்று பார்த்தபோது ஒரு தார்த்தாரியன் பசு ஒன்றை ஓட்டியபடி, பாட்டு ஒன்றைத் தனக்குள் முணுமுணுத்தபடி செல்லக் கண்டான். தார்த்தாரியன் அவர்களைத் தாண்டிச் சென்றதும் ஜீலின் கஸ்டீலினிடம் திரும்பிச் சென்றான்.

“கடவுளே அவனை நம்மைத் தாண்டி அழைத்துச் சென்றிருக்கிறார்; எழுந்திரு, நாம் மேலே செல்லலாம்,” என்றான்.

கஸ்டீலின் எழ முயன்றான், ஆனால் திரும்ப விழுந்தான்.

“என்னால் முடியவில்லை; சத்தியமாக என்னால் முடியவில்லை! என்னிடம் சக்தியே இல்லை,” என்றான்.

அவன் கனத்த தடிமனான சரீரம் கொண்டவனாக இருந்ததால் வியர்வை பொங்கிப் பெருகியது. மூடுபனியின் குளிரில், பாதங்களிலிருந்து ரத்தமும் வடிந்ததால் அவன் மிகவும் துவண்டு போயிருந்தான்.

ஜீலின் அவனைத் தூக்கி எழுப்ப முயற்சித்ததும் அவன் திடீரெனச் சப்தமாகக் கூச்சலிட்டான், “ஓ….., எவ்வளவு வலிக்கிறது!”

ஜீலினின் உள்ளம் தளர்ந்தது.

“எதற்காக நீ கூச்சலிடுகிறாய்? அந்தத் தார்த்தாரியன் இன்னும் நமக்கு அருகிலேயே தான் இருக்கிறான்; நீ கூச்சலிட்டதைக் கூடக் கேட்டிருப்பான்!” என்றபடி ஜீலின் தனக்குள் எண்ணிக் கொண்டான், ‘இவன் நிஜமாகவே மிகவும் களைத்திருக்கிறான். நான் இவனை இப்போது என்ன செய்வது? ஒரு நண்பனைக் கைவிட்டு விட்டுச் செல்வது தகாது.’

“சரி, அப்படியானால் நீ எழுந்து என் முதுகில் ஏறிக் கொள். உன்னால் நிஜமாகவே நடக்க முடியாதென்றால் நான் உன்னைத் தூக்கிக் கொண்டு செல்கிறேன்,” என்றான்.

கஸ்டீலினை எழ உதவி செய்து, அவனது தொடைகளுக்கடியில் தனது கரங்களைக் கொடுத்து அவனைத் தூக்கியவாறு திரும்பவும் பாதையை அடைந்து நடக்கலானான் ஜீலின்.

“கடவுளின் அன்புக்காக மட்டுமாவது கேட்டுக் கொள்கிறேன், உன் கைகளால் என் கழுத்தை நெரிக்காதே! என் தோள்களைப் பிடித்துக் கொள்,” என்றான் ஜீலின்.

ஜீலின் தனது சுமை கனமானது என உணர்ந்தான்; அவனது பாதங்களிலிருந்தும் ரத்தம் கசிந்தது; அவனுமே மிகவும் களைப்புற்றிருந்தான். அவ்வப்பொழுது அவன் முன்னால் வளைந்து கஸ்டீலின் தன் தோள்மீது சரியாக மேற்புறமாக அமரும் வகையில் அவனைத் தூக்கிக் குலுக்கி விட்டபடிச் சென்றான்.

கஸ்டீலின் கத்தியதை அந்தத் தார்த்தாரியன் எப்படியாகிலும் கேட்டிருக்க வேண்டும். ஜீலின் தன் பின்னால் தார்த்தாரிய மொழியில் கத்தியவாறு நாலுகால் பாய்ச்சலில் யாரோ திடீரென்று வருவதைக் கேட்டான். அவன் உடனே புதர்களுக்குப் பின் பாய்ந்தோடினான். தார்த்தாரியன் தன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டான்; ஆனால் அது அவர்கள் மீது படவில்லை; அவன் தனது மொழியில் கூச்சலிட்டவாறு சாலையில் குதிரை மீது விரைந்து பாய்ந்து சென்றான்.

“நண்பா, நாம் இப்பொழுது தொலைந்தோம்,” என்றான் ஜீலின். “அந்த நாய் மற்ற தார்த்தாரியர்களைச் சேர்த்துக் கொண்டு வந்து நம்மை வேட்டையாடி விடும். உடனே இங்கிருந்து இன்னும் இரண்டு மைல்களாவது செல்லாவிடின் நாம் தொலைந்தோம்!” தனக்குள் இவ்வாறும் எண்ணிக் கொண்டான்: ‘எதற்காக நான் இந்தச் சுமையை என்மீது ஏற்றிக் கொண்டேன்? நான் மட்டும் தனியாக இருந்திருந்தால் எப்போதோ தப்பிச் சென்றிருப்பேனே.’

“நீ தனியாகச் செல்,” என்றான் கஸ்டீலின்; “என்னால் நீ எதற்காகச் சாக வேண்டும்?”

“நான் அவ்வாறு செல்ல மாட்டேன். ஒரு தோழனைக் கைவிடுவது என்பது இயலாத காரியம்.”

திரும்பவும் கஸ்டீலினைத் தன் தோள்களின் மீது ஏற்றிக் கொண்டு தடுமாறியபடி நடந்தான். இவ்வாறு அவர்கள் ஒரு அரைமைல் தூரம் சென்றிருப்பார்கள். அவர்கள் இன்னும் காட்டின் உள்பகுதியில் தான் இருந்தனர்; அதன் எல்லையைக் காண முடியவில்லை. ஆனால் மூடுபனி விலக ஆரம்பித்து, மேகங்கள் சூழ ஆரம்பித்தன; நட்சத்திரங்களைக் காண முடியவில்லை. ஜீலின் மிகவும் களைத்திருந்தான். அவர்கள் சாலையின் பக்கம் கற்கள் பதித்த சுவர்கொண்ட ஒரு நீரூற்றை அடைந்தனர். ஜீலின் அங்கு நின்று கஸ்டீலினைத் தன் முதுகிலிருந்து இறக்கி விட்டான்.

“நான் சிறிது நீர் குடித்து விட்டுக் கொஞ்சம் இளைப்பாறுகிறேன்; கொஞ்சம் பாலாடைக் கட்டியையும் நாம் உண்ணுவோம். இனிமேல் நாம் செல்ல வேண்டியது வெகு தூரம் இல்லை,” என்றான் ஜீலின்.

ஆனால் அவன் கீழே படுத்துச் சிறிது நீர் அருந்துவதற்குள்ளாகவே குதிரைகளின் காலடியோசையைத் தனது பின்பக்கமாகக் கேட்டான். திரும்பவும் அவர்கள் வலது பக்கத்திலுள்ள புதர்களுக்குள் பாய்ந்தோடி, ஒரு செங்குத்தான சரிவில் படுத்துக் கொண்டனர்.

அவர்கள் தார்த்தாரியர்களின் குரல்களைக் கேட்டனர். அவர்கள் எங்கே பாதையிலிருந்து திரும்பினார்களோ, அதே இடத்தில் தார்த்தாரியர்கள் வந்து நின்றனர். தமக்குள் சிறிது உரையாடிக் கொண்டு, தார்த்தாரியர்கள் ஒரு நாயை மோப்பம் பிடிக்க அனுப்பியது போலத் தோன்றியது. கிளைகளும் குச்சிகளும் உடையும் சப்தத்தைத் தொடர்ந்து புதர்களின் பின்னாலிருந்து ஒரு புதிய நாய் வந்து நின்று குரைக்க ஆரம்பித்தது.

பின்பு புதியவர்களான சில தார்த்தாரியர்கள் கீழிறங்கி வந்து ஜீலினையும் கஸ்டீலினையும் பிடித்துக் கட்டி அவர்களைக் குதிரைகளின் மேலேற்றிக் கொண்டு சென்றனர். அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் பயணம் செய்த பின், இரு தார்த்தாரியர்கள் பின் தொடர வந்த அவர்களது பழைய எஜமானனான அப்துலைச் சந்தித்தனர். அவன் புதியவர்களிடம் பேசி விட்டு, ஜீலினையும் கஸ்டீலினையும் தன்னுடைய குதிரைகள் மீது ஏற்றிக் கொண்டு தங்களது ஆவுலுக்குத் திரும்ப அழைத்துச் சென்றான்.

அப்துல் இப்போது சிரிக்கவும் இல்லை; அவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசவும் இல்லை.

பொழுது புலரும் வேளையில் ஆவுலை அடைந்ததும் சாலையில் அவர்கள் இறக்கி விடப் பட்டனர். சிறுவர்கள் கூட்டமாக வந்து, கூச்சலிட்டுக் கொண்டும், கற்களை அவர்கள் மீது விட்டெறிந்தும், சாட்டையினால் அவர்களை அடித்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டனர்.

தார்த்தாரியர்கள் அவர்களைச் சுற்றி ஒரு வட்டமாக நின்றனர்; மலை அடிவாரத்தில் வசித்த அந்த முதியவனும் அங்கே இருந்தான். அவர்கள் தங்களுக்குள் தர்க்கம் செய்ய ஆரம்பித்தனர்; தன்னையும் கஸ்டீலினையும் என்ன செய்வது என அவர்கள் யோசனை செய்கிறார்கள் என ஜீலின் அவர்கள் பேச்சிலிருந்து அறிந்து கொண்டான். மலைகளுக்குள் இன்னும் வெகு தூரம் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் எனச் சிலர் கருதினார்கள்; ஆனால் அந்த முதியவனோ, “அவர்களைக் கொன்று விட வேண்டும்!” என்றான்.

அப்துல் அவனிடம் அதனை மறுத்து, “நான் இவர்களுக்காக விலை கொடுத்திருக்கிறேன்; ஆகவே நான் இவர்களுக்கான மீட்புத் தொகையைப் பெறவே வேண்டும்,” என்றான். ஆனால் அந்த முதியவன், “அவர்கள் உனக்கு ஒரு தொகையும் பெற்றுத் தர மாட்டார்கள், ஆனால் துரதிர்ஷ்டத்தைத் தான் கொண்டு வருவார்கள். ருஷ்யர்களுக்கு உணவளித்துக் காப்பது ஒரு பாவமான செயல். அவர்களைக் கொன்று தலைமுழுகி விடு!” என்றான்.

பின் எல்லாரும் கலைந்து சென்றார்கள். அவர்கள் சென்றானதும் எஜமானன் ஜீலினிடம் வந்து சொன்னான்: “உங்களுக்கான மீட்புத் தொகை இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வராவிட்டால் நான் உங்களைச் சாட்டையால் விளாசுவேன்; நீங்கள் திரும்பவும் தப்பி ஓட முயற்சி செய்தால் உங்களை நாயைக் கொல்வது போல் கொன்று விடுவேன்! ஒழுங்காக ஒரு கடிதத்தை எழுதுங்கள்!”

காகிதம் கொண்டு வரப்பட்டு அவரவர்கள் வீடுகளுக்குக் கடிதங்களை எழுதினார்கள். கால்களில் விலங்குகள் அணிவிக்கப்பட்டு, மசூதியின் பின்புறமிருந்த ஒரு ஆழமான பன்னிரண்டு சதுர அடிக் குழிக்குள் அவர்கள் இறக்கி விடப் பட்டார்கள்.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.