கவிதைகள்

சாராவின்ஆவி
நான் அருந்துவதில்லை மது.dh
ஒரு போதும். இருந்தும்
எப்போதும் உண்டு
என் உணவு மேசையில்
ஒருபுட்டியாயின்மதுவும்
ஒற்றைக் கோப்பையும்
கொஞ்சம்பாலடைக் கட்டியும்.
ஏதோ ஒரு நண்பனின் உருவில்
வரும் சாராவின் ஆவி
புட்டிமதுவையையும் அருந்தியபின்
விட்டுச் செல்கிறது
குருதியின் நிறம் படிந்த
காலிக் கோப்பையை.
சில சமயம்
கொள்ளி அணைந்த
சிகரெட்டின் சாம்பலையும்.
எல்லோரும்
உறங்கிய பின் வரும்
சாராவின் ஆவி
காய்ச்சிய பாலையும்
மிச்சம் வைப்பதில்லை.
சில நாள்களில்
முந்தியே வந்துவிடும்
சாராவின் ஆவி
குடித்தபின்
காலிக் கோப்பையை
உடைத்தும் விடும்
காரணம் ஏதுமின்றி.
கோப்பையில் மீதம் வைத்து
ஒரு கைக்குறிப்பையும்
விட்டுச் சென்றிருந்தது.
நேற்றிரவு
யாருமற்ற சமயம்
வந்திருந்த ஆவி.
அது சாராவின் கையெழுத்துதான்
சந்தேகமில்லை.
ஆண்டுகள் ஆனபின்னும்
ஆவியாக ஆனபின்னும்
சாரா இன்னும் மாறவில்லை.
கடைத்தெருவுக்கு கிளம்புமுன்
நினைத்துக்கொண்டேன்.
மறக்காமல் வாங்கிவரவேண்டும்
இன்னொரு புட்டிமதுவும்
கொஞ்சம் சிகரெட்டுகளும்.
வேணுதயாநிதி