இடமற்ற இடத்திலிருந்து, இடத்தைப் பற்றி…

‘மனிதனுக்கு வேர்கள் இல்லை; அதுதான் அவனது பிரச்சனையே’ என்று குட்டி இளவரசன் என்ற குறுநாவலில் அந்துவான் செய்ந்த் எக்சுபரி மனிதனின் அலைதலைப் பற்றிப் புகார் செய்வார். மனிதன் சதா புலம் பெயர்ந்து கொண்டிருப்பது அவனுக்கு வேர்கள் இல்லாததால்தானோ? மரம், செடி, கொடிகளைப் போல், அவனுக்கும் வேர்கள் இருந்திருந்தால் அவனும் தனக்குரிய இடத்திலேயே இருந்திருப்பானோ என்று நான் சில சமயம் யோசித்திருக்கிறேன்.

நானும் வேர்கள் இல்லாததால்தான் நான் பிறந்த இடத்தை விட்டு, சென்னை என்ற இடமற்ற இடத்துக்கு வந்திருக்கிறேனோ? ஒரு மனிதனின் முன்னோர்கள், அவர்களின் மூதாதையர்கள் வழி வழியாக வாழ்ந்து, அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் நிலம், உடமைகள் யாவும் அவனுக்குக் கையளிக்கப்படும் இடம் எதுவோ அதுதான் அவனுக்குரிய இடம். அவனது வம்சாவளியின் வரலாறு, அவனது முன்னோர்களின் கல்லறைகள் போன்றவை இருக்கும் இடமும் கூட. அந்த இடத்திலிருந்து அவன் பிதுக்கப்பட்டு வெளியே வேறு இடம் நோக்கித் துப்பபடும் போது அவனுக்கு வாய்க்கும் இடம்தான் இடமற்ற இடம் (non-place). பின் நவீன யுகம் மனிதனுக்குப் பல இடமற்ற இடங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இங்கே அவன் உண்ணலாம்; உடுக்கலாம்; படுக்கலாம்; புணரலாம்; வசிக்கலாம். இடத்தில் அவன் செய்யும் சகல காரியங்களையும் அவன் செய்யலாம். எனினும். இடம் வேறு; இடமற்ற இடம் வேறு. மாசிடோனியா அலெக்ஸாண்டரின் இடம். பாரசீகத்து இளவரசி ருக்ஸானாவை மணந்துகொண்டு, பாரசீகத்தில் அவன் வாழ்ந்த போதும் அது அவனது இடமல்ல; அது அவனுக்கு இடமற்ற இடமே.

oOo

mdu

என்னுடைய இடம் மதுரை. மதுரையில் மணி ஆஸ்பத்திரி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் நான் பிறந்தேன். பின்பு மதுரையில்தான் நான் வளர்ந்தேன். பாண்டிய வேளாளர் தெருவில் தேர்முட்டி என்று அழைக்கப்படும், தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு சற்று தள்ளி நான் வளர்ந்த வீடு இருந்தது. அங்கிருந்து நடந்து போகும் தூரத்தில் என் தாய்வழித் தாத்தாக்களின் வீடு இருந்தது. நான் இந்த வீட்டிலும், அந்த வீட்டிலுமாக வளர்ந்தேன். வீட்டின் முன்புறத்தில் ஒரு டைப் ஃபௌண்டரி இருந்தது. பின்புறம் குடியிருப்பு இருந்தது. என்னுடைய இளம் வயதில் மதுரை பாண்டிய வேளாளர் தெருவில் இருந்த என் தாய்வழித் தாத்தாவின் வீட்டில் நான் வசித்த நாள்கள் என் நினைவில் கலங்கலாகத் தோற்றம் தருகின்றன. மிகப் பெரிய வீடு அது. பெரிய பெரிய அறைகள்.சைக்கிள் பழகலாம் போன்ற பிரமாண்டமான முற்றம். பக்கவாட்டில் கை கோர்த்து நிற்கும் பெரிய தோட்டம். தோட்டத்தில் பலவிதமான மரங்கள், செடிகொடிகள், கீரைப்பாத்திகள், மலர்ச்செடிகள் இருந்தன.

அந்த வீட்டில் என்னுடைய தாத்தாவும் அவரது இரண்டு சகோதரர்களும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். என்னுடைய தாத்தாவுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். அவர்களில் மூத்த பெண் என் அம்மா. தாத்தாவின் அண்ணனுக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும். தாத்தாவின் தம்பிக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே. அப்போது என் அம்மாவுக்கு மட்டுமே திருமணமாகி நான் மட்டுமே ஒரே பேரக்குழந்தையாகப் பிறந்திருந்தேன். அந்த வீட்டில் நான் அனைவராலும் கொண்டாடப்படுகிற குழந்தையாக இருந்தேன். அந்த வீட்டில் மூன்று குடும்பங்கள் ஒன்றாக ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தன என்பதும் அவர்களுக்கு ஒரே சமையல்கட்டில் ஒரே சமையல் நடந்தது என்பதும் இன்றைய காலக்கட்டத்தில் வியப்பை ஏற்படுத்தலாம். புராதன கம்யூனிஸ்ட் சமூகத்தைப் போல் அந்த வீட்டில் எல்லாமே எல்லாருக்கும் பொதுவில் வைக்கப்பட்டிருந்தன. யாரும் எதையும் எடுக்க யாரின் அனுமதியையும் பெற வேண்டியதில்லை. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது; அந்த வீட்டில் பல பீரோக்கள் இருக்கும். ஒவ்வொரு பீரோவிலும் துணிமணிகள் நகை, நட்டுகள் இருக்கும். ஒரு பீரோ நிறைய பெரிய பெரிய பாட்டில்களில் சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் போன்ற தின்பண்டங்கள் இருக்கும். அடிக்கடி அதை எடுத்துத் தின்று நான் வயிற்றுப் போக்குக்கு ஆளாவேன்.

என்னுடைய மூன்று தாத்தாக்களுக்கும் போதிய வருமானத்தை அந்த டைப் ஃபௌண்டரி தந்துகொண்டிருந்தது. அவர்கள் பாசமுள்ள சகோதரர்களாக இருந்தார்கள். வரும் வருமானத்தை அவர்கள் பொதுவில் வைத்து செலவு செய்தார்கள். பீரோவில் பணம் இருக்கும். மூன்று தாத்தாக்களில் யார் வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்குள் பணம் தொடர்பான கருத்து வேற்றுமைகள் வந்ததில்லை. பின்னாளில் நான் ஃபிரெஞ்சு எழுத்தாளரான ஆல்பெர் கெமூவைப் பற்றிப் படித்தபோது அவரும் இத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார் என்பதறிந்து வியப்படைந்தேன். அவருடைய அறையில் ஒரு பணப்பெட்டி இருந்தது. கெமூ தனக்கு வரும் பணத்தை அதில் போட்டு வைப்பாராம். அவ்வப்போது செலவுக்கு அந்தப் பெட்டியிலிருந்து கெமூ பணத்தை எடுத்துக் கொள்வாராம். அந்தப் பணத்தை அவர் மட்டுமல்ல; அந்த அறைக்கு வரும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ‘தேவைப்படுவதால்தானே எடுக்கிறார்கள். எடுத்துக் கொள்ளட்டுமே’ என்பது அவரது கொள்கையாக இருந்தது. ஊரில் தாத்தாக்களுக்கு நல்ல பெயர் இருந்தது. ஃபௌண்டரி நாயக்கர்களாக அவர்கள் அறியப்பட்டார்கள்.

தாத்தாக்களின் டைப் ஃபௌண்டரியில் நல்ல வருமானம் இருந்தது. டைப் ஃபௌண்டரியில் டைப் எனப்படும் ஈயத்தால் வார்க்கப்படும் எழுத்துருக்களைத் தயாரிப்பார்கள். இந்த டைப்களை வாங்கி அச்சகங்களில் கம்பாஸிடர்கள் மூலம் அச்சுக் கோத்து அச்சடிப்பார்கள். என்றைக்கு ஆஃப் செட், கணினி மூலம் DTP போன்ற நவீன வளர்ச்சி தோன்றியதோ அப்போதே இந்த டைப் ஃபௌண்டரிகள் இழுத்து மூடப்பட்டன. டைப் பௌண்டரிகள் மூலம் செல்வந்தர்களானவர்கள் திடீரென்று ஏழைகள் ஆனார்கள். அப்படி ஏழைகளாக ஆனவர்களில் ஒருவராக என் தாத்தாவையும் அவரது சகோதரர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கூட்டுக் குடும்பம் குலைந்தது. ‘என்னுடையது, உன்னுடையது’ என்ற மனோநிலை உருவானது. சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொய் சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த வீட்டை விற்று மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொண்டார்கள். டைப் ஃபௌண்டரியை ஒரு தாத்தா தன்னுடைய பாகமாக எடுத்துக் கொண்டார். என்னுடைய தாத்தாவும், அவரது மூத்த சகோதரரான இன்னொரு தாத்தாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாகங்களுடன் சென்னைக்குப் புலம் பெயர்ந்தனர். கடைசித்தாத்தா மட்டும் மதுரையிலேயே தங்கி விட்டார். மூத்த தாத்தா தனது பாகத்தில் சென்னையில் ஒரு வீடு வாங்கினார். உடனடியாக மரணமடைந்தார். என்னுடைய தாத்தா தனது பாகத்தை ஒரு வங்கியில் போட்டு, வங்கி திவாலானதால் தனது பணத்தை இழந்தார். மூன்றாவது தாத்தா தனது பாகத்தை வேறு தொழிலில் முடக்கி நஷ்டமடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அந்தக் குடும்பம் நலிந்து போனது. அதன் உறுப்பினர்கள் மூலைக்கொன்றாகச் சிதறிப்போனார்கள்.

என் தந்தைவழித் தாத்தா கல்லுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவரை நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் மரணமடைந்து இருந்தார். தனது நில புலன்களை தனது இரண்டாவது மனைவியின் பெயருக்கு எழுதி வைத்து விட்டு என் தந்தையாரை ஏமாற்றிவிட்ட திருப்தியில் லேசான புன்னகையுடன் தரையில் படுத்திருந்தார்.

oOo

பதின்மூன்றாம் நூற்றாண்டில், ஆந்திராவின் ராயலசீமா பகுதியின் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில், கொல்லவார், கம்மவார், பலிஜா, போன்ற உட்பிரிவுகள் கொண்ட ஒரு சமூகம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆடு, மாடு மேய்ப்பதையும், பாறை நிலப்பகுதிக்கேற்ப விவசாயம் செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். இந்த மக்கள் ஒன்று திரட்டப்பட்டு விஜயநகரப் பேரரசு உருவானது. அப்போது முஸ்லிம்களால் மதுரை ஆளப்பட்டு வந்தது. அலாவுதீன் சிக்கந்தர் என்பவனின் ஆட்சியில் மதுரை நிலைகுலைந்திருந்தது. 1371 இல் புக்கரின் மகனாகிய குமார கம்பணன் என்பவன் அலாவுதீன் சிக்கந்த்ரிடமிருந்து மதுரையை மீட்டான். அவனும் அவனது வாரிசுகளும் தொடர்ந்து மதுரையை ஆண்டனர். 1509 இல் விஜயநகரப் பேரரசின் மன்னரான கிருஷ்ணதேவராயர் நாகம நாயக்கர் என்பவரை மதுரைக்குப் போய் கப்பம் பெற்று வர அனுப்பினார். அவர் மதுரைக்குப் போய் போரிட்டு மதுரையைக் கைப்பற்றி அதற்குத் தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டார். இதனால் கோபமுற்ற கிருஷ்ணதேவராயர் நாகம நாயக்கரின் மகனாகிய விசுவநாத நாயக்கரை மதுரைக்கு அனுப்பி நாகம நாயக்கரைக் கைது செய்து கொண்டு வருமாறு கட்டளை இட்டார். விசுவநாத நாயக்கர் தன் தந்தையை வென்று, கைது செய்து கொண்டு போய் மன்னரின் முன் நிறுத்தினார்.

தன் எதிரில் நின்ற நாகம நாயக்கரிடம் ராயர், ‘ஏன் இப்படிச் செய்தாய்? என்று கேட்க அதற்குப் பதிலாக, ‘என் மகன் ஆள்வதற்கு அவனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகத்தான் இப்படிச் செய்தேன்’ என்றான். பின்பு ராயர் விசுவநாதனிடம், ‘உன் தந்தையைக் கைது செய்து கொண்டு வந்திருக்கிறாயே; உன் விசுவாசத்தை மெச்சுகிறேன்; இதற்கு உனக்கு என்ன பரிசு வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு விசுவநாதன், ‘என் அப்பாவின் உயிரை எனக்குப் பரிசாகத் தர வேண்டும்’ என்றான். உடனே ராயர், நாகம நாயக்கனைக் கொல்லாமல் விடுத்து, விசுவநாத நாயக்கரை மதுரையின் சுதந்திர மன்னனாக அறிவித்தார். இவ்வாறாக மதுரையில் நாயக்கர் ஆட்சி காலூன்றியது.

அப்போது முதல் தெலுங்கு பேசும் மக்கள் ஆந்திராவிலிருந்து மதுரைக்குப் புலம் பெயர்ந்து வரலாயினர். ராணிக்குப் பட்டாடைகள் தயாரித்துக் கொடுப்பதற்காக மஹாராஷ்டிரத்திலிருந்து சௌராஷ்டிரர்கள் அழைத்து வரப்பட்டனர். ராணிக்கும் அரச குடும்பத்துக்கும் வளையல் போடுவதற்கு காஜுலு பலிஜா என்ற சமூகத்தினர் கொண்டு வரப்பட்டனர். பிழைப்புக்காக ஆந்திராவிலிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்த அந்த மக்களுக்கு மதுரை ஓர் இடமற்ற இடமாக இருந்தது. பின்னர் பல தலைமுறகளுக்குப் பின்னர் மதுரையே அவர்களின் இடமாக உருப்பெற்றது.

என்னுடைய தாத்தா அடிக்கடி சொல்வார்: ‘நாம் ராணிக்கு வளையல் போட வந்தவர்கள்’ என்று.

oOo

3575406950_8f919e31a2_o

எனக்கு ஆறு வயதான போது பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பாண்டிய வேளாளர் தெருவில் இருந்த ஒரு கோவில் மண்டபம்தான் பள்ளிக்கூடம். அந்த மண்டபம் சிலைகள் வடிக்கப்பட்ட தூண்களால் நிறைந்திருந்தது. மாணவர்கள் வரிசையாக அமர்த்தப்படுவார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே தூணின் அருகில் அமரும் அதிருஷ்டம் வாய்க்கும். எனக்கு அந்த அதிருஷ்டம் வாய்த்தது. ஆனாலும் நான் இன்னொரு விதத்தில் துரதிருஷ்டசாலியாக இருந்தேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் பேசிய மொழி எனக்குப் புரியாமல் இருந்தது. நான் பேசிய மொழி அவர்களுக்குப் புரியவில்லை; அவர்கள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. பாடம் படிக்கும் போதும் அணில், ஆடு, இலை போன்ற படங்களைக் காட்டி இதெல்லாம் என்ன என்று கேட்ட போது நான் அந்தப் படங்களைக் காட்டி தெலுங்கில் அவற்றின் பெயர்களைச் சொன்னேன். அனவரும் சிரித்தார்கள். நான் அவமானம் கொண்டேன். சில நாட்களிலேயே நான் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம் பிடித்து நின்றுவிட்டேன். பின்னாளில் ஜெர்மானிய எழுத்தாளரான பிரான்ஸ் காஃப்கா அவரது இளமைக்காலத்தில் இதே போன்ற அடையாளப் பிரச்சனையில் சிக்கி வாழ்ந்ததாகத் தெரிந்து கொண்டேன். வீட்டில் பேசும் மொழி வேறு; வெளியே பேசும் மொழி வேறு. அப்போது நான் என்னை ஒரு மற்றமையாக உணர்ந்தேன். நான் யார்? என் மொழி எது? என்பது போன்ற அடையாளப் பிரச்சனை என்னைக் குழப்பியது. அதன் பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன். இந்தத் தடவை பிரச்சனை இல்லை. மதுரைத் தமிழோடு என்னைத் தகவமைத்துக் கொண்டேன்.

நான் மதுரையில் பிறந்தேன். பத்து ஆண்டுகள் மட்டுமே மதுரையில் இருந்தேன். பின்பு என் தாத்தாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அவர் வீடு, இயந்திரங்கள் அனைத்தையும் மதுரையிலேயே கை கழுவி விட்டுவிட்டு சென்னைக்குப் புலம் பெயர்ந்தார். அவர் சென்னைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே நானும் சென்னைக்குப் புலம் பெயர்ந்தேன். அதுவரை சிலகாலம் நான் என் தாய், தந்தையோடு மதுரையில் வசித்தேன். அப்போது எனக்கு இரண்டு தம்பிகளும் பிறந்திருந்தார்கள். என் தந்தையார் ஒரு ராட்சசனைப்போல் அறியப்பட்டார். சதா சிடுசிடுவென்றிருப்பார். எந்த நேரம் எதைக் கொண்டு யாரை அடிப்பார் என்றே தெரியாது. இதனால், அவர் வீட்டிலிருக்கும் சமயங்களில் நானும் என் இரு தம்பிகளும் வெளியே திரிந்து கொண்டிருப்போம். அவர் தலை மறைந்ததும் வீட்டுக்குத் திரும்புவோம். விரைவிலேயே இந்த வாழ்க்கை நிரல் ஒரு முடிவுக்கு வந்தது. எங்கள் குடும்பம் என்ற நிறுவனம் திவாலானது. என் தந்தையாரை விட்டு என் தாயார் பிரிந்து சென்னைக்கு வர வேண்டியதாயிற்று. கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பிலிருந்து, என் தாயார் தனிக்குடித்தனம் என்ற தனிக்குடும்பமாகப் பிரிந்து போகும் நிலை வந்தது. பின்பு அந்தத் தனிக்குடித்தனம் என்ற நிறுவனம் சிதைந்து என் தந்தை தனிநபராகப் பிரிந்து போனார்.
·

வரலாறு என்பது இரண்டு அலகுகளால் ஆனது. ஒன்று சமுகம் என்கிற பேரலகு (macro unit); இன்னொன்று, குடும்பம் என்கிற சிற்றலகு (micro unit). ஒன்று சிதிலமடையும் போது அது மற்றொன்றை பாதிக்கிறது.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பங்கள் இல்லை. இனக்குழுக்கள் மட்டுமே இருந்தன. அப்போது அக்குழுக்களுக்குள் தனியுரிமை இல்லை. எல்லாருக்கும் எல்லாம் சொந்தமாக இருந்தன. பின்னர் அக்குழுக்கள் தங்களுக்குள் போரிட்டு ஒன்றை ஒன்று அடிமைப்படுத்தின. அதன் விளைவாகவே அரசுகள் தோன்றின. கௌதம புத்தர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் அண்டை இனக்குழுக்களை வென்று ஒரு அரசை உருவாக்கினார். அதில் புத்தருக்கு உடன்பாடில்லை. அது சுதந்திர இனக்குழுக்களை அடிமைகளாக்கும். சர்வாதிபத்தியத்துக்கு வழிகோலும். பொது உரிமை போய் தனிஉரிமை வரும் என்று அவர் கருதினார். இதனால் தன் தந்தையுடன் கருத்து வேற்றுமை கொண்டார். தனது 29வது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறினார். அரசு, பேரரசு போன்ற கற்பனைகளுக்கு பதிலீடாக சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ஆதி இனக்குழு சமூக அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியே அது.

புத்தரைப் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளில் அவர் இன்பவாழ்வைத் துறந்து துறவியானார் என்றும், முதுமை, நோய், மரணம் போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் வெறுத்து அவர் துறவறத்தை மேற்கொண்டார் என்றும் குறிப்பிடப் படுகின்றன. அதே போல் புத்தர் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று வலியுறுத்தி ஆசையைத் துறக்கச் சொன்னார் என்றும் கூறுகின்றனர். உண்மையில் புத்தர் ஆசையைத் துறக்குமாறு சொல்லவில்லை. ‘ஒரேயடியாக சுக போகங்களில் மூழ்கக் கூடாது; அதே போல் முற்றும் துறந்து முனிவராகவும் வேண்டியதில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் பாதையே நமக்குத் தேவை’ என்றார். அதற்கு, ‘மத்திம பதி பாதா’ என்றும் பெயரிட்டார். அவரது நோக்கம் ஆதி இனக்குழு சமூகத்துக்குத் திரும்பிச் செல்வதே இலக்காக இருந்தது. ஆனால், அவருக்குப் பின் வந்த சமூகங்கள் மேலும் மேலும் போரிட்டு சக இனக்குழுக்களையும், அரசுகளையும் அழித்து பேரரசுகளை உருவாக்கின புத்தரின் கனவு நிறைவேறவே இல்லை.

நூறு பேர்களைக் கொண்ட இனக்குழு ‘நாம்’, ‘நமது’ என்ற கூட்டுச் சிந்தனையில் இருந்து, தனிக்குடும்பமாகப் பிரிந்த போது, அந்த ‘நாம்’ ‘நமது’ போன்ற சொற்கள் குறுகிய அர்த்தத்தில் ஒலித்தன. பின்னர் தனிக்குடும்பங்கள் தனிக்குடித்தனங்களாக மாறிய போது தனி நபர்கள் உருவானார்கள். ‘நாம்’ என்ற கூட்டு மனம் ‘நான்’ என்ற ஒற்றை மனமாக மாறியது.

மதுரையில் கூட்டுக் குடும்பமாக இருந்த என் தாத்தாவின் குடும்பம் சிதறுண்டு, தனி நபர்களை உருவாக்கியது. ‘நாம்’ என்ற கூட்டு மனம் சிதைந்து ‘நான்’ என்று ஒற்றை மனமாக மாற்றம் கொண்டது.

நான் சென்னையில்தான் படித்தேன். வளர்ந்தேன். அதன் பிறகு எப்போதாவது விசேஷம் என்றால் மட்டுமே மதுரைக்குப் போவது வழக்கம்.அப்போதெல்லாம் என் மனம் துள்ளும். இதுவல்லவா என் ஊர். இதோ இந்தத் தெருவில் கோலி விளையாடினேன். இங்குதானே அலைந்து திரிந்தேன் என்றெல்லாம் மனம் பூரிக்கும்.

ஒவ்வொரு முறை மதுரைக்கு நான் போகும் போதும் மதுரை மாறி வந்ததை நான் கண்டேன். ஊர் மட்டுமல்ல, ஊரிலிருந்த உறவினர்களின் மனமும் கூடத்தான். கூட்டுக் குடும்பமாக இருந்த போது என் உணவு உன் உணவு என்று பார்க்காத என் பாட்டிகளில் ஒருவர் பின்னாளில் என் எதிரிலேயே தனக்கு மட்டும் சாப்பாடு போட்டுக் கொண்டு சாப்பிடும் அவலத்தைக் கண்டேன். ஆரம்பத்தில் மதுரைக்கு எப்போது போனாலும் ஒருவாரம் தங்கலாம்; சாப்பிடலாம் என்றிருந்த நிலை மாறி, மதுரைக்கு வந்த அன்றே புறப்பட்டாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. உறவினர்கள் யாரும் என்னைத் தங்கி விட்டுப் போகுமாறு சொல்லவில்லை. ‘எத்தனை மணி பஸ்?’ என்றுதான் என்னைக் கேட்டார்கள். அப்போதுதான், மதுரைதான் என் இடம் என்றும் சென்னை இடமற்ற இடம் என்றும் நினைத்தது பிசகு என்று உணர்ந்தேன். ஏனெனில் எனக்கு இப்போது மதுரையில் சொந்த வீடு இல்லை; நிலபுலன்கள் இல்லை; தொழில் இல்லை. எனில், மதுரை என் சொந்த ஊராக எப்படி இருக்க முடியும் என்று யோசித்தேன். இடமோ அல்லது இடமற்ற இடமோ எதுவாக இருந்தாலும் அதை இடத்தை (place) மட்டும் வைத்துப் பார்க்கக் கூடாது; அதன் இருப்பை (position) வைத்தும்தான் பார்க்கவேண்டும் என்று தெரிந்து கொண்டேன். எனது பிரச்சனை எனக்கு வேர்கள் இல்லாததுதான் என்றும் புரிந்து கொண்டேன்.