அஞ்ஞாத வாசம்

“ஹா! ஹியர் கம் த த்ரீ மஸ்கிடியர்ஸ்” என்று ஜூல்ஸ் அருகிலிருந்த மோகனாவிடம் சொல்ல, பதிலுக்கு “டிட் யூ மீன் டு சே த த்ரீ ஸ்டூஜஸ்?” என்றபடி புன்னகைத்துக் கொண்டே வந்து உட்கார்ந்து கொண்டான் ராஜன். கூடவே வந்த வின்சென்ட்டும், சின்டியும் ஆளுக்கொரு நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு அமர்ந்தனர். அந்த காஃபெடேரியாவில் அத்தனை கூட்டம் இல்லை. அங்குமிங்குமாக சிலர் சிதறிக் கிடந்தனர். அவர்கள் மேசைகளில் எல்லாம் பண்டங்கள் இருந்ததோ இல்லையோ, மடிக்கணினிகள் இருந்தன. இவர்களின் மேஜையும் விதிவிலக்கில்லை. ஏற்கனவே மோகனாவும், ஜூல்சும் ஆளுக்கொரு மடிக்கணினியை முறைத்துக் கொண்டிருக்க, பின் வந்த மூவரின் கைகளிலும் அதே எந்திரம்! பெரும்பாலும் எல்லோரின் கணினித் திரையிலும் ஏதோ ஒரு அட்டவணை… அதன் அத்தனை கட்டங்களிலும் பரவிக் கொண்டு ஏகப்பட்ட இலக்கங்கள்! இலக்கங்கள் இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால் இவர்களின் வாழ்க்கையே இலக்கங்களால் இயக்கப்படுகிறது… எல்லோரும் முதலீட்டு வங்கியாளர்கள் (investment bankers).

காஃபெடெரியாவின் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே அந்த பின்மாலைப் பொழுதின் ஜன நடமாட்டம் என்றும் இருப்பது போல பரபரப்பாக இருந்தது. தினம் தினம் வளர்ந்து வரும் குளிருக்கு மரங்கள் எல்லாம் தங்கள் இலைகளின் நிறங்களை மாற்றிக் கொண்டிருந்தன. உயர்ந்த கட்டிடங்களின் நெற்றியில் ஊர்ந்து செல்லும் வண்ண வண்ண டிஜிட்டல் எழுத்துக்கள், அவற்றை விட மெதுவாய் வளைந்து வளைந்து நகரும் மஞ்சள் நிற டாக்சிகள், சாலையோரத்தில் ஹாட் டாகும், ப்ரெட்சலும் விற்கும் தள்ளுவண்டி வியாபாரிகள், அங்கங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகள், அவர்களை கண்டும் காணாமலும் கால்களில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு எதையோ தேடி ஓடும் கோட்டணிந்த வெள்ளை காலர் ஊழியர்கள், இவற்றைப் பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல் நின்றபடியே எப்போதும் சீறிக்கொண்டிருக்கும் முரட்டு எருது என்று மற்றுமொரு இலையுதிர்காலத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது மன்ஹட்டன், நியூயார்க்.

“மோ! ஐ ஹவ் சென்ட் யு அன் ஈமெயில்” என்று சின்டி சொன்னாள். “யா! வில் லுக் அட் இட்” என்று ஒரு கணம் தலையைத் தூக்கி பதில் சொல்லிவிட்டு மறுபடியும் கணினித்திரையில் கவனத்தைத் திருப்பினாள் மோகனா. மோகனா நடராஜன்… அந்த நிதி நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளாக இருக்கிறாள். சின்டியோ புதியவள். வேலைக்கு வந்து ஓர் ஆண்டுதான் ஆகிறது. கற்றுக்குட்டி. இன்னும் பெரும்பாலான அலுவலுக செயல்பாடுகளுக்கு பிறரின் உதவியை நாடுகிறாள். அதிலும் மோகனாவை ரொம்பவும் தேடுவாள். மோகனாவும் அவளுக்கொரு mentor- ஆகவே நடந்து கொண்டாள். சந்தேகங்கள் சிக்கலோ, சல்லியோ, எப்படி இருந்தாலும் சுளிக்காமல் சலிக்காமல் உதவி வந்தாள்.

“கிவ் மோஹி எ பிரேக் டாக் (doc)” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் வின்சென்ட். அவன் டாக் (doc) என்று சொன்னது சின்டியை. அங்கிருக்கும் எம்.பி.ஏக்களுக்கு மத்தியில் பி.எச்.டி பட்டம் பெற்றவள் அவள் ஒருத்தி மட்டுமே! சொல்லபோனால் அதுவே மோகனாவுக்கு ஒரு ஆச்சரியம். பி.எச்.டியைப் படித்து விட்டு இந்தப் பெண் ஏன் இங்கு வந்து குப்பைகொட்ட வேண்டும்? எங்காவது ஒரு பல்கலைக்கழகத்தில் நிம்மதியாக பாடம் எடுக்கலாமே? என்று தோன்றியதுண்டு. உண்மையை சொன்னால் மோகனாவுக்கு இந்த வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. தினமும் காலை ஐந்து மணி அளவில் அலைபேசியில் வந்து குவிந்திருக்கும் மின்னஞ்சல்களுடன் தொடங்கும் நாள், மடிக்கணினியில் மறுவினைகளாக மாறி, சுரங்க ரயிலில் பயணித்து, பிரசண்டேஷங்களாகவும், ஸ்பிரட்ஷீட்களாகவும், டாகுமென்ட்களாகவும் வளர்ந்து, நிறைய வாதாடி, எண்களை அராய்ந்து, மீண்டும் ஆவணங்களை எல்லாம் திருத்தி, சுரங்க ரயிலில் திரும்பி, மறுபடியும் மின்னஞ்சல்களோடு நள்ளிரவில் முடியும். இடையே சில நிமிடங்கள் மட்டும் கணவனுக்கும், மகனுக்கும். அதுவும் பல தினங்களில் தூங்கும் குழந்தைக்கு ஒரு முத்தம் என்கிற அளவோடு நின்று போகும்!

meeting01

மோகனா இப்படியொரு வாழ்க்கையை வாழ விரும்பியதேயில்லை. பள்ளிக் காலத்தில் அவள் கொண்டிருந்த கனவுகளே வேறு. ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற வேண்டும், பி.எட் படிக்க வேண்டும், ஆசிரியை ஆக வேண்டும், பயின்ற பரதத்தை சிறுவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும், கணவன் மற்றும் குழந்தைகளின் தேவைகளையை பூர்த்தி செய்யும் ஒரு அன்பான குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும், ஆரவாரம் இல்லாத ஏதோ ஒரு இந்திய சிறுநகரத்தில் பெரிய தோட்டத்துடன் கூடிய தனி வீட்டில் நிறைய பூச்செடிகளுக்கு மத்தியில் வசிக்க வேண்டும்… இப்படியாகத்தான் இருந்தது. இதில் ஒன்று கூட நிறைவேறாமல் போனது அவளுக்கு வருத்தம் தான். அதிலும் அவள் உயிருக்கு உயிராக விரும்பிய பரதத்தை விட்டது? ஹ்ம்ம்…அவள் கடைசியாக ஆடி பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. கல்லூரி கலை நிகழ்ச்சியில் ஆடியது. அது ஒரு சந்தோஷமான தினம். காலை ரங்கோலி போட்டி, மதியம் கொலாஜ், பின் மாலை நடனப் போட்டி என்று பம்பரமாக சுற்றிய தினம். இன்றும் பம்பரமாகத் தான் சுற்றுகிறாள்…ஆனால்?

சார்டட் அக்கௌன்டன்ட் அப்பாவுக்கும், வங்கி மேலாளர் அம்மாவுக்கும் பிறந்த மகளுக்கு பன்னிரெண்டாவது முடித்த போது கொடுக்கப்பட்ட சாய்ஸ்கள் இரண்டே – பொறியியல் படிப்பு இல்லையென்றால் சி.ஏ.! பொறியியலைத் தேர்ந்தெடுத்தாள். நான்காண்டுகளுக்குப் பிறகு மென்பொருளில் ஒரு வேலை. ஏதோ ஒரு உந்துதலில் அதை உதறி ஜிமாட் எழுதி, அமெரிக்கா வந்து, கெல்லாக்ஸில் எம்.பி.ஏ முடித்து, இன்று வால் ஸ்ட்ரீட்டில் இருக்கும் இந்த நிறுவனத்தில் நேரம் கெட்ட நேரத்திற்கு எதையோ சாப்பிட்டுக்கொண்டு மெர்ஜரையும், ஆக்குசிஷனையும் அலசிக் கொண்டிருக்கிறாள். சப்பில் வீடு திரும்பும் போது பல முறை தோன்றும்… எதற்காக இப்படியொரு வாழ்க்கை என்று? நாளைக்கே எழுதி கொடுத்துவிடலாமா என்று யோசிப்பாள். மறுகணமே குழம்பிப் போய் அவள் கைகடிகாரத்தின் பட்டையில் உள்ள கட்டங்களையோ, இல்லை ரயில் பெட்டியில் ஒட்டியிருக்கும் விளம்பரங்களையோ எண்ணத் தொடங்குவாள். அவள் அப்படித்தான். குழப்பான வேளைகளில் எதையாவது எண்ண ஆரம்பிப்பாள். அது போன்ற தருணங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அவள் கையாளும் ஒரு தந்திரம். இப்படி எண்ணுவதால் தான் என்னவோ தான் இந்த வேலைக்கு வந்தோமோ என்று அவளுக்கே கூட சில முறை தோன்றியிருக்கிறது!

ஆனால் சின்டிக்கோ மோகனா ஒரு நாயகியாகத் தெரிந்தாள். சின்டி யுவான்… இரண்டாம் தலைமுறை அமெரிக்க சீனப் பெண். எழுபதுகளில் பிழைப்புக்காக வட கிழக்கு சீனாவில் இருக்கும் ஒரு சிற்றூரில் இருந்து குடிபெயர்ந்த ஒரு எளிய, அதிகம் படித்திராத, ஆங்கிலம் பேச வராத தம்பதியர்க்கு இரண்டாவதாகப் பிறந்தவள். சீன உணவகத்தில் சமையல் செய்த அப்பாவும், பிலாடீசும், யோகாவும் கற்றுத்தந்த அம்மாவும் தங்கள் மகள்களுக்கு கல்வி மட்டும்தான் பாதுகாப்பு என்று உணர்ந்து எப்படியோ பாடுபட்டு படிக்க வைத்தனர். அவளும் அதை உணர்ந்தே நன்றாக படித்தாள். வார்ட்டனில் ஃபினான்சில் முனைவர் பட்டம் பெற்ற அன்று அவள் அம்மா நிற்காமல் அழுதுகொண்டே இருந்தது அவளை என்னவோ செய்தது.

இங்கே மோகனாவை சந்தித்ததில் இருந்து அவள் பால் ஈர்க்கப்பட்டு, அவளைப் போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறாள். மோகனாவுக்கும் சின்டியைப் பார்க்கும் போதெல்லாம் ஏழு வருடங்களுக்கு முன்பு இருந்த தன்னையே பார்ப்பது போல தெரியும். கெட்டிக்காரியாக இருக்கிறாள். கடினமாக உழைக்கிறாள். கற்றுக்கொள்ளத் துடிக்கிறாள். அவள் எழுதித் தரும் வால்யுவேஷன் ரிப்போர்ட்டுகளே சொல்லிவிடும் வேலை மீது அவள் கொண்டிருக்கும் ஈடுபாட்டை. இன்னும் கொஞ்சம் போல சில நுணுக்கங்களை அவளுக்கு சொல்லித் தந்தால் பொதும், எங்கேயோ போய்விடுவாள் என்று தோன்றியது.

சின்டிக்கு அமைந்தது போல மற்ற புதியவர்களான ராஜனுக்கும், வின்சன்ட்டுக்கும் ஒரு வழிகாட்டி அமையவில்லை. அதைப் பற்றி வின்சென்ட் கவலைப்படவில்லை. அவன் தந்தை இதே வால் ஸ்ட்ரீட்டில் ஸ்டாக்குகளை வியாபாரம் செய்திருக்கிறார். பிறப்பால் நியூயார்க்கர் ஆன அவன் யான்கீ அணியைப் பின்தொடர்ந்ததை விட, NYSE-ஐயும், NASDAQ-ஐயும் தொடர்ந்ததுதான் அதிகம். பதிமூன்று வயதிலேயே பங்குகளின் ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவனிக்கத் தொடங்கிவிட்டான். பதினாறு வயதில் அப்பாவோடு சரிக்கு சரியாக முதலீட்டு கொள்கைகளை எல்லாம் விமர்சனம் செய்திருக்கிறான். எந்த நிறுவனம் எப்போது IPO அறிவிக்கும் என்று துல்லியமாக கணிப்பான். பெரும்பாலும் அது சரியாகவே இருக்கும். எமகாதகன்! அவன் ரத்தத்தில் பங்கு வியாபாரம் கலந்திருக்கிறது என்று எழுதினால் அது க்ளிஷேவாகிவிடும்!

ஆனால் ராஜனுக்கு அப்படி இல்லை. நிதியியலைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும் பெரிய ஞானம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவன் ராஜன்… ராஜன் அரோரா. லக்னோ பக்கத்தில் ஒரு ஊரில் அஞ்சல் ஊழியாரான தந்தைக்கும், ஐந்தாவது வரை மட்டுமே படித்த தாய்க்கும் மூத்த மகனாப் பிறந்து, வீட்டிலிருந்து நூற்றியிருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கான்பூர் ஐ.ஐ.டிக்கு சென்று மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, அதற்கென கிடைத்த வேலைக்கு செல்லாமல் அமெரிக்கா வந்து பிசினஸ் மானேஜ்மென்ட் படித்து இங்கே அடைக்கலம் புகுந்து விட்டான். ஏறக்குறைய மோகனாவைப் போலதான் இவனும். ஆனால் புதியவனாக இருப்பதால் தன்னை நிலைநாட்டிக் கொள்ள, பத்திரப்படுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டும் அவனுக்கு. அதனால் தான் ‘ஸ்டூஜஸ்’ மாதிரியான தத்துபித்து பதில் எல்லாம். பெரும்பாலும் எல்லோரும் அதற்கு இப்போது பழகிவிட்டனர்.

அதிலும் ஜூல்ஸ் இருக்கிறானே… ரொம்ப தலைகனம் பிடித்தவன். தன்னை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்பது ராஜனின் எண்ணம். ஜூல்ஸ் தான் இந்த கூட்டத்திலேயே அனுபவம் மிக்கவன். பத்து ஆண்டுகளாக இங்கே இருக்கிறான். போஸ்டன் பக்கத்தில் ஒரு ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். ஹார்வார்டில் எம்.பி.ஏ படித்தவன். அதில் ஒரு தனி கர்வம். முதல் சந்திப்பில் ராஜனிடம் தன்னை, “ஐயம் எ க்ரிம்சொனைட்” என்று அறிமுகம் செய்து கொண்டான். ராஜனுக்கோ அது புரியவில்லை. “எக்ஸ்க்யூஸ் மீ” என்றவுடன் ஒரு அலட்சிய புன்னகையுடன் “ஹார்வார்ட்” என்றான். கொழுப்பு! இப்போது பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சாமின் இடத்திற்கு வர காத்திருக்கிறான். சாம் – இவர்களின் மேலாளர். ‘பிக் யூ’ என்று இவர்கள் மத்தில் அழைக்கப்படுபவன். சாம், அங்கிள் சாமாக வளர்ந்து, அங்கிளிடமிருந்து சாம் விலகி, பிக் சேர்ந்து, இப்போது பிக் யூவாக வந்து நிற்கிறது. சாமைப் போல மோகனாவின் பெயரும் பல திரிபுகளை சந்தித்திருக்கிறது. பள்ளிக் காலத்தில் ‘மோகனாம்பாள்’ என்று கிண்டலுக்கு ஆளான பெயர், இங்கே மோ, மோஹி, மொஹின், மொஹான், மொஹானி… என்று வளர்ச்சி கண்டிருக்கிறது. மோகனாவுக்கு சில பெயர்கள் பிடிக்கும். சிலது பிடிக்காது. அதிலும் மொஹானி! ச்சீ! என்ன பேரோ? மோகினி பிசாசு மாதிரி. சாம் மட்டும் தான் அவளை அப்படி அழைப்பான். எத்தனை முறை திருத்தினாலும் புரிந்துகொள்வதில்லை.

அவனுக்காகத் தான் இப்போது காத்திருக்கிறார்கள். தினமும் நடக்கும் சந்திப்பு. இதில் அன்றைய தினம் தயார் செய்த அறிக்கைகள் எல்லாம் சீர் பார்க்கப்படும். மறு நாளைக்கான பணிகளும் திட்டமிடப்படும். கூட்டம் முடிந்த பின் குறைந்தது நான்கு மணி நேரமாவது வேலை இருக்கும். அதற்கு பிறகே சுரங்க ரயில், மஞ்சள் டாக்ஸி, குழந்தைக்கு முத்தம், இத்யாதி, இத்யாதி…

ந்த திங்கட்கிழமை வழக்கத்தை விட பல மடங்கு பரபரப்பாக விடிந்தது. அமெரிக்காவின் நான்காவது பெரிய முதலீட்டு நிறுவனமான லீமன் பிரதர்ஸ் திவால் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது பெரிய நிறுவனமான மெரில் லின்ச்சும் கடனில் மூழ்கி யாருடனாவது கைகோர்த்துக் கொள்ள தவித்துக் கொண்டிருந்தது. வால் ஸ்ட்ரீட் உறைந்து போனது. பங்கு சந்தை பலத்த அடி வாங்கியது. யாருக்கும் வேலை ஓடவில்லை. சொல்லப் போனால் அன்று மாலை வரை வேலையில் தங்குவோமா என்ற பீதி கவ்விக் கொண்டது. அடுத்து வந்த நாட்களும் அதை அதிகமாக்கின. பெரிய பெரிய நிதி நிறுவனங்கள் எல்லாம் விலைக்கு வந்தன. அவற்றின் பங்குகளோ பாதாளத்துக்குச் சென்றன. தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கச்சா எண்ணெயின் விலை சடாரென சரிந்தது. முப்பதுகளுக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் மாபெரும் பொருளாதார நெருக்கடி என்ற செய்திகள் வந்தன.

“ஐ நியூ திஸ் வாஸ் கமிங்” என்று வின்சென்ட் சொல்லிக்கொண்டே இருந்தான். அமெரிக்க ஜனாதிபதி முதல், அநியாயத்துக்கு வீட்டுக் கடன்களை அள்ளிக் கொடுத்த வங்கிகள் வரை அத்தனை பேரையும் வசை பாடினான். அவன் பேசிய பத்து வாக்கியங்களில் பதினாறு எஃப் வார்த்தைகள் இருந்தன. புரிந்தும் புரியாமலும் சின்டியும், ராஜனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அங்கே மோகனாவும், ஜூல்சும் இல்லை. இப்போதெல்லாம் சந்திப்புகள் பெரும்பாலும் சிறு சிறு குழுக்களாகவே நடக்கின்றன. புதியவர்கள் மட்டும், சீனியர்கள் மட்டும், அமெரிக்கர்கள் மட்டும், பெண்கள் மட்டும்…இப்படி.

ஆட்டம் கண்டிருக்கும் நிறுவனத்தில் ஆட்கள் குறைந்துகொண்டே வந்தார்கள். இவர்கள் அணியிலும் ஆட்குறைப்பு உண்டு என்று உறுதியானது. குறைந்தது இருவருக்காவது வேலை போகும் என்று சொல்லப்பட்டது. அதில் புதியவர்கள் தான் மாட்டுவார்கள் என்று வின்சென்ட் சொன்னான். ராஜனுக்கும், சின்டிக்கும் அது சரியாகவே பட்டது. தனக்கு வேலை போனால் அநேகமாக தன் கேர்ள் ப்ரெண்ட் தன்னை விட்டு விலகி விடுவாள் என்றான். மூன்று மாதங்களுக்குள் இன்னொரு வேலை கிடைக்கவில்லை என்றால் தன்னுடைய மோட்டார் சைக்கிளை விற்க வேண்டிருக்கும் என்றான். “பட், யு டோன்ட் ஹவ் டு வொர்ரி டாக். ஜஸ்ட் கெட் பாக் டு ஸ்கூல் அண்ட் டேக் சம் டீச்சிங் பொசிஷன்” என்று சின்டியை சீண்டிவிட்டு “டூ யு ஹவ் எனி ப்ளான்ஸ் பட்டி (buddy)?” என்று ராஜனிடம் வந்தான். ராஜனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ஐ டோன்ட் நோ. கஸ் ஐ வுட் ரைட் எ ஸ்டோரி ஆன் மை லைஃப் அண் செல் இட் டு ஹாலிவுட்” என்று என்னமோ தோன்றியதை சொன்னான். “ட்யூட்! ஹாலிவுட் வில் நெவெர் பை யுவர் ஸ்டோரி. தே பேர்லி ஹவ் டைம் டு மேக் சீக்வல்ஸ். ட்ரை சம் ஆன்லைன் மாகசின்” என்று சொல்லி பலமாக சிரித்தான். ராஜனுக்கும், சின்டிக்கும் சிரிப்பு வரவில்லை.

ராஜனுக்கு விசா, கிரீன் கார்டு குறித்த கவலைகள். இந்த குழுவிலேயே தான் தான் நோஞ்சானாக இருப்பதாக உணர்ந்தான். வேலைக்கு சேர்ந்து ஓர் ஆண்டுதான் ஆகிறது. விசாவில் இருக்கிறான். உயரதிகாரிகளின் செல்லப் பிள்ளைகளின் பட்டியலிலும் இல்லை. சின்டிக்கு மோகனா இருப்பது போல தன்னைப் பற்றி மேலிடத்துக்குச் சொல்ல ஒரு வழிகாட்டியும் இல்லை. வேலையை விட்டு நீக்க எல்லா தகுதிகளும் கச்சிதமாக இருக்கும் போது எப்படி சிரிப்பு வரும்? இந்த தடியன் எப்படி சிரிக்கிறான் பாரேன்! சும்மா பேச்சுக்கு மோட்டார் சைக்கிளை விற்பேன் என்றெல்லாம் அளக்கிறான். சாலா! அடிக்கடி ஜூல்சுடனும், பிக் யூவுடனும் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

சின்டியோ புதிதாக வாங்கவிருக்கும் வீட்டை பற்றி கவலைக் கொண்டிருந்தாள். சொந்த வீடு… பெற்றோரின் நாற்பதாண்டு கனவு! அம்மாவின் கண்ணீர் துளி அவள் கண்ணில் ஒரு கணம் வந்து போனது. நிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் செய்திகள் ரொம்பவும் அச்சமூட்டின. இதெல்லாம் உண்மையா? யாரிடம் சென்று கேட்பது என்று அவளுக்கு புரியவில்லை. அதே நேரத்தில் கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. பயத்தை உள்ளேயே அடைத்து வைத்திருப்பது தான் எத்தனை கொடுமையான விஷயம்!

அடுத்த சந்திப்பில் மோகனாவிடம் கேட்டேவிட்டாள். “மோ! இஸ் இட் சர்டன் தட் வி ஆர் கோன்ன லூஸ் டூ ந்யூபீஸ் ஃப்ரம் அவர் டீம்?” மோகனா கொஞ்ச நேர அமைதிக்குப் பின் என்னமோ வழவழத்தாள். இப்போது இருக்கும் நிலைமையில் எதுவும் நிச்சயம் இல்லை. புதியவர்களோ, அனுபவம் மிக்கவர்களோ, தேவையில்லை என்றால் துரத்திவிடுவார்கள். யார் கண்டார்? நம் குழுவையே கலைத்து விட்டாலும் ஆச்சரியமில்லை. “லெட்ஸ் ஹோப் ஃபோர் தி பெஸ்ட் அண் பி ப்ரிபேர்ட் ஃபோர் தி வொர்ஸ்ட்” என்று சம்பிரதாயமாக முடித்தாள். அவள் பேசிக் கொண்டிருக்கையில், அருகில் இருந்த ஜன்னல் தட்டிகளின் நிழல் அவள் முகத்தில் விழுந்து அதை கருப்பும் வெள்ளையுமாக வகுத்துக் கொண்டிருந்தன.

மோகனா இதைச் சொல்லி சரியாக பதினெட்டு மணி நேரங்களுக்குப் பிறகு மற்றுமொரு தகவல் கசிந்தது. அதைக் கேட்டு நிம்மதி கொள்வதா இல்லை மேலும் கலவரப்படுவதா என்று சொல்ல முடியாதபடி இருந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் இவர்கள் குழுவில் இருந்து ஒருவர் மட்டுமே நீக்கப்படுவார் என்பதே அது.

ராஜன் முடிவு செய்து விட்டான். அது தான் தான் என்று. இன்றே இந்த வேலையில் இறுதி நாள் என்று தனக்குத் தானே சொல்லித் தயார் செய்து கொண்டான். இந்தியா திரும்பவதற்கும் ஆயத்தமாக வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டான். சின்டி வந்ததிலிருந்து மோகனாவை சந்திக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். முடியவில்லை. மோகனா காலையிலிருந்து யார் கண்ணிலும் தென் படவில்லை. பட்டாலும் பேசவில்லை. வின்சென்ட் காலையில் ஜூல்சுடனும், பிக் யூவுடனும் காபி சாப்பிட்டான். பின் அமைதியாக தன் கணினியுடன் ஐக்கியமாகி விட்டிருந்தான்.

மதியம் ஜூல்சும், மோகனாவும் சாமை சந்தித்தார்கள். அவர்கள் மட்டும். ஒருவர் பின் ஒருவராக. ஜூல்ஸ் முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் திரும்பினான். மோகனாவோ களைத்துப் போன முகத்துடன் திரும்பினாள். யாருடனும் பேசாமல் தன் இருக்கைக்கு வந்து ஒரு பாட்டில் தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

ஒரு மணி நேரத்திற்குப் பின் சாம் சின்டியை அழைத்தான். சரியாக இருபத்தி மூன்று நிமிடங்களுக்குப் பின் கையில் ஒரு காகிதத்துடன் அவள் திரும்பினாள். முகம் இறுக்கமாக இருந்தது. தன் இருக்கைக்கு வந்து பையில் தன் பொருட்களை நிரப்பிக் கொண்டாள். மடிக்கணினியை சாமிடம் ஒப்படைத்து விட்டு நிதானமாக வாசலை நோக்கி நடந்தாள். யாருடனும் எதுவும் பேசவில்லை. ஆனால் மோகனாவை மட்டும் பார்த்து, “தேங்க்ஸ் எ லாட் ஃபோர் எவெரிதிங்” என்றாள்.

இரவு சப்பில் மோகனா திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் மனதில் சின்டி சொன்ன கடைசி வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்தன… “தேங்க்ஸ் எ லாட் ஃபோர் எவெரிதிங்”. அவளால் அதை நிறுத்த முடியவில்லை. சுற்றிப் பார்த்தாள். இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருந்த பெண் வைத்திருந்த கைப்பையில் அடுக்கடுக்காக அறுகோணிகள் வரைப் பட்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.