The Wolf of Wall Street – திரைப்படம்

LeonardoCaprio

முற்றத்தில் மலம்

மகிழ்வைத் தேடி (In Pursuit of Happyness) என்றொரு  ஹாலிவுட் திரைப்படம் 2006 ஆண்டு வெளியானது. க்றிஸ் கார்ட்னர் என்னும் பங்குச் சந்தைத் தரகரின் உண்மைக் கதை. வீடின்றி, வேலையின்றி, தன் சிறு மகனோடு தெருவில் நின்று போராடி, வென்ற மனிதனின் கதை அது.  தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவு, தனி மனித உழைப்புக்கு அமெரிக்கா என்னும் சுதந்திர பூமி தரும் அங்கீகாரம் என மிக உன்னதமான கனவுகளைத் தந்த படம். யதார்த்தமான கதையமைப்பு, வில் ஸ்மித் மற்றும் அவர் மகனின் அளவான நடிப்பு என மனதில் இனிமையாக நின்று போன ஒரு படம்.

கனவு உலகம் அப்படியே இருந்திருக்கலாம்.

பங்குச் சந்தையின் ஓநாய் (wolf of Wall street) என்னும் படத்தை எடுத்து கெடுத்து விட்டார்கள் அந்தக் கனவை. இது முந்தைய படத்தின் இன்னொரு பக்கம். அமெரிக்கா என்னும் சுதந்திரச் சந்தை நாட்டின் வெளியே தெரியாத பக்கம் (under belly). ஆனால், பெரும்பாலும், இந்த under belly தான் சந்தைப் பொருளாதார ஆட்டங்களின் ஆதார ஸ்ருதியாக இருக்கிறது.

ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்னும் பங்குச் சந்தைத் தரகரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம்.  கடுமையாக உழைத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி, தனக்கும் பணம் சேர்க்கும் கனவோடு, அனுபவமில்லா இளைஞனாக ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தில் சேரும் ஜோர்டானுக்கு ஞானஸ்னானம் செய்விக்கிறார் முதலாளி. முதலீட்டாளனை ஏமாற்றி, மேலும் மேலும் பங்குகளை வாங்க, விற்க வைத்து, இரண்டு முறையும் தரகு பெற்றுக் கொள்வதே அடிப்படைப் பாடம். முதலீட்டாளனை, தன் முதலை வெளியே கொண்டு செல்ல விடாமல், மேலும் மேலும் அச்சுழலில் அமிழ்த்துவதே ஒரு பங்குச் சந்தைத் தரகன் செல்வந்தராகும் வழி என்னும் “உண்மையை” எடுத்துச் சொல்லி, தொட்டுக் கொள்ள கோக்கேயினையும் இதர போதைப் பொருட்களையும் பழக்கிவைக்கிறார். தாய் முலையறியும் சேய் போலப் பிடித்துக் கொள்கிறான் ஜோர்டான்.

ஒரு “கறுப்பு திங்களன்று (1987)” அவர் வேலை செய்த நிறுவனம் கவிழ்ந்துவிட வேலையின்றித் தவிக்கும் அவரை, அவர் மனைவி, penny stocks என்னும் சில்லறைப் பங்குகளில் வியாபாரம் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவை பங்குச் சந்தைகளில் விற்கப்படாமல், தனிப்பட்ட முதலீட்டாளர்களிடம், நேரிடையாக விற்கப் படுபவை. அதிக லாபம் என்னும் கொழுத்த புழுவை மாட்டிப் பிடிக்கும் மீன் விளையாட்டு. அங்கே, அடிப்படையில் தான் ஒரு மிகச் சிறந்த விற்பனையாளன் எனக் கண்டு கொள்ளும் ஜோர்டான், தன் அபார்ட்மெண்டில் வசிக்கும் இன்னொரு விற்பனைத் துறை ஆசாமியோடு தனியே ஒரு நிறுவனம் துவங்குகிறான். உடன் பங்குதாரார்களாக அவனின் நண்பர்கள். அவர்களில் சிலர் கோக்கெயின் வியாபாரிகளும்கூட.

சட்டத்தின் விதிகளை மீறி நடத்தப்படும் சூதாட்டத்தில் மிக விரைவில் பணம் சேர, மனைவியிடம் விவாகரத்து, இன்னொரு திருமணம், விபச்சார உறவுகள், போதைப் பொருட்கள் என அதீத செல்வம் ஆர்ப்பரிக்கும் கடலில், நுரைச் சறுக்கு விளையாடுகிறான். சாட்சிகள் இல்லாத விதிமீறல்கள் இல்லை – ஒரு நாள் சிக்கிக் கொள்கிறான். அவனை அமெரிக்காவின் அரசு துப்பறியும் நிறுவனமான FBI மோப்பம் பிடிக்கத் துவங்குகிறது. FBI நிறுவன அதிகாரிகளுக்கு அமெச்சூர்தனமாக லஞ்சம் கொடுக்க முயன்று விஷயம் மேலும் சிக்கலாகிவிடுகிறது.

திரைக்கதை, வழக்கமாக ஒரு துவக்கம், முடிச்சு, க்ளைமேக்ஸ் எனச் செல்லாமல், நடு நடுவே மிக அழுத்தமான காட்சிகள், நாயகனின் கதை சொல்லல் என நகர்கிறது. நாயகனின் ஆளுமை மிக அழுத்தமாக மீண்டும் மீண்டும் பதியப்படுகிறது. அவன் எதை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் விற்று விடுவான். தன் நாடகத்தனமான பேச்சினாலும், பாவனைகளாலும், தன் முன்னே நிற்கும் கூட்டத்தை, ஒரு வெறி கொண்ட குழுவாக மாற்ற அவனால் முடியும். துவக்கத்தில் வெற்றியின் அடையாளமாகத் துவங்கும் அந்தத் திறன், ஒரு காலத்தில் அவனாக மாறிவிடுகிறது. மாட்டிக் கொண்ட பின், குற்றத்தை ஒப்புக் கொண்டு, வேலையை விடச் செல்லும் கணத்தில் (அவ்வாறு செய்தால், அவனது செல்வம் பாதுகாக்கப் படும் என்ற போதும்), அவன் முன்னே நிற்கும் கூட்டத்தைப் பார்த்த வெறியில் பழக்க தோஷத்தில், தன் பேச்சின் திறன் முன்னே, அவனையே இழந்து, மீண்டும் வேலை செய்ய முடிவெடுக்கிறான். தன் திறன் மீது கொண்ட மமதையால் வீழும் அந்தப் பரிதாபமான கணம் நீளமாக, மிக அழுத்தமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. இப்படிப் பல நீண்ட காட்சிகள் படமெங்கும் இருப்பது, வழக்கமான படங்களில் இருந்து ஒரு மாறுதலான ஒன்று.

சட்டத்தை மீறி செயல்படும் ஜோர்டானின் நிறுவனத்துக்கு, FBI ஒரு ஓலை அனுப்ப அவர் நண்பர் டோன்னி, அதைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டு, அதன் மீது, சிறுநீர் கழிக்கும் காட்சி, “world has enough to meet everyone’s need – but not enough to meet one man’s greed” என்னும் காந்தியின் வாசகத்தை நினைவுறுத்துகிறது. ஜோர்டானைக் கைது செய்து சிறையில் தள்ளும் போலிஸ் அதிகாரி, வேலை முடிந்து, ஸப்வே ரெயிலில் மக்களோடு மக்களாகச் செல்கிறார்.  ஏழ்மையும், மௌனமும் சூழ்ந்திருக்கும் மக்களூடே. இந்தக் காட்சி ஒரு கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.

மொத்தத் திரைப்படத்தில், நான்கெழுத்து ஆங்கிலக் கெட்ட வார்த்தை 519 அல்லது 560 முறை வருவதாகக் கூறுகிறார்கள். மலத்தைக் குறிக்கும் இன்னொரு கெட்ட வார்த்தையும் அவ்வாறே. அத்து மீறலான பாலுறவுக் காட்சிகள், போதைப் பொருள் உபயோகிக்கும் காட்சிகள், முறையற்ற உறவு என படமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் திரைக்கதையும், வசனங்களும், குமட்டலை ஏற்படுத்துகின்றன. எல்லார் உடலிலும் கொஞ்சம் மலம் இருக்கும் என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார் (நம்ம கலைஞானிதான்!). ஆனால், மலமே உடலாக இருப்பது போல் ஒரு அருவருப்பை உருவாக்கி விடுகிறது இப்படம். அதுவே இப்படத்தின் மிக முக்கிய நோக்கமும்.  அமேதியஸ் என்னும் பெரும் இசைக்கலைஞனின் மேதைமை, சாலேரி என்னும் சராசரி இசைக் கலைஞனின் பொறாமை வழியே சொல்லப் பட்டிருப்பது போல, அறத்தின்  மேன்மையை, இவ்வளவு குரூரமாக, அறமின்மையின் வழியாகச் சொல்லிவிட முடியாது எனத் தோன்றுகிறது.

டி காப்ரியோ வின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று எனச் சொல்லலாம். அனுபவமில்லா ட்ரெயினியாகத் துவங்கும் போது இருக்கும் கூச்சம், மெல்ல மெல்ல ஒரு சாத்தானின் வசீகரத்தோடு அறமீறல்களைச் செய்யும் கணங்கள். தன் நிறுவனத்தை தன் ஆளுமைச் சக்தியில் மனமயக்கி நடத்தும் வித்தை என அவர் மாறும் போது, ஒரு கணத்தில் அவரோடு அடையாளப் படுத்திக் கொள்கிறோமோ எனப் பயம் வந்துவிடுகிறது. (இதை உடன் பார்த்த இன்னொருவர் சொன்ன போது உணர்ந்தது)

இத்திரைப்படத்தின் மற்ற கூறுகளான ஒளிப்பதிவு, இசையமைப்பு இதைப் பற்றியெல்லாம் கவனம் செல்லவிடாமல் மிக அழுத்தமான காட்சிகளை நிகழ்த்திக் கோர்த்திருக்கும் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸீஸ் – என்ன சொல்ல – மாஸ்டர் டைரக்டர். மிக அதீத உணர்வுகள் பொங்கி வழியும்  நாடகீயத் தருணங்களில், நிலவும் அமைதியும் அழகாக நிகழ்கிறது.

பேராசை என்னும் குரூர யதார்த்தை அழுத்தமாகச் சொல்லும் இப்படத்தை, black comedy என வகைப்படுத்தியிருப்பது ஒரு  tragedy. இப்படம் பல பரிசுகளை (golden globe, Oscar) வெல்லலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, முதலாளித்துவத்தின் மீதான பலமான விமர்சனமாக,  பெரும் ஆவணமாக, காலம் கடந்து நிற்கும் எனத் தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.