மகரந்தம்

கோழி வளர்ப்பு: அனாதை முட்டைகள்

chicken-farm

ஓரளவு வேடிக்கையான செய்திதான். ஆனால் கொஞ்சம் சோகமும் கலந்தது. நம் நாட்டின் பெரும் நிலப்பகுதி இன்னும் கிராம வாழ்வாகவே இருக்கிறதென்றாலும், படிப்படியாக நம் நாடும் நகர மைய வாழ்வையே பெரிதும் கொண்டதாகி வருகிறது. இங்கு இன்னும் பல பிராணிகள் தடை செய்யப்படவில்லை. நாய்கள், மாடுகள், பன்றிகள் போன்றன இன்னும் அனேக சிறு நகரங்களில் தடை செய்யப்படவில்லை. மாநகரங்களில் ஓரளவு மாடுகளும், பன்றிகளும் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நாயகளுக்குத் தடை செய்ய எந்த அரசும் முயல்வதாகத் தெரியவில்லை.

ஆனால் கோழிகள், வாத்துகள், ஆடுகள் போன்றன அனேகமாகப் பெரு நகரங்களில் மக்களால் வளர்க்கப்படுவதில்லை என்று தோன்றுகிறது.

மேற்கில் மிருக வளர்ப்பு என்பது அனேகமாக எல்லா நகரங்களிலுமே தடை செய்யப்பட்டிருக்கிற ஒன்று. நாய்கள், பூனைகள் போன்ற சில வளர்ப்பு மிருகங்களுக்கு விலக்கு இருக்கும். ஆனால் அவையும் பெருமளவு நகர அனுமதி பெற்ற மிருகங்களாக இருக்க வேண்டி வரும். சமீபத்தில் அமெரிக்காவிலாவது ஓரளவு இந்தத் தடைகள் விலகி வருகின்றன. பலர் பலவித முன்னாள் குடியானவ வாழ்வுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். அவர்கள் கோழி வளர்ப்பை மேற்கொள்ள முனைகிறார்கள். நகரங்களில் சேவல்கள் சூரிய உதயத்தில் கூரைமீதேறியோ, அல்லது இருக்கும் இடத்திலிருந்தோ கூவுவது என்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதால் அவர்களால் சேவல்களை வளர்க்க முடிவதில்லை.

என்னென்ன பிரச்சினைகள் வாழ்வில் வருகின்றன பாருங்கள்! இப்படிப் பட்ட சேவல்கள் நகரக் ‘குடியானவர்களால்’ மிருகக் காப்பகங்களில் கொண்டு விடப்படுகின்றனவாம். அவற்றை கிராமப் புறத்து மக்களுக்கு அவர்கள் தத்து மிருகங்களாகக் கொடுக்கிறார்கள். அவை கொல்லப்படக் கூடாது என்பது நிபந்தனை, ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே அவை கொடுக்கப்படுகின்றன.

இந்தத் தத்து மிருகங்கள் தம் வாழ்வுக்கு ஒரு புது அர்த்தத்தைக் கொண்டு வந்திருப்பதாக அகமகிழ்ந்து போகிறார்கள் இந்த தத்து வளர்ப்பாளர்கள். இது தவிர வேறு பிரச்சினைகளும் இந்தக் கோழித் தத்தெடுப்பாளர்களுக்கு உண்டு. அவை குறிதது ஒரு கட்டுரை இதோ.

http://www.psmag.com/navigation/nature-and-technology/casualties-coop-animal-shelter-chickens-urban-farming-75392/

oOo

வேட்டைக்காரன்: அயல்நாட்டு கரடி

SONY DSC

பொதுவுடைமை வாதத்துக்கும் மனநோய்க்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அதுவும் மனநோயாளிகளைத் தாம் ஆள்வோராகக் கொள்வதில் பொதுவுடைமை வாதிகளுக்கு நிகர் அவர்களேதான். உலக அரசுகளில் மனநோயாளிகளை நெடுங்காலம் தலைவர்களாகக் கொண்ட அரசுகளில் பாதிக்கும் மேல் கம்யூனிஸ்ட் நாடுகளாகத்தான் இருக்கும். இன்றும் கூட முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளில் வாழ்ந்த மக்கள் தாம் எப்படி அரை நூற்றாண்டு, ஒரு நூற்றாண்டு இப்படி ஒரு மனநோய்க் கருத்தியலை நம்பி மோசம் போனோம் என்று வியந்து கொண்டிருக்கிறார்கள்.

பல்கேரியா, ரொமானியா போன்ற நாடுகள் இப்படிப் பட்ட மனநோயாளி சர்வாதிகாரிகளிடம் இருந்து சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் விடுவிக்கப்பட்டன. அந்நாடுகள் கடந்த 20 ஆண்டுகளாக எத்தனையோ துன்பங்களுக்கிடையில் மறுபடி எப்படி மனிதர்களாக வாழ்வது என்பதைத் திரும்பக் கற்று வருகிறார்கள் என்று தெரிகிறது.

இந்தக் கட்டுரையில் அந்த இரு நாட்டு சர்வாதிகாரிகளின் கோரமான ஆசைகளும் அவற்றை நிறைவேற்றத் தெண்டனிட்டு விழுந்து செருப்பை முத்தமிட்ட அந்நாட்டு அதிகாரிகளின் கேவல வாழ்வும் பற்றிச் சில துண்டுச் செய்திகளோடு அவர்களிடம் அகப்பட்டுத் திண்டாடிய வனவிலங்குகளின் அவல வாழ்வு பற்றியும் செய்தி கிட்டுகிறது. ரொமானியாவின் கொடுங்கோலன், ஸீசெஸ்கு ஒருவனே ஆயிரம் கரடிகளுக்கு மேல் சுட்டுத் தள்ளி இருக்கிறான்.

என்ன ஒரு அபிமானம் பாருங்கள் ரஷ்யக் கரடி மீது!

http://www.psmag.com/navigation/nature-and-technology/mystery-bulgarian-brown-bears-75423/

oOo

நிருபரின் பேட்டி: அர்ஜெண்டினாவும் ஜெர்மனியும்

ஆர்ஜண்டினா என்னும் தென் அமெரிக்க நாடு, பல தென்னமெரிக்க நாடுகளைப் போலவே பெரும் வன்முறைகள், ராணுவ ஆட்சி, சட்டம் என்பது செல்லுபடியாகாத அடக்குமுறை, ஏராளமான கொலைகள், கடத்தல்கள், மறைவுகள் என்று கடும் குழப்பங்களில் சிக்கியிருந்த நாடு. அமெரிக்க ஏகாதிபத்தியமும், இரண்டாம் உலகப் போரில் தலைமறைவான ஏராளமான நாஜி ராணுவத்தினரும், கட்சியினரும் இணைந்து இயங்கிய ஒரு விசித்திர நாடு ஆர்ஜண்டினா.

மக்கள் பொய்மையே நிறைந்த பேருரைகளையும், கவர்ச்சியான ஆளுமைகளையும் நம்பித் தம் குடியுரிமை, சுயபுத்தி, மேலும் மதிப்பீடுகளை அடகு வைத்தால் அவர்களுக்கு என்னவெல்லாம் ஆகும் என்பதற்கு ஒரு படிப்பினை வேண்டுமென்றால் ஆர்ஜண்டீனாவின் 20 ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தைப் புரட்டிப் படித்தால் போதும்.

இந்த ஆர்ஜண்டினாவின் குழப்பம் நிறைந்த வரலாற்றின் சில சில்லுகளைப் புத்தகமாக எழுதியவர் ஒரு பத்திரிகையாளர். அவரைப் பேட்டி கண்டு பிரசுரித்திருக்கிறது இடதுசாரிகளின் உறைவிடமான பாஸ்டன் ரெவ்யூ பத்திரிகை. இருந்தாலும் இந்தப் பேட்டி முக்கியமானது என்பது மட்டுமல்ல, நம் உலக ஞானத்தைச் சிறிதாவது கூட்டும் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறோம்.

http://bostonreview.net/arts-culture/jessica-sequeira-interview-uki-goni

oOo

ஆளில்லா விடுகளும் வீடுகளில்லாத ஆள்களும்

Empty_Properties_Europe_Graph_Homeless_Shelters_Houses_Occupy_Income_Property

யூரோப்பில் ஏதோ கொஞ்சம் நாடுகளில் சோசலிசம் என்ற கருத்துக்குக் கொஞ்சம் உயிர் இருக்கிறது. இவற்றில் சில முன்னாள் சோவியத் பாசறைக் கைதிகளாக இருந்து மீண்டவை, சுதந்திரம் பெற்றவை. ஆனாலும் இவற்றிலும் இன்னும் கொஞ்சமாவது சமதள வாழ்வின் மீது பிடிப்பு இருக்கிறது. பல நாடுகள் முன்னாள் ஃபாசிஸ, நாஜியிச, சிவப்பு ஃபாசிச (சோவியத் ஆட்சி)க் கொடுங்கோலாட்சியில் இருந்து இரண்டாம் உலகப்போரிலிருந்து படிப்படியாக மீண்டு ஓரளவு ஜனநாயக சமுதாயங்களானவை. சில முன்னாள் கொடுங்கோல் ஏகாதிபத்திய நாடுகள். (பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தலி, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகியன இந்தப் பட்டியலில் வரும்), இன்று உள்நாட்டிலேயே பலவிதக் கலகங்கள், அடையாள அரசியல் குழப்பங்கள், இஸ்லாமிச பயங்கரவாதம் என்று பிரச்சினைகளைக் கையாள முடியாமல் திணறுகின்றன. ’வினை விதைப்பவன் வினையைத்தான் அறுப்பான்’ என்ற எளிய எதார்த்த வாதத்தை நம் மண்ணின் முற்போக்குகள், விதிவச வாதம் என்றும், பழமை வாதம் என்றும் ஏளனம் செய்வாரெனினும், அது ஒரு நெடுந்தூர நோக்கில் கண்டறியப்பட்ட கருத்து என்பது அவர்களுக்கு விளங்கியதில்லை. விளங்காது.

இன்று யூரோப்பின் பழைய பெருமைகள் மங்கி வருகின்றன. ஏகாதிபத்தியத்தில் சுரண்டிய பெருங்கொள்ளை எலி தின்று தீர்த்த தானியக் களஞ்சியமாகி வருகிறது. மிஞ்சியதில் எங்கும் அந்துப் பூச்சி பறக்கிறதாம். கார்டியன் பத்திரிகை சொல்கிறது ஒரு கட்டுரையில் யூரோப்பில் 11 மிலியன் வீடுகள் காலியாகக் கிடக்கின்றனவாம். இவை அந்த நாடுகளில் வீடின்றித் தெருக்களில் வாழும் மக்களுக்குக் கொடுத்துப் போக பாதிக்கு மேல் மிஞ்சுமாம்.

இதென்ன அநீதி என்று புலம்புகிறது. ஆனால் கிரீஸ் நாட்டின் மலையில் இருக்கும் காலி வீடும், நார்வேயின் கடலோரக் கிராமமே காலியாகிக் கிடக்கையில் அதிலிருக்கும் வீடுகளைக் கணக்கிலெடுத்துக் காட்டுவதும், பிரிட்டனின் தெருக்களில், ஃப்ரான்ஸின் பெருநகரங்களில், ஸ்பெயினின் மாட்ரிட் மாநகரில் இருக்கும் வீடில்லாத மக்களுக்கு என்ன பயன் என்று புரியவில்லை. சில நேரம் மொத்தக் கணக்கு என்பது அர்த்தமற்ற ஒன்றாக இருக்கும்.

ஆனால் உலக முதலியமே இப்படி மொத்தக் கணக்கை நம்பித்தான் இயங்குகிறது. இப்படி அர்த்தமற்ற கருத்துகளிலும் சில உருப்படியானவை எஞ்சும்.

கட்டுரையை இங்கே காணலாம்.

http://www.theguardian.com/society/2014/feb/23/europe-11m-empty-properties-enough-house-homeless-continent-twice

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.