நந்தினி

வெளியே நாய் குரைக்கும் சத்தம். டைகர் குரைப்பதைப்போலவே இருந்தது. ஓடிப்போய் எம்பி நின்று வலையடித்த கண்ணாடிக் கதவு வழியே பார்த்தாள் நந்தினி. குண்டான வெள்ளைக்காரப் பாட்டியும் ஒரு பெரிய நாயும். டைகர் போலவே இந்த நாயும் வெள்ளை நிறம். ஆனால் டைகர் போல குட்டி இல்லை மிகப்பெரியது. நாய்தானா என்று சந்தேகப்படும் அளவுக்கு. ஏறக்குறைய தாத்தா வீட்டு சின்ன கன்னுக்குட்டி அளவுக்கு. இவ்வளவு பெரிய நாயை அவள் பார்த்ததில்லை. அந்த வெள்ளைக்கார பாட்டியும் நல்ல குண்டு. கச்சிதமாக அடியெடுத்து நிதானமாக நடக்கும் நாய்க்குப் பின்னால் நைலான் பட்டையை நீட்டிப்பிடித்தபடி சிரமத்துடன் அசைந்தாடி நடந்து கொண்டிருந்தாள் பாட்டி. நாய்தான் அவளை இழுத்துக்கொண்டு போகிறதோ என்று நினைத்தபடி ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு ஓடிப்போய் சமையல் கட்டில் இருந்த அம்மாவை ஒரு கையில் கரண்டியோடே”வா வா” என்று இழுத்துக்கொண்டு வந்து காட்டினாள்.

”விளையாடியது போதும் சாப்பிடு” சீரியல்கள் நிரப்பிய கிண்ணத்தை கையில் வைத்துவிட்டு உள்ளே போனாள் அம்மா. சீரியல் வளையத்தை எடுத்து கடிக்கும்போது காக்காய் ஞாபகம் வந்தது. சிறிது மட்டுமே திறந்திருந்த கதவு வழி கவனமாக ஒருக்களித்து நுழைந்து வெளி வாசலுக்கு வந்தாள். கைப்பிடியளவு சீரியல்களை மரத்தடியில் தூவி எறிந்த பின் “கா கா” என்று கத்தினாள். தடித்த உயரமான மேப்பிள் மரங்களின் அடர்ந்தநிழல். கீழே அடர்த்தியாக வளர்ந்து அளவாக ஒரே உயரத்தில் கத்தரிக்கப்பட்ட கரும்பச்சை புல்தரை. பல நிறங்களில் குட்டி குட்டியாக லாரி டியூப் வடிவ சீரியல் வளையங்கள் அசைவின்றி அவிழ்த்துவிட்ட பூங்கொத்து போல கிடந்தன. ஒரு காக்கை கூட வரவில்லை.

ஒரு வேளை காக்காவுக்கு கேட்டிருக்காதோ என்று இம்முறை முடிந்தவரைக்கு சத்தமாக ”கா கா” என்று கத்திய பிறகு மரங்களை அண்ணாந்து பார்த்து தேடினாள். அடர்ந்து நீண்ட கிளைகளில் அமைதியாக சிலிர்த்து நடுங்கும் இலைகள். காக்காய்களே இல்லை.

வந்ததிலிருந்தே இந்த ஊரை அவளுக்கு பிடிக்கவே இல்லை. காக்கைகளே இல்லை என்பதும் ஒரு காரணம்தான். தாத்தா, பாட்டி, சித்தப்பா, முத்துச்சாமி, டைகர் யாருமே இல்லையே. ”அவங்கெல்லாம் எப்ப நம்ம வீட்டுக்கு வருவாங்க?” என்று அம்மாவை தினமும் ஒரு தடவையாவது கேட்டுக்கொண்டிருப்பாள். சமையல் வேலையாகவோ கணினியிலோ உட்கார்ந்திருக்கும் அம்மா சில சமயம்”அடுத்த மாசம்” என்பாள். அல்லது சம்பந்தமில்லாமல் வேடிக்கையாக எதையாவது சொல்லிவைப்பாள்.

திடீரென மரத்தின் இலை மறைவிலிருந்து சரசரவென இறங்கியது பெரிய குண்டு அணில். தரைக்கு வந்ததும் கும்பிடுவது போல முன்னங்கால்களை எம்பி உயர்த்திக்கொண்டு நின்றது. மூக்கை சிலிர்த்துக்கொண்டு மூச்சை வேகமாக இழுத்து விட்டபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. சீரியல் வளையங்களை அள்ளிக்கொண்டு உட்கார்ந்து தரைமீது கையை விரித்தபடி முகம் மலர்ந்து ”வா வா” என்றாள். சில நொடிகள் தயங்கி நின்று எதையோ உறுதிப்படுத்திக்கொண்டு விட்டது போல உடலை தாழ்த்தி அவளை நோக்கி தாவி ஓடி வந்தது அணில். வளையங்களை முன்னங்கால்களால் பொறுக்கி வாயில் வைத்து கவ்விக் கொண்டுபோய் மரம் தரையைத் தொடும் இடத்தில் வைத்தது. திரும்பி வந்து அவளுக்கு அருகில் சிதறிக்கிடந்த எல்லா வளையங்களையும் பொறுக்கிக்கொண்டு போய் மரத்துக்குக் கீழே வைத்தது. வளையங்களை வாய் நிறைய கவ்வி எடுத்துக்கொண்டு மரத்திலேறி இலைகளுக்குப்பின் காணமலாகியது. திரும்பவும் கீழிறங்கி வந்து மீதியையும் பொறுக்கிக்கொண்டு மேலேறி இலைகளுக்குள் மறைந்தது. சில நொடிகளில் இலைகளுக்கு பின்னால் உயரத்தில் அணில் குஞ்சுகளின் கிக்சு கிச்சு சத்தம் கேட்டது. பக்கத்தில் வந்து நிமிர்ந்து அணில் தெரிகிறதா என்று தேடிப்பார்த்தாள். விரித்த உள்ளங்கை போல இலையடர்ந்த மரக்கிளைகள். நடுங்கி அசைந்தாடும் இலைகள் வழி மினுக்கிட்டு பளீரென பாய்ந்து மறையும் வெளிச்சம். வேறெதுவும் தெரியவில்லை.

நந்தினிக்கு பாட்டி ஞாபகம் வந்தது. எங்கிருந்தோ வந்து கொய்யாப்பழம், கொடிக்காப்புளி இப்படி எதையாவது திடீரென முந்தானையிருந்து எடுத்துக்கொடுப்பாள் பாட்டி. வாசலில் பழுத்து உதிர்ந்த அரைநெல்லிக்காய்களை பொறுக்கி மண்ணை ஊதி முந்தானையில் பாட்டி போடுவதை திண்ணையில் தாத்தாவின் மடியில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். முந்தானையை மேசையில் சரித்து பரப்பி பழுத்த பழங்களை தேர்ந்தெடுத்து கழுவி கொட்டை இல்லாமல் நறுக்கி கரும்புச்சர்க்கரை தூவி கிண்ணத்தில் தருவாள் பாட்டி.

”அம்மா இந்த அணில் ஏன் இவ்வளவு குண்டா இருக்கு?” என்றாள் அம்மாவிடம். ”இன்னும் கொஞ்ச நாள்ல மரத்துல இருக்கற இலையெல்லாம் உதிந்து ரொம்ப குளிரா ஆயிரும். உன்னோட இடுப்பு உயரத்துக்கு பனி கொட்டும். அப்ப அணில் வெளிய வர முடியாதே. அதனால கூட்டுக்குள்ளேயே தூங்கிகிட்டே இருக்கும். தூங்கும் போது பசிக்குமே… அதுக்கெல்லாம் சேத்து இப்பவே சாப்புடுது அணில். அதான் குண்டா இருக்கு”. அம்மா நந்தினியின் இடுப்பை தொட்டுக்காட்ட ” இவ்வளவா” என்று கையை வைத்துப்பார்த்தாள். பெரிய வெள்ளை நாயுடன் நடந்து போன பாட்டியின் ஞாபகம் வந்தது. ஒரு வேளை பனிக்காலத்தில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தூங்குவாளோ அந்தப் பாட்டி? அதுக்குத்தான் இப்படி குண்டாகி இருக்கிறாளோ? என்று நினைத்துக்கொண்டாள்.

”வெளயாண்ட்து போதும் உள்ள வர்றயா”. அம்மா குரல் கேட்டு உள்ளே போனதும் ”அம்மா நெல்லிக்கா வேணும்” என்றாள். அம்மா பதில் சொல்லாமல் இருக்கவே குரலை உயர்த்தி கண்டிப்புடன் “பாட்டி வேணும்” என்றாள். அம்மா வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன் “…நேத்து அப்பா ஸ்ட்ராபெரி வாங்கிட்டு வந்தாங்களே…சாப்பிடறயா?” சொல்லிவிட்டு முகத்தை பெரிய அதிசயத்தை கண்டதைப்போல விளையாட்டாய் வைத்துக்கொண்டிருந்தாள். நந்தினி எதையோ யோசித்துக்கொண்டு பதில் சொல்லாமல் இருந்தாள். “…அடடா இப்ப பாப்பிகேட் வர்ற நேரமாச்சே …குட்டிக்கு பிடிக்குமே” சொல்லிக்கொண்டே ரிமோட்டை அழுத்தி டிவியை ஓடவிட்டாள் அம்மா. நறுக்கி உப்புதூவிய ஸ்ட்ராபெரியை கிண்ணத்தில் வாங்கிக்கொண்டு டோரா படம் போட்ட தன் குட்டி நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

kid_Boy_Alone_Path_Forest_Road_Long_All-By_Himself_Walk_Coat_Dress

மதியம் உறங்கி கண்விழித்து கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து வரும்போது தாத்தா அவளுக்காக கறும்புச்சாறுடன் வெளியே காத்திருப்பார். கொஞ்சமும் கோளையில்லாத கரும்புகளை இஞ்சி எலுமிச்சம்பழத்துடன் பொறுக்கி எடுத்து அவரே கைப்பட கிரஷரில் ஓட்டிக்கொண்டு வருவார். அவள் தன்னிடம் வரும் வரை பொறுக்காமல் வேகமாக நடந்துபோய் “எந்திருச்சிட்டீங்களா தாயீ” என்று தூக்கிக்கொண்டு கூடத்தின் நாற்காலிக்கு வருவார். குடித்தபின் கண்களை மூடி சாய்ந்து தூங்குவது போல தாத்தா மடியில் உட்கார்ந்திருந்திருப்பாள். அன்று மதியம் கீரைச்சாதம் சாப்பிட்டபிறகு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தவுடன் ”அம்மா, கரும்பு ஜூஸ் வேணும்” என்றாள். குளிர்சாதன பெட்டியிலிருந்து எதையாவது எடுத்து கொடுப்பதற்காக சமையலறைக்கு போனாள் அம்மா. பதில் ஏதும் சொல்லவில்லை.

பாப்பிகேட் பூனை, நாய்க்குட்டி, எலிக்குஞ்சு, ஆந்தைக்குஞ்சு, முயல்குட்டி எல்லாருமாய் சேர்ந்து புதையலை தேடிக்கொண்டு காரில் போய்க்கொண்டிருக்கிறார்கள். பாப்பி கேட்பூனைதான் டிரைவர். வரைபடத்தில் உள்ளபடி சூரியன் இருக்கும் திசையில் காத தூரம் போக வேண்டும். காருக்கு முன்னால் சூரியன் தெரிய கார் போய்க்கொண்டிருக்கிறது. ஒதுங்கி நிற்கும் சூரியனை பொருட்படுத்தாமல் பாப்பிகேட் பூனையும் நண்பர்களும் டியூலிப் மலர் மண்டிய புதர்களில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். தனிமையில் தினமும் அவர்களை பார்த்துக்கொண்டிருக்கும் சூரியன் அவர்களின் பார்வை தன் மேலே விழாதா என்று ஏக்கத்துடன் நின்று கொண்டிருப்பான். இன்றும் அவர்களை ஆதுரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பாப்பிகேட் பூனையும் நண்பர்களும் தன்னை கவனிப்பதில் உற்சாகமாகி அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆசைப்பட்டு திடீரென காருக்கு பின்பக்கமாக ஓடிப்போய் ஒளிந்து கொண்டான். காரை ஓட்டிக்கொண்டிருந்த பாப்பிகேட் சூரியனைக்காணாமல் குழம்பி தடுமாறி காரை நிறுத்தி விடுகிறது. பிறகு சூரியன் எதிர்திசையில் நிற்பதை கண்டுபிடித்து காரை திருப்பி எதிர்திசையில் செலுத்துகிறது. திரும்பவும் காருக்கு எதிர்திசையில் ஓடிப்போய் நின்று கொண்டு சிரிக்கிறான் சூரியன். பாப்பிகேட் திரும்பவும் காரை திசைமாறி ஓட்டுகிறது. அவர்கள் கஷ்டப்படுவது தெரியாமல் இன்னும் வேகமாக மாறி மாறி எதிர்திசையில் நின்று ஆசையாக விளையாடிக்கொண்டு நிற்கிறான் சூரியன். பாப்பிகேட் காரை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக மாறி மாறி ஓட்டுகிறது. மாறி மாறி ஓடி வழி தவறிவிட எந்தப்பக்கம் போவது என்று தெரியவில்லை. தவறான வழியில் வந்து விட்டோமே வீட்டுக்கு போகவும் வழி தெரியவில்லையே என்று பாப்பிகேட் பூனை அழுகிறது. அதைப்பார்த்து. ஆந்தைக்குஞ்சும், நாய்க்குட்டியும் அழுகிறார்கள். வாயைக்கோணி கீழுதட்டை பிதுக்கி ”அம்மா” என்று அழுதாள் நந்தினி. பக்கத்தில் படுத்திருந்த அம்மா ”குட்டி ஏன் அழுகுது, தூங்குங்க” என்றாள் கண்ணை திறக்காமலேயே. அம்மா நெருக்கி அணைத்துக்கொண்டு நன்றாகப் போர்த்தி விட்டு தட்டிக்கொடுக்கவும் அழுகை நின்று சுவாசம் நிதானமாகி மீண்டும் தூங்கிப்போனாள்.

காலையில் எழுந்ததும் ”…ஹையா, இன்னிக்கி பள்ளிக்கூடம் போகப்போறமே. கிளம்பு போகலாம்” என்றாள் அம்மா. குளித்து அவளுக்கு பிடித்த டோரா படம் போட்ட சட்டை போடும்போதும் அம்மா ஊட்டி விட்டதை சாப்பிடும் போதும் நந்தினி பேசவே இல்லை. உயர்த்தப்பட்ட இருக்கையில் பின்னால் உட்கார்ந்திருப்பவளை பின் கண்ணாடி வழியாகப் பார்த்தபடி ஏதேதோ கதையெல்லாம் சொல்லி சிரிப்பு மூட்டிக்கொண்டே வந்தாள் அம்மா. ஆனால் நந்தினி சிரிக்கவோ பேசவோ இல்லை. வழி முழுதும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்தாள். குழந்தைகள் காப்பகத்தின் வாசலில் அம்மா காரை நிறுத்தியதும் நந்தினிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “வேண்டாம் வீட்டுக்குப்போலாம் வீட்டுக்குபோலாம்” என்று சொல்லிக்கொண்டே அழுதாள். அம்மா வலுக்கட்டாயமாக அவளை தூக்கிகொண்டு உள்ளே போனாள்.

மிஸ் ஹின்ரர் தரையின் விரிப்பில் அமர்ந்தபடி கோல்டிலாக்ஸ் கதை சொல்ல ஆரம்பித்தாள். அந்த பக்கம் அம்மா உட்கார்ந்திருந்தாள். விரிப்பில் பக்கத்தில் உட்கார்ந்து புத்தகத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி. கொஞ்ச நேரத்தில் அம்மா மீதிருந்த கையை எடுத்துவிட்டு முழு கவனத்துடன் படங்களை புரட்டி பார்த்துக்கொண்டிருந்தாள். மிஸ் ஹின்ரர் கண்ணால் ஜாடை காட்டவும் எதிர்பாராத சமயத்தில் ஓசையில்லாமல் கிளம்பி வெளியேறி விட்டாள் அம்மா. வேகமாக அவள் வாசல் வழி வெளியேறுவதை பார்த்து அழுதுகொண்டே நந்தினி எழுந்து பின்னால் ஓடினாள். அவளை மேலும் ஓட விடாமல் மிஸ் ஹின்ரர் தடுத்து நிறுத்தி தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

நந்தினி எதையுமே பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டாள். அந்த அறை ஆசிரியைகள் அவளை வினோதமாக பார்த்த குழந்தைகள் எதையும் பார்க்கப்பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் விட அம்மா இப்படி தனியாக விட்டு விட்டு போனதை நினைத்த போதுதான் அவள் மீது கோபம் வந்து அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அம்மாவை அவளுக்கு பிடிக்கவே இல்லை. பாட்டியை நினைத்துக்கொண்டு ”பாட்டி வேணும்” என்று சொல்லிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள். “நோ மோர் கிரையிங் ஸ்வீட்டி” என்றாள் மிஸ் ஹின்ரர் கண்டிப்பும் கனிவும் நிறைந்த குரலில். ”யூஹேவ் எ லாட் ஆஃப் ஃபிரன்ஸ் ஹியர்” என்று அவளை மார்போடு அணைத்து மடியில் உட்காரவைத்துக்கொண்டாள். கண்ணீர் வழிந்தோட மெதுவாக ”பாட்டீ” என்று அழுதுகொண்டிருந்தாள்.

ஏறக்குறைய அழுது விடுபவளைப்போல காரை ஓட்டிக்கொண்டிருந்தாள் அம்மா. எதையோ நினைத்துக்கொண்டு பாதி வழியில் காரை ஓரமாக்கி நிறுத்தி கைபேசியில் பொத்தான்களை அழுத்தினாள். மறுமுனையில் ”நோ நோ, ஷி இஸ் ஃபைன் ப்ளீஸ் டோண்ட் கம். அதர்வைஸ் ஷி வில் நெவர் லெர்ன்” என்றாள் மிஸ் ஹின்ரர். அம்மா கொஞ்ச நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்து விட்டு மெதுவாக காரை கிளப்பிக்கொண்டு போனாள்.

அழுதுகொண்டே மடியில் தூங்கியிருந்தவளை மிஸ் ஹின்ரர் கட்டிலில் கிடத்தி சிறிய போர்வையால் போர்த்தி விட்டிருந்தாள். மதியம் கண்விழித்ததும் கூரையில் தெரிந்த படங்களைத்தான் முதலில் பார்த்தாள் நந்தினி. பல வண்ணங்களில் புன்னகைக்கும் நட்சத்திரங்கள், நிலா, சூரியன் எல்லாமே அவளை கனிந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தன. கொஞ்ச நேரம் அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். பிறகு எங்கிருக்கிறோம் என்று சுற்றிலும் பார்த்துக்கொண்டு குழம்பி வேகமாக எழுந்து உட்கார்ந்தாள். குட்டி குட்டியாய் கட்டில்களில் பல நிற முகங்களுடன் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தன. அம்மா இல்லாததால் தாத்தாவோ பாட்டியோ இருக்கிறார்களா என்று தேடினாள். நந்தினி கட்டிலை விட்டு இறங்கும்போது உள்ளே வந்த மிஸ் ஹின்ரர் “குட் ஆஃப்டர்னூன் ஸ்வீட்டி. டிட் யூ ஹேவ் எ குட் நேப்?” என்று சொல்லிக்கொண்டே தூக்கினாள்.

இரண்டு நாள் முன்பே நந்தினியை அங்கே கூட்டி வந்து பின் வாசலுக்கு வெளியே மைதானத்தில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து விளையாட விட்டாள் அம்மா. ”இனி நீ இங்கதான் பள்ளிக்கூடம் வரப்போற” என்று சொன்னபோது எழுந்த பயத்தில் அம்மா மேல் கோபமாக வந்தது. சுற்றிக்காட்டுவதற்காக அவளை காப்பகத்தின் உள்ளே கூட்டிக்கொண்டு போனபோது மூங்கிலில் நிற்கும் கோலா போல அம்மாவின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டிருந்தாள். பொம்மைகள் விளையாட்டு சாமான்களை எதையும் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

குட்டையாக வெள்ளை முடி வைத்த ஒரு பெண்குழந்தை தயங்கிக்கொண்டே வந்து கரடிபொம்மையை அவளிடம் மெதுவாக நீட்டியது. அதை வேகமாக பிடுங்கி வாங்கிக்கொண்டு மிஸ் ஹின்ரர் மடியில் உட்கார்ந்திருந்தாள். திரும்ப வந்து பொம்மையை திரும்ப கேட்பாளோ அல்லது வேறு யாராவது வந்து பொம்மையை பிடுங்கிக்கொள்வார்களோ என்று பயமாக இருந்தது. ஒரு கையில் பொம்மையையும் மறுகையில் மிஸ் ஹின்ரரின் மேல் சட்டையையும் விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தாள். சாயந்திரம் அம்மா வரும்போது அவளிடம் போகவே கூடாது. வரமாட்டேன் என்று சொல்லிவிட வேண்டும். பாட்டியிடம் மட்டும்தான் போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

சாயந்திரம் அம்மா வந்ததும் அவள் மேல் கோபம் கோபமாக வந்தது. கீழுதட்டை பிதுக்கி அழுதுகொண்டே ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டாள். எதுவும் பேசாமல் கன்னங்களில் வழிந்து காய்ந்த கரிப்பின் தடங்களை உற்றுப்பார்த்துக்கொண்டே அவளை காருக்கு தூக்கி கொண்டு போனாள் அம்மா. வீட்டுக்கு வரும்போது அவளுக்கு நிறைய கதையெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள். ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக கதையை எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு ஓங்கிய குரலில் ”பாட்டி வேணும் தாத்தா வேணும்” என்றாள் நந்தினி. அம்மாவிடமிருந்து பதில் வராததால் குரலை மேலும் உயர்த்தி “ஊருக்குப்போகணும்” என்றாள் ஆணையிடுவது போல. சொல்லிக்கொண்டிருந்த கதையை நிறுத்திவிட்டு அம்மா அமைதியாக காரை ஓட்ட ஆரம்பித்தாள்.

வீட்டுக்கு வந்து அம்மா சப்பாத்தியை உருட்டிக்கொண்டிருந்தபோது வாசல் மணி அடித்தது. வேகமாக கையை துடைத்துக்கொண்டு வந்த அம்மா அவளை தூக்கி கதவுக்கு முன் நின்று கொண்டு கண்டிப்பான குரலில் ”யாரது மணியடிக்கிறது?” என்றாள். ”நாந்தான் பூச்சாண்டி வந்திருக்கேன். நந்தினின்னு ஒரு பொண்ணு இருக்காளா?” என்றது ஆண் குரல் பயமூட்டும் தோரணையில். நந்தினியின் முகத்துக்கு மிக அருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு கிசுகிசுப்பான குரலில் “பூச்சாண்டிக்கு கதவ திறக்கலாமா” என்றாள் அம்மா. நந்தினிக்கு சிரிப்பாக வந்தது. சிரிப்பை அடக்கிக்கொண்டே வேகவேகமாக தலையை அசைத்தாள்.

அப்பா உள்ளே வந்ததும் ஓடிப்போய் கால்களைக் கட்டிக்கொண்டாள். ஷூவை அவிழ்த்ததும் கைகளில் ஏறிக்கொண்டவளை தூக்கிக்கொண்டு சோபாவுக்கு வந்த அப்பா ”நாய்க்குட்டி பள்ளிக்கூடம் போச்சா” என்றார். முகத்தை பார்க்காமல் மடியில் உட்கார்ந்து தலையை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே முன்பற்களால் அப்பாவின் டையை வேகமாக கவ்வி கவ்வி நாய்க்குட்டியைபோல கடித்துக்கொண்டிருந்தாள்.

ரயில் நிலையத்துக்கு வரும்போது சித்தப்பா ஓட்டிய காரில் பாட்டி மடியில் உட்கார்ந்து கொண்டு வந்தாள். ஐய்யனார் சிலையைப்போல எதுவும் சொல்லாமல் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வந்தார். சித்தப்பா பெட்டிகளை ஏற்றிவைத்தபின் நெடுநேரம் யாரும் யாருடனும் ஒரு சொல் கூட பேசிக்கொள்ளவில்லை. ரயில் கிளம்ப ஐந்து நிமிடம் இருக்கும்போது “போகத்தான் வேணுமாப்பா. இப்பக்கூட ஒண்ணும் நேரமாகல. நல்லா யோசிச்சுப்பாரு முருகேசா!” என்றார் தாத்தா. மழைக்கு முன் இருண்டுவிட்ட மேகத்தைப்போல இருந்தது முகம். அப்பா பதில் எதுவும் சொல்லவில்லை. குனிந்து ஷூவின் நுனியால் பிளாட்பாரத்தின் சிமிண்டு தரையை சுரண்டிக்கொண்டு பேசாமல் நின்றார்.

வரவர அப்பாவையும் அவளுக்கு பிடிக்கவில்லை. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் விளையாட்டு கொஞ்ச நேரந்தான். காலையில் அவள் தூங்கி எழும்போது அப்பா வீட்டில் இருப்பதே இல்லை. விளையாடப்போனால் ”அம்மாகிட்ட போ” என்று சொல்லிக்கொண்டு கம்ப்யூட்டரில் எதையோ படித்துக்கொண்டிருக்கிறார். அம்மாவும் அப்படித்தான். முன்னைப்போல அவளுடன் அதிகம் விளையாடுவதே இல்லை. டிவியை ஓடவிட்டுவிட்டு அடுப்பில் எதையோ கிளறிக் கொண்டிருக்கிறாள். அல்லது கம்ப்யூட்டரிலோ புத்தகத்திலோ படித்துக்கொண்டு இருக்கிறாள். நந்தினி ரெண்டுபேரையும் தாத்தாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

மறு நாளும் அதே போல நந்தினியை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக்கொண்டு போனாள் அம்மா. நேற்றை விட அதிகமாக அழுததால் கொஞ்ச நேரம் கூடுதலாக உட்கார்ந்து விட்டு அதே போல வெளியேறிவிட்டாள். ஆனால் காரை கிளப்பாமல் உட்கார்ந்திருந்துவிட்டு கதவை திறந்து வெளியே வந்து நின்றாள். திரும்பிப்போய் ஓசையெழுப்பாமல் வகுப்பறையின் அறைக்கதவை கீற்று போல திறந்து மெதுவாக எட்டிப்பார்த்தாள். நந்தினி மிஸ் ஹின்ரர் மடியில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். அம்மா கதவை மூடிவிட்டு தீவிரமாக யோசித்துக்கொண்டே அதன் முன் நின்று கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து எதிர்க்காற்றை கடப்பவளைப் போல நடந்து போய் காரை கிளப்பிக்கொண்டு போனாள்.

அழுதுகொண்டே இருந்த நந்தினி மிஸ் ஹின்ரர் மடியில் உட்கார்ந்துகொண்டே தூங்கியிருந்தாள். மதியம் கண் விழித்தபோது நிலாவும் நட்சதிரங்களும் சூரியனும் புன்னகைக்கும் கூரைக்கு கீழே கட்டிலில் படுத்திருந்தாள். சில குழந்தைகள் ஏற்கனவே விழித்திருந்தன. அறைக்குள் வந்த மிஸ் ஹின்ரர் “குட் ஆஃப்டர்நூன் யங் ப்ரீஸ்கூலர்ஸ். நாப் டைம் இஸ் ஓவர். இட்ஸ் டைம் டு வேக் அப் நவ்” என்று சொல்லிக்கொண்டே அறையின் விளக்குகளை எரியச்செய்து வெளிச்சம் வரும்படி ஜன்னல் திரைகளை விலக்கினாள். குழந்தைகள் ஒவ்வொன்றாக எழுந்து கட்டிலை விட்டு இறங்க ஆரம்பித்தன.

மதியானம் நந்தினிக்கு தெரியாமல் வந்து கிசுகிசுப்பான குரலில் மிஸ் ஹின்ரருடன் பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. “ஷி இஸ் ஃபைன். நோ வொரிஸ்” என்றதும் எதையோ சொல்லவந்து தயங்கிக்கொண்டே சொல்லாமல் நின்றாள். பிறகு ஏதோ முடிவுக்கு வந்து விட்டவளைப்போல “தாங்யூ வெரிமச்” என்று மட்டும் சொல்லிக்கொண்டு எழுந்து நின்று கால்களைத்தவிர வேறு எந்த அசைவும் இல்லாமல் நடந்து மேகம் நகர்வது போல வெளியேறினாள்.

நந்தினி வெளியே வந்ததும் குனிந்து அவள் முகத்துக்கு நெருக்கமாக நின்று நாடியை நுனிக்கையால் தொட்டபடி “ஆர் யு ஓகே ஸ்வீட்டி?” என்றாள் மிஸ் ஹின்ரர். நந்தினி தலை அசைத்ததும் பாராட்டு தொனிக்கும் ஏற்ற இறக்கத்துடன் “யூ ஆர் அ குட் கேர்ள்” என்று சொல்லிவிட்டு நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்படுத்தும்படி முகத்தை வைத்துக்கொண்டு கூடுதலாக சில நொடிகள் புன்னகைத்தாள்.

எல்லாருடனும் சேர்ந்து மேசையை சுற்றி உட்கார்ந்து ஆப்பிள் ஜூஸும் பிஸ்கட்டும் சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்ய எழுந்து நிற்கும்போதுதான் நந்தினி அந்த அறையை கவனத்துடன் பார்த்தாள். எல்லா குழந்தைகளும் ஏறக்குறைய தன் உயரத்துக்கே இருந்ததை முதல் முறையாக கவனித்தாள். விளையாடும் இடத்தில் இருந்த நாற்காலி, மேசை, கதவில்லாத கழிப்பறையின் முகவை எல்லாமே குட்டியாக அவள் இடுப்பு உயரத்துக்கே இருந்தன. ஆச்சரியத்துடன் அவைகளை இன்னொரு முறை பார்த்துக்கொண்டாள். ஓடிப்போய் காலியாக இருந்த ஒரு குட்டி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மேசையிலிருந்த படத்தை ஆசையாக எடுத்துப்பார்த்தாள். டோராவும் பூட்ஸ் குரங்கும் மரத்துக்குக்கீழே நிற்கும் கறுப்பு வெள்ளை வரைகோட்டு படம். ”யூ வான் டு கலர் திஸ்?“ என்று கேட்டுக்கொண்டே மிஸ் ஹின்ரர் கலர் பென்சில் பெட்டியை அவள் முன் வைத்தாள். நந்தினி அதிலிருந்து சிவப்பு பென்சிலை எடுத்து டோராவின் சட்டையின் மீது தீட்ட ஆரம்பித்தாள்.

சாயந்திரம் நந்தினியை வீட்டுக்கு அழைத்துச்செல்ல அம்மா வந்தபோது வெயிலின் திசை மாறியிருந்ததில் அந்த கட்டிடம் அறிமுகமில்லாத வேறொரு புதிய இடம் போல இருந்தது. முழு வெய்யிலும் முகப்பில் விழுந்திருந்த ஆளற்ற கட்டிடத்தின் முன் காரை நிறுத்தி விட்டு இறங்கிய அம்மா திடீரெனெ முற்றிலும் அறியாத ஒரு இடத்துக்கு வந்துவிட்ட உணர்வை அடைந்தாள். கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு முன்வாசலில் நுழைந்து காப்பகத்தின் பெரிய கூடத்தை கடந்து பின்வாசலுக்கு வந்தாள். கட்டிடத்தின் நிழல் நீண்டு ஒதுங்கியிருந்த மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன.

சறுக்கி தரையில் கீழிறங்கியதும் ஓடிப்போய் மீண்டும் சறுக்குவதற்காக படியேற வரிசையில் நின்ற குழந்தைகளை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தாள் மிஸ் ஹின்ரர். “நண்டீணி யுவர் மாம் இஸ் ஹியர்” என்று அவள் உரக்கச் சொன்னதும் சறுக்கிலிருந்து இறங்கிய நந்தினி திரும்பினாள். மிஸ் ஹின்ரர் கைகாட்டியதும் அம்மா நிற்பதை கவனித்து ஓடி வந்து அம்மாவை கட்டிக்கொண்டாள். எதோ சொல்ல ஆரம்பித்த அம்மாவை பேசவிடாமல் கையைப்பிடித்து வகுப்பறையை நோக்கி இழுத்துக்கொண்டு போனாள். ஓடிப்போய் மேசை மேலிருந்த டோராவின் வண்ணம் தீட்டிய படங்களை எடுத்து அம்மாவிடம் கண்களில் பெருமை பொங்க நீட்டினாள். “வாவ், வெரிநைஸ், குட் ஜாப்” என்றாள் அம்மா.

அவள் படங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போதே நந்தினி சத்தமில்லாமல் வெளியே ஓடிவிட்டிருந்தாள். படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்த அம்மா அவைகளை மேசைமேல் வைத்தபின் அறையில் தான் மட்டும் தனியாக நிற்பதை அறிந்து திடுக்கிட்டாள். குழந்தைகள் இல்லாத பலவித பொம்மைகளும் விளையாட்டு சாமன்களும் சிதறிக்கிடந்த அறை அச்சமூட்டுவதாக இருந்தது. திடீரென கிணற்று நீர் போல எல்லா திசைகளிலிருந்தும் பீறிட்டு சூழ்ந்து கொள்ளும் தனிமையை உணர்ந்தாள். பீதியில் தோளில் மாட்டிய கைப்பையை இறுகப்பிடித்தபடி அந்த அறையை உடனடியாக கடந்து விட முயல்வது போல முடிந்தமட்டும் வேகமாக அடிகளை எடுத்து வைத்தாள்.

அம்மா மைதானத்தை அடைந்தபோது சிறிய சறுக்கின் மறுபுறம் அமைந்த படிகளில் குட்டி கால்களை நிதானமாக அடியெடுத்து வைத்து ஏறிக்கொண்டிருந்தாள் நந்தினி. மாலை வெயிலின் பொன்னிறத்தில் பூதாகரமாக நீண்டிருந்த அவளின் நிழல் தரையைத்தாண்டி நீண்டு மைதானத்தின் வேலியில் விசித்திரமாக ஆடிக்கொண்டிருந்தது. சிலையைப்போல நின்று அம்மா அவளை பார்த்துக்கொண்டிருந்ததை நந்தினி கவனிக்கவே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.