இது தேர்தல் காலம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேட்பாளர்களளைப் பார்க்க கூட்டத்திற்கு செல்ல வேண்டும். அங்கே விடிய விடிய எல்லோர் பேசுவதையும் கேட்பார்கள். துண்டு சீட்டில் விளம்பரம் அடித்து ஒட்டுவார்கள். சுவரெங்கும் ஓவியம் வரைந்தார்கள். இணையம் வந்த பிறகு இந்த முறை மாறுகிறது. வேட்பாளரை ட்விட்டரில் சந்திக்கலாம். ஃபேஸ்புக் மூலமாக வினா எழுப்பலாம். ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒரே ஒரு பேட்டியில், அதுவும் சில மணித்துளிகளே நீடிக்கக் கூடிய நேர்காணலில், நிருபர் ஒருவர், தமிழக முதல்வரை கேள்விகளால் துளைப்பார். இன்றோ, நமது சட்டமன்ற உறுப்பினர் முதல் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் வரை யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். இதைத்தான் “மக்கள் ஊடகம்” என்கிறார்கள். ’முதல்வன்’ படத்தின் நிருபர் புகழேந்தி போல் சாதாரண மக்களை சாதனமாகக் கொண்டு மக்களின் ஊடகமாக ‘வைஸ்’ (vice) உருவாகி இருக்கிறது.
‘வைஸ்’ என்பது என்ன?
சுருக்கமாக சொன்னால் இணையத்தளம். துளிர்பருவத்தினரை குறிவைக்கும் ஊடகம். நிறைய குறும்படங்கள் எடுக்கிறார்கள். ஆங்காங்கே மசாலா தூவுகிறார்கள். அச்சிலும் இலவசமாக விநியோகிக்கிறார்கள். வலையின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு விஷயத்தை எப்படி நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்?
ஆதி வழி என்பது செய்தித்தாள் மூலமாக, நேற்றைய நிகழ்வுகளைப் படிக்கலாம். மாலை நேர செய்திகள் மூலமாக, தொலைக்காட்சியில் கேட்கலாம்.
இதன் தொடர்ச்சியான காலகட்டத்தில் நமக்குப் பிடித்த செய்தி விமர்சகர் மூலமாக தலையங்கங்களை ஆராய வேண்டும். பட்டிமன்றம் போல் விவாத அரங்குகளில் பங்குபெற்று சாய்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். அனுபவசாலிகளிடம் சென்று அரட்டை அடித்து தெளிவு பெறலாம்.
இன்றைய காலகட்டத்தில் செய்தியின் மூலகர்த்தாவே சமூக ஊடகங்களில் தென்படுவார். அவரிடமே நேரடியாக சென்று ’என்ன விஷயம்?’ எனக் கேட்கலாம். ஆதாரம் கோரலாம். அதை எதிர் சாராரிடம் உடனடியாகக் கொண்டு சென்று இரு பக்க உண்மைகளையும் அறியலாம்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் புரட்சி வெடித்த போது இப்படித்தான் டிம் பூல் (Tim Pool) கண்ணும் கேமிராவுமாக இயங்கினார். கலகக்காரர்களோ, காவல்துறையோ துரத்தும்போது, கையில் படப்பதிவு கருவியை இடுக்கிக் கொண்டு, இன்னொரு புறம் செல்பேசி, ஐபேட் சமாச்சாரங்களை பையில் திணித்துக் கொண்டு நின்று, நிதானமாக 1…2…3… சொல்லிவிட்டு ஓட ஆரம்பிக்க முடியாது அல்லவா! அதனால் கூகுள் கண்ணாடி அணிந்து நிகழ்வுகளைப் பதிகிறார். அவற்றை காற்றலை மூலமாக தன்னுடைய யூடியுப் கன்னலுக்கும், ‘வைஸ்’ சந்தாதாரர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்.
இந்த மாதிரி ஒவ்வொரு இரத்த பூமியிலும் ஓரிரண்டு டிம் பூல்களை ‘வைஸ்’ உலவ விட்டிருக்கிறது. இந்த மாதிரி ஆள்களை எப்படி பிடிக்கிறார்கள்?
அமெரிக்காவின் “ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட்” (Occupy Wall Street) போராட்டத்தின் போதுதான் டிம் பூல் தெரிய வந்தார். மந்தை ஊடகங்களான சி.என்.என்னும் பாக்ஸ் (ஸ்டார் டிவி)களும் களத்தில் கலந்து கொள்வதற்கு முன்பே, அந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பினார். விமானியில்லாமல் ஓடும் விமானத்தை (drone) வாங்கினார். அதன் அடியில் ஒளிக்கருவியை பொருத்தினார். தொலைவில் இருந்து கூட்டத்தை படம் பிடித்தார். முதல் நாள் அன்று பதினேழு பார்வையாளர்கள். இரு நாள் கழித்து எழுநூறாகியது. முதல் மாதம் முடிந்த பிறகு அவரின் விழியங்களை இரண்டரை இலட்சம் பேர் உலகெங்கும் பார்த்திருந்தார்கள். 36,000 சந்தாதாரர்கள்; 700,000 பார்வையாளர்கள் எனப் பெருகிக் கொண்டே வர டிம் பூல்-கள் ‘வைஸ்’ கண்ணில்பட்டார்கள்.
இந்த மாதிரி “மாற்றம் வேண்டும்!” எனத் துடிக்கும் இளைஞர் பட்டாளத்தை ‘வைஸ்’ அமுக்கிப் போடுகிறது. அவர்களுக்குக் கொஞ்சம் விழியத் தயாரிப்பு நுட்பங்களையும் போலீஸ்காரர்கள் கண்ணீர் புகை போட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்து உலகெங்கும் அனுப்புகிறது. மற்ற செய்தி நிறுவனங்கள் கடனேயென்று வெளிநாட்டிற்கும் போர்பூமிக்கும் நிருபர்களைத் தள்ளிவிட்டால், ‘வைஸ்’காரர்களின் படப்பதிவு நிருபர்கள் வெகு விருப்பத்துடன் கலவரங்களுக்குள் கலக்கிறார்கள். அன்றைய ஆப்கானிஸ்தானில் துவங்கி நேற்றைய சிரியா முதற்கொண்டு, இன்றைய உக்ரைன் வரை நாலாயிரம் நிருபர்களை தன்னகத்தே வைத்திருக்கிறது.
ஆள் கிடைப்பது இருக்கட்டும். இதற்கெல்லாம் மூலதனம் எங்கே சுரக்கிறது? விழியத்தை வழங்குவதற்கு அகலபாட்டை வேண்டும். அதற்கான விட்டமின் சி எப்படி பாய்கிறது?
எண்பதுகளின் இளைஞர்களுக்கு எம்.டிவி. ஆதர்சம். அந்த எம்டிவி.யில் இருந்து 2006ல் டாம் ஃப்ரெஸ்டன் (Tom Freston) கல்தா கொடுக்கப்பட்டார். அவருக்கு அந்தக் கால எம்டிவி போல் இந்தக்காலத் தலைமுறைக்கு ஏதாவது இளமையாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எம்டிவி.யை விட்டு நீங்குவதற்காக தரப்பட்டிருந்த, எண்பது மில்லியன் அமெரிக்க டாலர்களும் தூங்கிக் கொண்டிருந்தது. 1994ல் துவங்கித் தவழ்ந்து, நீஞ்சி, நின்று தட்டுத் தடுமாறி நடக்கத் துவங்கியிருந்த ‘வைஸ்’ பக்கம் பார்வை திரும்பியது.
இப்போதைய சிறுசுகளுக்கு கலப்படம் இல்லாத சரக்கு வேண்டும். செய்தியை வாசிக்காமல், கண் முன்னே அப்படியே அப்பட்டமாக நிறுத்த வேண்டும். கொஞ்சம் போல் தொட்டுக் கொள்ள பிற கேளிக்கைகளும் முகத்திலடித்தது போன்ற பாவனையுடன் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். இதையெல்லாம் ‘வைஸ்’ திறம்பட செய்து வந்தது.
வயிற்றில் துப்பாக்கி குறி பார்க்கிறது. துப்பாக்கி முனைக்கும் குடலின் துவக்கத்திற்கும் ஆறு அங்குலம்தான் இடைவெளி.
இடம் – பொகோட்டா, கொலம்பியா.
பொருள் – குண்டு துளைக்காத மேலணி.
தையற்கலைஞர் கற்பூரம் அடித்து சொல்கிறார். ”இந்தக் கோட்டைப் போட்டுக் கொண்டிருக்கும்போது உன்னை துப்பாக்கியால் சுட்டால், உனக்கு ஒரு சிராய்ப்பு கூட வராது”.
“சோதனை செஞ்சிரலாமா?”
“நான் சுடறேன்!”
பார்க்கும் நமக்கோ பதைபதைக்கிறது. டப்… டப்… இரண்டு முறை சுடுகிறார். தள்ளி நின்றால் குறி தவறும் என்று கிட்ட இருந்தே சுடுகிறார். கண்ணை மூடிக் கொண்டுவிட்டேன். திறந்து பார்த்தால், சட்டையைத் தூக்கி அப்பழுக்கற்ற தொப்பையை காட்டுகிறார் சுடப்பட்டவர். போலி குண்டுகள் அல்ல என்பதற்கு சாட்சியமாய் தட்டையான குண்டுகளையும் நினைவுச் சின்னமாக எடுத்துக் கொள்கிறார். இந்த மாதிரி அசல் வாழ்க்கையின் அபத்தங்களை இருக்கை நுனி ஊசலாட்டத்துடன் மீண்டும் மீண்டும், விதவிதமாக ‘வைஸ்’ படமாக்கிக் காட்டுகிறது. அதைப் பார்க்க யூடியுபில் மட்டும் நாலரை மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.
செய்திப்படங்கள் தவிர அச்சு ஊடகத்திலும் ‘வைஸ்’ காலூன்றி இருக்கிறது. முப்பத்தி நான்கு நாடுகளில் ஒன்றரை மில்லியன் வாசகர்களைக் கொண்டிருக்கிறார்கள். துவக்கத்தில் பதினைந்து நிமிடத் துணுக்குகளாக ‘வைஸ்’ மூலமாக வெளிவந்த படங்கள் பலவும், முழுநீள ஆவணப்படங்களாக மாறி இருக்கிறது. வெறுமனே இளைஞர் சமுதாயத்தின் அபிலாஷைகளுக்குத் தீனியாக மட்டும் இல்லாமல், அதன் மேற்சென்று, விவகாரங்களின் ஆழத்தை முழுமையாக அலசும் விதத்தில் அமைந்திருப்பதாலும், எங்கிருந்தோ உட்கார்ந்து கொண்டு வாய் மெல்லும் அலசல்கள் மட்டும் இல்லாமல், களத்திற்கு சென்று வந்தவர்களின் உண்மை அனுபவங்களாக இருப்பதாலும், இந்த ஆவணப்படங்கள் நேர்மையாகவும் செழுமையாகவும் இருக்கிறது. எனவே, அவை ஸ்ண்டான்ஸ் போன்ற விழாக்களில் விருதுகளும் பெறுகிறது.
சென்ற ஆண்டில் அவர்கள் செய்த தலைப்புகளில் சில… சுடான் நாடின் டார்ஃபர் நகரத்தில் நடந்த உள்நாட்டு கலகம் குறித்த தொடர்; கத்ரீனா சூறாவளிக்குப் பின் பாதிக்கப்பட்டோரின் அனாதரவான நிலை குறித்த அலசல்; ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கழிவுக் கொட்டிடம் குறித்த துப்புதுலக்கல்; கனடாவின் ஆல்பெர்ட்டாவில் இருந்து எண்ணெய் எவ்வாறு சுற்றுச்சூழலை சீரழிக்கிறது என்பது குறித்த ஆய்வு. அதே சமயம் நிர்வாண அழகிகளின் பேட்டி என்றும், பூனைகளின் புணர்ச்சி வாழ்க்கை என்றும், கவர்ச்சிகரமான விஷயங்களுக்கும் எந்தக் குறையுமில்லை. இந்தக் கலவைதான் இளைஞர்களை இழுக்கிறது.
அதை விட முக்கியமாக இணையத்தில் வருவதை நம்ப முடியாது. ”போர்க்களத்தில் இருந்து நேரடியாக” என்று சொல்லிவிட்டு, கூடுவாஞ்சேரியில் உட்கார்ந்து கொண்டு வரைகலை வல்லுநர் உதவி கொண்டு மாயாஜாலம் நிகழ்த்துவோர் எக்கச்சக்கம். கொடுக்கப்பட்ட விழியம் நிஜமாகவே சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டதா என்பதை சோதிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இந்த விழியம் இட்டுக்கட்டியதா என்று ஆராய வேண்டும். அதற்கான அத்தாட்சிகளைக் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் ‘வைஸ்’ செய்து, நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. இது அந்தக்கால நியு யார்க் டைம்ஸ் போல் குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடும் பழங்கால பாரம்பரியம். அதற்காகவும் ‘வைஸ்’ கொண்டாடப்படுகிறது.
இன்றைய சூழலில் எல்லோரும், எப்போதும் இணையத் தொடர்பிலேயே இருக்கிறோம். கையில் ஒரு செல்பேசி. அப்படியே அந்தக் கையில் ஐ-பேட். நம் முன்னே கணினி. அறையின் ஈசானிய மூலையில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கும். அதன் மீதும் ஒரு கண் இருக்கும். அந்தத் தொலைக்காட்சியோ, நவநாகரிக புத்திசாலித் தொலைக்காட்சி. ஒரு பக்கம் செய்தி வாசிப்பு. அதே திரையின் பாதி பக்கத்தில், அந்தச் செய்தி குறித்த சமூக ஓடை கிடைக்கும். இதைத்தான் ‘புதிய ஊடகம்’ என்கிறோம்.
ஒருவர் மட்டுமே சொல்லி பலருக்குத் தெரிய வந்தால் அது பழைய ஊடகம். டிவியில் வரும் செய்திகள் மூலமாக அனைவரும் அறியத் தருவது பழைய ஊடகம். பலர் சொல்லி அதன் மூலம் பலர் பயனடைந்தால், அது ‘புதிய ஊடகம்’. அங்காடியில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது எனத் தெரிய வருகிறது. ட்விட்டரில் அதை செய்தியாக அங்காடியினுள் சிக்கி இருக்கும் பெண்மணி தன் தோழர்களுக்கு நிலைத்தகவல் இடுகிறார். அந்த நிலைத் தகவலைத் தொடர்ந்து இன்னொருவர் நேரடி ஒளிபரப்பாக விழியத்தைக் கொடுக்கிறார். பலர் மூலமாக பலருக்கு உடனடியாக செய்திகள் சென்றடைகிறது. இது ‘புது ஊடகம்’.
‘புது ஊடக’த்திற்கும் பழைய பிரசுரங்களுக்குரிய எல்லாப் பிரச்சினைகளும் உண்டு. அரசு சிலவற்றை தணிக்கை செய்யக் கோரும். சில நாடுகளில் தடை செய்யப்படுவீர்கள். ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்குப் பிடித்த மாதிரி கத்தரிக்க கட்டளை பிறக்கும்.
‘வைஸ்’ விழியத்தை விநியோகிக்க உள்ளுர் கேபிள் நிறுவங்கள் 144 ஊரடங்கு போடும். அவர்களுக்கு காசு கொடுத்துப் பார்க்கும் அவர்களின் ஒளிபரப்புகள் முக்கியம். அவர்களுக்கு எந்த வருமானமும் தராத ‘வைஸ்’ கன்னல் மூலம் எந்த லாபமும் இல்லை. இது நெட் நியுட்ராலிடி.
வடவழித் தொலைக்காட்சி (கேபிள் டிவி) பரவலாக வந்தவுடன் இளைஞர்களிடம் எம்டிவி புகழ்பெற்றது. இணையம் பரவலாக வந்தவுடன் இளைஞர்களிடம் ‘வைஸ்’ புகழ்பெறுகிறது. இளைஞர்களின் ரசனையோ தொழில்நுட்பத்தை விட வேகமாக மாறும் தன்மை கொண்டவை. நேற்று உவப்பாக இருந்தது நாளை உவர்ப்பாகிவிடும்.
இந்தப் பிரச்சினைகளினால் ‘வைஸ்’தாக்குப்பிடிக்காமல் காணாமல் போகலாம். ஆனால், ‘வைஸ்’ கட்டமைத்திருக்கும் மூன்று விஷயங்கள் சாஸ்வதமாக நிலைத்திருக்கப் போகின்றன.
முதலாவது “மக்கள் ஊடகம்”. நீங்களும் நானும் பக்கத்துவீட்டுக்காரியும் இனி நிருபர்கள். அவர்கள் படம் பிடிப்பதே வேத வாக்கு. கேமிரா வந்த பிறகு உண்ணாவிரதங்கள் துவங்கப் போவதில்லை. நாம் புதிய ஊடகங்களில் சொல்வதை பழைய ஊடகங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்.
இரண்டாவது வானொலியை தொலைக்காட்சி மறைத்தது. தொலைக்காட்சியை இணையம் மறக்கடித்தது. இணையத்தை எது மூழ்கடிக்கும்? அது தெரியாது. ஆனால், கன்றுகளும் கருக்குகளும் விளம்பரதாரர்களின் செல்லங்களாக என்றென்றும் நீடிப்பார்கள்.
கடைசியாக “புதிய ஊடக”த்தில் நீங்கள் உரையாடினாலும், உங்களை கோடிக்கணக்கானோர் பின் தொடர்ந்தாலும், உங்களின் உயிருக்கோ, பேச்சு சுதந்திரத்திற்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது. நீங்கள் வித்தாக மாறி, புரட்சியை வளர்க்கலாம்; பலருக்கு சென்றடையலாம். அயல்நாட்டு இளைஞர்கள் அதைக் கண்டு களிக்கலாம். ஆனால், உள்ளூர் அதிகாரவர்க்கம் பார்த்துக் கொண்டிருக்காது. கபர்தார்.