கோட்டை

முதல் வரிசையில் பன்னிரண்டு வீடுகள். இரண்டாவதில் ஏழு. முதலாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷ் துருப்புகள் தங்குவதற்காகக் கட்டப்பட்டது. சீமை ஓடு போட்ட கூரை. சூடு அதிகம் தெரியக்கூடாது என்று மிக உயரமான சுவர்கள். யுத்தம் முடிந்து பல வருடங்கள் காலியாகவே இருந்திருக்க வேண்டும். நிஜாம் தன் சமஸ்தானத்தில் இருந்த ரயில்வேயை பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து வாங்கியபோது லான்சர் பாரக்ஸையும் சேர்த்து வாங்கிவிட்டார். அந்தப் பத்தொன்பது வீடுகளில் பதினெட்டு ‘ரன்னிங்க் ஸ்டாஃப்’ என்று அறியப்படும் கார்ட், டிக்கெட் எக்ஸாமினர் போன்றவர்களுக்கு. ஒரே ஒரு வீடு ரயில்வே காரியாலயத்தில் பணி புரிபவருக்கு. எங்கள் தகப்பனார் இருபது ஆண்டுகள் காத்திருந்து பெற்ற வீடு.

முதல் சில மாதங்கள் ஒரு தொந்திரவு இல்லை. ஆனால் எங்கள் வீட்டில் மாடு வந்தவுடன் நாங்கள் பதினெட்டு வீட்டாருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிட்டோம்!

மாட்டை வைத்துக்கொண்டு நாங்கள் பட்ட பாடு யாருக்கும் தெரியவில்லை. உலகிலேயே நாங்கள் மட்டும்தான் கறந்த பாலைக் குடிப்பது போல எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். நாங்கள் பல நாட்கள் எங்கள் அண்டை அயல் வீட்டாருக்கு இலவசமாக மோர் கொடுத்திருக்கிறோம். மோருக்கு முதலில் பாலைக் காய்ச்சவேண்டும். பால் ஆறிய பிறகு துளி தயிர் விட்டு அதைத் தயிராக்க வேண்டும். அப்புறம் தயிர் கடைய வேண்டும். மிகுந்த நேரமும் பொறுமையும் தேவைப்படும் பணி அது.

அந்த லான்ஸர் பார்க்ஸில் எல்லாருடைய வீடுகளிலும் மாடு வைத்துக் கொள்ளும்படி கொல்லைப்புறம் இருந்தது. பலர் கோழி, ஆடு வளர்த்தார்கள். ஒருவர் வீட்டில் புறா இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் மாடு நாங்கள் மட்டும்தான்.

நாங்கள் லான்ஸர் பாரக்ஸில் இருந்த பதிமூன்று ஆண்டுகளில் பன்னிரண்டு ஆண்டுகள் மாடுகளும் எங்கள் குடும்பத்தில் பங்கு பெறுபவையாக இருந்தன. எங்கள் கண் முன் ஒரு பசு மாடு, ஓர் எருமை உயிரை விட்டிருக்கின்றன. கன்றுகளும்தான். மாட்டுப் பிரசவங்கள் ஏழு எங்கள் கொல்லைப்புறத்தில் நிகழ்ந்திருக்கின்றன. நாங்கள் மாடுகளினால் எவ்வளவு கவலைப்பட்டிருக்கிறோம், கண்ணீர் விட்டிருக்கிறோம் என்று எங்களுக்குத்தான் தெரியும். மாடு சிறிது காலாறட்டும் என்று நீண்ட கயிறு கொண்டு வெளியே மரத்தில் கட்டி வைத்தால் யாரோ அதை அவிழ்த்து விட்டு விடுவார்கள். யாரோ ஒரு நல்லவன் பிளேட் கொண்டு மாட்டைக் காயப்படுத்தியிருப்பான்.. ஒருவன் ஆணி கொண்டு மாட்டின் வயிற்றில் குத்தியிருப்பான். நாங்கள் மாட்டைத் தேடி அலைவதை இந்து முஸ்லிம் கிருத்துவர் என்ற பாகுபாடு இல்லாமல் ரசித்திருக்கிறார்கள்.

மாடுகள் தொலைந்து போக வேண்டுமென்று ஓடிப்போவதில்லை. பால் கொடுக்கும் மாட்டை இருவேளை கறக்காவிட்டால் அது சித்திரவதைக்கு ஒப்பாகும்.ஆனால் அதற்குப் புது இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம். பசு மாடுகள் அதிக தூரம் போகாது. ஆனால் எருமை மாடு பல மைல்கள் போனபிறகுதான் வீட்டையும் அங்கே காத்திருக்கும் கன்றைப் பற்றியும் நினைக்கும்.

இந்த முறை எங்கள் வீட்டில் இருந்த எருமை மாடு காணாமல் போய் விட்டது. பதினைந்து அடி நீளமுள்ள கயிறு கொண்டு மரத்தில் கட்டியிருந்தோம். யாரோ அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். வழக்கம் போல அதைத் தேடிகொண்டு நான் போனேன்.

வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில் இருந்த குட்டையைப் பார்த்தேன். இல்லை. குன்றுகள் திசையில் போனேன். அங்கும் இல்லை.

லான்ஸர் பாரக்ஸின் கிழக்கு திசையில் அந்த நாட்களில் மைல்கணக்கில் கட்டாந்தரை மேடும் பள்ளமாகப் பரந்து கிடக்கும். குட்டைக்கு எதிரே எப்போதும் பூட்டியிருக்கும் ஓர் இடுகாடு. மாட்டுக்கு உண்மையிலேயே வழி தெரியாமல்தான் போயிருக்கும்.

நான் மேடு பள்ளமாயிருந்த பகுதியெல்லாம் தாண்டி வெகு தூரம் வந்து விட்டேன். இதுவரை அந்தத் திசையில் அவ்வளவு தூரம் நான் போனதில்லை. எனக்குத் தூரம் பற்றிக் கவலை இல்லை. ஆனால் சைக்கிளுக்கு ஏதாவது ஆகி விட்டால் அதைத் தள்ளிக்கொண்டு வீடு போய்ச் சேர மணிக்கணக்கில் நேரம் பிடிக்கும்.

நான் ஒரு கிராமத்தை அடைந்தேன். பரம ஏழைகள் உள்ள கிராமம். சில குடிசைகளில்தான் அடுப்பு புகைந்தது.

அந்தக் கிராமத்தையும் கடந்து சென்றேன். பெரிய சாலை. சாலைக்கு மறுபுறத்தில் பெரிய மேடு. மேட்டின் மீது சிதிலமான கோட்டை.

img2

நான் எருமை மாட்டைத் தேடாமல் அந்த மேடு மீது ஏறினேன். கோட்டை என்னைப் பிடித்திழுத்தது.

அதை மேடு என்று சொல்வது சரியில்லை. ஒரு குன்று. கோட்டை கட்ட எவ்வளவு பேர் வேண்டியிருந்ததோ? சுண்ணாம்புக் காரையை எங்கு அரைத்தார்கள்? பாறைகளையும் செங்கல்களையும் எப்படிக் குன்று மீது கொண்டு சேர்த்தார்கள்? ஒரு விதத்தில் வியப்பு. ஒரு விதத்தில் இது என்ன வெட்டிவேலை என்றும் தோன்றியது.

கோட்டை நடுவில் சிறிய அரண்மனை. கதவு ஜன்னல் எல்லாவற்றையும் யாராரோ எடுத்து அடுப்பு எரியப் பயன்படுத்தியிருப்பார்கள். அப்படியும் அரண்மனை திகைக்க வைப்பதாக இருந்தது. ஒரு காலத்தில் இங்கு நிறையப் பேர் வசித்திருக்க வேண்டும். எப்படி எல்லாரும் காணாமல் போய் விட்டார்கள்? அந்த ராஜாவையோ ஜாகிர்தாரையோ யாரோ கொன்றிருக்க வேண்டும். கோட்டைகள் எல்லாம் தாக்குதல் ஏதும் இல்லாதவரைதான் பாதுகாப்பு. தாக்குகிறவர்கள் காவல் நிற்பவர்ளைக் கொன்று விட்டுக் கோட்டைக்குள் புகுந்து விட்டால் கோட்டைக்குள் இருப்பவர்கள் பலி ஆடுகளாகி விடுவார்கள்.

நானும் பல கோட்டைகள் பார்த்திருக்கிறேன். சூறையாடல் இந்தக் கோட்டையின் ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்ந்தது தெரிந்தது.. இந்த மனிதன், அவன் ஆட்சிக்கு உட்பட்டவர்களைச் சித்திரவதை செய்து சேர்த்த பணம், நகை எல்லாம் ஒரு தாக்குதலில் போய்விட்டிருக்கும். அவன் குழந்தைகள், ஆசை நாயகிகள் எல்லாரும் சிதைந்து போயிருப்பார்கள். கோட்டைச் சுவர்கள் மட்டும் மனிதனின் முட்டாள்தனத்தையும் குரூரத்தையும் நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டே இருப்பது போலப் பல நூற்றாண்டுகள் நின்று கொண்டிருக்கும்.

சிறிது நேரம் வெயிலையும் பொருட்படுத்தாது குட்டிச் சுவரான அந்த அரண்மனையில் உட்கார்ந்திருந்தேன். பிறகு கீழே இறங்கினேன்.

கிராமத்தில் ஒரு குடிசைக்காரரிடம், “இது யாருடைய கோட்டை?” என்று கேட்டேன். அந்த மனிதர் கையை விரித்தார். “ரொம்ப நாளாக இப்படித்தான் கிடக்கிறது.”

“பேர் ஏதும் கிடையாதா?”

“எனக்குத் தெரியாது. நாங்கள் யாருமே அங்கே போவது கிடையாது. ஆடுகள் மட்டும் ஏறிப்போகும். அங்கே புழுக்கை போட்டுவிட்டு இறங்கும்.”

எனக்கு எங்கள் வீட்டு எருமை நினைவுக்கு வந்தது. “இங்கே எருமை மாடு ஏதாவது வந்ததா?”

“ஆமாம். கட்டிப்போட்டிருக்கிறோம். அது கோட்டைக்குள் போக இருந்தது.”

“ஐயய்யோ, அது கறவை மாடு.”

“தெரியும். நீ வராவிட்டால் நாங்கள் கறந்திருப்போம். ஆனால் ஜாதி மாடு. லேசில் கறக்க விட்டிருக்காது. நீ எங்கிருந்து வருகிறாய்?”

நான் சொன்னேன். அந்த இடமெல்லாம் அந்த மனிதருக்குத் தெரியாது.

மாட்டை ஒரு கட்டை வண்டிச் சக்கரத்தில் கட்டியிருந்தார்கள். எங்கள் கயிறுதான். மாடு என்னைப் பார்த்து அலைபாய்ந்தது.

“இங்கே யாராவது என் கூட வரமுடியுமா? மாட்டை ஏன் கோட்டையில் ஏற விடவில்லை?”

“கோட்டை நல்ல இடம் இல்லை. அப்பன் பிள்ளையைக் கொன்றிருப்பான். பிள்ளை அண்ணாவைக் கொன்றிருப்பான். அம்மாக்காரி யார் யாருக்கோ விஷம் வைத்திருப்பாள். கோட்டை நல்ல இடமே இல்லை.”

“மாட்டை நான் ஒருவனால் ஓட்டிப் போகமுடியாது.யாராவது என்னுடன் வந்தால் என் அம்மாவிடம் சொல்லி மோர் தரச் சொல்லுவேன்.”

“நானே வருகிறேன். சோறும் தரவேண்டும்.”

நாங்கள் இருவருமாக மாட்டை ஓட்டி வந்தோம். நான் கோட்டை பற்றிக் கேட்ட போதெல்லாம் பதில் இருக்காது. நாங்கள் லான்சர் பாரக்ஸை நெருங்கி விட்டோம். மாட்டிற்கு வீடு தெரிந்தவுடனே எங்களிடமிருந்து ஒரு பாய்ச்சலில் விடுவித்துக் கொண்டு வீட்டிற்கு ஒடியது.

“ஜாதி மாடு. இதைப் போய் நீங்கள் தொலைத்து விடுகிறீர்களே?”

நான் பதில் சொல்லவில்லை.

வீட்டிலும் யாரும் வாயைத் திறக்கவில்லை.

நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கோட்டையைப் பார்க்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டேன், அது முடியாமல் போய் விட்டது. அந்தக் கோட்டைக்கு ஒரு விபரீதமான வரலாறு இருந்திருக்க வேண்டும். அந்தக் கிராமத்து மனிதனுக்கு எல்லா விவரமும் தெரிந்திருக்க வேண்டும். மாடு காணாமல் போன நாளன்றே அதை நான் நன்றாகச் சுற்றிப் பார்த்திருக்க வேண்டும். இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும் சேர்ந்து கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.