காகசஸ் மலைக்கைதி – பகுதி 4

மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

இவ்வாறு ஜீலின் ஒரு மாத காலம் வாழ்ந்தான். பகல் வேளைகளில் அவன் அந்த ஆவுலைச் சுற்றி சோம்பித் திரிந்தவாறோ அல்லது கைவேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டோ இருப்பான்; ஆனால் இரவுகளில் ஆவுலில் எல்லாம் அமைதியாக உள்ள வேளைகளில் அந்தக் கொட்டிலின் தரையைத் தோண்டுவான். அது கற்கள் நிறைந்து இருந்ததால், தோண்டுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை; ஆனால் அவன் தனது அரத்தை வைத்துக் கொண்டு கடினமாக வேலை செய்து, ஒரு ஆள் நுழையுமளவுக்குப் பெரிய ஒரு பள்ளத்தை சுவற்றினடியில் பண்ணி விட்டான்.

‘எனக்கு மட்டும் இந்த நிலத்தின் அமைப்பை அறிந்து கொள்ள முடிந்தால், எந்த வழியில் போகலாம் எனத் தெரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்,’ என எண்ணிக் கொண்டவன், ‘ஆனால் எந்த ஒரு தார்த்தாரியனும் எனக்கு இதை எல்லாம் சொல்ல மாட்டான்,’ எனவும் எண்ணிக் கொண்டான்.

ஆகவே அவன் தனது எஜமானன் வீட்டிலில்லாத ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து, இரவு உணவுக்குப் பின் கிராமத்திற்குப் பின்புறமிருந்த குன்றின் மீதேறி சுற்று முற்றும் நோட்டம் விடக் கிளம்பினான். ஆனால் எஜமானன் எப்போதும் தான் வீட்டை விட்டுக் கிளம்பு முன் ஜீலின் மீது கவனம் வைத்துக் கொள்ளவும் அவனைத் தன் கண்காணிப்பிலிருந்து விட்டு விடாமலிருக்கவும் தன் மகனுக்கு உத்தரவிட்டு விட்டுத் தான் போவான். ஆகவே அந்தச் சிறுவன் ஜீலின் பின்னால், “போகாதே! தகப்பன் இதை அனுமதிக்க மாட்டான். நீ திரும்பி வராவிட்டால் நான் அக்கம் பக்கத்திலுள்ளவர்களைக் கூப்பிடுவேன்,” என்று கத்தியபடி ஓடினான்.

ஜீலின் அவனைச் சமாதானப் படுத்த முயன்றபடி, “நான் வெகு தூரம் செல்லவில்லை; அந்தக் குன்றின் மீது தான் ஏறப் போகிறேன். உடல்நிலை சரியில்லாதவர்களைக் குணமாக்கும் மூலிகை ஒன்றினைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ வேண்டுமானால் என் கூடவே வரலாம். இந்தத் தளைகளுடன் நான் எப்படி ஓடிவிட முடியும்? நாளைக்கு நான் உனக்கு ஒரு வில்லும் அம்புகளும் செய்து தருவேன்,” எனக் கூறினான்.

இவ்வாறு அந்தச் சிறுவனை சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றான். பார்க்கும் போது அந்தக் குன்று மிக உயரம் இல்லாதது போல் தான் காணப்பட்டது; ஆனால் காலில் தளைகளுடன் அதன் மீது ஏறுவது கடினமாக இருந்தது. ஜீலின் நில்லாமல் சென்று, ஒரு வழியாகக் குன்றின் உச்சியை அடைந்தான். அங்கு அவன் அமர்ந்தபடி அந்த நிலப் பரப்பின் அமைப்பு எவ்வாறு உள்ளது எனப் பார்த்துக் கொண்டான். தெற்குப் பக்கமாக, கொட்டிலைத் தாண்டி, ஒரு பள்ளத் தாக்கில் மந்தையாகக் குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன; பள்ளத் தாக்கின் கீழ் இன்னொரு ஆவுல் தென்பட்டது. அதன் பின்புறம் செங்குத்தான இன்னொரு குன்றும், அதன் பின் மேலும் ஒரு குன்றும் இருந்தன. குன்றுகளுக்கிடையே இருந்த நீலநிறப் பரப்பில், காடுகளும், இன்னும் தொலைவில் உயரமாக எழும் மலைகளும் தென்பட்டன. மிகவும் உயரமான மலை மீது சீனி போலப் பனி படர்ந்திருந்தது; ஒரு பனி முகடு மற்ற எல்லா முகடுகளையும் விட உயரமாக இருந்தது. கிழக்கிலும் மேற்கிலும் இத்தகைய குன்றுகள் காணப்பட்டன; இங்கும் அங்கும் பள்ளத் தாக்குகளில் இருந்த ஆவுல்களிலிருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. ‘ஆ, இவை அனைத்துமே தார்த்தாரியப் பிரதேசம்,’ என அவன் எண்ணிக் கொண்டான். பின் அவன் ருஷ்யப் பகுதிப் பக்கம் திரும்பி நோக்கினான். அவனது காலடிப் பக்கம், ஒரு ஆறும், அவன் வசித்த ஆவுலும், சிறு தோட்டங்களால் சூழப்பட்டுக் காட்சியளித்தன. ஆற்றினருகே அமர்ந்து துணிகளை நீரில் அலசிக் கொண்டிருந்த பெண்கள் சிறு பொம்மைகளைப் போல் காட்சியளித்தனர். இந்த ஆவுலைத் தாண்டி இருந்த ஒரு குன்று தெற்குப் பக்கம் இருந்த குன்றை விடத் தாழ்வாக இருந்தது; அதன் பின்னாலிருந்த இரு குன்றுகளில் மரங்கள் அடர்த்தியாக இருந்தன; இவற்றின் இடையே ஒரு நீலநிறமான சமவெளியும், அதைத் தாண்டி வெகு தொலைவில் புகை மண்டலம் போல ஒன்றும் காணப்பட்டன. ஜீலின் தான் கோட்டையில் இருந்த பொழுது எங்கு சூரியன் உதிக்கும் எங்கு மறையும் என நினைவு படுத்திக் கொள்ள முயன்றான்; சந்தேகமேயில்லை: ருஷ்யக் கோட்டை அந்த சமவெளியில் தான் இருக்க வேண்டும். அவன் தப்பி ஓடும் பொழுது இந்த இரு குன்றுகளுக்கும் இடையே தான் தன் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும்.

சூரியன் மறைய ஆரம்பித்தது. வெள்ளையான பனிமலைகள் சிவந்த நிறத்திற்கு மாறின; கரிய மலைகள் இன்னும் கறுப்பாகின; மலைச்சந்துகளிலிருந்து பனிமூட்டம் எழுந்தது; அவன் ருஷ்யக் கோட்டை இருக்கின்றது என்று எண்ணியிருந்த பள்ளத்தாக்கு, மறையும் சூரியனின் ஒளியில் நெருப்புப் பற்றி எரிவது போல் காணப்பட்டது. ஜீலின் கவனமாகப் பார்த்தான். ஏதோ ஒன்று புகைபோக்கியிலிருந்து வரும் புகை போல அசையக் கண்டான்; ருஷ்யக் கோட்டை அங்கு தான் இருக்கின்றதென்று உறுதி கொண்டான்.

Ukraine_Russia_USSR_Tolstoy_Story_Fiction_Crimea_Prisoner_in_the_Caucasus

வெகு நேரமாகி விட்டது. முல்லாவின் தொழுகைக் குரல் கேட்டது. மந்தைகள் வீட்டை நோக்கி விரட்டப் பட்டுக் கொண்டிருந்தன; பசுக்கள் கத்திய சப்தமும் கேட்டது; சிறுவன், “வீடு செல்லலாம்!” எனக் கூறிக் கொண்டே இருந்தான். ஆனால் ஜீலினுக்கு அங்கிருந்து கிளம்பவே மனம் வரவில்லை.

கடைசியில் ஒருவழியாக அவர்கள் திரும்பிச் சென்றனர். ‘நல்லது,’ என எண்ணினான் ஜீலின், ‘இப்போது எனக்கு வழி தெரிந்து விட்டது; ஆகையால் தப்பிச் செல்ல வேளை வந்து விட்டது.’ அவன் அன்றிரவே தப்பி ஓடிவிட எண்ணினான். இரவுகள் இருளாக இருந்தன- அது தேய்பிறை நிலவாகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாகத் தார்த்தாரியர்கள் அன்று இரவே வீடு வந்து விட்டனர். அவர்கள் வழக்கமாக மாட்டு மந்தைகளை ஓட்டிக் கொண்டும், உற்சாகமாகவும் திரும்பி வருவர். ஆனால் இந்த முறை மாட்டு மந்தைகள் இல்லை. அவர்கள் கொண்டு வந்தது ஒரு தார்த்தாரியனின் இறந்து போன உடலைத் தான்- சிவப்பு தாடிக்காரனின் சகோதரன் கொல்லப் பட்டிருந்தான். அவர்கள் உள்ளுக்குள் கோபத்துடன் காணப் பட்டனர்; அவனை அடக்கம் செய்வதற்காக எல்லாரும் குழுமினர். ஜீலினும் அதைக் காண்பதற்காக வெளியில் வந்தான்.

அவர்கள் அந்த உடலைச் சவப்பெட்டி இல்லாமல் ஒரு துணியில் சுற்றி, கிராமத்தை விட்டு வெளியே எடுத்துச் சென்று மரங்களின் கீழ் புல்தரையில் கிடத்தினர். முல்லாவும் சில முதியவர்களும் அங்கு வந்தனர். அவர்கள் தங்கள் தொப்பிகளில் துணியைச் சுற்றிக் கொண்டு, காலணிகளைக் கழற்றி விட்டு, இறந்தவன் உடலருகே குதிகால் மீது சம்மணமிட்டு, அருகருகே அமர்ந்தனர்.

முல்லா முன்பக்கம் இருந்தான்; அவன் பின்புறம் வரிசையாக தலைப்பாகை அணிந்த மூன்று முதியவர்களும் அவர்களின் பின்புறம் மற்ற தார்த்தாரியர்களும் இருந்தனர். எல்லாரும் கண்களைத் தாழ்த்திய வண்ணம் அமைதியாக இருந்தனர். ரொம்ப நேரத்திற்குப் பிறகு முல்லா தன் தலையை நிமிர்த்தி, “அல்லாஹ்!” (கடவுளே) என்றான். அவனது அந்த ஒரு வார்த்தைக்குப் பிறகு அனைவரும் தங்கள் கண்களைத் தாழ்த்திய வண்ணம் திரும்பவும் நீண்ட நேரம் அமைதியாக இருந்தனர். அவர்கள் சிறிதும் சப்தம் செய்யாமலோ, அசையாமலோ அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.

திரும்பவும் முல்லா தன் தலையை நிமிர்த்தி, “அல்லாஹ்!” என்றிட அனைவரும் ,”அல்லாஹ்! அல்லாஹ்!” என்று விட்டு அமைதியாயினர்.

அந்த இறந்தவனின் உடல் அசைவின்றிப் புல் மேல் கிடந்தது; அவர்களும் இறந்தவர்கள் போல அசைவின்றி அமர்ந்திருந்தனர். ஒருவர் கூட அசையவில்லை. மரங்களின் இலைகள் காற்றில் அசைந்தபோது எழுந்த ஒலியைத் தவிர வேறு ஒரு ஓசையும் அங்கே இல்லை. முல்லா ஒரு தொழுகையைத் திரும்பக் கூறிய பின் அனைவரும் எழுந்தனர். அந்த இறந்த உடலைத் தங்கள் கரங்களில் தூக்கிக் கொண்டு தரையில் இருந்த ஒரு குழியினருகே சென்றனர். அது ஒரு சாதாரணக் குழி அன்று; தரையின் அடியில் நிலவறை போலத் தோண்டப் பட்ட ஒரு கல்லறை ஆகும். இறந்தவனின் உடலைக் கரங்களின் அடியில் பிடித்த வண்ணம், கால்களைப் பற்றிக் கொண்டு, மெதுவாகக் கல்லறையின் உள்ளே இறக்கி நிலத்தின் அடியின் உட்கார்ந்த நிலையில் வைத்துக் கரங்களை முன்புறம் மடித்தும் வைத்தனர்.

நோகை ஆனவன் கொஞ்சம் பசுமையான புல்லைக் கொண்டு வர, அதையும் அந்தக் குழியினுள் திணித்து, அதை விரைவாக மண்ணால் மூடி விட்டு, தரையைச் சமன் செய்தனர். நேரான ஒரு கல்லை அந்தக் கல்லறையின் தலைப்பக்கம் நட்டனர். பின் தரைமீது ஒழுங்குபட நடந்து திரும்பவும் வரிசையாக அந்தக் கல்லறையின் முன் அமர்ந்து நீண்ட நேரம் அமைதியாக இருந்தனர்.

கடைசியில் அனைவரும் எழுந்து பெருமூச்சு விட்டபடி, “அல்லாஹ்! அல்லாஹ்! அல்லாஹ்!” என்றனர்.

சிவந்த தாடித் தார்த்தாரியன் அந்த முதியவர்களுக்குப் பணம் கொடுத்தான். பின்பு எழுந்து ஒரு சாட்டையினால் தனது நெற்றியில் மூன்று முறை அடித்துக் கொண்டு விட்டு, வீடு திரும்பினான்.

அடுத்த நாள் காலையில் சிவப்பு நிறத் தார்த்தாரியன் மூன்று பேர் தன்னைப் பின் தொடர ஒரு பெண் குதிரையை அந்தக் கிராமத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை ஜீலின் கண்ணுற்றான். அவர்கள் அந்தக் கிராமத்தின் எல்லையைத் தாண்டியதும், சிவந்த தாடித் தார்த்தாரியன் தனது மேலங்கியைக் கழற்றி விட்டுத் தனது பலமான கைகள் தெரியும் வண்ணம் சட்டைக் கைகளை மடித்து விட்டுக் கொண்டான். பின்பு ஒரு குறுவாளை எடுத்து அதை ஒரு சாணைக்கல்லின் மீது தீட்டலானான். மற்றத் தார்த்தாரியர்கள் அந்தப் பெண்குதிரையின் தலையை உயர்த்திப் பிடிக்க அவன் அதன் கழுத்தை வெட்டிக் கீழே வீழ்த்தினான்; பின் தனது பெரிய கைகளால் அதன் தோலைத் தளர்த்திய வண்ணம் உரிக்கலானான். பெரிய ஸ்த்ரீகளும் சிறு பெண்களும் வந்து அதன் குடலையும் உட்பாகங்களையும் கழுவினர். அந்தக் குதிரையை வெட்டித் துண்டங்களாக்கிக் குடிசையினுள் எடுத்துச் சென்றனர்; மொத்த கிராமமும் சிவப்புத் தார்த்தாரியனின் குடிசையில் சாவு விருந்துக்காகக் கூடியது.

மூன்று நாட்கள் வரை அவர்கள் அந்தக் குதிரையின் மாமிசத்தை உண்ட வண்ணம், பூஸாவையும் குடித்துக் கொண்டு, இறந்தவனுக்காகப் பிரார்த்தனை செய்தனர். எல்லாத் தார்த்தாரியர்களும் வீட்டிலேயே இருந்தனர். நாலாவது நாள் அவர்கள் செல்லத் தயாரானதை ஜீலின் கவனித்தான். குதிரைகள் வெளியே கொண்டு வரப்பட்டுத் தயார் செய்யப் பட்டன; சுமார் பத்து பேர் ( சிவப்புத் தார்த்தாரியனும் அதில் ஒருவன்) அவற்றில் ஏறிச் சென்றனர்; ஆனால் அப்துல் மட்டும் வீட்டிலேயே தங்கி விட்டான். அமாவாசை ஆனதால் இரவுகள் இருளாகவே இருந்தன.

‘ஆ! இன்று இரவே தப்பிக்க நல்ல நேரம்,’ என ஜீலின் எண்ணிக் கொண்டான். கஸ்டீலினிடமும் அதைக் கூறினான்; ஆனால் கஸ்டீலினின் உள்ளம் அவனுடன் ஒத்துழைக்கவில்லை.

“நாம் எவ்வாறு தப்பிச் செல்வது? நமக்கு வழி கூடத் தெரியாது,” என்றான் அவன்.

“எனக்கு வழி தெரியும்,” என்றான் ஜீலின்.

“உனக்கு வழி தெரிந்தால் கூட நாம் ஒரே இரவில் கோட்டையை அடைய முடியாது,” என்றான் கஸ்டீலின்.

“அவ்வாறு முடியா விட்டால் நாம் காட்டில் தூங்கலாம். இதோ பார், நான் கொஞ்சம் பாலாடைக் கட்டிகளைச் சேமித்து வைத்திருக்கிறேன். இங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? உன் வீட்டினர் மீட்புத் தொகையை அனுப்பிவிட்டால், நல்லது தான்- ஆனால் அவர்களால் அதைச் சேகரிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? ருஷ்யர்கள் அவர்கள் ஆட்களில் ஒருவனைக் கொன்று விட்டதால் தார்த்தாரியர்கள் இப்போது கோபமாக இருக்கின்றனர். நம்மைக் கொல்வதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,” என்றான் ஜீலின்.

கஸ்டீலின் சிறிது யோசனை செய்தான்.

“நல்லது, நாம் போகலாம்,” என்றான்.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.