கவிதைகள்

பரிநிர்வாணம்

– உதயணன் சித்தாந்தன்

கனவை உடுத்தபடிpn1
இரவிலசையும் நதி
தன் பூர்வீகமான சதுக்கத்தில் தேங்கியபின்
நான் வெளியேறிவிடுகிறேன்.
துக்கங்களிலிருந்து தூக்கங்களுக்கும்
தூக்கங்களிலிருந்து துக்கங்களுக்கும்

தூங்காமையின் அதிரூபமானஅசைவுகள்
உறையும் சாஸ்திரவெளியில்
புணர்ச்சியின் உச்சத்தை உணராதவளின் வலியுடன்
திரும்புகிறாள்
நூறாவதுமுறையும் கைவிடப்பட்டவள்.

காமத்தின் மெல்லிசை மணக்கும் காற்றில்
கைகளாய் அசையும் இலைகளைமென்றபடி
வியர்வைப் பொருக்குலர்ந்த ஆடைகளை
மோகித்திருப்பவன்
இப்போதும் மறுதலிக்கிறான்
புணர்ச்சியின் முனகல்களில்லாத
அத்தனை பொழுதுகளையும்

காமத்துக்கும் வசீகரத்துக்குமிடையில்
நீளும் கோடுகளில்
புத்தனின் ஞானஉணர்ச்சியும்
யசோதரையின் காமஅணுக்கமும் முயங்கும்
கணத்திலொரு பிலாக்கணம்
தீ பற்றி எரிவதைக் கண்டவர்கள்
தங்களின் நிர்வாணங்களை
இல்லாத ஆடைகளால் மூடுகிறார்கள்

கூடுங் கூட்டத்தில்
காமம் மறைத்த சம்பாசணைகள் யாவும்
எரிநட்சத்திரங்களானதை
பின்னொருநாள் கண்டபோது
யசோதரையின் நிர்வாணத்தில்
புத்தர் பரிநிர்வாணமடைந்திருந்தார்.

oOo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.