கவிஞர்களின் நாவல்கள்

யூமா வாசுகியின் “மஞ்சள் வெயில்” படித்து முடித்த சில நாட்கள் அந்த நாவலில் கையாளப்பட்டிருந்த மொழி பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு தலைக் காதல் தான் கதை. ஆனால் அது சொல்லப்பட்டிருந்த விதம் நாவலைக் கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சில் (இரவு இரண்டு மணி வரை) படிக்கச் செய்தது அதன் மொழியே என்று இப்போது தோன்றுகிறது. யூமா அடிப்படையில் கவிஞர் என்பது இங்கே கவனிக்கத் தக்கது. யூமாவின் “ரத்‌த உறவுகள்” நாவலைத் தேடிக்கொண்டிருக்கிறேன் இப்போது.

சமீபத்தில் வெளியான ஒரு மூன்று நாவல்களைப் படித்தபின் கவிதையில் இருந்து உரைநடைக்கு வரும் கவிஞர்களின் நாவல்களில் நடை (சொல்லப்படும் விதமும்) ஒரு சிறப்பு பெறுவதாய் எனக்குத் தோன்றுகிறது.

சுகுமாரனின் “வெல்லிங்டன்”

காலச்சுவடு வெளியீடு

Wellington_Sugumaran_Kaalachuvadu_Novels_Fiction_Story

வருட ஆரம்பத்தில் முதலில் வாசித்தது கவிஞர் சுகுமாரனின் முதல் நாவல் “வெல்லிங்டன்”.
பாபு என்கிற சிறுவனாய் தன் இளம் பிராயத்தை மறுபடி வாழ்ந்து பார்க்க முயற்சித்ததின் விளைவே இந்த நாவல், மற்றபடி எந்த இலக்கிய சாதனை செய்யும் முயற்சியில்லை என்று சுகுமாரன் முன்னுரையில் சொல்லியிருந்தாலும், என்னைப் பொருத்தவரை நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை வழங்கியது இந்த நாவல். குறிப்பாக நாவலின் ஆசிரியர் தன் கூற்றாக எல்லா பாத்திரங்களுள்ளும் நுழைந்து பேச முற்படவில்லை. பாபு என்கிற சிறுவனின் பதின்வயதுகள் வரை அவன் வளர்ச்சியோடு, சுற்றியுள்ள மனிதர்களின் காமம் மற்றும் மரணம் சார்ந்த நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ள நாவலின் நடை, சுகுமாரனின் கவிதைகளை விட, வெகு லகுவான ஒரு மொழியில் அமைந்துள்ளது.

யுவன் சந்திரசேகரின் “நினைவுதிர் காலம்”

காலச்சுவடு வெளியீடு

Ninaivu_Uthir_Kaalam_Yuvan_Chandrasekar_Story_Fiction_Novels_Poets_Kalachuvadu

முழுவதும் ஒரு நேர்காணல் பாணியில் சொல்லப்பட்டிருக்கும் நாவல்.

ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் ஹரிசங்கர் தீட்சித் என்னும் கதாபாத்திரம் தன் சகோதரர் சிவசங்கர் தீட்சித் பற்றிய நினைவுகளை ஒரு நேர்காணலில் சொல்லிச் செல்கிறார், இருநூற்றி எண்பது பக்கங்கள் விரியும் நாவல் முழுதும். நாவல் முழுக்க விரவி வரும் இசைக் கருவிகளைப் பற்றியோ, இசைக் கலைஞர்களைப் பற்றியோ, எந்த இசை ஞானமும் இல்லாத என்னை, முழு வீச்சில் தொடர்ந்து படிக்கச் செய்ததே இந்த நாவலின் சாதனை. யுவன் கையாண்டிருக்கும் மொழி, புனைவல்ல அத்தனையும் நிஜமே என்று தோன்ற வைக்கிறது.

சி. மோகனின் “விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்”

சந்தியா பதிப்பகம் வெளியீடு

Sandhya_C_Mohan_Tamil_Novels_Fiction_Literature_Vindhai_kalaijan_Uruva_Chithiram_Books_Read

கவிஞர் சி. மோகன் அவர்கள் எழுதியுள்ள முதல் நாவல்.

ராமன் என்கிற ஓவியனுடைய வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம், சரளமான நடையில் ஒரு நூறு பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட மூன்று நாவல்களையும் படித்த பின்னர் தோன்றுவது:

“கவிஞர்களே, நாவல் எழுத வாருங்கள்”