என் நண்பன் ஐராவதம்

1955 என்று என் ஞாபகம். மாம்பலம் ரங்கநாதன் தெருவில் என் வீடு. அன்று ரங்கநாதன் தெருவில் ஒரு இரண்டு க்ரவுண்ட் காலி மனை இருந்தது. (நம்புங்கள்)

அங்கு பெரியவர் ரா.வீழிநாதன் அவர்கள், “சாதனா சமாஜ்” என்று ஒரு சபையை நடத்தி வந்தார். அங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பஜனை 2 மணி நேரம் நடக்கும். அங்குதான் நான் ஸ்வாமிநாதனை முதலில் சந்தித்தேன். பதினைந்து நிமிடம் அவன் லா.ச.ரா, தி.ஜானகிராமன் முதலிய பிரபல தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது நாவல்களையும் பற்றிப் பேசினான். நானோ முழு சூன்யம்.

“உங்க வீடு எங்க இருக்கு?” என்று கேட்டேன். ‘இதோ’ என்று பின்னாலேயே காட்டினான். அது ஒரு பத்து போர்ஷன்கள் அடங்கிய காலனி.

“நாளைக்கு ஸ்கூல் இல்லை. எங்கேயாவது வெளியே போவோம்,” என்றான். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு வெளியுலகை அறிமுகம் செய்தான். நான்தான் அவற்றைச் சரியாய் உபயோகித்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனக்குக் குடும்பச் சுமைகள் அதிகம். ஆனாலும் ஸ்வாமிநாதன் என்ற அந்த நண்பன் என்மீது விடாமுயற்சிகள் செய்து வந்தான்.

மணிக்கொடி ஸ்ரீநிவாசன் வீட்டிற்கு ஒரு பேட்டி எடுக்க என்னையும் கூட்டிப் போனான். சி.சு. செல்லப்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அசோகமித்திரன் அவர்களை அறிமுகம் செய்தான். ஒரு நாள் நடு ரங்கநாதன் தெருவில் “அதோ பார், லா.ச.ரா. வா, அவரிடம் அறிமுகம் செய்வோம்,” என்று அவருக்கு அறிமுகம் செய்தான். சங்கீதம், இலக்கியம் என்று என்னைப் பலவிதத்தில் உயர்த்தினான். ஒவ்வொரு நாளையும் உபயோகமாய் கழிக்கும் உத்திகளைப் பயிற்றுவித்தான். என் தங்கைகளைப் படிக்க வைக்க, வரன் பார்க்க என்று வாழ்க்கை வேறு வழியில் திசை மாறியது. மாதத்தில் ஒரு முறையோ, இரு முறையோ அவனோடு நேரம் செலவிடுவது மட்டும் தொடர்ந்தது.

திரு.ஐராவதம்
திரு.ஐராவதம்

1996 ஜனவரியில் என் பிள்ளை கணேஷ் ஆத்ரேயாவுக்கு, அவனின் புல்லாங்குழல் இசையில் இரண்டு கீர்த்தனைகளை தியாகராஜர் உற்சவத்தில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதை நான் மகிழ்ச்சியுடன் அவனிடம் தெரிவித்தேன். ”நீ போகும்போது எங்களையும் அழைத்துப் போயேன்,” என்றான். தனியாக வெளியூர்ப் பயணம் செய்யும் மனோதிடத்தை அவன் இழந்திருந்தான் என்று அறிந்து கொண்டேன். திருவையாறு சென்று வந்தோம்.

பிறகு சில வருடங்களில் இதயநோய் அதிகரித்து, பை-பாஸ் சர்ஜரிக்குத் தயாரானான். ஒரு ஆஸ்பத்திரியில் நான் உடன் சென்று அவனை அட்மிட் செய்து விட்டு வந்தேன். கிளம்புமுன், ஒரு பத்து ஹிந்துஸ்தானி எல்.பி ரிகார்ட்களை என்னிடம் கொடுத்தான்.

”எ ன்னடா?” என்றேன்.

”திரும்பி வந்தா வாங்கிக்கிறேன். ஏன்னா உன்னிடம் அவை பத்திரமாக இருக்கும். நான் பத்திரமாகத் திரும்பி வந்தால் பார்க்கலாம்,” என்றான். சலிப்புடன் பத்திரமாக வந்து, மேலும் பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான்.

ஒருநாள் அவனுடைய வீட்டில் நுழைந்தேன். “இப்போ என்னதான் பண்ணிகிட்டு இருக்கே?” என்றான். நான் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்திருந்த வை.மு.கோபாலகிருஷ்ணனின் கம்பன் விரிவுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் சொன்னேன். “தேங்கிப் போகாதே, திரும்பச் சொல்றேன், தேங்கிப் போகாதே,” என்றபடி ஒரு தடிமனான புத்தகத்தை என்னிடம் தந்தான். அது ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ என்னும் நவீனம். அதை உட்கார்ந்து தீவிரமாய்ப் படித்து, காலை 3 மணிக்குள் முடித்து விட்டேன். உடனே, ‘காடு’, ‘ரப்பர்’ போன்ற நவீனங்களை வாங்கி வந்து படித்தேன். அவன் மகிழ்ந்தான். எப்போது போனாலும் ‘விருட்சம்’ இதழ்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வான். கடைசி 5 அல்லது 6 வருடங்கள் அவன் வெளியே வருவதையே நிறுத்தி விட்டிருந்தான்.

‘குறுந்தொகை காட்சிகள்’ என்ற ஜெயமோகனின் விரிவுரை ராக சுதா ஹாலில் நடந்தது. நான் செல்லும்போது அவனையும் அழைத்துச் சென்றிருந்தேன். அதன் பிறகு பக்கத்துத் தெருவிற்குக் கூப்பிட்டாலும், உடல்நிலை காரணமாக வர மறுத்துக் கொண்டிருந்தான்.

சென்ற டிசம்பர் மாதம் ஒரு நாள் நான் ஆன்லைனில் வாங்கிய ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’, டி. செல்வராஜின் ‘தோல்’, வாஸந்தியின் ‘விட்டு விடுதலையாகி’ முதலிய புஸ்தகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

“அடுத்த தடவை வரும்போது ஒரு லிஸ்ட் தரேன். அதை உன் பிள்ளையிடம் சொல்லி ஆன்லைனில் வாங்கிக் கொடு. அதற்கான செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்றான். ஆனால் அந்த அடுத்த முறை வரவே இல்லை. ஃபிப்ரவரி மாதம் 10 அல்லது 15 தேதி வாக்கில் செல்லலாம் என்று இருந்தேன். ஆனால் நேர்ந்து விட்டது வேறு. பெங்களூரிலிருந்து என் பிள்ளை, ”என்னப்பா, ஐராவதம் பாற்கடலில் திரும்பச் சேர்ந்து விட்டாரா,” என்றான்.

“ஆமாம்டா… நேற்று நான் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். இன்று எனக்கு பி.பி, சுகர் எல்லாம் ஏறிக்கிடப்பதால் நான் தகனத்திற்குப் போகவில்லை,” என்றேன்.

என்னைப் பொறுத்தவரை ஒரு நீண்ட சகாப்தம் முடிவடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.