ஆர். ஏ. மஷேல்கர்

பாஸ்மதி அரிசி என்றாலே புலாவ் ஞாபகமும், வட இந்தியாவும் நினைவில் வந்து போகும். இப்படி இருக்கையில் திடீரென்று அமெரிக்க நிறுவனம் ஒன்று பாஸ்மதி அரிசியின் மேல் காப்புரிமை கோரினால் இந்தியா சும்மா இருக்குமா?

1998 ம் வருடம்; டில்லி.

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பிசினஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு டில்லியிருந்து செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தேன். இந்த பாஸ்மதி காப்புரிமை குறித்து சர்ச்சை ஆரம்பித்தவுடன் இது பற்றி இந்தியாவின் நிலை மற்றும் பின்புலம் பற்றி செய்தி அனுப்பும்படி கேட்டிருந்தார்கள்.

இன்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானி ஆர். ஏ. மஷேல்கரை அப்போதுதான் சந்தித்தேன். அப்போது அவர் கௌன்சில் ஃபார் சைன்ஸ் & இன்டஸ்டிரியல் ரிசர்ச் அமைப்பின் தலைமை அதிகாரி. (CSIR – Director General). இந்தியா சார்பாக, இந்த விவகாரம் பற்றி அமெரிக்க காப்புரிமை அமைப்பிடம் வாதாட வேண்டிய பொறுப்பு இவருக்கு.

Raghunath Anant Mashelkar

இந்த பாஸ்மதி அரிசிக்கு தேவையான தட்ப வெட்ப நிலை, எப்படி இந்திய / பாகிஸ்தான் மண்ணுக்கே இந்த ரகம் பிரத்யேகமானது; அதன் சாகுபடி, என்று பல விதங்களில் பொறுமையாக எனக்கு விளக்கினார்.

ரைஸ் டெக் என்ற அந்த அமெரிக்க நிறுவனம் வாசனையுள்ள அரிசி ரகம் ஒன்றை தன ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு டெக்ஸ் ரைஸ் என்று பெயர் சூட்டியும் அமெரிக்காவில் காப்புரிமை கோரியிருந்தது. அது வெற்றி பெற்றிருந்தால், உலகம் முழுக்க இதுவும் பாஸ்மதி ரைஸ் ரகம் என்று நினைத்து மக்கள் வாங்குவார்கள்; இந்திய பாஸ்மதி வியாபாரிகள் வியாபாரம் படுத்துவிடும் என்ற நிலையில், இந்தியா உடனே களத்தில் இறங்கிற்று.

மஷேல்கர், என்னிடம் படிப்படியாக விவரித்தார். அந்த நிறுவனத்தின் வாதங்களை தவிடு பொடியாக்கும் ஒவ்வொரு விளக்கத்தையும் சொல்லி, “அதெல்லாம், நாம் கவலையே பட வேண்டாம். நம் பக்கம் நியாயமும், உண்மையும் இருக்கு. இந்த கேசில் நாம் நிச்சயம் வெல்லுவோம் என்று மிக நம்பிக்கையாக சொல்லும்போது, அன்று மனதுக்கு் பெருமையாக இருந்தது.

பாஸ்மதி அரிசி மட்டுமல்லாமல், அதற்கு முன் இதேபோல் காப்புரிமை விஷயத்தில் மஞ்சள் மற்றும் வேப்பிலை இவற்றின் சில குணங்களுக்கு காப்புரிமையை கோரும் இதர வழக்குகளையும் இவர் விஞ்ஞான பூர்வமான மற்றும் பாரம்பரிய ஆதாரங்களுடன் வாதாடி இந்திய நிலையை ஆணித்திரமாக நிலை நாட்டியுள்ளார். மஞ்சள் மற்றும் வேப்பிலையில் அவற்றின் குணப்படுத்தும் சில குணாதிசயங்களை மட்டும்தான் இந்த நிறுவனங்கள் காப்புரிமை கொண்டாடுகின்றன. ஆனால் பொது மக்களிடையே இந்த தாவர வகைகளுக்கு மொத்தமாகவே காப்புரிமை போய்விடுமோ என்று குழப்பம் வந்து விடுகிறது. ஊடகங்கள், பிரச்சனை என்ன என்பதை தெளிவாக பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று என்னிடம் அன்று விளக்கினார்.

நமது பாரம்பரிய உணவு, விவசாய முறைகள், மற்றும் ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ ஆதாரங்கள் என்று பல வகையான ஆதாரங்களை நிலை நாட்டி, மஞ்சள் மற்றும் வேப்பிலையின் குணப்படுத்தும் குணாதிசயங்களின் காப்புரிமையை வெளி நாடுகள் அபகரிக்காமல் காப்பாற்றிய பெருமையும் இவர் தலைமையின் கீழ் நடந்த சாதனைதான்.

இதுபோல், உயிரின ரீதியான திருட்டுக்களைத்(bio piracy) தடுக்க மூலிகைகள் மற்றும் தாவர வகையிலான மருந்துகளைத் தயாரிப்பதில் முயற்சிகள் மேற்கொண்டார். சுமார் 160 வகை மூலிகைகள் மூலம் மருந்துகள் செய்ய ஆராய்ச்சி நடைபெற்றது.

இந்தச் செய்தி பற்றி விவரம் சேகரிக்கும்போது மீண்டும் அவரை சந்தித்தேன். தன் திட்டம் பற்றி விளக்கிய அவர் அப்போது கூறினார், “நம் நாட்டில் இயற்கையான மூலிகை மருந்துகள் வளம் அதிகம். ஆனால் பெரும்பான்மையான விவரங்கள் வாய் வழி குறிப்புகளாகவே வந்துள்ளன. இவற்றை நாம் சரியாக முறைப்படி அச்சில் பாதுகாத்து வைக்காவிடில் தற்போதைய உலகளாவிய காப்புரிமை சூழலில், காலங்காலமாக நாம் பயன்படுத்தி வரும் இயற்கை மருந்துகளுக்கு பிற நாடுகள் உரிமை கோரும் அபாயம் உள்ளது. நம் மூதாதையர்களின் பாரம்பரியக் குறிப்புகளை முறையாக ஆவணப்படுத்தும் முயற்சிகளோடு, நாம் விஞ்ஞான ரீதியிலும் இந்தக் குறிப்புகளுக்கு வலு சேர்த்துக் கொண்டுள்ளோம். இப்படி பல விதங்களிலும் தற்போதைய அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) சூழலில் இந்தியாவுக்கு எந்த பாதகமும் வராமல் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளோம்,” என்று அந்த பேட்டியில் அன்று விவரித்தார்.

காப்புரிமை பற்றி இந்தியா முழவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது இவரது சாதனைகளின் ஒரு சிறு துளிதான். விஞ்ஞானத்துறையிலும் தொழிற்சார்ந்த ஆராய்ச்சிகளுக்குமான இவரது பலவித சாதனைகளுக்கு இந்தியாவிலும் மற்றும் வெளி நாடுகளிலும் இதுவரை 26 பல்கலை கழகங்கள் – கௌரவ டாக்டர் பட்டங்கள் கொடுத்துள்ளன.

தனிப்பட்ட முறையில் சாதனைகளைத் தவிர, இந்தியாவில் விஞ்ஞான வளர்ச்சிக்காக பல திட்டங்களையும் சி.எஸ்.ஐ.ஆர் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இளம் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் பல திட்டங்கள் செயலில் உள்ளன.

சாதனைகள் பல இருந்தாலும், இவர் ஒரு எளிமையான நேர்மையான மனிதர் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். 2005ல் காப்புரிமை சம்பந்தமாக ஒரு ஆய்வறிக்கை தயார்படுத்த சொல்லி இந்திய அரசு ஒரு ஆய்வுக்குழுவை இவர் தலைமையில் அமைத்தது.ஆனால் இந்தக் குழு தயாரித்த அறிக்கையில் பிழை இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இன்னொருவரின் ஆராய்ச்சியிலிருந்து இந்த அறிக்கையின் சில பகுதிகள் நகலெடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளரே தன் ஆராய்ச்சியின் பகுதிகள் இந்த அறிக்கையில் நகலெடுக்கப்படவில்லை, அவை வெறும் மேற்கோளாகவே உபயோகிக்கிக்கப்பட்டுள்ளன என்று மஷேல்கரை விடுவித்திருந்தாலும், தன் உழைப்பில் பிழை இருப்பதை ஏற்றுக்கொண்டு மஷேல்கர் அறிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டார். பின்னர் தவறுகளை சரி செய்ய சொல்லி இந்த அறிக்கையை அரசு மறு ஆய்வுக்கு அனுப்பியது.

கோவாவில் பிறந்த மஷேல்கர் தற்போது வசிப்பது மும்பாய் தானேவில்.

0 Replies to “ஆர். ஏ. மஷேல்கர்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.