அறிவியலும் பழந்தமிழ்ப் பாடல்களும்

கலீலியோ

கலீலியோ கோபுரம் ஒன்றில் மேலிருந்து வெவ்வேறு எடைகள் கொண்ட பொருட்களை ஒரே நேரத்தில் கீழே போட்டு அவை ஒரே சமயத்தில் தரையை வந்தடைகின்றன என்பதை நிறுவிய சம்பவம் அனைவரும் அறிந்ததே. கலீலியோவின் கூற்று உடனடியாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படவில்லை. அவரது கூற்று தவறு அரிஸ்டாடில்தான் சரி என்பதை நிறுவுவதற்காக பேராசிரியர் ஒருவர் பைசா கோபுரத்தின் உச்சியிலிருந்து வெவ்வேறு எடைகள் உள்ள பொருட்களை கீழே போட்டார். அவை கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தரையை வந்தடைந்தன என்றாலும் எடை குறைவான பொருள் தரையைச் சேர்வதற்கு ஓரிரு தருணங்கள் அதிகம் தேவைப்பட்டது (பின்னால் இதற்குக் காரணம் காற்றினால் ஏற்படும் உராய்வினால் என்பது தெரிந்தது). பேராசிரியர் கலீலியோ பெருந்தவறு செய்து விட்டார், அரிஸ்டாடில்தான் சரி என்று வாதிட்டார். இதற்கு கலீலியோ அளித்த பதில் புகழ் பெற்றது. க்ரிபின் தனது புத்தகத்தில் அதைக் குறிப்பிடுகிறார்:

அரிஸ்டாடில்  நூறு பவுண்ட் எடையுள்ள பொருள் நூறு க்யூபிட் ( ஒரு க்யூபிட் = 45.72 செண்டிமீட்டர்) உயரத்திலிருந்து தரையை அடையும் போது ஒரு பவுண்ட் எடையுள்ள பொருள் ஒரு க்யூபிட்டைத்தான் தாண்டியிருக்கும் என்று சொல்கிறார். நான் இரண்டும் ஒரே சமயத்தில் தரையை அடையும் என்று சொல்கிறேன். நீங்கள் சோதனை செய்து ஒரு பவுண்ட் எடையுள்ள பொருள் இரண்டு இஞ்சுகள் பின்னால் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறீர்கள். இந்த இரண்டு இஞ்சுகளுக்குப் பின்னால் அரிஸ்டாடிலின் தொண்ணூற்று ஒன்பது க்யூபிட்டுகளை மறைத்து,என்னுடைய சிறிய தவறைப் பற்றிப்பேசி அரிஸ்டாடிலின் பெரிய தவறைக் குறித்து மௌனம் காக்கிறீர்கள்.

இந்தச் சம்பவம் முக்கியமான ஒன்றை உணர்த்துகிறது. எந்தக் கூற்றும், யார் சொன்னதாக இருந்தாலும், சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சோதனையின் முடிவை – அது நாம் எதிர்பார்த்தற்கு எதிர்மாறாக இருந்தாலும்- ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த எளிய கோட்பாடு மனித குலத்திற்குப் பிடிபடுவதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்தன.

நக்கீரர்

நமது நக்கீரர் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொன்னதுதான் சரி. கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது. ஆனால் நக்கீரரால் சோதனை செய்து பார்த்து விடலாம் என்று சொல்லத் தோன்றவில்லை. ஏனென்றால் சோதனைகள் செய்து கூற்றுகளை நிறுவ முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நர்லீகர்

எனவேதான் அறிவியல் என்று நாம் இன்று சொல்வது கலீலியோ காலத்தில் இருந்து பிறந்தது என்கிறோம். நான் நர்லீகரை நேர்காணல் செய்தபோது ‘நீங்கள் ஒரு நீண்ட பரம்பரையில் வந்தவர். அது ஆரிய பட்டரிடமிருந்து தொடங்குகிறது’ என்று சொன்னேன். அவர் அதை உடனடியாக மறுத்தார். ‘இல்லை என்னுடைய பரம்பரை கலீலியோவிடமிருந்து தொடங்குகிறது’ என்றார்.

நர்லீகர் என்னிடம் அறிவியல் என்றால் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கினார்:

அறிவியல் என்பது கோட்பாடு சோதனை, கண்டறிதல் இம்மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடாக உருவாகி வந்துள்ளது. இந்தச் செயல்பாட்டில் ஒரு சுழற்சி முறையுள்ளது. இது முடிவறாச் சுழற்படிக்கட்டுகளைப் போல, இயற்கையைப் பற்றித் தெளிவான புரிதல்களை நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். படிகளில் பயணம் செல்லும் போது எதிர்பாராத திருப்பங்களும் இடர்களும் ஏற்படலாம். அறிவியலின் வரலாறு பல பொய்யான கோட்பாடுகளையும், தவறான கோட்பாடுகளையும் பிழையான் கண்டறிதல்களையும் பார்த்திருக்கிறது. இதை ஒப்புக்கொள்பவர்களில் முதலாதவாக விஞ்ஞானிகள் இருப்பார்கள். அறிவியலால் எல்லாப் பதில்களையும் சொல்ல முடியாது என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். மாறாக படிகளில் ஏற, ஏற புதிய கேள்விகள் எழும் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆக அறிவியல் என்பது என்ன? ஓர் அறிவியல் கோட்பாடு தனது அடிப்படைத் துணிபுகளை தெளிவாக முன் வைக்க வேண்டும். இந்தத் துணிபுகள் அன்றைய அறிவியல் ஆதாரங்களோடு ஒத்துப் போவதாக அமைய வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே தர்க்க பூர்வமான வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்தக் கோட்பாடு ஏற்கனவே சொன்னவற்றை வேறு வார்த்தைகளில் கூறுவதாகவோ. ஒவ்வொரு நிரூபணத்தின் போதும் தனது அடிப்படைக் கொள்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் இருக்கக் கூடாது. அதன் துணிபுகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

நர்லீகர் கூறிவற்றை நாம் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். எழுத வேண்டும். அறிவியல் மொழி சார்ந்ததன்று, அது மனிதகுலத்திற்குப் பொதுவானது என்பதையும் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்த வேண்டும். ஆனால் நவீன அறிவியல் பிறந்தது பதினாறாம் நூற்றாண்டில் கலீலியோவின் தோற்றத்திற்குப் பின்புதான். அதற்கு முன் எழுதப்பட்டவற்றில் அறிவியலின் கூறுகள் இருக்கலாம். ஆனால் அவை அறிவியல் தேடல்களின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

பழந்தமிழ்ப் பாடல்கள்

இந்தப் பின்புலத்தில் நாம் பழந்தமிழ்ப் பாடல்களை நோக்கலாம்.

பழந்தமிழ்ப் பாடல்களில் வானம், விண்மீன்கள், ஐம்பூதங்கள், பூக்கள், செடிகள், உயிரினங்கள், பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்கள் பார்த்தவற்றைப் பற்றிக் கூறுபவை. அல்லது கேட்டவற்றைப் பற்றிக் கூறுபவை. பார்ப்பவற்றைப் பற்றியும் கேட்பவற்றைப் பற்றிக் கூறுவதும் அறிவியல் கோட்பாடுகளாக ஆகி விட முடியாது. இயற்கையின் புதிர்களை விடுவிப்பதற்கான பயணத்தில் அன்றைய மக்களுக்குக் கருவிகளாக அவை உதவியிருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்று தான் கூற முடியும். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு வலிந்து பொருள் கொண்டு அவை அறிவியல் கோட்பாடுகளை நிறுவுகின்றன என்று நான் சொல்கிறேன், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், தமிழ்த் துரோகி, வடமொழி அடிவருடி, என்று குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்படுவீர்கள் என்ற வகையில்தான் இன்று பலர் எழுதி வருகிறார்கள்.

இது தமிழர்களுக்கு மட்டும் உரித்தான வியாதி அல்ல. வடமொழி ஓர் அறிவியல் ஊற்று, உபநிடதங்களிலும் வேதங்களிலும் சொல்லப்படாத அறிவியல் தகவல்கள் அளவிட முடியாதவை என்று சொல்லிக் கொண்டு அலைபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் தமிழன். தமிழன் இந்த வியாதியிலிருந்து குணமடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

இவர்கள் மேற்கோள் காட்டும் முக்கியமான பாடல்களைப் பார்ப்போம்.

Ramayana_war_Sculptures_Art_angkor_Wat_Hinduism

தொல்காப்பியர்

பொருளதிகாரம் மரபியலில் தொல்காப்பியர் இவ்வாறு கூறுகிறார்:

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே

புல்லு மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

வையாபுரிப் பிள்ளை தனது “தமிழ்ச் சுடர்மணிகள்” என்ற நூலில் ’இவ்வாறு உயிர்வகைகளைப் பகுத்துணர்ந்து கோடல் ஜைன சமய ஆசாரத்துக்கு மிக அத்தியாவசியகமாவதாகும்’ என்று கூறுகிறார். மேலும் அவர் தொல்காப்பியர் ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’ என்று கூறுவதால் இந்தப் பாகுபாடு தொல்காப்பியரின் சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்றும் கூறுகிறார். அதாவது தொல்காப்பியர் ஜைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதற்கு ஆதாரமாக இந்தச் சூத்திரங்களைக் காட்டுகிறார்.

இந்தப் பாகுபாடு தொல்காப்பியர் பரிணாமத் தத்துவத்தை அறிந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது என்று சில தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பாகுபாடு ஒரு தகவலாகத்தான் நமக்கு வந்திருக்கிறது. மிகக் கூர்ந்து கவனித்து நெறிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் இந்தப்பாகுபாடு உயிர்கள் எவ்வாறு உருவாயின, அவற்றின் வளர்ச்சிகள் எவ்வாறு நிகழ்ந்தன போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்காது. மேலும் டார்வினின் பரிணாமக் கொள்கை கூறுவது என்ன? எல்லா உயிரினங்களும் மற்ற இனங்களோடு போட்டியிடுகின்றன. உயிரோடுவாழ்வதற்காக தேவையான முயற்சிகளைச் செய்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன. இவையனைத்தும் தொடர்ந்து நடைபெறுவதற்காக இயற்கைத் தேர்வு என்ற முறையின்படி அவைப் படிப்படியாக மாறுதல்களை அடைகின்றன. எவ்வுயிரினங்களின் இயற்கைத் தேர்வுகள் வெற்றியடைகின்றனவோ அவ்வுயிரினங்கள் பிழைக்கின்றன. மற்றவை மறைகின்றன.

இந்தக் கொள்கைக்கும் தொல்காப்பியரின் பாகுபாட்டிற்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பாகுபாடும் முழுப்பாகுபாடு இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பறவைகள், மீன்கள் இல்லை. பாலூட்டிகள், முட்டையிடுவன என்ற பிரிவுகளைப் பற்றிய தகவல் இல்லை. எலும்புடையவை, எலும்பு இல்லாதவை என்ற பாகுபாடு இல்லை. இவ்வகைப் பிரிவுகள் எல்லாம் கண் கூடாகத் தெரிபவை. இவற்றைப் பற்றி அவர் ஏன் சொல்லவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக மாக்கள் என்ற மனிதர்கள் (பகுத்தறிவு இல்லாதவர்) ஐந்தறிவு படைத்தவர், அவர்களும் மிருகங்களும் ஒரே நிலையில் இருப்பவர் என்று தொல்காப்பியர் சொல்லியிருப்பதை நாம் நினைவு கூற வேண்டும். இதுவும் ஜைன மதக் கொள்கைதான் என்று வையாபுரிப் பிள்ளை விளக்குகிறார். எனவே அறிவியலுக்கும் இந்தச் சூத்திரங்களுக்கும் தொடர்பு கிடையாது என்பது தெளிவாகிறது.

புறநாநூறு

இவை தமிழில் அறிவியல் கூற்றுகள் இருந்தன என்பதை நிறுவுவதற்காக எழுதப்பட்ட வரிகள்:

“இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவு தமிழர்களிடம் இருந்தது. நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்ற ஐம்பூதங்களால் ஆனது இயற்கை என்ற அறிவியல் அறிவு தமிழர்களுக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர்கள் கூட ‘சதுர்பூதம்’ என்று நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு அது இயங்கும் வெளி வேறு, அதன் பெயர் விசும்பு (ஸ்பேஸ்) என்ற தெளிவு தமிழர்களிடம் இருந்தது.

‘மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை’

என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது.”

”நீர், நெருப்பு, நிலம் காற்று, விசும்பு என்பவற்றைக் கொண்டது இயற்கை” என்பது காண்பதை, அல்லது உணர்வதைப் பதிவு செய்வது. நிலம் நீர், வானம், நெருப்பு ஆகியவற்றை மனிதன் பார்க்கிறான். காற்றை உணர்கிறான். இவை அடங்கியது இயற்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றைக் கூறுவது. ஆங்கிலத்தில் சொல்லப்போனால் “stating the obvious”. இது அறிவியல் கூற்றாக ஆக முடியாது. நிலனேந்திய விசும்பு? நிலத்தை வானம் தாங்குகிறதா?

மேலும் பஞ்ச பூதங்கள் என்பதை தமிழன் மட்டும் சொல்லவில்லை. சுவேதாசுவதர உபநிடதம் கூறுகிறது. வடமொழியில் மகாபூதங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. இந்து மதம் ஐந்தாவது பூதமாக ஆகாயத்தை எடுத்துக் கொள்கிறது. பௌத்தம் சூனியத்தைச் சொல்கிறது. மேலும் நிலமும், நீரும், காற்றும், தனிமங்கள் சேர்ந்து உருவானவை என்பதையும் நெருப்பு ஒரு வேதியல் செயல்பாடு என்பதையும் மனிதன் புரிந்து கொள்வதற்கு அவன் பல நூற்றாண்டுகள் கடந்து வர வேண்டியிருந்த்து. இத்தகைய புரிதல்கள்தான் அறிவியல் புரிதல்கள். பாடலில் சொல்லப்பட்டவை அல்ல.

இந்தப் பாடலை முழுவதும் சொல்ல சிலர் தயங்குவார்கள். ஏனென்றால் இந்தப்பாடல் பாரதப் போரில் இருதரப்பினருக்கும் சோறு அளித்தவன் சேரன் என்ற “அறிவியல்” செய்தியைக் கூறுகிறது. நான்கு வேதங்களின் நெறிகளைப் பற்றிக் கூறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீயில் (முத்தீ விளக்கு) தூங்கும் இமயமலையையும் பொதிகையையும் பாடல் பேசுகிறது!
மற்றொரு புறநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்:

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
“வலவன் ஏவா வான ஊர்தி“
எய்துப என்ப,

இந்தப் பாடலை வைத்துக் கொண்டு தமிழனிடம் விமானம் இருந்தது, விமான ஓட்டியில்லாத விமானத்தைப் பற்றி அறிந்திருந்தான் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த வரிகளுக்கு முன்னால் “மரை இலை போல மாய்திசினோர் பலரே” என்ற வரி வருகிறது. இது பயனின்றி வாழ்ந்து மடிந்தவரைக் குறிப்பிடுகிறது. இந்த வரிகள் புகழுடைபவர்கள் இறந்த பிறகு வானத்தின் ‘வலவன் ஏவா வான ஊர்தி”யை அடைவார்கள் என்று கூறுகின்றன. எனவே இந்த வான ஊர்தியில் சென்றால் திரும்ப பூமிக்கு வர முடியாது என்பது தெளிவு. திரும்ப வர முடியாத விமானத்தை அன்றே தமிழர் கண்டுபிடித்து விட்டனர் என்று கூறலாமா?

உலக வரலாற்றின் எல்லா கலாச்சாரங்களிலும் பறப்பதைப் பற்றிய கற்பனைக் கூற்றுகள் பல இருந்திருக்கின்றன. எகிப்து நாகரிகம் விமானங்களை அறிந்திருந்தது என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள்

நான் முன்னால் எழுதிய கட்டுரை ஒன்றில் இதைப் பற்றி எழுதியிருந்தேன்.

பறப்பது என்பது மனிதனின் கனவுகளில் ஒன்று. இந்தக் கனவு நனவாவதற்கு அறிவியல் பல மைல்கற்களைத் தாண்ட வேண்டியிருந்தது. உதாரணமாக எரிபொருள் இல்லாமல் விமானம் பறந்திருக்க முடியுமா?. அக்கனற்சிப் பொறியில்லாமல் (Internal Combustion Engine) விமானம் பிறந்திருக்க முடியுமா? ரப்பர், அலுமினியம் போன்ற பொருள்கள் இல்லாமல் அது உருவாக்கப்பட்டிருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக பெர்னூலி கொள்கை (Bernouli’s principle) தெரியாமல் , நியூட்டனுடைய விதிகள் தெரியாமல், பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் இருந்திருக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதில்கள் கிடையாது.

பரிபாடல்

கருவளர் வானத்திசை யிற் தோன்றி
உருவறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும்
சென்தீச் சுடரிய ஊழியும் பணியொடு
தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிபிகிய இருநிலத் தூழியும்”

இந்தப் பாடல் தமிழனுக்கு உலகம் எப்படிப் பிறந்தது என்பது பற்றி அறிவியற் புரிதல் இருந்தது என்பதற்காக ஒரு எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றிப் பேசுபவர்கள் பாடல் திருமாலைப் பற்றி எழுதியப் பாடல் என்ற தகவலையோ அல்லது குறிப்பாக இந்த வரிகள் வராக அவதாரத்தைப் புகழ்வதற்காக எழுதப்பட்டது என்பதையோ சொல்ல மாட்டார்கள் பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்: திருமாலே! மண்ணுலகமும் விண்ணுலகமும்பாழ்பட மதியமும் ஞாயிறும் கெடுதலால் அழகிழந்தவானமும் கெட்ட ஊழிகள் முறையே கழிய அதன்பின் ஆகாயஊழியும், காற்றுத் தோன்றிய ஊழியும், அதனினின்றுசெந்தீயும் அதனினின்று மழை முதலியனவும் அவற்றினின்றுநிலமும் தோன்றிய ஊழிகளுமாகிய அளவில்லாத காலம்கழிந்தபின் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம்கொண்டு நீ நிலத்தினை யெடுத்தாய்.

இதில் கூறியிருக்கும் எந்தத் தகவலையாவது அறிவியல் சார்ந்தது என்று கொள்ள முடியுமா?

தொலைந்து போய் விட்டது

இவை போன்று பல பாடல்கள் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. அணுவைப் பிளப்பதைப் பற்றி அன்றே நாம் அறிந்திருந்தோம், பித்தாகரஸுக்கு முன்பே நாங்கள் செங்கோண முக்கோண விதிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்களும் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பதில் சொல்வது மிகவும் கடினம். உதாரணமாக போதையனார் பாட்டுஎன்று தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஒரு பாடல் வலம் வருகிறது. இது பித்தாகரஸுக்கு முன்பே எழுதப்பட்டது என்று பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர் ஒருவர் என்னிடம் சொன்னார். பாடல் இது:

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.

இந்த பாடல் பித்தாகரஸுக்கு முந்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நான் சொன்னால் அவர் நம்பத் தயாராக இல்லை. மேலும் இது மிகவும்தோராயமானது, வேலைக்காகாது என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் ‘துல்லியமாக போதையனார் எழுதியது தொலைந்து போயிருக்கலாம். நமக்கு கிடைத்திருப்பது பாதிதான்.”

கணிதமும் வானியலும்

கணிதம் குறித்தும் வானியல் பற்றியும் இந்திய மொழிகளில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன என்பது உண்மை. தமிழ் இலக்கியத்தியத்திலும் இவை பற்றிச் செய்திகள் இருக்கின்றன. இவற்றைக் குறித்து விரிவாக மற்றொரு கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

முடிவாக

கலீலியோவிற்கு பின் வந்ததுதான் அறிவியல் என்று நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். ஆனால் அறிவியல் என்றால் என்ன என்பதற்கு இன்று உலகத்தில் பெரும்பாலான அறிவியலாளர் ஏற்றுக் கொள்ளும் வரையறை நர்லீகர் கூறிய வரையறைதான்.

நம்மிடம் எல்லாம் இருந்தது என்று சொல்லிக் கொள்வது நம்மிடம் ஒன்றுமே இருந்திருக்க முடியாது என்று மற்றவர்களை நினைக்க வைக்கும். எல்லாம் இருந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏதும் கிடையாது. தமிழ் நமது மொழி. அதற்கு இருக்கும் உண்மையான அழகுகளே போதும். நம்மைப் பொறுத்த வரையில் தமிழ் மதனற்கும் எழுதவொண்ணா அழகுகளை உடைய மொழி. இதற்கு இல்லாத அழகுகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.