சீன கம்யூனிசம்: பதவியில் இருப்பவர்களின் சொந்தங்கள்
சீன ஜனாதிபதியின் மருமகன் எங்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறார் என்னும் தகவல் கசிந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல. அவரைப் போல் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் 21,000த்து சொச்ச சொந்தபந்தங்களும் வெளிநாடுகளில் எங்கெல்லாம் செல்வம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு பணம் என்பதையும் வெளியிட்டிருக்கிறார்கள். சீன நாட்டை விட்டு நான்கு ட்ரில்லியன் டாலர்கள் எப்படி சென்றது என்பது மட்டும் தெரியவில்லை. ஆனால், எவரிடம் சென்றடைந்திருக்கிறது என்பதை இப்போது அறிய முடிகிறது. Some are more equal than the others.
oOo
ஒலிம்பிக்ஸ் பெண்கள்: கருத் தரித்திருந்தாலும் போட்டி
இது ஒலிம்பிக்ஸ் சமயம். போட்டிக்குத் தேர்வாகி களத்தில் விளையாடுவதே மிக மிக சவாலானது. அதிலும், மகவை வயிற்றில் சுமந்து கொண்டு போட்டியிலும் பங்கெடுத்தவர்களை இந்தப் பதிவு நமக்கு அறிமுகம் செய்கிறது. குழந்தை பெற்ற பிறகு தடகளத்திற்கு வந்த ரஷியப் பெண்மணி, சட்டையை கால்சராயில் நுழைப்பது போல் உபரியாக வயிற்றில் இருக்கும் சருமத்தை எடுத்து உள்ளாடையில் அடைத்துக் கொண்டு ஓடிய சம்பவம் ஆகட்டும்; பிரசவ வலி துவங்கிய பிறகும் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட வாழ்க்கை ஆகட்டும். ஊக்கமூட்டி பிரமிக்கவைக்கிறது.
oOo
ஒற்றனின் கதை: தானே அழிந்துபோகும் தந்திரம்
எட்வர்ட் ஸ்னோடெனைக் குறித்து புத்தகம் எழுதிவந்தார் லூக் ஹார்டிங். எப்படி என்.எஸ்.ஏ. இயங்குகிறது, அரசாங்கமும் சிலிகான் நிறுவனங்களும் எவ்வாறு கைகோர்த்து வேவு பார்க்கின்றன போன்ற விஷயங்களை தன்னுடைய புத்தகத்தில் எழுதி வந்தார். ஆனால், எழுத எழுத, அந்த வார்த்தைகள் எல்லாம் தானாகவே அழித்துக் கொள்ள ஆரம்பித்தன. நிரலியை மூட எத்தனித்தால், அதையும் அனுமதிக்கவில்லை. இணையத் தொடர்பை அறுத்தெறிந்தாலும் இதே நிலை. அதன் பிறகும் முன்பும் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.
http://www.theguardian.com/books/2014/feb/20/edward-snowden-files-nsa-gchq-luke-harding
oOo
டேனியல் பேர்ல்: நிருபர் கொலை
இஸ்லாமிசம் என்னும் உலகளவு நோயை இன்னும் சிலாகித்துப் பேசும் இந்திய அறிவு ஜீவிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். உலக ஏகாதிபத்தியத்தின் முனையான அமெரிக்காவை எதிர்க்கும் ஒரே சக்தி என்று அதைத் தழுவிக் கொள்ளும் புத்திசாலிகளும் உலகெங்கும் உண்டு. ஆனால் இதே இஸ்லாமிசம்தான் இந்தியாவையும், இந்துக்களையும் அழித்தது, உலகின் ஓட்டாண்டி நாடுகளில் ஒன்றாக ஆக்கியது என்ற 600 ஆண்டு வரலாறை அவர்கள் வசதியாக மறந்து விடுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? இந்துக்களை இழிவு செய்வது என்பது இந்தியாவில் மிகவுமே ரசிக்கப்படும் ஒரு நாடகம். அப்படி இழிவு செய்வோரோ பெரும் புகழோடும் செல்வத்தோடும் வேறு விளங்குபவர்கள். சமீபத்தில் நடந்த பெங்குவின் நிறுவனத்தின் பின்வாங்கல், அமெரிக்கப் பல்கலைக்காரர்களுக்கு இந்திய புத்தி மீது எத்தனை வலுவான கிடுக்கிப் பிடி இருக்கிறது, அவர்களுக்குத் தம் நாகரிகம், சிந்தனை ஆகியவற்றைக் குறித்து என்ன ஒரு இழிநோக்கு இயல்பாக உள்ளது என்பதை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறது. தவிர உலகரங்கில் இந்துக்களும் இந்தியரும் எத்தனை கேவலமாகக் கருதப்படுகின்றனர் என்பதையும் இந்த விவகாரம் வெளிப்படுத்தியது.
அதே சமயம், உலகரங்கில் பெரும் ஆரவாரத்தோடு உலவுவன செமிதிய மதங்கள். அவற்றின் ஒரு விசித்திர குணாம்சம், அவை தம்மைச் சார்ந்தவரைத் தவிர வேறெதுவும், வேறெந்த அடையாளங்களையும் கொண்ட மனிதரும் வாழக் கூடத் தகுதியற்றவர்கள் என்று கருதும் கருத்தியலை அன்பு வழி, அமைதி வழி, உலக மக்களின் உய்விற்கான ஒரே வழி என்று கருணை பொங்கப் பிரச்சாரம் செய்து அதைப் பல கோடி மக்களை நம்பவும் வைக்கும் திறமை கொண்டவை. அவற்றின் பொது எதிரி இந்துக்களும், இந்தியாவும் என்பதால் இந்த நிலத்தில் மட்டும் அவை கூட்டணி வைத்து இந்த நாட்டை ஒழித்துக் குப்பையில் போடத் துடிக்கும் கருத்தியல்கள். வெளி நிலங்களிலோ ஒன்றோடொன்று போரில் நிற்கும் மதங்கள். அது குறித்து இந்தியருக்கோ, இந்தியா ஊடக வெளியில் அகம்பாவத்துடன் உலாவும் ஜோதிகளுக்கோ எந்தக் கவலையும் இல்லை. கிட்டப் பார்வை உள்ளவருக்கு எதிரே ராட்சஸ ட்ரக் வருகிறது என்று தெரியாவிட்டால்தான் என்ன ஆகி விடும்?
இந்த உலகரங்கில் யார் நண்பர், யார் எதிரி என்பதெல்லாமும் அடிக்கடி உருக்குழம்பும். இப்படி ஒரு உருக்குழப்பத்தில் பலியாகும் தனி நபர்கள் பற்றி மேற்கு அடிக்கடி புலம்பி கதைகளை உருக்கமாக எழுதிப் பிரசுரிக்கும். தானும் தன் போராளிகளும் பல நிலங்களில் கொன்று குவிக்கும் எத்தனையோ சாதாரண மக்கள் பற்றி இதே மேலை ஊடகங்கள் இத்தனை உருக்கமாக விவரமாக, நெருக்கத் தகவல்களோடு அதிகம் பிரசுரிப்பதில்லை என்பதை நாம் நினைவு வைத்துக் கொண்டு, ஒரு பத்திரிகையாளரைப் பாகிஸ்தானிய வெறிக் கும்பல் ஒன்று கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர நிகழ்வு பற்றிய அறிக்கையைப் படிக்கலாம். அது இங்கே.
இஸ்லாமிசத்தை அமைதி மார்க்கம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் அறிவு சீவிகள் இதையெல்லாம் உதறி விட்டுத்தான் அப்படி எல்லாம் பேசித் திரிகிறார்கள் என்பது தெளிவு. ஆனால், யார் கண்டது, இதைப் படித்தால் அந்தப் பல்லாயிரவர்களில் ஒரு இரண்டு பேருக்குக் கொஞ்சம் மனத்தெளிவு பிறக்குமோ என்னவோ? இதை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்தான்.
http://www.washingtonian.com/projects/KSM/index.html
oOo
அமெரிக்க சிறை வாழ்க்கை: மரணதண்டனைக் கைதி
உலகத்தின் ஜனநாயகத் தாரகை தானே என்று உலகரங்கில் அடிக்கடி கொக்கரிக்கும் ஒரு நாடு அமெரிக்கா. அதன் அரசியலாளரும், புத்திசீவிகளும் இதையே அடிக்கடி உலகரங்கில் மட்டுமல்ல, ஏராளமான ஊடகங்களிலும் பேசியும், எழுதியும் வருகிறார்கள். இந்தப் புரட்டலை உலகில் ஒரு கணிசமான எண்ணிக்கை மக்கள் நம்பவும் செய்கிறார்கள்.
அமெரிக்காவில் ஜனநாயகமே இல்லை என்றா சொல்ல வேண்டும். அப்படி இல்லை. அங்கு ஜனநாயகமும் உண்டு, ஃபாசிசமும் உண்டு, மோசமான அடக்கு முறைகளும், கிருஸ்தவத் தீவிர வாதத்தின் வன்முறையும், பொருளோ, தர்க்கமோ அற்ற கொலைவெறி கொண்ட முறைமைகளும், பெண்ணெதிர்ப்பு நோக்குள்ள அரசியல் இயக்கங்களும் என்று என்னென்னவோ அபத்தங்களும் அற்பத்தனங்களும் நிறையவே உண்டு. இருந்தும் அங்கு எங்கெல்லாமோ ஜனநாயகமும், ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க விரும்பும் மக்களும் நிறையவே உண்டு. எதிரெதிர் போக்குகளின் மோதல் மிக உயர்ந்திருக்கும் ஒரு காலகட்டத்தில் அமெரிக்க அரசியல் அமைப்பு இன்று திக்கு முக்காடுகிறது. வெள்ளை இனவெறியும், பழமை வாதங்களும், கிருஸ்தவத் தீவிர வெறித்தனமும், உலக ஏகாதிபத்தியம் தம் கரங்களிலிருந்து நழுவுகிறது என்ற பதட்டத்தில் எழும் பேதமைகளுமாக அமெரிக்க மக்களின் நடுவே பரவலாகி வரும் உரிமை விழைவுகள், சுதந்திர தாகம் ஆகியவற்றை ஒழிக்க முயன்று வருகின்றன. எது வெல்லும்? நாம் பொறுத்திருந்து பார்த்தால் மட்டும் போதாது. உயர்ந்த ஜனநாயக மரபுகள், போராட்டங்கள், இயக்கங்கள் போன்றனவற்றுக்கு வெளியிலிருந்தும் ஆதரவு தெரிவித்து, அந்நாட்டின் அரசியல் இயக்கத்தில் தலையீட்டைச் செய்யலாம். உலகின் பற்பல நாடுகளிலும் அமெரிக்க வல்லரசு தலையிட்டு அவற்றைக் கொடும்பாழில் தள்ள எத்தனை முயற்சிகள் செய்யவில்லை. அவைதானே கடந்த பல பத்தாண்டுகளில் உல்கின் பல நாடுகளில் மக்கள் வாழ்வைத் துவம்சம் செய்திருக்கின்றன.
இன்னா செய்தாருக்கும் நன்மை செய்யச் சொல்லும் பண்பாடு தமிழரது, இந்தியரது. இந்தியரும், தமிழரும் அமெரிக்க உழைப்பாளருக்கும், பெண்களுக்கும், பற்பல சிறுபான்மை இனத்தவருக்கும் பெரும் நன்மை செய்வது மூலம் தம் நாடுகளில் அமெரிக்க வல்லரசு ஊடுருவி தம்மை அழிக்கும் முயற்சிகள் மறுபடி மறுபடி நடைபெறாமல் தடுக்க முடியலாம்.
இங்கே ஒரு இந்திய வம்சாவளி மனிதர் அமெரிக்க வெஞ்சிறையில் வாடுவது பற்றிய >செய்தியை பிரிட்டிஷ் பத்திரிகை கார்டியன் பிரசுரித்திருக்கிறது. செய்தியின் கீழ் உள்ள பல வாசகர்களின் கருத்துகளைப் படியுங்கள். அவற்றில் பலவும் அமெரிக்காவில் நிலவும் உணமை நிலைகளையே பேசுகின்றன.
http://www.theguardian.com/commentisfree/2014/jan/26/75-death-us-jail-murders-sentence
oOo
நூற்றாண்டு வன்முறை – முதல் உலகப் போர்: மத்திய கிழக்கு நாடுகள்
உலகின் இன்றைய பெருந்தீமைகளுக்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று சென்ற பல நூற்றாண்டுகளில், உலகெங்கும் தம் ஆதிக்கம் நிலவ வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக உள்ள இரு செமிதிய மதங்களின் தீவிர வன்முறை. 20 ஆம் நூற்றாண்டின் இன்னொரு பெரும் ஏகாதிபத்திய முயற்சி இந்த மதங்களின் கொடும்பிடியிலிருந்து மக்களை விடுவிக்கச் செய்யப்படும் முயற்சியாகத் தன்னைக் காட்டிக் கொண்ட, மதமல்லாத நம்பிக்கை முயற்சி, இந்த நம்பிக்கையின் அத்தனை வேர்களும் செமிதிய மதங்களின் பற்பல கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் மூல மதங்களின் அனைத்து அற்பத்தனங்களுமே இதில் உச்சத்தை அடைந்தன. விளைவு முந்தைய மதங்கள் பல நூறாண்டுகளில் கொன்று குவித்த கோடிக்கணக்கான மக்களை இந்தப் புது நம்பிக்கை ஒரே நூறாண்டில் கொன்று குவித்தது.
ஆனால் இன்று மதமல்லாத வாழ்வை முன்வைத்ததாக மார் வீங்கி நின்ற நம்பிக்கை அனேகமாக உலகெங்கும் க்ஷீணித்து இற்றுப் போய் விட்டது. இந்தியாவைப் போன்ற நிரந்தரத் தேங்கிய குட்டையில் இன்னும் கொஞ்சம் இந்த நம்பிக்கைக் கொசுக்கள் பிறந்து இங்கேயே மடிகின்றன. இந்தக் கொசுக்களுக்கு ஆயுத உதவி, பண உதவி எல்லாம் முந்தைய பல நூறாண்டு மத நம்பிக்கைகளின் இன்னும் வீழாத கூடாரங்களிலிருந்து கிட்டுகிறது என்பதே 20ஆம் நூற்றாண்டின் மதமல்லாத நம்பிக்கைக் கோட்டையின் அபத்தத்தை நன்கு தெரிவிக்கிறது.
பொது ஆண்டு என்ற ஒரு கற்பனைக் கால அளவையை உலகெங்கும் நீட்டித்து விட்ட ஒரு உலக ஏகாதிபத்திய முயற்சியின் வேர்களும் இன்று இற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த ஏகாதிபத்திய முயற்சியே அத்தனை பயங்கரமானது, அத்த்னை கொடூரமும் வன்முறையும் கொண்டு உலக மக்களை அழித்தது என்பதை அந்தப் பாசறையில் இத்தனை காலம் வசித்து உலக வளத்தை எல்லாம் சுரண்டி நுகர்ந்த மக்களின் நடுவிலிருந்து பல அறிஞர்களும், செய்தியாளர்களும் – இத்தனை காலமாயிற்று அவர்களுக்கு இந்த இடத்துக்கு வந்து சேர- ஒத்துக் கொண்டு அதைப் பற்றிய தகவல்களை உலகுக்கு அளிக்கத் துவங்கி இருக்கின்றனர். இந்த முயற்சிகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடக்கின்றன என்றாலும் முன்பு பல்கலை வளாக உரைகளில் மட்டுமே காணப்பட்ட இவை இன்று பரந்த செய்தி ஊடகங்களில் அடிக்கடி தென்படத் துவங்கி இருக்கின்றன. அப்படி ஒரு தென்படுதலை ஒரு ஜெர்மன் செய்தித்தளத்தில் கண்டதை இங்கு கொடுக்கிறோம். எப்படி இன்று மேற்காசியாவில் பரவலாக நடக்கும் கொடும் போர்களும் அழிப்புகளும் பெருங்கொலைகளும் ஒரு அளவுக்கு மேலை நாடுகள் என்று நம்மால் அறியப்படும் ஒரு நிலப்பரப்பில் இருந்த ஏகாதிபத்திய முயற்சிகளால் துவங்கப்பட்டவை என்று இந்த அறிக்கை சொல்கிறது. படித்துத் துன்புறுக. அல்லது உண்மை இப்போதாவது வெளிப்படுகிறதே என்று மகிழ்க.