பேனாவே ஊன்றுகோலானதும்

நாம் செய்யும் காரியங்கள் எல்லாவற்றுக்கும், செய்யும்போதே காரணம் தெரிந்திருக்கிறது என்று சொல்லுவதற்கு இல்லை. அதிலும் பவுதீகப் பொருளல்லாத கற்பனை இயக்கத்துக்குக் காரணம் கூறுவது கடினம் என்றே தோன்றுகிறது.

ami_tn copyகோர்வையாகக் கதை சொல்வது கடினம் என்றாலும் அந்தக் கடினமான காரியத்தைச் செய்வதில் சாதனை செய்த திருப்தி (Sense of achievement) கிடைக்கிறது என்ற காரணத்துக்காகவும் கதை எழுதத் தொடங்கினேன் என்று கூறலாம். இதுகூட முழுமையான உண்மையாகாது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் இப்பொதுள்ள ஜனநெருக்கடியும் போட்டியும் எதிலுமிருந்தது இல்லை. ரயிலில் ஒரே கூட்டம் என்பார்கள். ஆனால், எவ்வித ரிசர்வேஷனுமில்லாமல் படுத்துக் கொண்டு பிரயாணம் செய்யலாம். பள்ளிக் கூடங்களில் எந்த வகுப்பிலும் எந்த மாதத்திலும் ஒரு பையன் சேர்ந்து கொள்ளலாம். கல்லூரியில் சேர வேண்டும் என்று நினைத்து இடம் கிடைக்கவில்லை என்று நேர்வது மிக அபூர்வம். ஒய். எம்.சி.ஏ சென்றால் பிங்பாங் மேஜை அநாதையாகக் கிடக்கும். ஊரில் கிரிக்கெட் விளையாடுவதற்கு எவ்வளவோ மைதானங்கள் இருந்தன. டாக்டர்கள் ஐந்து நிமிடங்கள் உடலைப் பரிசோதித்துவிட்டு, அரை மணி நேரம் ஊர் உலக விவகாரங்கள் பேசுவார்கள்.

இவ்வளவு சாவதானமான, நெரிசலற்ற காலத்தில் எவ்வளவோ துறைகளில் இந்தச் சாதனை இன்பத்தை அடைய வழியிருந்தபோது எழுத்துத் துறையைத் தொடர்ந்த காரணம் எனக்கு இன்றும் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. இருபதாண்டுகளுக்கு முன்னால் இல்லாத பல துறைகளுமாகச் சேர்ந்து இன்று ஒருவர் ஏராளமான துறைகளில் ஈடுபடச் சாத்தியமிருக்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு துறையிலும் நெருக்கடியும் பல மடங்குப் போட்டியும் அதிகரித்திருக்கிறது. என்னுடைய மிகச் சாவதானமான தன்மைக்கும் இடித்துத் தள்ளி முன்னேற இயலா இயல்புக்கும் இன்றைய எழுத்துத் துறைகூட எனக்கு வாய்ப்பு அளிக்கக் கூடியதல்ல என்றே தோன்றுகிறது.

ஒருவன் எழுதியதோடு அவன் பணி முடிந்ததாகக் கருதி அவனை எழுத்தாளன் என்று யாரும் அழைப்பதில்லை. அவன் எழுத்தைப் படித்த பிறகுதான், அந்த எழுத்து சிறிதாவது பாதிப்பு ஏற்படுத்தினால்தான், ஒருவன் எழுத்தாளன் என்று கருதப்படுகிறான். அவன் எழுதியதற்கும் அவன் எழுதியதை நாம் படிப்பதற்கும் இடையில் ஒரு நெடுந்தூரப் பிரயாணம் இருக்கிறது. இந்தப் பிரயாணத்தை எழுத்தாளன் தான் முயற்சி மேற்கொண்டு முடிக்க வேண்டியிருக்கிறது. அவன் எழுதுவதில் உள்ள திடமும் விடாமுயற்சியும் பிரசுரமாவதற்கு எடுத்துக் கொள்ளும் எத்தனங்களிலும் சிறிதே குறைந்தாலும் உலகுக்கு அவன் எழுத்து கிடைப்பதில்லை. இப்படி எவ்வளவு பேருடைய அற்புதமான எழுத்துகள் உலகுக்குக் கிடைக்காமல் இருக்கிறதோ?

சிலர் இந்த எத்தனங்கள் ஓர் எழுத்தாளன் அவன் எழுத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தது என்கிறார்கள். நான் எழுதிய முதல் கதையை அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததால்தான் விடாமல் மாற்றி மாற்றிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். சுமார் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (1953) ஒரு சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தேன். முப்பது பக்கங்களில் ஒரு சிறு கதையை (!) எழுதி முடித்து அனுப்பினேன். அது ஓராண்டு காலம் கழித்துத் திரும்பியது. கதையின் நீளத்தைச் சற்று குறைத்து இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். சில மாதங்களில் அங்கிருந்தும் திரும்பி வந்துவிட்டது. இன்னொரு முறை படித்து விட்டு, இன்னும் சில பகுதிகளைச் சுருக்கி விட்டு இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கிருந்தும் சில நாள்களில் திரும்பி வந்துவிட்டது. மீண்டும் படித்து, இதென்ன இவ்வளவு வளவளாவென்று இருக்கிறதே என்று மீண்டும் சுருக்கி இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். (எனக்கு  வெகு சமீப காலம் வரை ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு வகைக் கதையைத்தான் பிரசுரிக்கும் என்ற ஞானம் தெளிவடையவில்லை. கதை நன்றாயிருந்தால் கட்டாயம் போடுவார்கள் என்று எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருப்பேன்).  இப்படியாக டஜன் பத்திரிகைகளிலிருந்தும் திரும்பி வந்து, கதையும் பத்து பக்கங்களில் அடங்கி விட்டது. இப்போது முன்னொரு முறை அனுப்பி வைத்த பத்திரிகைகளுக்கே மீண்டும் அனுப்ப ஆரம்பித்தேன். அப்படித்தான் முன்பு நிராகரித்த பத்திரிகையே, 1957 ஆம் ஆண்டில் அக்கதையைப் பிரசுரித்தது.

அக்கதை வெளியான நான்கு மாதங்களில் என்னுடைய இன்னொரு கதை பிரசுரமாயிற்று. இரண்டு கதைகளுக்கும் இடையேதான் எவ்வளவு வித்தியாசம்! இன்னும் அந்த முதல் கதையை இதுவரை வெளியாகியிருக்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளிலும் சேர்க்க முடியவில்லை. அப்படிப் பொருந்தாமல், ஒட்டாமல் தனித்து நிற்கிறது அக்கதை. இருந்தும் அதை நான் தான் எழுதினேன்; அது ஒரு முக்கிய படைப்பு என்று அசைக்க முடியாத நம்பிக்கை அன்று இருந்திருக்க வேண்டும்.

அசோகமித்திரன் இளமைக்காலத்தில். நன்றி : 'காலம்' சிற்றிதழ்

அசோகமித்திரன் இளமைக்காலத்தில். நன்றி : ‘காலம்’ சிற்றிதழ்

பத்திரிகைகளிலிருந்து கதைகள் திரும்பி வருவது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல்  போய் வெகுநாள்களாகின்றன. நேற்றும் இன்றும் கூட என் படைப்புகள் திரும்பி வந்திருக்கின்றன. நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் என் கதைகளுக்கும் இது இன்னும் நேர்கிறது. அதே கதை தமிழில் வெளியாகும்போது, மிகச் சிறந்ததாகத் தோன்றும்போது, ஏன் ஆங்கில மொழியில் அது ஏற்கப்படாமல் போகிறது? எனக்கு இப்போது ஒரு காரணம் புலப்படுகிறது. மொழி, கலாசார வேற்றுமைகளால் ஆங்கில மொழியை, இந்தியருக்காக இந்தியர் பயன்படுத்தினாலும், அதற்கென உண்டான கலாசாரம் ஒன்று ஊடுருவி நிற்கிறது. என் கதைகள் தமிழ் மொழிக் கலாசாரத்தை மிகவும் சார்ந்திருக்க வேண்டும்.

இக்கலாசாரச் சார்புதான் (அல்லது உண்மையான பிரதிபலிப்புதான்) ஓர் இலக்கியப் படைப்பையோ அல்லது கலைப்படைப்பையோ ஜீவனுள்ளதாகச் செய்கிறது என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட மொழி, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் பொதுவான தளம் அமைக்கிறது என்பதை விட, அவர்கள் கலாசாரம்தான் இருவருக்கும் ஒரு பலமான தொடர்பையே ஏற்படுத்தித் தருகிறது என்று தோன்றுகிறது. அப்படியானால் மொழிபெயர்ப்புகள்? வேறு நாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு வந்திருக்கும் அமர இலக்கியங்களின் கதி என்ன? ஷேக்ஸ்பியர், கதே, டால்ஸ்டாய், காமு- நாம் இவர்களை மொழிபெயர்ப்பில் படிக்கிறோம் : சிறந்த இலக்கிய அனுபவங்கள் பெறுகிறோம். இதெல்லாம் உண்மையே. இருந்தாலும் கலாசார வேறுபாடினால் சிறிது எட்ட நிற்கத்தான் செய்கிறோம். அதேபோல இராமாயணம் ரஷ்யாவில் என்னதான் பிரபலமாக இருந்தாலும் ஓர் இந்தியனுக்கு அது தரும் அனுபவம், ஒரு ரஷ்யனின் அனுபவத்திலிருந்து மிகவும் வேறுபட்டு இருந்தே தீரும். ஒரு படைப்பு அதே மொழிக்காரர்களுக்கே வெவ்வேறு அனுபவங்களை ஏற்படுத்தும்போது, முற்றிலும் வேறுபட்ட மொழியில் அதன் பாதிப்பு அசலில் இருந்து விலகித்தான் இருக்க முடியும். இலக்கிய அனுபவம் ஓர் approximation.

இப்படி இலக்கியம் approximation நிலையில் இயங்குவது எனக்குத் தவிர்க்கமுடியாத சாத்தியமாக இருக்கிறது. இக்காரணத்தால்தான் என்னால் போதனைகளையும் கோஷங்களையும் என் படைப்புகளில் கையாள முடியவில்லை.

என் முதல் கதை பிரசுரமானதிலிருந்து வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று என்கிற விகிதத்தில் கதைகள் வெளிவந்த வண்ணமிருந்தன. இந்தக் கதைகள் வெளிவந்த காலத்திலேயே எனக்குச் சந்தேகமிருந்தது; இப்போது உறுதியாகக் கூறலாம். முதல் பத்தாண்டுகள் வரை என் கதைகள், வாசகர்கள் மத்தியிலோ அல்லது ஆசிரியர்களிடையோ, சொல்லப்போனால் இலக்கியப் பத்திரிகை ஆசிரியர்கள், விமர்சகர்கள் மத்தியில் கூட எவ்விதச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இப்படிச் சலனமேற்படுத்தாத கதைகளுக்கு விசேஷ எதிர்ப்பு இருக்கவும் சாத்தியமில்லை. ஆனால், ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர்தான் அப்போது எழுதிய கதைகள் முன்பே எழுதிய கதைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தீவிரப் பரிசோதனை ஏற்பட்டது. எதிர்ப்பு ஒரு ’நெகட்டிவ்’ விதமாக இருந்தது. அதாவது ‘கதை புரியவில்லை’, ‘இது கதையில்லை’, ‘இதெல்லாம் கதையாகுமா?’ என்று. ஆனால் அத்தகைய கதைகள் இன்று சகஜமாகி விட்டன. இன்று எழுத ஆரம்பிக்கும் எந்த இளம் எழுத்தாளனும் இப்பாணியைத்தான் முதலில் கையாள்வதைப் பார்க்க முடிகிறது.

இந்தப் பாணி- இதை என் பாணி என்று கூறிக் கொள்ள முடியுமானால்- சொல்ல வேண்டியதை நேரிடையாக அடைமொழிகளைப் பயன்படுத்தாமல், ஆசிரியராகச் சார்பு கொள்ளாமல் எழுத முயற்சி செய்வது. ஆசிரியரே தம் பாத்திரங்கள் எவருடனும் ஒன்றிக் கொள்ளாமல் எழுதுவதின் ஒரு விளைவு, வாசகர்களுக்கு அப்படிப்பட்ட ஒன்றிக் கொள்ளுதல் முடியாமல் போவது. பொதுவாக வாசகர்கள், அதுவும் தமிழ் மொழி வாசகர்கள் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஒன்றிக் கொள்வதுதான் ஆரம்ப நாளிலிருந்து பழக்கமாகி இருந்தது. இந்த அம்சம்தான் திரைப்பட நடிகர்கள் பெரும் நட்சத்திரங்களாகவும், பெரும் செல்வாக்கு கொண்டவர்களாகவும் மாறுவதற்குக் காரணம். என் கதைகள் இந்த உணர்ச்சிக்கு இடம் கொடுப்பதில்லை. இதனால் பாத்திரங்கள் எவ்வளவு பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் போல இருந்தாலும் வாசகர்கள் அப்பாத்திரங்களிலிருந்து விலகி இருக்கவே செய்வார்கள். இப்படி விலகி இருப்பதில் பாத்திரம் அல்லது சம்பவம் பற்றி அதிகத் தகவல்களை அறியச் சாத்தியம் உண்டு.

தகவல்கள் மூலம் சூழ்நிலையையும் கதையினுடைய தொனியையும் தெரிய வைக்கும் உத்தி அப்படி ஒன்றும் புதிதல்ல. அநேகமாக எல்லா நல்ல உரைநடை எழுத்தாளர்களும் வெவ்வேறு அளவுக்கு இதை உபயோகப்படுத்தித்தான் இருக்கிறார்கள். இந்தப் பத்துப் பதினைந்தாண்டு காலத்தில் புறத்தகவல்கள் கோர்வையைச் சிறப்பான இலக்கிய ஆயுதமாகப் பயன்படுத்திக் காட்டியவர் ஆலென் ரோப்கிரியே (Alain Robbegrillet). சினிமாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இன்று சினிமா, உலகெங்கும் பரவிய ஒரு தகவல் சாதனமாக இருப்பதால்தான் புறத்தகவல்களை அடுக்கும் உத்தியே உருவாகியுள்ளது என்று தோன்றுகிறது.

ஆனால், எனக்கு எழுதவேண்டும் என்ற ஆர்வமூட்டிய எழுத்தாளர், சினிமா கண்டுபிடிப்பதற்கு முன்னரே எழுதிய சார்லஸ் டிக்கன்ஸ்தான். டிக்கன்ஸ் படைப்புகளிலுள்ள அகன்ற பார்வைதான் என்னையும் என்னைச் சுற்றி அகன்று பார்க்கத் தூண்டியது என்று நினைக்கிறேன். இதனால்தானோ என்னவோ இரண்டு மூன்று பக்கங்களில் கதை எழுதினால்கூட அதில் நிறையப் பாத்திரங்கள் வந்து விடுகிறார்கள்.

இருந்தும் என் கதைகள் அனேகமாக எல்லாவற்றிலும் முக்கியப் பாத்திரம் என்று தனித்துப் பார்க்கக் கூடியது ஒன்று இருந்தே தீரும். இன்று சுமார் 60, 70 கதைகள் எழுதிய பிறகு யோசித்துப் பார்த்தால், இதில் பாதிக்கு மேல், பெண்பாலராக இருந்திருக்கிறார்கள். சிறு பெண்கள், பருவப் பெண்கள், குழந்தை குட்டிகளுடன் குடும்பத் தலைவியாக உள்ள பெண்மணிகள், கிழவிகள் எல்லோரும் இருந்திருக்கிறார்கள். அதே போல ஆண் பாத்திரங்களும், சின்னப் பையனிலிருந்து சாவை எதிர் நோக்கியிருக்கும் கிழவன்வரை இருந்திருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் எல்லோரும் இருந்திருக்கிறார்கள். பணக்காரர்கள் சிறிது குறைவு.

நான் எழுதிய கதைகளில் பல எனக்கு  மிகவும் பிடித்தமானவை. பார்க்கப்போனால் ஒவ்வொரு கதை எழுதும்போதும்  ஓர் ஆர்வமிக்க வாசகனுக்குரிய மனநிலைதான் எனக்கு இருந்திருக்கிறது. என் கதைகள் எனக்கே பல புதுக் கண்டுபிடிப்புகளாக இருந்திருக்கின்றன. எனக்கே திகிலூட்டும் கண்டு பிடிப்புகளாகச் சில கதைகள் அமைந்தன. அவை ’இன்னும் சில நாள்கள்’, ‘பிரயாணம்’ முதலிய கதைகள். ஒரு விதத்தில் பார்த்தால் இவை ஒரே பிரச்சினைக்கான பல பிரதிபலிப்புகளாகத் தோன்றுகின்றன. எது சத்தியம், எது உண்மை, எது சாசுவதம் என்பதே அப்பிரச்னை (அல்லது கேள்வி).

புறத்தகவல்கள் நிரம்பிய கதைகளாக இருப்பதால், தற்காலச் சமூகமும் சூழ்நிலையும் என் கதைகளில் நிறையவே இருக்கின்றன. தனி மனித மனப்போக்கின் விபரீதங்களுடன் சமூக சமுதாய அமைப்புகள் மனிதன் மீது செலுத்தும் பாதிப்பும்  ஆளுமையும் நிறையவே பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றன. கூடுமானவரையில் நடுநிலை பிறழாமல் இவை சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல, புயல்களையும் புரட்சிகளையும் உருவாக்கக் கூடியவை. ஆனால் என்னை ஒரு புரட்சியாளனாக நான் கற்பித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு ஜனசமூகத்தை அல்லது கூட்டத்தைத் தலைமை தாங்கி அழைத்துச் செல்லும் தகுதியை நான் பெற்று இருப்பதாகக் கருதவில்லை.

இதை நான் அடக்கம் காரணமாகச் சொல்கிறேன் என்றில்லை. உண்மை நிலையே அதுதான். நான் உலகத்தை விமர்சித்து எழுதினாலும் தனிமையில்தான் எழுதப் பயிற்சி மேற்கொண்டவன். எந்த அளவுக்கு நான் பிறர் தலைவிதியை நிர்ணயிக்க முற்படலாம் என்பது பற்றி எனக்குச் சந்தேகம் இருக்கிறது. ஒருவன் ஒரு காரியத்தை ஒழுங்காகச் செய்தால் போதாதா? தன் பலங்களை உணர்வதைக் காட்டிலும், தன் பலவீனங்களை ஒருவன் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். புதிதாக எழுதத் தொடங்குபவர்களுக்கும் நான் இதைத்தான் ஒரே அறிவுரையாகக் கூற முடியும்.

(1975)

***

[ அசோகமித்திரன் எழுதியுள்ள சில நூறு கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து, அம்ஷன் குமார் பதிப்பாசிரியராக இருந்து பிரசுரித்துள்ள ‘எரியாத நினைவுகள்’ என்கிற கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட அத்தியாயம். இப்புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் டிசம்பர் 2013 இல் வெளியிட்டிருக்கிறது.

திரு. அசோகமித்திரனின் அனுமதியோடு இதை மீள் பதிப்பு செய்கிறோம். அதற்கு அவருக்கு நன்றி.

பல சிறந்த கட்டுரைகளின் தொகுப்பான இப்புத்தகத்தின் பதிப்பாசிரியர் அம்ஷன் குமாருக்கும், சிறப்பாகப் பிரசுரித்துள்ள காலச்சுவடு பதிப்பகத்துக்கும் இதைப் பயன்படுத்த உதவியாக இருந்ததற்கு எங்கள் நன்றி உரித்தாகும். ]