அவரது முதல் சிறுகதை `நாடகத்தின் முடிவு` பிரசுரமாகி ஒன்பது வருடங்களுக்குப்பிறகு 1965ல் அசோகமித்திரன் `இரு டாக்டர்கள்` என்னும் தனது முதல் கட்டுரையை வெளியிட்டார் அதன் பிறகு எவ்வித இடைவெளியுமின்றி அவர் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகிறார். கதைகளை எழுத எவ்வளவு கவனமும் உழைப்பும் தேவையோ அதற்கு சற்றும் குறைவில்லாத கவனத்தையும் உழைப்பையும் அவர் கட்டுரைகள் எழுதுவதிலும் காட்டுகிறார்.கூடவே புனைகதைகளில் அவர் கைக்கொள்ளும் கற்பனைத்திறன் கட்டுரை எழுதுவதிலும் வெளிப்படுகிறது. புனைகதைகளாகட்டும் கட்டுரைகளாகட்டும் அசோகமித்திரனின் எழுத்துகள் மிகுந்த சுவாரஸ்யம் தருவன. தனது வண்ணங்களை அவர் இலக்கிய வகைமை எதுவாயினும் அதில் செலவழிக்கத் தயங்காதவர். பல எழுத்தாளர்கள் புனைகதைக்கென்று ஒரு நடை கட்டுரைக்கென்று ஒரு நடையைக் கையாள்வர்கள். சிறந்த கதைசொல்லியான அசோகமித்திரன் கட்டுரையையும் கதையைப்போல் எழுதிவிடுவார் . கட்டுரைகளின் முத்தாய்ப்பு சிறுகதையின் முடிவுகளைப்போல் அவரிடம் வந்து விழும். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படத்திற்காக ஐம்பது வருடங்களுக்குப் பிறகு செகந்திராபாத்தில் தான் வாழ்ந்த வீட்டிற்கு செல்கிறார் . அங்கு சென்றவுடன் சிறுவயது ஞாபகங்கள் அவரை வந்தடைகின்றன. எவ்வளவோ மாறுதல்கள் அங்கு நிகழ்ந்திருப்பதை அவர் பார்க்கிறார். பின்னர் அந்த அனுபவத்தை` என் வீட்டைக் காணவில்லை` என்று ஒரு கட்டுரையாகத் தருகிறார் அதன் கடைசி வரிகள் இவை.`எவ்வளவோ மாறுதல்களில் ஒன்று மாறவில்லை. அன்று அந்த வீட்டின் எண் 5/1. இன்றும் அதேதான் ,` கட்டுரை சிறுகதைபோல் முடிகிறது. நூறு நாள் நாடகம் என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை.இது அசப்பில் ஒரு செய்திக்கட்டுரை. ஆனால் அசோகமித்திரன் அதை இலக்கியமாக்கிவிடுகிறார்.அது எந்த நாடகம் அந்த விழா எங்கு நடந்தது அதில் பங்கேற்றவர்கள் எவர் எவர் என்கிற தகவல்களை அவர் தவிர்த்துவிடுவதன்மூலம் சம்பந்தப்பட்ட ஒரு இடத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற நிகழ்வாக மட்டும் அதை பாவிக்காமல் அதில் பொதிந்துள்ள மெய்யதார்த்தத்தினை அங்கதச்சுவை மிளிர சித்தரிக்கிறார். காலம் இடம் ஆகியன குறிக்கப்பட்டிருந்தால் அந்த நிகழ்வின் சரித்திரத்தன்மை முதன்மைப்படுத்தப்பட்டு தனிநபர்களைப் பற்றிய விமர்சனங்களாக அது மாறிப்போயிருக்கும். புனைகதை உத்திகள் இவ்விதம் அவரிடம் இன்றியமையாதனவாகின்றன.
அவரது கட்டுரைகள் ஆவணங்கள் போல் தயாரிக்கப்படுவதில்லை. வருடங்களைப்பற்றியோ சில சமயங்களில் நபர்களைப்பற்றியோ கூட அவர் குறிப்பிடுவதில்லை. ஆனால் எதை எழுதினாலும் அதற்கான ஆவணச் சான்றுகள் அவரிடம் உண்டு . அவற்றை வெளியிடுவதை அவர் தனது முக்கியமான பணி என்று கருதுவதில்லை. புள்ளிவிவரத் தகவல்களைத்தாண்டி ஒரு நிகழ்வினை தனது அனுபவமாக அவர் எவ்வாறு பார்க்கிறார் என்பதைத்தான் அவரது கட்டுரைகளில்காண முடிகிறது . ஆவணத்தை முதன்மைப்படுத்தும் ஒரு பத்திரிகையாளரோ சரித்திர ஆசிரியரோ காணாத ஒன்றினை அவர் அனாயாசமாகப் பார்த்துவிடுகிறார்.. அதை எவ்வாறு சுவைபட சொல்வது என்பதில்தான் அவரது அக்கறை வெளிப்படுகிறது.ஆனால் அதே அசோகமித்திரனிடமிருந்துதான் `பதினெட்டாவது அட்சக்கோட்டில்` என்கிற வரலாற்று ஆவணச் சிறப்புடன் கூடிய கட்டுரை கிடைத்திருக்கிறது . அவரது `பதினெட்டாவது அட்சக்கோடு` ஹைதராபாத்தில் நடந்த நிஜாம் ஆட்சியின் இறுதிக்காலத்தின் நாவல் வடிவம் என்றால் பதினெட்டாவது அட்சக்கோட்டில் அதையே நேரடியான அனுபவத்தின் வாயிலாக சொல்கிற கட்டுரையாகும். வருங்காலத்தில் நிஜாம் காலத்து ஹைதராபத்தையும் அது இந்தியாவுடன் இணைந்து கொண்டதையும்பற்றி எழுத முற்படுவோர் அனைவரும் அக்கட்டுரையை ஒரு அரிய ஆவணமாகக் கருதி அதை அணுகுவார்கள். அக்கட்டுரையும் ஒரு புனைகதை போன்றே உள்ளது. இங்கு ஒரு கேள்வி. புனைகதை, கட்டுரை ஆகியவற்றை எவ்வாறு பிரித்துப் பார்ப்பது? அசோகமித்திரனின் எழுத்துகளைப் பொறுத்தவரை கற்பனை உலகம் சிதைவுறாமல் இறுதிவரை வெளிப்படுமாயின் அது புனைகதை . அனுபவங்கள் நேர்பட சொல்லப்பட்டிருப்பின் அது கட்டுரை. இரண்டிலுமே அனுபவங்கள் யதார்த்தத்தில் உள்ளபடியே தரப்பட்டிருக்கும்.
அவரது புனைகதைகளில் காணப்படுவதைப்போலவே கட்டுரைகளிலும் அபரிமிதமாக நகைச்சுவை வெளிப்படுகிறது அவரது சில வரிகளைப் படிக்கும்பொழுது புன்முறுவல் ஏற்படும் . சில வரிகளைப் படிக்கும்பொழுது வாய்விட்டு சிரிக்க நேரிடும். மதர் இந்தியா பத்திரிகை ஆசிரியரும் சினிமா விமர்சகருமான பாபுராவ் படேல் எடுத்த படம் தோல்வியுற்றது. அதில் நடித்த நடிகையை அவர் மணந்து கொண்டார் அது பற்றி அவர் பின்வருமாறு எழுதுகிறார். ` விமரிசகர் பாபுராவ் படேல் திரைப்படத் தயாரிப்பாளராகத் தோற்றுவிட்டார் . ஆனால் பாபுராவ் படேலுக்கு இரண்டாவது மனைவி கிடைத்தாள். அது இந்திய சுதந்திரத்திற்கு முன்னால். அப்போது ஆண்கள் திருமணம் செய்துகொள்ள நிறைய சுதந்திரம் இருந்தது. ` இது புன்முறுவல் ரகம். ஏன் வாய்விட்டும் சிரிக்கலாம். `ராஜாஜி சினிமாவுக்குப் போனார்` கட்டுரையில் எஸ்.எஸ்.வாசன் பற்றி இப்படி எழுதுகிறார் .` வாசனின் குடும்பத்தினர் உட்பட எல்லோராலும் அவர் `பாஸ் ` என்றுதான் அழைக்கப்பட்டார். அப்போது கடத்தல்காரர்கள் இந்திய சினிமாவுக்குள் பாத்திரங்களாகப் புகுந்திருக்கவில்லை.அமிதாப் பச்சன் `டான்` போன்ற பாத்திரங்களில் நடித்திருக்கவில்லை . முக்தார் கா சிக்கந்தர் (அல்லது சிக்கந்தர் கா முக்கதர்?) போன்ற படங்கள் வெளிவந்திருக்கவில்லை. வாசன் ஆட்டுத்தோல் கோட்டு அணிந்திருக்கவில்லை. துப்பாக்கியைக்காட்டி மிரட்டவில்லை. அல்லது தொடர்ந்து சிகரெட்டுகளைப் புகைக்கவில்லை. ஆனால் 1941 முதலே அவர் பாஸ் ` என்றுதான் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.` இவ்வரிகளைப் படித்தவுடன் வெடித்து சிரிக்கலாம். இதையும்கூட புன்முறுவலுடன் படிக்கும் வாசகர்களும் உண்டு. வாசகர்களின் மனநிலையைப் பொறுத்த விஷயங்கள் அவை. ஆனால் அவரது எழுத்துகளில் நகைச்சுவை அதன் இலக்கை அடைய ஒருபோதும் தவறுவதில்லை. மனிதத் துயரங்கள் பற்றி அவர் எப்போதுமே நெகிழ்வுடன்தான் எழுதுகிறார். விதவைகளின் நிலை பற்றி அவர் எழுதிய கட்டுரை ஒன்றே போதும்.
எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகள், தன் படைப்புகள் ஆகியனபற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியுள்ளார். அசோகமித்திரனின் கூற்றுப்படி அவர் எழுதிய முதல் கட்டுரையே அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பாக்னர் பற்றியதுதான் (அது 1967ல்தான் பிரசுரமானது) நிறையப் படித்த ஒருசில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அசோகமித்திரன் எழுதியுள்ள ஒரு எழுத்தாளரைப்பற்றி அவர் எழுதியதற்கு அப்பால் வேறு எதையும் அதிகமாகத் தெரிந்து கொள்ளத்தேவையில்லை என்கிற வகையில் அவர் அந்த எழுத்தாளரின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர் எழுத்துகளின் சாரம் ஆகியனவற்றைத் தந்துவிடுகிறார். ஜோசப் அடிசன் , சார்லஸ் லாம்ப் , மார்க் ட்வைன் , ஜேம்ஸ் தர்பர் போன்றோர் எழுதிய கட்டுரைகளைப்போல் தமிழில் கட்டுரைகள் எழுதத்தான் விரும்பியதாக அவர் தெரிவித்திருக்கிறார். உ.வே.சாமிநாத அய்யர் , நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரின் தமிழ் உரைநடையையும் அவர் சாதனைகள் என்கிற அளவில் போற்றியிருக்கிறார். பாபுராவ் படேலை தனது ஆங்கில நடைக்கான மானசீக குரு என்கிறார். ஆனால் அவரை மிகவும் பாதித்த எழுத்தாளர்கள் குறைந்தது இருபது பேர்களாகவாவது இருக்கக்கூடும். பல புதிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிகூட அவர் உற்சாகமாக எழுதுவதன் மூலம் கருதத்தக்க அனைத்தையும் உள்வாங்கத் தயாராக அவரது மனம் உள்ளது என்பதை அறிகிறோம். எது கலை எது இலக்கியம் என்பதுபற்றி திட்டவட்டமான எண்ணங்கள் கொண்டவரெனினும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின்படிதான் ஒரு புத்தகத்தை ரசிக்க வேண்டும் என்கிற மனோபாவம் அவரிடம் இல்லை. வாசிக்கும்பொழுது அது உவகைகொளத்தக்கதாக இருந்தால் அதை அவர் பொருட்படுத்துகிறார். அவரது சினிமா விமர்சனங்களும் கலை சினிமா, வெகுஜனத்திற்கான சினிமா என்கிற வரையறைகளில் உடன்படாததாய் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் படங்கள் அனைத்தையும் பொருட்படுத்துவனவாய் உள்ளன. ஆனால் தரம் குறைந்த எதையும் அவரது எழுத்துகள் ஒருபோதும் உயர்த்திப் பிடித்ததில்லை.
`எழுதுவதைக் கடினமாக நீங்கள் எப்போது உணர்வீர்கள்` என்ற கேள்விக்கு `மதிப்புரை எழுதுவது உண்மையிலேயே கடினமானது` என்று கூறினார். நிறையப் புத்தகங்களுக்கு மதிப்புரைகள் எழுதியுள்ளார். அவரது மதிப்புரைகளில் ஒரு முக்கிய அம்சம் அவர் புத்தகங்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் பாராட்டுவதில் அவர் காட்டும் தாராளம். மனம் திறந்து சக எழுத்தாளர்களைப் பாராட்டுவது எப்படி என்பதை அவர் எழுதிய மதிப்புரைகள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். மதிப்புரைகளில் அவர் விமர்சனம் செய்வதில்லை. அதே சமயத்தில் கட்டாயம் சொல்லப்படவேண்டும் என்கிற மாதிரியான ஒரு விமர்சனத்தையும் எழுத்தாளருக்கு பயன்தரும் வகையில் நுணுக்கமாக வெளியிடுவார். எழுத்தாளர்கள் விரும்பும் மதிப்புரையாளர் அசோகமித்திரன்.
கட்டுரைகளில் மட்டுமின்றி அவரது புனைகதைகளிலும் எழுத்தாளர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள், சக்திபடைத்த சாமியார்கள், அரசியல்வாதிகள், சமூக முக்கியஸ்தர்கள் ஆகியோர் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். இதனால் அசோகமித்திரன் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைபற்றி எழுதுபவர் என்கிற அடையாளம் பொருத்தமற்றதாகிறது . பத்திரிகைகாரர்கள் தரும் `கெடுவு`க்கு முன்னதாகவே அவர் தன் படைப்புகளை அனுப்பிவிடுவார் என்கிற பெயர் அவருக்கு உண்டு. குறுகிய அவகாசத்திலும் இரங்கல் கட்டுரைகளை நயத்துடன் படைத்துவிடுவார்.
`நான்` என்கிற அடையாளத்துடன் அவரது கட்டுரைகள் வெளிவந்தாலும் தன்னைப் பற்றிய பிரதாபங்கள் எவற்றையும் அவர் அதில் விட்டுச் செல்வதில்லை. தன்னைப்பற்றி அவர் எங்கேயும் பெருமிதம் கொள்வதில்லை. அரசியல் நிலைப்பாடு என்று எதையும் அவர் எடுப்பதில்லை. ஆனால் மனிதச் செயல்பாடுகளின் நாகரிகம் குறித்த ஓர் உள்ளார்ந்த அரசியல் நோக்கு அவரது எழுத்துகளில் ஆங்காங்கே வெளிப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அதிர்வின்றி எதையும் நிதானமாகப் பார்க்கும் அவரது எழுத்துகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் கவர்கிறது. இன்றும்கூட ஒரு கட்டுரைத்தொகுப்பிலோ பண்டிகை மலரிலோ இடம் பெறும் அவரது சிறுகதை அல்லது கட்டுரை அவற்றில் உள்ள பிறபடைப்புகளைவிட மேலானதாய் விளங்கி வாசக விருதினை சுலபமாகத் தட்டிச்சென்று விடுவதைப் பார்க்கலாம் படிக்கும் பொழுது சற்றும் ஆயாசம் தராத அவரது செறிவு மிக்க எழுத்துகளை பொழுது போக்காகவும் படித்து மகிழ்வுறலாம். இவ்வகை எழுத்து தமிழுக்கு முற்றிலும் புதிது.
நானூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் இதுவரை எழுதியிருக்கிறார். தொடர்ந்து அதே தீவிரத்துடன் எழுதியும் வருகிறார். பலகாலமாக எழுதினாலும் சொற்செட்டு மிகுந்த அவரது எழுத்துகளின் ஓர்மையில் மாற்றங்கள் எதுவுமில்லை. கட்டுரைகளில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளை வைத்துதான் அது எழுதப்பட்ட காலத்தை குறிக்க முடியுமேயொழிய அவரது நடை மாற்றங்களை வைத்தல்ல. எழுத்து,சினிமா , நாடகம், சமூகம் தனிமனிதர்கள் ஆகியோர் மட்டுமின்றி, பரந்த பூகோளப் பரப்பினூடேயும் அவரது எழுத்துகள் பயணிக்கின்றன. செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் வாழும் அவர் தான் பெற்ற உலக நாட்டு அனுபவங்களையெல்லாம் எழுத்துகளில் பதிவுசெய்துள்ளார். பல்வேறு பொருட்கள்பற்றி அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்து நாற்பது கட்டுரைகள் இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவருடைய பிற படைப்புகளைத் தொடர்ந்து படிக்க இத்தொகுப்பு உந்துதலை அளிக்கும் என்பது உறுதி. தமிழில் எழுதுவதைப் போலவே ஆங்கிலத்திலும் சிறப்பாக கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
இத்தொகுப்பு ஏற்கனவே அவரை நன்கு அறிமுகம் கொண்டவர்களுக்கும் அவரை அவ்வளவாகப் படித்திராதவர்களுக்கும் ஒரு நல்ல ரசமிக்க வாசிப்பு அனுபவத்தைத் தரும். தற்சார்பற்ற பண்பட்ட மனநிலையிலிருந்து எழுதப்பட்ட இக்கட்டுரைகள் வாழ்வியல் சார்ந்தன என்பதால் இவை எதன் பொருட்டெல்லாம் அக்கறை கொள்கின்றனவோ அதன் பொருட்டெல்லாம் வாசகர்களை சிந்திக்கவும் தூண்டும்.
(காலச்சுவடு வெளியீடான ‘எரியாத நினைவுகள்’ : அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு: முன்னுரை)
நன்றி : காலச்சுவடு பதிப்பகம்