நோயினால் மட்டுமல்ல

Doctor_nurse_India_Hospital_Health_care_Emergency_Medical_Physician_Bed_Surgery_Suburban

நோயாளி மெதுவாகத் தலையைத் தூக்குகிறார். அவருக்கு உதவி தேவைப்படுகிறது. அவருக்குக் குரல் எழும்பவில்லை. கையைத் தூக்குகிறார். அப்பக்கமாக நர்ஸ் ஒருத்தி போகிறாள். நோயாளி கையைச் சொடுக்கிய மாதிரி நர்ஸின் கவனத்தைப் பெறுகிறார். நர்ஸ் புயலாக அவரிடத்தில் வருகிறாள். ‘என்னை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”

நோயாளி பரிதாபமாகப் பார்க்கிறார். நர்ஸுக்கு இன்னும் கோபம் வருகிறது.

“இங்கே வந்து படுத்து விட்டால், நீ எனக்கு எஜமானன், நான் உனக்கு வேலைக்காரி என்று நினைத்து விட்டாயா? மரியாதையாக நடந்து கொள்!”

நோயாளி கையைத் தன் வாயிடம் தூக்கித் தன்னால் பேச முடியவில்லை என்று காண்பிக்கிறார். பெரும் முயற்சியுடன் சொல்கிறார். “அதனால்தான் அப்படிக் கூப்பிட்டேன்.”

“பேச முடியவில்லை என்றால் கையைச் சொடுக்குவாயா? நான் என்ன உன் வேலைக்காரி என்று நினைத்துami_tn copy விட்டாயா? ஜாக்கிரதை! வயதானவனாக இருக்கிறாய், இன்னும் ஒழுங்கான பழக்கம் வழக்கம் இல்லை!”

அவள் நடந்து கொண்ட விதத்தில் நோயாளி அப்படியே படுக்கையில் குறுகிப் போய்விடுகிறார். அவர் எதற்குக் கூப்பிட்டாரோ அது ஒரு பொருட்டாக இல்லை.

நோயாளியின் பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த ஒரு சிறுமி எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள். அவளுடைய தகப்பனார் அன்று அவளைப் பார்க்க வரும்போது இதெல்லாம் தெரிவிக்கிறாள். அவர் மூலம்தான் எனக்குத் தெரிந்தது.

அந்த நோயாளி நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் இறந்து விடுகிறார்.

இது தி. ஜானகிராமனுக்கு நடந்திருக்கக் கூடாது என்றில்லை, எந்த நோயாளிக்கும் நடந்திருக்கக் கூடாது.

(கணையாழி, டிசம்பர் 1982)

அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘காலக் கண்ணாடி’ நற்றிணை பதிப்பக வெளியீடு 2013

தி ஜானகிராமன் பற்றி திரு அசோகமித்திரனுடன் சொல்வனம் நடத்திய உரையாடல் சொல்வனம் தி.ஜா. சிறப்பிதழில் இங்கே வெளியாகியுள்ளது