நியூஸ் ப்ரிண்ட் புலி – புலிக்கலைஞன் சிறுகதையை முன்வைத்து

என் மனம் க்ரைம் நாவல்களில் குவிந்திருந்த கல்லூரிப் பருவம். கோவை மாநகரின் பழைய புத்தகக் கடைகளில் இருந்த அனைத்து ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களையும் ‘ரொட்டேஷன்’முறையில் ஒருதடவையேனும் படித்திருப்பேன்.

ami_tn copyஅப்போது ஒரு கடையில் அந்த பவுண்ட் வால்யூம் கிடைத்தது. அட்டையில் ‘இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதைகள்’ என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.

இதை எழுதியவர் யார்? கடைக்காரரா? அல்லது, அவரிடம் இந்தப் புத்தகத்தை எடைக்குப் போட்டவரா? யோசனையோடு அதனைப் பிரித்தேன்.

சாவி அல்லது இதயம் பேசுகிறது இதழில் இருந்து கிழித்த சிறுகதை நறுக்குகளின் தொகுப்பு அது. நியூஸ்பிரிண்ட் காகிதத்தில் ஜெயராஜ், கரோ, மணியம் செல்வன், மாருதி போன்ற வெகுஜன ஓவியர்களின் படங்களோடு இலக்கியவாதிகளின் கதைகள். வித்தியாசமான கலெக்‌ஷன்.

பத்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். க்ரைம் நாவல்கள் ரூ 2க்குக் கிடைத்த அன்றைய நாள்களில் அது கணிசமான முதலீடுதான். இலக்கியவாதி ஆவதென்றால் சும்மாவா?

அந்தத் தொகுப்பில் நான் படித்த முதல் கதை, அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’.

அதுதான் நான் படித்த முதல் அசோகமித்திரன் கதையும். கொஞ்சம் நிதானமாகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தத் தொடங்கி, ’டைகர் ஃபைட் காதர்’ சரேலென்று உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.

‘டைகர் ஃபைட்’ என்றால், புலியாட்டம். ‘அண்ணாத்தே’ செய்த கொலையில் சிக்கிக்கொண்ட அப்பாவி கமலஹாசன் புலியாட்டம் வேஷம் கட்டி ஆடுவாரே, அதுதான்.

ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள் மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

இத்தனைக்கும், அந்தக் கதையில் வரும் புலியின் பாய்ச்சல் சில வரிகள்தான். கதை படித்த யாரிடமும் இதைச் சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். மொத்தக் கதையிலும் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்றாற்போன்ற ஓர் உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும்.

அதற்குக் காரணம், திரை விலகிப் புலி தெரிவது ஓரிரு விநாடிகள்தான் என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் அந்தப் புலியை அசோகமித்திரன் விவரிக்கும் மிக இயல்பான (அந்தப் பாய்ச்சலுக்கு முற்றிலும் Contrast ஆன) வர்ணனைகள்தான், இனிப்பு ரொட்டிக்குள் காரக் குழம்பைத் தடவிச் செய்த சாண்ட்விச்போல.

யார் அந்தப் புலிக் கலைஞன்? வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன்? எங்கே புலி வேஷம் கற்றான்? இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது? முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுக்கு எப்படி வந்தது? அவனுடைய குருநாதர் யார்? அவன் இதுவரை எப்படிப் பிழைத்துவந்தான்? எதனால் அவனுடைய கலை அழிந்தது? எப்படி வாய்ப்பிழந்தான்? ஏன் நடுத்தெருவில் நிற்கிறான்? என்றைக்காவது அவன் புகழின் உச்சியில், கை நிறைய காசோடு இருந்திருக்கிறானா? அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா? தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா? அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது? வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை? மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் அவனை எப்படிப் பார்ப்பார்கள்? ‘அப்பா, எனக்குப் புலி வேஷம் போட்டுக் காட்டுப்பா’ என்று ஏதாவது ஒரு குழந்தை அவனைக் கேட்டால் அவன் எப்படி உணர்வான்?

இவற்றில் எதையும் அசோகமித்திரன் அந்தக் கதையில் சொல்லவில்லை. கதையைப் படித்து முடித்தபிறகு நமக்குள் இந்தக் கேள்விகளும் இன்னும் பலவும் சுற்றிவரும்.

சொல்லப்போனால், இந்தக் கேள்விகளை நான் பட்டியலிட்டதுகூட அநாகரிகம்தான். புலிக்கலைஞன் பற்றி உங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு செட் கேள்விகள் இருக்கும். அதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் அசோகமித்திரன். அவரது நாவல்களில்கூட, ‘அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?’ என்று விவரிக்கிற தன்மை இல்லை. அவை எல்லாம் நம் மனத்துக்குள் நிகழ்ந்துகொள்ள வேண்டியதுதான். இதற்குமேல் ஓர் எழுத்தாளர் வாசகர்களைக் கௌரவித்துவிடமுடியுமா என்ன?

தீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கு நான் சொல்வது ஓர் அற்ப உதாரணமாக / வரையறையாக இருக்கக்கூடும். ஆனால் என்னைப்போன்ற ஒரு (இப்போதும்) ஜனரஞ்சக வாசகன் அசோகமித்திரனை இப்படிதான் முதலில் வியக்கமுடியும், அதன்பிறகு, மேலும் நுட்பங்களை உணர்ந்தோ உணராமலோ ரசிப்பது அவரவர் சமர்த்து!

***

அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதையை இங்கே படிக்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.