திலீப்குமாருடன் ஒரு சந்திப்பு

அசோகமித்திரன் தற்காலத்து முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். நவீனத்துவ இலக்கியத்தின் முதன்மைப் பிரதிநிதிகளில் ஒருவர். தன் சமகால தமிழ் புனைவு மொழியின் திசையையும் வீச்சையும் மிக அடக்கமாகவும் தன்முனைப்பின்றியும் கட்டமைத்தவர். அவரை நெடுங்காலம் நெருக்கமாக அறிந்திருக்கும் திரு.திலீப் குமார் அவர்கள், சொல்வனம் கேட்டுக் கொண்டதன் பேரில் அசோகமித்திரன் குறித்து உரையாடச் சம்மதித்தார். நானும் திரு.ரவிசங்கரும் அவரது அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம்.

dileepe_thumb[1]அனுமதி கேட்டு கைபேசியில் அழைத்தபோதே அசோகமித்திரன் பற்றி பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்றார் அவர். அதன்பின் நிகழ்ந்தது உரையாடல் என்றாலும் பேட்டி என்றாலும், அதில் என் பங்களிப்பு பெரும்பாலும் அவரது எண்ணவோட்டத்தைத் தடை செய்வதாகவே இருந்தது. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தார் திலீப் குமார். அவரை பாதி பேச்சில் குறுக்கிட்டுத் தடுத்து அவசர வேலை ஒன்று இருந்த காரணத்தால் நான்தான் விடைபெற வேண்டியிருந்தது. வீட்டுக்கு வந்தபின், அவசர அவசரமாகக் கிளம்பி வந்ததற்கு மன்னிப்பு கேட்டு, மூன்றுமணி நேர காலம் எங்களுக்கு ஒதுக்கியமைக்கு நன்றி என்று சொன்னபோது, “அதனால் பரவாயில்லை, நான் பேசியதில் ஏதாவது உங்களுக்கு உதவியாக இருந்ததா?” என்று அவர் கேட்டார். அசோகமித்திரனின் தன்மை என்று அவர் சொன்னாலும், நான் பார்த்தவரை திலீப் குமார் புரிந்துணர்வு இல்லாமல் எதுவும் செய்வதில்லை. ஆங்கிலத்தில் உள்ள compassion என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறார் திலீப் குமார். அசோகமித்திரனின் குறிப்பிடத்தக்க தன்மையாக அவர் கருதுவதும் அந்த அக்கறையுணர்வுதான் என்று தோன்றுகிறது.

oOo

1974ஆம் ஆண்டில் அசோகமித்திரனை முதன் முதலாகச் சந்தித்ததை நினைவு கூர்ந்தார் திலீப் குமார்.

ASOKAMITHTHIRAN-2“ஆரம்பம் முதலே அவருக்கு எப்போதும் சக மனிதர்கள் மீதுள்ள அக்கறை தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எப்போதுமே அவர் ஒரு நல்ல புரிதல் உணர்வு கொண்டவராக இருந்திருக்கிறார். 1973ல், நான் கோயம்புத்தூரில் இருக்கும்போது கசடதபறவில் விளம்பரம் வந்தது. ‘இன்னும் சில நாட்கள்’, ‘வாழ்விலே ஒரு முறை’ இரண்டு புத்தகங்களையும் அவரே போட்டிருந்தார். தன் கைக்காசில் போட்ட புத்தகம். ஆதிமூலம் அட்டைப்படம் வரைந்திருந்தார், ஞானக்கூத்தன் முன்னுரை எழுதியிருந்தார். இந்த இரு புத்தகங்களையும் நேரில் சந்தித்து அவரிடமிருந்து வாங்கினேன். அப்போதிலிருந்தே அவருடன் எனக்கு தொடர்ந்து பழக்கம் இருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகின்றன. மிகவும் நெருக்கமான பழக்கம். அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் நிறைய நாட்கள் அவருடன் இருந்திருக்கிறேன். அப்போதிலிருந்து இன்று வரை ஒரே மாதிரிதான் இருந்து வந்திருக்கிறார்.”

அசோகமித்திரன் தன் எழுத்தில் நாடகீய உச்சங்களையும் அலங்காரங்களையும் தவிர்த்தவர். எளிமையான, இயல்பான தமிழில் கதை சொல்பவர். மிக மென்மையான உணர்வுகளைப் பேசியவர் என்ற காரணங்களுக்காக அசோகமித்திரனை மதிக்கிறார் திலீப் குமார்.

“அசோகமித்திரனின் எழுத்தில் யாருடைய தாக்கமும் இருக்காது. தாக்கம் இருந்தாலும், வடிவ அளவில் எங்காவது இருந்தாலும் இருக்கலாமே தவிர, உள்ளடக்கத்தில் அப்படி எதையும் பார்க்க முடியாது. குறியீட்டுத்தன்மை கொண்ட கதைகளை அவரிடம் நீங்கள் பார்க்க முடியாது. அப்படி ஒரு குறியீடு இருப்பதே எழுதி முடித்தபின்னர் எங்காவது தெரிய வரலாம். அப்படி எதுவும் எழுத வேண்டும் என்று வலிந்து முயற்சிக்கவே மாட்டார். எதையும் உரக்கச் சொல்லவே மாட்டார், மௌனத்தில்தான் உணர்த்துவார்”.

“நாடகிய உச்சங்கள், குறியீடு முதலான இலக்கிய கருவிகளைத் தவிர்த்து, எளிய, இயல்பான கதைசொல்லலைத் தேர்ந்தெடுத்தது அசோகமித்திரனின் எழுத்துக்கு ஒரு வறண்ட தன்மையை அளிப்பதாக இல்லையா?” என்று கேட்டோம்.

“எழுபதுகளின் துவக்கத்தில் மேற்கிலிருந்து இருத்தலியல் தத்துவத்தின் சாயலைக் கொண்டு அநேகமாக எல்லா இந்திய மொழிகளிலும் சிறுகதைகளும் நாவல்களும் ஏராளமாக எழுதப்பட்டன. அவற்றின் மிக முக்கியமான இயல்பு, பட்டும் படாமல் அந்நியத்தன்மை தூக்கலாக வெளிப்படும் கூறுமொழியில் கதை சொல்லும் முறை. இத்தகைய முயற்சிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், இவற்றின் அந்நியத்தன்மை வலிந்து திணிக்கப்பட்ட, செயற்கையான உணர்வாக இருந்தது. அசோகமித்திரனின் உரைநடை, இயல்பாகவே முதல் பார்வையில் ஒரு உலர்ந்த தன்மை கொண்டதாகவே இருக்கும். ஆனால், நம்பகத்தன்மை மிகுந்த சூழல், பாத்திரங்களின் நடத்தை, இவை இரண்டுக்கும் மேலாக அசோகமித்திரனின் கம்பேஷனும் சேர்ந்து அவரது நடைக்கு ஒரு ஈரமும் உயிர்ப்பும் அளித்தது.

“அசோகமித்திரனின் ஒரு கதை. ஒருவன் தன் வீட்டில் பால் வாங்குவான். அப்படி பால் வாங்கும்போது அந்தப் பாலில் கொஞ்சம் சிவப்பாக ஒரு புள்ளி மாதிரி ஒன்று பார்ப்பான். என்ன இது என்று கேட்பான். அப்போது பால்காரன், மாட்டின் காம்பில் சின்னதாகப் புண் இருக்கிறது என்று சொல்லுவான். அடுத்த நாள் பால் வாங்கும்போது அவன் நினைச்சுப்பான், இன்னிக்காவது அந்த மாட்டின் காம்பில் இருக்கும் புண் சரியாகி இருக்க வேண்டும் என்று.

‘சாதாரண ஒரு கதைதான் இது. மாடு எங்கேயோ இருக்கு, அதுக்கு காம்பில் புண் இருக்கு. இதை எல்லாம் அடுத்த நாள் பால் வாங்கும்போது அவன் யோசிக்கறான்- இன்னிக்காவது அந்த மாட்டுக்கு காம்பில் புண் ஆறியிருக்கணும், பாவம் என்னவெல்லாம் கஷ்டப்படுதோ அப்படின்னு. இந்தப் பரிவு அவ்வளவு சுலபமா வராது.”

வறண்ட, ஆனால் கருணைகூடிய கதை சொல்லல் என்பது அசோகமித்திரனின் அனைத்து கதைகளிலும் உள்ள பொது இயல்பு என்று சொல்வதற்கில்லை. ஆனால் இதைப் பேசும்போது, திலீப் குமார் அசோகமித்திரனின் அருமையான கதைகளில் ஒன்றான மாலதிபற்றி கூறியது இது:

ami_tn copy“மாலதி என்று ஒரு கதை. அதில் நர்ஸ் மாதிரி அவள் இருப்பாள். பார்மஸில இருப்பாள் – நர்ஸ் மாதிரி என்றால் பில் போடறது அது இது என்று பல வேலைகள் செஞ்சுக்கிட்டு இருப்பாள். அந்த டாக்டர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பான். காலையிலிருந்து சாயந்தரம் வரை அவள் செய்யும் வேலைகளை எல்லாம் விபரமாக எழுதியிருப்பார். அந்த டாக்டரின் மனைவி இவளைக் கன்னாபினனாவென்று திட்டுவாள். அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான், இவள் இங்கு நாள் முழுதும் உட்கார்ந்திருக்கிறாள். வா, நீ இங்கே என்ன பண்றே என்று அவனது மனைவி இவளைக் கேட்பாள். அவள் இவ்வளவு வேலை செஞ்சு, இந்த அம்மாவிடம் திட்டு வேறு வாங்கிக் கொள்வாள்.
“அந்தக் கதையை, அவள் செய்வதையெல்லாம் படித்தால் போரடிச்சுப் போயிடும், என்ன வாழ்க்கை இது என்று. ஆனால் அவர் ஏன் இப்படி எழுதியிருக்கிறார் என்றால், நீங்கள் கொஞ்சம் கவனமாகப் படித்தால்தான் தெரியும். அந்த மாதிரி ஒரு நபரின் வாழ்க்கை இப்படி இருக்கிறது. எங்கேயோ என்னென்னவோ நடக்கிறது, ஆனால் இவளது வாழ்க்கை ருடீன் எவ்வளவு சுமையாக இருக்கிறது என்று ரொம்ப அழகாக எழுதியிருப்பார். குமுதத்தில்தான் வந்தது, ரொம்ப நெகிழ்ச்சியான கதை அது”
திலீப் குமார் ஒரு கதையைப் பற்றி பேசுவது, அதன் ஆதார உணர்வை, அந்தக் கதையில் வெளிப்படும் பார்வையைச் சுட்டிக் காட்டுவதற்காக. அதுதான் அவரது முக்கியமான நோக்கமாக இருக்கிறது. ஆனால், அவர் ஒரு புனைவெழுத்தாளராகவே இந்தக் கதைகளை அணுகுகிறார். உள்ளடக்கத்தைப் பேசும்போதும், அது எப்படி வெளிப்படுகிறது என்பதையும் பேசத் தவறுவதில்லை அவர். மாலதியின் வாழ்வில் உள்ள ருடீன் வேலைகளில் அடிபடும் உணர்வு வறட்சியை அசோகமித்திரனின் அலுக்க வைக்கும் விவரணைகள் பிரதிபலிக்கின்றன என்றால், விமோசனம் என்ற சிறுகதையைப் பேசும்போது கதையின் உள்ளடக்கமும் அதன் வடிவமும் திலீப் குமாரின் பார்வையில் பிரிக்க முடியாதபடி ஒன்றுபடுகின்றன. அசோகமித்திரனை மிகச் சிறந்த எழுத்தாளராக அவர் ஏன் கருதுகிறார் என்பதற்கான ஒரு மினி லெக்டெம்மாக இது இருக்கிறது:
“விமோசனம்னு ஒரு கதை. இந்தக் கதையில் வரும் அம்மாவின் கணவன் ரொம்ப மோசமானவன். என்ன நம் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு அப்படின்னு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும்போது தெரிஞ்சவங்க வீட்டுக்கு சாமியார் மாதிரி ஒருத்தர் வருவார். சரி என்று அவரைப் பார்க்கப் போவார்கள். போனால், அவர் ஆசிர்வாதமெல்லாம் பண்ணுவார். திரும்பி வருவாங்க. திரும்பி வரும்போது பாத்தா, குழந்தையோட பால் பாட்டிலை மறந்துட்டு வந்திருப்பாங்க. வீட்டுக்கு வந்ததும் குழந்தை அழும்.  அப்போதுதான் பால் பாட்டிலை அங்கே விட்டுவிட்டு வந்திருப்பது தெரியும். அவன் அவளை கன்னாபின்னான்னு திட்டுவான், அடிப்பான்.
“அந்தக் கதையென்று பார்த்தால் மிக மெதுவாகத்தான் போகும். காலையிலிருந்து என்னவெல்லாம் நடக்குதோ அதை எல்லாம் சொல்லிக்கிட்டு வருவார். ஆனால் அவன் அடிக்கும்போதுதான் ஒன்று நடக்கும். அவள் என்ன செய்வாளென்றால், அவன் அடிக்கும்போது தாங்க முடியாமல் எதிர்த்து நிற்பாள் அவள். எதிர்த்து நின்றவுடன் அவன் அவளை விட்டுவிட்டுப் போய் விடுவான்.
“அந்தக் கதை முழுக்க அமைதியா இருக்கும் அவள், கடைசியில் ஒரு சத்தம் கொடுப்பாள். ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டாள். அடிச்சுக்கிட்டே இருப்பான், ஒரு இடத்தில் அவள் எதிர்த்து நின்று “ஹூம்!” என்பாள். அப்போது கொஞ்சம் பயந்துவிடுவான் அவள் கணவன், எதிர்த்து நிற்கிறாளே என்று. அடுத்த நாளிலிருந்து அவன் அவளிடம் பேச மாட்டான் . ஏன்னா அவனுக்குத் தெரிந்து விட்டது, நாம் இவளை இனி ரொம்ப மிரட்ட முடியாது என்று. ஒரேயடியா விட்டுவிட்டே போய்விடுவான் அவன்.
“விமோசனம்னு தலைப்பு கொடுக்கிறார் இந்தக் கதைக்கு. யோசித்துப் பாருங்கள், எப்படிப்பட்ட ஒரு பெரிய விஷயம் இது. இனிமேல் யாருக்கு விமோசனம், என்ன விமோசனம்… கணவனுக்கு விமோசனமா, அந்தப் பெண்ணுக்கு விமோசனமா? ரொம்ப சிக்கலான ஒரு விஷயத்தை ரொம்ப எளிமையாக, சாதாரணமாக அவர் சொல்லிக் கொண்டே போகிறார்.
“பொதுவாக, கதைகள் உரையாடல்கள் வழி சொல்லப்படுபவை. பாத்திரங்களே பேசாமல் நீங்கள் இரண்டு பக்கங்களுக்கு எழுதிக்கொண்டே இருந்தால் படிப்பவர்களுக்கு மிகவும் களைப்பாக இருக்கும். கதாசிரியனின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்போது திடீரென்று ஒரு பாத்திரம் ஏதாவதொன்று பேசுகிறது என்றால், படிப்பவர்களின் பார்வையில் பார்க்கும்போது, அவனுக்கு அது எவ்வளவு பெரிய விடுதலையாக இருக்கும்! இப்போது கதையில் திடீரென்று ஏதோ ஒன்று நிகழ்கிறது. யாரோ ஒருவர் ஏதோ ஒன்று சொல்கிறார்கள். சொல்வது யாராக இருந்தாலும், கதையில் பேச்சு என்று ஒன்று உருவானவுடன் படிப்பவர்களின் மனதில், ஒரு நபர் வந்திருக்கிறார் என்ற உற்சாகம் வரும். இந்தக் கதையின் கடைசியில் ஒரே ஒரு சத்தத்துக்குதான் அத்தனையும் நடக்கும். அவள் ‘ஹூம்!’ என்று எதிர்த்து நிற்கும் ஒரே ஒரு வார்த்தைகூட இல்லை-, ஒரே ஒரு சப்தம் கதை முழுக்க டைனமிக்கா பரவும். அந்த மாதிரி சிறுகதைகள் எல்லாம் அபூர்வம்.
“எனக்குத் தெரிந்து, நகுலனின் குருக்ஷேத்ரம் தொகுப்பில் இருக்கிறது அந்தக் கதை. பெரிதாகக் குறிப்பிடப்பட வேண்டிய கதை இது.”
“அசோகமித்திரனுக்கு எங்கே, எதை, எவ்வளவு சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது என்ற தெளிவு இருக்கிறது என்பதும் உரையாடலைக் கொண்டு உணர்த்துவதைக் காட்டிலும் மௌனத்தால் உணர்த்துவதே அதிகம் என்பதும் அவரது எழுத்தின் இரு சிறப்புத் தன்மைகள் என்று சொல்லலாமா? அவர் தனது இருபது இருபத்தைந்து வயதுக்குட்பட்ட அனுபவத்தைதான் தன் கதைகளின் கருப்பொருட்களாகக் கொள்கிறார் என்று சொல்ல முடியுமா?”
‘அப்படிச் சொல்ல முடியாது.. அசோகமித்திரன் தன் கதைகளில் இள வயதுக்குரிய உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், பிற்பட்ட காலத்தில் வாழ்க்கை அவருக்கு அளித்த அனுபவங்களையும் அறிவையும் எந்த வகையிலும் உறுத்தாத வண்ணம் தன் புனைவில் சேர்த்துக் கொள்கிறார். அது அவரிடமுள்ள தனித்தன்மை.
 

அசோகமித்திரன் இளமைக்காலத்தில். நன்றி : 'காலம்' சிற்றிதழ்
அசோகமித்திரன் இளமைக்காலத்தில். நன்றி : ‘காலம்’ சிற்றிதழ்

 

“அசோகமித்திரன் துவக்கத்திலிருந்தே தடுமாற்றம் இல்லாமல் எழுதி வருகிறார். ஆரம்ப நாட்களில் இருந்தே சக மனிதர்கள் மீதிருக்கும் அக்கறை அப்படியே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. யாரையும் அலட்சியப்படுத்த மாட்டார். இந்த இயல்பு அவரது கதைகளிலும் வெளிப்படுகிறது. ஒரு கருணையுடன்தான் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும், கழிவிரக்கமே இல்லாமல் அனைத்தையும் சொல்ல வேண்டும், இன்னொரு மனிதனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல ஏதாவது இருக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறார். அவரது இன்சைட்டே அப்படிதான் இருக்கிறது.

“வாழ்க்கையை கண்ணியமாக எதிர்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா என்ற கேள்வி அவருக்கு முக்கியமான ஒன்று. தன் கண் முன்னால் இருக்கும் ஒருத்தர் படும் கஷ்டங்களைப் பேசும்போதும், அவர் அந்தக் கேள்வியைத்தான் கேட்டுக் கொள்கிறார் – இந்த நிலைமை நமக்கு வந்தால் நாம் இவர்கள் அளவுக்கு பக்குவமாக நடந்து கொள்வோமா என்று.

“அவருக்கு பார்வையைப் பற்றிய அடிப்படையான ஒரு புரிதல் இருக்கிறது. அது மாறவேயில்லை. அந்தப் புரிதலைத்தான் அவர் திரும்பத் திரும்பப் பேசுகிறார். ஆனால் அதற்காக அவரது எழுத்து ஒரே மாதிரியிருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அசோகமித்திரன் ஐம்பது, ஐம்பத்து ஐந்து வயதில் எழுதியதை இப்போது படிக்கும்போதும் ஏதோ ஒன்று புதிதாகப் பிடிபடுவது போலிருக்கும். புதுமைப்பித்தனாகட்டும், கு.ப.ராவாகட்டும், அசோகமித்திரனிடம் மட்டும்தான் இந்த தன்மையை அதிகம் பார்க்கிறேன். இதை நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம், அவரது நடையின் எளிமை நம்மை ஏமாற்றிவிடுகிறது.”

“குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். அவருக்குப் பார்வையைப் பற்றிய அடிப்படையான ஒரு புரிதல் இருக்கிறதுஎன்று சொன்னீர்களே, அதை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா?”

“பொதுவாக, சிறு வயதில் நாம் நுட்பமாக கவனிப்போம். வயதாக ஆக, பார்வையில் உள்ள நுட்பம் குறைந்து எதையும் ஒரு சிந்தனையாகவோ கருத்துருவமாகவோ கிரகித்துக் கொள்ளும் தன்மை வந்து விடுகிறது. ஆனால், ஒரு நல்ல இலக்கியப் படைப்பை உருவாக்க இந்த இரு திறன்களும் தேவைப்படுகின்றன. வாழ்க்கை குறித்த தீட்சண்யமும் விவரணைகள் குறித்த துல்லியமும் சேரும்போதுதான் ஒரு நல்ல படைப்பு உருவாகும். அசோகமித்திரனின் எழுத்தில் இயல்பாகவே இந்த இரண்டும் கொஞ்சமும் கூடாமல் குறையாமல் கச்சிதமாக இடம் பெறுகின்றன. நுண்மையான விவரணைகளை மிகத் துல்லியமாகத் தருகிறார் என்பது மட்டுமல்ல, அவற்றை நுட்பமான உணர்வுத் தெளிவுடனும் தருகிறார் என்பதுதான் அவரது விசேஷம். இதைச் செய்யும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு”.

அசோகமித்ரன் மாய யதார்த்தம், பின் நவீனத்துவம்  போன்ற பாணிகளில் பரிசோதனை ரீதியான படைப்புகளை எழுதியுள்ளாரா? 

2006-07_Ottaran-196x300

“அசோகமித்திரனின் படைப்புகள் அனைத்தும் தன் மண்ணோடு பிணைந்தவை. அவர் எழுதிய ஒற்றன் நாவலை மையமில்லாத நாவல் என்று சொல்லலாம். அது ஒரு சோதனை முயற்சியாக இருந்தாலும் அதன் புதுமையைப் பிரமாதப்படுத்தவில்லை. எப்போதும் போன்ற இயல்பான குரலில்தான் அதையும் எழுதியிருந்தார். தீவிரத்தன்மையுடன் தன்னையோ தன் எழுத்தையோ முன்னிறுத்திக் கொள்ளும் இயல்பு அவருக்குக் கிடையாது. அவரது கதையுலகம் நமக்கு வாழ்வில் பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அது முன்னனுமானங்களுக்கு இடம் கொடுக்காதது.

அசோகமித்திரனைப் படிக்கும்போது, சென்ற தடவை படித்தபோது எதையோ தவற விட்டுவிட்டோம் என்ற உணர்வோடு படிக்க நேர்கிறது. அவரை மீள்வாசிப்பு செய்யவும், அவரைப் புதிதாகக் கண்டடையவும் ஒரு வாய்ப்பு அவரது எழுத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இது போன்ற ஒரு விஷயம் மற்றவர்கள் கதைகளை வாசிக்கும்போது நேரிடுமா என்று சொல்ல முடியவில்லை.

இப்போது நான் தமிழ் சிறுகதைகளின் பன்முகத்தன்மையை பிரதிநிதிப்படுத்தும் வகையில் ஒரு ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக துவக்க காலத் தமிழ் சிறுகதை முதல் இன்றுள்ள சிறுகதைகள் வரை பலவகைப்பட்ட சிறுகதைகளை நிறைய படிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் கவனித்தேன், அசோகமித்திரன் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் உலகம் எளிதில் புரிந்து விடுவதாக இருந்தது. பொதுவாக ஒரு எழுத்தாளர் இந்த உலகின் இயல்பை கிரகித்துக் கொண்டு தன் கதைகளில் வெளிப்படுத்துவதில் மாற்றம் ஏற்படுவதைக் காணும் வாய்ப்பு குறைவாகதான் இருக்கிறது.

ஒரு வேளை அதனால்தான் அவர் தன் நடையையே அப்படி வைத்துக் கொண்டாரோ என்னவோ… ஜெயகாந்தன் எழுத்தில் ஒவ்வொரு வாக்கியமும் அடுத்ததற்கு இட்டுச் செல்கின்றது அவர் ஓங்கி ஒலிக்கும் குரலில் கதை சொல்பவர், இப்போது பார்க்கும்போது அவரது கதையுலகம் ஆச்சரியப்படுத்துவதில்லை. மாறாக, அசோகமித்திரனின் குரல் சார்புகள் எடுக்காத, உணர்ச்சிகளை மிகையாக வெளிப்படுத்தாத சமநிலையில் இருப்பதாலேயே அவரால் நிறைய சொல்ல முடிகிறது”.

“அசோகமித்திரனை யதார்த்தவாத எழுத்து பாணியைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து? நகர்புற மத்திய தர வர்க்கத்தினரின் கவலைகளை மட்டும்தானே அவர் அதிக அளவில் எழுதினார்? இந்த குறுகிய வட்டத்தில் இயங்கியவர் என்று அவரைச் சொல்ல முடியுமா?”

“தமிழில் நல்ல எழுத்து யதார்த்தவாத எழுத்துதான் என்று கருதப்படுகிறது. வாழ்வின் சமூக பரிமாணத்தை வெளிப்படுத்த ஒரு எழுத்தாளன் தனக்குரிய கருவிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் சேர்கிறது. தி ஜானகிராமனின் கதையில் பேச்சு மொழியின் அழகு அருமையாக வெளிப்படும். லாசராவைப் படித்தால் அவர் சில அபூர்வமான அனுபவங்களைச் சொல்வதற்கு முயற்சிப்பது தெரியும். எனவே அவரது மொழியும் அதற்கேற்றவாறு வடமொழியின் தாக்கத்தோடு ஒரு பூடகத்தன்மை மிளிரும்படி இருக்கும். தவிரவும் அவர் யதார்த்தத்தைப் பற்றி எழுதிய கதைகள் மிகக் குறைவு. அவையும் வெற்றி பெறவில்லை. மௌனியிடம், மரபுசார்ந்தும் சாராமலுமான ஒருவித கவித்துவம் வெளிப்படும் இப்படி யதார்த்தத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் அணுகினார்கள் என்றாலும் நவீனத்துவத்தின் பண்பு புலப்பட்ட பார்வையுடன் எழுதியவர் அசோகமித்திரன்.

ASOKAMITHTHIRAN-261, PHOTO BY PUTHUR SARAVANANயதார்த்தத்தை மிகத் துல்லியமாக விவரிக்கக்கூடியவர் என்பதோடு இலக்கிய நுண்ணுணர்வை மிகக் கூர்மையாக வளர்த்துக் கொண்டவர் அசோகமித்திரன். அவரது எழுத்தில் எந்த இடத்திலும் ஒரு வார்த்தை மிகையாகவோ தேவையில்லாமலோ இருக்காது. அதேபோல் அவரிடம் உள்ள ஒரு இயல்பு, எந்த சமயத்திலும் அவரது குரலில் ஒரு தோரணை இருக்காது. எதையுமே ரொம்ப சாதாரணமாகத்தான் சொல்லிக்கொண்டே போவார். உணர்ச்சிகளை உரக்க வெளிப்படுத்த மாட்டார். அவரது உரைநடை எப்போதுமே மிகவும் அடக்கமாகப் பேசக்கூடியது. அவருக்கு எப்போதுமே ஒரு உயர்ந்த தரத்தில் எழுத வேண்டும் என்ற நோக்கமும் உணர்சிவசப்படுத்தகூடாது என்ற எச்சரிக்கயுணர்வும் இருந்து கொண்டே இருக்கும். அவர் கதையைப் படித்துவிட்டு அழுதேன் என்று நீங்கள் அவரிடம் சொன்னால், அதற்கு அவர் வருத்தப்படுவார். “என் கதையைப் படிச்சுட்டு அழுதுட்டேன்னு சொல்றீங்களே, நான் அதை நினைச்சு எழுதல. கேக்க மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,” என்று சொல்லக்கூடியவர். “மோசமா எழுதிட்டேன் போல இருக்கு,” என்றுதான் நினைத்துக் கொள்வார். உண்மைதானே? அவரது நகைச்சுவையும்கூட உரக்க வாய்விட்டுச் சிரிக்க வைப்பதாக இல்லாமல் மௌனமாகச் சிரித்துக் கொள்ளச் செய்வதாக இருக்கும்”.

‘பொதுவாக, அசோகமித்திரன் எதையுமே மிகைப்படுத்தாமல் எளிமையாக, இயல்பாக பேசுவதுபோல் எழுதுபவர், இல்லையா?

“உண்மைதான், அவரது கட்டுரைகளாகட்டும், கதைகளாகட்டும், நம்மை ஏமாற்றும் ஒரு சாதாரணத்தன்மை அதில் இருக்கும். இங்கு ஒன்று சொல்ல வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு அவரது எழுத்து வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் மிகவும் எளிதாக இருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த தமிழ் இவரை வாசிக்கப் போதுமானதாக இருக்கிறது. இதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சுலபமாகப் புரிகிறது என்று சொல்வார்கள், சிக்கலான வாக்கியங்கள் இல்லாதது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. அசோகமித்திரனுக்கு அவரது மொழியின் மீதுள்ள கட்டுப்பாடு இந்த வாசகர்களுக்கு உதவியாக இருக்கிறது. அவர் நகரத்தில் பிறந்து நகரத்தில்தான் வாழ்ந்திருக்கிறார். இந்த வாழ்க்கையைப் பற்றி அவரால் சிறப்பாக எழுத முடிந்திருக்கிறது அவருக்குப் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியான மண் மணம் கமழும் கிராமியப் பின்னணி என்று எதுவும் கிடையாது.”

“அசோகமித்திரன் குறித்து பிராமண எழுத்தாளர், இந்துத்துவ சார்பு கொண்டவர் என்பன போன்ற எதிர்மறை விமரிசனங்களை இப்போது பார்க்க முடிகிறதே?”
பொதுவாக இலக்கியத்துக்குள் வருபவர்கள் அனைவருமே, தங்களது குறுகிய சமூக அடையாளங்களைக் கடந்து செல்லவும், சமூக ஏற்றத் தாழ்வுகளை விமரிசிக்கவுமே வருகிறார்கள் ஆனால் பல சமயங்களில், அவர்களது பின்னணி சார்ந்து சில விஷயங்கள் அவர்களது படைப்பில் வெளிப்பட்டுவிடுவது உண்டு. இது, அநேகமாக எல்லோருக்கும் நிகழ்ந்துள்ளது. மேலும் அசோகமித்திரனின் புனைவுகளோடு சேர்த்துப் பேசும்போது அவரது அரசியல் முக்கியமானதேயல்ல. அவரே தன் கருத்துகளை அந்த அளவுக்கு முக்கியமானதாக நினைக்க மாட்டார்.

ஆனால் இங்கே ஒன்று சொல்ல வேண்டும் – யதார்த்த இலக்கியம் செய்யும்போது, சமூக தளத்தில் அதன் இடம் என்ன என்று நிறுவ வேண்டும். சாதியமைப்பு வலுவாக உள்ள சமூகத்தில், சாதியைப் பேசாமல் இருப்பது பாதுகாப்பானது. பாத்திரங்களின் பின்புலத்தைப் பேசாமல் பொதுவான விஷயங்களை எவ்வளவு வேண்டுமானலும் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு படைப்பில் பாத்திரங்களின் சமூகப் பின்னணியைச் சரியாக நிறுவும்போது அந்தப் படைப்புக்கு ஒரு நம்பகத்தன்மை உருவாகும்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அசோகமித்திரனுடன் பழகியிருக்கிறீர்கள். அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாமே? உங்களுக்கு அவரிடம் எப்படி இந்த நெருக்கம் ஏற்பட்டது?

“மத்தியவர்க்க வாழ்க்கையின் கஷ்டங்களைப் பார்க்கிறோம். அதை கண்ணியமாக எதிர்கொள்வது என்ற ஒரு தன்மை இருக்கிறது, அதுதான் எனக்கும் அவருக்கும் பொதுவான ஒரு முக்கிய புள்ளி என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டம் வருகிறது, அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை வைத்துதான் நம் இயல்பைச் சொல்ல முடிகிறது. எல்லாரையும் போல நாமும் கோபித்துக் கொள்வது, அசிங்கமாகப் பேசுவது என்றால் அதில் ஒரு அர்த்தமுமில்லை. இக்கட்டான ஒரு நிலையை எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் நம் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை வரையறுக்கிறது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு கஷ்டமான நிலையையும் நாம் எவ்வளவு நிதானமாக, கண்ணியத்தோடு எதிர்கொள்கிறோமோ அதுதான் நமக்கென்று தன்மையாக நிற்கும்.

“பதினாலு வயதிலேயே நான் வேலைக்குப் போனேன். பதினாலு முதல் இருபத்துநாலு இருபத்தைந்து வயசு வரைக்கும் பல்வேறு நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட கரடுமுரடான வாழ்க்கை வாழ நேர்பவர்களுக்கு முதலில் அடிபடுவது அவர்களின் சென்சிட்டிவிட்டிதான். அதுதான் முதலில் பாதிக்கப்படுகிறது. அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் மோசமாகப் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். நுட்பமான அகவாழ்க்கையோ,  மென்மையான ஆளுமைக் கூறுகளோ அவர்களுக்கு சாத்தியமாகி இருக்காது. அதற்கு அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் உலகமே அப்படிதான். தன்னை யாரும் தாண்டிப் போய்விடக் கூடாது, தன்னை யாரும் கீழே சாய்த்துவிடக் கூடாது என்பதால் எப்போதுமே ஒரு பதட்டநிலையில் இருந்து, முன்னுக்கு வந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அதற்குள்  அவர்கள் தங்கள் நுண்ணுணர்வை முற்றிலும் இழந்துவிட்டிருப்பார்கள்.

“பதினாறு, பதினேழு வயதில்தான் மனசு, உடம்பு எல்லாம் மலரக்கூடிய பருவம். அப்போது எப்படி வாழ்க்கை நம்மீது தாக்கம் ஏற்படுத்துகிறதோ, அப்படிதான் நம் ஆளுமையும் அமையும். நான் எப்போதுமே இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தேன். எவ்வளவு புத்திசாலித்தனமாகச் செய்தேன் என்று சொல்ல முடியாது, ஆனால் இதைப் பற்றிய எச்சரிக்கையுணர்வு எனக்கு எப்போதுமே இருந்தது. இந்த வாழ்க்கை நம்மைக் கடுமையாகக் காயப்படுத்தும் அனுபவம், நம்மையும் கடுமையானவர்களாகச் செய்துவிடும். நம் தன்மையை இழக்காமல் இருக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே வந்தது.

“அப்படிதான் நான் வாசிக்கவே ஆரம்பித்தேன் இப்படியே இருந்தால் என்ன ஆகும் என்ற அச்சத்தில்தான் புத்தகம் படிப்பது அது இது என்று என்னென்னவோ செய்தேன். இவ்வளவு தெளிவான முடிவாக அது இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனா அந்த நேரத்தில் ஏதோ ஒன்று இதுபோல் மனதில் தோன்றிற்று. இப்படியே இருந்துவிட முடியாது, இப்படியே இருந்துவிடக்கூடாது என்று.

“ஆக, அசோகமித்திரனின் எழுத்துடன் எனக்கு உள்ள நெருக்கமே இதுதான். மிகவும் ஆதாரமான தன்மை இந்த ரெண்டுதான். எனக்கும் அவருக்கு ஒற்றுமை இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் என் படைப்பு உலகில் ஒருவித முரட்டுத்தனம் இருக்கும், அவரது கதைகளில் இருக்காது. என் கதைகள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வன்முறை இருக்கும். அவர் கதைகளில் அந்த மாதிரியெல்லாம் எதுவும் இருக்கவே இருக்காது.”

oOo

dilipkumar5_thumb2திலீப் குமார், தன் அறையில், தான் எழுதும் மேஜையில் “Don’t make money your God. It will plague you like a devil” என்ற வாசகம் தன் பார்வையில் எப்போதும் இருக்கும்படி எழுதி வைத்திருக்கிறார். சொல்புதிது பேட்டியில் அசோகமித்திரன், “the futility of the gratification of desire,’ என்பதைத் தன் தாரக மந்திரமாக இளம் வயதிலேயே கண்டு கொண்டதாகக் குறிப்பிடுவதாக வெ. சுரேஷ் தன் கட்டுரையில் எழுதியிருக்கிறார். இந்த துறப்பின் காரணமாகவே இவர்கள் மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் நவீனர்களாக மட்டுமல்லாமல், அவரவர் அளவில் நவீனத்துவத்தின் அற விழுமியங்களை உள்வாங்கிக் கொண்ட மத்தியவர்க்க மனசாட்சியாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் – இந்த மத்தியவர்க்க மனசாட்சி என்பது அதன் வாழ்வனுபவ விவரிப்பை ஆதாரமாகக் கொண்டு வெளிப்படுகிறது என்றாலும், சாதி, மத, இன, குழு மனப்பான்மைகளுக்கு அப்பாற்பட்டது:

பாவம் டல்பதடோவில் அசோகமித்திரன் எழுதுவார்,

“பகலில் அடையாளம் தெரியவில்லை. இரவில் முயற்சி செய்யலாம் என்று ஓர் இரவு நான் சாலை ஓரமாக நடந்தேன். அன்றிரவு டல்பதடோவை கார் மோத வந்த இடம் எதுவாக இருக்கும் என்று தேடினேன். சாலையே ஓரிடத்தில் மிக லேசாகத் திரும்பும். அங்கிருந்து தூரத்தில் புதிய விமான நிலைய கட்டட வேலைகள் நடப்பதைப் பார்க்க முடியும். நான் அந்த இடத்தில் நின்று கொண்டேன். சாலையை விட்டு தரையில் இறங்கி ரயில் இருப்புப் பாதை அருகே சென்றேன். நான் சென்ற நேரம் அடுத்தடுத்து சென்னை எழும்பூரிலிருந்து துரித ரயில்கள் தெற்கே சென்று கொண்டிருத்த நேரம். நான் சரளைக் கற்கள் பக்கத்தில் ஒற்றையடிப் பாதையாக இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அது மின்சார ரயில் போகும் பாதைக்கு அடுத்தது. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை கையெட்டும் தூரத்தில் மின்சார ரயில் பெட்டிகளைச் சுமந்து செல்லும் சக்கரங்கள் என்னைத் தாண்டிச் சென்றன. ரயில் பெட்டிகளின் ஜன்னல்கள் வழியாக வெளியே வீசும் வெளிச்சம் சினிமா புரொஜக்டரிலிருந்து வீசும் ஒளிக் கற்றை போல் வெட்டி வெட்டி என்னைத் தாண்டி வீசின. நான் ரயில் பாதையின் மிக அருகில் உட்கார்ந்திருந்ததால் அந்தப் பாதையில் போகும் ரயில்களின் வெளிச்சம் என்மீது விழவில்லை. ஆனால் அடுத்து இரு பாதைகளில் சென்ற ரயில்களின் வெளிச்சம் என் மீது விழுந்தது. அந்த ரயில்களில் பயணம் செய்தவர்களில் பலர் என்னைப் பார்த்திருக்கக்கூடும். அந்த ரயில்களின் டிரைவர்கள் என்னைப் பார்த்திருக்ககூடும். ஆனால் நான் உட்கார்ந்திருந்தது ஒருவன் அந்த ரயில்களை அருகாமையிலிருந்து வேடிக்கை பார்ப்பதற்காகவே என்பது போல தோன்றியிருக்க வேண்டும். நானும் அசையாமல் இருந்த இடத்திலிருந்தே பூமியை அதிர வைத்து என்னைத் தாண்டிப் போன ரயில்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். எனக்கு என் நினைவுகள் எல்லாம் எங்கோ மறைந்து போய் அந்த நேரம் முழுக்க முழுக்க ஒரு ரயிலுக்காகவும், அதற்கு அடுத்த ரயிலுக்காகவும் காத்திருப்பதாக இருந்தது. இந்தக் காத்திருப்பது உண்மையில் எவ்வித உலகாயுத பயனும் இல்லாதது. ஆதலால் என்னுடைய எந்த இந்திரியத்துக்கும் எந்தவிதத் தீனியுமாக முடியாது.

காத்திருத்தல், கலந்திருத்தல், அடுத்த ரயிலுக்காகக் காத்திருத்தல்… அந்த வேளையில் எனக்கு நான், என் மனைவி, லலிதா, டல்பதடோ. சிவநேசன்… எல்லாமே மறந்து போய் விட்டது. நான் அந்த இருப்புப் பாதைகள், ரயில்கள், ஒவ்வொரு முறை ரயில் உருண்டோடும்போதும் நானே அந்த இருப்புப் பாதையாகவும், நானே சக்கரமாகவும், நானே அந்த ரயில் பெட்டிகளாகவும், நானே அந்த ரயில் பயணிகளாகவும் மாறிவிடுவது போலிருந்தது.அந்த ரயில், இருப்புப் பாதை மட்டுமில்லை, போட்ட சரளைக் கற்களாகவும் நானே மாறிவிடுவது போலிருந்தது. அப்படியே அந்தத் தரையாகவும் மாறிவிடுவது போலிருந்தது. அந்தத் தரை தொடுவானம் வரை சென்று கடலோடும் வானத்தோடும் இணைந்தது. நானே வானமும் கடலாகவும் வேறு மாறிவிட்டேன்.

“சடாரென்று நான் மீண்டும் என் உடலுக்குள் மட்டும் இருப்பவனாகவும், இயங்குபவனாகவும் மாறினேன்.எனக்கேற்பட்ட அந்த அனுபவம் துக்கத்தால் ஏற்பட்டதா, குற்ற உணர்வால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. ஒரு வேளை, இவை இரண்டுமே காரணமில்லை என்று தோன்றியது. ஐம்பது வயதுக்காரன் ஒருவன் இருட்டில் ரயில்களைப் பார்த்தபடியே சூழ்நிலையோடும் பூமியோடும் ஒன்றிப்போவது சுயநலனையும் அகங்காரத்தையும் சார்ந்ததாக இருக்க முடியுமா?”

அசோகமித்திரனின் கால்கள் மண்ணில் ஊன்றியிருந்தாலும், குரலில் யதார்த்தம் வெளிப்பட்டாலும் அவற்றால் கட்டுப்பட்டதல்ல அவரது பார்வை. மானுடத்தை முழுமையாய் உணர்ந்த, அதன் காயங்களை உள்ளடக்கிய, அதன் வலிகளை அனுபவித்த, ஆதரவான, அமைதியான, யாரையும் குற்றம் சொல்லாத புரிதலின் பரிவுப் பார்வை இது. அவர் மகத்தான மனிதர், மகத்தான எழுத்தாளர் என்ற பிரமிப்பை அளிக்காமல், அவர் மிகவும் கண்ணியமானவர் என்பதுவே திலீப் குமார் உணர்த்திய விஷயங்களில் முக்கியமானது என்று நினைக்கிறேன்.

திரு.திலீப் குமார் அவர்களுக்கு நன்றிகள்.

திலீப்குமார் புகைப்பட உதவி : அழியாச் சுடர்கள்

0 Replies to “திலீப்குமாருடன் ஒரு சந்திப்பு”

 1. சொல்வனம் – 100 வது சிறப்பிதழை எட்டியது உண்மையில் மிகப்பெரிய சாதனை. எல்லா இணைய பத்திரிகையும் வெகு ஜோராக ஆரம்பித்து பின்னர் அப்படியே தொய்வடைந்து மாதக்கணக்கில் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் நிலையில் சிலர் சேர்ந்து நல்ல இலக்கியங்களையும், கவனிக்கப்படாமல் விடப்பட்ட நல்ல கலைஞர்களையும், புத்தகங்களையும், உலக கதைகளையும் பதிப்பித்து வருகிறீர்கள். வருமானம் இல்லா தொழிலைச் செய்பவனை முட்டாள் மற்றும் பிழைக்கத்தெரியாதவன் என நம்பும் நம் சூழலில் நல்ல விஷயங்களை தேடித்தேடி இங்கு கொண்டு வந்து சேர்க்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். மென்மேலும் சொல்வனம் வளரவும் இதழ் தவறாமல் வருவதற்கு உழைத்த மற்றும் உழைக்கும் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். ஜெயக்குமார்

 2. வெ சா , புகைப் படங்கள் எதற்கு, உங்களின் வரிகள் மூலம் காட்சிகள் எங்கள் மனதில் உருவாக்கும் கலை உடையவர் நீங்கள். நிலக் கோட்டை தெருக்கள், பாட்டியின் பாசம் , சென்னை வந்து அப்பா ரயில் ஏற்றி விட்ட தருணம் , ரயில் மாலை தான் காலையே சென்னை வந்ததால் நீங்கள் சுற்றிய நிகழ்வுகள், ஹிராகுட் சென்று டாக்சி டிக்கி அல்லது பார்க்கிங் இடத்தில் கிடந்த தமிழ் சிற்றிதழ்கள் மூலம் நீங்கள் வாசிக்கத் தொடங்கியது
  எனப் பல நிகழ்வுகள் காட்சிகளாக எங்கள் மனதில்.
  எனவே தயவு செய்து சுய சரிதை எழுதுங்கள் .
  பக்தி மார்க்கம் முதலில் தமிழ் நாட்டில் தான் தோன்றியது என்பது எந்த அளவு உண்மை . வட இந்தியாவிலும், ஆந்திராவிலும் (பாண்டுரங்கர் ) பஜனைகள் முன்பே உண்டே.

 3. விருந்தான விதை நெல்
  வனத்தில் மண் தோண்டும் இயந்திரம்
  மலைகளில் பாறைகளில் வெடிசத்தம்
  மரத்தை வெட்டி வளர்ச்சி கண்டோம்
  மரத்தை வெட்டி பணம் பண்ணினோம்
  விதை நெல்லை சமைத்து
  விருந்து வைத்தோம் .
  இது தான் கடைசி உணவு என்பதை
  வசதியாக மறக்க நினைத்தோம்

 4. எல்லா இணைய பத்திரிகையும் வெகு ஜோராக ஆரம்பித்து பின்னர் அப்படியே தொய்வடைந்து மாதக்கணக்கில் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் நிலையில் சிலர் சேர்ந்து நல்ல இலக்கியங்களையும், கவனிக்கப்படாமல் விடப்பட்ட நல்ல கலைஞர்களையும், புத்தகங்களையும், உலக கதைகளையும் பதிப்பித்து வருகிறீர்கள். வருமானம் இல்லா தொழிலைச் செய்பவனை முட்டாள் மற்றும் பிழைக்கத்தெரியாதவன் என நம்பும் நம் சூழலில் நல்ல விஷயங்களை தேடித்தேடி இங்கு கொண்டு வந்து சேர்க்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். மென்மேலும் சொல்வனம் வளரவும் இதழ் தவறாமல் வருவதற்கு உழைத்த மற்றும் உழைக்கும் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.
  புகைப் படங்கள் எதற்கு, உங்களின் வரிகள் மூலம் காட்சிகள் எங்கள் மனதில் உருவாக்கும் கலை உடையவர் நீங்கள்

  1. அன்புள்ள சந்திரசேகரன் அவர்களுக்கு,
   உங்கள் கனிவான குறிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. இந்தப் பத்திரிகை தொடர்வதற்கு உங்களைப் போன்ற வாசகர்களின் தொடர்ந்த கவனிப்பும், வாசிப்புப் பங்கெடுப்பும்தான் உந்துதலாக உள்ளன. நன்றி.
   பதிப்புக் குழு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.