தஞ்சை மறுவிஜயம்

 

ami_tn copyAn Army marches on its stomach. ஆனால், இன்று சுவர்கள் மூலம்தான் பேச முடிகிறது. சமத்துவம், சகோதரத்துவம், தொடர்பு சாதனங்களின் நுணுக்கமான, விரிவான முன்னேற்றத்தின் விளைவு. நேரே பார்த்துச் சொல்ல வேண்டியதை எழுத்து மூலம்தான் தெரிவிக்கத் தோன்றுகிறது. சொல்ல முடியாததையும்தான். தஞ்சை மாவட்டச் சுவர்கள் நிறையப் பேசுகின்றன. ‘விளம்பரம் ஒட்டாதே ’/ எழுதாதே/பதிக்காதே/பயமுறுத்தல்கள்/ எச்சரிக்கைகள் / கோரிக்கைகள் / கெஞ்சல்கள் இவைகளையும் மிறி இடைவெளிவிடாமல் சுவர்கள் பேசுகின்றன. கடவுள் இல்லை, கடவுள் இல்லை, இல்லவே இல்லை. செந்தில் மூட்டைப் பூச்சிக் கொல்லி, தண்ணீர் பம்பு செட்டுகள் வாங்க, ரிப்பேர் செய்து கொள்ள ஜோதி ஹார்ட்வேர்ஸ், நில்-கவனி-சுவைத்துப் பார்; மோகன் ஒயின்ஸ், சாணமும் மூத்திரமும் சிவலோகம் அழைத்துச் செல்லுமா? அமோக விளைச்சலுக்கு நடராஜா உரம், வாங்க ஐயா உங்களைத்தானே, இதோ இருக்கு கள்ளுக் கடை, மண் செழித்துப் பொன் விளைய எம்மெஃபல் காம்ப்ளெக்ஸ், பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் கொல்லு….

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. சிற்றூர் வியாபாரிகள், சிறு பொருள் தயாரிப்பாளர்கள் விளம்பரத்திற்கு என்ன செய்ய முடியும்? தஞ்சை மாவட்டச் சுவர்கள் அநேக பல்பொடிகள், மூட்டைப் பூச்சிக் கொல்லிகள், நவநாகரிக உடை தயாரிப்பாளர்கள் இவர்களுக்கு மைல் கணக்கில் ஓயாது சிபாரிசு செய்து கொண்டிருக்கின்றன. இவற்றுடன் எல்லாச் சுவர் வாக்கியங்களை மொத்தமாகக் கவனித்துப் பார்க்கையில் இரண்டு கருத்து அடிப்படைகள் விசேஷமாகத் திரும்பத் திரும்ப வருகின்றன. இரண்டாவது விவசாயம் பற்றி.

தஞ்சாவூர் மாவட்டம்தான் தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம். ஆண்டாண்டு காலமாக அப்படித்தான்  பொதுக்கருத்து. புள்ளி விவர ரீதியில் மொத்த நெல் விளைச்சலில் இன்றுகூடத் தஞ்சைதான் முதலிடம். இனியும் சாகுபடிக்குக் கொண்டு வரக்கூடிய நிலப்பகுதி மிக மிகக் குறைவு. அந்த அளவில் அது ஒரு கடைநிலை எட்டிய மாவட்டம். இனிச் சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்த அதிகம் வாய்ப்பில்லை. ஆனால் சாகுபடி முறைகளைத் தீவிரப்படுத்தலாம். வீரிய விதைகளைக் கையாளலாம். மொத்த உற்பத்தியைக் கணக்கெடுத்தால் முதலிடம் நிற்கும் இம்மாவட்டத்தின் ஒரு ஏக்கர் உற்பத்திச் சராசரி இன்னும் பல மாவட்டச் சராசரிக்கும் குறைவுதான். உலகத்திலேயே ஏக்கர் சராசரி உச்சம் அடைந்துள்ள ஜப்பானிய உற்பத்திக்குத் தஞ்சை வயல் பாதியளவுதான் காட்டுகிறது. ஆனால் ஜப்பானில் கிடைக்கும் விவசாய வசதிகள் இந்தியாவில் கிடைக்க மிக மிக நாளாகும் என்கிறார்கள். கிடைக்காமலே போகும் என்றும் கூறுகிறார்கள்.

தீவிரச் சாகுபடி முறைகள், புதிய வீரிய விதைகள் இத்துடன் விவசாயத் துறையினரிடையே மனப்பாங்கிலேயே மாறுதலை உண்டுபடுத்தும் நோக்கத்துடன் ஆடுதுறையில் விசேஷ விவசாய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில அளவில் மத்திய அரசு ஒத்துழைப்புடன், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் அரிசி ஆராய்ச்சிப் பண்ணையும் இருக்கிறது. நான்காண்டே முடியப் போகும் உழவர் பயிற்சி நிலையமும் இருக்கிறது. மாதிரி வயல்கள், விதை வயல்கள் இருக்கின்றன. வெட்ட வெளியில். கூரைக்கடியில் மண் வளத்தைப் பரிசோதிக்கிறார்கள். விதைகளை, மணிகளை உருவத்திற்கும் அளவிற்கும் ஊட்டச் சத்துக்கும் பரிசோதிக்கிறார்கள். இவர்களும் நிறைய அதிகாரப் பூர்வமான, அரசாங்க மையம் கொண்ட கடிதங்களைப் பெற வேண்டியிருக்கிறது. கடிதங்கள் எழுத வேண்டியிருக்கிறது. ஃபைல்களைப் பராமரிக்க வேண்டியிருக்கிறது.

அடுத்த மாதம் நிகழப் போகும் கருத்தரங்குக்குக் கொட்டகை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. அதில் கலந்து கொள்ளப் போகும் பிரமுகர்கள் பதவியை மனதில் கொண்டு இடவசதி ஒதுக்கல்கள் செய்யக் கவலைப்பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஆனால், நிறுவன அமைப்புகளின் தவிர்க்க முடியாத லௌகீகப் பொறுப்புகளையும் மீறிய ஒரு நோக்கத் தெளிவு இருக்கிறது. மாத ஊதியத்தையும் கடந்த  அர்ப்பணிப்பு உணர்ச்சி இருக்கிறது. புள்ளி விவரங்களை மிகுந்த அக்கறையுடன் காத்திருந்து காத்திருந்து நிர்ணயிக்கிறார்கள். ஆய்வுக்கூடப் பரிசோதனை முடிவுகளை மிகவும் கவனமாக மறுபரிசோதனைக்குள்ளாக்குகிறார்கள். ஒரு பரிசோதனை முடிவின் செயல்முறை வாய்ப்புகளை முழுமையில் கண்டறியப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருக்கிறார்கள்.

தலைமுறை தலைமுறையாகப் புழங்கி வரும் சில நம்பிக்கைகளை- அவை இன்றைய தேவைக்கும் சூழ்நிலைக்கும் மிகவும் குறைந்த அளவு பயனுடையவை என்றிருந்தாலும், பொது மக்களிடையே, ஆய்வுக் கூடச் சிந்தனைகள் அதிகம் பழகியிராத விவசாயிகளிடையே அந்த நம்பிக்கைகளைத் திருத்தி அமைக்க, மாற்ற, அகற்ற மிக மென்மையாக ஆனால், தொடர்ந்து விதவிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இவர்களும் நிறைய கோஷப்பலகைகளை, விளம்பரப் பலகைகளை இவர்களுடைய மாதிரி வயல்களில் நட்டு வைத்திருக்கிறார்கள்.  சோழன் உங்களுடைய தோழன் பேருந்துகள் நிற்கும் முக்கிய இடங்களில் எல்லாம் தவறாமல் கண்ணில் படும்படி மாட்டியிருக்கிறார்கள். ஆனால், விளம்பரப் பலகை ஒன்றுதான் கதி என்ற கட்டத்தைத் தாண்டி விட்டாரகள். இரண்டாண்டு முன்புகூட, விவசாயிகளுக்கு இந்த நிறுவனங்களோடு தொடர்பு அவ்வளவு உற்சாகமான அளவுக்கு வளரவில்லை. ஆனால், சிறுகச் சிறுக இன்று இவர்கள் மீது நம்பிக்கை வளர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளைச் சந்திப்பதைத் தவிர விவசாயிகளே இவர்களைச் சந்திக்க ஆடுதுறை வருகிறார்கள், அல்லது கடிதம் எழுதுகிறார்கள். விவாதக் குழுக்கள் நூற்றுக்கணக்கில் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தேகம் கேட்டுத் தெளிந்து கொள்கிறார்கள். ஆடுதுறை உழவர் பயிற்சி நிலையத்தின் 5 நாள் பயிற்சிக்குத் தாமாகவே முன்வருகிறார்கள், கட்டுக்கோப்பான சாகுபடி முறைகளை முழுமையாக விவசாயிகளுக்குத் தெரிவிப்பதே இப்பயிற்சியின் நோக்கம். வருடத்திற்குப் பத்து பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் இப்போது நடத்த முடிகிறது. பெண்கள் மனை இயல், குடும்ப நலம் போன்ற பணிகளில் பயிற்சி பெறுகிறார்கள். பட்டம் பெற்ற நிபுணர்கள் இப்பயிற்சிகளை நடத்துகிறார்கள்.

Paddy_Fields_Thanjavur

ஐ-ஆர்-8 அரிசி சாப்பிட்டால் பைத்தியம் பிடிக்கும், அந்த வைக்கோலைத் தின்ற மாடு வயிறு வீங்கிச் சாகும் என்பது போன்ற புரளிகளுக்கு சுமுகமாகப் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். முழுச் சாகுபடிப் பயிரையே அழித்து விடும் ஒரு பிணிக்கு ஒரு கையளவு துத்தநாகத்தால் மாற்று காணலாம் என்ற கண்டு பிடிப்பை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு போக நெற்சாகுபடியேயறிந்த வயல்களுக்கு நான்கரை மாதத் தாளடி பருத்தி பி ஆர் எஸ் -72 ஆல் ஏக்கருக்கு ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேலாக லாபம் பெறலாம் என்று வழி வகுத்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். மண் பரிசோதனைக்குக் குறைந்தது ஒரு கிலோவாவது தேவைப்படும்போது ஒரு சிட்டிகை அளவு வயல் மண்ணை அனுப்பி ‘என் வயலில் ஏன் பசலை சரியாக வளருவதில்லை’ என்ற கேள்வி காணும் கடிதத்தைக் கண்டு பரபரப்பும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். ஐந்து நாள் பயிற்சிக்குப் பின் விவசாயிகள் பிரிவுபசார வைபவம் நடத்தும்போது மனம் நெகிழ்கிறார்கள். அவ்விவசாயிகள் தாங்கள் கிரகித்துக்கொண்ட விவரங்களை வைத்தே நாடகமும் பாடலும் புனைந்து ஆடிப்பாடிக் காட்டும்போது பெருமிதம் அடைகிறார்கள்.

இந்த நிபுணர்கள் இவர்களுடைய நிறுவனங்களின் மிகப் பெரிய சாதனைகளை அடக்கமாகத்தான் கூறிக் கொள்கிறார்கள். 1944-45 இல் “கழித்தல் முறை எரு” (Green Manure): 1965 இல் பதினைந்தாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாகிய ஏடிட்டி -27; “யானை கட்டிப் போரடித்த நாளில், சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு ஏக்கருக்கு 500 ராத்தல் விளைச்சல். பத்தாண்டுகள் முன்பு இது 700; இன்று சராசரியாக ஒன்றேகால் டன்னுக்கும் மேலாக, வெவ்வேறு வித நிலங்களுக்கு உகந்தபடி விதவிதமான புதிய விதைகள், நுண்ணுயிர் மூலம் (bacterial fertilisation) உரமளிக்கும் முறைகளை மேலும் பயனுள்ளதாகச் செய்ய முயன்று வருகிறார்கள். சோனிப் பயிரைக் காட்டிலும் நல்ல பயிர் வலுவான பயிர் நாசினிகளை எதிர் கொண்டழைக்கும் என்ற உணர்வு இவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. இன்று நல்ல பயிர்களை உருவாக்குவது சாத்தியமாகியிருக்கிறது. இது பாதி வேலை, மறுபாதி நல்ல பயிர் காப்பான்களையும் தயார் செய்வது என்கிறார்கள்.

#  #  #

பட்டதாரிகள், ஆராய்ச்சிக் கூடம், புள்ளி விவரங்கள், வரைபடங்கள், வானொலிக் குறிப்புகள், பெருச்சாளியின் இனப்பெருக்கத்தை விளக்கும் கண்ணாடிப் பெட்டி, சிறந்த வீரிய விதைகள், புன்னகை, நம்பிக்கை, இது ஆடுதுறை, மேலத் தஞ்சாவூர்.

ஆடுதுறையிலிருந்து கும்பகோணம், கும்பகோணத்தில் இருந்து திருவாரூர், திருவாரூரிலிருந்து தேவூர், தேவூரிலிருந்து சுமார் இரண்டு மைல். பழைய ஓட்டுக் கட்டடங்களாகவும் குடிசைகளாகவும் இருக்கும் அந்த கிராமத்தில் ஒரு ஸ்தூபியும் சச்சதுரமான ஒரு சிறு ஒட்டுக்கட்டடமும் புதிதாக, சூழ்நிலைக்கு மிகவும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. ஸ்தூபியில் வரிசையாக நாற்பத்து நான்கு பெயர்கள், வயதுடன் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதில் இருபத்தி நான்கு பேர் இருபது வயதைக்கூட எட்டவில்லை.  சிலர் குழந்தைகள், மூன்று வயது, நான்கு வயது, ஏழு வயது, ஸ்தூபிக்குப் பின்னாலிருக்கும் அந்தச் சதுர கட்டடத்தின் வாயில் கதவின் சாவி எல்லா  நாளிலும் அந்தக் கிராமத்தில் விட்டு வைக்கப்படுவதில்லை. பூட்டிய கதவுக்கு மேலே ஒரு வெண்டிலேட்டர் இருக்கிறது. வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு, கதவுப் பூட்டின் மீது கால் கட்டை விரலை ஊன்றிக் கொண்டால் உள்ளே எட்டிப் பார்க்கலாம். அறை உள்ளே நான்கு மண் சுவர்கள் நிற்கின்றன. அந்த மண் சுவர்களைச் சுற்றித்தான் கட்டடம். 1968 டிசம்பர்  25 ஆம் தேதி இரவு பத்து மணி வரை அந்த மண் சுவர்கள் ஒரு கூரையைத் தாங்கி நின்றிருந்திருக்கின்றன. கீற்றுக் கூரை. ஜுவாலை நாக்கை நீட்டிக் கொண்டு எரிந்திருக்கிறது. அந்தக்  குடிசையே எரிந்திருக்கிறது. மண்சுவர்ப் பாகம் தவிர. கலவரம் ஓய்ந்து வெளிச்சத்தில் பார்த்தபோது யார் எந்த உடல் என்று தெரியாமல் கோரமாக உருமாறிக் கருகிக் கிடந்திருக்கிறார்கள் அந்த நாற்பத்து நான்கு பேர்.

இது வெண்மணி. கீழத் தஞ்சாவூர், சம்பா அறுவடை முடிந்து கிராமம் மௌனமாக இருக்கிறது. வயல்களில் ஆடுகளைக் காண முடிகிறது. எங்கோ ஓரிரு இடத்தில் பயறு, உளுந்து, தென்னை மரங்கள், சிறு நில உடமைக்காரர்கள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு சீக்கிரமே இரண்டு மழை வரவில்லை என்றால் கஷ்டம்தான் என்கிறார்கள். எங்கோ யாரோ கிளப்பி விட்ட தீ எங்கள் கிராமத்தில் எரிந்து எங்களுக்கு மீளாத பாவத்தையும் பழியையும் கொண்டு வந்து விட்டதே என்கிறார்கள். ‘வரவழியிலே எங்க தெருவைப் பார்த்தீங்களா, அது சொல்லுமே நாங்க எவ்வளவு வசதி படைச்சிருக்கோம்னு?” ஆற்றுப் பாசனத் தண்ணீரை மட்டும் நம்பி ஒரு போக நிலத்தை வைத்துப் பலவிதமாகப் பாடுபடுவதற்கு எங்காவது நூறு ரூபாய் மாதச் சம்பளத்துக்குப் போய்விடுவது மேல் என்கிறார்கள். குத்தகைக்கு விடக் கட்டாது என்று நாங்களே சாகுபடி செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

வெண்மணியில் இரு ஜாதிகள்தான். இந்த நில உடமைக்காரர்கள். இன்னொன்று விவசாயத் தொழிலாளிகள். முன்னவர்கள் ஒரு தெரு. இரண்டாமவர்கள் ஒரு குப்பம்.  தொழிலாளிகள் எல்லாரும் ஒரேயிடத்தில்தான் வசித்திருந்திருக்கிறார்கள். தற்செயலாகத்தான் சிலர் பிரிந்து ஒரு ஃபர்லாங்கு தள்ளி ஒரு புறம்போக்கு நிலத்தில்  குடிசை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால்தான் ஒரு பகுதி குடிசைகள், இந்தப் புறம்போக்கு நிலக்குடிசைகள், அந்த டிசம்பர் 25 இரவு  பிழைத்தன. “ பாவிகளா, அதுகளைத்தான் கொளுத்தி விட்டீங்க, இதுகளையாவது விட்டு விடுங்கடா” என்று  மன்றாடியிருக்கிறார்கள். அந்த இரவால் பாதிக்கப்படாத தொழிலாளியே அந்தக் கிராமத்தில் கிடையாது. அவர்களுடைய பயங்கர இழப்புகளைப் பற்றி அமைதியாகச் சொல்கிறார்கள். வருடத்தில் ஒழுங்காக மூன்று மாதம், நான்கு மாதம்தான் வேலை கிடைக்கும். அப்போது நாள் ஒன்றுக்கு ரூபாய் மூன்று கூலி. இந்தக் கூலியை விட்டால் வேறு வழியில்லை. இந்தக் கூலியை வைத்து ஒரு குடும்பமே ஒரு வருட காலத்தைத் தள்ள வேண்டும். எங்களுக்கென்று கையகல நிலம் ஒதுக்கினால் கால் வயிற்றுக் கஞ்சிக்கு அகும். அதற்கும் வழியில்லையென்றால் இருப்பதற்குச் செத்து மடியலாம் என்று உணர்ச்சி வசப்படாமல்  கூறுகிறார்கள்.

இவர்கள் நிலச் சொந்தக்காரர்களிடம்தான் போக வேண்டியிருக்கிறது. அவர்களும் இவர்களை எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. மாறாத ஏழ்மை தொடர்ந்து இருந்தும் இருவரும் ஒன்று சேர்ந்துதான் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கலைக்க முடியாத பனித்திரை இருவர் நடுவிலும் விழுந்து விட்டது. இருவரும் நிராசை தோன்றத்தான் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அடுத்த பருவ மழைக்கு, மடைத் தண்ணீருக்குக் காத்திருக்கிறார்கள். இந்த வருடம் தொழிலாளிகளுக்கு ஒரு சிறு ஆறுதல். எரிந்து போன இருபத்திரண்டு குடிசைகள் ஹரிஜன நலத்திட்டத்தின் கீழ் எளிய குடியிருப்பு வீடுகளாகக் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் முப்பத்திரண்டு ஓட்டு வீடுகள். ஆனால், நிரந்தரமாக வேறு மாற்றுத் தொழில் தொழிலாளிகளிடையே வளரவில்லை. விவசாயத்தையேதான் நம்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். அநேகமாகப் புறம்போக்கு நிலமே கிடையாது என்கிற நிலை. குத்தகைக்கு வீடும் மிராசுதார்களும் கிடையாது. ஆதலால் கூலிதான். வருடத்தில் நான்கு மாதம் வேலை. அப்போது நாள் ஒன்றுக்கு ரூபாய் மூன்று…

இந்த வீடுகள் இன்னும் சில வாரங்களில் முடியப் பெற்று குடித்தனமும் ஏற்பட்டுவிடும். எந்த வீட்டு வாயிற்படியும் அந்த ஸ்தூபிக்கு நூறடி தள்ளிக் கூட இல்லை. புழுக்கமான இரவில் வீட்டுப் பெரியவர்கள் வாயிற்கதவைத் திறந்து வைப்பார்கள். அந்நேரம் விழித்திருக்கக் கூடிய குழந்தையொன்று வெளியே வந்து எட்டிப் பார்க்கும். ஸ்தூபியைப் பார்த்துவிட்டு ஏதோ கேட்க நினைத்துப் பிறகு கேட்காமலே தூங்கிப் போகும். முன்பொரு நாள் அது கேட்டபோது பெரியவர்கள் மௌனமாக இருந்தார்கள். அந்த மௌனம் அந்தக் குழந்தையின் நெஞ்சத்தையும் பிளப்பதாக இருந்திருக்க வேண்டும்.

(கணையாழி, மே, 1972)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.