டைகர்

அந்த தொழில்நுட்பபூங்கா மிகப்பெரியது. ஆசியாவிலேயே அதுதான் மிகப்பெரியது என்றும் சொன்னார்கள். இந்தியாவின் பெரிய மென்பொருள் அலுவலகங்களில் பலவும் அதிலிருந்தன. நான் முதன்முதலில் அங்கு வேலைக்கு சேர்ந்தபோது, அது இன்னும் கட்டப்பட்டு கொண்டே இருந்தது. பெங்களூரின் வெளிவட்ட நெடுஞ்சாலையின் மேல் பரந்து விரிந்துகொண்டிருந்தது. நாங்கள் நண்பர்களாக முதலில் அங்கு வந்து சேர்ந்தபோது, அதற்கு நேரெதிரில், நெடுஞ்சாலையைக் கடந்ததும் ஒரு விடுதியைப் பதிவுசெய்திருந்தோம்.

எதிரெதிர் இரு வீடுகளாக அவ்விடுதி இருந்தது. அதை நடத்தும் குடும்பமும் அங்குதான் வசித்துக்கொண்டிருந்தது. குடும்பத்தில் ஒரு அம்மா, இரு பெண்கள், ஒரு பையன். முதல் பெண்ணிற்கு திருமணமாகி ஒரு கைகுழந்தை. அவ்வப்போது அங்கு வந்து செல்வாள். அவளது கணவன் அருகிலேயே ஆண்களுக்கான விடுதி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். இரண்டாவது பெண், எங்கள் வயதுதான் இருக்கும். மகன் தான் விடுதியை நிர்வகித்துக்கொண்டிருந்தான். முன்பு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்ததாகவும் இப்பொழுது முழு நேரமாக இந்த வேலைக்கு வந்துவிட்டதாகவும் சொன்னான். அவர்கள் குடும்பமே ஆந்திரத்தில் இருந்து வந்திருந்தது. அந்த வீட்டை அவர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். அந்த நெடுஞ்சாலையை ஒட்டி பல தனித்தனி வீடுகள் இருந்தன. பின்னர், வேறு விடுதி தேட ஆரம்பித்தபோதுதான் தெரிந்துகொண்டோம், அவை எல்லாமே விடுதிகள் தாம் என்று. அவ்விடுதிகள் அனைத்தும் இவர்களின் சொந்தகார குடும்பங்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தன.

சூர்யா தெளிவான ஆங்கிலத்தில், “மூன்று இடங்கள் காலியாக இருக்கின்றன. ஒன்று கீழ் தளத்தில், இரண்டு மேல் தளத்தில். புதிய கட்டில்கள் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்துவிடும். நீங்கள் உங்கள் வசதிப்படி முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று பினாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவளது நண்பர் மூலமாகதான் இந்த விடுதியை நாங்கள் பதிவு செய்திருந்தோம். நானும் ஸ்வாகதாவும் பெட்டிகளுடன் வாசலில் காத்திருந்தோம். இரவு எட்டு மணி போல இருக்கும். இரு வீடுகளும் பேச்சு சத்தங்களும் டிவி மினுமினுப்புகளுமாக விழித்துக்கொண்டிருந்தன. உள்ளே, சூர்யாவின் தங்கை வாணியும் அவள் அம்மாவும் சமைத்துக்கொண்டிருந்தார்கள். எதிர் வீட்டிலிருந்து ஒரு பெண் எங்களைக் கடந்து சென்று, “அக்கா..சாப்பாடு ரெடியா?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

அந்த வீடு, அத்தெருவின் கடைசி முனையில் இருந்தது. அதற்கப்பால், புற்கள் மண்டிய வெற்றிடம். அங்கு ஒரு மாடு மெதுவாக மேய்ந்துகொண்டிருந்தது. அதன் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மின்விளக்குக் கம்பத்தின் கீழ் நாயொன்று தன்னைத்தானே அணைத்தவாறு தூங்கிக்கொண்டிருந்தது. மெதுவாக காற்று சுழன்று மேலெழுந்தது.

நாங்கள் உள்ளே செல்லும்போது, டிவி அணைக்கப்பட்டு சத்தங்களெல்லாம் கதவடைந்த கிசுகிசுப்புகளாக ரீங்கரித்துக்கொண்டிருந்தன. நான் கீழ் தள அறைக்கு சென்றேன். பினாவும் ஸ்வாகதாவும் மேல் தள அறைக்கு. கீழ் தளத்தில் வராந்தாவைக் கடந்ததும் கூடம். அங்கு தான் டிவி, சோஃபா, உணவு மேசை எல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு ஒரு புறம் வாசலை நோக்கி சமையலறை. கூடத்தைத் தாண்டி இரு அறைகள்.

என் அறையில் அப்போதுதான் புதிய கட்டில் போடப்பட்டிருந்தது. சுவரோரமாக போடப்பட்டிருந்த அதை ஒட்டி இன்னொரு கட்டில் இருந்தது. அதற்கு செங்குத்தாக ஜன்னலை ஒட்டி இன்னொரு கட்டில். திரைச்சீலைகள் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஜன்னலிலிருந்து அங்கு மேய்ந்துகொண்டிருந்த மாடு தெரிந்தது. மீதி இரு கட்டில்களிலும் இருவர் இருந்தனர். கட்டில்களைத் தவிர அங்கு ஒரு மர மேஜை, தன்னைத் தானே மறைத்துக்கொண்டு மாறு வேடத்தில் இருப்பதுபோல, பல பொருட்களால் நிரம்பியிருந்தது. சுவருடன் ஒட்டிய ஒரு பெரிய அலமாரி இருந்தது. இவற்றைத் தவிர்த்து, கட்டிலிலிருந்து எழுந்து வெளியே செல்லுமளவு இடம் இருந்தது.

ஜன்னலருகே உட்கார்ந்திருந்த பெண் மாநிறத்தில், கொஞ்சம் பூசினார் போல இருந்தாள். நான் வந்ததும் என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.அவள் பெயர் அனிதா, கேரளத்திலிருந்து வந்திருந்தாள்.என் பக்கத்து கட்டலில் அமர்ந்திருந்த பெண், மிகச் சிவப்பாக ஒடிசலாக பச்சை மிளகாய் போல இருந்தாள். அவளது கூர்மையான முக்கு இரு வளைவுகளாக நெளிந்து இருந்தது. அது அவளது பார்வையை இன்னும் கடுமையாக காட்டியது. நீண்ட அடர்ந்த பின்னல், கால்களில் கொலுசு. அவள் பெயர் ராதிகா, ஆந்திரத்திலிருந்து என்பது சொல்லாமலேயே புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஒரு நிமிட மௌனத்திற்கு பின், அந்த ஒடிசலான பெண் எழுந்து அலமாரியைத் திறந்தாள். ஒரு ஆளுக்கு இரு அடுக்குகள் என்று பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்த அலமாரியில், அவளது பொருட்கள் மூன்று அடுக்குகளில் வழிந்து கொண்டிருந்தன. மிகுந்த யோசனைக்குப் பின், ஒரு அடுக்கின் பாதியை காலி செய்து என்னை உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு சொன்னாள். நான் என் பெட்டியை என் கட்டிலிற்கு கீழே வைத்துவிட்டு, சில பொருட்களை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு, படுக்க வந்தேன். கட்டிலை இடித்தவாறு பாதி மூடியிருந்த கதவை அடைத்துவிட்டு, கட்டிலின் குறுகலான பகுதி வழியாக மேலே ஏறியபோது,

‘மியாஆஆவ்வ்’ என்று என் கட்டிலின் அடியிலிருந்து வந்த பூனை, மூடிய கதவைப் பார்த்து திகைத்து நின்றது. அனிதா, தன் போர்வையைக் களைந்து ஆவேசமாக கதவைத் திறந்து பூனையை வெளியேற்றினாள். ‘வாணீ’, என கூப்பிட்டவாறே வெளியே சென்றாள். நான் கட்டிலின் மீது குதித்ததில் அதிர்ச்சியடைந்து ராதிகாவும் எழுந்துகொண்டாள்.

நான் வெட்கத்தை மறைக்க மெதுவாக கேட்டேன், ‘இங்கு பூனை வளர்க்கிறார்களா?’

‘அப்படியில்லை, அது இங்குதான் இருக்கும். ‘டைகர்’. வாணி அப்படிதான் கூப்பிடுவாள். ரூம்-குள்ள விடக்கூடாது-னு சொல்லியிருக்கோம். மனுஷங்க இருக்கவே இடமில்லையாம்..இதுல பூன வேற..’

கூடத்தில், அனிதாவின் குரல் கேட்டது. ‘எத்தனை தடவ சொல்றது. இந்த பூனையை உள்ள விடாதனு. எங்கே சூரியா?’

‘டைகர்! வெளில போ!..’

‘பூனைக்கு என்ன தெரியும்.. நீங்க தான் போகும்போதும் வரும்போதும் கதவை சாத்தி வச்சுக்கணும்’.

‘நாளைக்கு சூரியா வரட்டும் பேசிக்கறேன். அந்த பூனைய முதல் வேலையா, வெளியே தள்ளணும்!’

என்று சொல்லியவாறே, வேகமாக அறைக்கதவை சாத்தி உள்ளே நுழைந்தாள்.

நான் தூங்க முயற்ச்சி செய்தேன். கட்டில் கொஞ்சம் சின்னதாக இருந்தது. உடலை சுருக்கி திரும்பி படுத்துக்கொண்டேன். நெற்றியில் தேங்கியிருந்த அசதி மெதுவாக வடிய, தூக்கம் வந்தது. நடு இரவு இருக்கும், யாரோ என்னை உலுக்கி எழுப்புவது போன்ற உணர்வு. கண் திறந்ததும், ராதிகா என்னைப் பார்த்து திரும்பி படுத்திருந்தாள். எங்கு படுத்திருக்கிறோம் என்ற நினைவு வந்ததும், அவளை என்னவென்று கேட்பதுபோல பார்த்தேன்.

“எனக்கு இப்போதுதான் மிகுந்த செலவில் மூக்கில் ஆப்பரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. தயவுசெய்து தூங்கும்போது அங்குமிங்கும் திரும்பி என்னைத் தொந்தரவு செய்யாதே. எனக்கு தூக்கம் கலைகிறது..”

நான் தூக்கம் மறந்து கொஞ்ச நேரத்தில், விட்டத்தைப் பார்க்க துவங்கினேன். எனக்கு மேலே ஸ்வாகதாவும் பினாவுமாவது நன்றாக தூங்கிகொண்டிருப்பார்களா என்று நினைத்தவாறே.

cat_city

ஸ்வாகதாவிற்கும் பினாவிற்கும் முதல் தளத்தின் ‘டார்மெற்றி’ போல மாற்றப்பட்டிருந்த கூடத்தில் இரு கட்டில்கள் தந்திருந்தார்கள். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த கூடத்திற்கு நடுவில் ஒரு பெரிய திரை தொங்கிக்கொண்டிருந்தது. திரைக்கு வலதுபக்கம் ஜன்னலை ஒட்டி நான்கு கட்டில்களும், இடது பக்கம் இரு கட்டில்களும், மேல் தளத்திற்கு செல்லும் படிகட்டுகளும் இருந்தன. ஒவ்வொரு முறை அவர்களைப் பார்க்க மாடிக்கு செல்லும்போதும், மருத்துவமனைக்குள் நுழைவது போல இருக்கும்.

காலையில் ஸ்வாகதாவும் பினாவும் கிளம்பி கீழே வந்திருந்தார்கள். ஸ்வாகதா மெல்ல என் கதவைத் திறக்க, ராதிகாவும் என்னோடு முழித்துவிட்டாள். ‘ம்ம்ச்ச்ச்ச..’ என அவள் மீண்டும் போர்வையை முகத்தின் மீது இழுத்துக்கொள்ள, நான் மெதுவாக, கட்டிலிருந்து ஊர்ந்து வெளியேறினேன். நான் கிளம்பி தயாரானதும், மூன்று பேரும் கிளம்பினோம். நாங்கள் வராந்தா வழியே செல்ல, அந்த பூனை மெதுவாக வளைந்து நெளிந்து உள்ளே வந்துகொண்டிருந்தது. அந்த வராந்தாவின் ஓரமாக போடபட்டிருந்த திவானில் வாணி தூங்கிக்கொண்டிருந்தாள்.

ஸ்வாகதா, அந்த பூனையைப் பார்த்து, ‘வெர்ரீ க்யூஉட் இல்ல’, என்று சொன்னபோது பதறியவளாய் மீண்டும் ஓடிச்சென்று அறைக்கதவை சாத்திவிட்டு வந்தேன்.

வானம் நிறுத்தாமல் தூறிக்கொண்டே இருந்தது. பேச்சும் நடையுமாக அலுவலகத்திற்கு சென்று சேர்ந்தோம். ஒரு வாரம் இருக்கும், ஸ்வாகதா தான் முதலில் ஆரம்பித்தாள்.

“நாம இன்னொரு ‘பிஜி’ பார்க்கலாமா? ஒரு வேள பிராஜெக்ட் இங்கயே கிடச்சுட்டா?”

ஆச்சரியமாக, பினாவின் கண்களிலும் ஒரு ஆமோதிப்பு தெரிந்தது. நான் எனக்கு மட்டும்தான் இந்த இடம் பிடிக்கவில்லை என நினைத்திருந்தேன். அவர்களின் கூடத்தில் எப்போதும் பேச்சும் சிரிப்புமாக இருக்கும். அவர்கள் வெகு சீக்கிரத்தில் அங்குள்ளவர்களை நட்பாக்கிக் கொண்டிருந்தனர்.

“ஏன்? என்ன ஆச்சு?”

“இல்ல..நேத்து அந்த வாணி என்ன தெரியுமா சொன்னா…ஆளுக்கு ரெண்டு சப்பாத்திதானாம். நானே நாலு நாலு சாப்படறேனாம்.”

ஸ்வாகதா முடிக்க, பினா தொடர்ந்தாள். “இங்க டி.வி கூட பார்க்க விட மாட்ற்றாய்ங்க. ஏழு-லேந்து எட்டு வரைக்கு தெலுங்கு சீரியல், அது முடிஞ்சு எட்டுலேந்து பத்து வரைக்கு ஹிந்தி..அப்புறம் நாமல்லாம் எப்போ பாக்கறது?”

“உன் ரூம்-ல ஒன்னு இருக்கே..தேவாங்கு மாதிரி..எப்போதும் அது வந்து அந்த சோஃபாவ பிடிச்சிகுது…என்ன அவங்க பேர் தான் அதுல எழுதி வச்சிருக்காங்களா?’

ராதிகாவின் மேல், எனக்கு இதைவிட அதிகமான வருத்தங்கள் இருந்தன. தொழில் நுட்ப பூங்காவின் கடைசி கோடியிலிருந்த உணவகத்திலிருந்து இதைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தோம்.

மாலை ஏழு மணியிலிருந்து பெண்கள் கூடத்தில் கூட தொடங்கினார்கள். அங்கு இருக்கும் சீனியர்கள் சோஃபாவிலும் புதியவர்கள் நின்றுகொண்டும் சாப்பிட்டார்கள். அங்கு புதிதாக வந்த ஒரு பெண் தன்னுடன் மடக்கி வைக்கும் நாற்காலி ஒன்றையும் கையோடு தூக்கிக்கொண்டு வந்தது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு முதல் நாள், அங்கு சோஃபா-வைப் பற்றிய சண்டை ஒன்று நடந்திருக்க வேண்டும். நாங்கள் தட்டில் உணவை வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே படிகளில் வந்து அமர்ந்தோம்.

வாணி, சமயலறை ஜன்னலிலிருந்து ‘டைகர்!..டைகர்..!” என்று கத்தினாள். சட்டென்று கீழே இருட்டிலிருந்து ஒரு ஜந்து பறந்து சென்றது. வாணியின் பூனைதான். ஸ்வாகதா பயத்தில் தட்டைக் கீழே போட்டுவிட்டாள். மீண்டும் போய் எடுக்க மனமில்லாது, அப்படியே மேலே சென்றாள். நான் என் அறைக்கு செல்லும்போது, கூடத்தில், அமைதியாக சோஃபாவின் அடியில் அனிதா அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் கீழே பூனை, தன் பாலை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது.

அலுவலகத்தில், மற்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தோம். கிட்டதட்ட எல்லோருமே எங்களைப் போன்ற விடுதிகளில்தான் இருந்தார்கள். இத்தனைக் கச்சிதமான அலங்காரங்களுடன் எல்லோரும் ஒவ்வொரு பொந்துகளிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. “தூங்கதானே பிஜி-க்கு போற..வேற என்ன வேண்டும்?’ என்றார்கள். ஆண்கள் விடுதிகள் இதை விட பல மடங்கு மோசமான நிலைமை. அவர்களுக்கு அலுவலகத்திலேயே தூங்கி எழுவதென்றாலும் சம்மதம்தான். எங்கள் வகுப்பிலேயே விடுதியைப் பற்றிய வருத்தங்கள் இல்லாத இருந்த ஒரே நபர், வித்யா. நாங்கள் அனைவரும் அலுவலகத்திற்கு மிக அருகிலே தங்கியிருந்தோம். அவள் மட்டும்தான் அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் ஒரு விடுதியில் இருந்தாள். ஏன் என்று கேட்டபோது, அங்குதான் அவளுக்கு தனியறை கிடைத்ததாக சொன்னாள். ஒரு நாள் அவளது விடுதியையும் பார்த்துவிட வேண்டும் என்று சென்றோம். மூன்றாவது மாடியில் நான்கு சிறிய வீடுகள், ‘ருபிக்’ க்யூப் போல. அதில் கடைசி வீடு. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் இருந்தார்கள். அதன் சமையலறை மேடையில் வித்யாவின் படுக்கை. அதற்கு கீழ் கேஸ் சிலிண்டர் வைக்கும் இடத்தில் அவளது அலமாரி. சமயலறையை ஒட்டிய ஸ்டோர் ரூம், அட்டாசெடு பாத்ரூமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கே இலவச ‘வை-ஃபை’ இருப்பதாகவும், தினமும் சாண்டுவிச்சுகள் கொடுப்பதாகவும், தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் வித்யா சொன்னாள். அங்கு இன்னும் கூடம் மட்டும்தான் ஆளில்லாது இருந்தது. அங்கிருந்த டி.வி-யை எடுத்துவிட்டு எங்கள் மூவருக்கும் கட்டில்கள் போட்டுத்தருவதாக அதன் உரிமையாளர் பெண்மணி சொன்னாள். டி.வி-க்கு பதிலாக நாங்கள் அங்கு குடிபெயர்வது அத்தனை சரியாக படவில்லை.

அதன்பின், ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு விடுதியாக தேடிக்கொண்டிருந்தோம்.ராதிகா, எங்கள் விடுதி வேட்டையில் ஆர்வமாக இருந்தாள். அவள் முன்பு நகரத்திற்குள் இருந்தபோது தங்கியிருந்த விடுதியைப் பற்றி எப்போதும் பெருமூச்சுடன் கூறுவாள். அங்கிருந்த ஜன்னல் சீலையிலிருந்து, மனிதர்கள், உணவு என்று எல்லாவற்றைப் பற்றியும்.

ஒரு முறை நண்பரின் நண்பர் மூலம் கிடைத்த விடுதி முகவரியைத் தேடி சென்றோம். அங்கு ஒரு பெரிய ‘ஜிம்’ இருந்தது. அதைத் தவிர அப்பகுதியில் எதுவுமே இல்லை. உள்ளிருந்து ஒருவர் வந்து, “பிஜி பார்க்க வந்தீங்களா?” என்று கேட்டார். நாங்கள் ஆச்சரியமாக, “ஆமாம்” என்றோம். அது மூன்று மாடிகள் கொண்ட கட்டிடம். கீழ் தளத்தில் “ஜிம்” இருந்தது. முதல் தளத்தில் ஒரு நடன ஸ்டூடியோவும் இன்னொரு பக்கம் மூன்று அறைகளும் இருந்தது. பொதுவான ஒரு சமையலறை. ஸ்டூடியொவின் வாயிலில் இருந்த அறிவிப்பு பலகையில் “விடுதி வாடகைக்கு. சேருபவர்களுக்கு ஒரு வருட “ஜிம்” சந்தா இலவசம்” என்றிருந்தது.

ஸ்வாகதா, தன் சொந்த ஊரான கல்கத்தாவிற்கே மாற்றம் வாங்கிக்கொண்டு போக முடிவு செய்தாள். பினாவும் நானும், வேறு அலுவலகக் கிளையில் பிராஜெக்ட் கிடைப்பதற்காக வேண்டிக்கொண்டோம். அங்கிருந்து எப்படியும் போகப்போறோம் என்று முடிவானதும், மனம் பல மடங்கு அமைதியானது. எங்களை அறியாமலே நாங்கள் சீனியர் ஆகிக்கொண்டிருந்தோம்.ஸ்வாகதா, தன் அறையிலேயே இன்னொரு வங்காளி இருப்பதைத் தெரிந்துகொண்டாள். பினா, அன்று ரிமோட்டை எடுத்து சானல்களை மாற்றும்போது யாரும் எதுவும் சொல்லவில்லை. அவரவர் மற்ற வேலைகளைப் பார்க்க சென்றார்கள்.

அன்று பகல் பொழுது, விடுதியில் நாங்கள் மூவரும்தான் இருந்தோம்.டைகரும் எங்களுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தது. அனிதா, அறையில்தான் தூங்கிக்கொண்டிருந்தாள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் எழுந்துவந்த போது, அவளுக்கும் சோஃபாவில் இடம் கொடுத்தோம். அனிதா, டைகரைக் கண்டுகொள்ளவில்லை. நான் ஒருமுறை என் அறையைப் பார்த்துக்கொண்டேன். அது அடைக்கப்பட்டுதான் இருந்தது.

வாணி எழுந்துவந்து,

“அக்கா, பால் ஏதாவது கலந்து தரவா?” என்று கேட்டபோது எங்களால் நம்பவே முடியவில்லை. வாணி இப்படி யாரையும் உபசரித்து நாங்கள் பார்த்ததேயில்லை.

“பால் மட்டும் கொடு.என்னிடம் ஹார்லிக்ஸ் இருக்கு..” என்று அனிதா சொன்னாள்.

“அப்பறம், டாக்டர் என்ன சொன்னார்? தேதி சொல்லிட்டாரா? வீட்டிலிருந்து எப்போ வந்து கூப்பிட்டு போவாங்க?”, என்று சொன்ன போதுதான், நான் மீண்டும் அனிதாவை ஒரு முறை பார்த்தேன்.நான் அதுவரை அனிதாவின் துறுத்திய வயிரை விசேஷமாக கவனித்ததே இல்லை. அவளாது கணவன் கேரளத்தில் இருப்பதாகவும் இங்கு வேலை கிடைத்ததும் வருவாரென்றும் சொல்லியிருந்தாள்.

அன்றிரவு சாப்பிட வெளியே செல்லும்போது, வராந்தாவில் வாணியின் படுக்கைமீது டைகர் தூங்கிக்கொண்டிருந்தது.

நாங்கள் படியிறங்கி கீழே வந்தோம்,

பினா, ‘இந்த இடத்தவிட்டு போகும்போதுதான் கொஞ்சம் சோகமா இருக்கில்ல…”

“என்னது, சோகமா?!”

“இல்ல, அந்த ராஜஸ்ரீ அக்கா கூட நல்லவங்களாதான் இருக்காங்க தெரியுமா..?”

“அதுக்கு?”

ஸ்வாகதா, “நானும் உங்க கூட பெங்களூரிலயே இருந்திடறேன்…”

பினா, “ஏ..ஆமா..சூப்பர்..” என்று துள்ளி எழுந்தாள்.

அந்த வாரம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. ஒரு நாள், ராதிகா எல்லோருக்கும் இனிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் அந்த ஊருக்கும் விடுதிக்கும் வந்து சேர்ந்து ஆறு வருடங்களானதிற்காக. வீட்டில் செய்யப்பட்ட கார முறுக்குகளும் இன்னும் பல பலகாரங்களுமாக ஒரு பெரிய பை கொண்டுவந்திருந்தாள்.வாணி இரண்டு இனிப்புகளாக எடுத்துக்கொண்டு, ஒன்றை தன் வாயில் போட்டுக்கொண்டாள். இன்னொன்றை டைகருக்கென சமயலறை ஜன்னல் வழியாக போட்டாள். நாங்கள் அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, வெளியே போனில் பேசிக்கொண்டிருந்த ஸ்வாகதா, அலறியபடி உள்ளே வந்தாள்.

ஒரு கையில் போனும், இன்னொரு கையில் ரத்தமுமாக. ‘கடிச்சிடுச்சு…டைகர் என்ன கடிச்சிடுச்சி!’. கையை எடுத்துப்பார்த்தால், ஆம், அவள் சுட்டு விரலை அந்த பூனை நிஜமாகவே கடித்துவிட்டிருந்தது. அவசரமாக பஞ்சையும் மருந்தையும் வைத்து, டாக்டரிடம் செல்ல வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்திற்கிடையே, ஒரு வழியாக டாக்டரிடம் கொண்டு சென்றார்கள்.

மறு நாள் காலையிலிருந்து ‘டைகரை’ பார்க்க முடியவில்லை. அதை வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக பேசிக்கொண்டார்கள்.

எங்கள் பயிற்ச்சிக் காலம், அந்த மாதத்துடன் முடிந்தது. பிராஜெக்டும் அதே இடத்தில்தான் என்று சொல்லிவிட்டார்கள். ஸ்வாகதாவின் கல்கத்தா மாற்றம் பற்றி எந்த பதிலும் வரவில்லை. அவளும் அதை மறந்திருந்தாள். நாங்கள் அந்த விடுதிக்கு வந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. அனிதா பிரசவத்திற்காக ஊருக்கு கிளம்பிச் சென்றாள். அவள் திரும்பி வருவது வரை, அவள் கட்டிலுக்கு இன்னொரு பெண் புதியதாக வந்தாள். ராதிகாவிற்கு நான் விடுதி மாறாததில் ஒரு நிம்மதி இருந்தது. புதிய மனிதர்கள் சேர சேர விடுதி இன்னும் குறுகிக்கொண்டே இருப்பதுபோல இருந்தது.

அன்றிரவு தூக்கம் வராதபோது, அசையாமல் விழித்திருந்தேன். ஜன்னல் வழியாக காற்று ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அவ்விரவு உறங்காமல் இன்னும் எத்தனைப் பேர் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். இரவையே வெட்டி செதுக்குவதுபோல, தொழில் நுட்ப பூங்கா அப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும். மனிதர்கள் எறும்புகள் போல அதன் உயரத்திலிருந்து கீழும் மேலும் ஊர்ந்துகொண்டேயிருப்பார்கள். ராட்சஸ இயந்திரங்கள் நகர்ந்துகொண்டிருக்கும். அந்த பூங்காவின் வாசலில் சிமெண்டால் செதுக்கப்பட்ட மரம் நினைவிற்கு வந்தது. அதுவும் ஒரு பூங்காதான் என்பதற்காக அது நின்றுகொண்டிருந்தது.

மெதுவாக புரண்டு படுத்தபோது, என் கால்களுக்கடியிலிருந்து, இரு விழிகள், இரு தீப்பந்தங்கள் போல தெரிந்தன. இருட்டிலிருந்து ஒரு கருப்பு பூனை மெல்ல நடந்துவந்தது. தன் நீண்ட வாலை சுழற்றிக் கொண்டே என்னை நெருங்கிவந்து, உடலெல்லாம் தகிக்கும் வண்ணத்தில் உறுமியது. நான் வியர்த்து எழுந்தபோது, நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பெரும் இரைச்சலுடன் கடந்து சென்றிருந்தது.

‘டைகர்’!

‘டைகர் இப்போது எங்கு போயிருக்கும்?’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.