அமானுஷ்யமும் அசோகமித்திரனும்

தமிழில் நவீனத்துவத்தை வரையறை செய்தால், விமர்சகர்கள் அதனை வீழ்ச்சியின் கலைச் சித்தரிப்பு என வரையறை செய்வர். இந்த வீழ்ச்சியையும் இருத்தலியல் துயரையும் தமிழில் வலிமையாக முன்வைத்த இரு ami_tn copyபெரும் படைப்பாளிகள் சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும் ஆவார்கள். இருவரும் காலத்தையும், இருத்தலையும், மரணத்தையும், வீழ்ச்சியையும் பரிசீலிக்கும் முறை அடிப்படையில் அவர்கள் வாழ்வின் இயங்குதளத்திலிருந்தே உருவானது.

சுரா அனுதினமும் மிக அருகே காத்திருக்கும் மரணத்துடன், தனது தினங்களை பால்யத்தில் கழித்தவர், பின்னாளில் தமிழை விருப்பப் பாடமாக கற்றவர் . சுராவின் மொழிநடை செறிவு என்பதின் அடிப்படையும், அவரது படைப்புகளின் முரண் நிலையாக காலம் அமைவதின் காரணமும் சுராவின் இத்தகு வாழ்வுச் சூழலே.

அ.மி இளமையில் வறுமை, புலம்பெயர்வு, பயணங்கள், தான் சார்ந்த நிலத்தின் அரசியல் – வரலாற்று வீழ்ச்சி இவற்றினிடையே உருவாகி வந்தவர் . இருப்பினும் அ.மி ,”வீழ்ச்சியை” கலையாக்கும் எத்தனத்தில் ஒரு முக்கியக் கண்ணி வாயிலாக சுராவினின்று வேறுபடுகிறார் அல்லது மேம்படுகிறார் . அந்தக் கண்ணியை ”ஆன்மீகத் தவிப்பு” என வரையறை செய்யலாம் . அ/மி தனது ஆத்மீக தவிப்பில் கனிந்த தினங்களை அவரது பேட்டிகளில் கூட ஓரிரு சொல்லில் கடந்து விடுகிறார். அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால் அந்தத் தத்தளிப்பே தமிழின் இணையற்ற சாதனையான அ.மியின் ‘இன்னும் சில நாட்கள்’ எனும் புனைவின் ஊற்றுமுகம்.

மனிதனுக்கு மிக அருகே இருந்து அவனை அலைக்கழிக்கும் அமானுஷ்யம் எது? அவனது ஆழ்மனம்தான்.         அ.மி அவரது துவக்க காலக் கதையான ”ஒரு நாடகத்தின் முடிவில்” கதையிலேயே இந்த அம்சத்தைக் கையாண்டு கலை வெற்றி அடைந்தார். ஒரு படைப்பாளி தனது புனைவில் உருவாகி வரும் பாத்திரங்கள் வழியே, நிகர் வாழ்வுக்கான சில கண்டடைதல்களை அடைவதை தால்ஸ்தாயின் ‘அன்னா கரினீனாவில்’ தொடங்கி பலவற்றை உதாரணமாக சொல்லலாம். இதைத்தான் மேல்நிலையாக்கம் என்கிறோம். ஆனால் இதை அப்படியே புரட்டிப் போட்டு, இதன் முரணாக ஒரு புனைவின் பாத்திரமே அப்புனைவின் படைப்பாளியைக் கொல்லும் சித்திரத்தின் வழியே, படைப்புத்திறன் எனும் நிலையையே, அந்த தனித்துவத்தையே, அமானுஷ்யமான ஒன்றாக முன்வைத்தார் அ.மி. இந்த தனித்தன்மையால் படைப்புக்கும் படைப்பாளிக்கும் உண்டான முரணியக்கக் கதைகளில், இக்கதை தனி இடம் வகிக்கிறது.

அ.மியின் சமீபத்திய கதையான ”வைரம்” கலை ஒருமை கூடாத ஆக்கம் போல தோற்றம் அளித்தாலும், அக்கதை கவனம் கொள்ளும் மையம் ஆழமானது. நாயகனின் அக்கா திருமணத்திற்கு வரதட்சிணையாக வைரம் கோரப்படுகிறது. நாயகனுக்கு ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் உயர்தரமான வைரம் ஒன்றினை மிகக்குறைந்த விலைக்கு த் தருகிறார். கூடவே ‘இதை வைத்திருங்கள். சரி வந்தால் விலை கொடுங்கள். இல்லாவிட்டால் திருப்பித் தந்துவிடுங்கள்’ என்றும் சொல்கிறார். வைரம் வந்த பிறகு நாயகனின் குடும்பம் தொடர்ந்து சரிவைச் சந்திக்கறது. வைரத்தின் ‘ராசி’ அவனை அலைக்கழிக்கிறது. அந்த வைரத்தை ஏற்கனவே வைத்திருந்தவர் குடும்பத்தில், இந்த வைரம் நுழைந்த பிறகு பிளேக் நோயால் மரணங்கள் நிகழ்ந்த கதைகளை அறிகிறான். அல்லல்பட்டு மீண்டும் அந்த வைரத்தை உரியவர் வசம் ஒப்படைக்க வருகிறான். வந்த இடத்தில் அவர் ப்ளேக்கில் மரணம் எய்திய செய்தி கிடைக்கிறது. கையளிக்கமுடியாத அந்த நாயகன் கை வைரம் எது? பேராசையில் கண்கள் மின்ன அள்ளிப் பற்றி வைத்திருக்கவும் இயலாமல், துறக்கவும் வகையறியாமல் மனிதன் சுமந்தலையும் அந்த வைரம் எது? ’சரிவரலன்னா கொடுத்துடுங்க’ எனும் அந்தக் குரலின் கருணை அதன்பின்னுள்ள வலி இச்சைகளால் அலைக்கழிந்து, மரணத்தில் அறுபடும் அற்ப வாழ்வின் சித்திரம் ஒன்றினை அமி மீண்டும் ஒருமுறை தன் உணர்வுகள் கலக்காத மொழியால் வரைந்து காட்டுகிறார்.

வேறொரு கதையில் நாயகன் பல வருடம் கழிந்து கைவிடப்பட்டுக் கொண்டிருக்கும் தான் பிறந்த கிராமத்திற்கு வருகிறான். தனது இளமையில் தவறிப்போன தந்தையின் நினைவுகளில் ஆழ்கிறான். இரவில் ஒளி குறைந்த சூழலில், மனிதர்கள் விலகிக்கொண்டிருக்கும் அக்கிராமமே கிலி ஏற்படுத்தும் தோற்றம் அளிக்கிறது. மறுநாள் காலை ஊருக்கு கிளம்புவதற்குள் நேரமின்மையால், அந்த கிராமத்தின் கோவிலை தந்தையின் நினைவுகள் உந்தித்தள்ள காணச் செல்கிறான். மின்சாரம் குறைவு, கூட்டம் இல்லை, இருள் நிறைந்த பிரகாரங்கள். அதில் நடக்கையில் அப்ரதட்சணமாக எதிரில் ஒருவர் வருவதைக் காண்கிறான். அப்பா …… கோவில் தெய்வங்கள் உறையும் இடம் எனும் சொல்வழக்கை திருப்பிப்போட்டு வாசகனை உறையவைக்கும் கதை. மீண்டும் வாசிக்க ஏதுமற்ற நேரடியான, எளிய, வலுவான, திகில் கதை, அமியின் ‘பேய்க்கதை’.

metaphysics

இந்த அமானுஷ்ய வரிசையில் இணையற்ற இரு கதைகள் ”பிரயாணம்” மற்றும் ”இன்னும் சில நாட்கள்” ஆகிய கதைகள். பிரயாணம் குற்றுயிராய்க் கிடக்கும் தனது குருவை அவரது சமாதி நிகழ வேண்டிய இடத்திற்கு சுமந்து செல்லும் சீடன், அப்பயணத்தில் ‘கண்டடையும்’ தரிசனம் குறித்த கதை. சீடன் மலைக்கு அந்தப் பக்கம் அடிவாரத்தில் இருக்கும் ஹரிராம்பூர் எனும் நிலத்திற்கு அவனது குரு அவனுக்கிட்ட கட்டளைப்படி அவரை ஒரு பலகைப் படுக்கையில் படுக்கவைத்து சுமந்து செல்கிறான். குரு அவர் அடங்க வேண்டிய இடத்தையும், அதற்கான முறையையும் சீடனுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டார். அந்த சீடனின் பல்லாண்டு கால முயற்சிக்கு பிறகு, குரு அவனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார். அவர் இறப்பதற்குள் அவரை அவரது நிலம் சென்று சேர்த்துவிடும் கடமையுடன் சீடன் பயணிக்கிறான். மலையேற்றம், குளிர், அனைத்திலுமிருந்து குருவைக் காப்பாற்றி சுமந்து செல்பவன், ஒரு தருணத்தில் குருவின் மார்பில் காதுவைத்து கேட்டு, இதய துடிப்பு இல்லாமை கேட்டு அவர் இறந்துபோனார் என அறிந்து கவலையில் வீழ்கிறான். ஐம்புலனையும் அடக்கியாண்ட குருவால் இறுதிக் கணங்களில் தனது மல மூத்திரத்தைக்கூட கட்டுப்படுத்த முடியாததைக் காண்கிறான். கழிந்த காலங்கள், இனி அடுத்த குருவைக் கண்டு கொள்ள நேரும் இடர் எனப் பலதை எண்ணித் தளர்கிறான். எதிர்பாராத் தருணத்தில், பின் தொடரும் ஓநாய்களால் தாக்கப்படுகிறான். மயங்கி விழுந்தவன், தெளிந்ததும் பதறி குரு கிடக்கும் இடம் தேடி ஓடுகிறான், குருவின் குடலும், முகமும் மிருகங்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது, அவரது வலது கரத்தில் எஞ்சி இருக்கிறது அவரால் தனியாகப் பிய்த்து எடுக்கப்பட்ட ஓநாயின் கால் ஒன்று.

”இன்னும் சில நாட்கள்” கதையின் மையக் கதாபாத்திரங்கள் இருவர். ஒருவர் வைத்தியலிங்கம், மற்றவர் அவரது வளர்ப்பு மகன் சாமிநாதன். வைத்தியலிங்கம் கிட்டத்தட்ட ஊராரால் கோட்டி என நினைக்கத்தக்க வகையில் வாழ்பவர். இரு மகன்கள். ஜோதிடமும், சித்தவைத்தியமும் அறிந்தவர். கோவில் ஒன்றில் சாமிநாதனைக் கண்டு அவனை தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறார். தான் கற்ற அனைத்தையும் அவனுக்கு சொல்லித் தருகிறார். ஜோதிட அடிப்படையில் சாமிநாதன் அடையவேண்டிய நிலையை, அதற்கான வழிவகைகளை அவனுக்கு விளக்குகிறார். வைத்தியலிங்கத்தை பாம்பு கடிக்க, அவர் தனக்கே சுயமாக வைத்தியம் பார்த்துக் கொள்கிறார், பலனில்லாமல் மரண நிலையை எட்டும் முன் சாமிநாதனை அழைத்து, தனது இரு மகன்களுக்கும் அவன் செய்யவேண்டியது, சாமிநாதன் அடைய வேண்டிய இலக்கின் காலம் அனைத்தையும் சொல்லிவிட்டு இறக்கிறார். சாமிநாதன் தனக்கென ஓர் தனி இடம் தேர்ந்தெடுத்து தவத்தில் ஆழ்கிறான். தனது குரு வைத்தியலிங்கம் சொல்லித்தந்த சில ரசவாதவிளைவுகள் வழியே இரும்பு ஒன்றினை தங்கமாக மாற்றுகிறான். குருவின் ஆணைப்படி அதை அவரது மகன்கள் வசம் பிரித்துத் தந்துவிடுகிறான். மகன்களுக்கு அவன் கண்கண்ட சாமி ஆகிறான். தவத்தில் காலங்கள் உருண்டோட, அவனது குரு கணித்த 7 வருடமும் கடக்க, சாமிநாதனுக்குள் எதுவுமே நிகழவில்லை, காலவிரயம், மனச்சிதைவு, வாழ்வே விழல் நீர் எனச் சோர்வான கணம் ஒன்றினில் சாமிநாதன் தற்கொலை செய்து கொள்கிறான். இடையில் சாமிநாதனின் ஜாதகம் ஒருவர் வசம் கிடைக்கிறத்து. அது காண அரிதான சித்தன் ஜாதகம் என அறிகிறான். குறிப்பிட்ட வருடங்கள் அந்த ஜாதகர் தவம் இயற்றினால், அவன் பல நிலைகளை எய்துவான் என ஜாதகம் சொல்கிறது. சந்தேக நிவர்த்திக்காக அவர் மீண்டும் அந்த ஜாதகத்தைக் கணிக்க, தவத்தின் வருடம் மட்டும் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறது. அது 7 வருடம் அல்ல 11 வருடம். அந்த ஜாதகத்துடன் அவன் சாமிநாதனை தேடி அவனைக் கண்டடைகிறான். சாமிநாதன் நீர்நிலை ஒன்றினில் பிணமாக மிதந்து கொண்டிருக்கிறான்.

இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்துவமான கதை கிணறு. ‘கிணறு’ கதை நாயகன் தனது கல்லூரி விழாவில் பரிசை வெல்கிறான். பரிசு ராஜஸ்தானில் நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்ட புராதான கோட்டை ஒன்றில் இருநாள் தங்கல். வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்படுகிறான். கிளம்பும்போது பாட்டி சொல்கிறாள் ”தம்பி கடல்தாண்டிப்போற ஜாக்ரதையா இரு. உனக்கு தண்ணில கண்டம் வேற இருக்கு.” நாயகன் ”பாட்டி நான் கடல்லாம் தாண்டல. இங்க இருக்குற ராஜஸ்தான் போறேன். அது பாலைவனம். வரட்டுமா,” என்று புன்னகைத்துவிட்டு புறப்படுகிறான்.

ராஜஸ்தான் கோட்டை. பார்க்க மகாராஜாக்கள் போலத் தோற்றம் தரும் பணியாளர்கள், குனிந்து சலாம் போட்டு நாயகனை வரவேற்கிறார்கள். அங்கு அவன் தங்கவைக்கப்பட்டு, அவனது நிகழ்ச்சி நிரல், கோட்டைக்குள் நிகழ்வுகள் நடைபெறும் ஒழுங்கு அனைத்தும் அவனுக்கு விளக்கப்படுகிறது. முதல்நாள் கோட்டையைச் சுற்றிப்பார்க்கிறான். தலையைத் தட்டும் விதானம் . புறாக்கூண்டுகள் போல குறுகிய அறைகள். எங்கெங்கோ கொண்டுசெல்லும் படிகள், புதிர்வழிப் பாதைகள். நாயகன் நினைத்துக் கொள்கிறான் ”இதைக் கட்டிய ராஜாவுக்கே இதன் அமைப்பு குழப்பும். ஆசை ராணியின் அறைக்குக் கிளம்பி, அவர் ஆசை இல்லாத ராணியின் அறைக்கதவை தட்ட நேர்ந்திருக்கும்.” மீண்டு தன் அறைக்கு திரும்புகிறான். குளிர்பதனம் செய்யப்பட்ட குறுகிய அறை. மூலை ஒன்றினில் ஆணி அறைந்து சாத்தப்பட்ட புராதான ஜன்னல் ஒன்று. விசாரிக்கையில் அதன்பின் ஒரு கிணறு இருப்பதும். பல நூறு ஆண்டுகளுக்குமுன் அதில் ஒரு ராணி விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்றொரு கதை உலவுவதும் தெரிகிறது. மறுநாள் இரவு குறுகுறுப்பு தாளாமல் நாயகன் மிகுந்த பிரயாசைப்பட்டு அந்தக் கதவை முறிக்கிறான் . எக்கி, எட்டி உள்ளே பார்க்கிறான். அடி ஆழம் தெரியாத குறுகிய ஆழமான கிணறு. எங்கிருந்தோ பிரதிபலிப்பதுபோல இன்னும் அடி ஆழத்தில் மிதக்கும் நிலா. நிலாவா …. இல்லை இல்லை எதோ ஒரு முகம். பெண் முகம் அரச களை. இல்லை இது என் ..என் … நாயகன் தலை குப்புற கிணற்றுக்குள் விழுகிறான். .

ஏதோ ஒரு சிற்றூரில் இருக்கும் ஒருவன், எச்சரிக்கையைப் புறக்கணித்து, விமானத்தில் பறந்து, பாலைவனம் அடைந்து, கோட்டைக்குள் நுழைந்து, அதற்குள் இருக்கும் குறுகிய அறைக்கு வந்து, சாத்தப்பட்ட ஜன்னலை உடைத்து ….ஒரு கிணறு, அமானுட ஆற்றலின் வாயாக மாறி , ஒரு மனிதனை உறிஞ்சி இழுக்கும் சித்திரம். பீதி கிளப்பும் கதை. யானையின் மூச்சுக் காற்றில், வால் குழைத்து பம்மும் நாய்போல, நாமறியாத இருண்மையில் இருந்து முன் உணர்ந்து நம்மை காக்கப் போராடும் நமது உள்ளுணர்வின் தவிப்பே, இங்கு ஜோதிடம் எனும் குறியீடு. நமக்குள் உறையும் அமானுடம் மீதான பீதியைத் தொட்டு எழுப்பும் ஒரு சொல்லைக் கூட இங்கு அ.மி பயன்படுத்தவில்லை. கதை முடிவில் நாம் வாழும் இந்த யதார்த்தத் தளத்தை, இருண்மை எனும் பேராற்றல் விளையாட விரித்த சதுரங்கப் பலகையாகவும், நாம் அனைவரும் அமானுடத்தின் கைப்பாவைகளாகவும் அடிவயிற்றுப் பீதியுடன் உணர்கிறோம். நமது இச்சைகள், அலட்சியங்கள், மீறல்கள், குறுகுறுப்புகள், வெற்றிகள், பயணங்கள் வழி நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்? நமக்கே நமக்கான சொந்தக் கிணறு நோக்கியா? அக்கோட்டை வாசலில் மகாராஜாவின் உடையில் பணிவுடன் வரவேற்பவன் யார்? இதுவரை உலகில் சொல்லப்பட்ட, எழுதப்பட்ட அமானுஷ்யக் கதைகளில் மகத்தான ஒரு கதை இது .

’வைரம்’, மற்றும் ’கிணறு’ கதைகள் வழியே அ.மி வலிமையாக முன்வைப்பது, மனிதன் அவனைப் படைத்த இயற்கையின் பேராற்றல்களால் கைவிடப்பட்டவன் எனும் நவீனத்துவக் கருத்தியலின் விரிவான மற்றொரு கோணம். அ.மி படைப்புகள் சொல்கின்றன- மனிதன் இயற்கையால் கைவிடப்பட்டவனல்ல, அவனால் ஒருபோதும் அறிய இயலா அமானுஷ்ய ஆற்றல் ஒன்றின் கயிறால், அந்த ஆற்றலின் விளையாட்டுப் பாவையாக, தளை இடப்பட்டவன். நவீனத்துவத்திற்கு அ.மியின் காத்திரமான பங்களிப்பு ’பிரயாணம்’ மற்றும் ’இன்னும் சில நாட்கள்’ கதைகள். இந்தியாவின், அதன் பண்பாட்டின் ஆணிவேர் அதன் ஆன்மீகமான தேடல் என வரையறை செய்தால், அதை நவீன இலக்கியத்தில் கையாண்ட முக்கிய படைப்பாளி அ.மி. பெரும்பாலான நவீனத்துவர்கள் உதாசீனம் செய்து கடந்து செல்லும் இந்த ஆன்மீகக் களம். அக்களம் உருவாக்கும் அகச் சிக்கல்கள், முரண்களால் ஒரு நவீன மனம் முட்டி திகைத்து நிற்கும் கணங்கள் நிரம்பியது. இந்திய ஆன்மீக மரபு அடிப்படையாகக் கொண்ட இருபுரிச் சாலை எனக் கரைதல் மற்றும் ஒருமை என தோராயமாக வகுக்கலாம். முதல் நிலைக்கு ரமணரையும், அடுத்த நிலைக்கு வள்ளலாரையும் [தோராயமாக ] உவமை சொல்லலாம் .

இந்த ஒருமை எனும் நிலை பெரும்பாலும், காய கல்பத்தின் வழியே இந்த உடலை அதன் வளர்சிதை மாற்றத்திலிருந்து தடுத்து, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நிலையில் அடங்கி, உயிரை உடலுக்குள் பூட்டி, ஜீவ சமாதியாக அமர்ந்து, நித்தியமான ஆனந்தத்தில் உறைவது, நிலத்தில் உறையும் ஜீவ சமாதி- [இதில் பள்ளிப்படுத்துதல் எனும் இன்னொரு வகை மாதிரி தனி ], நீரில் உறையும் ஜல சமாதி, ஸ்வரூப சமாதி எனப் பல வகைகள் உண்டு. இது வெளிமுகம் உள்முகமாக விகல்ப சமாதி, நிர்விகல்ப்ப சமாதி, சகஜ சமாதி என அந்த வரிசை தனி. கோடியில் ஒரு சாதகரே இதற்குள் வர முடியும். அது யார் என ஜாதகத்தின் வாயிலாகத்தான் அந்த சாதகனே அறிய முடியும். இந்த உடலை அதன் வளர் சிதை மாற்றத்தில் இருந்து தடுத்து நிறுத்தும் ரசாயனம் அதன் முதல் வடிவில் நீருக்குள் எரியும் எண்ணையின் தன்மையை அளிக்கும், அடுத்த வடிவில் அது பாதரசத்தை மணியாகக் கட்டும், இறுதி நிலையில் அது இரும்பை தங்கமாக மாற்றும் , இதன் வழியே சோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட அந்த மூலிகையை அல்லது ரசாயனத்தை உட்கொள்ளும் சாதகன், இந்த உடல் அழியும் தன்மை, மூப்பு இவற்றில் இருந்து மீள்வான் . இவை எல்லாம் காலகாலமாக இங்கு புழங்கி வரும் வசீகர மர்மங்கள். இந்த விரிவான பின்புலத்தின் வழிதான் அமியின் பிரயாணம், இன்னும் சில நாட்கள் கதைகளின் வீச்சையும் தீவிரத்தையும், ஆழத்தையும் வாசகன் அணுக முடியும்.

பிரயாணம் கதையில் தனது குரு இறந்துவிட்டார் எனும் நினைவில் தளர்ந்த சிறு பிழையே அக்கதையின் நாயகனின் வீழ்ச்சிக்கு அடிப்படை. ஒரு குரு தனது சீடனை, தன்னுடன் ”வாழ” அனுமதிப்பதின் வாயிலாக பல விஷயங்களை ”உணர்த்துகிறார் ”. அதை ”அறிந்தவன் ”பாக்கியவான் .அதனால்தான் இந்த உலகின் எந்த உறவுகளை விடவும் இந்த உறவு மேலான தன்மையில் அறியக்கிடைக்கிறது. பிரயாணம் கதையில் சீடன் இறுதியில் அறிவது என்ன? இந்த அனைத்து உன்னதங்களுக்கும் அடியில், ஆண்டாண்டுகால தவத்தாலும் தீண்டப்படாமல் எஞ்சி இருப்பது என்ன? அதன் இருப்பே இக்கதையை மகத்தானதாக ஆக்குகிறது. ‘’இன்னும் சில நாட்கள்’’ கதையும் பிழையான புரிதலினால் விளையும் வீழ்ச்சியின் கதைதான். சாமிநாதனை அவனது சாதனையில் நம்பிக்கையோடு ஈடுபட வைப்பது எது? அந்த ரசவாதம்தான் . அந்த மருந்தை செய்யத் தெரிந்தவர் தனக்கு சிகிச்சை செய்து கொள்கையில் தவறி விடுவதை கவனிக்கையில் இக்கதையின் புதுப்பாதைகள் நம்மை திகைக்க வைக்கின்றன.

சாமிநாதன் வழியே உருவாகி வரும் இருத்தலியல் துயர், பிற நவீனத்துவ ஆக்கங்களைக் காட்டிலும் அடர்த்தியானது. வைரம், கிணறு கதைகள் மிகச்சாதாரணமாக, அன்றாடம் எங்குமே காணக்கூடிய எளிய சம்பவங்களின் பின்னணியில் உருவாகி வந்த அமானுஷ்யக் கதைகள் என வகுத்தால், பிரயாணம் இன்னும் சில நாட்களில் கதைகளை விசேஷ தளத்தில் நிகழ்பவை எனக் கொள்ளலாம். சிறந்த படைப்பாளிகள், வேறு மகத்தான படைப்பாளிகள் வேறு. அமி மகத்தான படைப்பாளி. பிற படைப்பாளிகள் அன்றாட யதார்த்தக் கருத்தியல். அரசியல், சமூக, ஒழுக்கத் தளங்களில் இந்த ‘வீழ்ச்சியை’ப் பரிசீலித்துக் கொண்டிருந்த சூழலில். அசோகமித்திரன் இந்த வீழ்ச்சியின் சித்திரத்தை இன்னும் மேலான தளத்தில் பொருத்திப் பார்க்கிறார். ஆம் அ.மி சித்தரித்தவை ‘ஆன்மீக வீழ்ச்சிகள்’. பிற நவீனத்துவ ஆக்கங்கள் காலத்தால் பின்னகர்ந்து விட்டாலும், இக் கதைகள் என்றன்றைக்குமான கதைகளாக அகாலத்தில் நின்று சுடரும் கதைகளாக துலங்கி வருவதின் காரணம், இதுவே. இந்த அம்சமே அசோகமித்திரனை மகத்தான படைப்பாளியாக முன்வைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.