அசோகமித்திரனுடன் ஓர் உரையாடல்

ami_tn copyஅசோகமித்திரனுக்கு 82 வயதாகிறது என்பதை நேரில் பார்த்தும் மனம் நம்ப மறுத்தது. அவர் குரலைத் தொலைபேசியில் கேட்கும்போதே கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து அவர் குரலைக் கேட்கிறேன். அசோகமித்திரன், வெ.சா, கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன் போன்றாரை வயது முதிர்ந்த, ஒடுங்கிய நபர்களாகப் பார்க்கவோ, நினைக்கவோ முடியவில்லை. அவர்களுடைய இளம் வயது எழுத்துகளை நாம் இன்னும் படித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் கிட்டத்தட்ட சிரஞ்சீவிகள் போல, வயதாகாமல் நம் கற்பனையில் இருக்கிறார்கள் போலிருக்கிறது.

நான் 1974-லேயே அசோகமித்திரனைச் சந்தித்திருக்கிறேன். அவர் வசித்து வந்த தி.நகர் தெருவிலிருந்து நான்கைந்து தெருக்கள் தள்ளித்தான் நான் வசித்த வீடு இருந்தது. அவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் என்னோடு கல்லூரியில் என்னோடு படித்த ஒரு நண்பன் வசித்திருந்தான். நானும், கல்லூரியிலிருந்தே நெடுநாளைய நண்பனாகவும் இருந்த ரவீந்திரனுமாக, அந்த நண்பனைப் பார்க்கப் போகையில், அவரை ஓரிரு தடவைகள் மூவருமாகப் போய்ச் சந்தித்திருக்கிறோம். பிரக்ஞை பத்திரிகை காலங்களிலும் அவருடன் நல்ல தொடர்பிருந்தது.

அசோகமித்திரனை அழைத்து வருவதற்காக நண்பரோடு சென்று அவர் வீட்டைத் தேடி நின்று கொண்டிருந்தபோது, பால்கனியிலிருந்து கையாட்டி அழைத்தார்.

படியேறி அவர் வீட்டுக்குப் போனோம்.

‘சித்தெ இருங்க. உள்ளெ வாங்க’, என்றார். நாங்கள் வெளிவாசலருகேயே நின்றோம். அவர் தள்ளாடியபடி வந்து வாயில் அருகே நின்று என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சோதித்தார். காதுகேட்கும் கருவி, கைத்தடி, ஒரு தோள்பை (சிறு புத்தகப் பை போல) வாயிலருகே வருகையில் – மனைவி பின்னே நின்று கொஞ்சம் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

‘ஆ, அந்த டப்பாவைக் கொடு’ என்றார். அது இன்ஹேலர் அடங்கிய டப்பா.

படி தாண்டி வெளியே வந்து படிக்கட்டுகளருகே வந்த போது எங்களை ‘நீங்க முன்னே போங்க’ என்றார். நான் உங்கள் பின்னே வருகிறேன் என்றேன். இல்லை இல்லை, கொஞ்சம் இடித்தால் கூட நான் தடுக்கி விழுந்து விடுவேன், நீங்கள் முன்னால் போங்கள் என்றார், சரியென்று தயக்கத்துடன் முன்னே இறங்கினோம்.

இன்னொரு நண்பரின் வீட்டில் அசோகமித்திரனுடன் இரண்டு மணி நேரம் உரையாடினோம்.

மைத்ரேயன்

oOo

ASOKAMITHTHIRAN-13-APPA-3
அசோகமித்திரன், சிறுவயதில். நன்றி : ‘காலம்’ இதழ்

சொ.வ: ரொம்ப நாளா எழுதிக்கிட்டிருக்கீங்க. நாற்பது, ஐம்பது வருஷமா எழுதிக்கிட்டிருக்கீங்க. உங்களோட எழுதற மொழியிலே ஏதாவது மாற்றங்கள் இருக்கா? அதைக் காலவரிசை பண்ணிச் சொல்ல முடியுமா? இல்ல ஏதும் மாற்றங்களே இல்லையா? ஒரே மாதிரி எழுதணும்னு தீர்மானிச்சு எழுதிண்டிருக்கீங்களா?

அ.மி: ஒரே மாதிரி ஸ்டைல்தான் எழுதியிருக்கிறமாதிரி தெரியறது. அதாவது எழுதற பாணி , அது முதல்லே எழுத ஆரம்பிச்சதிலேருந்து அப்படியேதான் இருக்கறமாதிரி படறது. இப்போ கழுதைன்னா, வெட்கங்கெட்ட கழுதைன்னா, அதுல அடைமொழி சேர்த்துக்கறேள், வெறுமனே கழுதைன்னு சொல்றது. வாசலில் ஒரு கழுதை போச்சு. அந்த மாதிரி… நான் முதல்லேருந்து அப்படித்தான் பண்ணிண்டிருக்கேன். இப்ப ரெண்டு மூணு மாசமா ஒரு கதை எழுதினேன், ஒரு வைரத்தோடு பத்தி. அதிலயும் அதே மாதிரிதான் எழுதியிருக்கேன். பெரிய வித்தியாசம்லாம் இல்லெ. வித்தியாசம்… சில பேர் வச்சுக்கறா. அதெல்லாம் பீரியட் பீரியடால்லாம் ஒண்ணும் ஆகல்லெ.

சொ.வ: பொதுவா தமிழிலேயே உரைநடைல பெரிய மாற்றம் வந்துக்கிட்டே இருக்கு. அது உங்களுக்கு வந்து ஒண்ணும் பாதிப்பு ஏற்படுத்தலைன்னு சொல்றீங்களா?

அ.மி: பாதிப்பு இல்லென்னா.. பொதுவா இதுக்கு முன்னாலேயே தமிழில்ல நிறைய வடமொழிச் சொற்கள் சரளமாப் பயன்படுத்துவாங்க. இந்த சரளம்ங்கறது கூட இப்ப சொல்லக் கூடாது. அந்தக் காலத்துல அது நிறைய இருக்கும். கல்கி, தேவன்லாம் படிச்சிங்கன்னா, நிறைய வடமொழிச் சொற்களெல்லாம் வரும். ஆனா அதுக்கப்புறம் in the spirit of the times, அதாவது 1967க்கு அப்புறம், கொஞ்சம் எல்லாரும் இதைப் பத்தி ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருந்தது. அதாவது மொழியோட தூய்மை பத்தி… இந்த மொழியோட தூய்மையை நிர்ணயிக்கிறது ரொம்ப கஷ்டம். போயிண்டே இருக்கலாம். ஃபைனர், ஃபைனர்னு தமிழ்ல பண்ணிக்கலாம். பட், அதையும் ஒரு மாதிரி அனுசரிச்சுண்டு, ஏன்னா அந்த மாதிரி பண்ணல்லைன்னா சில பத்திரிகைகளிலெ போடறது கிடையாது. லைப்ரரி ஆர்டர்ஸ் வரல்லேன்னு சொல்றாங்க. லைப்ரரி ஆர்டர்ஸுங்கறது தமிழ் பப்ளிஷருக்கு ஒரு பெரிய விஷயம். லைப்ரரில 400, 500 காப்பி வாங்கிட்டாங்கன்னா, பப்ளிஷருக்கு முதல் வந்துடும்னு சொல்றாங்க. லைப்ரரிலேர்ந்து ஆர்டர் வரல்லேன்னா அவன் தவிச்சுப் போயிடுவான். அதுக்கு நாம ஒரு தடையா இருக்கக் கூடாது. இந்த சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் வேணா பண்ணிக்கலாம். மத்தபடி அதேதான் இருந்துண்டிருக்கு. பழையபடி நான் அப்ப எழுதின மாதிரியேதான்…

சொ.வ: உங்களோட வாழ்க்கைல மாயவரம், ஹைதராபாத், மெட்ராஸ்னு மூணு பெரிய செக்மெண்ட் இருக்கு இல்லையா?

அ.மி: இல்லை. உண்மைல பாக்கப்போனா. என்னுடைய வாழ்க்கைல ரெண்டு பாகம்தான் நீங்க சொல்லமுடியும். ஒண்ணு பிறந்ததுலேருந்து 20 ஆவது வயசு வரைக்கும் செகண்டராபாத்… ஹைதராபாத் இல்ல. ஹைதராபாத் கொஞ்சம் வித்தியாசம். செகண்ட்ராபாத் ஒரு கண்டோன்மெண்ட். ஹைதராபாத்ல நைஜாமோட ஆட்சிக்குள்ளே இருந்தது. 20 வயசுக்கப்புறம் சென்னைல. அப்புறமா சென்னைல இருந்துண்டிருக்கேன் . இப்ப 82 ஆயிடுத்து. இந்த ரெண்டு கட்டம்தான். மாயவரத்தில எங்க அப்பா, அப்பாவோட கூடப் பிறந்தவங்க, அவரோட அக்காக்கள். அதெல்லாம் சொல்லித்தான் மாயவரத்தைப் பத்திக் கிரகிச்சுக்கிறது. இதில என்ன தெரியுமா… ரொம்ப சாதாரணமா ஏதோ போற போக்குல ஏதோ சொல்லிட்டுப் போவாங்க.. உங்களுக்கு அதே வந்து பதிஞ்சு போயுடும். ரொம்ப முக்கியமாயிடும். ஒரு முக்கியமான தகவலா இருக்கும். இந்த மாயவரம் பத்தியே – மாயவரம், அதைச் சுத்தி இருக்கிற கிராமங்கள், அந்தக் காலத்துக் கல்யாணம், அந்த காலத்து வாழ்க்கை, அந்த காலத்துப் பெண்கள், ஆண்கள் எல்லாமே. அதெல்லாம்… துளித் துளித்துளியா. ஒரு கோர்வையா இல்லாதபடி எப்பொப்போவோ கேட்டதை எல்லாம் சேர்த்து வச்சுண்டுதான் இப்ப எழுதறது. அதனாலே எனக்கு மாயவரம்னு தனியா ஒரு செக்மெண்ட் இல்லை.

சொ.வ: ஆனா உங்களோட பொதுவான மொழியைப் பார்க்கும்போது சொல்ற விதம், மொழி கதையோட சூழல்கள் இதெல்லாம் பார்க்கும்போது தஞ்சாவூரோட அந்தக் கலாசார வேர் இருக்கு. அந்த வேரோட தாக்கம் இருக்கத்தானே செய்யும்?

அ.மி: இருக்கலாம்.தஞ்சாவூர் ஒண்ணுக்குத்தான் இப்படின்னு கிடையாது. பார்க்கப் போனா, திருநெல்வேலிக்காரங்களைக் கேட்டாக்க அவங்க திருநெல்வேலியிலதான் தமிழ் பெரிசா தழைச்சுதாக்கும், அங்கேதான் டிகெசி மாதிரி ஒருத்தர் தோன்றினார், அந்தப் பிரதேசத்திலேர்ந்துதான் பாரதியார் வந்தார்னு சொல்றதெல்லாம் இருக்கு. தஞ்சாவூர்ல என்ன பண்ணுவாங்க.. தஞ்சாவூர்காரங்களுக்கு ரொம்ப சுகவாசின்னு பேரு அந்த நாள்ல. ஏன்னா அங்கெ தண்ணி நிறைய இருக்கும். ரொம்ப சுலபமா விவசாயமெல்லாம் பண்ணலாம். அதுல இந்த மாதிரி கலை இலக்கிய சம்பந்தங்கள் இருக்கே, அவுங்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கும். கலையே ஓய்வுனாலேதான் வரது. உங்களுக்கு நிறைய லீஷர் இருந்தா நிறைய பெரிய கலைஞனா எல்லாம் போயிடலாம்… கலைஞனாகறத்துக்கு நிறைய ஓய்வு தேவை. தஞ்சாவூர்க்காரங்களுக்கு நிறைய ஓய்வு இருந்தது அந்த நாள்ல. இப்ப அதெல்லாம் கெடயாது. எல்லா ஊர்லெயும் நிறைய தட்டுப்பாடெல்லாம் இருக்கு. நிறைய அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டிருக்கு, நிறைய விஷயங்கள் வேணும்னா, நாம்ப முதலிலேயே நிறைய ப்ளான் பண்ண வேண்டி இருக்கு.

நிறைய திட்டம் போட வேண்டியிருக்கு. இங்க வர்றத்துக்கு திட்டம் போட வேண்டி இருக்கு. இதெல்லாம் ஒரு காலம். இப்ப தஞ்சாவூர்ல மொழி. இப்ப நிறைய சின்னச் சின்ன… அதாவது நெறய்ய பிரிவுகள் உட்பிரிவுகள்ளாம் இருக்கு. இப்ப அந்த உட்பிரிவுகள் பத்தி எழுதறாங்க. அதை வந்து அவங்களுக்கு ரொம்ப விசேஷமாச் சொல்லியாகணும். இப்ப என்னுதெல்லாம் பொதுவான வாழ்க்கை. ஆனா இப்ப அந்த உட்பிரிவு பத்திச் சொல்லறது இருக்கே, அதுதான்… நெறைய பேர் சொல்லி அதில வெற்றியும் அடஞ்சிருக்காங்க. பார்க்கப்போனா இந்த வருஷம் சாஹித்ய அகாதமி பரிசு வாங்கினாரே, ஜோ.டி.க்ரூஸ், அதை யாரைக் கேட்டாலும் அவர் மீனவ சமுதாயத்தைப் பத்தி எழுதி இருக்கார்னு சொல்றாங்க. மீனவ சமுதாயத்தைப் பத்தி என்ன சொல்லி இருக்காருன்னு கேட்டாக்க அதைச் சொல்லறது கஷ்டம். ஏன்னா தொள்ளாயிரம் பக்கம் எழுதி இருக்கார். 900 பக்கத்தைப் படிக்கறது இருக்கே… அது ரொம்ப கஷ்டம். அதனாலே மீனவ சமுதாயத்தைப் பத்தி எழுதி இருக்காருன்னா, ஓஹோ அப்படியான்னு நமக்கு எல்லாம் புரிஞ்ச மாதிரி நாம சொல்றோம். மீனவ சமுதாயத்தில எத்தனை நுட்பமெல்லாம் இருக்கோ….

அதே மாதிரி இன்னொருத்தர் காவல் கோட்டம்னு ஒரு முதல் நாவல். இதுவாவது இரண்டாவது நாவல். அந்தக் காவல் கோட்டத்தில நாயக்கர்களப் பத்தி இருக்கு. நாயக்கர்கள் தமிழர்கள் இல்ல. விஜயநகரம் சாம்ராஜ்யத்திலேருந்து இங்க வந்தபோது இவங்க வந்தாங்க. வந்துட்டு இங்கேயே இருந்துட்டாங்க. விஜயநகர ராஜாக்கள்லாம் இங்கெல்லாம் சின்னச் சின்னக் கோயிலா இருந்துதே அதெல்லாம் பெரிய கோயிலாக் கட்டி, கோபுரமெல்லாம் கட்டி எல்லாம் பண்ணினாங்க.

j_d_c
சிதம்பரத்திலேயும் பண்ணி இருக்காங்க, ஸ்ரீரங்கத்திலயும் பண்ணி இருக்காங்க, ராமேஸ்வரத்திலயும் பண்ணி இருக்காங்க. யாரு, விஜயநகர ராஜாக்கள். ஆனா, அவங்களோட மொழி தெலுங்கு. அதுல இந்த நாயக்கர்ஸ். அவங்க நிலச்சுவான்தார்களா ஆயிடறாங்க. நிலச்சுவான்தார்னால அதோட ஒட்டி, அவங்க சுரண்டவும் செய்றாங்க. அப்படீன்னா, அதாவது அந்த நிலத்த யாராவது உழுது பாடுபடணும். அதுக்குப் பாடுபடறத்துக்கு ஆட்கள் வேணும். அதை வச்சுண்டுதான் அந்த ரெண்டு ஜெனரேஷன் பத்தி காவல் கோட்டத்தில சொல்லி இருக்காரு. நான் காவல் கோட்டம் படிக்கல்ல. ஆனா ஜோ.டி.க்ரூஸோட முதல் நாவல் ‘ஆழி சூழ் உலகு’, அதுவும் மீனவ சமுதாயம் பத்திதான் அது போறல்லைன்னுதான் இதை எழுதி இருக்காரு. அது 700 பக்கம்தான். நான் அதை முடிச்சுட்டேன். ஆனா இது வந்து 900 பக்கம். அவர் என்கிட்ட வந்தார் ஏதோ சின்ன விஷயம்தான். அவர் ஒரு போர்ட் ஆஃபீசர். பெரிய ஆளு. எவ்ளோ உசரமா இருக்கார். இந்தக் கதவெல்லாம் போறாது அவருக்கு. அப்படி இருக்கிறவரு, ரொம்பச் சின்ன விஷயத்துக்காக என்கிட்டே வந்தார். எனக்கும் வெக்கமா இருந்தது. அப்போ இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். நான் சொன்னேன், இந்தப் புத்தகம், இது ஏகப்பட்ட விலை… இதை இப்படி குடுத்துடறீங்களேன்னேன். இருக்கட்டும் பரவாயில்லை, இதைப் படிங்கோன்னார். அதைப் படிக்கறதுதான் முடியலை. ஒரு 100, 150 பக்கத்துக்கு மேல போறது கஷ்டமாப் போச்சு. அதுக்குன்னு உழைக்கணும். அதைப் படிக்கறதுக்குன்னு.

சொ.வ: ஒரு பேட்டியிலே பெரிய புத்தகம்லாம் அவ்வளவு இலக்கியத்தரம் இல்லாததுங்கற மாதிரி சொல்லி இருக்கீங்க.

அ.மி: ’இந்து’ல வேறெ நெறய்யச் சொன்னதுல அதைப் போய்ப் போட்டுட்டாங்க. அப்படி எல்லாம் இலக்கியத்தரம் இல்லன்னு இல்லை. ஒரு நல்ல இலக்கியவாதி பெரிசா எழுதினாலும், சின்னதா எழுதினாலும் நன்னா எழுதுவான். ஆனா நீங்க பெரிசா எழுதினா, அந்த மாதிரி எழுதிண்டே போறச்சே, பிழைகள் வரதுக்கு நிறைய சாத்தியங்கள் உண்டு. இப்ப சின்ன வீடாக் கட்டினேள்னா, சின்ன வீட்டில பிழைகள் நிறைய இருக்க முடியாது. சின்ன வீடா இருக்குன்னு சொல்லலாம், ஆனா. பெரிய அரண்மனை மாதிரி பண்ணினேள்னா, என்னப்பா இது, இவ்வளவு பெரிய அரண்மனை கட்டி என்ன, ஒழுங்கா ஒரு சமையலறைக்கு இடமில்லே, டாய்லட் இல்ல இப்படி… திருமலை நாயக்கர் மஹாலுக்குப் போனீங்கன்னா, நெஜமாகவே ஆச்சரியமா இருக்கும். இவ்வளவு பிரம்மாண்டமாக் கட்டினான், டாய்லட் கிடையாது. ஆக்ரா அரண்மனை – ஷாஜஹான் அங்கேயே உட்கார்ந்து தாஜ்மஹாலைப் பார்த்தார். பாக்கறது ரைட். ஆனா பாக்கறதோட சேர்த்து அவருக்கு வேறெ சில இயற்கையா பண்ற காரியங்கள் உண்டு. அதை எல்லாம் எப்படிப் பண்ணினார்? அதனால நீங்க இதையெல்லாம் யோசிச்சுண்டுதான் இருப்பீங்க. இதுக்குப் பதில் இல்லெ. ப்ராபப்லி தே யூஸ்ட் சேம்பர்ஸ். ப்ரிஸனேர்ஸுக்கெல்லாம் கொடுத்துடற மாதிரி.

சொ.வ: சேம்பர் பாட்.

அ.மி: சேம்பர் பாட்.. அது மாதிரிதான் இருந்திருக்கும். அது கஷ்டம்தான்.. அதுக்கும் டிஸ்போஸல் கஷ்டம்தான். அதனாலெ பெரிய அளவில திட்டம் போடறப்போ… அதைத்தான் நான் சொன்னது. அதெல்லாம் விரிவாச் சொல்றபோது சரியான பர்ஸ்பெக்டிவ் கிடைக்கும். அப்படியே அந்தந்த அளவுலெ வரும்.

அதிலே நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு.

அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள்ல சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது. ஆல்பர்ட் காமு எழுதினது, ‘த அவுட்சைடர்’ன்னு ஒண்ணு எடுத்துண்டாக்க, அது அப்படியே, ஒண்ணுமே பிரிக்கவே முடியாது, சேர்க்க முடியாது. கரெக்ட்டா இருக்கும். காஃப்காவோட நாவல்களும் கரெக்டா இருக்கும். ஆனா காஃப்காவே ஒரு லாங்கர் பீஸா, இன்னும் நீளமா எழுதணும்னு ஆசைப்பட்டிருக்கார் – அவருக்கு சார்ல்ஸ் டிக்கன்ஸ் மாதிரி எழுதணும்னு ஆசை, சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவரோட சமகாலத்தவர் இல்லை, செத்துப் போயிட்டாரு, ஆனா அவர் எவ்வளவு பேரை சந்தோஷப்படுத்தினார்… அந்த மாதிரி தானும் எழுதணும்னு அதை நினைச்சு ஒண்ணு எழுதினார், ‘அமெரிக்கா’னு. ஆனா அது அவ்வளவு வெற்றிகரமா வரலை. அது என்னன்னா இந்த நீளமும் – அதுலே ஏதோ சங்கடம் இருக்குனு எனக்கு தோணறது, இல்லே. என்னால பெருசாத்தான் நினைக்க முடியும், எழுத முடியும்னா இதுலெ ஒண்ணும் நாம யாரையும் தடை சொல்ல முடியாது. அதுதான் உத்தமமானதுன்னு சொன்னாக்க உத்தமமானதுன்னு நாம ஒத்துண்டுட்டா போறது.

ASOKAMITHTHIRAN-21

சொ.வ: படிக்கத்தான் கொஞ்சம் சிரமப்படணும்னு சொல்றீங்க…

அ.மி:: படிக்க சிரமமாத்தான் இருக்கு. ஏன்னா, எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்க வேண்டி இருக்கு. சில சமயங்கள்ல சில அந்நியமான பேர்கள்லாம் வரது. சாதாரணமா உங்க வாழ்க்கையில் என்னென்ன பேர்கள் வராங்களோ, என்னென்ன மாதிரி சூழ்நிலைகள் வருமோ… சில சொற்களுக்கு அர்த்தமே புரியறதில்லை. ஏன்னா, அது அவங்க வாழ்க்கை அந்த மாதிரி. அதை எல்லாம் நாம தெரிஞ்சுண்டு ஒருத்தர் அப்புறம் அதைப் போயி ரசிக்கப் போகணும் நாம்ப. அதுக்கு நெறைய தயார் பண்ணிக்க வேண்டியிருக்கு.

சொ.வ: ‘கரைந்த நிழல்கள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தீங்க சமீபத்திலே. அப்படி ஒவ்வொரு சாப்டரும் ஒவ்வொரு ஆளோட பார்வைலே வர்ற மாதிரி இருக்குன்னு எழுதினீங்க.

அ.மி: அது ஒரு காரணம். இதை நான் எல்லார்கிட்டேயும் விசேஷமாச் சொல்றதில்லை..அதுல சொல்ற பாணி இருக்கே… மொழிப் பாணி இல்லே, சொல்ற பாணிலே ரொம்ப ஒரு கட்டம் கட்டமா போட்டமாதிரிதான் இருக்கு..இப்படி இல்லாம இருக்கறது நல்லது. ரொம்ப எளிமையா இருக்கறதே நல்லது. அதனாலே அந்த நாவலை நான் அவ்வளவு விசேஷமா நினைக்கல்ல.

சொ.வ: பொதுவா மற்ற நாவல்களை எல்லாம் துவக்கத்திலேருந்து முடிவு வரை சங்கிலி போலப் படிச்சாத்தான் விளக்கமாப் புரியும். ஆனா உங்க நாவல்கள்ல ஒவ்வொரு அத்தியாயமும் அப்படியப்படியே தனித்தனி கதையா இருக்கு. இதை இதை நீங்க முதல்லேருந்து ப்ளான் பண்ணி செய்திருக்கீங்களா? இல்லே அது அப்படி அமைஞ்சுதா?

karaindha_nizhalkal_b

அ.மி: ப்ளான் பண்ணிச் செய்யலை. அந்த சமயத்திலே அப்படி… கரைந்த நிழல்கள்ல நான் முதல்லே எழுத நெனச்சது ஒரு நீளமான நாரேடிவ்தான். அதுல ஒரு ஆளு, ஒரு கதாநாயகன், கதாநாயகி இப்படித்தான் இருக்கற மாதிரி இருந்தது. ஆனா அந்தக் கதையை தீபம் பார்த்தசாரதி தானே எழுதப் போறதாச் சொன்னார். அது தீபம் பத்திரிகைல வந்துது. அவர் கதைச் சுருக்கம் வேணும்னு கேட்டுண்டிருந்தார். ரொம்ப நாள் நான் அதை ஒரு மாதிரி தட்டிக் கழிச்சுண்டிருந்தேன். அனௌன்ஸ் பண்ணியாச்சு. அப்புறம் என்ன தலைப்புன்னார். கரைந்த நிழல்கள்னு வச்சுக்கோங்கன்னு சொன்னேன். அது என்னடா கரைந்த நிழல், நிழல் கரையுமான்னார்.. இது ஒரு கேள்வி இருக்கில்லையா? அதாவது எப்படிக் கரையும்? ஆனா இந்தக் கரையும்ங்கிறது சினிமாவுல உபயோகப்படுத்தற ஒரு சொல். டிஸ்ஸால்வ்னு சொல்றதுதான். அப்படியே மெள்ள இருட்டாறது. டிஸ்ஸால்வ் அவுட். அதே மாதிரி டிஸால்வ் இன். அவர் அதை அவரே எழுதணும்னார். அதனால, மாத்தித்து. மாத்தி ரொம்ப கஷ்டப்பட்டு எழுதினது. ஏன்னா ரொம்ப கம்ப்ளீட்டா திட்டமே இல்லாம பண்ணினது.

சொ.வ: உங்க கதைகள்ல நிறைய இடத்தில் மெட்ராஸின் மிடில் க்ளாஸ் வாழ்க்கை, குறிப்பா அடர்த்தியான ஜனத்தொகை உள்ள மாம்பலம் மாதிரி இடம் ஆதிக்கமான களமா இருக்கு. அந்த மாதிரி நிறைய மனிதர்கள், நிறைய நெருக்கமான ஒரு ஒண்டுக்குடித்தனம் மாதிரியான இடங்கள்ல வலுவான ஹ்யூமன் டிராமால்லாம் இருக்கும். உதாரணமா, மாம்பலத்தில கடுமையான தண்ணீர் பிரச்சினை வந்த பின்னணில எழுதின ‘தண்ணீர்’ நாவல். அதை தமிழிலே முதல் குறியீட்டு நாவல்ன்னு சொல்றாங்க… இது நீங்க எந்த பீரியட்ல எழுதியது?

அ.மி: 1969ல அப்ப தண்ணி எல்லாம் இருந்தது. ஆனா குழாய் தண்ணி கிடையாது. அது கம்ப்ளீட்டா நிறுத்தியாச்சு. ஒரு வருஷம்.. ஒரு வருஷமில்ல, ரெண்டு மூணு வருஷம் கிடையாது. பாக்கப்போனா மகாலக்ஷ்மி தெருவில் எல்லாம் கிடையாது. ரெண்டு மூணு வருஷம் திண்டாடினோம். கிணறு இருக்கும், ஆனா கிணறும் ட்ரை ஆயிடும். அப்ப எங்க வீட்ல பர்ஸ்ட் கிளாஸ் கிணறு இருந்தது, கிணறும் வத்திப் போயிடுத்து. அப்போ இந்த டாங்கர் லாரி வரும். அது ஏதோ ஒரு சமயத்தில் வரும், சொல்ல முடியாது. திடீர்னு ஒரு நாளைக்கு வரும் அப்பறம் நாலு நாளைக்கு வராது. வரப்போ அடிச்சு புடிச்சுதான் வாங்கணும். ஆனா என்ன சொல்றாங்க அந்த சமயத்தில் தண்ணி நெறைய இருந்தது. ஆனா மோசமான மானேஜ்மெண்ட், சரியா விநியோகம் செய்யலைங்கறாங்க. நீங்க வேணா கிணறு இருந்ததுன்னா, போர் போட்டுக்கலாம். ஆனா இந்த போர் இருக்கே, எல்லா இடங்களிலும் நல்ல தண்ணிதான் இருக்கும்னு சொல்ல முடியாது. நிறைய இடங்கள்ல இந்த தண்ணில இருக்க உப்பு மாறிண்டே இருக்கு. சில இடங்கள்ல அந்த ப்ளம்பிங்கே ரொம்ப கஷ்டமா போயிடறது. அதாவது ஒரு வருஷத்துக்குள்ளே இந்த குழாய் கிழாய் எல்லாம் ரீப்ளேஸ் பண்ற மாதிரி ஆயிடறது. இன்னும் ப்ளம்பர் பத்தி நான் ஒண்ணும் எழுதலை. (சிரிக்கிறார்).

சொ.வ: உங்க படைப்புகள்ல ஒரு விஷயம் – செகந்திராபாத் ஆனாலும் சரி, மாம்பலம்னாலும் சரி, நிறைய தெலுங்கர்கள் இருக்காங்க. தெலுங்கு ஆசாமிகள், அவங்க பர்சனாலிட்டிஸ், சின்னச் சின்ன பாத்திரங்கள், சினிமாவில் வேலை பாக்கற தெலுங்கர்கள்…

அ.மி: நான் இங்க சென்னைக்கு வந்தப்புறம்தான் தென்னிந்தியப் பிரிவினை நடந்தது.. அதுக்கு முன்னாலே தேர்தல் நடந்தப்போ அது ஒரு ஒருங்கிணைந்த மெட்ராஸாத்தானே இருந்தது. அப்ப பாக்கப்போனா காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லே. அப்போ தனி ஆந்திரம் வேண்டி பொட்டி ஸ்ரீராமுலு சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சார். செத்தே போயிட்டார். 63 நாள் இருந்துட்டு செத்து போயிட்டார். அப்போ இந்த ஆந்திரா became a reality. அந்த பீரியட்லே இங்கேதான் இருந்தேன் நான். பொட்டி ஸ்ரீராமுலு பாவம் செத்து போறச்சேயெல்லாம் இங்கேதான் இருந்தேன். அதுக்கப்புறம் அந்த எடத்துக்கெல்லாம்கூட போயிருக்கேன். அங்கே அந்த எடத்துலெயெ கூட நான் போயி பேசியிருக்கேன். அங்கே பொட்டி ஸ்ரீராமுலு ஹால்னு ஒண்ணு இருக்கு. ராயப்பேட்டா ஹைரோட் ஆரம்பத்துலே இருக்கும். அதனாலே கதாபாத்திரங்களை அந்த பீரியட்லேர்ந்துதானே எடுத்துக்கறோம் நாம?

சொ.வ: உங்களுக்கு தெலுங்கு சரளமா பேச வரதினாலே உங்க பழக்கங்கள் ஜாஸ்தியா இருந்திருக்கும். திரைத்துறைல அவங்களோட தொடர்பு அதிகமா இருந்திருக்கும் இல்லையா?

அ.மி: நானே தெலங்கானாதானே? ஒவ்வொருவர் வாழ்க்கைலேயும் அந்த முதல் 15 வருஷங்கள்தான் ஆழப்பதியும். பார்க்கப்போனா உங்க எல்லோருக்குமே பாத்தா கடைசீலே எங்கேயோ போனாலும் அந்த 15, 20 வருஷங்கள், அந்த காலகட்டத்திலே அப்போ ஏற்பட்ட சில ஆசைகள் நிராசைகள், சில விருப்பங்கள் நம்ம வாழ்க்கை பூரா ஃபிக்ஸ் ஆயிடறதுன்றாங்க. எனக்கும் அது ரொம்ப கரெக்ட்டாத்தான் தோணறது. என்னுடைய ஆரம்ப காலம் எல்லாம் அங்கேதான் இருந்தேன் நான். அதுவும் வந்து அங்கே வித்தியாசங்களே கிடையாது. துலுக்கன் வரான்னுதான் சொல்லுவாங்க. அவனும் தப்பாவே நெனெச்சுக்க மாட்டான். அவனுக்குத் தமிழ் தெரியாமே இருக்கலாம். ஆனா துலுக்கன்னு சொன்னது தெரியும். அவனோட ஏண்டா போய் சேரறேன்னெல்லாம் சொல்வாங்க, துலுக்கப்பயலோடன்னு.

இந்த ஜாதிப்பேர் சொல்றதெல்லாம் அப்போ தப்பே கெடயாது. அவன் யாருன்னா மொதல்லே அவன் செட்டியார்னுதான் சொல்லுவான். அதுக்கப்புறம்தான் அவன் பேரு மத்ததெல்லாம். அந்தநாள்லே யாரும் இதை ஒரு குத்தமாவே நெனச்சுக்கலை. பாக்கப்போனா இப்போ நான் எழுதின ஒரு கதைலே ஒரு ரெட்டி வருவான். ரெட்டின்னா தெலுங்கு ரெட்டி. அந்த ஹைதராபாத் ஸ்டேட்லே அப்போ நெறைய நிலத்துச் சொந்தக்காரங்க ரெட்டிகள்தான். அவன் செத்துப் போயிட்டான் என்னுடைய க்ளாஸ்மேட். அவன் ரொம்ப உற்சாகமா இருப்பான். கதர்தான் போட்டுப்பான். அதுலே காம்ப்ரமைஸே கெடயாது. அதேமாதிரி அங்கே எங்க ஊர்லே காலேஜுக்கு நீங்க கோட் போட்டுண்டுதான் வரணும். கால்ல ஒண்ணும் போட்டுக்க வேண்டாம், தலைலே ஒண்ணும் வேண்டாம். ஆனால் கோட் போட்டுக்கணும். டு டிஸ்டிங்குவிஷ் யூ ஃப்ரம் அதர் பீப்பிள். அதுனாலே அதுக்காகன்னு கோட் தெச்சுக்கணும். அப்போல்லாம் துணி வாங்கிக் குடுத்துட்டா கோட் 6 ரூவா 7 ரூவாய்க்கு தெச்சுத்தருவாங்க. ஆனால் எப்பவுமே டெய்லர்கிட்டே நீங்க குடுத்தா உங்களுக்கு முழு திருப்தியே இருக்காது. (சிரிப்பு) பெரிய பெரிய ஃபேமஸ் டெய்லர்லாம் இருந்தாங்க. இப்போ அவங்கெல்லாம் போயிட்டாங்க. அப்படி ஒருத்தர்க்கிட்ட கொடுத்து தெச்சாக் கூட எங்கியோ ஒரு எடத்துலே இழுத்துப் பிடிக்கறமாதிரி இருக்கும். நம்ம ஒடம்பு வேறே வேறே மாதிரி இருக்கு.

முஸ்லிம் பையன்களெல்லாம் இந்த கோட்டை அவாய்ட் பண்றத்துக்கு ஷெர்வானி போட்டுண்டு வந்துருவாங்க. ஆனா இந்த ரெட்டி நண்பன் இருக்கானே, இவன் வந்து கதர்லே ஷெர்வானி போட்டுண்டு வருவான். ஆனா அவன் அதுலே சமரசம் பண்ணினதே கெடயாது இந்த கதர் பேண்ட் இருக்கே ரொம்ப கஷ்டம் ஒரே நாள்லெ அழுக்காயிடும். நீங்க என்ன தோய்ச்சாலும், அதுலே என்னென்னா அதுலே ஒருதரம் அழுக்குப் படிஞ்சா அந்த அழுக்கு போகவே போகாது. மொதல்நாள் X னாக்க ரெண்டாவது நாள் 2X அப்டீ மூணாவது நாளைக்கு 3X அதே மாதிரி 180 நாள் போட்டுண்டாக்க 180X அழுக்கு சேர்ந்துடும் அதுலே. நீங்க என்ன தோய்ச்சாலும். அதே மாதிரி அதை அயர்ன் பண்றது ரொம்ப கஷ்டம். நான் அயர்ன் பண்ணுவேன். அப்போ எங்க வீட்டிலே எலக்ட்ரிக் அயர்ன் கெடயாது, சார்கோல் போட்டு செய்யறது. அதுலே சில கஷ்டங்கள் இருக்கு. அதனாலே நான் அதை நன்னா மடிச்சுட்டு படுக்கை அடிலே வச்சுப்பேன். அது கொஞ்சம் அயர்ன் பண்ணின மாதிரி இருக்கும். ஒரு ஒரு மணி நேரத்துக்கு.அது அப்படீ இருக்கும்.. அந்த ரெட்டி இருக்கானே, செத்துப் போயிட்டான் பாவம், அவன் வந்து கதர் போட்டுண்டு வருவான். இருந்தாலும் அதெல்லாம் அந்த சூழல்ல இருக்கறத்தினாலே நாம சொல்றத்துலே, அது அவங்களுக்கு ஒரு பாராட்டு (tribute) மாதிரியும் ஆயிடுத்து. மானசீகமா அவங்களுக்கு நாம அஞ்சலி செலுத்தின மாதிரி ஆயிடும். உண்மையா பார்க்கப்போனா நான் எழுதற கதை எல்லாமே அதுலே…பெரிய தெறமைசாலிகள்னு கெடயாது அவங்களுக்கு ஒரு அஞ்சலி, ஏதோ ஒரு விதத்திலே நம்ப வந்து ’ஐ ஸே ஐ ரிமெம்பர் யூ’ ன்னு சொல்றது

சொ.வ: கவிதை எந்தகாலத்திலயும் உங்களைக் கவர்ந்ததில்லையா?

அ.மி: இல்லே இல்லே இந்த பொயட்ரி.. சமீப காலத்துலே எனக்குக் கவிதை மேலே ரொம்ப ஒரு ஏமாற்றமாத்தான் இருக்கு. சொன்னா சண்டைக்கு வந்துடுவாங்க இப்போ – எனக்கு இந்த ஷேக்ஸ்பியரே ஹி வாஸ் மோர் எ க்ளெவர் பெர்ஸன் தேன் எ க்ரேட் பெர்ஸன். அவர் எல்லாத்தயுமே புத்திசாலித்தனமா வேறே மாதிரி சொல்லிடுவார். இந்த புத்திசாலித்தனமா வேறே மாதிரி சொல்றது இருக்கே அந்த வேறே மாதிரி சொல்றதுலே ஒரு முயற்சி இருக்கு. அவரோட எண்டர், எக்ஸிட் அதுதான் நார்மலா இருக்கும். ஹேம்லெட் அவரோட ரொம்ப புகழ் பெற்ற நாடகம். அதுல க்ளாடியஸ் ”பைத்தியம்னாலும் அவனை கவனிச்சுண்டு இருக்கணும் ஒரு கண் வெச்சுண்டு இருக்கணும்”னு சொல்வான். இதை அவன் நார்மலா “யூ ஷுட் கீப் ஏன் ஐ ஆன் ஹிம், ஆர் யூ ஷுட் வாச் ஹிம்’னு சொல்லலாம். இவன் என்ன சொல்லுவான், “பட் மேட்னெஸ் அண்ட் க்ரேட்னெஸ் மஸ்ட் நாட் அன்வாச்டு கோ’ [1]

(பெரிதாய் சிரிக்கிறார்)

ஷேக்ஸ்பியர்லே இது மாதிரி நெறைய இன்ஸ்டன்ஸஸ் இருக்கு. இப்போ எனக்கு தோண்றது இதுதான். Madness and greatness must not unwatched go.

(மீண்டும் பெரிதாய் சிரிக்கிறார்)

எனக்கு ரொம்ப கெட்டிக்காரத்தனமா செய்யறதே கொஞ்சம் பயம்மா இருக்கும்… கெட்டிக்காரங்க கிட்டே நாம என்ன பண்ண முடியும்? பேசாமே வெளில போயிடணும். அதான், கவிதைலெ இப்ப அந்த மாதிரி ஒரு மனநிலை வந்துடுத்து. ஆனா எனக்குதான் இது. மத்தவங்களை படிக்காதீங்கன்னு சொல்லலை, ரசிக்காதீங்கன்னு சொல்லலை.

சொ.வ: உங்களுக்கு ஒரு அனுபவம் ஏற்படுகிறது. அதை எழுதறீங்க. ஆனா நாலு பேரு அதைப் படிச்சா நாலு விதமாத்தான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுவோம். அனுபவத்தை அப்படியே கடக்க முடியாது.. எழுத்துங்கற மீடியத்தோட இயல்பே அப்படித்தான். ஆனா எங்களோட பழைய எக்ஸ்பீரியன்ஸ் எல்லாத்தயும் சேர்த்து உடைச்சுப் பாக்கத்தான் வேண்டியிருக்கு. அப்படி இருக்கும்போது நீங்க வாசகரோட நோட்ஸ கம்பேர் பண்ணிக்கறது உண்டா? உங்க எக்ஸ்பீரியன்ஸ் அப்படியே யாருக்காவது ஏற்பட்டிருக்கா? இல்ல, அதைவிட பெட்டரா யாராவது ஃபீல் பண்ணியிருக்காங்களா? உங்க எழுத்து உங்களை எப்படி பாதிக்கறது? எங்களை எப்படி பாதிக்கறது? அந்த ஒப்புமை..

அ.மி: அது..உங்களுக்கு எப்படி ஆறதுன்னு என்னால சொல்ல முடியாது. ஆனால், இந்த இண்டர்ப்ரட்டேஷன் இருக்கே, ரொம்ப பளீர்னு இருக்கும். இப்ப கூட, இந்த நேரத்துல நீங்க என்னைக் கேக்கறீங்கன்னு நினைச்சுண்டிருக்கீங்க. ஆனா, நீங்க என்ன பண்றீங்க நான் சொல்றத நீங்க ஒரு மாதிரி புரிஞ்சுக்கறீங்க. சிவகுமார் ஒருமாதிரி பண்றாரு ரவிசங்கர் ஒரு மாதிரி பண்ணறாரு. சுவாமிநாதன் ஒரு மாதிரி பண்ணறாரு. அதனால இண்டர்ப்ரெட்டேஷன் அது போயிண்டே இருக்கும். அதுதான் நம்ம மனுஷனோட தன்மையை நிர்ணயிக்கிறது. பார்க்கப்போனா, விமன், ஆக்சுவலா இங்க ஒரு பெண் கூட இல்லை. அவங்களோட இண்டர்பிரெட்டேஷன் இன்னும் வேற மாதிரி இருக்கும். பார்க்கப்போனா, இங்க நான் ஒக்காண்டிருக்கறதுக்கு அவங்க ஒரு மாதிரி இண்டர்ப்ரெடேஷன் சொல்லுவாங்க, ரொம்ப ஸ்ட்ரைக்கிங்கா இருக்கும். அதனால, அவங்களை என்ன நீங்க கேட்டாலும், நீங்க கேட்டதுக்கு பதில் வராது. ஏன்னா ஹ்யூமன் நேச்சர்ல, விமன் ஆர் மோர் இண்டெர்ப்ரெடிவ் தேன் மென். அது சொன்னா ஒத்துக்கமாட்டாங்க, ஆனா அப்படித்தான்.

Old_Kanayazhi_70s_Tamil_Little_Magazine_Kanaiyaazi_SmallMagz_Lit_Thamizh

சொ.வ: கணையாழி நடத்தும்போது 2000 பிரதிகள்தான் வித்திருக்கும்.

அ.மி: ஆமாம். ரொம்ப கொஞ்சம்தான் வித்துது.

சொ.வ: அதோட மத்த சிறுபத்திரிக்கைகளெல்லாம் 300 தான் வித்திருக்கும். அதுல பாதி காசும் வராது. அப்போ, அந்த காலகட்டத்துல, எதிர்காலத்துல இதெல்லாம் மாறும்னு நீங்க எதாவது நினைச்சிருக்கீங்களா?

அ.மி: இல்ல, இல்லை. அப்போ எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. இப்பல்லாம் சிறுபத்திரிக்கைனு வருது. அதைப் பார்த்தா சிறுபத்திரிக்கை மாதிரி இல்ல. ஏன்னா, விலை அம்பது ரூபா, எழுபத்தைந்து ரூபா, நூறு ரூபா. ஸ்ரீலங்காலேர்ந்து யேசுதாசான்னு ஒருத்தர் சிறுபத்திரிக்கை அனுப்புவார். 300 ரூபா. பத்திரிக்கை. பளபளன்னுலாம் அட்டை போட்டுருக்கு. அப்போல்லாம், இந்த 2 கலர்களுக்கு மேல கிடையாது. அதை வால் ப்ரிண்டிங்னு சொல்லுவாங்க. அந்த 2 கலர்கள்லதான் போடுவாங்க அட்டைலே. அந்த 2 கலர்களுக்குள்ள நீங்க என்ன செய்யணுமோ செஞ்சிக்கலாம். இப்பவெல்லாம், பிரிண்டிங்குக்கு எவ்வளவு செலவழிக்கிறாங்க. பேப்பருக்கு எவ்வளவு செலவழிக்கிறாங்க. அந்த நாள்ல அப்படி கிடையாது. பாக்கப்போனா, சிறுபத்திரிக்கைனா சிறுபத்திரிக்கைதான் அது. ரொம்ப சின்ன அவுட்லேல. கணையாழி ரொம்ப சின்ன அவுட்லேல தான் வந்துது. அதுவும் நான் இருந்தவரைக்கும் அவருக்கு ரொம்ப செலவே கிடையாது. அந்த பத்திரிக்கை நடத்தியபோது ஐ டிட்ண்ட் டிமாண்ட் எனிதிங். இப்ப, நிறைய மாறியிருக்கு. பெரிய அவுட்லே போட்டுத்தான் சிறுபத்திரிக்கை வருது.

சொ.வ: இந்த மாதிரி ஒரு மாறுதல் வரும்னு நீங்க எதிர்பார்த்ததுண்டா?

அ.மி: அப்படி எதிர்பார்க்கலை. ஏன்னா, அந்த டெக்னிக்கே மாறிடுத்து. ஏன்னா, முன்ன எனக்கு இந்த அச்சுக்கோர்த்து போடறதுதான் ரொம்பப் பழக்கம். அதுதான் நேரடியா பார்த்து பண்ணினது. முன்ன, பிரஸ்ஸு ரொம்ப சின்னதா இருந்தது. அவங்ககிட்ட பத்து பதினைந்து பக்கங்களுக்குத் தான் அச்சு இருக்கும். ஒவ்வொரு அச்சா பொறுக்கிப்போட்டு செய்யறதுதான். உடனே அச்சு அடிச்சிட்டு அதைக் கலைச்சு போட்டிடுவாங்க. அதனால முதல்ல கம்போஸ் செஞ்சது வெச்சு, முதல்லியே வேணுங்கற அளவு அடிச்சிடுவாங்க. அதனால, புத்தகம் 1200 காப்பி அப்ப, அதான் அவங்களோட லிமிட். மறுபடியும் இன்னொன்னு போகணும்னா, மறுபடியும் இன்னொரு முறை கம்போஸ் பண்ணணும்.

சொ.வ: அப்படியா?
அ.மி: ஆமாம்.அதனால முதல்ல கம்போஸ் பண்ணதுல எதாவது தப்பு வந்துதுன்னா, அதே தப்புதான் செகண்ட் ப்ரிண்டுல வரும்னு சொல்ல முடியாது. வேற தப்புக்கள் வரும். பாக்கப்போனா, பழைய நூல்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா, 19th ஸெஞ்சுரி புத்தகங்கள் எல்லாம் பார்த்தா ஒரு பிழை இருக்காது. எனக்குப் பழக்கம் அதுதான். இப்ப வேற மாதிரி ப்ராஸஸ்.
சொ.வ: ஒரு விஷயம் கவனிச்சீங்கன்னா, இப்போல்லாம் எளிமையா சொல்ற விஷயங்கள்ல கூட மொழி ரொம்ப சிக்கலா இருக்கு. அடிப்படை விஷயங்களே தமிழ்ல ரொம்ப தப்பாவும், மொழி மாறிப்போயும் வருது. அதை நீங்க கவனிச்சீங்களா? உங்க பீரியட்ல இதை நீங்க பார்த்தே இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
அ.மி: இல்லை, நீங்க என்ன என் பீரியட்லன்னு எதோ நான் ஆதிகாலத்து மனிதன் மாதிரி (எல்லாரும் சிரிக்கிறார்கள்)..

அதெல்லாம் இல்லை, நான் இத பார்த்ததெல்லாம் இல்லை. என்னா ஆயிடும், உங்களுக்கு விஷயம் தெளிவா தெரிஞ்சதுன்னு நீங்க தெளிவா சொல்லிடுவீங்க. இப்ப, பக்கத்து வீட்டிலேர்ந்து ஒரு பையன் கல் எறிஞ்சான்னா, அந்த பையன் எறிஞ்சான்னு உங்களுக்குத் தெரிஞ்சிடும். அது இல்லாதபடி, திடீர்னு ஒரு கல்லு உங்க வீட்ல விழறது. உங்களுக்கு எங்கேர்ந்து விழறதுன்னு தெரியாது. அப்ப, அதை வேற மாதிரி சொல்லுவீங்க. அதனால, உங்களுக்குத் தெளிவு இருந்ததுன்னா, நீங்க சொல்றப்போ விஷயம் தெளிவா இருந்து எளிமையா இருக்கும். அதுவும் இப்பல்லாம் சில பேரு நினைச்சுக்கறது, எளிமையா அப்படி இருக்ககூடாது. படிக்கறத்துக்கு கொஞ்சம் முயற்சி எடுத்துண்டுதான் படிக்கணும், கஷ்டப்படணும். நான் வந்து அந்தமாதிரி..எனக்கு அதுல அவ்வளவு நம்பிக்கை இல்லை. தப்பில்லை, அது வந்து, அந்த காலத்துலயே அந்தமாதிரி எழுதினவங்கல்லாம் வந்திருக்காங்க. பார்க்கப்போனா, அந்த திரு.வி.க கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம் எளிமை மாதிரியும் இருக்கும்; புரியாத மாதிரியும் இருக்கும். எனக்குத் தெரிந்து ரொம்ப முதல்லேர்ந்து கடைசி வரை ஒரே மாதிரி எழுதினது உவே.சுவாமிநாதய்யர். அவருக்குத் தமிழ் ஒண்ணுதான் தெரியும். கடைசி வரைக்கும் அவர் எழுதினது ரொம்பத் தெளிவா இருக்கும். அப்புறம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. அவரும் ரொம்பத் தெளிவா எழுதியிருப்பார். கல்கியும் ரொம்பத் தெளிவா எழுதியிருப்பார். கல்கிக்கும் ரொம்ப clarity உண்டு. அவரோட காரெக்டர்ஸ் கொஞ்சம் லார்ஜர் தேன் லைஃப்னா, அவர் அந்த மாதிரிதான் எழுதிண்டிருந்தார். ஆனா அவர் அப்படி ஆரம்பிக்கலை. சாதாரணமா நம்மளை மாதிரி மனுஷங்களைப் பத்தித்தான் எழுதியிருக்காரு. சொல்ற விஷயத்துல தெளிவு இருந்தா, எளிமை இருக்கும். தெளிவு இல்லாதப்பத்தான் இந்த மாதிரி வார்த்தை ட்விஸ்டு பண்ணி செய்யறது. அது ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்லை.

சொ.வ: இன்னொரு விஷயம். புதுக்கவிதை இயக்கம் ஆரம்பத்தில வந்ததில்லையா? பிச்சமூர்த்தி காலத்து கவிதை மாறுதல்களையெல்லாம் நீங்க கவனிச்சீங்களா? பொதுவாவே, உங்களுக்குக் கவிதை பற்றி வேறொரு பார்வை இருக்கு. ஆனா இந்த புதுக்கவிதை என்பது ஒரு இயக்கம் மாதிரி, change over மாதிரி…

அ.மி: இல்லை, அது வந்து. புதுக்கவிதை. சின்ன சின்ன தகவல்களா கொடுக்கறது இருக்கே. அதாவது, சிலதை கதையா எழுதலாம். புனைகதையா எழுதறோம்.. இந்த மாதிரி சிறு சிறு தகவல்கள் இருக்கே, யாரையாவது கிண்டல் செய்யணும், காமெடி பண்ணனும், அப்படின்னாக்க இந்த புதுக்கவிதை ரொம்பப் பொருத்தமா இருக்கும். அப்புறம், அது பெருசா வந்து, என்னமோ வந்து அது ஒரு பெரிய இயக்கம்னு. புதுக்கவிதை எழுதுவதுன்னு இருக்கே, அது இந்த மாதிரி, ’மாட்’ னெஸ் அண்ட் க்ரேட்னெஸ் மஸ்ட் நாட் அன்வாச்டு கோ’அப்படின்னு வருவதுதான். அதைக் கொஞ்சம் மாத்தி. வந்து, உரைநடைக்கு நீங்க உழைக்கணும். முதல்லேர்ந்து கடைசி வரைக்கும் அதைச் சொல்லி வரவழைக்கணும். கவிதைல, நீங்க இந்த இண்டர்ப்ரெடேஷன் நிறைய கொடுத்திடலாம். அதனால படிக்கிறவனுக்கு நிறைய கஷ்டம் இருந்ததுன்ன்னா, அடடா என்ன அற்புதமான கவிதைன்னு வியந்து போவான். எனக்கு அந்த வியப்புல அவ்வளவு நம்பிக்கை இல்லை.

சொ.வ: காலக்கண்ணாடின்னு ஒரு புத்தகம் வந்திருந்தது. நீங்க கணையாழில எழுதினதுல 15 வருஷத்து இருபது வருஷத்து விஷயங்கள் அதில இருக்கு.

அ.மி: எனக்கு மொதல்லே அந்த காலக்கண்ணாடியப் போடறப்போ எனக்கு அவ்வளவு சம்மதம் இல்லை. பப்ளிஷர் நந்தான்னு ஒருத்தர் இருந்தார். மாசிலாமணியுடைய பிள்ளை. அவர்தான் இதைக் கட்டாயம் போடணும்னு சொன்னார். நான் கட்டுரையை எல்லாம் ஒரு பொருட்டாவே நெனைச்சது கிடையாது. ஆனா அவர்தான் நான் அதப் போடணும்னு ரொம்ப நிர்பந்தப்படுத்தினார். அதனால, அவருக்காகச் சேர்த்து கொடுத்தேன். பார்க்கப்போனா புத்தகமா வந்தப்போ சில விஷயங்கள் எல்லாம் விடுபட்டுப் போயிடுத்து. பங்களாதேஷ் போர் நடந்தப்போ, அயூப்கான்தான் பாகிஸ்தானுக்குப் பிரசிடெண்டு. அயூப்கான் ஒரு பெரிய அறிக்கை விட்டார். எந்த நாட்டுக்கும், முடிவெடுக்கிறவர் இருக்காரே அவரை பொறுப்பேத்துக்கிறவர் ஆக்கணும்னு அவர் சொன்னார். ஹி ஷுட் பி ஏபிள் டு டேக் ரெஸ்பான்ஸிபிலிடி. அந்த மாதிரி ஆட்கள் இல்லாமப் போனாத்தான் சண்டை கிண்டையெல்லாம் வந்திடுது. ரொம்ப நுட்பமா அதைச் சொல்றார். அதைப் பத்தி நான் ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரை இல்லை அதில. அந்தப் புத்தகத்த இப்ப திரும்பவும் படிச்சேன். இப்ப, புது எடிஷன் வந்திருக்கு. நற்றிணை பதிப்பகத்துல போட்டிருக்காங்க. பரவாயில்லை.. காலக்கண்ணாடி அந்த 20, 25 வருஷத்துக்கு ஒரு மாதிரியா, ஒரு சின்ன மைனர் ரிக்கார்ட்.

என்னுடைய பெரிய மகன், இப்போ அஹமதாபாத்தில் இருக்கான். அஹமதாபாத்துல படிக் கிணறுகள் அப்படின்னு இருக்கு. ஸ்டெப் வெல்ஸ்னா என்னன்னா, வெளியிலேர்ந்து பார்த்தா, ஒரு பேலஸ் போல, அதுல கதவுகள். திறந்து உள்ளப்போனா லேயர் லேயரா படிப்படிப்படி.  கீழ போனா, கீழ தண்ணி இருக்கும். அதுக்குப் பேரு ஸ்டெப் வெல். இந்தப் படிக் கிணறுலெ விதவிதமான மாதிரிகள் இருக்கு. அங்கெல்லாம் தண்ணி அவ்வளவா கிடையாது. தெற்குல எல்லாம் நிறைய தண்ணீர், மழை பெஞ்சிடும். அங்க மழை ரொம்பக் கொஞ்சமாத்தான் பெய்யும். அதெல்லாம் சேர்த்து வெக்கறதுக்குன்னு அந்த மாதிரி படிக் கிணறுகள். ஹுமாயூனுக்கு முன்னாடி ஒரு ராஜா இருந்திருக்கான். ஏன்னா, ஹுமாயூன் ஒரு முகல். இந்த முகல் பீரியடுக்கு முன்னாடியே ஒரு முஸ்லிம் ராஜா வந்து, அங்க பெரிய படிக் கிணறு கட்டி, அங்க மசூதியும் கட்டிட்டான். ஹுமாயூன் அதப் போயி இடிச்சு அழிச்சுருக்கான். ஹுமாயூன் அந்த முகல் ராஜாக்கள்லயே ரொம்ப சாதுன்னு பேரு. ஏன்னா அவன் ஒருத்தன்தான் அவன் கூடப்பிறந்தவங்களக் கொல்லலை. எல்லா இடத்திலியுமே ராஜ்ஜியத்துக்கு ரெண்டு பேரு இருந்தாக்க, நிச்சயமா சண்டைதான். நிச்சயமா கொலைதான். ஆனா, ஹுமாயூன் ஒருத்தன்தான் அவனோட சகோதரர்களைக் கொலை பண்ணலை. மத்தவங்க எல்லாரும் தீர்த்திடுறாங்க. யாருமே விட்டு வைக்கலை. அவ்வளோ, அந்த மாதிரி இருக்கிற ஹுமாயூன், இங்க போயி, அது மசூதி அது. அதைப் போயி இடிச்சித் தள்ளியிருக்கான்.

இப்போ நாம இதை எல்லாத்தையும் எடுத்துண்டோம்னா உடனே ஹுமாயூனும் பெரிய அரக்கன்தான். ஆனா அதை பெரிசா பில்டப் பண்ணிடக் கூடாது. ரொம்ப பழயதுலே போறதும்… ஏதோ ஓரளவுக்கு நமக்குத் தெரிஞ்சுக்கறது. ரைட்டு. ஆச்சா இப்போ போயி அதெல்லாம் நெனச்சுண்டு நாம பெரிய விரோதமோ துவேஷமோ பாராட்டறது…(கூடாது) எதுக்குச் சொன்னேன் எனக்கு இந்த இவர் என்னைப் பொருத்தவரைக்கும் இது ஒரு மைனர் ரெகார்ட், அதுக்கு மேலே அதுக்கு வேறே ஒண்ணும் மதிப்பு இல்லைன்னுதான் நான் நினைக்கறேன்.. ரொம்பவும் கோயிங் வெரி மச் இன் டு த பாஸ்ட் இருக்கே, என்ன தெரியும் நமக்கு?…நேத்திக்கு நடந்ததே நம்மளுக்கு சரியாத் தெரியலை.

சொ.வ: அது ஏன் மைனர் ரெகர்ட் இல்லைன்னு சொல்லிடறேன். பொதுவாவே நம்மளுடைய இலக்கிய மதிப்பீடும் சரி, பொதுவான உலகத்திலயும் சரி. நடக்கறதை எல்லாம் அங்கங்கே பதிவு பண்ணுகிறன்ற பழக்கம் நம்மிடையே இல்லை. ரொம்ப கொஞ்சம் பேர்தான் அந்த மாதிரி பதிவு பண்றாங்க. அதனாலே என்ன ஆச்சுன்னா எதையுமே நாம எழுதி வைக்காத சூழல்ல உங்க பதிவு முக்கியமானதாப் படுது.

அ.மி: நீங்க இப்போ இது ஒரு மைனர் ரெகார்ட் இல்லே ரொம்ப மேஜர் டாகுமெண்ட்தான்னு சொன்னா சந்தோஷம்தான். நான் சண்டை போடப் போறதில்லை.(சிரிக்கிறார்)

சொ.வ: ஜெமினி ஒரு பெரிய இன்ஸ்டிட்யூஷன். நீங்க அந்த ஜெமினி இன்ஸ்டிட்யூஷன்லே இருந்திருக்கீங்க. நீங்க எழுதினதையெல்லாம் படிக்கும்போது நாங்க பார்த்தறியாத பரிமாணங்கள்லாம் எங்களுக்குக் கெடைச்சிருக்கு. பின்னாடி வந்து சம்பந்தப்பட்டவங்க அங்கே இருந்தவங்ககிட்டே பேசும்போது நீங்க சொல்ற விஷயத்தோட உள்நுட்பங்கள், அந்த ஆர்கனைஸேஷன் வளர்ந்த விதம், கேரக்டர்ஸ், எப்படி நடந்தது, ஒரு சினிமா தயாரிக்கறதுலே இருக்கற நுட்பங்கள் அதை வெச்சு நீங்க எழுதிய சிறுகதைகள் இருக்கே

அ.மி: நிறையவே எழுதியிருக்கேன்.

சொ.வ: இதுவந்து இதுவரைக்கும் பார்க்காத ஒரு தரிசனம். எவ்வளோ ட்ரை பண்ணினாலும் ஒரு மனுஷனுக்குக் கெடைக்காது. அந்த வகையிலே அது ஒரு பெரிய ரெக்கார்ட் தானே.

அ.மி: இருந்துட்டுப் போகட்டுமே. ரெக்கார்ட்னா நான் ஒடனே ரெக்கார்ட் இல்லேன்னு சண்டை போடுவேனா. ரெக்கார்டா இருந்தா அது நல்லதுதான். ஏதோ ஒரு விதத்துலே அது படிக்கறவருக்கு மகிழ்ச்சி கொடுத்தா ரொம்ப சந்தோஷம்தான் அது. ஆனா அது ஒரு காலம் அது. அந்த காலத்திலே அதை மறுபடியும் நாம பார்க்க முடியாது. இப்போ ஜெமினி ஸ்டூடியோ வந்து 11 ஏக்கரோ 13 ஏக்கரோ. ஊர் நடுவிலே 13 ஏக்கர். ஆனா அதெல்லாம் ஒண்ணுமே இல்லெ. இப்போ இந்த YMCA நீங்க போனீங்கன்னா, அதுலே இந்த Book fair போறத்துக்கே கார்லயே ஒரு 10 நிமிஷம் போகவேண்டியிருக்கு. அதுக்கப்பறம் அந்த புக் ஃபேர் எவ்வளவு பிரும்மாண்டமா இருக்கு. அப்படின்னா அதுக்கு பின்னாலே எவ்வளவு இடம் இருக்கும், இந்தப்பக்கம் இவ்வளவு இருக்கு. அதுக்கப்பறம் வெளியில வரப்ப 10 நிமிஷம் ஆறது அங்கிருந்து வெளியிலே வரத்துக்கு. அதாவது அவ்வளவு பெரிய ப்ராப்பர்ட்டி அது. அவ்வளவு பெரிய ப்ராப்பர்ட்டிய அந்த நாள்லயே YMCA காரங்க ஏற்பாடு பண்ணிட்டாங்க. இவர் வந்து, இது 13 ஏக்கர். அப்போ ரொம்ப பெரிசுன்னு நெனச்சிருப்பார் . நாகேஸ்வரராவோட அன்னப்பூர்ணா ஸ்டூடியோ 22 ஏக்கர். அவங்களுக்கெல்லாம் நெலத்துக்கு அப்படி திடீர்னு ஒரு மகிமை எப்படியும் வரும்னு ஒரு முன்நோக்குப் பார்வை இருந்துருக்கு.

ASOKAMITHTHIRAN-4

சொ.வ: நீங்க இருந்தப்போதானே ஜெமினில அவ்வையார் சந்திரலேகா படமேல்லாம் எடுத்தாங்க?

அ.மி: ஆமா. அப்போதான் எடுத்தாங்க

சொ.வ: இப்போ பாத்தாக்க அதெல்லாம் ஒண்ணும்…எங்க அப்பாவோட தலைமுறைலேல்லாம் சொல்லுவார் அது பெரிய பிரும்மாண்டமா ஒரு டென் கமாண்ட்மெண்ட்ஸ் மாதிரி எடுத்திருக்கார்னு…

அ.மி: இல்லே இல்லே. அவர் ரொம்ப நன்னா செய்யணும்னுதான் செஞ்சார். கரெக்ட்

சொ.வ: இப்போ வந்து டெக்னிகலா அவ்வளவு பிரமிப்பு ஏற்படலை இல்லை சார். பின்நோக்குப் பார்வைல ஒரு மாதிரி…

அ.மி: இப்போ இருக்கற டெக்னிக்லே இன்னும் பெரிய பிரமிக்க வைக்கிறதெல்லாம் சாத்தியம். இப்போ இந்த ஒரு கம்ப்யூடரை வெச்சிண்டு எல்லாமே பண்ணிடலாம். உண்மையா பாக்கப்போனா Ship of Theseus னு ஒரு படம், Clash of the Titansனு ஒரு படம். அந்தப் படம். நான் பிட்ஸ்லே பாத்தேன். அந்த பிட்ஸ்லயே அது அவ்வளவு பிரும்மாண்டமான திட்டங்களெல்லாம் தெரிஞ்சது. கோச்சடையானுக்கு ட்ரெயிலர் ஒண்ணு பாத்தேன் கோச்சடையான் இன்னும் ரிலீஸ் ஆகல்லை. ஆனா கோச்சடையானுக்கு அவங்க இரண்டு மூணு ட்ரெயிலர்ஸ் தயார் பண்ணிருக்காங்க அதுலெ ஒரு ட்ரெயிலர் இருக்கு இது மாதிரி இருக்கு ஸார் Ship of theseus, Clash of Titans அந்த ஸ்கேல்ல இருக்கு. அதாவது இப்போ.வந்து நெஜம்மாவே அந்த மாதிரி பிரும்மாண்டமெல்லாம் செய்யாமலே பிரும்மாண்டமான உணர்வு ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்களெல்லாம் இருக்கு.

சொ.வ: டெக்னாலஜி இல்லாம மத்த விஷயங்கள்லாம் எல்லாம் எப்படி இருந்தது ஜெமினிலே. நீங்களே சொல்லியிருக்கீங்க திரைக்கதையை எல்லாம் சரியா ப்ளான் பண்ணணும்…..

அ.மி: அதெல்லாம் ரொம்ப நன்னா இருக்கும். பாக்கப்போனா அதுலெ நிறைய விஷயங்கள் இருக்கு. அதுலே நிறைய ஹ்யூமர் இருக்கும்.உண்மையா பாக்கப் போனா….அதுலே என்ன பண்ணுவாரு….இந்த மங்கம்மா சபதம்னு ஒரு படம். மங்கம்மா சபதத்துலே என்ன ஒரு சின்ன ராஜா. அவனுடைய பையன் வந்து ரொம்ப பிடிவாதக்காரனா இருப்பான். அவன் வந்து ஒரு கிராமத்துப் பொண்ணை பாக்கறான். அந்தப் பொண்ணை கலியாணம் பண்ணிக்கணும்ங்கறான். அவ முடியாதுங்கறா. அப்போ என்ன பண்ணுவா இந்த ஆளுங்களெல்லாம் போயி அவ வீட்டுக்குப் போயி அப்பாகிட்டே பேசுவா.

இந்த மாதிரி எங்க ராஜா ஒங்க பொண்ணை பாத்தாரு…

ரொம்ப சந்தோஷங்க

அப்புறம் அவருக்கு பொண்ணை ரொம்ப புடிச்சுப் போயிடுத்து

ரொம்ப சந்தோஷங்க

இளவரசருக்கு ஒங்க பொண்ண கட்டிக்குடுக்கணும்.

அவர் உடனே நிறுத்திடறராரு ‘அது வேணாங்க. அது சரியில்லை’

இல்லே இல்லே ராஜாவே கேக்குறாரு. அவர் பையனுக்கு கேக்கறரு

இல்லே வேணாங்க வேணாம்.

இதெல்லாம் இந்த நீளம் இருக்கும் படத்திலே.

என்னய்யா இது நீ இந்த மாதிரி சொல்றே. பெரிய அதிருஷ்டம் உன் வீட்டுக்கு முன்னாலே வரப்போ நீ இப்படி சொல்றே.
அப்போ உடனே அவ அப்பா
’அவன் வந்து களத்துமேட்டுலே வந்து ஓடிவந்து அவ கையை புடிச்சானா? அவனுக்கு எப்படி என் பொண்ணை குடுக்கறது?’

அதாவது அது வரைக்கும் பணிவா இருக்கற அந்த அப்பா திடீர்னு அப்படி ஒரு வெடிக்கற மாதிரி பேசுவார். அப்படியே கலகலத்துப் போயிடும். அந்த மாதிரியான ஒரு காட்சிய இப்போ நாம அப்படியெல்லாம் கன்ஸீவ் பண்ணறதில்லை. உடனே அந்த மாதிரி ஒரு கலகலப்பு வரமாதிரி இருக்கே, பிரமிச்சுப் போற மாதிரி, பேச்சுலேதான். அது.

சுப்பையா பிள்ளைன்னு ஒருத்தர் நடிச்சார். அந்த காலத்திலே அவர் பேரே அப்பா சுப்பையாப் பிள்ளை. அவர் எப்போவும் அப்பாவாதான் நடிப்பார்…கஷ்டமா இருப்பார். எங்கியோ ஒரு சமயத்திலே அவர் இருமல் வரும் . அஹ் அஹ் னு. இருமல் வந்து அவர் செத்து போகப்போறார்னு அர்த்தம். (சிரிப்பு) சரி, இன்னும் பத்து நிமிஷத்துலே அவரோட இது முடிஞ்சுடப்போறதுன்னு…அந்த அப்பா சொல்றேன் அவ்வளவு பிரமாதமா பண்ணியிருப்பார். See, இந்த மைனர் கேரக்டர்ஸ் இருக்கே. அதெல்லாம் நெஜம்மா ரொம்ப கவனமா பண்ணித்தான் செய்யறது. பாக்கப்போனா இன்னிக்கு அந்த இவர் வரல்லை. வி.ஸ்ரீனிவாஸன்., வ.ஸ்ரீநிவாசன். அவர் வந்து கோயம்பத்தூர்லே இருக்கார், கோயம்புத்தூர்லேயா, ஸ்ரீரங்கத்திலேயா…

சொ.வ: ஸ்ரீரங்கத்துலே இருக்கார்.

அ.மி: அவர் ஸ்ரீரங்கத்துலே இருக்கார்னா கோயம்புத்தூர்லே இருக்கேம்பார்.. கோயம்புதூர்லே இருக்கார்னா ஸ்ரீரங்கத்துலே இருக்கேம்பார். அவருக்கு ஒரு friend பார்த்தசாரதின்னு பேர். அவன் ராயர் பையன். இந்த நாராயண் ராவோட பேரன். L.நாராயண்ராவ்னு ஒருத்தர் ஜெமினில Staff artistட்டா இருந்தார். அதாவது மாதாமாதம் சம்பளம் வாங்கிண்டிருப்பார். என்ன 100, 150 ரூபா இருக்கும். ஆனா, ரொம்ப பிரமாதமா நடிப்பார். எல்லாமே நகைச்சுவை வேஷங்கள்தான். ஆனா அவர் நகைச்சுவை பண்ற மாதிரியே தெரியாது. அப்படி விழுந்து விழுந்து சிரிக்கற மாதிரி இருக்கும். ரொம்பப் பெரிய artist. ரொம்ப பெரிய கலைஞர் அவர். ஆனா கடைசி நாள்ளே அவருக்கு சினிமாலே ஒண்ணும் கெடைக்கலை,

அந்த நாராயண் ராவை, இந்த அவ்வையார் நீங்க சொன்னீங்களே அவ்வையார்லே அவர்தான் வந்து ஒரு கஞ்சனா இருப்பார். மொதல்லே வந்து ‘அப்பா, என்ன கவிதை இது, இந்தக் கவிதைக்கு நான் யானை குடுத்துடலாம்” ம்பார்.

ஆகலாம் சாமி யானை குடுத்துடலாம் நாளைக்கு வாங்க அப்படீம்பாங்க.

அவ்வையார் போயிட்டு அடுத்த நாள் வருவாங்க. அடுத்த நாளைக்கு ‘ஆமா, யானைன்னா யானைலே நீங்க எப்படி ஏறுவீங்க, ரொம்பக் கஷ்டம். ஆனா நீங்க நெறைய எடங்களுக்குப் போறீங்க.. அதுனாலே யானைக்கு பதிலா உங்களுக்கு ஒரு குதிரை குடுத்துடறேன். நாளைக்கு வாங்க.’

சரின்னு போயிட்டு, அடுத்த நாள் வந்தா,

‘குதிரை, நான் யோசிச்சுப் பாத்தேன்…குதிரையை எப்படி கட்டி சமாளிச்சு, அதுக்கு புல்லு கில்லு வாங்கி போட்டு, அதுக்கு பதிலா நான் வந்து உங்களுக்கு ஒரு மாடு குடுத்துடறேன். நாளைக்கு வாங்க.’

இப்படியே சொல்லி கடைசீலே வந்து எல்லாம் சொல்லிட்டு கடைசீலே உங்களுக்கு ஒரு துண்டு குடுத்திடறேன். போர்வை. குளிர்றப்போ நீங்க போத்திக்கலாம். உங்களுக்கு ஒரு துண்டு குடுத்துடறேன். நாளைக்கு வாங்க”

அப்போ அவங்க ஒரு நல்ல பாட்டு இருக்கு. அது ரொம்ப நல்ல பாட்டு. “கரியாகி, பரியாகி காட்டெருமை தானாகி” அப்படீன்னு வரும் அது. அது அவ்வையார் பாடல்லே இருக்கு அது.. நீங்க பழைய விநோத ரச மஞ்சரின்னு ஒரு புத்தகம் இருக்கு. அதுலே இந்தப் பாட்டு இருக்கும். பாடீட்டு கடைசீலே அவன் பேரு ஏதோ அதெல்லாம் பாடிட்டு மொழத் துணிக்கு வந்துடும் அது. அவ்வை இதை பாடிட்டு போயிடுவா. அப்புறம் அவனுக்கு வயித்து வலி வந்துடும். அப்போ அவன் கூட ஒரு ஆள் இருப்பான்.

‘என்னங்க இப்போ போயி வயித்து வலின்னுட்டு. அந்தக் கெழவி போயிட்டாங்க.’

‘இல்லேப்பா நெஜம்மாவே வயித்து வலி’

(சிரிக்கிறார்.)

அப்புறம் ரெண்டு பேரும் ஓடுவாங்க.

இதுலே என்ன இந்தக் கதைலே இன்னோரு பெரிய விஷயம் என்னன்னா உதவி ஆள் வேலை செய்யறவனோட நடிப்பு ரொம்ப யதார்த்தமா இருக்கும். அவன் நெஜ வாழ்க்கைலே இப்படி இருந்துண்டு கபால்னு ஒரு நாள் தாம்பரம்லே போயி தூக்கு போட்டுண்டான். அதாவது யாராலயும் நம்பவே முடியலை. இவன் ஏன் தூக்கு போட்டுண்டான், என்ன கஷ்டம்னு. ஒண்ணுமே புரியலே அப்படி ஒண்ணும் குடும்பத்துலே. பெரிய கஷ்டமா இருந்த மாதிரி தெரியல. செத்துப் போகும்படியா, தற்கொலை பண்ணிக்கும்படியா என்ன நெருக்கடின்னு நமக்குத் தெரியாது, ஆனா அந்த ஸீன் எல்லாம் வரப்பல்லாம் நான் ரொம்ப நெனச்சுக்கறது அவன் பேர் கூட மறந்து போச்சு.

சொ.வ: இன்னொரு சிறுகதை, இருக்கு இந்த பீரியட்லே ஒரு ப்ரொடக்‌ஷன் செக்‌ஷன்லே இருந்த ஒருத்தர் விஷயம் தெரிஞ்சவர். முதலாளிக்கு வேணுங்கப்பட்டவர். அவருக்கு வேலையே இருக்காது. தூங்கிண்டே இருப்பார் ஈஸீசேர்லே. திடீர்னு ஒருநாளைக்கு அவர் வீட்டுக்கு வந்த ஒரு ப்ரிண்ட் வந்து அவர் மாஸ்டர் ப்ரிண்ட்னு ஒண்ணு கண்டு பிடிப்பார். அந்தக் கதை இருக்கு இல்லையா. ஒவ்வொரு இன்ஸ்டிட்யூஷனுக்குள்ளயும் திடீர்னு ஒருத்தர் பிரபலம் ஆகி அப்பறமா காணாம போயிடறாங்க இல்லயா?

அ.மி: இல்லே இல்லே அது ரொம்ப முக்கியம் அது. அதாவது இப்போ அந்த டெக்னிக்கே இல்லே. முன்னே என்ன பண்ணுவாங்க, நெகடிவ். மொதல்லே வந்து காமெராலேர்ந்து எடுக்கறது நெகடிவ். சாதாரணமா அப்போ அந்த பழங்காலத்து காமெராலெல்லாம் எடுக்கறது நெகடிவ் எடுக்கறது. அந்த நெகடிவ் எடுத்துண்டு அந்த நெகடிவ்க்கு எதாவது ஆயிடுத்துன்னா என்ன பண்றது. ஸோ அந்த நெகடிவ்லேர்ந்து அதுக்கு ஒரு ஸ்பெஷல் பாஸிடிவ் ப்ரிண்ட். அதுக்கு பேரு மாஸ்டர் பாஸிடிவ்னு பேரு. அது கொஞ்சம் வெலை அதிகம். ஆனா சாதாரணமா பெரிய ப்ரொட்யூஸர்ஸ் எல்லாருமே ஒரு மாஸ்டர் பாஸிடிவ் எடுத்துடுவாங்க. ஏன்னா நீங்க அந்த மாஸ்டர் பாஸிடிவ்லேர்ந்து மறுபடியும் நெகடிவ் பண்ணி மறுபடியும் நெறைய ப்ரிண்ட்ஸ் பண்ணலாம். ஸோ இந்த நெகடிவ்வையும் பாதுகாத்து வைப்பாங்க. மாஸ்டர் பாஸிடிவ்வையும் பாதுகாத்து வைப்பாங்க. ஒரு தரம் என்ன பண்ணினான் ஒரு நார்த் இண்டியன் வந்து நான் உங்களுக்கு வந்து ஐ வில் ஸப்ளை யூ வித் பாஸிடிவ், நீங்க ப்ரிண்ட் அடிச்சு குடுத்தா போறும்னு அவன் வந்து பாஸிடிவ் ஒரு 50 ரீல் அனுப்பிச்சான். அதெல்லாமே மாஸ்டர் பாஸிடிவ் ரீல்கள். அதுலே நீங்க ஒரு ப்ரிண்ட் னு நெனச்சு அவனுக்குக் குடுப்பீங்க இல்லையா அதுலே ஒரு ப்ரிண்டை வெச்சு அவன் 50 ப்ரிண்ட் பண்ணிடுவான். அப்பல்லாம் கொட்டகைகள்ளேதானே பாக்க முடியும். கொட்டகைகள்ளே காட்டறதுக்கு 50 எடங்கள்ளே காமிச்சுடுவான். ஒரு ப்ரிண்டை வெச்சுண்டு. அதிலேர்ந்து அவன் 50 ப்ரிண்ட் பண்ணிடலாம் அவனுக்கு. அதை அவர் கண்டுபிடிச்சார். ரைட். அது பேர் மாஸ்டர் பாஸிடிவ்னு பேரு.

IMG_5004

சொ.வ: சார் அப்புறம் உங்களோட ‘இன்னும் சில நாட்கள்’ அதுல ஒரு மிஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ். ஒரு சித்த புருஷர். அவர் வர்றதுல இதுவரைக்கும் பாக்காத இந்திய மெய்யறிவோட ஏதோ ஒரு சுவடு அதுலே இருக்கும். இந்த அனுபவமெல்லாம்..உங்களுக்கு எப்படி, இந்த கதையெல்லாம் எப்படி?

அ.மி: அது நெஜம்மாவே நடந்தது சாமி. நெஜம்மாவே. பாக்கப்போனா இங்கேயே திருக்கழுக்குன்றத்திலேதான். மஹாபலிபுரம் ஒரு டைரெக்ஷன்லே போனா இன்னொரு டைரெக்ஷன்லே போனா திருக்கழுக்குன்றம்னு ஒண்ணு இருக்கு. அங்கே மலையெல்லாம் இருக்கு. அங்கே ஒரு சாமியார் ஒருத்தரு அவர் வந்து அவருடைய சாதனையை அவருடைய தபஸ்ஸை இந்த மாதிரி நாடியை பேஸ் பண்ணித்தான் செஞ்சார் அவர் பேர்கூடத் தெரியும் எனக்கு. சுப்பையான்னு பேரு. நாடியை இப்போ எடுத்துடுவார். நாடிலே ஏதோ மந்திரம் கிந்திரம் எல்லாம் சொல்லிட்டு இத்தனை நாளுக்கப்புறம் ஒனக்கு சித்தி ஆயிடும் அப்டீன்னு, அந்த பவர்ஸ் வந்துடும் அப்படீன்னிருக்கார்.. இவர் வந்து… பவர்ஸ் வந்துடும் அப்டீன்னு சொல்லலை. ஏதோ சொல்லியிருக்கார். எப்பவோ படிச்சது. இவர் ரொம்ப நாள் பல வருஷங்கள் அவர் தபஸ் பண்ணியிருக்கார். அவருக்கு யாரோ ஒரு நாளைக்கு ஒருவேளைக்கு கொஞ்சம் சாப்டறதுக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கா. ரொம்ம்ப நாளுக்கப்பறம் அவருக்கே ஒரு சந்தேகம் வந்திருக்கு. நாம பண்ணினது சரியா இதெல்லாம் சரியான பாதைலே இருக்கா அப்படீன்னு.. சந்தேகம் வந்து அவர் மலைலேந்து கீழே விழுந்து செத்துபோயிட்டார். நெஜம்மாவே இது நடந்தது.

இது 1920- 25 வாக்கிலே நடந்திருக்கும். 1930. அப்படீன்னா எண்பது ஆண்டுகள். அப்படின்னா எவ்வளவு, எண்பது ஆண்டுகள் முன்னாடி அந்த எண்பது ஆண்டுகள் முன்னாடி இந்த மாதிரியெல்லாம் உண்டு. அப்படி தபஸ் பண்ணறது. அப்படியெல்லாம். இப்பவும். அந்த நாகாக்களெல்லாம் இருக்காங்களே, அவங்களெல்லாம் பாத்தா ஆச்சரியமா இருக்கு. அவங்கல்லாம் இந்த இமாலய மலெப் பக்கங்களிலேர்ந்து வராங்க. இமயமலைத்தொடர்லேர்ந்து…அப்ப்ப்படி நடுக்கித் தள்ளும். அந்த ஆளு வெறும் ஒடம்போடயே வருவான். அதுலே சில பேர் கோவணம் கட்டிண்டிருப்பாங்க. சில பேர் நிர்வாணமாவே வருவாங்க. அந்த நிர்வாணமா இருக்கறது அவங்களுக்குக் கூச்சமே இருக்காது. இப்போ நம்பளுக்கு இந்த சட்டைலே ஒரு பொத்தான்.. இன்னிக்கு அதுதான் நான் சொன்னேன்…பட்டன்லாம் போட்டுக்கோங்க பட்டன்லாம் போட்டுக்கோங்கன்னாங்க. அதாவது அவ்வளவு நமக்கு பட்டன் ஒழுங்காப் போட்டுக்கறதுக்கு அவ்வளவு கூச்சம்.சரியா இல்லைன்னா. நமக்கு கூச்சம். அதாவது நீங்க இப்படி ஒரு மாதிரி இருந்துட்டீங்க, அப்பறமா பாத்தீங்கன்னா ஒரு மாதிரியா கோணலா போட்டுண்டு இருந்துட்டீங்க. ஐயயோ இவ்வளவு நேரம் கோணலா போட்டுண்டு இருந்துட்டோமேன்னு ரொம்ப வருத்தப்படுவீங்க. ஆனா அந்த நாகாக்களுக்கு கூச்சமே கெடயாது. பொறந்த மேனிக்கு அப்படியே கிடு கிடு கிடுன்னு வந்துடுவாங்க. அதுக்கு மேல, தலை கிலையெல்லாம் அப்படியே சடை சடையா இருக்கும். தாடியெல்லாமும் சடையா இருக்கும். அவன் எதை எதிர்பார்த்து அந்த மாதிரி இருக்கான்? நமக்கு சொல்லவே முடியலை.

அதுனாலே இந்த இந்தியாலே அந்த மாதிரியான ஆச்சரியங்களெல்லாம் நடந்திருக்கு. ஆனா வேறுநாடுகளிலேயும் இருந்திருக்கலாம். ஆனா அது நமக்குத் தெரியாம இருந்திருக்கலாம். இந்தியாலே கும்பமேளா சமயத்துலே… அஞ்சு கும்பமேளா இருக்கு. எந்த கும்பமேளா சமயத்துல நீங்க போனாலும் இந்த நாகாக்கள் வந்துடுவாங்க. அவங்க எங்கேர்ந்து வருவாங்கன்னா அங்கே..ர்ந்து வருவாங்க. 500 மைல் நடந்தே வந்துடுவாங்க. நான் ஒரு தரம் காசியிலே பார்த்தேன். அப்போ அங்கே அந்த ஒரு… இதுக்குப் பேர் ஸ்ராவண்னு பேரு. தமிழ்லே நம்ப திருவோணம்னு நாம சொல்லுவோம். ஓணம். ஆனா அது வந்து ஓணம் இல்லே. ஒவ்வொரு மாதமும் 27 நாளைக்கு ஒருதரம் அந்த ஓணம் வரும். ஏதோ ஒரு குறிப்பிட்ட ஓணத்துக்கு அவங்க என்ன பண்ணுவாங்க, எங்கெங்கேந்தோ உத்தரப் பிரதேசத்திலே இருக்கற இந்த கிராமங்களிலேர்ந்தெல்லாம் அவன் அப்படியே வந்துருவான். வந்துட்டு இங்கே வந்து குளிச்சுட்டு, போயிடுவான். அவன் என்ன பண்ணுவான், மொதல்லே ப்ரயாகை போவான். அலஹாபாத். அங்கேர்ந்து அந்த த்ரிவேணிலேர்ந்து ஒரு பாத்திரத்திலே தண்ணியை எடுத்துண்டு வருவான் அந்தத் தண்ணியைக் கொண்டுவந்து இங்கே கொட்டணுமாம். அவனெல்லாம் பாத்தா ரொம்பப் பரிதாபமா இருக்கும். ரொம்ப உடம்பு வதங்கி வத்தல் சாப்பாடு கெடயாது இது கெடயாது, எந்தவிதமான பாதுகாப்பும் கெடயாது அவனுக்கு. நாளைய பத்திய எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது அவனுக்கு. ஆனா அவன் வந்து இந்த காரியத்தை பண்ணுவான். எங்கேர்ந்தோ ஒரு சின்ன கிராமத்துலேர்ந்து பிரயாக் போகணும். அங்கேர்ந்து தண்ணிய எடுத்திண்டு அங்கேர்ந்து நடந்தே வருவான்.200 மைல்.காசிக்கு வந்து அங்கே கங்கைலே கொட்டிட்டு மறுபடியும் அப்படியே போயிடுவான். அந்த மாதிரியான நிகழ்ச்சிகள் இங்கே இருக்கு.

—OooooO—
IMG_5002

பின் குறிப்பு:

பேட்டி திடீரென்று முடிந்தது போலத் தெரிகிறதா?  சில காரணங்கள் உண்டு. பேட்டியின்போது ஓரிடத்தில் ஏற்கனவே நிறையப் பேசி விட்டோம், இவர் களைத்திருப்பார் என்று தோன்றியதால் மேலும் கேட்கத் தயக்கமாக இருந்தது. இன்னொன்று, இவ்வளவு குறுகிய நேரம் பேசி இவருடைய 50 ஆண்டு கால இயக்கத்தின் போக்கையோ, சாரத்தையோ அப்படி உடனே பெற முடியாது என்று எனக்குப் புரிந்தது போலவே வந்திருந்த சிலருக்கும் தோன்றியிருக்கும் என்று எனக்குப் பட்டது. தவிர, விடியோக்ராஃபரும் 5 மணிக்குத் தன் இன்னொரு வேலைக்குக் கிளம்புவதாக இருந்தார். அதற்கப்புறம் தொடர்வதானால் ஒரு இடைவேளை விட்டு ஓய்வெடுத்துக் கொண்டுதான் தொடர்ந்திருக்க முடியும். அதற்கான நாளோ, நேரமோ அதல்ல என்று எனக்குப் புரியத் துவங்குகையில் அசோகமித்திரனே இத்தனை நேரத்துக்கு மேல் இருந்து பேசுவது கடினம் என்பதாகத் தெரிவித்தார். தன் உடல் அவ்வளவுதான் தாக்குப் பிடிக்கும் என்பதாக இருந்தது அவர் சொன்னது.

மேற்கின் பல இலக்கியப் பத்திரிகைகளில் எழுத்தாளர் பேட்டிகளைப் படிக்கையில் ஒரு நிதானத்தோடு, கட்டமைக்கப்பட்ட உருவுடனும், தீர்மானமான உரையாடலாகவும், கருத்துகளின் செறிவான பரிமாற்றமாகவும் அவை அமைவது எப்படி என்று யோசித்திருக்கிறேன். அவை நேர்ப்பேச்சில் அமைவன அல்ல, நேர்ப்பேச்சில் ஓரளவுதான் அத்தகைய நேர்த்தி கிட்டும், பலவும் செப்பனிட்டு, மறுபடி மறுபடி கருத்துப் பரிமாற்றங்கள் நடந்த பின்னரே அப்படி ஒரு தெளிந்த உருவுக்கு வந்து சேருகின்றன என்று முன்னர் ஊகித்தது சரியாக இருக்கும் என்று இப்போது தெரிகிறது.

அப்படித் தொடர்ந்த கருத்துப் பரிமாற்றம் நடத்த வாய்ப்பில்லாத போது அவ்வப்போது சிறு துண்டுகளாகத்தான் இந்த உரையாடல்களை நடத்த வேண்டும் என்று தெரிகிறது. ஓவ்வொரு துண்டு உரையாடலிலும் சில கருத்துகளை மையமாகக் கொண்டு பேசி விட்டு, விட்டு விடலாம். பின்னர் ஒரு பத்திருபது உரையாடல்களின் தொகுப்பாகப் படித்துக் கொள்வது உதவும்.

இந்த பேட்டிக்குப் பிறகும் அசோகமித்திரனைச் சில தடவை சந்திக்க வாய்ப்புகள் கிட்டின. அவை அவரே பேட்டியில் சொல்வது போல சில மிகச் சின்ன விஷயங்களைச் சுற்றி அமைந்த சந்திப்புகள். ஆனால் மொத்தமாக இரண்டு மணி நேரம் போல அவருடன் பேச முடிந்திருந்தது. அவற்றில் குறிப்பிட்ட குவி மையம் என்று ஏதும் இல்லாதபோதும், அவர் பற்பல விஷயங்களை எப்படிப் பார்க்கிறார், எப்படித் தனக்கென்று ஒரு அணுகலைத் தயாரிப்புகள் ஏதும் இல்லாதே அடைகிறார் என்பது புரிந்தது. ஏனெனில் அதுவே அவருடைய இயல்பாக உள்ளது.

***

தொடர்ந்த உன்னிப்பு என்பது மிகக் கடினமான ஒரு நிலை, செயல். அசட்டை என்பது எளிது, எங்கும் வியாபிக்க அதற்கிருக்கும் பேராசை சொல்லவொணாதது. அதை மீறித்தான் ஒவ்வொரு மனித எத்தனமும் அமைகிறது. அசட்டையின் நிழல் இல்லாத செயலே இராது என்றாலும், அந்த நிழலின் அளவைக் குறைக்கக் குறைக்கச் செயலின் ஒளி, துல்லியம் நன்கு புலப்படும். கடுந்துல்லியம் என்பது படைப்பின் இயல்பை யாரும் அறியவொண்ணாத நிலைக்குக் கொண்டு போகும் என்பதும் இருக்கிறது. படைப்பு என்பதைச் சக மனிதரோடு பகிர்வதில் வெறும் பாராட்டுக்கான ஆர்வம் கொண்டு எழுதுவதற்கும், அதனளவில் அது ஒரு துல்லியம் பெற வேண்டும் என்ற முனைப்போடு எழுதுவதற்கும் இடையே நிறைய பரப்பு இருக்கிறது. வாசக வசதியைக் கருதாமலே எழுதுவது சுய மதிப்பைத் தக்க வைக்கும் செயலாக இருக்கலாம், ஆனால் அதனால் அதிகம் பலனில்லை. அப்படி எழுதுவதை நாட்குறிப்பாக வைத்துக் கொண்டு தம்மிடமே பொத்தி வைத்துக் கொள்ளலாமே? எதற்கு ஒரு பொது ஊடகத்தில் பிரசுரிக்க முயலவேண்டும்? கைதட்டலுக்கும், ஆரவார ஆமோதிப்புக்கும் என எழுதுவது இன்னொரு வகை. அது இலக்கிய நோக்கத்துக்கு மிக அப்பாற்பட்ட அரசியல், பொருளாதார, சாமான்யச் செயல். அதற்கான களமும், வாசக வட்டமும் வேறானவை. நுகர்வு என்பதே மையமாகக் கொண்ட சமூக இயக்கத்தில் ஒரு பங்கு அது.

இந்த பலமுனைத் தர்க்கத்தில், அசோகமித்திரன் ஒரு நடுவாந்திர நிலையில் இயங்குகிறார். அடைமொழிகள் இல்லாத எளிமையை இலட்சணமாகக் கொண்டு எழுதுவதாகச் சொல்பவர், வெறும் அடைமொழிகளை மட்டும் சொல்லவில்லை என்பது தெளிவு. திலீப் குமார் தன் பேட்டியில் சொல்வது போல, அ.மி குறியீடுகளை வலிந்தோ, கவனமின்றியோ நுழைப்பவர் இல்லை.

அளவற்ற சொற் பெருக்கம் கூடாது என்பதைத் தன் பேட்டியில் சொல்லி இருப்பதோடு, பல முந்தைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார் என்பதை நாமறிவோம். இவை அனைத்தும் கணக்குப் போட்டு வாசகரை வலை வீசிப் பிடிக்கும் தந்திரத்தோடு சேராதவை. ஆனால் வாசகர்களுடன் தொடர்பு கொள்வது அவசியம் என்பதைக் கவனத்தோடு நிரந்தர குணமாகக் கொண்டவை. தொடர்பு கொள்வதில் எதிரில் இருப்பவரை மதித்துத் தொடர்பு கொள்வதும் உண்டு, ஆனால் தம் கருத்தை அதற்காக மலினப்படுத்தாத நோக்கமும் உண்டு.

அவ்வப்போது எந்த எழுத்தாளருக்கும் தன் படைப்பின் பல சாத்தியக்கூறுகள் புலப்படப் புலப்பட ஒரு கிளர்ச்சியோ, அல்லது ஐயமோ அல்லது வேறு பல உணர்ச்சிகளோ தோன்ற வாய்ப்பு உண்டு. இந்த உணர்ச்சிகளால் செலுத்தப்பட்டு சில முடிவுகளை எழுத்தாளர்கள் எடுக்கிறார்கள். அவை நேர்த்திக்கு இட்டுச் செல்லலாம், அல்லது அத்தனை உருப்படியாக இல்லாமல் போகலாம். இந்த நிச்சயமின்மை எல்லாப் படைப்புகளையும் பிடித்தாட்டும் ஊழ். அவ்வவற்றின் தலைவிதி என்று கூடச் சொல்ல முடியும்.

அசோகமித்திரன் தன் ஒரு கட்டுரையில் இப்படி ஒரு நிலை தனக்கு வந்ததைச் சொல்கிறார். சில கதைகள் தனக்கே ஒரு கண்டுபிடிப்பாக இருந்ததைச் சொல்கிறார். கதைக்களனை எங்கெங்கிருந்தோ கிட்டிய தகவல்கள் மனக்கிடங்கில் சேமித்தவையாக இருந்தவற்றைக் கொண்டு அமைக்கையில் புதுப்பாணிகளும், அத்தனை தனக்குப் பரிச்சயமில்லாத நிலைகளும், இயக்கங்களும் தெரியத் துவங்கும். அந்த வாயில்களில் நுழைந்து பார்ப்போமே என்று நுழைந்து தேடத் துவங்கும்போது தன்னுள், தன் நினைவுகளில், தன் சிந்தனைகளில், தன் அறிதலில் என்னென்னவோ வளங்களும், குழப்பங்களும், பீதிகளும், பாதுகாப்பின்மைகளும் உண்டென எழுத்தாளர் புரிந்து கொள்கிறார். அவற்றை அனைத்தையும் வாசகருக்குக் கொடுத்து விட வேண்டுமா என்றால் இல்லை. அவசியம் இல்லை. ஆனால் சாரமாகத் தோன்றுவதையாவது கொடுக்க வேண்டும். அதை அசோகமித்திரன் வெகு நாட்களாக முயன்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் இருந்த திக்கில் வாசகர்கள் வந்து சேரக் கொஞ்ச காலம் ஆகி இருக்கிறது, அவ்வளவுதான். அந்த அளவில் அவர் தமிழ் எழுத்துலகில் ஒரு முன்னோடி. வெகுநாட்கள் பழமையாகாத படைப்புகளாகவும் அவருடையவை இருக்கும், ஏனெனில் எதார்த்தம் என்பதை அவர் வறட்சியாக அணுகாமல், மனித குணங்கள் கொண்டதாக ஆக்கிக் கொடுக்கிறார்.

மனிதரின் இயல்பு இப்போதைக்கு புரண்டு அமானுஷ்யமாக ஆகப் போவதில்லை என்று நம்புகிறவன் நான். ஆனால் அதையும் அசோகமித்திரன் எதிர்பார்த்து சிறிது அமானுஷ்யத்தையும் தம் படைப்புலகில் கொடுத்திருக்கிறார் என்பது என் நிச்சயத்தன்மையைக் கொஞ்சம் சிரிப்புக்குள்ளாக்குகிறது.

இந்த வகைச் சந்திப்புகளை ஒரு பத்துப் பதினைந்தாண்டுகளுக்கு முன்பே துவக்கிச் செய்திருக்க வேண்டும் என்று இன்று எனக்குப் புரிகிறது.

அசோகமித்திரனின் பழைய புகைப்பட உதவி : தளவாய் சுந்தரம்

_____________________________________
[1] ”But madness and greatness must not unwatched go”

5 Replies to “அசோகமித்திரனுடன் ஓர் உரையாடல்”

  1. அசோகமித்திரன் சிறப்பிதழுக்காக சொல்வனத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    நேர்காணல் மென்மையாகவும், ஆழமாகவும் தோன்றியது. தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரை நேரடியாகச் சந்தித்து அளவளாவிய திருப்தியைத் தந்தது. இன்னும் சொல்லவேண்டிய விஷயங்கள், கேட்கவேண்டிய விஷயங்கள் இருக்கிறது. அவருடைய வசதியைப் பொறுத்து இந்த நேர்காணலின் அடுத்த பகுதியை முயற்சிப்பீர்களா?
    -ஏகாந்தன்

  2. எவ்வளவு ஆத்மார்த்தமான உரையாடல்! இப்படி ஒரு பேட்டி அமைந்ததற்கு அசோகமித்திரனே பெருமை கொள்ளலாம் ! உங்கள் குழுவிற்கு மனப்பூர்வமான நன்றிகள் அதன் உளப்பூர்வமான அர்த்தங்களுடன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.