மனதில் அழுந்தும் வண்ணம் சொல்லப்படும் கருத்தாக்கமும் அதனால் வாசகனிடம் ஏற்படும் உணர்வின் தாக்கமுமே எழுத்தின் கூர் மட்டுமின்றி எழுத்தாளனின் வேரும் ஆகும். எனவே தான் ஒருவர் எத்தனை கதைகளோ கட்டுரைகளோ கவிதைகளோ எழுதினார் என்பது முக்கியமற்றதாகி, சிறு சிறு வரிகள் கூட எங்கோ வாசிக்கும் எவரோ ஒருவரின் வாழ்க்கையில் வருடங்கள் கடந்தும் உடன் வந்து ஆங்காங்கே கடக்கும் சம்பவங்களின் போது எட்டிப் பார்த்து அர்த்தம் தந்தால் அதுவே எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் திருப்தி அளிக்கும் படைப்பாக ஆகி விடுகிறது.

“காலமும் ஐந்து குழந்தைகளும்” சிறுகதையை பல கதைகள் படித்து பழக்கமான எங்கள் வீட்டு மொட்டைமாடியில் தான் முதலில் படித்தேன். வெக்கை மிகுந்த ஒரு மதுரை கோடையில் எதிர்பாராதவாறு மழையின் வாசனையை ஏந்தி வந்த மாலையின் பொழுது ஒன்றில், தலைப்பு தந்த வசீகரத்தில் “கப்போர்டில்” இருந்து கவர்ந்து கொண்டு போய் வானம் பார்த்தவாறு நிகழ்ந்த வாசிப்பு அனுபவம் அது. இப்பொழுதும், அசோகமித்திரன் “அதன்” என்ற சொல்லை தலைப்பில் இருந்து வேண்டுமென்றே மறைத்து விட்டாரோ, அது “காலமும் அதன் ஐந்து குழந்தைகள்” தானோ என்றொரு கேள்வி அந்தத் தலைப்பு எதிர்படும் பொழுதெல்லாம் தோன்றும்.
உலக இலக்கியம் என்றால் ஆங்கிலம் போன்ற மொழிகளில் தான் இருக்க முடியும் என்ற “அறிவு” நமக்கு பழக்கப்பட்டு விட்டது. எனவே அசோகமித்திரன் போன்றவர்களின் படைப்புகள் மீது நமக்கு “கிட்டப் பார்வை” மட்டுமே கிட்டுகிறது. இதற்கு வருந்தவோ ஆதங்கம் கொள்ளவோ தேவையில்லை. ஏனெனின், எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதில் நிறுவபடுவதில்லை உலக இலக்கியம். படைப்பின் கருவில் பதிந்திருக்கும் விஸ்தீரணத்தின் வீச்சே அதன் உலக இலக்கிய இருப்பை நிறுவை செய்யும். உலக இலக்கியம் என்று சொல்லப்படும் எந்தப் பட்டியலிலும் இடம் பெறும் சாரமும் நடையும் “காலமும் ஐந்து குழந்தைகளும்” கதைக்கு உண்டு. ஒரு சராசரி மனிதனின் தினப்படி பரிமாணங்களில் வைக்கப்படும் வரிகள், அதன் அர்த்தங்களில் எண்ணற்ற சாத்தியக்கூறுகளையும் அதன் மூலம் வாசிப்பவரை எண்ணற்ற சிந்தனைப் பரிமாணங்களின் வெளியில் மிதக்க விடும் அற்புதமான சிறுகதை இது.
முதலில் கதைச் சுருக்கத்தை “மேம்போக்காக” ஒரு முறை பார்ப்போம் இண்டர்வியூவுக்கு போகும் ஒருவன் ரயிலைப் பிடிக்க விரைகிறான். ரயில் நிலையம் செல்ல, பேருந்தில் ஏறுவதில் இருந்து டிக்கெட் எடுத்து ரயிலில் நுழையும் வரை வரிசையாக அவன் காணும் ஏராளமான காட்சி வடிவங்கள்…அதன் மூலம் எழும் யோசனைப் படிமங்கள்…. இது தான் கதை. அதாவது, மேம்போக்காகப் படித்தால் இது தான் கதை. பிறகு தலைப்பை ஒரு முறை மனதில் இருத்தி கதைக்குள் மீண்டும் நுழைவோம்.
இவர் விவரிக்கும் காட்சிகளின் வடிவங்களே அவற்றினுள் வேறொரு அர்த்தத்தை மறைத்து வைத்து நடமாடுகின்றனவோ என்று மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக வாசிக்க வைக்கும் அனுபவம் நிறைந்ததாக இருக்கிறது “காலமும் ஐந்து குழந்தைகளும்”. பேருந்தில் ஏறுவதற்கு ஓடி வரும் வழியில் கதை நாயகன் பிளாட்பாரத்தில் ஐந்து குழந்தைகளை தூங்க வைத்து “அம்மா அப்பா” பிச்சை எடுக்கும் காட்சியைப் பார்க்கிறார். சட்டென்று நம் மனது “தலைப்புக்கு”த் தாவுகிறது. ஒரு வேளை ஐந்து குழந்தைகள் என்பது பஞ்ச பூதங்களோ என்ற எண்ணம் மேலிடுகிறது. இந்த எண்ணத்துடன் கதையைத் தொடர்ந்தால் புதுப்புது பொருள் பதிந்த வரிகள் வந்து கொண்டே இருக்கின்றன.
பஞ்ச பூதங்களும் காலத்தின் குழந்தைகள் என்றால் நாம் அனைவருமே அவற்றின் சேர்க்கையினால் உடலாய் மனமாய் உலா வரும் குழந்தைகள் அன்றோ? பிச்சையெடுக்கும் குழந்தைகளின் காட்சியை உருவகப்படுத்தி, டிக்கெட் எடுக்கும் கவுண்டர் நோக்கி நம்மை அழைத்துப் போகும் அசோகமித்திரன் ” பிச்சையில் ஒரு கூட்டந்தான், இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது.” என்று சரக்கென்று ஊசியை நுழைக்கிறார். தலைப்பு நமக்குள்ளே இறங்கிக் கொண்டிருப்பது போல இருக்கிறது…நாமும் ஏதோ ஒரு “கவுண்ட்டரில்” எதற்கான வரிசையிலோ நின்று கொண்டிருக்கிறோம் தானே?
இனி நம் மீது காலத்தின் சவுக்கில் உள்ள வரிகள் கதை முழுவதும் பதிந்து கொண்டே இருக்கின்றன… கதை நாயகன் பிடிக்கப் போகும் ரயில், ரயில் இல்லை. வயதின் பெட்டிகள் இணைக்கப்பட்ட காலத்தின் ஓட்டம் என்பது போலத் தோன்றுகிறது. இந்த யோசனையின் கங்குக்கு விசிறி வீசுவது போல, “இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரயிலைப் பிடித்து விட முடியுமா? முடியலாம். ரயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த ரயிலைப் பிடித்துவிட வேண்டும்.” என்கிறார்! இறந்த காலத்தில் ஏறி எதிர்காலத்தை பிடிக்க நிகழ்கால பிளாட்பாரத்தில் வயது ரயிலை துரத்தும் வாழ்க்கைதான் நமதோ? அப்படியென்றால் இந்த சூத்திரத்தின்படி ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த நொடியின் பொழுதுக்குள்ளேயே இறந்த காலமாக உருமாற்றம் அடைகிறதே…அப்படியென்றால் நாம் பிடிக்க விரைவது எதை?
“நான் எங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் நாயகனுக்கு அதன் பின் வரும் சிந்தனைகளில் இந்தக் கதையின் ஆதார சுருதியை அனாயாசமாக நுழைக்கிறார் அசோகமித்திரன்.
இந்த வரிகளை பாருங்கள்:
“எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி, உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. [அசோகமித்திரன் குறிப்பிடும் ஓட்டைப் பெட்டியும் உப்பிப் போன பையும் நம் தூலமோ?] ஆனால் அப்படி இல்லை. காலம் எனக்கு வெளியேதான். “
ரயிலைப் பிடிக்கும் ஒட்டத்தில் கடவுளும் இவர் முன் குறிக்கிடுகிறார். ரயில் நகரத்துவங்குகிறது. கடவுளிடம் ரயிலை நிறுத்துபடி சொல்கிறார் நாயகன். “நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன்? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது?” என்று கேட்கிறார் கடவுள்.”ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது?” என்கிறார் கதை நாயகன். “அப்போது அனுபவிக்க வேண்டியதுதான்.” என்பது கடவுளின் பதில்! “துவக்கம்” சரியாக இருக்க வேண்டுமோ? இல்லையேல் ரயிலை துரத்திக் கொண்டே இருக்க வேண்டியது தானோ? துவக்கம் என்பது எந்தப் பிறப்பு என்று யாருக்குத் தெரியும் சொல்லுங்கள்? ஒரு வேளை அதனால் தான் “இதைச் சொல்ல நீ எதற்கு? நான்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளிப் போம்” என்று நாயகன் மூலமாக கடவுளிடம் தனது உரையாடலை முடிக்கிறாரோ அசோகமித்திரன்?

கடவுளையும் காலத்தையும் இவர், “வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?” என்று கோர்த்து “கடவுள் என்றால் என்ன? என் மனப் பிராந்தி.” என்று முடிக்கையில் நாம் காலத்தின் சுழற்சியில் அழற்சியுற்ற அனுபவங்களை ஒவ்வொன்றாக “காலமும் ஐந்து குழந்தைகளும்” அவிழ்க்கத் துவங்கியிருக்கும்…