மான்பெண்

paula அமெரிக்கக் கவிஞரும், நாவலாசிரியரும், இலக்கிய விமரிசகருமான பௌலா கன் ஆலென், அமெரிக்கப் பழங்குடி  இனத்தவரின் பரம்பரைக் கதைகளுக்கு இலக்கியவடிவம் கொடுத்தவர். எழுதுவது மட்டுமன்றி நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் பழங்குடிகளைப் பற்றி பயிற்றுவித்தார். இரு அமெரிக்கப் பழங்குடிப் பெண்களைப் பற்றி இவர் எழுதியுள்ள வாழ்க்கைச் சரிதங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இது அவருடைய ‘Deer woman’ என்ற பழங்குடி மரபுக்கதையின் மொழியாக்கம்.

மொழிபெயர்த்தவர்முகின்.

0o0o0

மதிய வேளையில் இரு இளைஞர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். தங்களுடைய காடிலாக் ட்ரக்கில் பசுமையான கிராமப்புறத்தின் சாலையில் மேலும் கீழுமாக ஓட்டிக் கொண்டு, நண்பர்கள் வீட்டில் சில பீர் புட்டிகளுக்காக அங்கும் இங்கும் நிறுத்திக் கொண்டுமிருந்தனர். ஓக்லஹோமாவிற்கே உரித்தான வெயில் காலத்தின் அந்த நாள் அதிகபட்ச புழுக்கமும், வெக்கையும் கொண்டிருந்தது.

வானம் இருட்டியதற்குப் பின் வெகு நேரம் கழித்து அனடார்கோ நகரின் வெளியே 20 அல்லது 30 மைல் தொலைவில் உள்ள மது விடுதியில் வண்டியை நிறுத்திவிட்டு மேஜைகளில் உட்கார்ந்திருந்தவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். வெளியே இருந்த வெப்பத்திற்கு மெதுவாகச் சுழன்று கொண்டிருந்த காற்றாடி குளிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து விடுதியிலிருந்த ஒருவன், அவர்கள் இருவரும் களியாட்டத்திற்குப் போகிறார்களா எனக் கேட்டான். “நிச்சயமாக” என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் உண்மையில் அந்த இரவில் ஒரு களியாட்டம் நடைபெறுகிறது என்பதை அவர்கள் அதற்கு முன் அறிந்திருக்கவில்லை. மூவருமாக வண்டிக்குச் சென்றார்கள்.

குறுகிய கிராமப்புற சாலைகளின் வழியே, சில சமயங்களில் அறிவிப்பற்ற சாலைச் சந்திப்புகளில் வளைந்தும், கால்நடைத் தடுப்புகளில் முட்டியும் ஒட்டிச் சென்றார்கள். தொலைவில் மூட்டப்பட்டிருந்த தீயையும், ஆட்டத் திடலைச் சுற்றி வளையமாக அமைந்திருந்த குடிசைகளின் தொங்கு விளக்குகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தையும் கண்டார்கள். தங்களுடைய வண்டியை இரண்டு டோயோடா, ஒரு டாட்ஜ் வேன், புதிய வின்னேபாகோ மற்றும் சில பழைய கார்களின் நடுவே நிறுத்திவிட்டு நடன அரங்கை நோக்கிச் சென்றார்கள். நடனம் ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆமை ஓடும், அலுமினிய டப்பாக்களும் கிலுகிலுக்கும் ஓசை, இடையிடையே கேட்கும் சிரிப்பு, பேச்சொலியும், பாடலும் அவர்கள் காதுகளை வந்தடைந்தன. “அது சரி”, இருவரில் உயரம் கூடியவனும், பருமன் கொண்டவனுமான ரே, தன்னுடைய நண்பனின் கைகளை தட்டி மகிழ்ச்சியோடு சொன்னான். “கருமம்”, அவன் நண்பன் ஜாக்கி பதிலளித்தான், பிறகு நிலையற்ற வெளிச்சத்தில் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். தங்களோடு பயணித்தவனை ரே முதுகில் தட்டி, “டேய், நமக்கு பெண்கள் கிடைப்பார்களா எனத் தேடலாம், வா”, என்றான்.

பார்ப்பதற்கு அழகான பெண்களிடம் பேச்சுக் கொடுத்து, இரவு முழுவதும் அவ்விடத்தைச் சுற்றி வந்தார்கள்; அவர்களுடன் வந்த சகோதரன் லூரின் என்ற நீண்ட கால்களுடைய பெண்ணுடன் மறைந்து விட்டான் ஆனால் இவர்களுக்கு யாரும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் மனம் தளர்ந்து விடுபவர்கள் அல்ல. நன்றாக ஆடி, அதைவிட நன்றாகப் பாடிக் கொண்டு தங்களுடைய மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டனர். பகலும் இரவும் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்ள ஏதாவது இருக்கும் வரை பெண்களை அடைவதைக் குறித்து அவர்கள் கண்டு கொள்வதில்லை. தம்மைக் குறித்தும், தம் வாழ்க்கையைக் குறித்தும் நிறைவு கொண்டிருந்தனர்.

காலைப் பொழுது ஆரம்பிக்கும் முன்பு, நடனக் களத்தில் அற்புதமான இரு அழகிகள் நுழைவதை ரே பார்த்தான். அவர்களுடைய நீண்ட கூந்தல் முதுகில் ஆறு போல் இறங்கி ஓடிச் சென்றது. அப்பெண்கள் பாரம்பரியமான உடையணிந்திருந்தனர். அவர்களிடத்தில் ஏதோவொன்று – பிடிபடாத ஏதோவொன்று – ரேயிற்கு ஒரே நேரத்தில் பேரச்சத்தையும், அடையாளம் கண்டுகொண்ட உணர்வையும் கலந்த நடுக்கத்தையும் அளித்தது. “அவர்கள் யார்?”, நண்பனைக் கேட்டான், ஜாக்கி மௌனமாக தோளைக் குலுக்கினான். அவன் கண்கள் ஒரு கணம் ஒளிர்வதை அவர்கள் அருகில் நெருப்பு திடீரென்று கொழுந்து விட்டு எரிகையில் ரே பார்த்தான்.

அதே நேரம் அப்பெண்கள் இருவரும்  ஓரக் கண்ணால் மிதமாக ஆடிக்கொண்டே தங்களைப் பார்ப்பதைக் கண்டார்கள். ஜாக்கி முழங்கையால் ரேயை இடித்து விட்டு பெருமூச்சு விட்டான். “சரி” மெல்லிய குரலில் ரே கூறினான். “சரி”.

நடனம் முடிந்தவுடன் இளைஞர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அந்த பெண்கள் வந்தனர். “ஹேய் நண்பா, நானும் என் தோழியும் அனாடர்கோ நகரம் செல்ல சவாரி வேண்டும். நீங்கள் அங்கிருந்து வருவதாக அவர்கள் சொன்னார்கள்.” அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மோவாயை இடது தோளில் திருப்பி பின்னால் ஆட்டக்களத்தில் நின்று கொண்டிருந்தவர்களைக் காட்டினாள்.

“உன் தோழியின் பெயர் என்ன?” ரே திரும்பிக் கேட்டான்.

“லின்டா,” மற்றவள் பதிலளித்தாள். “அவள் பெயர் ஜூனெலா.”

“என் நண்பனின் பெயர் ஜாக்கி” ரே சிரித்துக் கொண்டே கூறினான். “எப்போது உங்களுக்குக் கிளம்ப வேண்டும்?”

“எப்போதென்றாலும் சரி,” ஜூனெலா பதிலளித்தாள். அவன் கண்களை அவளிடமே வைத்திருந்தாள். “வண்டியை எங்கே நிறுத்தி வைத்திருக்கிறாய்?”

வண்டியை அடைந்து உள்ளே ஏறிக் கொண்டார்கள். உள்ளே நெரிசலாக இருந்தாலும் யாரும் அதை சட்டை செய்யவில்லை. ரே வண்டியை தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற வண்டிகளினூடே பத்திரமாக பின்னகர்த்தி எடுத்தான். அந்த நேரத்தில், ஒரு நொடி காரின் தளத்தில் பார்க்கையில் அவ்விரு பெண்களின் கால்களும் மான் குளம்புகள் போல் இருந்ததாக தோன்றியது. கடவுளே நான் முதலில் கஞ்சா அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான். அவன் கஞ்சா அடிப்பதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகிவிட்டதை மறந்து விட்டான்; பல மணிநேரங்களுக்கு முன் மது விடுதியில் குடித்த பீருக்கு பிறகு எதையும் அவர்கள் குடித்திருக்கவுமில்லை. அந்த பெண்கள் தங்களுடைய பைகளுக்கு அடியில் காலை ஒடுக்கி வைத்துக் கொண்டார்கள். பிறகு இருட்டில் அவனால் கால்களை பார்க்க முடியவில்லை. அதோடு, அவன் மனதில் அதை விடச் சாந்தமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

வேடிக்கையாக பேசிக்கொண்டும், தங்களைக் குறித்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டும், தங்களுடைய இசைத் தேர்வுகளைச் சொல்லிக் கொண்டும், அவர்கள் சென்ற பள்ளி, பட்டம் பெற்ற காலத்தைக் குறித்தும் அளவளாவிக் கொண்டு சிறிது நேரம் பயணித்தார்கள். கார் ரேடியோ நிலையங்களை மாற்றும் குமிழை ஜுனெலாவை தாண்டி அடைவதற்காக லின்டா முயன்று கொண்டேயிருந்தாள். அவளுக்கு பிடித்தது பக்கா நாட்டுபுற இசை அல்லது ரேவின் வார்த்தைகளில் “வான்வெளி” இசை.

அவளும் லின்டாவும் சில நேரங்களில் தங்களுக்குள் கேலி செய்து அல்லது பேசிக் கொண்டார்கள்; ரேயால் என்ன என்று யூகிக்க இயலவில்லை. பிறகு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று நினைவிற்கு வந்ததைப் போல இளைஞர்களையும் பேச்சில் இணைத்துக் கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் பயணித்த பிறகு, லின்டா சட்டென்று அவர்கள் சென்று கொண்டிருந்த சாலை குறுக்கே வெட்டிச் செல்லும் சாலையைக் காட்டி, “ இடது பக்கமாக போ” என்றாள், ரேயும் அவள் சொன்னதைப் போல் செலுத்தினான். அனடார்கோ ஊருக்கு செல்லும் பாதையில் சரியாகத் தானே போய்க் கொண்டிருந்தோம் என ரே யோசிக்கவும் இல்லை, அவளிடம் மறுத்துரைக்கவும் இல்லை. சில நூறு அடிகள் சென்றபின் “வலது பக்கமாக திரும்பு” என்றாள். எதிர்பாராமல் பிரேக்கை அழுத்தி திருப்பியதால் ஜுனெலா அவன் மேல் அழுந்தி சரிந்தாள். கொஞ்சம் அசைந்து கொடுத்து அவளைச் சுற்றி கையை போட்டுக் கொண்டான். அவளும் ஒன்றும் சொல்லாமல் அவன் தொடையில் கை வைத்து, சரிந்து உட்கார்ந்தாள்.

திரும்பியவுடன் அது சரளைக்கல் சாலையாக மாறியது; மேலும் கால் மைல் தாண்டியவுடன் இறுகிய மண் சாலையானது. நீரின் மணத்தை ரேயால் உணர முடிந்தது. கீழ்வானத்தின் அடியில் சில மரங்கள் நிற்பதை காண முடிந்தவுடன் காலை ஆரம்பமாகிறது என புரிந்தது.

“தண்ணீருக்கு போகலாம்”, லின்டா கூறினாள். “ஜுனெலாவும், நானும் சம்பிரதாயமானவர்கள். ஒவ்வொரு காலையிலும் ஓடும் நீரில் எங்கள் காலைக் கழுவிக் கொள்வோம்”

“ஆமாம்”, ஜுனெலா முணுமுணுத்தாள். “எங்களைத் தாயின் பாட்டி வளர்த்தாள். அவள் இதிலெல்லாம் ரொம்பவும் கண்டிப்பானவள். நாங்கள் மூதாதையனை ஒவ்வொரு நாளும் வழிபடுமாறு பார்த்துக் கொண்டாள். உங்களுக்குச் சம்மதம்தானே?”

பெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடிப் புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.

“இது பழகிய இடம் போல் உள்ளது. நிச்சயமாக நமக்கு தெரிந்த பழைய இடம் தான் என்று நினைக்கிறேன்” என லின்டா சொன்னாள். அப்பெண்கள் ஆழமற்ற நீரைத் தாண்டிச் செல்லாமல் நிற்பதைக் கண்டு ஆண்கள் இருவரும் மறுபடியும் முன்னே செல்ல ஆரம்பித்தனர்.  இயல்புக்கு மாறாக ஒத்திசையும் மனதின் போக்கை ரே ஒரு கணம் ஆச்சரியத்துடன் அவதானித்தான்; அவ்வெண்ணம் எழும் போதே அதை ஒதுக்கினான். மறுகரையை அடைந்து தலை உயர்த்திப் பார்த்தான்; சிறு மரங்களுக்கும், புதர்களுக்கும் பின்னால் செங்குத்தான கற்பாறை இருந்தது. தலை சரித்து அப்பாறையின் முகட்டை பார்க்க முயற்ச்சித்த போது, மின்னலென மனதில் வண்டியின் அடியில் கண்ட மான் குளம்புகள் தோன்றி மறைந்தன. அவ்வுருவம் மனதில் உண்டாகும் போதே, கற்பாறையின் மேலிருந்து சூரியன் சுடர்விட்டு எழுந்தது. அதனால் அந்த எண்ணம் சீக்கிரமே மனதிலிருந்து வெளிறிப் போய், முதுகுத் தண்டில் உணர்ந்த சிலிர்ப்புடன், திகைத்துத் தனியே விடப்பட்டான். பிறகு தொப்பியை அணிந்துக் கொண்டான்.

புதர்க்காட்டின் வழியே அதன் தாழ்ந்த கிளைகள் அனுமதித்த அளவிற்குக் குனிந்து ஜாக்கி முன்னால் நடந்து சென்றான். அவனைத் தொடர்ந்து ரேயும், பின்னால் பெண்களும் தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் மரங்களிலிருந்து வெளியே செங்குத்தான பாறையின் அடியில் குறுகிய பாதை போல சென்ற கற்பரப்பை வந்தடைந்தார்கள். அதை அடைந்தவுடன் ஜாக்கி மற்றவர்களுக்காக காத்திருந்தான். “இது தான் உங்களுடைய பழைய வீடிருக்கும் இடம் என நிச்சயமாகத் தெரியுமா?” என கேட்டான். அதைக் கேட்டு பெண்கள் தமக்குள் சிரித்துக் கொண்டு அவர்களுடைய பாஷையில் உற்சாகமாகப் பேசிக் கொண்டனர். ஜாக்கிக்கும், ரேவிற்கும் அந்த பாஷை புரியாததால் காலைப் பொழுதின் அழகையும், கன்னங்களில் மோதும் சில்லிட்ட காற்றையும், ஜீன்சை கணுக்காலில் ஒட்டவைத்த தண்ணீரையும் நினைத்துக் கொண்டு காத்திருந்தனர். அவர்களுடைய பாதங்களும், டென்னிஸ் காலணிகளும் காய்ந்து விட்டிருந்தன.

இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பெண்கள் முன்னால் நடக்க ஆரம்பித்தார்கள், ஆண்கள் இருவரும் பின்தொடர்ந்தனர். “இந்த வழியில் தான் உள்ளது என அவள் சொல்கிறாள்,” லிண்டா கூறினாள், “ரொம்ப தூரம் இல்லை.” உயரம் கூடிக் கொண்டே செல்லும் அப்பாறையின் அடிவாரத்தில் சிரமத்துடன் நடந்து கொண்டேயிருந்தார்கள். பிறகு, ஜூனெலா பாறையில் உண்டாயிருந்த பிளவில் நுழைந்து அதன் சாய்வில் ஏற ஆரம்பித்தாள்; சீக்கிரமே மேலேறும் பாதையின் சரிவு அதிகரித்தது.

“நிச்சயமாக நாம் அவர்களுடைய பாட்டியின் வீட்டிற்குப் போகவில்லை,” என ஜாக்கி மெல்லிய குரலில் நண்பனிடம் கூறினான்.

“இந்த இடத்தில் இப்படிப்பட்ட பாறை உள்ளதே எனக்கு இதுவரை தெரியாது,” என்றான் ரே.

“அதிக தூரமில்லை,” ஜுனெலா உற்சாகமாக கூறினாள். “என்ன ரெண்டு பேருக்கும் உடம்புல தெம்பு இல்லையா?”

“ஒட்டகத்திற்காக ஒரு மைல் கூட நடப்பேன் என கூறியிருக்கிறேன்,” ஜாக்கி கிண்டலாக கூறினான், “ஆனால் பெண்களுக்காக என எதுவும் கூறியதில்லை.” தேவைக்கு அதிகமாகவே ரேயும், அவனும் வாய்விட்டு சிரித்தார்கள்.

“முதல்முறையாக சிறு பெண்கள் ஓநாய்களை தன் பாட்டியின் வீட்டிற்குக் கூட்டிப் போவதை இப்போது தான் பார்க்கிறேன்,” ரே முணுமுணுத்தான்.

“ஆமாம்,”, லின்டா உற்சாகத்தோடு சொன்னாள். “கொஞ்சம் பொறு, இந்த பெண் அவள் கூடையில் இன்னும் என்ன என்ன அற்புதமான விஷயங்களை வைத்திருக்கிறாள் என காண்பிக்கிறேன்.” அவர்கள் இருவரும் சிரித்தார்கள், கொஞ்சம் வெட்கத்தோடு இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர்.

“அதோ! நான் தேடிக் கொண்டிருந்த ஓடை,” என திடீரென்று ஜுனெலா கூறினாள். “அதில் சிறிது நேரம் நடந்து போகலாம்.” ரே துணுக்குறலோடு ஜாக்கியை பார்த்தான்.

“எனக்கு அதில் நடக்க விருப்பமில்லை,” என ஜாக்கி அவசரமாக கூறினான். “முந்தைய மூழ்கலின் ஈரம் இப்போது தான் காய்ந்துள்ளது.” அதற்குள்ளேயே அப்பெண்கள் நீரினுள் இறங்கி, அதன் எதிரோட்டமாக நடக்க ஆரம்பித்து விட்டனர்.

“கவலைப்படாதீர்கள்,” ஜுனெலா கூறினாள். “ஈரமெல்லாம் இல்லை. எங்கள் பழைய வீட்டிற்கு இது தான் வழி”.

“சரி தான்,” முணுமுணுப்புடன் தண்ணீரில் பெருமூச்சோடு ரே இறங்கினான். ஜாக்கி அமைதியாகப் பின்தொடர்ந்தான். ஆனால் நீரோடையென்று நினைத்து உள்ளே நுழைந்த போது அவர்களுடைய கால் மெத்தென்ற புல்தரையைத் தொட்டது. “ஹேய்..” ரே கூக்குரலிட்டான். “என்ன நடக்கிறது?” என சடாரென நின்று விட்டான். ஜாக்கி அவன் மேல் முட்டி நின்றான்.

“கவனமாய்ப் போ,” என சொல்லிவிட்டு, ரேயை உரசிக் கொண்டு ஒடிசலான வளைவில் திரும்பி மறைந்து கொண்டிருந்த பெண்களின் பின்னால் சென்றான்.

ரே ஒரு கணம் அவ்விடத்தில் நிலையாக நின்றான். “நானும் வருகிறேன்,” என அழைத்தான். அவன் குரல் பாறையில் உரக்க எதிரொலித்து.

வளைவில் திரும்பியவுடன் அங்கே லின்டா பாறையின் செங்குத்தான முகட்டில் சரித்து கொண்டிருந்த கல் பலகையை அடைய முற்பட்டுக் கொண்டிருந்தாள். கற் பலகையின் விளிம்பைப் பற்றி இழுத்தாள். அங்கிருந்த ஆண்கள் ஆச்சரியப்படும் விதமாக ஒரு கதவைப் போல அது திறந்து கொண்டது. பெண்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

ரேயும் ஜாக்கியும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ரே தோளை அசட்டையாக குலுக்கினான், ஜாக்கி இரு கைகளையும் பாறை நுழைவில் விரித்துக் கொண்டு சாடை காட்டினான். பிறகு இருவரும் பெண்களைத் தொடர்ந்து உள்ளே சென்றனர்.

உள்ளே, திகைப்பூட்டும் காட்சியை எதிர்கொண்டனர். இருநூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் பச்சை வெளியில் கூட்டமாக நின்றும் நடந்து கொண்டுமிருந்தார்கள். அருகில் அங்காங்கே வீடுகள் இருந்தன, அவற்றின் புகைபோக்கிகளிலிருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. ஸைகமோர் அல்லது எல்ம் மரங்களுக்கு அடியில் பெரிய மேஜைகள் போடப்பட்டு அதன் மேலிருந்த பல விதமான உணவு வகைகள் இளைஞர்களைக் கவர்ந்தன. முந்தைய நாள் காலைக்கு பிறகு இதுவரை சாப்பிடவில்லை என்பது திடீரென உணர்ந்து மேஜையை நோக்கி சென்றனர். ஒரு சில அடிகள் எடுத்து வைப்பதற்கு முன்னரே ஜுனெலாவும், லிண்டாவும் அவர்களுடைய கையை பிடித்து விருந்திலிருந்து விலக்கி அங்கிருந்த வீடொன்றின் வாசலுக்கு கூட்டிச் சென்றார்கள். பழங்காலத்திலிருந்த மனிதன் போன்ற தோற்றத்தை கொண்டவன் உட்கார்ந்திருந்தான். இடுப்பு வரை விழுந்து கிடந்த சடையில் அவன் வயது தெரியவில்லை.

கிரீடம் போன்ற நீண்ட தொப்பிக்கு கீழே, சுருங்கிய, காய்த்த சருமத்திலும் அவன் மூப்பு தெரியவில்லை. natind 2ஏனோ அவன் பார்ப்பதற்கு முதுமையின் உருவகம் போலிருந்தான். கற்பாறையை விடவும், ஆற்றை விடவும், ஏன் அந்த ஆகாசத்தை விடவும் வயதில் முதிர்ந்தவன் போல் இருந்தான்.

அவனருகில் இரண்டு மாஸ்டிஃப் வகைp பெரிய நாய்கள் – நீண்ட, மெலிந்த தேகத்தை தளர்த்தி, தலைகளை உயர்த்தி, கண்களில் கூர்மையுடன் – கிடந்தன. “அப்படி..நீங்கள் இரண்டு பையன்களை தூண்டிலிட்டு பிடித்து கொண்டு வந்திருக்கிறீர்கள்” ஒரு பெண்ணிடன் கூறினான். சிரத்தையற்ற வியப்புடன் அவர்கள் நிற்கும் திசையை பார்த்தான். “போய், தயாராகுங்கள்”, அதைக் கேட்டவுடன் பெண்கள் வீட்டிற்குள் சென்று கதவை மெதுவாக சாத்திக் கொண்டனர்.

முதியவரின் அருகில் அவர்கள் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு அவர் ஏதோ நினைவுகளில் மூழ்கியவராக தனக்கு நேரெதிரே ஏதோவொரு புள்ளியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சுமார் அரை மணிநேரம் கழித்து, இளைஞர்களை நோக்கி, “நீங்கள் செய்தது சரிதான்,” யோசித்துக் கொண்டே தொடர்ந்தார், “என் மருமகள்களைத் தொடர்ந்து இங்கு வந்தது. நீங்கள் வழி தவறி போகாமலும், பயணத்தைக் கைவிடாமலும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது,” அந்தரங்கமாக  சொல்லிக் கொண்ட வேடிக்கையைப் போல தனக்கு தானே சிரித்துக் கொண்டார். திடீரென திரும்பி அவர்களை மதிப்பிடுவது போலப் பார்த்தார். அந்தப் பார்வையை எதிர்கொண்டு அவர்கள் நிற்க இயலாமல் அகன்றனர். வானிலிருந்தோ, பூமியிலிருந்தோ, எங்கிருந்தோ இடியோசையை கேட்டனர். “உங்களை இங்கு கொண்டு வந்ததன் மூலம் அவர்கள் தங்களுக்காக நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என எல்லோரிடம் சொல்லி விட்டேன்.”

திகைப்பில் ஆழ்ந்த அவர்களுடைய முகங்களை பார்த்து, சிரித்துக் கொண்டே கூறினார், “ஆமாம், நீங்கள் அதைக் கேட்கவில்லை. இவ்விடத்தில் எங்களுடைய பேச்சு, நீங்கள் வரும் இடத்திலிருந்து மாறுபட்டது என நினைக்கிறேன். இங்கேயே வெகு காலம் வாழ்ந்தால் உங்களுக்கும் பழகிப் போகும்.” “அதாவது என் மருமகள்களை உங்களுக்குப் பிடித்திருந்தால். சீக்கிரமே உங்களுக்கு உணவைக் கொடுப்போம்,” என்று சொன்னார். “அதற்கு முன்னால் எங்களுடைய விளையாட்டுகளில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்.” சுழித்த உதடுகளுடன் தூரத்தில் இருந்த குடிலுக்கு அப்பால் எழுந்திருந்த சிறு குன்றை காட்டினார். முன்பை விட அதிக சத்தத்துடன்  இடியோசை கேட்டது.

பெண்கள் இருவரும் அடுத்த கணம் தென்பட்டார்கள். நீண்ட கூந்தல் இல்லாமல், மெல்லிய ஒளி வீசும் தலையுடன் அவர்கள் இருந்தார்கள். அந்த ஒளியின் படர்வில் சுற்றம் முழுவதும் நிறைந்து, தூரத்துப் பொருட்கள் மங்கிப் போயிருந்தன. கால்களையும், கைகளையும் கூட முழுவதுமாக மறைத்த மிருதுவான ஆடைகளை அணிந்திருந்தனர். மயிரற்ற தலைகளைப் போல ஒளியை பிரதிபலிக்கும் ஒருவித ஜொலிக்கும் துணியால் செய்யப்பட்ட ஆடைகள் அவை என தோன்றியது. மெல்லிய வெளிச்சத்தால் சூழப்பட்ட உடலோடு வைத்துப் பார்க்கையில் அவர்களுடைய கண்கள் இன்னும் பெரிதாகவும், ஒளிர்வதாகவும் இருந்தது. அவர்களை பார்த்த ஆண்கள் இருவரும் பயந்து விட்டார்கள். அவர்களுக்கு முடி இல்லையே என ரே எண்ணினான். இவ்விடம் எங்கிருக்கிறது? ஜாக்கியை திரும்பி கண நேரம் பார்த்தான், அவன் முகமும் தன்னுடையதைப் போலவே இருந்தது. ஜாக்கி கண்டு கொள்ள முடியாதபடி மிக மெதுவாக தலையை இடது வலமாக ஆட்டினான். அதில் துக்கமும் அதே சமயம் ஒருவிதமான ஒப்புக் கொடுத்தலும் உணர முடிந்தது.

லின்டாவும் ஜுனெலாவும் ஆளுக்கு ஒரு இளைஞனின் கைகளைப் பிடித்து அந்த இடத்தின் மையத்திற்கு கூட்டிச் சென்றனர். ஏதோவொரு திகைப்பின் பிடியில் ரேயும், ஜாக்கியும் அவர்களைப் பின்தொடர்ந்து மேஜைகளால் சுற்றி வட்டமாக அமைக்கப்பட்டிருந்த மையத்திற்கு வந்தார்கள். நாய்களுடன் முதியவரும் பின்னால் தொடர்வதை அவர்கள் கவனிக்கவில்லை. ரேயும், ஜாக்கியும் அணிந்திருந்ததைப் போன்ற தொப்பி அணிந்த அனேக இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.  கையில் இருவர் பேஸ்பால் மட்டை, மற்றவர்கள் விளையாட்டு கையுறைகளும் அணிந்திருந்தனர், ஒருவன் நடக்கையிலேயே பந்தைத் தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்ட்டிருந்தான். மெதுவாக அந்த கூட்டம் மேஜைகளைக் கடந்து திறந்த வெளி ஒன்றில் கூடினார்கள். அங்கு ரேயும், ஜாக்கியும் தங்களுக்கு பரிச்சயமானவற்றை கண்டனர். மெலிதான பிரகாசத்தில் அவர்கள் முன் பேஸ்பால் விளையாட்டு மைதானத்தின் மூலையில் உள்ள வைர வடிவத்திலான ஆட்டகளம்.

முதியவர் ஆட்டக் களத்தின் ஒரு முனையில் பந்தைப் பிடிப்பதற்காக குந்தி உட்கார்ந்திருந்தவனின் பின்னால் நின்று கொண்ட நேரத்தில் பெரும் இடியோசை கேட்டது. “விளையாடுங்கள்” என அவர் சொன்னதும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தங்களுடைய இடங்களுக்கு சென்றார்கள், பெண்கள் மைதானத்தின் விளிம்பில் போடப்பட்டிருந்த மேஜைகளில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

கலக்கத்துடன் இவர்களும் தங்களுக்கான இடத்தை கண்டுபிடித்து அடைந்ததும் விளையாட்டு ஆரம்பமானது. வெகு நேரம் மிக உக்கிரமாக விளையாட்டு நடைபெற்றது. நடுவராக நின்ற பெரியவர் பிழையாக சில தருணங்களில் தீர்ப்பளித்த போதும், இறுதி வரை மிக நெருக்கமாக சென்ற ஆட்டத்தில் கடைசி கணங்களில் ரே, ஜாக்கியின் அணி எதிரணியை முந்திச் சென்று வெற்றி அடைந்தார்கள். அவர்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்களுடைய அணியில் மிகச் சிறப்பாக பந்தை எறிந்த ஒல்லியான தேகம் கொண்ட ஆட்டவீரன் தான்.

மற்ற ஆட்டக்காரர்களுடன் அவர்களும் வீடுகளை நோக்கி நடக்கையில் பெரியவர் அவர்களை அணுகினார். இருவரின் முதுகிலும் இரண்டு முறை தட்டி விட்டு, அவர்கள் சிறந்த ஆட்டக்காரர்கள் எனத் தான் எண்ணுவதாக கூறினார். “நாளைய விளையாட்டுகளுக்கும் நீங்கள் தயாராக இருப்பீர்கள்,” ஜாக்கியைக் கூர்மையாக பார்த்துக் கொண்டே சொன்னார். “நீங்கள் பழகிய விளையாட்டு போன்றவை அல்ல என்று எனக்கு தோன்றுகிறது, ஆனால் உங்களுக்கு அது பிரச்சனையில்லை.”

மேஜைகளை அடைந்தவுடன் மற்றவர்கள் அவர்களுக்கு உணவைப் பறிமாறினார்கள். உணவை அளித்தவர்களின் முகங்கள் மனதில் துல்லியமாக பதியவில்லை ஆனால் அவர்களின் நல்லெண்ணம் சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்தது. வேடிக்கைப் பேச்சும், சிரிப்புடனும் உணவருந்தினார்கள், சிறிது நேரம் கழித்த பின்பே அங்கிருந்தவர்களுள் ஜுனெலாவும் லின்டாவும் இல்லாததை கவனித்தனர்.

பெண்களைச் சுற்றுப்புறத்தில் தேடி விட்டு, முதியவர் வீட்டு முற்றத்தில் இருந்த பெரிய மரத்தின் அடியில் சந்திப்பதாக இருவரும் முடிவெடுத்தார்கள். சுமார் ஒருமணிநேரம் தேடிவிட்டு அவருடைய வீட்டின் முன்னால் ரே தன் நண்பனுக்காகக் காத்திருந்தான். ஜாக்கி வரவில்லை. சிறிது நேரத்தில் சலிப்படைந்து உணவு மேஜையில் மத்தளத்தில் தாளம் போட்டு பாடிக்கொண்டிருந்த சிலரோடு இணைந்து கொண்டான். இளவயதினர் பலர் மத்தளம் வாசிப்பவர்களை சுற்றி, அடுத்தவரின் தோளிலும், இடுப்பிலும் கைகளை வளைத்து நெருக்கமாக ஒரு வட்டம் அமைத்து மெதுவாக சுற்றி வந்தனர். சரி தான் என்று ரே நினைத்துக் கொண்டு அவனும் உற்சாகமடைந்தான். இதற்கு முன் பார்த்திராத இரு பெண்களுக்கு நடுவே அம்மனித வட்டத்தில் நுழைந்தான். மிக எளிதாக அவனுக்கு இடம் கொடுத்து பிறகு அவன் இடுப்பை சுற்றி இருபுறமும் கையை வளைத்து வட்டத்தை மூடினர். நண்பனைக் குறித்து அதன் பிறகு மறந்தே போய்விட்டான்.

oOo

ரே கண்விழித்த போது வெயில் முகத்திலடித்துக் கொண்டிருந்தது. ஆற்று விளிம்பின் அருகில் கிடப்பதை உணர்ந்தான். அவன் கால்கள் புதர்களிலும், தலையும், பக்கவாக்கில் திரும்பிய முகமும் வெயில் படாமலும் இருந்தன.  தெளிந்த வானத்தில் சூரியன் நண்பகல் தூரம் ஏறியிருந்தது. தட்டுத் தடுமாறி அங்குமிங்கும் பார்க்கையில் ஜுனெலா மௌனத்தோடு சிறிது தூரத்தில் பெரிய கல்லின் அருகில் உட்கார்ந்திருப்பதை கண்டான். சிரித்துக் கொண்டே, “ஹேய்” என்றாள்.ni

“இங்கே எப்படி வந்தேன்”, ரே கேட்டான். எழுந்து நின்று உடம்பை முறித்துக் கொண்டே ரகசியமாக உடலில் எல்லா பாகங்களும் சரியாக உள்ளதா என சரிபார்த்தான். நடந்தவைகளை நினைவுகூற கடினமாக இருந்தது ஆனால் பேஸ்பால் விளையாட்டும், உணவும், ஆட்டம் குறித்த ஞாபகங்கள் மனதில் அரைகுறையாக இருந்தன. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ஜாக்கி எங்கே?”

“லின்டா?” ஜுனெல்லா எடுத்துக் கொடுத்தாள்.

“ஆமாம், லின்டா,” என்று முடித்தான்.

“ஜாக்கி அங்கேயே தங்கப் போகிறான்,” என்று அமைதியாகக் கூறினாள். தன் கைப்பையிலிருந்து ஆணின் கைக்கடிகாரம் ஒன்றை எடுத்தாள். அவன் முன் நீட்டி, “உன்னிடம் கொடுக்கச் சொன்னான்,” என்றாள்.

ரேயிற்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. மனதில் விசித்திரமான பிம்பங்கள் உண்டாகி கொஞ்சம் தள்ளாடினான். தலைமுடி இல்லாத ஜுனெலா, அந்த பிரகாசமான மெல்லிய வெளிச்சம்; மஞ்சள் பழுப்பு நிறத்தில் பழுப்பு புள்ளிகளால் ஆன உருவமைப்பு கொண்ட அவ்வெளிச்சம். அந்த முதியவர்.

அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். “ஹேய்” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். “இது எப்படி…”, பேச்சிழந்தான். அவள் அமர்ந்திருந்த பாறையில் யாருமில்லை. அருகே தரையில் ஜாக்கியின் கைக்கடிகாரம் கிடந்தது.

oOo

பதினைந்து மாதம் கழித்து இந்தக் கதையை ரே என்னிடம் சொன்ன போது, ஜாக்கி தன்னுடைய பெற்றோர் வாழ்ந்து வந்த வீட்டிற்கு வந்து போனதாய் அறிந்திருந்தான். ஓக்லஹோமா நிலபரப்பில் சிதறிக் கிடந்த பட்டணங்களின் ஒன்றிலிருந்து ஒரு மைல் தொலைவில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஜாக்கியுடன் கூடவே விசித்திரம் நிறைந்த, அழகான பெண்ணொருத்தியும் வந்ததாக அவனுடைய அத்தை மகள் ரூத் ஆன் கூறினாள். பதிமூன்று வயதிலேயே அழகிய தோற்றமுடையவர்களை அடையாளம் கண்டு கொள்ள ரூத் ஆன் பழகி விட்டிருந்தார்கள், அதோடு மண்களின் தோற்றத்தை குறித்த சரியான அனுமானம் செய்ய தன்னால் முடியும் என்றும் நினைத்திருந்தாள். அவர்கள் வெகு நேரம் அங்கே தங்கவில்லை, ஜாக்கி தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக தன் குடும்பத்துடன் வந்திருந்ததாகவும் ரே அறிந்து கொண்டான். டல்ஸா நகரில் அந்நேரம் ரே இருந்ததால் ஜாக்கி வந்து சென்ற செய்தியைப் பின்னரே அறிந்து கொண்டான். அவர்களுடைய நண்பர்கள் யாருமே ஜாக்கியைப் பார்க்கவில்லை. அவனுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருந்தது என்று ரூத் நினைத்தாள் ஏனென்றால் அக்குழந்தை நடக்கப் பழகிக் கொண்டதைப் பார்த்தாள்.

காலிஸ்டோகா வைன் கிளாஸை தன்னுடைய கைகளில் திருப்பிக் கொண்டே ஏதோ நினைவுகளில் கூறினான்,    “பாட்டியின் சகோதரர்கள் அந்த சிறிய மனிதர்களைக் குறித்து நிறைய சொல்லியிருக்கிறார்கள். இங்குள்ள கிராமபுரங்களில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களைப் பற்றிப் பல கதைகளை கூறுவார்கள். நான் கவனித்துக் கேட்டதே இல்லை. உனக்குத் தான் தெரியுமே. என்னை ஏமாற்றுகிறார்கள் அல்லது கடந்து போன நாட்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைத்தேன். மான் பெண் களியாட்டத்திற்கு வருவாள், நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் நம்மை வசியப்படுத்தி மலைகளுக்குளே தன் மாமனைச் சந்திக்கக் கூட்டி சென்று விடுவாள் எனச் சொல்வார். யதார்த்தத்தில் பழம்பெரும் கடவுள்களில் ஒன்றாக நமது பாரம்பரியத்தில் சொல்லப்படும் இடி தான் அவளுடைய மாமன் என்றும் சொல்லியிருக்கிறார்.”

இரண்டு மடக்குகளில் தன் கோப்பையை காலி செய்து விட்டு நாங்கள் உட்கார்ந்திருந்த மேஜையிலிருந்து தள்ளி விலகினான். “எனக்கு தெரியவில்லை,”  இன்று வரை என்னால் மறக்க முடியாத – புண்பட்டும் ஆனால் விடமுடியாத நம்பிக்கையும் சேர்ந்திருந்த – முகபாவத்துடன் சொன்னான். “அவர்களுக்கு அவைகளைக் குறித்து ஏதோ தெரிந்திருக்கலாம்…இல்லையா?”

மறுபடியும் அவனைச் சந்திப்பதற்குள் சில வருடங்கள் கடந்து விட்டன. இரு வருடங்கள் முன்பு சான் பிரான்ஸிஸ்கோவில் எதிர்பாராமல் அவனைக் காண நேரிட்டது. மிஷன் ரயில் நிறுத்தத்தின் அருகிலிருந்த தெருவில் நின்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவன் கிளம்பும் சமயம் என் ஆர்வமிகுதியை அடக்க இயலாமல் ஜாக்கி என்ன ஆனான் என தெரியுமா என கேட்டேன்.

ஜாக்கி அவ்வப்போது வீட்டிற்கு வந்து போனான் ஆனால் அவனுடன் அந்த பெண் – லின்டாவாக இருக்கலாம் – வந்ததே இல்லை என்று கூறினான். பிறகு தெரிந்தவர் யாரோ சியாட்டில் நகரில் ஜாக்கியையோ அல்லது அவன் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவனையோ சந்தித்தாகக் கேள்விப் பட்டான். அவன் குடிகாரனாகி விட்டான். பிறகு அவன் இறந்து விட்டதாக அறிந்தார்கள். “அவன் யாரிடமோ தான் மலைகளுக்கு உள்ளே சென்றதை, அந்த பெண்ணை மணந்ததைப் பற்றியும், சொல்லக் கூடாத வேறு பல விஷயங்கள் குறித்தும் சொல்லியிருக்கிறான்.” அதிர்ஷமற்றவன் என்று ரேய் நினைத்தான்.  “மான் பெண்களைக் குறித்து கதை சொன்ன என் பைத்தியக்கார மாமாவைக் குறித்து சொன்னேனே ஞாபகமிருக்கிறதா? ஜாக்கிக்கு என்ன ஆனது என்ற தகவலைக் கேட்கும் வரை ஒன்றை மறந்திருந்தேன். அவர் சொல்வார், அந்த பக்கம் வழி தவறிப் போனவர்கள் அதைக் குறித்து பேசவே கூடாது. அதை மீறினால் சீக்கிரமே சாவு வந்து விடும்.”

dw

அதன் பிறகு அங்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போலாகிவிட்டது. கடைசிமுறையாக ரேயை மின்சார ரயிலை பிடிப்பதற்காக படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது பார்த்தேன். தாமதமாகி விட்டதால் அலுவலகச் சந்திப்பிற்காக அவசரமாக போய்க் கொண்டிருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.