குழந்தைகள்

பெரியவரே ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். புடவைத் தலைப்பைத் தலைக்கு மேல் போட்டுக் கொள்வதில் சிறிது சங்கடமிருந்தாலும் வந்தனாவுக்கு சந்தோஷமாகவும் இருந்தது. அவளுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு ரயிலில் அவளுடைய கணவன் முதலில் ஏறி அவளுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து பெட்டியைப் பத்திரமாக இருப்பிடத்தின் அடியில் வைத்தான். தன்ராஜ் அப்பாவுடன் ஏறி ஜன்னலருகே உட்கார்ந்துகொண்டான். வந்தனா பையையும் சாப்பாட்டுக் கூடையையும் எடுத்துக்கொண்டாள். ஆனால் அவள் கணவனே அவற்றையும் வாங்கிக்கொண்டு உள்ளே வசதியாக வைத்தான். இதற்குள் வந்தனாவின் இரு மைத்துனர்களும் பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஒருவன் பூப்பூவாகப் போட்டிருந்த ஷர்ட் அணிந்திருந்தான். சின்னவனுடைய ஷர்ட் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருந்தது, இருவரும் கையில் ஹெல்மெட் வைத்திருந்தார்கள். தகப்பனாரைப் பார்த்து சற்று அடக்கமாகவே நின்றார்கள்.

`உம் ஏறு` என்று வந்தனாவின் கணவன் சொன்னான். வந்தனா ரயில் பெட்டியில் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு படியில் இடது காலை கவனமாக வைத்தாள். ஒருகணம் அதில் ஊன்றிக்கொண்டு பெட்டியினுள் ஏறினாள். வீட்டிற்குள் இந்தக் கால் விஷயம் சகஜமாகப் போய்விட்டிருந்தது. ஆனால் வண்டி ஏறும்போது இடது காலை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

ami_tn copyஅவள் கணவன் கீழேயிறங்கி தன் தம்பிகளுடன் நின்று கொண்டான். `தன்ராஜ், அம்மாவுக்கு ஜன்னல் கொடு`, என்றான்.

`அப்பா`, என்று தன்ராஜ் கெஞ்சினான். வந்தனா மகன் பக்கத்தில் நின்றுகொண்டு புடவைத் தலைப்பை முகத்தின்மீது இழுத்து விட்டுக்கொண்டாள். `உக்காரு, உக்காரு`என்று அவள் கணவன் சொன்னான். வந்தனா நின்றுகொண்டே இருந்தாள். இப்போது மாமனார், `உம், உக்காந்துக்கோ`, என்றார். வந்தனா இருக்கை நுனியில் உட்கார்ந்துகொண்டாள்.

இதற்குள் சிவப்புச் சட்டை மைத்துனன் நான்கு தம்ஸ் அப் புட்டிகள் வாங்கி வந்து ஒன்றை வந்தனாவிடமும் நீட்டினான். `வாங்கிக்கோம்மா,` என்று தன்ராஜ் சொன்னான்.

அண்ணன் தம்பிகள் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். மூவரில் வந்தனாவின் கணவனின் உடைதான் சாதாரணமாக இருந்தது. முகம் வேறு இரு நாட்களாகச் சவரம் செய்யப்படவில்லை. ஆனால் மூவரில் அவன்தான் நிதானமாகப் பேசினான். தம்பிகள் இருவருக்கும் கையை ஆட்டாமல் எதையும் சொல்ல முடியவில்லை.

`உம், சீக்கிரம் குடி. பாட்டிலைத் திருப்பித் தரவேண்டும்`, என்று வந்தனாவின் கணவன் சொன்னான். மாமனார் முன்னிலையில் பாட்டிலை உறிஞ்சிக் குடிக்க வந்தனாவுக்குச் சங்கடமாக இருந்தது. ஒரு மாதிரியாகக் குடித்து முடித்து பாட்டிலை நீட்டினாள். சிவப்புச் சட்டை மைத்துனன் பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கச் சென்றான்.

பெரியவர், `உடம்பை ஜாக்கிரதையாகப் பாத்துக்கோ. இங்கேமாதிரி அலட்சியமாக இருந்துவிடாதே,` என்றார். வந்தனா தலையைக் குனிந்துகொண்டாள்.

பெரிய மைத்துனன், `ஏதாவது வேணுமா, பாபி?` என்று கேட்டான்.

`வேண்டாம், நிறையக் கொண்டு வந்திருக்கிறேன்`, என்று வந்தனா சொன்னாள்.

`சித்தப்பா, சித்தப்பா! வேஃபர் பிஸ்கட், சித்தப்பா`, என்று தன்ராஜ் சொன்னான் அவனுக்குச் சித்தப்பாக்கள் பற்றி ஏகப் பெருமை. வந்தனா தன்ராஜ் தோள் மீது கையை வைத்தாள். ஆனால் ஒரு பெரிய பொட்டலம் வேஃபர் பிஸ்கர் வந்து சேர்ந்தது. வந்தனா அதை வாங்கிச் சாப்பாட்டுக் கூடையில் வைத்தாள்.

ரயில் கிளம்பப் போகும் அறிகுறிகள் தெரிந்தன. பிளாட்பாரத்தில் கூட்டம் அதிகமானதுடன் வேகமாக விரைவோரும் நிறையத் தென்பட்டார்கள். அதே நேரத்தில் வழியனுப்ப வந்தவர்களில் பலர் களைப்பு தோன்ற நின்றார்கள். எவ்வளவு முறைதான், `போனவுடனே கடிதம் போடு, உடம்பைப் பார்த்துக்கொள், எல்லோரையும் கேட்டதாகச் சொல், தூங்கிப் போய்விடாதே, சாமானெல்லாம் ஜாக்கிரதை, எல்லாம் சரியாயிருக்கிறதா எண்ணிப் பார்` என்று சொல்வது? வந்தனாவுக்கும் பெரியவர் நின்றுகொண்டிருப்பது பார்க்கச் சிரமமாக இருந்தது. அந்த வீட்டில் அவரும் அவள் கணவனும்தான் ஒருமுறை கூட அவளை நொண்டி என்று குறிப்பிடவில்லை. அந்தக் குடும்பம் அப்படியொன்றும் பணக்கார வீடு இல்லை. அவர்கள் எப்போதோ குடி போயிருந்ததால் வீட்டு வாடகை அவள் கல்யாணத்திற்குப் பிறகுதான் நூறு ரூபாயிற்று. எஸ்.எஸ்.எல்.சி . முடித்தவுடனேயே அவளுடைய கணவன் ஒரு சின்ன வங்கியில் சேர்ந்திருந்தான். மூத்த மகன் வியாபாரத்தைக் கவனிக்காமல் வேலைக்குப் போனதில் அவனுடைய அப்பா, அம்மா இருவருக்கும் வருத்தம். அவன் உத்தியோகத்தைச் சொல்லி அவர்களால் அதிகப் பணம் சீர் கேட்க முடியவில்லை. நொண்டிப் பெண்ணை யார் தலையில் கட்டிக் கொள்வார்கள் என்று சொல்லித்தான் இவ்வளவு வைரம் இவ்வளவு தங்கம் இவ்வளவு வெள்ளி என்று வாங்கிக்கொண்டார்கள். எல்லாம் வியாபாரத்துக்குத்தான் போயிற்று. மூத்த மகன் கல்யாணத்திற்காகக் காத்திருந்தது போல் வீட்டிற்கு ஒரு டெலிபோன் வந்தது. ஒரு பெட்ரோல் பம்ப் கைவசம் வந்தது. வந்தனாவின் கணவன்தான் காலையிலும் மாலையிலும் போய் பார்த்துக்கொண்டான். வேலைக்கிருந்தவன் ஒருவன் பணத்தைக் கையாண்டபோது அவனைப் போலீசில் பிடித்துத் தராதபடி சம்பள உயர்வு கொடுத்து மாதா மாதம் பணத்தைப் பிடித்துக்கொண்டான். ஒரு பண்டிகை தினத்தன்று அந்த ஆள் வந்தனாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தான். அவனுக்கு அவள் பாதம் ஒன்று சிறுத்திருப்பது கண்ணில் பட்டிருக்காது.

ரயில் நகர ஆரம்பித்தது. ஒரு வார்த்தை பேசாமல் வந்தனாவின் கணவன் கையை மெதுவாக வீசினான். வந்தனா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அவளுடைய மைத்துனர்கள் கையை வீசியவண்ணம் இருந்தார்கள். பெரியவர் வராமலிருந்தால் வந்தனாவும் கையை வீசியிருப்பாள். இப்போது அவளுக்கும் சேர்த்து தன்ராஜ் வீச வேண்டியிருந்தது.

ரயில் வேகம் கூட ஆரம்பித்தவுடன் அப்பாவும் பிள்ளைகளும் திரும்பிப் போவது ஒரு கணப்போது அவ்வளவு கூட்டத்தின் நடுவிலும் தெரிந்தது. நிலையம் வெளியே வரை சேர்ந்து போவார்கள். அதன் பிறகு அவள் கணவன் ஒரு திசையில் நடந்து போவான். மைத்துனர்களில் ஒருவன் அப்பாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துப் போவான்.

வந்தனா இப்போது செளகரியமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு முக்காடைத் தளர்த்தி விட்டுக்கொண்டாள். பெரியவர் ரயில் நிலையத்திற்கு வந்தது அவளுக்குப் பெருமையாக இருந்தது. அவளுடைய அம்மாவும் அப்பாவும் `நிஜமாகவா? நிஜமாகவா?` என்று கேட்பார்கள். அவளும் அவள் கணவனும் தனிக்குடித்தனம் போனபிறகு அவர்கள் வீட்டுக்கு ஒரு முறை கூட அவர் வந்ததில்லை. போன வருடம் அவளுடைய இரு மைத்துனர்களுக்கும் அடுத்தடுத்த மாதம் திருமணம் முடிந்து இப்போது வீட்டில் இரு மருமகள்கள். ஒருத்தி கூட மாலையில் வீட்டில் இருப்பதில்லை என்று பேச்சு வந்துவிட்டது. ஒருத்தி கணவனோடு சேர்ந்துகொண்டு ஏதாவது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவ்வப்போது குடித்து வருகிறாள் என்று கூடச் சொன்னார்கள்.

`பசிக்கிறதும்மா`, என்று தன்ராஜ் சொன்னான்.

`டிக்கெட் கலெக்டர் அங்கே வரார் பாரு, அவர் போனப்புறம் சாப்பிடலாம்`

`இல்லேம்மா இப்பவேம்மா`

வந்தனா பிஸ்கட் பொட்டலத்தைப் பிரித்து இரு பிஸ்கட்களை எடுத்துக் கொடுத்தாள். அவள் அதை மூடுவதற்குள் தன்ராஜ் அவனாக இன்னும் இரண்டு எடுத்துக்கொண்டான். வந்தனா கை கழுவி வரப் பெட்டியின் கோடிக்குச் சென்றாள்.

அப்பெட்டியில் நிறையப் பேர் நின்றுகொண்டுகூடப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வந்தனாவின் கண்ணுக்கு நிறைய பெண்களே தென்பட்டார்கள். சிவப்பு, கறுப்பு, மாநிறம், உயரம், குட்டை, தலைவாரிப் பின்னிக் கொண்டவர்கள், முடி வெட்டிக் கொண்டு நடிகைகள் போலத் தலைமயிர் வைத்துக்கொண்டவர்கள், புடவை கட்டியவர்கள், ஜீன்ஸ் அணிந்தவர்கள், நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டவர்கள், இட்டுக் கொள்ளாதவர்கள்…எவ்வளவுதான் தைரியசாலிகள் போல இருந்தாலும் கல்யாணம் செய்து வைக்க அப்பா அம்மா உதவி வேண்டியிருந்தது.

ஒருத்தரின் தயவு வேண்டுமென்றால் அவருடைய முடிவையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வருகிறது. அவளுடைய இரண்டாவது மைத்துனனின் மனைவி அமெரிக்காவில் வளர்ந்து படித்தவள். அவள் எங்கேயாவது ஒரு வெள்ளைக்காரன் பின்னால் போய்விடக் கூடாதே என்று கவலைப்பட்டுக் கொண்டு அவள் அப்பா அம்மா இந்தியாவுக்கு வந்து மாப்பிள்ளை பார்த்தார்கள் என்று சொன்னார்கள். அவள் வந்தனா வீட்டிற்கு ஒரு முறை வந்தபோது அவர்கள் தனியாக இருந்த நேரத்தில், `பாபி, உன் காலைக் கொஞ்சம் பார்க்கலாமா?` என்று கேட்டாள். அவள் வந்தனாவின் காலைப் பார்த்து வருத்தப்பட்ட மாதிரிகூட இருந்தது. இன்று அவள் ரயில் நிலைத்திற்கு வருவாள் என்று வந்தனா எதிர்பார்த்திருந்தாள். வண்டி ஏழு மணிக்கே கிளம்பாததாயிருந்ததால் அவள் வந்திருக்கக்கூடும்.

மூன்று நான்கு முறை காபியும் காலையுணவுக்காரர்களும் வந்து போய்விட்டார்கள். `பசிக்கிறதும்மா`, என்று இன்னொரு முறை தன்ராஜ் கேட்டுவிட்டான். வந்தனா தன் எதிரில் உட்கார்ந்திருப்பவர்களையும் பக்கத்திலிருப்பவர்களையும் ஒரு கண் வீச்சில் பார்த்தாள். ஒருவரைத் தவிர எல்லாரும் எதையாவது தின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

வந்தனா சாப்பாடுக் கூடையைத் தன் முன் இழுத்துவிட்டுக் கொண்டாள். காலை நான்கு மணிக்கே எழுந்து செய்த பூரியும் காய்கறியும் அப்போதும் சூடாக இருந்தது. கூடை அடியில் பழங்களும் ஊறுகாய்ப் புட்டியும் இருந்தன. ஒரு தண்ணீர் பாட்டில். அவை தவிர முன் தினம் கடையில் வாங்கிய சில தினபண்டங்கள். `முதல் முறையாக இன்று உண்ணப் போகும் உணவு நல்லதையே செய்வதற்கு உதவட்டும்` என்று வேண்டிக்கொண்டாள். இந்த நல்லது கெட்டது பற்றி அவளுக்கும் சில ஐயங்கள் வரத் தொடங்கி விட்டன. அவளைப் பற்றிய கவலை இல்லை. அவள் வாழ்க்கையில் அடைய வேண்டியது எல்லாம் அவளுக்கு ஒரு மாதிரி ஏற்பாடாகிவிட்ட மாதிரி இருந்தது. அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் தன்னையும் பிறரையும் மதிக்கும் கணவன். ஒரு மகன். இன்னும் சில வாரங்களில் இன்னொரு குழந்தை. அவள் பிரசவத்துக்குத் தாய் வீடு கிளம்பும்போது வழியனுப்ப வரும் மாமனார், ஓரகத்திகள் இன்னும் உலகமறியாதவர்கள். அவர்கள் இன்னும் மாமியார் வீட்டில் இருக்கும்போது அவள் கணவன் பாங்கில் கடன் வாங்கி ஃபிளாட் வாங்கி விட்டான், எல்லாம் சரி, எல்லாம் இன்று சரி, ஆனால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பெரிய குண்டு வெடிக்கக் காத்திருந்தது போலிருந்தது.

மாதிரிக்கு அவர்கள் இன்று காலையில் ரயில் நிலையம் வந்த ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டிய முறை வயிற்றைக் கலக்கியது. அந்த காலை வேளையிலும் சாலையில் பத்துப் பதினைந்து பேர் தப்பிப் பிழைத்தார்கள். வண்டியில் இருந்தவர்களுக்கே அதைக் கூறலாம். ஆனால் ரிக்‌ஷா ஓட்டியவருக்கு அது சகஜமாக இருந்தது. அதிகம் போனால் அவளுடைய மைத்துனர்கள் வயதுதான் இருக்கும். அவர்களும் அப்படித்தான் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வார்கள். அவர்கள் மனைவிகள் தலை மயிர் காற்றில் பறக்கக் கணவன்மார்களை இறுகக் கட்டிக்கொண்டு ஏதோ பேசியவண்ணமே இருப்பார்கள். இந்த ரயிலிலேயே ரயில் பெட்டியின் திறந்த கதவருகே நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலருக்காவது இருக்கைகள் இருக்கும். ஆனால் பார்ப்போர் வயிற்றைக் கலக்கும்படியாக அவர்கள் படியருகில் தொத்திக் கொண்டு நின்றார்கள். யாருக்கு வயிற்றைக் கலக்குகிறது? வந்தனா சுற்று முற்றும் பார்த்தாள். யாரும் கலங்கும் வயிறோடு இருப்பதாகத் தெரியவில்லை.

`என்னம்மா, சும்மாச் சும்மா அப்படியே உக்காந்துடறே?`, என்று தன்ராஜ் சொன்னான்.

`அங்கே கோடியில் ஒரு பையன் நிக்கறானே, அவனிடம் அதைக் கொடுத்துவிட்டு வா`

`போம்மா, அவன் யாருன்னு எனக்குத் தெரியாது. பிச்சைக்காரப் பையன்.`

`அதுக்குத்தான் சொன்னேன். ஒரு பூரி கொடுத்து விட்டு வா`

`என்னாலே முடியாது.`

வந்தனா ஒரு கணம் காத்திருந்தாள். அந்தப் பையன் பார்வை அவர்கள் மீது விழுந்தபோது அவனை அழைத்தாள். அந்தப் பையன் நொண்டியபடி நடந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவள் ஒரு பூரியும் சிறிது காய்கறியும் அதில் வைத்துக்கொடுத்த போது அந்தப் பையன் இன்னொன்று என்று சுட்டுவிரல் காட்டிக் கெஞ்சினான். அதையும் வாங்கிக்கொண்டு அவள் பார்வையில் விழக்கூடிய இடமாகப் பார்த்து நின்று கொண்டான்.

வந்தனா ஒரு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தட்டு எடுத்துப் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு அதில் சில பூரிகள் எடுத்து வைத்தாள். காய்கறி, இனிப்புகள். `ஊறுகாய் வேணுமா?` என்று கேட்டாள். வேண்டாம் என்று தலையசைத்து தன்ராஜ் இனிப்புகளைத் தின்னத் தொடங்கினான். `தண்ணீர்` என்று கையைக் காட்டினான்.ஓர் உயரத் தம்ளரில் அவள் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.

`பிஸ்கட்.`

‘அப்புறமாத் திங்கலாமே?`

`இப்பவே வேணும்.`

அவன் சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவி வந்தவுடன் அவன் கைகளை நன்கு ஈரம் போகத் துடைத்தாள். சிறிது ஊறுகாய் எடுத்துப் போட்டுக்கொண்டு அவளும் உண்ணத் தொடங்கினாள். அங்கே அவள் கணவனும் தின்று முடித்து வெளியே கிளம்பிக் கொண்டிருப்பான். அவன் முதலில் சேர்ந்த வங்கியை இன்னொரு பெரிய வங்கியோடு இணைத்திருந்தார்கள். சம்பள விகிதத்தில் அதிக வித்தியாசம் இல்லாது போனாலும் வேறு சலுகைகள் கிடைத்தன. அவனுடைய அப்பாவே அங்கு தன்ராஜ் பெயரில் ஒரு கணக்கு ஆரம்பித்தார். பெட்ரோல் பம்பு கணக்கு முதலிலிருந்தே அங்குதான் இருந்தது. இப்போதும் அவள் கணவன் அப்பா வீட்டுக்குப் போய் பெட்ரோல் பம்புக்கும் போய் காசோலைகளைக் கணக்கில் சேர்க்க எடுத்து வருவான். இப்போதுகூட அவன் அப்பாவோடு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

chess_queen

பெட்டியில் இருந்தவர்கள் ஒரு நிலை கொண்டு இருக்கவில்லை. அவர்கள் நடமாட்டத்தோடு ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை காபி, ஆம்லெட், வடை, பிஸ்கட், சிகரெட் என்று விற்பவர்கள் வந்தவண்ணமிருந்தார்கள். வந்தனா உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரில் இருந்த ஒரு குடும்பத்தோடு பேச இருவர் வந்தார்கள். அவர்கள் நெருக்கியடித்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து வந்தனா ஜன்னலோரம் உட்கார்ந்து அவர்களுக்குச் சிறிது இடம் செய்து கொடுத்தாள். அந்தக் குடும்பத்தில் ஒரு வயதான அம்மாள் பேசிக் கொண்டேயிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவர்கள் எல்லாரும் கிளம்பி வேறெங்கோ போனார்கள். தன்ராஜ் முதலில் எதிர்புறம் போய் உட்கார்ந்தான். ஆனால் உடனே அம்மா பக்கத்தில் வந்து, `செஸ் ஆடலாம்மா,` என்றான்.

இந்த செஸ் ஆட்டம் ஐந்தாறு மாதத்திற்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்கு வந்தது. வந்தனாவின் கணவன் ஒரு நாள் செஸ் காய்கள் வாங்கி வந்து அவனுக்கவனே ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை பார்த்து விளையாடிக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு நாள் ஒரு புதிரில் அவன் மூழ்கியிருந்தபோது வந்தனா, `இது`, என்று ஒரு காயைக் காட்டினாள்.

அவனுக்கு ஆச்சரியம். `உனக்குத் தெரியுமா?`

`கொஞ்சம் கொஞ்சம்`

`நீ சொல்லவேயில்லையே!`

அதன் பிறகு வாரம் ஒரு ஆட்டமாவது அவர்கள் ஆடினார்கள். அவள் கணவன் தோற்றுப் போகும் நிலையில் இருக்கும்போது `இப்படி` என்று அவள் சொல்லிக் கொடுப்பாள். அவன் அவளிடம் தோற்றுப் போவதற்குத் தயங்கவில்லை. ஒரு முறை மிகுந்த சந்தோஷத்துடன், `நீ ரொம்பப் பொல்லாதவள்` என்றான். பிறகு தன்ராஜுக்குக் கற்றுக் கொடுத்தான். `பெரிய ஆட்டம் ஆடணும்னா அம்மாகிட்டே தான் ஆடணும்,` என்பான்.

வந்தனாவுக்குச் சற்றுக் கண்ணயர வேண்டும் போலிருந்தது. `கொஞ்சம் பொறுத்து ஆடலாம்,` என்றாள்.

`நான் எது கேட்டாலும் அப்புறம் அப்புறம்னுதான் சொல்லறே,` என்று தன்ராஜ் சொன்னான். வந்தனாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தன்ராஜ்தான் எவ்வளவு கெட்டிக்காரன்.

அந்த செஸ் பெட்டியைத் திறந்து கவிழ்த்து வைத்தால் அதுவே ஆட்டப் பலகையாகிவிடும். வந்தனா காய்களை எடுத்துக் கட்டங்களில் வைத்தாள். `எனக்குத்தான் வெள்ளை`, என்று தன்ராஜ் சொன்னான்.

பதினைந்து முறை காய்களை நகர்த்துவதற்குள் தன்ராஜ் நிலை மோசமாகிவிட்டது. `இப்படிப் பண்ணு` என்று வந்தனா சொன்னாள். அவள் நகர்த்தி விட்டு அவனுக்கு ஒரு காயைக் காட்டி, `இதை இங்கே வை` என்றாள். அவளே அறியாதபடி அவள் குதிரை ஒரு சமயத்தில் ராஜா மந்திரி இரண்டையும் வெட்டக்கூடிய நிலையில் இருந்தது. `தன்ராஜ், வேறே ஆட்டம் ஆடலாம்`, என்றான்.

`இல்லே இதைத்தான் ஆடணும்.`

`இதைப் பாத்தியா?` முதலில் அவனுக்குப் புரியவில்லை. அவள் தன் குதிரையைக் கொண்டு அவன் ராஜா கட்டத்தின் மீது வைத்துக் காட்டினாள். அவன் தீவிரமான முகத்துடன் ராஜாவை நகர்த்தினான். வந்தனா அவனுடைய மந்திரியை வெட்டினாள்.

`நீ முன்னாலியே சொல்லலே` என்று தன்ராஜ் சொன்னான். பிறகு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் யானையை ராஜாவின் வரிசைக்குச் சரியாக வைத்தான்.

`ஊஹூம், யானை போயிடும்` என்று வந்தனா சொன்னாள்.

`நீ எனக்குத் தப்புத் தப்பாச் சொல்லிக் கொடுத்தே`

`இந்த ஆட்டத்திலேயே அப்படியெல்லாம் வந்துடும்.`

தன்ராஜ் அவனுடைய காய்களையே உற்று நோக்கிய வண்ணம் இருந்தான். திடீரென்று எல்லாவற்றையும் கீழே தள்ளிவிட்டு அவள் துடையில் ஓங்கிக் குத்தினான்.

`அம்மா,` என்று வந்தனா கத்தினாள். தன்ராஜ் மீண்டும் அவளைக் குத்தத் தயாராக இருந்தான். அவர்கள் அருகில் இருந்தவர்கள் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

`என்னடா ஆச்சு?` என்று வந்தனா அவள் வலியையும் பொருட்படுத்தாது கேட்டாள். தன்ராஜ் வெறுப்புத் தோன்ற அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வந்தனா செஸ் காய்களைப் பொறுக்கி மூடி வைத்தாள். மகன் அடித்த அடியைவிட அவன் கண்ணில் தோன்றிய வெறி அவளைப் பயமுறுத்தியது. அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தை பற்றி ஒரு கணம் நினைத்தாள். எல்லாப் பெண்களுக்கும் இனி பிறக்கப் போகும் குழந்தைகள் பற்றியும் நினைத்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.