அமைதியின் அசாதாரணக் கூர்மை

ami_tn copyஅரவிந்த அடிகா, அசோகமித்ரனுடன் தன்னுடைய சந்திப்பை பதிவு செய்யும்போது, ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் வட்டத்திடையே அசோகமித்ரன் பயத்துடன் பார்க்கப்பட்டார் என்று சொல்கிறார். அசோகமித்ரன் யூ ஆர் அனந்தமூர்த்தி போன்றவர்கள் பிராந்திய மொழி எழுத்தில் எட்டிய உச்சம் அவர்களை நிலைகுலைய செய்திருக்கிறது. ஆனால், தமிழுலகில் அசோகமித்ரன் மிகவும் குறைவாகவே போற்றப்பட்டிருக்கிறார். என்னுடைய பதின்ம காலத்தில் வகைதொகையில்லாமல் வாசிக்கும் வழக்கம் இருந்த போதிலும் அசோகமித்ரன் சட்டென பிடிபடவில்லை. சீற்றமும் வேகமும் துள்ளலும் கொண்ட எழுத்துகள், கரைபுரண்டோடி வரும் காட்டாறு போல உள்ளிழுத்துக் கொள்கிறது. அசோகமித்திரன், அமைதியான ஆழ்கடல். அதன் அசாதாரணமான எளிமை நம்முடைய லயிப்பை காலத்துக்கும் பெருக்கிக்கொண்டே போகிறது. ‘அப்பாவிடம் என்ன சொல்வது’ என்றொரு சிறுகதையில்தான் முதலில் தடுக்கி விழுந்தேன். பெங்களூரு கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில், இரவு வேளையில் ஒரு கிழவி கண்யாகுமரி இரயிலைப் பிடிக்க வருகிறாள். கூடவே வழியனுப்ப அவருடைய சிறுவயது பேத்தியும். தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் விவரிக்கப்படும் கதை, வாசக ஈர்ப்பைக் கூட்டும் அலங்காரங்களோ, அதிர்ச்சி மதிப்பீடுகளோ, மிகையுணர்ச்சியோ இல்லாத யதார்த்தமான தொனியில், வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தி முடிகிறது. அமைதியின் அசாதாரணக் கூர்மையின் வலிமை. கதை முடிவில் வரும் சிறுமியின் தகப்பனார் பாத்திரம் மூலம் சிறுமியின் பத்திரத்திற்கு உத்தரவாதம் கிடைத்து ஓர் ஆசுவாசம் மிஞ்சுகிறது. பிறகுதான், அந்தப் பாத்திரம் கதை முழுவதும் மறைவாக உறைந்திருப்பது புரிகிறது. அதுதான் அசோகமித்ரன். அவருடைய ஒவ்வொரு பாத்திரத்துக்குமான நியாயத்திற்கு அவர் பாடுபடாமல் இருப்பதேயில்லை. பிறகு ‘காந்தி’ என்ற பிரபலமான சிறுகதை. கசப்பும், சமநிலையும், துவேஷமும், ஆங்காரமும், கொந்தளிப்புமாக போகும் கதையின் முடிவில் சாந்தி நிலவுகிறது. வில்லியம் ஹென்லியின் ‘இரவிலிருந்து’ கவிதையைப் பற்றி ஒரே ஒரு குறிப்பு வருகிறது. அது கதைக்கு தரும் திறப்புதான் எத்தனை மகத்தானது. காந்தியை முன்வைத்து நடக்கும் எந்த விவாதத்திற்கும் கருவி நூலாக பரிணமிக்கும் கதை.

ASOKAMITHTHIRAN-22-U-R-ANANDHAMOORTHI-1

(திரு.யூ.ஆர்.அனந்த மூர்த்தியுடன், அசோகமித்திரன். நன்றி : ‘காலம்’ இதழ்)

இந்தியாவின் கோர்டஸார் என்று அசோகமித்ரனை குறிப்பிடும் அடிகா அதே கட்டுரையில் அசோகமித்ரனின் தொடக்கக் கால தொழிலான சினிமா கம்பெனி வேலைப் பற்றியும் சொல்கிறார். எஸ் எஸ் வாசனின் ஜெமின் ஸ்டூடியோவில் பணிபுரிந்தகாலத்தில் ‘ஏதோ எழுதவெல்லாம் செய்கிறான்’ என்ற ரீதியில்தான் அவரைப் பற்றிய பிம்பம் இருந்திருக்கிறது. அவரை அளவிடமுடியாத அந்த பணிச்சூழலை, மாந்தர்களை, ‘கரைந்த நிழல்கள்’ல் காட்சிபடுத்துகிறார். முடிக்கப்படாத ஒரு சினிமா காட்சிக்கான முஸ்தீபுகளில் தொடங்கி மொத்தமாக கைவிடப்படும் ஒரு திரைப்படத்தின் பயணத்தை முன்வைத்து, பத்தே பத்து அத்தியாயங்களில் எத்தனை கதைகள் சொல்லப்படுகின்றன. முடிவில் அந்த திரைப்படம் அப்படியே புதையுண்டு செல்லரித்துப்போன ஷெல்ஃபுகளில் அரைப்படி காகிததூசியாக முடங்கிப்போகிறது. முன்னும் பின்னுமாக நான்-லீனியர் முறையில் நகரும் கதையின் முடிவில் வரும், திரைப்பட தயாரிப்பாளருக்கும் அவருடைய மகனுக்குமான உரையாடல் காட்சி அசோகமித்ரனின் உச்சம் என்று சொல்லலாம். கதை வெளிவந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியதை தவிர, பெரிதாக பேசப்படவில்லை. இன்றளவும் தமிழ் திரையுலகில் இந்த நாவல் படமாக்கப்படாமல் இருப்பது நம்முடைய துர்பாக்கியம்.

பால் ஸக்கரியா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களே அசோகமித்ரனை மிகவும் தாமதமாகத்தான் கண்டடைகிறார்கள். அசோகமித்ரன், அனந்தமூர்த்தி, மஹாஸ்வேதா தேவி போன்றோரை அணுக முடியாத போதாமைக்கு, இந்திய இலக்கிய மரபுகளை ஒருமைப் பார்வையில் அணுகும் நவீன கருத்தியலின் அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறார் ஸக்கரியா. தெஹல்காவுக்கு சிறந்த படைப்புகளை பரிந்துரைக்கும் போது ஸக்கரியா குறிப்பிடுவது அசோகமித்ரனின் ‘தண்ணீர்’ நாவலை. அவருடைய விசால வாசிப்பனுபவத்தில் ‘தண்ணீர்’ உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பதில் வியப்பில்லை. உணர்ச்சி பெருக்கோடும் கண்ணிவெடிகளை புதைக்காமல், வாசிப்பவரின் பச்சாதாபத்தை வலிந்து கோராமல், சமநிலையில் கதைகூறும் முறை அவரையும் கவர்ந்திருக்கிறது. ‘ஊர் பேர் தெரியாத ஒரு பெண் குடத்துடன் தண்ணீருக்கு அலைந்ததை திரும்பத் திரும்ப பார்த்ததினால் எழுதப்பட்ட’ கதையாக அசோகமித்ரன் முன்னுரையில் சொல்கிறார். அந்த முகம்தெரியாத பெண்தான் எத்தனை வடிவங்களில் அந்த நாவலில் வந்து போகிறார்கள். ஜமுனா சினிமாத் துறையின் பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறாள். அவள் தங்கை சாயாவிற்கோ காலத்தின் நிச்சயமின்மையால் தன் கூட்டை இறுக்கிக் கட்ட முடியாமல் தோற்றுப் போகிறாள். இறுக்கமான குடும்பமே சிறையாக டீச்சர் பாத்திரம். குடிநீர் குழாய் உடைந்து சாக்கடை நீர் கலந்து தெருவே சகதியில் மூழ்கும்போது எல்லாக் கதைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்துகொள்கிறது.

அசோகமித்ரன் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். அல்லது முன்பிறவியிலாவது அவர் அப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறார் ஸக்கரியா. மாலதி, ஜமுனா, சரோஜினி, இலாரியா, ஜயசந்திரிகா, திலகா, ஜெயதேவி, லாரா, கஜுக்கோ என்று அத்தனை பெண்களின் உள்ளேயும் உறைந்து, ஊடுருவி, பல ரூபிகளாக, வாசகரின் மனதை நுட்ப இரகசியங்களை அவதானிக்கும் கச்சித ஆற்றலோடு நம்முன் அவரே நிகழ்த்துகிறார். அவருடைய புனைவுலகுக்கும் நம்முடைய மெய்யுலகுக்கும் இடையேயான வெளி நெகிழ்வாகவே இருக்கிறது. சமயத்தில் இடைவெளியே இருப்பதில்லை. ‘புலிக்கலைஞனில்’ வரும் டகர் ஃபாயிட் காதர் போல நாமும் வாய்ப்புக்காக குழைந்தும் நெளிந்தும் நின்ற அனுபவங்கள்தான் எத்தனை. ‘இது வேறமாதிரி ஆட்டம் சார்’ என்று சொல்லிவிட்டு காதர் புலித்தலையோடு உறுமும்போது சர்மா போல நாமும் வாயடைத்துப் போகிறோம். ஏனென்றால், சர்மாவும் ஒருகாலத்தில் நடிப்புக் கலைஞனாக இருந்து பிறகு கதை இலாகாவுக்கு இடம் மாறியவர். தன்னில் தொலைந்து போன கலைஞனை எதிரில் கண்ட வியப்பு. இப்படியான கூடுவிட்டு கூடுபாயும் அனுபவதிற்கு வாசகனை உட்படுத்துவது அவருக்கு கைவந்த கலை. ஜெமினி ஸ்டூடியோஸ், செகந்திராபாத் லான்சர் பேரக்ஸ், சென்னை தியாகராய நகர், அமெரிக்க அயோவா நகர் என்று அவருக்கு பழக்கமான சூழலிலே பெரும்பாலும் கதைகளை நிகழ்த்துகிறார். ‘பிரயாணம்’ போன்ற வெகு சில விதிவிலக்குகளும் உண்டு. ஒரு பெரும் ஆலமரமும் அதன் விழுதுகளுமாக அசோகமித்ரனின் கதைகள் அவரைச் சுற்றி பரந்து விரிந்திருக்கும் தோற்றம் தோன்றுகிறது. லான்சர் பேரக்ஸ் முகப்பில் இருக்கும் ஆலமரம் போல. எண்ணற்ற மணித்துளிகளான அனுபவங்களையும், தீவிரமான நினைவுகளையும் அப்படியானதொரு ஆலமரமாகத்தான் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்திய துணைகண்டத்தின் பிரிவினைக் காலத்தில் ரஜாக்கர் புரட்சி கண்ட செகந்திரபாதும், மத்தியதர சென்னை நகரபுலமும் வெகு அழுத்தமாக பல பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில், நிஜாமுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையே நிகழ்ந்த பகடை உருட்டலை மிக நுணுக்கமாக பதிவு செய்த முதல் நாவல் 18ம் அட்சக்கோடு. தாம்ஸ் கென்னியல்லியின் ‘ஷிண்ட்லரின் படகு’ நாவலுக்கு இணையானது எனச் சொல்லலாம். இந்திய துணைக்கண்டத்துப் பிரிவினை என்னும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் எந்தவித அரசியல் பிணைப்பும் இல்லாத சாதாரண சந்திரசேகரனின் அன்றாட வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கிறது. இதை வெறும் வரலாற்று அரசியல் பதிவாக நிறுத்தாமல், சந்திரசேகரனின் வாழ்க்கைப் பதிவாக விரித்ததில்தான் நாவலாசிரியரின் சிருஷ்டித்தன்மை பூரணமாக வெளிப்படுகிறது. அண்டை வீட்டுக்காரரான காசிம் சந்திரசேகரன் வீட்டுக்குள் நுழைந்து குழாயை மூடுவதும், அரசியல் நிலைமை தலைகீழாக மாறியதும், சந்திரசேகரன் ரேடியோ கேட்க காசிம் வீட்டுக்குள் காம்பௌண்ட்டை ஏறிக்குதித்து நுழைவதுமாக சாமானியர் உலகில் ரஜ்வியின் பாதிப்பு எப்படி இருந்தது என வருகிறது. ஆனால் வரலாறு அவ்வளவு சுலபமாக மனச்சாந்தியை அளிப்பதில்லை. யதார்த்தத்தின் கோரமுகத்தை அப்பட்டமாக காட்டும் இறுதி அத்தியாயத்தோடு ஹைதரபாத் இந்திய யூனியனோடு இணைந்த வரலாற்றை சொல்லி முடிக்கிறார்.

பிரபலமடையும் எழுத்தே சிறப்பான எழுத்து என்ற மலின கருத்தாக்கத்தினால் அவரும் ஒடுக்கப்பட்டிருக்கிறார். அந்த வேதனையை அவருக்கே உரித்தான வரண்ட அங்கதத்தோடு பலசமயம் வெளிப்படுத்தியும் இருக்கிறார். நாற்பதாண்டுகாலத்திற்கு முன்னர் அயோவா பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச எழுத்தாளர் நிகழ்வுக்கு, இந்தியா சார்பில் அசோகமித்ரன் தெரிவு செய்யப்பட்டது நம்பமுடியாத ஒன்று. ஆனால் அந்த நல்லூழின் விளைவாக தமிழுக்கு கிடைத்ததுதான் ‘ஒற்றன்!’. ஏழுமாச அயோவா நகர வாசத்தில், பல்வேறு கலாச்சாரக் பின்னணி கொண்ட எழுத்தாளர்கள் கலவையின் மத்தியில் உலவிய ஒற்றனின் வாக்குமூலம்தான் இந்த நாவல். இத்தனை காலம் கழித்து வாசிக்கும்போதும், எந்தவித மிகு உணர்ச்சியும் அற்ற அமெரிக்க நிலவியல் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய துல்லியமான படைப்பாக அமைந்திருப்பது பெரும் ஆச்சரியம். அக்காலத்தில் ‘நாவல்’ என்ற வடிவமைப்பை பரீட்சார்த்தமாக பயன்படுத்தியதில் அசோகமித்ரனுக்கு மிகப் பெரிய பங்குண்டு. ‘கரைந்த நிழல்கள்’ நான்-லீனியர் அமைப்பில் சொல்லப்பட்டது என்றால், ‘தண்ணீர்-தண்ணீர்’ கோர்வையான கதைவடிவம். அவருடைய நாவல்களிலே அளவில் பெரியதான 18ம் அட்சக்கோட்டில் கூட கதைசொல்லியின் பார்வை அத்தியாயத்திற்கு அத்தியாயம் மாறிக்கொண்டே வரும். ‘ஒற்றன்!’ முழுவதும் அனுபவ தொகுப்பு. பதினான்கு தனித்தனி சிறுகதைகள் என்றே சொல்லலாம். சாவி (மோனா பப்ளிகேஷன்ஸ் வழியாக) வெளியிட்ட முதல் பதிப்பில், 200 பக்கங்களை தாண்டுகிறது என்று 2 அத்தியாயங்களை வெட்டித்ட்தான் வெளியிட்டாராம். வெட்டப்பட்டு பின் சேர்க்கப்பட்ட பகுதியான ‘அம்மாவின் பொய்கள்’ அத்தியாயத்தில் ஞானகூத்தனின் கவிதையை மேடையில் நிகழ்த்தும் காட்சி இடம்பெறுகிறது. இம்மாதிரியான கவிதை நிகழ்த்தும் வடிவங்களை நாம் ஏன் கைக்கொள்ளவில்லை என்பது துயரமே.

ஒற்றனில் இரண்டு ஒற்றர்கள் வருகிறார்கள். எதியோப்பிய எழுத்தாளர் அபே குபேக்னா உருவாக்கும் ‘ஒற்றன்!’ எனும் நாவலும், பெருவிய எழுத்தாளர் பிராவோ உருவாக்கும் ‘மகா ஒற்றனும்’. பிராவோ பிரமாதமாக ஒரு வரைபடத்தை சுவற்றில் வரைந்து ‘இதுதான் என் நாவல்’ என்று சொல்கிறார். ஒரு மாதம் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு அந்த வரைபடத்தை நாவலாக மாற்றுவதுதான் அவருடைய எழுத்துமுறை.. அந்த துல்லிய நாவல் உருவாக்கமுறை பற்றி அசோகமித்திரன் காண்போரிடமெல்லாம் சிலாகித்து புகழவார். ஆனால் பிராவோவின் நாவல் அவருக்கே உவப்பில்லாத ஆக்கமாக அமைந்துவிடும். இதற்கு நேர்மாறான முறையில்தான் அசோகமித்ரன் நாளும் தன்னுடைய எழுத்துப்பணியை செய்து வந்திருக்கிறார். காலை ஏழிலிருந்து ஏழரைக்குள் பூங்கா பெஞ்சில் அமர்ந்து எழுதுவதுதான் எழுத்து. பெஞ்ச்சில் இடம் இல்லையென்றால், மகிழிச்ச்யுடன் ‘இன்றைக்கு எழுதவேண்டியதில்லை’ என்று வீடு திரும்பிவிடுவாராம். எதையும் திட்டமிடாமல், அமெரிக்க விஜயம் முடித்து 2 வருடங்கள் சும்மா இருந்துவிட்டு, சிறு சிறு பகுதிகளாக அந்த அனுபவங்களை பதிவு செய்து, அது நாவலாக உருவாகி விடுகிறது. வடிவ பிரக்ஞையை எள்ளல் செய்வது போலவே ‘மகா ஒற்றனின்’ உருவாக்கக் கதை இருக்கிறது.

சாமானியனின் முகமாக வலம்வரும் தியாகராஜன், அசோகமித்ரன் என்னும் முகமூடியை அணிந்து கொண்டதும் அதி ஆற்றலுடன் கூடிய ஒற்றனாகிவிடுகிறார். நமக்கே அறியாத நம் மனதின் ஆழங்களை இனம்கண்டு, புனைவின் வசியத்தால் வெற்றிக்கொண்டுவிடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.