ஒரு காலகட்டத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை இறந்தகாலம், கடந்தகாலம் என்றெல்லாம் நாம் குறிப்பிட்டாலும், அவை நினைவிலிருந்து முற்றிலும் மரிப்பதில்லை, நாமும் அவற்றை முற்றிலும் கடந்து விடுவதில்லை. சில நினைவுகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாலும் சரி, அவை காலப்போக்கில் தானாகவே மங்கினாலும் சரி, அவை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்து நாமே எதிர்ப்பாராத போது வெளிவருகின்றன. எவ்வளவு சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு நினைவின் அடுக்குக்களில் எதாவது மிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே தான் பல பத்தாண்டுகளாக அசோகமித்திரன், தன் பால்ய/பதின் பருவ நினைவுகள் குறித்து நிறைய எழுதி இருந்தாலும், கடந்த 2-3 ஆண்டுகளில் வெளிவந்த அவரின் சிறுகதை/குறுநாவல்கள் தொகுப்பு நூல்களான ‘1945ல் இப்படியெல்லாம் இருந்தது'(சிறுகதைகள்), ‘நண்பனின் தந்தை’ (இரு குறுநாவல்/நெடுங்கதைகள் , மூன்று சிறுகதைகள்) இரண்டிலும், வேறு வேறு களத்தின்/காலகட்டத்தின் கதைகள் இருந்தாலும், அவரின் பால்ய/பதின் பருவ கால நினைவுகள் சார்ந்த கதைகளே பிரதான பங்கு வகிக்கின்றன.

ஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்த நாட்களைப் பற்றிய பதிவுகள் நிறைய உள்ளன. அடர்த்தியாக சொல்லப்படும் தகவல்கள், ஓவியர் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்கும் போது உருவாகும் வரிவடிவங்கள், ஒரு கட்டத்தில் ஒன்றிணைவதைப் போல் கதைகளோடு பொருந்தி விடுகின்றன. கதைசொல்லி பதிவு செய்யும்
“தார் ரோடுகளில் இருபுறமும் நிறைய வெற்றிடம் இருந்ததால் அங்கேயே நின்றுகொண்டு பார்த்துக் கொண்டே இருக்கலாம். எங்கோ அங்கொரு கட்டடம், இங்கொரு கட்டடம். கூரை, சீமை ஓடு வேய்ந்ததாக இருக்கும். எப்பக்கம் திரும்பினாலும் பிரம்மாண்ட ஓவியம் போலத் தோன்றும்”
நிலவியல் இன்று அருகி வரலாம், ஆனால் மின்வசதி இல்லாத இருட்டான மருத்துவனைகள் இன்றும் இருக்கக்கூடும்.
‘பம்பாய் 1944’ குறுநாவல் ‘bildungsroman’ (ஒருவன் தன் பேதைமை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சிறுவன்/இளைஞன் பிறகு ஆண் என்று மாறுவதை விவரிப்பது) பாணி கதை. உறவினர் வீட்டில் வாழும் கதை சொல்லி, பிறகு அண்ணனுடன் பம்பாயில் வசிக்கிறான். படித்து முடித்து வேலைக்கு செல்கிறான், புதுஅனுபவங்களை/எதிர்கொள்கிறான். அவனுக்குத் தெரிகிறதோ இல்லையோ, அவனைத் தொடரும் வாசகனுக்கு அவனுக்கு ஏற்படும் முதிர்ச்சி புரிகிறது. புது உறவுகள் மலரும் என்ற நிலையில், ‘மணல்’ குறுநாவல் போல், ஒரே நேரத்தில், திடீரென்று முடிந்து விட்டது போன்றும், அதே நேரம் மிகப் பொருத்தமானதாகவும் தோன்றும் tantalizing முடிவோடு, கதை முடிகிறது. பால்ய காலத்தைப் பற்றிய இந்தக் கதைகள் தனித் தனியாக பார்க்கும் போது, மற்றவற்றிலிருந்து வேறுபட்டு அதே நேரம் தன்னளவில் முழுமையாக இருந்தாலும், இவற்றை மொத்தமாகப் பார்ப்பது அ.மி சொல்வதை ஒரு முழு வாழ்க்கையாக/நிலவியலாக/காலகட்டமாக தொகுத்துக் கொள்ள உதவுவதோடு அவர் புனைவுகளைப் பற்றிய இன்னும் காத்திரமான சித்திரத்தை அளிக்கும்.
நிறையத் தகவல்கள் இருந்தாலும், ஊதிப் பெருத்த உரைநடையாக இல்லாமல், எப்போதும் போல் எளிமையான அதே நேரம் அடர்த்தியான உரைநடையை இந்தக் கதைகள் கொண்டுள்ளன. ஒரு கதையில், கதை சொல்லியின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே இறந்து விட, தன் பால்ய கால அனுபவத்தை
“எனக்கு ஒரு அண்ணா உண்டு. சுந்தரம். அவன், அப்பா இருக்கிற சிறுவனாக உறவினர் வீட்டுக்குப் போய் விளையாடியிருக்கிறான். நான் எப்போதுமே அம்மாவுடன் சமையல் அறையில், இல்லது போனால் இருட்டாக உள்ள ஸ்டோர் அறையிலேதான் வளர்ந்தேன். குழந்தையிலிருந்து அடுப்புக் கணப்புடன் இருட்டுக்கும் எனக்குப் பழக்கமாகிவிட்டது“
சொல்லும் சிறு பத்தி, கதைசொல்லியை பற்றி மட்டுமல்ல, அவன் தாயின் நிலைமை பற்றியும், ஏன் ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள் அனைவரின் நிலைமையையும் (இன்றும் அந்தச் சூழல் சில இடங்களில் இருக்கக் கூடும்), ஒரு பறவைக் கோணத்தில் சொல்லி விடுகிறது

இரண்டிலும் கதைசொல்லிகளின் பார்வை வேறு.
சுஜாதாவின் கதையில் ஒரு சாகச உணர்வு உள்ளது. பலஆண்டுகள் கழித்தும், கே.விக்கும், சுஜாதாவுக்கும் வெற்றியின் அந்தச் சிலிர்ப்பு, இன்னொரு போட்டி ஏற்பாடு செய்யலாமா என்று விளையாட்டாக பேசுமளவுக்கு உள்ளது. ‘சுப்பாராவ்’கதையில்,வென்றதைப் பற்றிய நம்பமுடியாமையை (wide eye disbelief), மேட்ச் நடந்த அன்றும் சரி, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதை நினைவு கூறும் போதும் சரி கதை சொல்லி உணர்கிறார், கண்டிப்பாக இவர் மறு போட்டி பற்றி பேச/நினைக்கக் கூட மாட்டார். மேலும் இந்தக் கதையின் மையப் புள்ளி, மேட்சில் வென்றது அல்ல. போட்டிக்குள்-போட்டியாக (contest within a contest), கதை சொல்லியின் மனதில் ஐம்பதாண்டுகளாக உள்ள ஒரு சிறு உறுத்தலே மையப் புள்ளி. ஒரே கதை களத்தை/சம்பவத்தை இரு எழுத்தாளர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்ற வகையிலும் இந்தக் கதை சுவாரஸ்யமானதே.
‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’, ‘கடை திறக்கும் நேரம்’ கதைகள் போன்று திரைப்படங்களில் நகைச்சுவை சம்பவங்கள் வந்துள்ள நிலையில், அவற்றை இருபக்கக்கதைகளாகப் படிப்பது கொஞ்சம் ஆச்சர்யத்தையும்/குழப்பத்தையும் அளிக்கின்றது.
சிறுகதைகளில் ‘திடீர் திருப்பத்துடன்’ முடியும் கதைகள் (twist endings) பிரபலம். ஆனால் அந்த இறுதித் திருப்பம், வாசகனுக்கு அதிர்வூட்ட வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக, கதையுடன் ஒட்டாமல் போகவும் வாய்ப்புள்ளது . இந்தத் தொகுதிகளில் உள்ள கதைகளிலும் திருப்பம் என்று கருதக்கூடிய முடிவுகள் உள்ளன, ஆனால் அவை கதையின் போக்கை மாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கோடில்லாமல்,முன்நடந்த சம்பவங்களை, பாத்திரங்களைப் பற்றி அதுவரை நமக்கு உள்ள முடிவுகளை, மறுபரிசீலனை செய்ய தூண்டுபவையாக, கதையின் போக்கோடு ஒட்டியும் உள்ளன.
‘நாடக தினம்’ கதையில் சண்முக சுந்தரம் நடத்தும் நாடகத்தின் கதாநாயகி நாடக தினம் அன்று வர முடியாத சூழல் திடீரென்று ஏற்பட, முன்பு கதாநாயகியாக நடித்த பாக்கியத்தை மீண்டும் நடிக்க அழைக்கிறார். பாக்கியத்தை ஒப்புக்கொள்ள அவர் கால்களில் விழும் போது . நாடகம் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவரை நாம் காண்கிறோம். பாக்கியம் இறுதியில் ஒப்புக்கொண்டு, மாலை நான்கு மணிக்கு வந்தால் போதுமா என்று கேட்க, நாலரை மணி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சண்முக சுந்தரம் வீடு திரும்புகிறார். ஆனால் வீடு வந்தவுடன் ரிக்ஷாக்காரரிடம், மூன்று மணிக்கே பாக்கியம் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வர சொல்கிறார், கதை இங்கு முடிகிறது. கையறு நிலையில் உள்ள மனிதராக கதை நெடுகிலும் வருபவர், பற்றிக்கொள்ள ஒரு ஊன்றுகோல் கிடைத்தவுடன், பல ஆண்டுகால அனுபவம் உள்ள நாடக முதலாளியாக, இன்னொரு தவறு நடந்து விடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கை உணர்வுடையவராக தெரிகிறார். அவருடைய முந்தைய செயல்கள் (காலில் விழுவது போன்றவை) உணர்ச்சிப்பெருக்கில் செய்யப்பட்டவையா அல்லது பாக்கியத்தை ஒப்புக் கொள்ள வைக்க திட்டமிட்டே செய்யப்பட்டவையா?
‘கோயில்’ என்ற கதை, சூட்சுமமான, அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிறது. யதார்த்த பாணி கதையாக ஆரம்பிப்பது, ஒரு கட்டத்தில், வேறு தளத்திற்கு நகர்ந்து, ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வை (foreboding ) அளித்து, மிகை யதார்த்தமாக(surreal) முடிகிறது. இந்த மாற்றங்கள், முடிவு அனைத்திலும் கதையின் நடையில் உருவ அமைதியும், அதன் போக்கில் எப்போதும் ஒரு சம நிலையும் உள்ளது. கதையின் நடையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமலேயே இரு வேறு தளத்தில் இயங்கும் கதைகளின் உணர்வுகளை கொடுப்பதே இதன் சிறப்பு.