செகந்திராபாதிலிருந்து

அசோகமித்திரன் ஒரு முறை செகந்திராபாத் வந்திருந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன். நான் அப்பொழுது அவரைப் படித்ததில்லை. ஆனாலும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்றேன். எதற்கு வந்திருந்தார் என்ற ஞாபகம் இல்லை. என்ன பேசினார் என்றும் ஞாபகம் இல்லை. வேறு ஒரு தெலுங்கு கம்யூனிஸ்ட் தோழர், இலக்கியம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும் என்ற தொனியில் எப்பொழுதும் போல் பேசினார். அதற்கு அமி ஏதோ பதில் சொன்னார். அப்பொழுதும் அசோகமித்திரன் இப்படிதான் இருந்தார். மெலிந்த உடல், ஒரு ஜோல்னா பை. சகஜமாக எல்லோரிடமும் பேசினார். மெஹ்பூப் காலேஜில் நடந்தது இந்தச் சந்திப்பு.

எனக்கு எப்போதும் எழுத்தாளர்களைவிட அவர்களது எழுத்தே முக்கியமாக இருந்திருக்கிறது. அசோகமித்திரனைப் பொருத்தவரை அவரது எழுத்துக்கு முன்னரே அவரது பெயர் என்னைக் கவர்ந்துவிட்டது.
 
ami_tn copyஅவரது பெயரை நான் என் கல்லூரி நாட்களில்தான் கேள்விப்பட்டிருக்க வேண்டும். செகந்திராபாத்தில் விகடன், கல்கி, குமுதம் தவிர தமிழில் வேறு எதுவும் படிக்கக் கிடைக்காது. நான் கல்லூரி செல்லும்போது கல்கி, சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி, பாலகுமாரன் போன்றவர்களைதான் வாசித்திருந்தேன். சீரியஸாக எழுதுபவர்கள் என்று பார்த்தால் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும்தான் சொல்ல வேண்டும். இதில் புதுமைப்பித்தன் கதைகள் எப்படி எனக்குக் கிடைத்தன என்று தெரியவில்லை. சில பத்திரிக்கைகளில் அசோகமித்திரன் என்ற பெயர் கண்ணில் படும், அந்தப் பெயரைப் பார்த்ததும் இவர் எழுதியதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழும். அவரது பெயரை வைத்தே அவருக்கு ஆதரவான அபிப்பிராயம் வந்து விட்டது எனக்கு. இப்படி ஒரு பெயர் வைத்துக் கொண்டவர் மோசமான எதையும் எழுத முடியாது என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்குக் கிடைத்த பத்திரிக்கைகளில் அவரது எழுத்து வெளியாகவில்லை, அதனால் கல்லூரி செல்லும் வரை நான் அவரது கதைகளைப் படிக்க காத்திருக்க வேண்டியிருந்தது.
 
ஆனால் நான் வாசித்த அசோகமித்திரனின் முதல் கதையே ஆங்கிலத்தில் இருந்தது என்பதும்கூட ஒரு சுவையான நகைமுரண்தான். பழைய புத்தகக் கடையொன்றில் “New Writing in India” என்ற புத்தகத்தைப் பார்த்ததும் உடனே வாங்கி விட்டேன். பெங்குவின் பதிப்பித்த புத்தகம் அது, அதிலிருந்த படைப்புகளை அடில் ஜஸ்ஸிவாலா தொகுத்திருந்தார். அருமையான பல இந்திய படைப்புகளை அதில் படித்தேன். அவற்றில் ஒன்றுதான் அசோகமித்திரன் எழுதிய சிறுகதை.
அந்தச் சிறுகதை நடிகையாக ஆசைப்படும் ஒரு இளம் பெண்ணையும் அவளது தாயையும் பற்றியது. படப்பிடிப்பு காட்சிகளைச் சித்தரிக்கும்போதே, அசோகமித்திரன் திரைத்துறையின் சமரசங்கள், வியர்வை, அழுக்கு என்று அனைத்தையும் தன் சொற்களில் கைப்பற்றிவிடுகிறார். திரைத்துறை பற்றிய அவரது கரைந்த நிழல்கள் நாவலைப் பலரும் அறிந்திருப்போம், இந்தச் சிறுகதையை எத்தனை பேர் வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. என்னை இந்தக் கதை உடனே கவர்ந்தது. எளிய நடை; வழக்கமாக நாம் கதை என்று எதை நினைப்போமோ அப்படி எதுவும் இல்லை, பரபரப்பான எதுவும் இல்லாத அமைதியான கதைசொல்லல் முறை. மனித வாழ்வின் ஒரு பகுதியைப் பார்ப்பது போன்ற உணர்வு, ஆனால் நம் கண்களைக் கொண்டு பார்ப்பதைவிட அசோகமித்திரனின் கண்களைக் கொண்டு அவருடன் பார்க்கும்போது நம்மால் அதிகம் புரிந்து கொள்ள முடியும் என்ற உணர்வு. கதாநாயகியாக ஆசைப்படும் பெண்ணின் உணர்வுகளும் அவளது தாயின் உணர்வுகளும் அசோகமித்திரன் வெளிப்படையாகச் சொல்லாமலே புலப்பட்டன. அந்தக் கதையை நான் ரயில் பயணமொன்றில் வாசித்தேன். படித்து முடித்ததும் என்னுடன் பயணித்துக் கொண்டிருந்த நண்பனிடம் கொடுத்து அவனைப் படிக்கச் சொன்னதும் நினைவிருக்கிறது. அவனும் அதைப் படித்துவிட்டு, எவ்வளவு வித்தியாசமாகப் பார்க்கிறார் இவர் என்று ஆச்சரியப்பட்டான். இதில் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் அவனுக்கு கதை புத்தகங்கள் படிக்கும் பழக்கமே கிடையாது!
 
நான் படித்த அடுத்த அசோகமித்திரன் கதையும் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அது எந்த இதழில் வந்தது என்று எனக்கு நினைவில்லை. இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வந்திருக்கலாம், அல்லது இந்தியா டுடேயில் வந்திருக்கலாம். இது ஒரு காதல் திருமணத்தைப் பற்றிய கதை. கல்யாண நாளன்று நடப்பதை எல்லாம் அசோகமித்திரன் விவரித்துக் கொண்டே செல்வார், அதுதான் கதை. கேட்க சாதாரணமாக இருக்கிறது, ஆனால் அசோகமித்திரன் கவனிக்கும் விஷயங்கள், பதிவு செய்யும் நிகழ்வுகள், திருமணம் செய்து கொள்ளும் இருவருக்கும் உள்ள தயக்கங்களையும் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டது சரிதானா என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன. நான் வாசித்துக் கொண்டிருந்த நாவல்களிலும் கதைகளிலும் எல்லாம் அச்சில் வார்த்தது போல் பிசிறில்லாமல் இருக்கும், ஆனால் இங்கே, அசோகமித்திரனின் எழுத்தில், வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றைக் கண்டேன்.
 
கேட் பரிட்சைகள் முடிந்தபின் தேர்வு முடிவுகளுக்குக் காத்திருக்கும் காலத்தில் நிறைய புத்தகங்கள் படித்தேன். கல்லூரிக் காலங்களில் ஒஸ்மானியா யுனிவர்ஸிட்டி நூலகத்தில் நிறைய பொழுது போக்கியிருக்கிறேன், அதிலும் குறிப்பாக என் இறுதியாண்டு அங்குதான் கழிந்தது. அப்போதெல்லாமும் கதை புத்தகங்கள் படிப்பேன் என்றாலும், பாடப்புத்தகங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து படித்தேன். கேட் பரீட்சை முடிந்து சும்மா இருக்கும்போதுதான் யுனிவர்ஸிட்டி நூலகத்தில் பிராந்திய மொழிப் பிரிவு இருப்பதே தெரிந்தது. நூலகத்தின் பேஸ்மெண்ட்டில் ஆங்கில நாவல்கள் இருக்கும் பகுதிக்குதான் அதுவரை சென்றிருந்தேன். அதற்கு எதிர் திசையில் உள்ள விங் பக்கம் சென்றதே இல்லை – அதைக் கண்டுபிடித்தபின் அடிக்கடி தமிழ் நாவல்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன், அப்போதுதான் அசோகமித்திரன் கிடைத்தார், வாழ்விலே ஒருமுறை என்ற அவரது சிறுகதை தொகுப்பு கிடைத்தது. இதிலுள்ள பல கதைகள் இன்னும் என் நினைவில் உள்ளன – அவரது எழுத்துக்கு ஒரு தீவிரமான ரசிகனானேன் என்றே சொல்லலாம்.
 
அசோகமித்திரன் எழுத்து மிக இயல்பானதாக இருந்தது. மிகை என்று எதையும் அதில் சொல்ல முடியாது. கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் தேவைப்பட்ட கதைக்களத்தை உருவாக்கினார். அவர் மனிதர்களை விவரித்ததில் ஒரு மெய்ம்மை இருந்தது. எப்படியோ அவரால் மனிதர்களை மறைக்கும் அரசியல், சமூக, சமயப் பூச்சுகளை நீக்கி அவர்களை சாமானியர்களாகக் காட்ட முடிந்தது. அது ஒரு தமிழ் பிராமணர் மனைவியாக இருந்தாலும் சரி, திரைப்படங்களில் நடிக்கும் எக்ஸ்ட்ரா, தொழிலில் திண்டாடும் முஸ்லிம் பிசினஸ்மேன், ரப்பர் ட்யூபைச் செருப்பாகப் போட்டுக் கொண்டு சாலைப்பணி செய்யும் தொழிலாளி என்று யாராகவும் இருக்கட்டும், அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. புற அடையாளங்களை நீக்கி மனிதர்களின் அடிப்படை மானுடத்தை வெளிப்படுத்தினார் அசோகமித்திரன்.
 
வாழ்விலே ஒருமுறை தொகுப்பைப் படித்தபின் அசோகமித்திரன் எத்தனை எழுதினாலும் போதாமல் போனது. அவரது எழுத்துக்கு வாழ்விலே ஒரு முறை போதாது என்றானது.
 
oOo
 
நான் செகந்திராபாத்தில் தொண்ணூறுகளின் மத்திய ஆண்டுகள் வரை இருந்திருந்தாலும் நான் படித்த கல்லூரிக்கு அண்மையில் உள்ள பகுதிகளைக் களமாய் கொண்ட, அவரது பதினெட்டாம் அட்சக்கோடு நாவலை வாசித்திருக்கவில்லை. என் இதயத்துக்கு நெருக்கமான இடம் அது, இன்றும் நான் அங்கு செல்வதை விரும்புகிறேன். ஒரு முறை விடுமுறைக்கு சென்னை சென்றிருந்தபோது தண்ணீர் நாவலைப் படித்தேன். பின்னர் கரைந்த நிழல்கள் வாசித்தேன், ஆனால் இந்த நாவலை இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் வாசிக்க நேர்ந்தது. அசோகமித்திரனின் செகந்திராபாத்தில் என் செகந்திராபாத்தைக் காண முடிந்தது, ஆனால் சில வேறுபாடுகளுடன். இந்த வேறுபாடுகள் அசோகமித்திரன் கதை சொல்லும் பார்வையால் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.
 
ஒரு கதை எப்படிச் சொல்லப்படுகிறது என்பது அந்தக் கதையின் விரிவைத் தீர்மானிக்கும் தாக்கம் கொண்டதாய் இருக்கிறது. அசோகமித்திரன், பதினெட்டாம் அட்சக்கோடு என்ற தன் நாவலை, கல்லூரி செல்லும் இளைஞன் சந்துருவின் பார்வையில் கொண்டு செல்வது என்ற தெரிவு செய்திருக்கிறார். என்றாலும், கதை சொல்லும் குரல் அசோகமித்திரனுக்கு உரியது என்பது தெளிவு. ஹைதராபாத்தில், இன்னும் குறிப்பாகச் சொன்னால் செகந்திராபாத்த்தில் நிகழும் கதை. களம் இதுவென்றால், கதையின் காலம் சுதந்திரத்துக்குச் சற்றே முந்தைய நிஜாம் ஆட்சியில் துவங்கி, சுதந்திரத்துக்குப் பின் நிஜாமுக்கு எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கை, அதைத் தொடர்ந்து வெடிக்கும் கலவரங்கள் என்று விவரித்துச் செல்கிறது. இவையனைத்தையும் ஒரு கதையாக சந்துரு நமக்குச் சொல்கிறான்.
 
தன் நாவலை இப்படிப்பட்ட ஒரு பார்வையில் விவரிப்பதில் அசோகமித்திரனுக்குக் கிடைக்கும் காட்சிகள் எவை, இத்தகைய ஒரு குறுகிய கூறுமொழியின் வரைகளுக்குள் சிக்காமல் தப்பும் செய்திகள் எவை என்பதை இந்தக் கட்டுரையில் விவாதிக்க விரும்புகிறேன்.
 
பார்வை தொடர்பாக நான் சொல்லவிருப்பதை இக்கட்டுரையின் துவக்கத்திலேயே சற்றே விரிவாக கவனிப்பது நல்லது. சந்துரு கல்லூரி செல்லும் இளைஞன் என்றாலும், அதைவிட முக்கியமாக அவன் ஒரு அன்னியன், வெளியாள். அவன் செகந்திராபாத்தில் வாழும் தமிழன், அவனது அப்பா அங்கே ரயில்வேஸில் வேலை செய்கிறார். புத்தகமெங்கும் அவன் வெளியாளாகவே இருக்கிறான், ஒரு அன்னியனின் பார்வையில்தான் தன் கண் முன் விரியும் நிகழ்வுகளைக் காண்கிறான். அசோகமித்திரன் இப்படிப்பட்ட ஒரு பார்வையில்தான் இக்கதையின் உலகை விவரிக்கிறார் : தான் வாழும் சமூகத்தில் தனக்குரிய இடத்தை இன்னும் முழுமையாய் கண்டுகொள்ளாத ஒரு இளைஞனின் உலகம் இது. 
 
இந்தியாவில் இயல்பான ஒரு பார்வைதான் இது. பிழைப்பு தேடி மாநிலம் மாநிலமாக இடம் பெயரும் மக்கள் இங்கு ஏராளமான எண்ணிக்கையில் உண்டு. சிலர் தாங்கள் வாழும் சமூகத்தில் ஒன்றி வாழ்கிறார்கள், வேறு சிலர் தமக்குரிய பழக்க வழக்கங்களையும் மொழியையும் காப்பாற்றிக் கொள்ள தம்மாலான அனைத்தும் செய்கிறார்கள். இவர்களால் உள்ளூர் மக்களோடு ஒன்ற முடிவதில்லை. பல பத்தாண்டுகள் ஹைதராபாத்தில் வாழ்ந்தபின்னும் முறையாய் தெலுங்கு பேசத் தெரியாத தமிழர்களை உங்களால் பார்க்க முடியும். அதே போல் பல பத்தாண்டுகளாய் கர்நாடகாவில் வாழ்ந்தும் கன்னடம் பேசத் தெரியாத வட இந்தியர்கள் உண்டு. பொதுவாகச் சொன்னால், சாதாரணமாக மக்கள் இதை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை – அவ்வப்போது ஒரு சிலர் மட்டுமே இவர்களுக்கு எதிராகக் குரல் உயர்த்துகிறார்கள், அரசியல் ஆதாயங்களுக்காகதான் அதையும் அவர்கள் செய்கின்றனர்.
 
சந்துருவின் குடும்பமும் இப்படிப்பட்ட ஒன்று – உள்ளூர் வாழ்வுமுறையோடு கலவாமல் தங்கள்pathinettavadhu_atchakkodu_kalachuvadu_1 மொழியையும் பண்பாட்டையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒருவனின் பார்வையில் அசோகமித்திரன் கதை சொல்லும்போது, அதில் ஒரு ஓர்மை இயல்பாகவே பொருந்தி வந்து விடுகிறது. நம் கண்முன் விரியும் நிகழ்வுகள் அனைத்தும் இளைஞனாகவும் அன்னியனாகவும் உள்ள ஒருவனின் பார்வையை நிறப்பிரிகையாகக் கொண்டு, அத்தகைய பார்வைக்குரிய உணர்வுகளின் வண்ணங்களில் வெளிப்படுகின்றன. இதில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய விஷயம், சந்துரு ஒரு அன்னியனாக இருப்பதால் அவனால் ஹைதராபாத் நிகழ்வுகளின் குரூரங்களைச் சற்றே தொலைவில் நின்று புறவயமாக விவரிக்க முடிகிறது. தன் முன் நடப்பதன் லாப நஷ்டங்களைப் பற்றி கவலைப்படாத ஒரு சமநிலை அவனுக்கு இருக்கிறது. இன்னம் கூடுதலாக, அவன் கல்லூரி செல்லும் மாணவனாக மட்டுமே இருப்பதால் நிகழ்வுகள் அனைத்தும் தவிர்க்க முடியாதவை என்பது போலவும் சந்துரு என்ன செய்திருந்தாலும் அவற்றில் எதையும் மாற்றியிருக்க முடியாது என்பது போலவும் அசோகமித்திரனால் அவனைக் கொண்டு எழுத முடிகிறது. அடிப்படையில் சந்துரு ஒரு பார்வையாளன் மட்டுமே, புதிய ஒரு வரலாறு படைப்பதில் அவன் பங்கேற்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால், தன்முன் உருவம் பெறும் வரலாற்றில் எந்தப் பங்களிப்பும் அளிக்க முடியாத சாமானியனின் முகமாக, புதிய ஒரு வரலாற்றை நிகழ்த்துவதில் எந்தப் பாத்திரமும் ஏற்க இயலாத பொதுஜனத்தின் பிரதிநிதியாக இருக்கிறான் சந்துரு. சாதாரணர்கள் வரலாற்றுப் பாத்திரங்கள் அல்ல எனினும், நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து, சந்துருவைப் போலவே அவர்களாலும் தப்ப முடிவதில்லை.
 
ஒரு இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியத்தைப் போல இந்தப் பார்வை, குறைதகவல்களின் மூட்டத்தின் ஊடாக நிகழ்வுகளைப் பார்க்கிறது. நிகழ்வுகள் குறித்து சந்துருவுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவே அசோகமித்திரன் சொல்கிறார். ஹைதராபாத்தில் என்ன நடக்கிறது, ஏன் எப்படி என்பதைப் பற்றியெல்லாம் சந்துரு அரைகுறையாகவே அறிந்திருக்கிறான், இதனால், முழுமையான புரிதலுக்குத் தேவையான பின்னணி தகவல்கள் குறைந்த அளவிலேயே நமக்கும் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு – சந்துருவின் அப்பாவின் நண்பர் அவரிடம் சொன்னதை வைத்துதான் லம்பாடிக்களை நிஜாம் போலீஸ் கொடுமைப்படுத்துகிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது. ஆனால் ஏன் அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்ற காரணத்தையோ, அந்த வட்டாரத்தின் வரலாற்றையோ நம்மால் அறிய முடிவதில்லை. சந்துருவுக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எனவே, அக்காலகட்டத்தின் அரசியல் நிலவரமும் அதன் முக்கியமான நிகழ்வுகளும் சந்துரு வாசிக்கும் பத்திரிகைக் குறிப்புகளாகவும் வானொலிச் செய்திகளாகவுமே நமக்குப் புலப்படுகின்றன. ஏதோ நாமே அக்காலகட்டத்தில் செகந்திராபாத்தில் வாழ்வது போன்ற ஒரு அற்புதமான நேரடி அனுபவத்தை நமக்கு அளிப்பதாக இருக்கிறது இத்தகைய கதை சொல்லும் உத்தி. ஹைதராபாத்தின் வரலாற்றில் முக்கியமான ஒரு காலகட்டத்தில் வாழும் அரசியல் சார்பற்ற ஒரு சாதாரண குடிமகன் எத்தகைய அனுபவங்களை எதிர்கொண்டிருப்பான் என்பதை துண்டுத்தகவல்களாய் விரியும் கதையோட்டம் அழகாகச் சித்தரிக்கிறது.
அக்காலத்திய ஹைதராபாத்தை முரணற்ற தனிப்பார்வையில், நம்பத்தகுந்த வகையில் விவரிக்கின்றது என்பதோடல்லாமல் சந்துருவின் அகப் போராட்டங்களையும், புற நிகழ்வுகள் அவன்மீது செலுத்தும் தாக்கங்களுக்கு அவன் ஆற்றும் எதிர்வினைகளையும் அவற்றின் உடனடித்தன்மையோடு வெளிப்படுத்த அசோகமித்திரனின் கூறுமொழி உதவுகிறது. நான் முன்னர் சொன்னதுபோல், இளைஞன் சந்துரு செகந்திராபாத்தில் ஒரு அன்னியன், அரசியல் ஆர்வமற்ற சாதாரண இளைஞர்களின் பிரதிநிதி. நிகழ்வுகள் அவனைக் குழப்புகின்றன. அவை எவ்வளவு பெரிய, ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாவலின் முடிவில்தான் அதன் கொடூரத்தை அவன் உணர்கிறான், மீட்க முடியாத இடத்துக்குக் காலம் தன்னைக் கொண்டு சென்றுவிட்டதை அறிகிறான். சந்துருவின் உள்ளக் கொந்தளிப்பும் செய்கைகளும் நாமறிந்த மத்திய வர்க்க மனச்சாய்வுகளை ஒட்டியிருக்கின்றன, அசோகமித்திரன் அவற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
 
சந்துருவைக் கொண்டு கதை சொல்வதில் இப்படிப்பட்ட சாதகங்கள் இருப்பினும், சில முக்கியமான விஷயங்களைச் சொல்லும் வாய்ப்பும், அவன் பார்வையில் கதை சொல்லப்படுவதால் விடுபட்டுப் போய் விடுகின்றது. அவற்றில் ஒன்று இந்து முஸ்லிம் உறவு. வானொலியை அதிகாரத்தின் குறியீடாகப் பயன்படுத்தி அசோகமித்திரன் அதிகாரச் சமன்பாடுகள் இடம்மாறும்போது மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மிக அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும், இந்த விவரணைகளில், சந்துருவின் குடும்பத்தினரும் அவனது அண்டை வீட்டினரும் நட்புறவு கொண்டவர்களாக இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் அன்னியர்களாகவே இருக்கின்றனர். நெருங்கிய நண்பர்களாக இருந்த இந்து முஸ்லிம்களிடையே ஹைதராபாத் நிகழ்வுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? செகந்திராபாத் போன்ற ஒரு நகரில் இப்படிப்பட்ட உறவுகள் அபூர்வமானவையல்ல. சந்துருவின் பார்வைக்கு இது எதுவும் காணக்கிட்டாத காரணத்தால் இதை அசோகமித்திரன் பேசுவதில்லை.
 
ஹைதராபாத்தில் நான் முன்னர் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் அல்டாப் ஹுசேன் என்ற ஒரு டிஸ்பாட்ச் கிளார்க் இருந்தார். அவருடன் நான் உருது கவிதைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது அவரது முகம் பார்க்கவே சங்கடமாக இருந்தது. எங்கள் காலனியில் உள்ள முஸ்லிம் நண்பர்களால் நாங்கள் சூழப்பட்டிருந்தாலும், இது போன்ற மதக்கலவரங்கள் ஏற்படும்போது கொஞ்சம் இறுக்கமான சூழ்நிலையே நிலவியது. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் ஏற்பட்ட ஹைதராபாத் நிகழ்வுகள் இந்து முஸ்லிம் உறவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சந்துரு ஹைதராபாத் சூழலில் கலவாத அன்னியனாகவே இருப்பதால் அவனது பார்வையில் சொல்லப்படும் கதையில் இந்திய மக்களிடையே ஏற்படும் இந்த மதப் பிரிவினை பற்றி எதுவும் சொல்ல இடமில்லை. மதம் சார்ந்த பிளவுகள் சுதந்தரத்தையொட்டிய நிகழ்வுகளால் மேலும் தீவிரமடைந்தனவா, எழுபதுகளில் ஹைதராபாத்தில் அடிக்கடி நிகழ்ந்த கலவரங்களுக்கு அதைக் காரணம் சொல்ல முடியுமா என்ற கேள்விகளை இதில் பேச முடியாமல் போகிறது. வேறு சொற்களில் சொல்வதானால், இந்நிகழ்வுகளின் எதிர்காலத் தாக்கத்தைப் பேச சந்துருவின் பார்வை உதவுவதில்லை. அவனது பார்வை ஒரு ஒளிப்படம் போலிருக்கிறது என்று சொல்லலாம், தான் காண்பதனைத்தையும் அது தெளிவாகப் பதிவு செய்கிறது. அதே நேரம் அது குத்திட்டு நிற்கும் பார்வை. தான் பதிவு செய்த நிகழ்வுகளின் பின்புலத்தையோ எதிர்காலத் தாக்கத்தையோ உணர்த்தும் வல்லமை இல்லாதது.
 
இன்னொரு விஷயம், நாம் எல்லாவற்றையும் சந்துருவின் கண்களைக் கொண்டு பார்ப்பதால் அக்காலத்தில் நிகழ்ந்த ரஜாக்கர் படுகொலைகள் மற்றும் பல கலவரங்களுக்கு இட்டுச் சென்ற வரலாற்றுப் போக்கு குறித்த பார்வை நமக்குக் கிடைப்பதில்லை. இது நியாயமான ஒரு விமரிசனம் இல்லைதான். ஒரு நாவலாசிரியன் வரலாற்றியலாளனாக இருக்க வேண்டிய தேவையில்லை. தான் தேர்ந்தெடுத்த பார்வைக்கு நியாயமாக, முரண்பாடில்லாமல் கதை சொன்னால் போதும், இதை அசோகமித்திரன் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனாலும்கூட சந்துருவின் பார்வை சற்றே குறுகிய ஒன்றாக உள்ளது என்ற உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது – நம்மால் இன்னும் விரிவான வரலாற்றைக் காண முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உதாரணத்துக்கு, நிஜாம் போலிஸ் லம்பாடிக்களைத் துன்புறுத்துவது குறித்து சந்துரு அறிய வருவதை எழுதியிருந்தேன், அதுபோல் நிஜாமுக்கு எதிராக பரவலாகவே கடும் கோபம் மக்களிடையே இருந்தது என்ற உண்மையும் கதைக்குள் வருவதே இல்லை. கத்தாரின் ‘பந்தேன்கா பண்டி கட்டி’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள் – நிஜாமுக்கும் அவரது மந்திரிகளுக்கும் எதிராக மக்களிடையே எவ்வளவு ஆழ்ந்த கோபம இருந்தது என்பது தெரிய வரும்). இது போன்ற தகவல்கள் அளிக்கப்பட்டிருந்தால், இந்திய ராணுவம் ஹைதராபாத் வந்தபோது ஏன் அங்கிருந்தவர்களில் யாரும் அதை எதிர்க்கவில்லை என்பது புரியும். மக்கள் நிஜாம் ஆட்சியை விரும்பவில்லை.
 
இதற்கு ஒரு மாற்றாக காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்ஸின் “Living to Tell the Tale” என்ற புத்தகத்தைப் பார்க்கலாம். மார்க்வெஸ் தனது குழந்தைப்பருவம் முதல் இருபத்துமூன்று வயது வரையான காலகட்டத்தை இந்த தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். பதினெட்டாம் அட்சக்கோடு நாவல் அசோகமித்திரனின் வாழ்வனுபவங்களை விவரிப்பதாக எடுத்துக் கொண்டால் இவ்விருவரும் எங்கு வேறுபடுகின்றனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். மார்க்வெஸ் தன் இளமைப் பருவத்தை விவரிக்கும்போதும் தன் தேசத்தை ஒரு இளைஞனின் பார்வையில் பார்ப்பதில்லை. வயது முதிர்ந்த, அனுபவத்தால் கனிந்த அறிவைக் கொண்டு காண்கிறார். இதனால் அவருக்குக் கிடைக்கும் கேன்வாஸ் விரிந்திருக்கிறது – தன் கதையைச் சொல்லும்போதே தன் தேசத்தின் சமூக, அரசியல் வரலாற்றை அவரால் சொல்ல முடிகிறது. தன் பார்வையின் விரிவு அளிக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர் விவரிக்கும் நிகழ்வுகள் அசோகமித்திரன் விவரிக்கும் நிகழ்வுகளுக்கு மாறான வண்ணம் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் கொலம்பியாவும் தன் மக்களில் பெரும்பாலானோரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கொந்தளிப்பான வரலாற்றைக் கடந்து வந்திருக்கிறது. ஒரு சாதாரணனின் கண் கொண்டும் ஒரு அன்னியனாகவும் அவற்றை அணுகாமல், மார்க்வெஸ் ஒரு உள்ளாளாக, ஒரு வரலாற்றியலாளராக அவற்றை விவரிக்கிறார். இதனால் வாசகர்களால் நிகழ்வுகளை உணரும்போதே அவற்றுக்கிடையான காரண காரிய உறவையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
 
புகைப்பட ஒப்பீட்டை இன்னும் விரித்தால், அசோகமித்திரன் எப்போதும் ஒரு புகைப்படக்காரராகவே இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது சிறுகதைகளில் பலவும் உறைகணம் ஒன்றை விவரிக்கின்றன. காலத்தின் அந்தப் புள்ளியில் நம்மைத் தாக்கும் நிகழ்வுக்கும் அதன் தொலைதூர விரிவுக்கும் தொடர்பு இருக்கலாம், இல்லாமல் போகலாம். பதினெட்டாம் அட்சக்கோடு நாவலில் அசோகமித்திரனின் அணுகுமுறை, அவரது சிறுகதை அணுகுமுறை போல்தான் உள்ளது. அவர் ஏராளமான ஒளிப்படங்களைப் பதிவு செய்கிறார். அவரது ஒளிப்படங்களில் இடம் பெருபவர்கள் எங்கிருந்து வந்தனர், எப்படி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர், இனி என்ன ஆகும் என்பதில் அசோகமித்திரனுக்கு ஆர்வம் இல்லை. அவரது ஆர்வம் அந்த ஒரு கணத்தைத் தெளிவாகப் பதிவு செய்து தன் சந்ததியர் கையில் கொடுத்தால் போதும் என்பதாக இருக்கிறது. சிறுகதைகளில் இந்த அணுகுமுறை பிரமாதமான விளைவுகளைக் கொடுக்கிறது, ஆனால் ஒரு நாவலில் பார்க்கும்போது இது குறுகிய அளவே காட்சிப்படுத்துவதாக இருக்கிறது. மாறாக, மார்க்வெஸ் ஒரு வீடியோகிராபர் என்று சொல்லலாம். அவரது பிம்பங்களின் சலனங்கள் கடந்த காலத்தின் சுவடுகளைப் பொதித்து வைத்திருக்கின்றன. எதிர்கால நிகழ்வுகளை உணர்த்துகின்றன.
 
oOo
 234-ss
அசோகமித்திரனின் செகந்திராபாத் நாற்பதுகளின் பிற்பகுதிக்குரிய செகந்திராபாத். பதினெட்டாம் அட்சக்கோடு நாவலின் பிரதான பாத்திரங்களில் இந்த நகரமும் ஒன்று. அறுபதுகளின் பிற்பகுதி முதல் தொன்னூறுகளில் மத்திய ஆண்டுகள் வரை நான் செகந்திராபாத்தில் வாழ்ந்திருக்கிறேன், என் தாயாரும் சகோதரர்களும் இன்றும் அங்கிருக்கின்றனர் – ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மூன்று முறையாவது அங்கு சென்று வருகிறேன். அவர் விவரிக்கும் செகந்திராபாத் இப்போது எவ்வளவு மாறியிருக்கிறது?
 
நான் வளர்ந்த பகுதி போய்குண்டா என்று அழைக்கப்பட்டது, அது செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்புறம் இருந்தது. நான் படித்த செயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி கீய்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் இருந்தது. அதுவோ, அசோகமித்திரன் வாழ்ந்த லான்சர் பராக்ஸ் பகுதிக்கு மிகவும் அருகில் இருந்தது. கீய்ஸ் உயர்நிலைப்பள்ளிக்கு எதிரில் இருந்த பகுதியில்தான் ரயில்வே குடியிருப்புகளும் ரயில்வே அலுவலகங்களும் இருந்தன. அந்தக் குடியிருப்பில் இருந்த வீடுகளில் ஒன்றில்தான் அசோகமித்திரன் குடும்பத்தார் வாழ்ந்திருக்க வேண்டும்.
 
வெளியூர்க்காரர்கள் ஹைதராபாத் – செகந்திராபாத் இரட்டை நகரை ஹைதராபாத் என்று அழைத்தாலும், அசோகமித்திரன் தன் நாவலில் விவரிக்கும் பகுதிகள் செகந்திராபாத்தைச் சேர்ந்தவை. பதினெட்டாம் அட்சக்கோடு நாவலைப் பொருத்தவரை நிஜாம் காலேஜ் மட்டும்தான் ஹைதராபாத் பகுதியில் உள்ளது.
 
அசோகமித்திரன் தன் நாவலில் சுதந்திரத்தைத் தொடர்ந்த கலவரத்தையும் படுகொலைகளையும் விவரிக்கிறார். அசோகமித்திரனாயிற்றே, இதையெல்லாம் நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை. என்ன நடந்திருக்கும் என்பதன் ஒரு காட்சியை மட்டும் காண்கிறோம். மதக்கலவரங்கள் இந்த ஊரின் வெகு நாள் பழக்கமாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி அல்லது முகரம் சமயத்தில் இந்தக் கலவரங்கள் நடக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு வருஷமும் ஒரு முறையாவது இது போன்ற கலவரம் ஏற்படும். பள்ளிகள் மூடப்படும், ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்யப்படும். இந்த நிலைமைக்கும் சுதந்திரம் கிடைத்தபோது நடந்த கலவரங்களுக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் கலவரங்கள் நிகழவே செய்தன. ரேடியோக்களிலும் தொலைகாட்சி பெட்டிகளிலும் ‘tense but under control’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். 
 
இதில் ஒரு முக்கியமான விஷயம், செகந்திராபாத் பகுதியில் இந்தக் கலவரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எழுதப்படாத ஒரு எல்லைக்கோட்டில் நிறுத்தப்பட்டது போல் முஷீராபாத் தாண்டி நாங்கள் இருந்த போய்குண்டா பகுதியில் வன்முறை வெடித்ததில்லை. இந்தப் பகுதியில் ஏராளமான முஸ்லிம்கள் இருந்தனர். எங்கள் லோக்கல் தாதாகூட ஒரு முஸ்லிம்தான், ஆனால் காலனியில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும்கூட தெருக்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும். போய்குண்டா தாண்டி செகந்திராபாத் ஸ்டேஷன் மற்றும் மாரட்பள்ளி பகுதிகளில் ஊரில் மதக்கலவரங்கள் இருப்பதற்கான தடயமே இருக்காது. பெரும்பாலும் ஹைதராபாத்தின் பழைய பகுதிகளில்தான் வன்முறை மோதல்கள் நிகழும்.
 
1940களின் செகந்திராபாத்தை அசோகமித்திரனின் கண்களில் பார்த்துவிட்டு என் அனுபவத்தில் எங்கள் ஊரைப் பார்க்கும்போது எதுவும் மாறவில்லை என்பதை என்னால் காண முடிகிறது. ஆம், சில புற மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன : லான்சர் பராக்ஸ் பகுதியைச் சுற்றிலும் இருந்த சங்கீத், மினர்வா, பிளாசா, திவோலி, ட்ரீம்லாண்ட் தியேட்டர்கள் அழிந்துவிட்டன. இதில் திவோலியை மட்டும் புதுப்பித்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அவை இருந்த இடத்தில் மினர்வா, ஸ்வப்னலோக், சூர்யா டவர்ஸ் போன்ற காம்பளக்ஸ்கள் வந்திருக்கின்றன. முன்பிருந்ததைவிட இப்போது அதிக அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன, ஆனால் அந்த நிலையை இந்தியாவில் எந்த ஒரு பெருநகரமும் தப்ப முடியவில்லை. அசோகமித்திரன் தன் நாவலில் விவரித்த ஊரின் மையம் அப்படியே இருக்கிறது, மத்திய அரசும் ராணுவமும் அதன் பெரும்பகுதியைக் கையகப்படுத்தி வைத்திருப்பதால் செகந்திராபாத் அதன் பழைய அழகுகளை இழக்காமல் தப்பித்திருக்கலாம்.
 
காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டு சந்துரு அழும் அந்த பரேட் கிரௌன்ட் இன்னமும் இருக்கிறது, அருகிலுள்ள மணிக்கூண்டும் அப்படியே இருக்கிறது, அவற்றுடன் ஒய்எம்சிஏவும் இருக்கிறது. இந்தப் பகுதியின் அனைத்து பள்ளிகளும் பத்திரமாக அன்றிருந்த முகப்பு மாறாமல் அப்படியே இருக்கின்றன: கீய்ஸ் உயர்நிலைப்பள்ளி, செயின்ட் பிரான்சிஸ், செயின்ட் ஆன்ஸ் – எல்லாம் மகளிர் பள்ளிகள்-, செயின்ட் மெரிஸ், செயின்ட் பாட்ரிக்ஸ், செவன்த் டே அட்வென்டிஸ்ட்ஸ் – எல்லாம் சிறுவர்களுக்கான பள்ளிகள்.  மெஹ்பூப் காலேஜ் அப்படியே இருக்கிறது. ஆனால் அதனருகில் இருந்த நடராஜ் தியேட்டர்  காணாமல் போய்விட்டது. அந்தப் பகுதியின் அடையாளமாக இருந்த சங்கீத் தியேட்டரை இடித்து விட்டார்கள், அங்கே ஒரு வர்த்தக மையம் வரப்போகிறது என்று நினைக்கிறேன். செகந்திராபாத் ஸ்டேஷன் அப்படியே இருக்கிறது. அசோகமித்திரன் விவரிக்கும் மொன்டா மார்க்கெட்டும் இருக்கிறது, அதற்கும் ஸ்டேஷனுக்கும் இடையிலுள்ள சாலை எப்போதும்போல் இப்போதும் கூட்டமாக இருக்கிறது. இன்றும் ஆல்பா ஹோட்டல் நிறைந்திருக்கிறது, அதன் டீயின் உயர்தரம் கெடவில்லை. சுருக்கமாகச் சொன்னால், 1950களில் செகந்திராபாத்தைவிட்டுப் போன ஒருவர் திரும்பி வந்தால், இன்றும் அவரால் தன் ஊரை அடையாளம் கண்டுபிடித்து பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆனால், ஹைதராபாத் கதை வேறு – அதன் உணர்வுகள் முற்றிலும் மாறிவிட்டன. இரட்டை நகரின் அந்தப் பகுதியில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. 
 
என் அனுபவம் அசோகமித்திரன் பதினெட்டாம் அட்சக்கோடு நாவலில் விவரிக்கும் ஹைதராபாத்தைவிட இரு வகைகளில்தான் சொல்லத்தக்க அளவில் வேறுபடுகிறது – இரானி சாய் ஷாப், மகாகாளி ஜாத்ரா. இவை தவற விட முடியாத ஹைதராபாத் அனுபவங்கள். 
 
ஹைதராபாத்தில் வளர்ந்த எந்த ஒரு குழந்தையிடத்தும் மகாகாளி ஜாத்ரா நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும். போனாலு என்று அழைக்கப்படும் மகாகாளி கோவிலின் பிரதான ஜாத்ரா ஜூலை மாதம் நடைபெறும். அந்த ஒரு கோயிலில் மட்டுமல்ல, ஒவ்வொரு வாரமும் ஒரு கோயிலில் இந்த ஜாத்ரா நடைபெறும். இந்த சமயத்தில் பொத்தராஜூ வருவார். குழந்தைகளுக்கு அவர் ஒரு பயங்கரமான உருவமாக இருப்பார். அவரது உடல் மஞ்சளாக இருக்கும்- உடல் முழுக்க பசுப்பு என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசப்பட்டிருக்கும். அவர் ஒரு உள்ளாடை மட்டும்தான் தரித்திருப்பார், அவர் நெற்றியில் பெரிதாகக் குங்குமப்பொட்டு வைத்திருப்பார். அவரைவிட அவர் கையில் இருக்கும் தடிமனான சாட்டைதான் குழந்தைகளை அச்சுறுத்தும் – அவர் தன் கையில் இருக்கும் சாட்டையைக் கொண்டு தன்னை பளார் பளாரென்று அடித்துக் கொள்வார், சில சமயம் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் இருப்பவர்களுக்கும் அடி விழும். பெண்கள் தங்கள் தலைகளில் பானை கொண்டு செல்வார்கள், இதை போனாலு என்று சொல்வார்கள். நகர் எங்கும் நிகழும் இந்தத் திருவிழாவை எந்த ஹைதராபாத்காரனும் தவற விட முடியாது. ஒவ்வொரு தெருமுனையிலும் ஒலிப்பெருக்கிகள் அலறும். அடிப்படையில் இது ஒரு தெலுங்கானா திருவிழா. இதுவும் இரானி கபேக்களும் பதினெட்டாம் அட்சக்கோடு நாவலில் இல்லை.
 
அசோகமித்திரன் காலத்தில் இரானி சாய் கடைக்குப் போய் பொழுதைப் போக்குவதைத் தடுத்திருப்பார்கள். அதை ஒரு முஸ்லிம் பகுதியாக நினைத்த காலம் அது. நான் கல்லூரி செல்லும் காலம் வந்தபோது, கையில் காசிருந்தால் நாங்கள் ஏதோ ஒரு இரானி கபேயில் டீ குடித்துக் கொண்டிருப்போம் என்று சொல்லுமளவுக்கு இது எல்லாம் மாறி விட்டது. என் தலைமுறையினர் அங்குதான் சந்தித்துக் கொள்வோம். முந்தைய தலைமுறையினர் இரானி கபேக்களை எச்சரிக்கையுடன் தவிர்த்து, காமத் அல்லது தாஜ் மகால் செல்லும் வழக்கம் கொண்டிருந்தனர். எங்கள் வாழ்வு இரானி கபேக்களை மையமாய் கொண்டிருந்தது, இன்றும் நான் ஹைதராபாத் செல்லும்போது இரானி கபேக்கள் என்னை ஈர்க்கின்றன. 
 
முன்பிருந்ததற்கு மாறாக, இப்போதெல்லாம் இந்துக்களும் இரானி சாய் கடைகள் திறக்கத் துவங்கிவிட்டனர். மகாகாளி ஜாத்ரா வருஷாவருஷம் நடைபெறுகிறது. அது மாறவேயில்லை. காலமும் சரித்திரமும் எவ்வளவுதான் மாறியிருந்தாலும், செகந்திராபாத் பெருமளவில் தன் ஆன்மாவை இழக்காமல் அன்று போல் இன்றும் அப்படியே இருக்கிறது. அசோகமித்திரன் இன்று ஊர் திரும்பினால் கிட்டத்தட்ட அதே ஊரை காண்பார். “யெஹ் ஏரியா வைசி ஹை’ என்ற சக ஹைதராபாதி வரவேற்பை, தன்னைத் தளர்த்திக் கொள்ளத் தேவையில்லாமல் அவர் ரசித்து ஆமோதிக்கவும் கூடும்.

0 Replies to “செகந்திராபாதிலிருந்து”

  1. அருமையான கட்டுரை. 1986-ஆம் வருட மத்தியில் செகந்திராபாதிற்கு வேலை தேடிப்போய், 1990-ஆம் வருடம் வரை இருந்தேன். அங்கு போவதற்கு முன்பே “18-வது அட்சக் கோடு” படித்திருந்தேன். எனது ஒரு நண்பருடன் சேர்ந்து கொண்டு அந்தக் கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களைப் போய்ப் பார்த்த நினைவு இருக்கிறது. எண்பதுகளில் கூட அசோகமித்திரன் அவர்களின் செகந்திராபாத் அதிகம் மாறாமல்தான் இருந்தது. பரேட் கிரவுண்டும், நட்ராஜ் தியேட்டரும், ஆல்ஃபா ஹோட்டலு, செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனும் இன்னும் பிற பகுதிகளும் என் நினைவை விட்டு அகலாமல் இன்றும் இருக்கின்றன.
    என்னுடைய பள்ளிப் பருவத்தில் கூட அசோகமித்திரன் என்னை வசீகரித்திருக்கிறார். ‘குமுதம்’ போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த அவரது கதைகள் சராசரிக் கதைகளிலிருந்து வேறுபட்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
    கட்டுரை எழுதிய உங்களுக்கு எனது நன்றிகளும், அசோகமித்திரன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.