காகசஸ் மலைக்கைதி – பகுதி 3

ஜீலினும் அவனது நண்பனும் ஒரு மாதம் முழுமையும் இவ்வாறு வாழ்ந்தனர். அவர்களது எஜமானன் எப்பொழுதும் சிரித்தவாறே, “நீ, இவான், நல்லவன்! நான், அப்துல், நல்லவன்!” என்று கூறிக் கொள்வான். ஆனால் அவன் அவர்களுக்கு நல்ல உணவு தரவில்லை; சரியாகத் தயாரிக்கப் படாத, தானிய மாவினால் சுடப்பட்ட தட்டையான ரொட்டியையோ அல்லது சுட்டே இராத மாவையோ கொடுத்தான்.

கஸ்டீலின் இரண்டாவது முறையாகத் தன் வீட்டிற்குக் கடிதம் எழுதி விட்டு, உற்சாகமின்றி பணம் வரும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர ஒன்றும் செய்யாமல் இருந்தான். அவன் நாட்கணக்கில் அந்தக் கொட்டிலில் படுத்து உறங்குவதையும், அல்லது கடிதம் வரும் வரை நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஜீலினுக்குத் தன் கடிதம் எங்கும் போய்ச் சேராது எனத் தெரியுமாதலால், அவன் இன்னொரு கடிதம் எழுதவில்லை. அவன் இவ்வாறு எண்ணினான்: ‘என்னை மீட்பதற்கு எங்கிருந்து என் தாய்க்கு இத்தனை பணம் கிடைக்கப் போகிறது? ஏற்கெனவே அவள் நான் அனுப்புவதை வைத்துக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஐநூறு ரூபிள்கள் சம்பாதிக்க வேண்டுமெனில், அவள் நாசமாகிப் போவாள். கடவுளின் அருளால், நான் எப்படியாவது தப்பி விடுவேன்!’

ஆகவே அவன் தான் தப்பித்துச் செல்லும் வழியை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

அவன் சீட்டி அடித்தவாறு அந்த ஆவுலைச் சுற்றி நடந்தான்; அவன் கைவேலைகளில் வல்லவனாக இருந்ததால் உட்கார்ந்த வண்ணம் களிமண்ணால் பொம்மைகள் செய்தான் அல்லது குச்சிகளினால் கூடைகள் முடைந்தான்.

ஒரு தடவை அவன் ஒரு தார்த்தாரியனைப் போன்ற பொம்மையை மூக்கு, கைகள், கால்கள், தார்த்தாரிய உடைகள் இவற்றுடன் உருவாக்கி, கூரையின் மேல் காட்சிக்கு வைத்தான். தார்த்தாரியப் பெண்கள் நீர் கொண்டு வர வெளியே வந்தபோது, எஜமானனின் பெண்ணான டீனா அவர்களைக் கூப்பிட்டு அதைக் காட்டினாள்; அவர்கள் தங்கள் பாத்திரங்களைக் கீழே வைத்து விட்டு நின்று கொண்டு அதைப் பார்த்துச் சிரித்தனர். ஜீலின் அந்த பொம்மையை எடுத்து அவர்களிடம் நீட்டினான். அவர்கள் சிரித்தனரே தவிர தைரியமாக அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவன் அந்த பொம்மையைக் கீழே வைத்து விட்டு, என்ன தான் ஆகிறதென்று பார்க்கலாம் என்று கொட்டிலினுள் சென்று விட்டான்.

டீனா பொம்மை இருந்த இடத்திற்கு ஓடிச் சென்று, சுற்று முற்றும் பார்த்து விட்டு, அதை எடுத்துக் கொண்டு ஓடினாள்.

காலையில், பொழுது விடிந்ததும் அவன் வெளியே பார்த்தான். டீனா வீட்டினின்றும் வெளியே வந்து, சிவப்பு நிறத் துணித் துண்டுகளால் தான் அலங்கரித்திருந்த பொம்மையுடன் வாயிற்படியில் அமர்ந்த வண்ணம் அதை ஒரு குழந்தையைப் போல் ஆட்டியபடி, ஒரு தார்த்தாரியத் தாலாட்டைப் பாடினாள். ஒரு வயதான மாது வெளியே வந்து அவளைக் கடிந்து கொண்டு, அந்த பொம்மையைப் பிடுங்கித் துண்டுகளாகச் சிதைத்துப் போட்டு விட்டு, டீனாவை வேறு வேலைகளைப் பார்க்க அனுப்பினாள்.

ஆனால் ஜீலின் முன்னதை விட நன்றாக இன்னொரு பொம்மை செய்து டீனாவிற்குக் கொடுத்தான். ஒரு நாள் டீனா ஒரு சிறு பாத்திரத்தைக் கொண்டு வந்து அவன் முன்பு தரையில் வைத்துவிட்டு, அவனை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்தாள்; சிரித்த வண்ணம் அதைச் சுட்டிக் காட்டினாள்.

 

‘அவளை இவ்வாறு மகிழ்விப்பது என்ன?’ என ஜீலின் ஆச்சரியப் பட்டான். அந்தப் பாத்திரத்தில் நீர் உள்ளது என எண்ணிய வண்ணம் அவன் அதை எடுத்தான்; ஆனால் அதில் இருந்ததோ பால். அந்தப் பாலை அவன் குடித்து விட்டு, “நன்றாக இருந்தது,” என்றான்.

டீனா எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாள்! “நல்லது, இவான், நல்லது!” எனக் கூறிக் கொண்டு குதித்தெழுந்து கைகளைக் கொட்டினாள். பின் அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போனாள். அதன் பின் அவள் தினமும் அவனுக்காகக் கொஞ்சம் பாலைத் திருட்டுத் தனமாகக் கொண்டு வர ஆரம்பித்தாள்.

தார்த்தாரியர்கள் ஆட்டின் பாலிலிருந்து ஒருவிதமான பாலடைக் கட்டியைத் தயாரித்து அதனைத் தம் வீட்டுக் கூரைகளின் மேல் உலர்த்துவார்கள்; சில சமயங்களில் தந்திரமாக அவள் இந்தப் பாலடைக் கட்டியையும் சிறிது கொண்டு வரலானாள். ஒருமுறை அப்துல் ஒரு ஆட்டைக் கொன்ற போது அவள் ஜீலினுக்காக ஒரு துண்டு மாமிசத்தை தன் சட்டையின் கைமடிப்பில் ஒளித்துக் கொண்டு வந்தாள். அவள் இந்தப் பொருட்களை அவன் முன் விட்டெறிந்து விட்டு ஓடி விடுவாள்.

ஒரு நாள் பெருத்த புயற்காற்றுடன் மழை கொட்டோ கொட்டென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டியது. எல்லா ஓடைகளிலும் நீர் கலங்கலாக ஓடியது. ஆற்றைக் கடக்குமிடத்தில் ஏழடி உயரத்திற்கு நீர் உயர்ந்தது; பாயும் நீரின் விசை அதிகமாக இருந்ததால், அது கற்களை எல்லாம் உருட்டிப் புரட்டிச் சென்றது. எங்கும் சிற்றோடைகள் உருவாகி ஓடின; மலைகளின் இடி முழக்கம் ஓயவேயில்லை. புயல் அடித்து ஓய்ந்ததும், கிராமத்துத் தெருக்களில் நீர் தாரைகளாக ஓடியது. ஜீலின் அவனது எஜமானனிடமிருந்து ஒரு கத்தியைக் கடன் வாங்கி, அதைக் கொண்டு ஒரு உருளையைத் தயார் செய்தான்; இரு சிறு பலகைகளையும் வெட்டி, ஒரு சக்கரத்தைத் தயாரித்து அதன் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு பொம்மைகளைப் பொருத்தினான். சிறுமிகள் கொடுத்த துணித் துண்டுகளால் அவற்றை ஒரு குடியானவன், குடியானவப் பெண் போல உடை உடுத்துவித்தான். அவற்றைப் பின் சரியான இடங்களில் பொருத்தி, நீர்த் தாரைகளில் சக்கரத்தைச் சுழல விட்டான். சக்கரம் சுழல ஆரம்பித்ததும், பொம்மைகள் நடனமாட ஆரம்பித்தன.

கிராமம் முழுமையும் அங்கு கூடி விட்டது. சிறு பையன்களும் சிறுமிகளும், தார்த்தாரிய ஆண்களும் பெண்களும் வந்து நின்று கொண்டு நாவால் ஒலியெழுப்பினர்.

“ஆ, ருஸ்! ஆ இவான்!.”

அப்துலிடம் ஒரு உடைந்த ருஷ்ய கடிகாரம் இருந்தது. அவன் ஜீலினை அழைத்து நாவால் ஒலியெழுப்பியபடி அவனிடம் அதைக் காட்டினான்.

“என்னிடம் அதைக் கொடு. நான் அதை சரி பண்ணித் தருகிறேன்,” என்றான் ஜீலின்.

ஜீலின் அதைக் கத்தியால் பல பாகங்களாகப் பிரித்துப் பின் பாகங்களை ஒழுங்கு படுத்தித் திரும்பவும் அவற்றை ஒன்று சேர்த்து அந்த கடிகாரத்தைச் சரி செய்து விட்டான்.

மகிழ்ச்சியடைந்த எஜமானன், நிறையத் துளைகள் இருக்கும் தனது ஒரு பழைய மேலங்கியை அவனுக்குப் பரிசளித்தான். ஜீலின் வேறு வழியில்லாமல் அதைப் பெற்றுக் கொண்டான். எப்படியானாலும் அவன் அதை இரவு நேரத்தில் போர்வையாகவாவது உபயோகித்துக் கொள்ளலாம்.

இதன் பின் ஜீலினின் புகழ் பரவியது; தூரத்து கிராமங்களிலிருந்தெல்லாம் தார்த்தாரியர்கள் ஒரு துப்பாக்கி, கைத்துப்பாக்கி, அல்லது ஒரு கைக்கடிகாரம் இவற்றை சரி செய்வதற்காகக் கொண்டு வரலானார்கள். அவனது எஜமானன் அவனுக்கு இதற்காகச் சில உபகரணங்களைக் கொடுத்தான்- இடுக்கி, துரப்பணம், ஒரு அரம் முதலியன.

ஒரு நாள் ஒரு தார்த்தாரியனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிற்று. அவர்கள் ஜீலினிடம் வந்து, “வா, அவனைக் குணமாக்கு!” என்றனர். ஜீலினுக்கு மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதெனினும் அவன் சென்று பார்த்து விட்டுப் பின் வருமாறு தனக்குள் எண்ணிக் கொண்டான், “ஒருவேளை அவன் தானே குணமாகி விடலாம்.”

அவன் கொட்டிலிற்குத் திரும்பி வந்து சிறிது மணலையும் நீரையும் கலந்தான்; பின் அத்தார்த்தாரியர்கள் முன்னிலையில் எதையோ அதன் மீது முணுமுணுத்து விட்டு அதை அந்த நோயாளிக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன் அதிர்ஷ்டம், அந்தத் தார்த்தாரியன் குணமடைந்து விட்டான்.

ஜீலின் அவர்களுடைய மொழியைச் சிறிது சிறிதாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்தான்; சில தார்த்தாரியர்கள் அவனுடன் நெருங்கிப் பழகலானார்கள். அவன் உதவி தேவைப் படும் பொழுது, “இவான்! இவான்!” என அழைத்தனர். மற்றவர்கள் அவனை இன்னும் சந்தேகத்துடனே ஒரு காட்டு மிருகத்தைப் பார்ப்பது போல் பார்த்தனர்.

சிவந்த தாடித் தார்த்தாரியனுக்கு ஜீலினைப் பிடிக்கவில்லை. ஜீலினைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் முகத்தைச் சுளிக்கவோ, தலையைத் திருப்பிக் கொள்ளவோ அல்லது திட்டவோ செய்தான். அந்த ஆவுலில் வசிக்காத இன்னொரு முதியவனும் இருந்தான்; அவன் அவ்வப்பொழுது மலை அடிவாரத்திலிருந்து ஏறி வருவான். அவன் ஜீலின் இருந்த இடத்தின் வழியாக மசூதிக்குச் செல்லும் பொழுதுகளில் மட்டுமே ஜீலின் அவனைப் பார்ப்பான். அவன் குள்ளமாகவும், ஒரு வெள்ளை நிறத் துணியைத் தனது தொப்பியின் மீது சுற்றிக் கொண்டும் இருந்தான். அவனது தாடியும் மீசையும் கத்தரிக்கப்பட்டு, பனி போல் வெண்மையாகவும், முகம் சுருங்கிச் செங்கல் நிறமாகவும் இருந்தது. அவன் மூக்கு கழுகினுடையதைப் போல் வளைந்தும், சாம்பல் நிறக் கண்கள் கொடூரமாகவும் இருந்தன: அவன் வாயில் இரு கோரைப் பற்களைத் தவிர வேறு பற்களே இல்லை. தலைப்பாகையுடன்  கோலின் மீது சாய்ந்த வண்ணம், தன்னைச் சுற்றி ஓநாய் போல முறைத்துப் பார்த்துக் கொண்டு அவன் கடந்து செல்வான். அவன் ஜீலினைப் பார்த்து விட்டால் சினத்துடன் பெருமூச்செறிந்த வண்ணம் திரும்பிக் கொள்வான்.

அந்த முதியவன் எங்கே வசிக்கிறான் எனப் பார்ப்பதற்காக ஒரு சமயம் ஜீலின் மலையிலிருந்து கீழிறங்கிச் சென்றான். பாதை வழியே கீழிறங்கிச் சென்று, கற்சுவரால் சூழப்பட்ட  ஒரு சிறிய தோட்டத்தைக் கண்டான்; அந்தச் சுவரின் பின்னால், செர்ரி, ஆப்ரிகாட் மரங்களையும், தட்டையான கூரையையும் உடைய ஒரு குடிசையையும் கண்டான். அவன் இன்னும் சற்று நெருங்கிய போது, பின்னப்பட்ட வைக்கோலால் செய்யப்பட்ட தேன்கூடுகளையும், ரீங்காரமிட்டபடி பறந்து கொண்டிருக்கும் தேனீக்களையும் கண்டான். அந்த முதியவன் முழங்காலிட்டு அமர்ந்தபடி ஒரு தேன்கூட்டில் என்னவோ செய்து கொண்டிருந்தான். ஜீலின் எம்பிப் பார்த்தபோது அவனுடைய கால்தளைகள் சப்தமெழுப்பின. உடனே திரும்பிப் பார்த்த முதியவன், உரக்கக் கத்திய வண்ணம், தனது கைத்துப்பாக்கியை இடுப்புக் கச்சையிலிருந்து எடுத்து ஜீலினை நோக்கிச் சுட்டான்; ஜீலின் அந்தக் கற்சுவரின் பின்னால் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டான்.

Leo_Tolstoy_M.Rodionov_Prisoner_in_the_Caucasus

முதியவன் ஜீலினின் எஜமானனிடம் புகார் கூறச் சென்றான்.  எஜமானன் சிரித்தபடியே ஜீலினைக் கூப்பிட்டு, “நீ ஏன் அந்த முதியவன் வீட்டிற்குச் சென்றாய்?” எனக் கேட்டான்.

“நான் அவனுக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை,” என்ற ஜீலின், “அவன் எவ்வாறு வாழ்கிறான் எனப் பார்க்க ஆசைப் பட்டேன்,” என்றான்.

எஜமானன் ஜீலின் கூறியதைத் திருப்பிக் கூறினான்.

ஆனால் அந்த முதியவன் கடுங்கோபத்திலிருந்தான்; அவன் சீறிய வண்ணம் பிதற்றிக் கொண்டு, கோரைப் பற்களைக் காட்டிய வண்ணம் தனது முஷ்டிகளை ஜீலினை நோக்கி உயர்த்திக் காட்டினான்.

ஜீலினுக்கு எல்லாமும் புரியா விட்டாலும், அந்த முதியவன் அப்துலிடம் ருஷ்யர்களைத் தங்கள் ஆவுலில் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், கொன்றுவிட வேண்டுமென்றும் கூறினான் எனப் புரிந்து கொண்டான். ஒரு வழியாக அந்த முதியவன் கிளம்பிப் போனான்.

ஜீலின் தன் எஜமானனிடம் அந்த முதியவன் யார் எனக் கேட்டான்.

“அவன் ஒரு பெரிய மனிதன்!” என்றான் எஜமான். “எங்களிலேயே மிகவும் வீரம் படைத்தவன் அவன் தான்; நிறைய ருஷ்யர்களைக் கொன்றவன்; ஒரு காலத்தில் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனுக்கு மூன்று மனைவிகளும் எட்டு மகன்களும் இருந்தனர்; எல்லாரும் ஒரே கிராமத்தில் வசித்தனர். ருஷ்யர்கள் வந்து அந்த கிராமத்தை அழித்து அவனது ஏழு மகன்களைக் கொன்று விட்டனர். எஞ்சிய ஒரு மகனும் ருஷ்யர்களிடம் சரணடைந்து விட்டான். இந்த முதியவனும் சென்று ருஷ்யர்களிடம் சரணடைந்து அவர்களுடன் மூன்று மாதங்கள் வசித்தான். அந்த நாட்களின் கடைசியில் அவன் தன் மகனைத் தேடிக் கண்டு பிடித்துத் தன் கரங்களாலேயே அவனைக் கொன்று விட்டுத் தப்பி வந்து விட்டான். அதன் பிறகு அவன் சண்டை செய்வதையே விட்டு விட்டு, மெக்கா சென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான்; அதனால் தான் தலைப்பாகை அணிந்திருக்கிறான். ஓருவன் மெக்காவிற்குச் சென்று திரும்பினால் அவன் ‘ஹாஜி,’ என்று அழைக்கப்படுவான்; அவன் தலைப்பாகையும் அணிந்திருப்பான். அவனுக்கு உங்கள் மனிதர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. என்னிடம் உன்னைக் கொன்று விடக் கூறுகிறான். ஆனால் நான் உன்னைக் கொல்ல முடியாது. நான் உன்னைப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன்; மேலும் எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. உன்னைக் கொல்வதை விட, நான் உனக்கு வாக்குறுதி கொடுத்திரா விட்டால், உன்னைப் போகக் கூட விட மாட்டேன், இவான்,” என்று சிரித்தபடி, ருஷ்ய மொழியில், “நீ இவான், நல்லவன்; நான் அப்துல், நல்லவன்!” என்றான்.

(தொடரும்)
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.