அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து

நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும்.

பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம்.  கிணற்றோரக் காதல்கள், கிணறை சமூக ஏற்றத்தாழ்வுகளின் குறியீடாக சித்தரித்தல் போன்றவை நம் இலக்கியத்தில் காலகாலமாக இருந்து வந்திருக்கின்றன.

பள்ளத்தில் ஊறிய நீரை இறைக்க ஏதுவாய் இழுவை வழியாக கழுத்தில் கயிறு கட்டப்பட்ட குடம் கிணறின் நீர் மட்டத்தை தொட்டதும் ’டுபுக்’கெனும் சிறு சத்தத்துடன் நீர் நிரம்புவதும் பிறகு கிலுங் கிலுங்-ஙெனும் சத்தத்துடன் நீர்க்குடம் மேலே வருவதும் என்று ஒரு தொடர்ச்சியான ரிதத்துடன் செல்லுவதைக் கேட்பது சுகம்.

ஒரு முறை எங்கள் பூர்வீகக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். மழைக்காலம். நவம்பர் மாதம் என்று நினைவு. என் தாத்தாவின் கிணற்றில் திட்டைத் தாண்டி தண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பொங்கல் பாத்திரத்தில் பொங்கி வழியும் பொங்கல் நுரையைப் பார்ப்பது போல இருந்தது. பத்து வருடம் முன்னர் என் அப்பா அந்த வீட்டை விற்பதற்கு முன்னால் ஒரு முறை அங்கு சென்ற போது அந்தக் கிணற்றில் தண்ணீர் மட்டம் கண்ணுக்கே எட்டவில்லை. நீளம் போதாமை காரணமாக பயன் படுத்தப்படாமல் குடத்தின் கழுத்தையும் விடாமல் தரையில் கிடந்தது கயிறு!.

ami_tn copyகாஞ்சிபுரத்தில் நாங்கள் வசித்த போது பக்கத்து வீட்டில் தறிவேலை நடக்கும். பல நிறங்களில் பல டிசைன்களில் தறியில் பட்டுப் புடவைகள் நெய்யப்பட்டுக் கொண்டிருக்கும். என் நண்பன் ராமு நெசவு செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே அவர்கள் வீடே கதி என்றிருந்த நாட்கள் உண்டு. ராமுவின் வீட்டுப் பின் புறத்தில் மரத்தடியில் ஒரு திண்ணைக்குள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். அது நெடுக வளர்ந்த வேப்ப மரம்! மஞ்சள் நிற வேப்பம் பழங்களை முதன்முதலாக தின்று பார்த்தது அங்கு தான். “நீ உட்கார்ந்திருக்கிறாயே! அது கிணறாக இருந்தது! எங்க அப்பா சின்னப் பையனா இருக்கும் போது மண்ணை நிரப்பி கிணற்றை மூடிவிட்டார்கள். இந்த மரத்தின் வேர்கள் பழைய கிணற்றின் அடிவாரத்தை தொட்டுக் கொண்டிருக்கும். ஒரு மாஜி கிணற்றின் மேல் தான் நீ உட்கார்ந்திருக்கிறாய்!”என்று சொன்னான். உட்கார்ந்திருந்த நான் தடக்கென எழுந்து நின்று விட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் மண் விலகி பள்ளம் விழுந்து மரம் கிணற்றுக்குள் சென்று, கிளைகள் திட்டுக்கு மேல படர்ந்து……சில வினாடிகளில் என் கற்பனை விரிந்தது. அக்கிணறு மூடப்பட என்ன காரணமாக இருந்திருக்கும் என்று ஒரு நாள் இரவு எங்கள் பால்கனியில் படுத்துக் கொண்டே யோசனையில் மூழ்கியிருந்தேன். யாரேனும் செத்து விழுந்திருப்பார்களா? அதை மறைக்க மண் மூடி நிரப்பியிருப்பார்களா? சீ என்ன விசித்திர கற்பனை! ராமுவின் அப்பா ஸ்ரீனிவாசலு ராத்திரி நேரத்தில் சில சமயம் தறி சத்தத்தின் பின்னணியில் தெலுங்குச் சினிமாப் பாடல்கள் பாடுவார். உச்ச ஸ்தாயியில் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்வின் குரலின் நகலில்! கிணறு மூடப்பட்டதன் பின்னணி பற்றி நான் கற்பனையில் ஆழ்ந்திருந்த அன்று அவர் பாடிய பாட்டு என்னை எழுந்து உட்காரச்செய்து விட்டது. அன்று ”ஆமே எவரு?” தெலுங்கு திரைப்படத்திற்காக பி.சுசீலா பாடிய “வூ நா ராஜா….ராரா…ராரா” எனும் பாடலை கர்ண கடூரமாக பாடிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் கையில் விளக்கொளியை ஏந்திக் கொண்டு ஏதாவது உருவம் அலைகிறதா என்று பார்த்தேன். மின்சாரம் திரும்பி வந்ததும் அவர் பாட்டை நிறுத்தி விட்டார். இருட்டுக்குப் பயந்து சத்தமாக பாடியிருப்பார்! பாவம்! இருட்டுக்கு பயப்படாத அக்கம்பக்கத்தவர்கள் பயந்து போயிருப்பார்கள்.

உடுமலையில் இருந்த நாட்களில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது முதன்முதலாக பள்ளி சுற்றுலாவில் சென்றிருந்தேன். கர்நாடகாவிலிருக்கும் ஹசனுக்கு அருகில் இருக்கும் பேலூர் என்ற ஊருக்கு போனோம். ஹொய்சள மன்னன் விஷ்ணு வர்தனால் கட்டப்பட்ட சென்ன கேசவர் கோயில் அங்கிருக்கிறது. எங்களையெல்லாம் ஒரு சத்திரத்தில் தூங்க வைத்தார்கள். அந்தச் சின்ன சத்திரத்தில் எல்லா மாணவர்களும் உறங்க இடமில்லை. எனவே சத்திரத்துக்குப் பக்கத்தில் ஒரு பாழடைந்த மாளிகையின் சாவியை சத்திரத்தின் மேலாளர் வாங்கிக் கொடுத்தார். சில மாணவர்களை அந்த மாளிகைக்குள் இருந்த ஓர் அறையில் தங்க வைத்தார்கள். அம்மாளிகை பல வருடங்களாக பூட்டப்பட்டிருந்திருக்கும் போலிருந்தது. பல அறைகள் மண்ணும் தூசுமாக இருந்தன. வரவேற்புக் கூடத்தின் தரை பெயர்ந்து வந்திருந்தது. நாங்கள் படுத்திருந்த அறை மட்டும் சுத்தமாக இருந்தது. மாளிகையில் புழங்கும் அறையாக எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை மட்டும் தான். சமையலறையைத்  தாண்டி  கொல்லைப் புறம்  விரிந்தது.

புது இடம் என்பதால் சீக்கிரமே எழுந்து விட்டேன். விடிந்திருந்தது. வாய் கொப்புளிக்க சத்திரத்துக்கு தான் போக வேண்டும். கொல்லைப் புறம் சென்று ஒரு புதருக்கருகே சிறுநீர் கழிக்கும் போது அந்தக் கிணறு என் கண்ணில் பட்டது. எந்த முட்புதருக்கருகே நான் நின்று கொண்டிருந்தேனோ அங்கிருந்து பத்தடி தள்ளி அந்தக் கிணறு இருந்தது. அதன் திட்டின் ஒரு பாகம் சுத்தமாக உடைந்து விட்டிருந்தது.தெரியாமல் யாரேனும் அங்கு போய் கிணற்றில் விழுந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அந்த முட்புதரை யாரோ அங்கு வளர்த்திருக்கிறார்கள் போல! சில்லென்று என் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு காட்சியை அப்போது காணக் கிடைத்தது. ஒரு கரு நாகம் நான்கடி இருக்கலாம் ; மெலிய தேகத்துடன் நான் சிறு நீர் கழித்த முட்புதருக்குள்ளிருந்து வெளியேறி உடைந்திருந்த கிணற்றுச் சுவருக்குள் ஊர்ந்து சென்றது. முட்புதரில் தூங்கிக் கொண்டிருந்த நாகத்தின் தூக்கத்தை கலைத்ததற்கு அதன் சந்ததிகள் என்னைப் பழிவாங்குமா என்று தெரியவில்லை.ஆனால் அமைதியாக ஒரு நாகம் கிணறுக்குள் நுழையும் காட்சி என் ஞாபகத்தில் நிரந்தரமாகப் படிந்து போனது.

123_well

oOo

எதிர் பாராமல் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட போது ஏற்பட்ட விபரீத விளைவுகளுக்கு இரு காரணங்கள் ; ஒன்று மூடப்பட்டகிணறுக்குள் மர்மங்களும் தூங்கக் கூடும் என்ற யூகம் இரண்டு, அக்கிணறு இருக்கும் இடத்தின் சிதிலமான தன்மை. அசோகமித்திரனின் ”கிணறு” சிறுகதையிலும் ஒரு கிணறு கண்டு பிடிக்கப்படுகிறது.அது ஏற்படுத்தும் விளைவு என்ன என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர் பாழடைந்த கோட்டைகளைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.

oOo

பழைய கோட்டைகளை களமாக வைத்து பல மர்மக் கதைகளும் சாகசக் கதைகளும் புனையப்பட்டிருக்கின்றன. கோட்டைகளுக்குள் மர்மங்கள் ஒளிந்துள்ளன என்னும் அனுமானம் பல திகில் கதை எழுத்தாளர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.

தாகூரின் சிறுகதைகளில் ”பசித்த கற்கள்” முக்கியமான ஒன்று. அக்கதையில் ஒரு கோட்டை வரும்.

பாரிச் ஒர் அழகான இடம். சுஸ்தா நதி கற்களோடு பேசிக் கொண்டும் கூழாங்கற்களை அலம்பிக் கொண்டும் திறமை வாய்ந்த நடன மங்கை போல அந்த காட்டின் வழி நகர்ந்து கொண்டிருந்தது. நதியின் கரையில் இருந்து 150 படிகள் ஏறினால், மலையடிவாரத்தில் கம்பீரமான  ஒற்றை பளிங்கு மாளிகை நிற்கும்.மாளிகைக்கு அருகில் ஒருவரும் வசிப்பதில்லை” என்ற அழகான வர்ணனை வாயிலாக அந்த அரண்மனை நமக்கு அறிமுகப்படுத்தப்படும். கதைசொல்லி தனியாக அந்த கோட்டையில் தங்கும் போது அவனுக்கேற்பட்ட அனுபவங்களை கதையில் விவரிப்பான்.

தாகூரின் “பசித்த கற்கள்” அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையிலிருந்து ஒரு விதத்தில் வித்தியாசமானது. யதார்த்தத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் அசோகமித்திரனின் மற்ற கதைகள் போன்றே “கிணறு” கதையும் யதார்த்தத்தில் நிலை கொண்டது. கதை உள்ளே கதை என்ற உத்தியில் அமைந்திருக்கும் “பசித்த கற்கள்” மாற்று மெய்ம்மை பாவனையுடன் கற்பனாவாதத்தின் கொண்டாட்டமாக எழுதப்பட்டிருக்கும். ரயிலின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது கதைசொல்லி சொல்லும் கதையில் ஒரு தெளிவான முடிவு இருக்காது. அதற்குள் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் வந்து விடும். கதைசொல்லி டாட்டா-பை பை சொல்லிக்கொண்டே ரயிலில் ஏறிச் சென்று விடுவார். கதை கேட்ட நபர் “அவர் சொன்னதெல்லாம் ரீலு தான்” என்பது மாதிரியாக சொல்லுவார்.

பசித்த கற்களில் கதைசொல்லி அந்த அரண்மனையில் தனியாக வசிப்பான் ; பைத்தியம் பிடித்த கரீம் கான் என்ற உதவியாளன் மட்டும் கூட இருப்பான். “கிணறு” கதையில் வரும் சொகுசு சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கோட்டையில் சதாசிவன் தனியே இல்லை. சதாசிவனுடன் அவனுடைய நண்பனும் அந்த ஓட்டலில் தங்கியிருக்கிறான். பல அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூட தங்கியிருக்கின்றனர். ஆனாலும் பசித்த கற்களின் கதை சொல்லி போல சதாசிவனும் தனித்தே வளைய வருகிறான். அந்த விடுதியில் இண்டெர்-காம் போன்கள் இல்லை. வரவேற்பறையில் மட்டும் ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு இருக்கிறது. கதையில் இரு முறை நண்பனுடனும் சுற்றுலா பயணிகளுடனும் சதாசிவன் உணவு உண்பது போல் வருகிறது. ஆனாலும் கதை முழுதும் சதாசிவன் தன் எண்ணங்களில் தனித்திருக்கிறான். அவனுடைய அறைக்கு தேநீர் கொண்டு வரும் ஆளும், மத்திய கால அரசவைச் சேவகன் போல உடையணிந்த சேவகன் ஒருவனும் கதையில் வருகிறார்கள். சேவகனிடம் மட்டும் ஒரு சம்பாஷணை நடக்கிறது.

திகில் கதைகளில் பாத்திரங்கள் தனித்திருக்கும் போது தான் அவர்கள் மனதின் பிடியில் இருப்பதை சொல்ல முடியும். மனதிற்குள் தானே பயம் இருக்கிறது.

”பசித்த கற்களில்” பகலில் அமைதியாக இருக்கும் பாழடைந்த அரண்மனை இரவில் உயிர் பெறும். மனிதர்கள் நகரும் போது எழும் மிதியடிகளின் சத்தம், ஆனந்தமாக சுஸ்தா நதியில் நீராடச்செல்லும் நங்கையரின் சிரிப்போலிகள் என மாயைப் போன்ற காட்சிகள் கதைசொல்லியின் கண்களுக்கு முன்னால் ஓடுகின்றன. காட்சியில் வருபவர்களின் கண்ணுக்கு அவன் தெரிவதில்லை. ஒரு திரைப்படம் போன்று ஒவ்வோர் இரவும் இக்காட்சிகள் அவனுக்கு தெரிகின்றன. முதலில் பயத்தோடிருக்கும் கதைசொல்லி பிறகு இக்காட்சிகளுக்கு பழகி விடுகிறான். இரவுக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறான். ஒரு வித பித்து நிலையை அந்த பாழடைந்த கோட்டையின் சூழல் அவனுள் ஏற்படுத்திவிடுகிறது. மனதின் பங்கேற்பில்லாமல் அந்த காட்சிகளும் பிரமைகளும் தோன்றியிருக்க முடியாது!

இரு சிறுகதைகளுக்கும் நடுவிலான பொது இழை – வரலாற்று கால நிகழ்வுகள் பற்றிய யூகங்களும் ஆர்வங்களும். கோட்டைகளில் வசித்தவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனை. எத்தகைய சதிச் செயல்கள் அக்கோட்டையில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற யோசனை. பசித்த கற்களில் கதைசொல்லி கற்பனையின் ஈர்ப்பை இப்படி விவரிப்பான் : “ஆர்வத்தை தூண்டும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை, ஒர் அழகான கதையின் துண்டுகளாக என்னால் உணர முடிந்தது ;ஆனால் அக்கதையை ஒரு தொலைவிலிருந்து பின் தொடர முடிந்ததேயொழிய, அதன் முடிவு என்ன என்று என்னால் அறிய முடியவில்லை.” 

கிணறு கதையின் கதாநாயகனும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தான். பயம் ஒரு விசித்திரமான உணர்வு. பயவுணர்வு நீடிக்கும் போது அவ்வுணர்வைத் தூண்டி விடும் புறப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கக் கூடும் என்கிற அனுமானம் இரு கதைகளிலும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.

oOo

சதாசிவன் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் மூடியிருக்கிறது. யாரும் எளிதில் திறக்காமல் இருக்க கம்பிகளை இறுக்க சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.  அந்த ஜன்னல் கம்பிகள் உளுத்துத் துருப் பிடித்துப் போன நிலையில் இருக்கின்றன. மதிய உணவுக்கு அழைக்க வந்த சேவகனைக் கொண்டு அந்த ஜன்னலை திறக்க முயல அது முடியாமல் போகிறது. மதிய உணவு உண்டு திரும்பிய பிறகு சதாசிவன் தனியே இருக்கையில் ஜன்னலை மீண்டும் திறக்கப் பார்க்கும் போது,கம்பிகள் எளிதில் விழுந்து விடுகின்றன. கம்பிகளை எல்லாம் விலக்கி வெளியில் பார்க்கிறான்.

ஜன்னல் வழியாகப் பார்த்தான். முதலில் ஒன்றும் தெரியவில்லை.எட்டிப் பார்த்தான். ஜன்னலைத் தாங்கிய சுவர் கீழே செங்குத்தாக நின்றது. அதையொட்டியபடி ஆழத்தில் ஒரு கிணறு இருந்தது தெரிந்தது.”

அவன் அறைக்கு நேர் கீழே கிணறு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் பத்து வயதில் பார்த்த ராட்சத கிணறு அவனுக்கு ஞாபகத்தில் வருகிறது. மலை மீது இருக்கும் கிணறுகளின் வரலாறு சாதாரண கிணறுகளின் வரலாறு போல் இருக்காது என்ற சதாசிவத்துக்கு தோன்றுகிறது. அறையை மாற்றிக் கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறான்.

தண்ணீர் அவனை எப்போதும் கலக்கத்துக்கு உட்படுத்தியது. தண்ணீர் என்பது குழாயில் வருவது மட்டுமில்லை. அது கிணறாக இருக்கும். ஏரியாக இருக்கும்.ஆறாக இருக்கும். அருவியாக இருக்கும். அவன் முதன் முறையாக கடலைப் பார்த்த போது பயத்தில் வயிறு உள்ளிழுத்துக் கொண்டது, முகம் இல்லை, கை-கால் இல்லை, கண் மூக்கு இல்லை, ஆனால் கடல் ஓர் அரக்கனாக காட்சி அளித்தது. அந்த அரக்கன் சில நேரங்களில் படகுகளையும் கட்டுமரங்களையும் கப்பல்களையும் கவிழ்த்துவிடாதிருந்தால் அவனுக்கும் அவ்வப்போது பெருந்தன்மை, இரக்கம் உண்டு என்று பொருள். ஆனால் அரக்கர்களின் பெருந்தன்மையையும் இரக்கத்தையும் நம்ப முடியுமா? எந்த வினாடியும் அவை மறையக் கூடியவை, விளைவு, அழிவுதான். அதனால்தான் எல்லாக் கலாச்சாரங்களும் பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம்புகின்றன..

பயம் இருக்கிறது என்பது புரிகிறது, ஆனால் அதை ஒத்துக் கொள்ள முடிகிறதா? சதாசிவத்துக்கு பழங்காலத்தில் அறைகளில் தனியாகப் படுத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த கோட்டையில் இருந்த ராஜாவுக்கு எத்தனை ராணியர் இருந்திருப்பர்? அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் இருந்திருப்பார்கள்.இரு ராணியரை ஒரே அறையில் தங்க வைக்க ராஜா சம்மத்தித்திருக்க மாட்டான் என்றெல்லாம் அவன் மனம் தறி கெட்டு ஓடுகிறது.

oOo

அச்சவுணர்வு பற்றிய பிரக்ஞை இருந்தும் கிணறு சிறுகதையின் கதாநாயகன் கதையின் முடிவில் சந்தித்த முடிவை எப்படி சந்தித்திருக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் எழுத்தாளர் காரணத்தை கொடி காட்டி விடுகிறார்.

சிறுகதையின் ஆரம்ப வரி இது தான்! – “அந்த இடத்திற்கு அவனாகத் தேடி வரவில்லை” அது அவனுக்கு விதித்தது என்பதை முதலிலேயே நமக்கு தெரிவித்துவிடுகிறார். சதாசிவத்துக்கு தண்ணீரில் கண்டம் என்ற தகவலும் நமக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.

கதையின் முடிவிலேயே இதையெல்லாம் சொல்லிவிட்டால் கதை எப்படி “திகில்” கதையாகும். வாழ்வின் அபத்தத்தை சொல்வதாகத் தானே ஆகும்!

அசோகமித்திரனின் எழுதிய சிறுகதைகளில் அவரின் செகந்திராபாத்தில் இருந்த காலத்து இளம் வயதுக் கதைகள், சென்னையில் திரைப்பட நிறுவன நிர்வாகியாக வேலை பார்த்த பின்புலக் கதைகள் மற்றும் ”ஓற்றன்” நாவலில் வருவது மாதிரியான அமெரிக்க மாநிலம் அயோவாவைக் களமாகக் கொண்ட சிறுகதைகள் மிகப் பிரசித்தமானவை. இவை தவிர ஒரு வித intense-ஆன சிறுகதை வகையையும் அவர் தந்திருக்கிறார் என்று கூறலாம். “பிரயாணம்” என்கிற சிறுகதை இத்தகைய ஒரு வகையைச் சார்ந்தது எனலாம். பிரயாணம் கதை சொல்கிற அபத்த தரிசனத்தை “கிணறு” கதையும் சொல்கிறது. ஒரே வித்தியாசம், கிணறு கதையில் அது ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.

oOo

“கிணறு” கதையின் முதல் பத்தியையும், சதாசிவத்துக்கும் அவன் அம்மாவுக்கும் இடையில் நடக்கும் சிறு உரையாடலைக் கதையிலிருந்து வெட்டி விட்டால் இந்த சிறுகதையை ரஸ்கின் பாண்ட் எழுதியிருக்கிறாரோ என்று ஐயம் தோன்றலாம்.. ஆனால் அசோகமித்திரனின் தனித்தன்மையான அபத்த தரிசனம் வெளிப்படுவது அந்த முதற் பகுதி வாயிலாகத்தானே!

oOo

நகர வாழ்க்கையில் கிணறுகளைக் காண்பது வெகு அபூர்வமாகிவிட்டது. மிகச் சமீபத்தில் யாரும் பயன்படுத்தாத ஒரு கிணற்றைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது. அது ஒரு பழங்கிணறு. ஏறத்தாழ நூறு வருடங்கள் முன் நூற்றுக் கணக்கானோர் அதற்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். துப்பாக்கி தோட்டாக்கள் துளைப்பதிலிருந்து தப்பிப்பதற்காக அப்பாவி மனிதர்கள் கிணற்றில் விழுந்து உயிர் நீத்த வரலாற்று சோகம். அந்த கிணற்றுக்குள் பார்க்கையில் காலியான பிளாஸ்டிக் புட்டிகளும் மூடிகளுமாக தெரிந்தன. தியாகிகளின் உயிர் குடித்த அந்த கிணறில் நீர் இருந்த அடையாளமே இல்லை. அக்கிணறு அம்ரித்சரில் இருக்கிறது.

oOo

துணுக்குகள்:

  1. அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதை குமுதம் ஜங்சன் ஜனவரி 2002 இதழில் வெளியானது.
  2. “கிணறு” சிறுகதை ”அழிவற்றது” (காலச்சுவடு பதிப்பகம்) சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

0 Replies to “அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.