கேர்ரியும் அடாப்பிடியர்களின் நெருக்குதலும்

அந்த ஆசிரியர் அவ்வப்போது ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதுவார்.  1970-கள் ஆரம்பத்தில் ஒரு நெடுங்கதை எழுத முயன்றார்.  ஒரு பெண் தனக்கு Telekinesis (தொலைவிலுள்ள பொருள்களைத் தொடாமல் நகர்த்தல்) இருப்பதை அறிகிறாள்.  கண்களால் திடப்பொருள்களை அவளால் நகர்த்த முடியும்.  சில அதிர்ச்சி தரும் செயல்களை செய்ய முடியும்.  தன் அறைக் கட்டிலைக் காற்றில் எளிதாக அலைய வைக்க முடியும்.  அந்த சிறிய ஊரில் இருக்கும் அவள் சக வயது தோழர்கள் அவளை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.  இப்படி போகும் அந்தக் கதையை எழுதியவர் கதை தனக்குத் திருப்தி தராததால் அதை குப்பையில் எறிய, அவர் மனைவி அதை எடுத்து படித்து, தன் கணவரை சில திருத்தங்களைக் செய்ய வைத்து கதையை முடிக்கிறார்.

CA: Premiere Of Paramounts' Remake Of "The Manchurian Candidate" - Arrivalsஅதை டபுள்டே பதிப்பகம் பதிப்பித்து, புகழ் பெற்ற நாவலானது.  முதல் நாவலுக்குக் கிடைத்தது சற்றேறக்குறைய இன்றைய மதிப்பில் ரூ 21,000/-.   இன்று அந்த எழுத்தாளர் ஒரு கோடீஸ்வரர்.  முதல் புத்தகத்தைக் குப்பையில் எறிந்த ஸ்டீஃபன் கிங் இன்று ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தகக்களை எழுதிவிட்டார்.  சில புத்தகங்கள் சர்வ சாதாரணமாக 600+ பக்கங்களைத் தாண்டுபவை.

புத்தகம் ஒரு நிருபரின் செய்தியோடு ஆரம்பிக்கிறது.  குறிப்பிட்ட அந்த வீட்டில் மட்டும் கல் மழை பெய்திருக்கிறது.  காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.  அந்த வீட்டில் ஒரு பெண்ணும் அவளின் ஆறு வயது மகளும் வசிக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தாயார் தீவிர மதப்பற்றாளர்.  மதவெறியர்.  தனக்கு தவறு என்று தோன்றுவதை, திருத்த அந்த தாயார் தரும் தண்டனை இருட்டறையில் பெண்ணை அடைத்து கடவுளின் நாமத்தை செபிக்க வைப்பது.  கட்டுப்பெட்டித்தனமான உடையை அணிவித்து வெளியில் கிறுக்காக்குவது.  வீடு முழுக்க மதக் குறியீடுகளால் நிரப்புவது.

கேர்ரி-யின் பிறப்பே ஒரு சாபம்.  அவளின் பெற்றோர் தீவிர பக்தி இயக்கத்தில் உடலுறவு கொள்வதே பாவம் என்ற கொள்கையுடையவர்கள்.  பிள்ளை பிறப்பு என்பது சாத்தானின் பிறப்பு என்று நம்புபவர்கள்.  ஒரு விபத்தாகத்தான் கேர்ரி பிறக்கிறாள்.  அவளின் மழலைப்பருவம் முதல் அவள் பான்சாய் செடி போல வளர்க்கப்படுகிறாள்.  இந்த நிலையில் அவளின் அமானுட சக்தி அவள் தாயாருக்கு இவள் சாத்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.  தாயாரின் பார்வையில் தன் வீட்டை சுற்றி இருப்பவர்கள் இவளைப் போன்ற மத நம்பிக்கையாளர்கள் அல்ல, எனவே அவர்கள் தீயவர்கள்.

சம்பவம் நடந்த அன்று கேர்ரி பக்கத்து வீட்டில் உள்ளவர்களோடு தோழமையாக பேசி, சிரிக்க, அவளின் தாயார் அவளை முரட்டுத்தனமாக உள்ளே அழைத்து சென்று தண்டிக்கிறாள். கேர்ரி-யின் ஆறு வயது கோபம் கல் மழையாகப் பொழிகிறது.

கதை மெல்ல நகர்ந்து கேர்ரி-யின் பூப்பெய்தும் நிகழ்வில் ரத்தத்தைக் கண்டு அவள் விவரம் புரியாமல் அலற, சுற்றி நின்ற  தோழியர் அவளை அவமானப்படுத்துகிறார்கள்.  அவளின் பூப்பெய்தும் நிகழ்வு அவள் தாயாரை இன்னும் வெறி கொள்ள வைக்கிறது. பள்ளியில் நடக்கும் விசாரணையில் கேர்ரி-யை அவமானப்படுத்திய பெண் தற்காலிகமாக நீக்கப்பட அவள் கேர்ரி-யைப் பழிவாங்க முடிவெடுக்கிறாள்.

இன்னொரு பெண் குற்ற உணர்வில் கேர்ரி-யோடு நட்பு பாராட்ட முயல்கிறாள்.  இவள் தோழனோடு கேர்ரி-யை பள்ளி இறுதி வகுப்பினர் விழாவுக்கு அனுப்ப அங்கு அவமானப்படுத்தப்பட்ட பெண்ணால் நடத்தப்படும் விபரீதம் கேர்ரி-யின் அடக்கி வைக்கப்பட்ட வெறியைக் கிளப்ப, அவளின் சக்தி அந்த சிறு கிராமத்தையே புரட்டிப் போடுகிறது.

மோலோட்டமாகப் பார்த்தால் தமிழில் வரும் பல அமானுடக் கதைகளின் கருதான்.  ஆனால் அடிநாதம் புரிந்துவிட்டால் (ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை) கதை இன்னொரு பரிமாணத்துக்கு சென்றுவிடும்.

குழந்தைகளை அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயலும்போது, தன்னைக்காத்துக் கொள்ளும் சக்தியில்லை என்றாலும் சீறும்.  அதுதான் கேர்ரி-யை கல் மழை பொழிய வைக்கிறது.  தன்னை அசிங்கமாக திட்டும் சிறுவனை மிதிவண்டியோடு கீழே விழவைத்து ஓலமிட வைக்கிறது.  பதின்ம வயதில் தன் தாயார் தன்னைக் கட்டுப்படுத்த நினைக்கும்போது கதவை அமர்ந்த இடத்திலிருந்து அவள் முகத்தில் அறைய வைக்கிறது.  இறுதியில் பள்ளி அரங்கத்தில் தன் நண்பர்களை எரிக்கிறது. இது அத்தனையும் அவளின் சக்தியால் தானே என்று கேட்கலாம்.

ஆனால் இதை அமெரிக்காவின் எரியும் பிரச்னையான bullying என்பதோடு பொருத்தினால் கதை ஏன் வெறும் பேய்க் கதை அல்ல என்று தெரியும்.

carrie_king_Stephen_Books_Authors_Writersஅமெரிக்கக் கலாச்சாரத்தில் தனி மனித சுதந்திரம் மிக முக்கியம்.  தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு அதனுள் யாரையும் நுழைய விடுவதில்லை.  சிறு வயதில் பெற்றோர் தன் குழந்தைகளை தானே தன்னால் முடிந்தவைகளை செய்ய வைப்பதில் ஆரம்பிக்கிறது.  பதின்ம வயதில் வீட்டை அன்னியமாகப் பார்க்க வைக்கிறது.  தன் சக வயதுடையவர்களுடன் கனவு  காண்கிறது.  அந்த வயதின் பரபரப்பில் பலரைக் கிண்டல் செய்ய முடிகிறது.  எதிராளி அந்தக் கிண்டலில் சிறிது மருண்டாலும் அதை தன் வெற்றியாகக் கொண்டு மேலும் மேலும் எதிராளியை வார்த்தைகளாலும், செயல்களாலும் வெறுப்பேற்றுகிறது.

இதை Bullying என்று வகைப்படுத்துகிறார்கள்.  கூகிள் மொழிபெயர்ப்பு ‘பலவீனனை கொடுமைப்படுத்துபவன்’.   இது உலகம் முழுவதும் இருக்கிறது.  இன்றும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வீரர்கள் ஆடுகளத்தில் வெற்றிகரமாக உபயோகிக்கிறார்கள்.  ஆனால் அமெரிக்க சமூகத்தில் இது பெரும் வன்முறையை விதைத்துவிட்டது.  இது சாதாரண வயதுக்குரிய கிண்டல்களில் ஆரம்பித்து (கவுண்டமணியின் தலை, நிறம், உடல் சம்பந்தமான வசனங்கள், மற்றும் செந்திலை அடிப்பது போன்றவைகளை நினைவு கூறவும்), வன்புணர்வு வரை சென்றுவிடும்.

Bullying பள்ளிக்கூடத்தில் மட்டும் நடைபெறுவதில்லை.  வீட்டின் உள்ளே, பொது இடங்களில், அலுவலகத்தில், ஒரு பாலினருக்கு எதிராக, சமூக வலைத்தளங்களில் (நம் தமிழ் தளங்களிலும் போலி டோண்டு), ஏன் ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சிகளில் ஒபாமாவுக்கும் என்று பல்முனைத் தாக்குதல்கள் நடக்கும்.

Bullying பாதிக்கப்படும் பதின்ம வயதினர் முதலில் எதிர்க்கிறார்கள், அது மேலும் எதிரி(களை)யை வன்முறைக்குத் தூண்ட, பயப்படுகிறார்கள், அதைத் தவிர்க்க வழி தேடுகிறார்கள், அது நடக்காத போது மன அழுத்தம் அடைகிறார்கள்.  மன அழுத்தம் என்ற நிலை எரிமலைக்கு சமம்.  சிலர் தனக்குப் பிடித்த விளையாட்டு, படிப்பு, கலை என்று மாறலாம்.  சிலர் கேர்ரி-யைப் போல தன் வகுப்புத் தோழர்களைக் கொல்லலாம்.

வெளியில் மட்டும்தான் bullying நடக்க வேண்டும் என்பதில்லை.  வீட்டின் உள்ளும் நடக்கும்.  கேர்ரி-யின் தாயார் அவளை கட்டுப்பெட்டித்தனமாக உடையால் அவளின் உடலில் பாவப்பட்ட பாகத்தை முழுவதுமாக மறைக்க சொல்ல கேர்ரி சொல்கிறாள்:

”அவை மார்பகங்கள்”

வீட்டிலும், வெளியிலும் கைவிடப்பட்ட பதின்ம வயதினருக்கு இருக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு வன்முறை என்பதை முதல் நாவலில் கச்சிதமாகக் காட்டிய கிங் தன் அடுத்த பல நாவல்களிலும் bullying பற்றி எழுதியிருக்கிறார்.  அவருடையது பல்ப்-க்கும் ஆழமான இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட பாலமாக அமைகிறது.  அவர் எடுத்துக்கொள்ளும் களங்கள் அவர் வசிக்கும் மெயிண் (Maine) மாகாணத்தில் நடப்பது.  ஸ்டீஃபன் கிங் படைப்புகளின் பாத்திரங்கள் அமெரிக்கன் ஜோ வகையைச் சேர்ந்தவர்கள்.  தினசரி கவலைகள், சந்தோஷங்கள், வெறுப்புகள், ஆசாபாசங்கள் என்ற சாதாரணர்கள். இவர்களின் அடியாழத்தில் இருக்கும் வன்முறையோடு அமானுட சக்தி கலந்தால் சமன்பாடு குலைந்து அந்த சக்தி இழுக்கும் இழுப்புக்கு ஆடும்.

உதாரணமாக It (அது) என்ற நாவலில் முதல் 100 பக்கங்களுக்கு அறிமுகமாகுபவர்களின் இருண்ட பக்கங்கள் திகைக்க வைக்கும்.  The Cell கதையில் சாதாரண படக்கதை எழுத்தாளன் தன் மனைவி மற்றும் மகன் இருவரும் அமானுட சக்தியால் மனநிலை பாதிக்கப்பட்டிருக்க இருவரில் ஒருவரை சந்திக்கும்போது அவன் எடுக்கும் முடிவு யாருக்கு மனநிலை பிறழ்வு என்று யோசிக்க வைக்கும்.  தி ஷைனிங்-ல் ஒரு சாதாரண மேலாளனின் தனிமை எப்படி அவனை சைக்கோவாக மாற்றும் என்று காட்டும்.

சிக்கலில்லாத ஆங்கிலத்தில் எழுதப்படும் இவரின் நீளமான கதைகள் பொழுதுபோக்கிற்காகப் படிக்கப்பட்டாலும் பாத்திர அமைப்புகளினால் 40 வருடங்களைக் கடந்து இன்றும் அவரின் படைப்புகள் அமெரிக்க இலக்கியத்தில் நிற்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.